3 காதல் காட்டுமிராண்டி


ரயிலில் திலீப் அருகே ஜன்னலை ஒட்டி அமர்ந்திருந்தாள் பெரியநாயகி. பெரியநாயகியின் முன் நடுத்தர வயது தம்பதி இருவர் அமர்ந்திருந்தார்கள்.. அந்தப் பெண்ணின் கணவன், ரயில் ஏறுவதற்கு முன்பு வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தை பிரித்தான்.. அந்தப் பெண்ணுக்கு தன் முன்னாள் அமர்ந்திருப்பவர்களை பார்க்க வைத்து சாப்பிட மனம் ஒப்பவில்லை போல.

அதிலும் பெரியநாயகியின் கண்களில் தெரிந்த கவலை, அந்தப் பெண்ணுக்கு பெரியநாயகி ஏதோ ஒரு இக்கட்டில் இருப்பதை எடுத்து சொல்லியது. கணவனிடம் பெரியநாயகி திலீப்பை கண்களால் ஜாடை காட்டினாள். அதை புரிந்து கொண்ட அந்த பெண்ணின் கணவன் திலீபிடம் பேச்சை ஆரம்பித்தான்.

"ஹெலோ சார், ஐம் கேசவன்..திஸ் இஸ் மை வைப் சித்ரா." ஸ்னேகமாக கை நீட்டினான்.

திலீப், கேசவனுக்கும் மேலாக சிரித்து, " ஹலோ கேசவன், என் பேரு திலீப். இவங்க என்னோட சோல் மேட் பெரியநாயகி." கேசவனோடு கை குலுக்கினாலும் திலீப்பின் கண்கள் பெரியநாயகியை காதல் பொங்க பார்த்தது. அவனது கண்களில் வழியும் காதலை எதிர் சீட்டில் அமர்ந்திருந்த இருவரும் கண்டு உள்ளுக்குள் மெச்சி கொண்டார்கள்.

பெரியநாயகிக்கு இதெல்லாம் சாதாரணம் போல அமர்ந்திருந்தாள். திலீப் இப்படித்தான் வீட்டை விட்டு வெளியே வந்தால், காதல் மன்னனாக மாறி விடுவான். நிமிடத்துக்கு நிமிடம் நிறம் மாறும் அவனை பச்சோந்தியோடு ஒப்பிட்டால் அது பச்சோந்திக்கு தான் கேவலம்.

வெளியே அவனது அன்புக்கு, எப்படி எதிர்மறை புரிவது என புரியாமல் ஒரு மண்ணைப் போலவே நடந்து கொள்வாள் பெரியநாயகி. பார்ப்பவர்களுக்கு திலீப் காதல் கணவனாகவும் பெரிய நாயகி திமிர் பிடித்த மனைவியாகவும் தோன்றி விடுவாள். இப்போதும் அதுவே நடந்தது.

" சாப்பிடலையா திலீப் நீங்க.. எங்ககிட்ட எக்ஸ்ட்ரா பார்சல் இருக்கு. இப் யூ டோன்ட் மைன்ட்"

" நோ தேங்க்ஸ் கேசவன்.. என்னோட ஒய்ஃப்க்கு டிராவலிங் சாப்பிட்டா வாமிட் வரும்.. அதனால வீட்டிலிருந்து வரும்போது பிஸ்கட் ப்ரூட்ஸ் எல்லாம் எடுத்துட்டு வந்துட்டேன்.."

" சிஸ்டர் சாப்பிடலனா என்ன நீங்க சாப்பிடலாமே"

" என் ஒய்ஃப் சாப்பிடாம நான் எப்பவுமே சாப்பிட மாட்டேன்." கேசவனின் மனைவி சித்ராவுக்கு உண்மை புரியாததால் லேசாக பெருமூச்சு எழுந்தது. சித்ரா என்ன நினைக்கிறாள் என்பதை பெரியநாயகியால் உணர்ந்து கொள்ள முடிந்தது. மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் இக்கரை மாட்டுக்கு அக்கரை பச்சை என.

