8 காதல் காட்டுமிராண்டி
தங்கவேலுவிற்கு பதினாறாம் நாள் காரியம் நடந்து கொண்டிருந்தது. எங்கே இப்போது பெரியநாயகியை அழைத்து சென்றால் செலவுகள் வந்து விடுமோ என பயந்த திலீப், சொந்த தாய்மாமன் மரணத்திற்கு கூட வராமல் இருந்து விட்டான். சரோஜா அதற்கும் மேல். கணேசன் மட்டும் மனைவி மகனுக்கு தெரியாமல் இடையில் ஒரு நாள் வந்து பார்த்தார்.
" எனக்கு தெரியாது மா. யாருமே என்கிட்ட சொல்லல. நீயாவது எனக்கு ஒரு போன் பண்ணி இருக்கலாம் இல்ல"
அவரை பரிதாபமாக பார்த்த பெரியநாயகி" எதுக்கு மாமா அப்புறம் அத்தை உங்களையும் என்னையும் சேர்த்து வச்சு தப்பா பேசுவாங்க. இதெல்லாம் என்னத்துக்கு தேவையில்லாம"
அவளின் பேச்சு முழுக்க முழுக்க உண்மை என்பதை அனுபவரீதியாக கணேசன் உணர்ந்தார்.
" இதுல 20 ஆயிரம் இருக்கும்மா. என்னால முடிஞ்சது. செலவுக்கு வச்சுக்கோ"
" இந்த பணத்தை எப்படி மாமா பொறட்டினீங்க." பணத்தை வாங்காமல் கேட்டாள் பெரியநாயகி.
" தெரிஞ்சவங்க கிட்ட கடன் வாங்குனேன்மா."
" பரவால்ல மாமா எனக்கு இந்த பணம் வேணா" பெரியநாயகி பணத்தை வாங்க மறுத்தாள்.
" வச்சுக்கோமா நிறைய செலவு இருக்கும். அம்மா கையில பணத்தை கொடுத்துட்டு காரியம் முடிஞ்சதும் நீ வந்து சேரு.. "
" உங்க பையன் தான் என்ன கூப்பிட சொன்னாரா மாமா"
" நீ வேற நான் இங்க வந்ததே அவங்களுக்கு தெரியாது. கன்னியாகுமரியில, என் ஃப்ரெண்டு ஒருத்தன் இருக்கானே. போன மாசம் கூட அவங்க மகளுக்கு கல்யாணம்னு வந்து பத்திரிக்கை வச்சானே. இன்னிக்கு தான் அவன் மகளுக்கு கல்யாணம். அங்க போறதா உன் அத்தை கிட்ட போக்கு காட்டி, இந்த பக்குட்டு ரயில் ஏறிட்டேன்." பெரியநாயகிக்கு மாமனாரை பார்க்கும் போது, கவலையாக இருந்தது.
கட்டிய மனைவியை அடக்க துப்பில்லாமல், இரவானால் மதுவைப் போட்டுவிட்டு பைத்தியமாக மாறி விடும் அவரை என்னவென்று சொல்வது? கணேசன் வம்படியாக தான் எடுத்து வந்த பணத்தை பெரியநாயகியிடம் கொடுத்து விட்டு மீனாட்சிக்கும் ஆறுதல் வார்த்தைகள் சொல்லி விட்டு கிளம்பினார்.
அன்று மனைவி கொழுந்தியாள்கள் கையால் விளக்கமாற்று அடி வாங்கிய சேகர் எட்டியும் அந்த பக்கம் பார்க்கவில்லை. திலீப் எப்போதும் ஓயாமல் பெரியநாயகிக்கு போன் அடித்துக் கொண்டே இருக்கிறான். ஒரே ஒரு நாள் மட்டும் அழைப்பை ஏற்க" ஏய் என்னடி தே...யா மவள.. அவ்ளோ திமிரா உனக்கு? போன் அடிச்சா கட் பண்ணி விடுற.. வாழாவெட்டியா உங்க அம்மா வீட்டுல உக்காந்துக்க ஆசையா?"