"செல்லம் பசிக்குதாடா.. பிஸ்கட் சாப்பிடுறியா?" அவள் தலையாட்டும் முன்பே பிஸ்கட்டை பிரித்து பெரியநாயகி கையில் கொடுத்தான். அதனை வேண்டாம் என மறுக்கும் தைரியம் பெரியநாயகிக்கு இல்லை, அதை அவன் கொடுக்கவும் கிடையாது. ரோபோட்டை போல பிஸ்கட்டை சாப்பிட ஆரம்பித்தாள்.

சித்ரா மனதில் ஒரு வார்த்தைக்காவது புருஷனுக்கு வேணுமானு கேட்காம இந்த பொண்ணு மட்டும் நல்லா திங்குது இப்படி யோசனை ஓடியது. சித்ரா பெரியநாயகியை பார்த்து ஸ்னேகமாக புன்னகைக்க முயற்சித்தாள். இதழ்களுக்கு வலிப்பது போல பெரியநாயகி ஒரு சென்டிமீட்டர் சிரிப்பை அவளுக்கு கொடுத்துவிட்டு வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டாள். திலிப் பேச்சு துணைக்கு ஒருவன் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் கேசவனிடம் நாட்டு நடப்பை பற்றி, அடுத்த பிரதமராக மாறி பேசிக் கொண்டிருந்தான்.

பெரியநாயகி ஜன்னல் கம்பி மேலே சாய்ந்து விட, பேச்சு வாக்கில் எதார்த்தமாக அவளை தனது மடியில் சாய்த்துக் கொள்வதைப் போல, அவளை இழுத்து தனது மடியில் சாய்த்து கொண்டான். பார்ப்பவர்களுக்கு அவன் எப்போதுமே அனிச்சையாக இம்மாதிரி செய்வது போல இருக்கும். பேக்கில் இருந்து ஒரு பெரிய ஷாலை எடுத்து பெரியநாயகிக்கு போர்த்தி விட்டான். திலீப் ஒவ்வொன்றாக நாடகம் போட அது புரியாத சித்ரா, தன் கணவனின் ஒவ்வொரு செய்கையையும் திலீப்போடு ஒப்பிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.

பெரியநாயகி, திலீப் மடியில் படுத்தும் அவனுக்கு  கபகபவென உடலில் சூடு பரவியது. இதுவே முன்னாள் ஆட்கள் இல்லாமல் இருந்திருந்தால், ஜீன்ஸ் இன் ஜிப்பை இறக்கிவிட்டு அவளுக்கு வேலை கொடுத்திருப்பான். இப்போது கேசவன் உறங்கி விடுவான், வேலையை ஆரம்பித்து விடலாம் என திலீப் மனப்பால் குடிக்க கேசவன் ஆந்தை வம்சம் போல. இரவு முழுவதும் உறங்காமல், போனில் படம் பார்த்துக் கொண்டே வந்தான்.

கேசவனின் தயவால்,பெரியநாயகி தன்னை மறந்து உறங்கி விட்டாள் நிம்மதியாக. சென்னை எக்மோர் வந்து சேர்ந்ததும், ரேபிடோ புக் செய்து பெரியநாயகி வீட்டிற்கு சென்றார்கள். சரோஜா மட்டம் தட்டுவதை போல, பெரியநாயகி சோத்துக்கு வழி இல்லாத குடும்பத்தில் பிறந்தவள் அல்ல. பெரியநாயகியின் தந்தை தங்கவேலு, கடின உழைப்பாளி. சிறு வயதில் இருந்தே குடும்ப பாரத்தை சுமந்தவர்.

சரோஜாவோடு சேர்த்து அவருக்கு நான்கு உடன் பிறப்புகள். துரதிஷ்டவசமாக அனைத்தும் பெண் குழந்தைகள். சிறு வயதிலேயே தந்தை காலமாகி விட, தாய் குழந்தைகளை எப்படி வளர்க்க போகிறோம் என்ற மலைப்பில்  புத்தி புரண்டு போக, குடும்ப பொறுப்பை தனதாக்கிக் கொண்டார் தங்கவேலு.

கூலி வேலை செய்து, தான் படிக்காவிட்டாலும் தங்கைகளை படிக்க வைத்து, அவர்களுக்கு நகை நட்டு போட்டு மாப்பிள்ளை வீட்டார் கூச்சமின்றி கேட்ட சீர்வரிசைகளை செய்து, தாய்மாமன் சீர்,ஆடி சீர், தீபாவளி சீர் தொட்டதற்கெல்லாம் சீர், இப்படி அவரை கரைத்து பிழிந்து சக்கையாய் அரைத்து துப்பிய பின்பே, தங்கைகள் ஒருவாறு மனதை தேற்றி கொண்டார்கள்.

தங்கவேலு திருமணம் செய்யும்போது அவருக்கு வயது 38. வரதட்சனை கொடுக்க முடியாமல், கல்யாண வயது தாண்டி நின்ற மீனாட்சியை, தெரிந்தவர் வந்து சொல்ல, பார்த்ததும் பிடித்து திருமணம் செய்து கொண்டார் தங்கவேலு. மீனாட்சி வீட்டில் போட்ட மூன்று பவுன் நகையையும், ரேணு சடங்கான போது தாய்மாமன் சீர் என பிடுங்கிக் கொண்டார் சரோஜா.

தங்கவேலு மீனாட்சி தம்பதிக்கு,மூன்றும் பெண் குழந்தைகள். மூத்தப் பெண் சிந்தாமணி, பார்வைக்கு நல்ல அழகி. ஆனால் வலிப்பு நோயாளி. அவளே அந்த நோயை மறந்துவிட்ட போதும், அத்தைமார்கள் எப்பவாவது வீட்டிற்கு வந்தால் அதனை நினைவு படுத்த அன்றே மீண்டும் சிந்தாமணிக்கு வலிப்பு வந்து விடும்.

பேரழகியாக இருந்தாலுமே, இந்த வலிப்பின் காரணமாக தங்கைகள் யாரும் சிந்தாமணியை தங்கள் வீட்டு மருமகளாக கொண்டுவர  நினைக்கவில்லை. சரோஜாவுக்கு மூத்த தமக்கையான, மாலாவுக்கு மட்டுமே சிந்தாமணியை தன் வீட்டு மருமகளாக்கிக் கொள்ள எண்ணம் இருந்தது. இதற்கு காரணம் மாலாவின் மகன் ஒரு ஊதாரி. குடி போதையில், அம்மாவையே இழுத்து போட்டு அடிப்பான். அவனின் வண்டவாளம் தெரிந்த ஒருவரும் பெண் கொடுக்கவில்லை.

மாலா அண்ணனிடம் சென்று ஒரே அழுகை. சிந்தாமணியை திருமணம் செய்து வைத்தால் தன்னுடைய மகன் மாறி விடுவான் என, உண்ணாவிரதம் இருந்தார். திருமண செலவு மொத்தமும் தானே செய்து, பெண்ணுக்குத்தானே நகை போட்டு கட்டிக் கொள்வதாக  தங்கவேலுவின் மனதை கரைத்து, சிந்தாமணியை விடப்படியாக தன் குடிகாரன் மகனுக்கு கட்டி வைத்து விட்டார்.

அன்றிலிருந்து சிந்தாமணிக்கு, நரகம் இப்படித்தான் இருக்கும் என்பது புரிந்து போனது. சிந்தாமணி விஷயத்தில் தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து தங்கவேலு நொடிந்து விட்டார். ஆரம்பத்தில் வரதட்சணை வேண்டாம் நகை வேண்டாம் என்று சொல்லி திருமணம் செய்து கொண்டு போன மாலா, தொட்டதற்கெல்லாம் சிந்தாமணியை தகப்பன் வீட்டிற்கு அடித்து துரத்தி பணம் வாங்கி வர சொல்லி கொடுமைப்படுத்தினார்.

ஒரு கட்டத்தில் மாலாவின் அடாவடி தாங்க முடியாமல், தங்கவேலு தங்கையை போலீசில் புகார் தந்து விடுவதாக மிரட்ட, அதற்கெல்லாம் அசரும் ஆளா மாலா." சொல்லு நானும் சொல்லுவேன் உன் பொண்ணு ஒரு நடத்த கெட்டவனு. அவளுக்கும் கீழ ரெண்டு இருக்கே அதை எப்படி கரை சேர்ப்ப" ஒரே வார்த்தையில் தங்கவேலு வாயை அடைத்து விட்டார் மாலா.

தன்னை ஒரு அடி தாங்கியாகவே நினைத்து உருமாற்றிக் கொண்ட சிந்தாமணி, அந்த நரகத்திலேயே தான் வாழ்ந்து மடிந்து கொள்வதாக பெற்றோரிடம் சொல்லி விட்டாள்.மகள் படும் துன்பத்தை தாங்க முடியாமல் தனது சக்திக்கு மேலேயும் கடன் வாங்கி எவ்வளவோ செய்துவிட்டார் தங்கவேலு. ஆசைக்கு ஒரு அளவு இருக்கிறது. பேராசைக்கு?

மகள் வாழ்வை நினைத்து சாலையில் இலக்கின்றி நடந்து கொண்டிருக்கும்போது, நடந்த விபத்தில் முதுகெலும்பில் அடிபட்டு ஆள் படுத்த படுக்கையாகி விட்டார். இடி மேல் இடி விழுந்து கருகியதைப் போல அந்த குடும்பமே ஆட்டம் கண்டு விட்டது. உயிருக்கே போராடும் நிலையில் ஆபரேஷன் செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என்று கைவிரித்து விட்டார்கள் மருத்துவர்கள்.

மூன்று வேளை சோறே அந்த குடும்பத்திற்கு பெரிய விஷயமாக இருக்கும் போது, இதில் எங்கிருந்து ஆபரேஷனுக்கு பணத்தை தயார் செய்வது? மாலாவை பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற இரு தங்கைகளும், ஊரில் இருந்து கொண்டே வெளியூருக்கு சென்று விட்டதாக பொய் உரைத்தனர். மீதமிருந்தது சரோஜா மட்டுமே.

மகனின் குணம் சரோஜாவுக்கு நன்றாக தெரியும். திருமணத்திற்கு முன்பாகவே பல "அந்த" மாதிரி பெண்களோடு தொடர்பு வைத்திருந்தான் திலீப். அரசல் புரசலாக அவனைப் பற்றிய விஷயங்கள் சரோஜா காதுக்கு வந்து கொண்டுதான் இருந்தது.

ஆப்ரேஷன் செய்யும் பணத்திற்காக பெரியநாயகி, சரோஜாவின் உதவியை நாடி வரும்போது இந்த அரிய வாய்ப்பை கப்பென்று பற்றிக் கொண்டார் சரோஜா. ஏற்கனவே பெரியநாயகி அழகில் மதுவுண்ட வண்டாக சுற்றுவான் திலீப். இப்படி ஒரு அடிமையை திருமணம் செய்து வைத்தால் பிரச்சனை வராது என கணக்கு போட்ட சரோஜா, என் மகனை திருமணம் செய்தால் உனக்கு பணம் தருவேன் என்று நிர்பந்தப்படுத்தினார்.

பெற்ற தந்தையின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கும்போது, வேறு எதை பற்றியும் சிந்திக்க முடியாத நிலையில் தன் வாழ்வை பணயம் வைத்து தந்தையின் உயிரைக் காப்பாற்றி விட்டாள் பெரியநாயகி.

மீனாட்சி, இரண்டு வீட்டில் வீட்டு வேலை செய்பவர். அதில் ஒன்று மருத்துவர் வீடு, இன்னொன்று ஆபிஸ் செல்பவர் வீடு. மருத்துவர் வீட்டில் வேலை செய்வதால் மீனாட்சியின் குடும்ப நிலை தெரிந்து, தங்கவேலுவுக்கு சில நேரம் இலவசமாக வைத்தியம் பார்ப்பார் மருத்துவர்.

தன் வீட்டில் முன்னால் கார் நிற்க, உள்ளிருந்து ஓடி வந்தாள் மணிமேகலை. இவ்வளவு சிரமத்திற்கு நடுவே, கல்லூரியில் காலடி எடுத்து வைத்த தங்கவேலு வீட்டு வாரிசு. பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவள், அக்காவை பார்த்ததும் ஓடி வந்தாள்.

தங்கையை கட்டிக் கொண்ட பெரியநாயகி, அவளை சமாதானப் படுத்தினாள். மணிமேகலையின் அழுகை நின்ற பாடாய் இல்லை. பின்னாலேயே கேட்ட திலீப்பின் குரலில் பெரியநாயகியின் உடல் விரைத்தது.

"ஏன்டாமா இப்படி அழற.. அப்பாவுக்கு ஒன்னும் ஆகாது.அதான் மாமா வந்துட்டேன் இல்ல.. நீ அழுதா மாமாவுக்கு மனசு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா" மணிமேகலைக்கு அவனின் உள்நோக்கம் புரியாமல் இல்லை. அவள் சற்று புத்திசாலி. அக்காவின் முகத்தை கூர்ந்து பார்த்தவள் உடனே

" எங்களுக்கு கூட பொறந்த அண்ணனு யாருமே இல்ல மாமா. உங்கள அந்த இடத்துல வச்சு தான் நான் பார்க்கிறேன். நீங்க வந்துட்டீங்கள. இனிமே செலவுக்கு நாங்க கவலையே பட மாட்டோம். நீங்க ஒரு கல்தூண் மாமா" செலவைப் பற்றி மணிமேகலை சொன்னதும் திலீப்பின் கை அவனை அறியாமல் பர்ஸை தடவி பார்த்துக் கொண்டது.

வீட்டிற்குள் சென்று பார்த்தால் ஹாலில் ஒரு மூளையில் கட்டில் போட்டு, படுக்க வைக்கப்பட்டிருந்தார் தங்கவேலு. ஒரு காலத்தில் வைரம் பாய்ந்த கட்டையாக இருந்தவர், உடன் பிறந்தவருக்காக ஓடி ஓடி உழைத்தவர், இப்போது சொந்த பிள்ளைகளின் வாழ்க்கையை சீராக்க முடியாமல் ஓய்ந்து கிடந்தார். தனக்காக பெரியநாயகி தன் வாழ்வையே பணயும் வைத்தது அவரை மேலும் உருக்கி விட்டது.

என்புத்தோல் போர்த்திய உடலாக படுத்து கிடந்த தந்தையைப் பார்த்ததும் கண்ணீர் பொத்துக் கொண்டு வந்தது பெரியநாயகிக்கு. மகளைக் கண்டதும் மீனாட்சி பெரிதாக கண்ணீர் வடித்தார். சிந்தாமணியும் அங்கே தான் இருந்தாள். புதிதாக ஏதோ தொழில் செய்யப்போவதாக சொல்லி பிறந்து வீட்டில் பணம் வாங்கி வருமாறு, அவளது கணவன் அவளை இங்கே கொண்டு வந்து விட்டு ஒரு மாதம் ஆகிறது.

இல்லாத பணத்தை எங்கிருந்து பிடுங்கி எடுத்துச் செல்வாள்? அக்கா தங்கையிடம் நலம் விசாரித்துவிட்டு, அப்பாவிடம் பேச்சு கொடுத்தும் எந்த பலனும் இல்லை. திலீப்புக்கு, அந்த குடும்பத்தின் வேதனை ஒரு பொருட்டாக இல்லை.மறு வீட்டுக்கு வந்திருக்கும் புது மருமகன் போல" அத்தை மதிய சாப்பாட்டுக்கு கறி எடுத்துருங்க.. இப்ப டிபன் என்ன பண்ணி இருக்கீங்க"

அவனின் குணம் அங்கிருந்து அனைவருக்கும் தெரியும் என்பதால், " கிச்சடி பண்ணிருக்கேன் மாப்பிள்ளை" சத்தமே வராமல் பதில் சொன்னார் மீனாட்சி.

" சரி எடுத்துவைங்க நான் குளிச்சிட்டு வந்து சாப்பிடுறேன்.ஹேய் உள்ள வா" அந்த வீட்டிலிருந்தது ஒரே அறை.திலீப் அல்லது சிந்தாமணியின் கணவன் சேகர் வந்தால் அந்த அறையை பயன்படுத்துவார்கள். கொஞ்சம் கூட சங்கோஜமே இல்லாமல் குடும்பத்தார் முன்னிலையில் மனைவியை இழுத்துக் கொண்டு அறைக்குள் சென்றான் திலீப்.

"என்னடி, ட்ரெயின்ல சொகுசா என் மடியில படுத்துட்டு வர.. நல்ல தூக்கமோ" தந்தையின் உடல்நிலை எண்ணி மனதால் நொறுங்கி இருந்தவளை, ஈவு இரக்கமே இல்லாமல் வேட்டையாடினான் அந்த மிருகம். பின்பு எதுவும் நடக்காதது போல காலை உணவு மதிய உணவு என, அனைத்தையும் ஒரு பிடி பிடித்து உறங்கி விட்டான்.

சிந்தாமணி, பெரியநாயகி இருவருமே ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் கூறும் நிலையில் இல்லை. மாலை ஆனதும் உறங்கி எழுந்தவனை, பிடித்துக்கொண்டாள் மணிமேகலை.

" மாமா நான் என்ன கேட்டாலும் வாங்கி தருவீங்களா" அவளது குரலில் அவ்வளவு குழைவு. சிந்தாமணி பெரியநாயகியைப் போல பேரழகியாக இல்லாவிட்டாலும், கண்ணுக்கு குளிர்ச்சியாகவே இருந்தாள் மணிமேகலை.

அவளே, திருவாய் திறந்து குழைவோடு கேட்கும் போது எப்படி மறுப்பான் திலீப். " நீ கேட்டு நான் தராம இருப்பேனா.. என்ன வேணும் சொல்லுடாம்மா"

" வீட்டில சுத்தமா சாமான் முடிஞ்சு போச்சு மாமா. அப்பாவுக்கும் பழம் ஆர்லிக்ஸ் இன்னும் நிறைய வாங்க வேண்டி இருக்கு. இதுக்கெல்லாம் நாங்க பணத்துக்கு எங்க போவோம். உங்ககிட்ட கேக்காம வேற யார்கிட்ட இவ்ளோ உரிமையா கேட்க முடியும்? இந்த வீட்டோட மருமகனா எல்லா பொறுப்பும் உங்ககிட்ட தானே இருக்கு. சேகர் மாமா கிட்ட உங்க கிட்ட கேக்குற மாதிரி இவ்ளோ உரிமையா கேட்க முடியுமா? " மணிமேகலை பேச பேச கிரீடம் தன் தலையில் வந்து அமர்ந்ததைப் போல உணர்ந்தான் திலீப்.

உடனே மணிமேகலையை என்ன வேண்டுமோ அதனை லிஸ்ட் போட சொல்ல, அவள் இரண்டு மாதத்திற்கு தேவையான சாமான்களை அனைத்தையும் லிஸ்ட் போட்டு விட்டாள். அனைத்தையும் பார்வையிட்டவன் அவளையும் கடைத்தெருவுக்கு அழைக்க" நீங்க போங்க மாமா நைட்டுக்கு உங்களுக்கு பிடிச்ச சாப்பாடா செய்யப் போறேன் என் கையாலேயே. அக்காவ கூட்டிட்டு சீக்கிரம் போயிட்டு வாங்க" திலீப்,  பெரியநாயகியை அழைத்துக் கடைக்கு போக அவ்வளவு நேரம் நடந்ததை பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்த மீனாட்சி மகளை கண்டித்தார்.

"என்னடி அவனே ஒரு பொம்பள பொறுக்கி.. ஏற்கனவே உன் அக்காவை கட்டி கொடுத்து நாங்க படுறது பத்தாதா.. நீயே வழிய போய் கொழஞ்சி கொழஞ்சி அவன்கிட்ட பேசிகிட்டு இருக்க"

" அம்மா ஆடுற மாட்ட ஆடி கறக்கணும் பாடுற மாட்ட பாடி தான் கறக்கணும். அக்காவ காரணமா வச்சு நம்ம குடும்பத்துல இருந்த எல்லாத்தையும் சுரண்டுரவங்க தானே இவங்க. அவனோட வீக்னஸ் வச்சு அவன செய்ய வைக்கணும். பொம்பள பொறுக்கி.. " மணிமேகலை சொல்லியதை சிந்தாமணி ஆதரித்தாள்.

வெளியே வந்தால்தான் திலீப்பின் சுபாவம் மாறி விடுமே. கடைக்கு போகும் முன்பு, பனிக்கூழ் கடைக்கு மனைவியை அழைத்துச் சென்றான். ஐஸ்கிரீம் வாங்கி அவளை சாப்பிட செய்தான். அவள் ஐஸ்கிரீமை சாப்பிட இவனது கண்கள் இரவு அவளோடு கழிக்க போகும் காம லீலைகளைப் பற்றி கனவு கண்டது. பணம் கொடுத்து விட்டு வெளியே வர, அப்போதுதான் திலீப் கவனித்தான். பெரியநாயகியின்  இதழில் பட்டும் படாமல் லேசாக ஐஸ்கிரீம் ஒட்டிக் கொண்டிருந்தது.

சற்று யோசிக்காமல் அவளது இதழின் மேல் தன் இதழை வைத்து,அந்த ஐஸ்கிரீமை சுவைத்தான். பனிக்கூல் கடைக்கு வந்திருந்ததில் முக்கால்வாசி பேர் இளைஞர்கள். அவர்களுக்கு கணவன் மனைவிக்கு அன்பாக முத்தமிடுவது போல இருந்தது. பொது இடத்தில் இதெல்லாம் பெரியநாயகிக்கு சகஜம்.. இருந்தாலுமே அவளது இதயம் பூமி பிளந்து உள்ளே சென்று விட மாட்டோமா என தவிர்த்தது. அதற்கு மாறாக அவளது இதழ்களில் வெட்க புன்னகை. இல்லையென்றால் அதற்கும் சேர்த்து இரவு அவள் தான் வேதனை பட வேண்டி இருக்கும்.

மற்றவரின் கண்களுக்கு அது வெட்க புன்னகை மட்டுமே தெரியும், அவளது கெட்ட நேரம் அந்த ஒருவனின் கண்களுக்கும் அவளது புன்னகை வெட்க புன்னகையாகவே தெரிந்தது. கண்களில் குரோதத்தோடு பெரியநாயகியை பார்த்துக் கொண்டிருந்தான் ஜக்குவரில் அமர்ந்திருந்த ஒருவன்.

தொடரும்


Comments

Popular posts from this blog

5 காதல் காட்டுமிராண்டி

2 காதல் காட்டுமிராண்டி

1 காதல் காட்டுமிராண்டி