" அப்படி ஒன்னு நடந்தா நான் சந்தோஷப்படுவேன். நான் தே##யா மவளா இருந்துட்டு போறேன். அப்போ என்கிட்ட வந்த உங்கள தே###யா பையன்னு சொல்லவா?" நிதானமாக மறு கேள்வி கேட்டாள் பெரியநாயகி.
அந்தப் பக்கம் திலீப்புக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. ஆத்திரத்தில் உடல் நடுங்கியது. அவனது அடிமை என நினைத்திருந்த பெரியநாயகி அவனைப் பார்த்து என்ன வார்த்தை கேட்டு விட்டாள். "ஹேய் உன்ன"
" கத்தாதிங்க.. நானா இனிமே உங்க வீட்டுக்கு வரமாட்டேன். வாழாவெட்டியா என் அம்மா வீட்டுல இருந்தாலும் பரவால்ல. இத்தனை நாள் உங்க வீட்ல நான் அடிமையா இருந்தது எதுக்காக தெரியுமா? என்னோட அப்பாவுக்காக. அந்த மனுஷன் அனாதை பொணமா போய் சேர்ந்தாரு. தங்கச்சிங்க மருமகன்னு ஒரு நாய் இங்க எட்டி பாக்கல. இன்னும் எதுக்காக இந்த பொய்யான வாழ்க்க"
" வரமாட்டேனா.. என்னடி அர்த்தம்.நான் சொல்லவா?அங்க எவனையோ புதுசா புடிச்சுட்டேன்னு அர்த்தம். எப்படி ஆளு"
"நாய குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சாலும் அது புத்தி பீ திங்க தான் போகுமாம்.. கண்ணால இப்பதான் பார்க்கிறேன். உங்களால ஆனத செஞ்சுக்கோங்க." படக்கென்று அழைப்பை துண்டித்து விட்டாள் பெரியநாயகி.
திலீப்புக்கு அவளைக் கொன்று போடும் அளவு கோபம் வந்தது. சரோஜா வேறு ஒரு வாரத்தில் வருவதாக சொல்லி விட்டுப் போனவள் இன்னும் வந்து சேரவில்லையே என ஒரே நச்சரிப்பு. வீட்டு வேலை மொத்தமும் அவர் மண்டையில் விழுந்தது. ரேணு ஒரு வேலை செய்யாமல் அவளது வேலையையும் சேர்த்து சரோஜாவே செய்தார். திலீப்புக்கு அவனது இச்சையை தீர்க்க வழி இல்லாமல் சுகாதாரமில்லாத பெண்களை நாடி சென்று வர ஆரம்பித்து விட்டான்.அது வேறு சரோஜாவுக்கு பயமாக இருந்தது.நோயை வாங்கி விடுவானென.
ரேணு அம்மாவுக்கு தூபம் போட, சரோஜா நேரடியாக பெரியநாயகிக்கு அழைத்தார்.
"ஹெலோ"
"சொல்லுங்க"
"ஏன் சொல்லுங்க அத்தைனு சொன்னா வாயில கேடு வந்துருமா"
"எந்த விதத்துல அத்தையா இருந்திருக்கீங்க" பெரியநாயகி நேரடி தாக்குதலை ஆரம்பிக்க சரோஜா ஒரு நிமிடம் திடுக்கிட்டார். போன் ஸ்பீக்கரில் இருக்க ரேணு அம்மாவுக்கு எடுத்துக் கொடுத்தாள்.
" உங்கப்பனுக்கு தங்கச்சி. உன் புருஷனுக்கு அம்மாடி நானு"
" ஒரு சின்ன திருத்தம். அப்பா தங்கச்சிங்கன்னு பேர்ல நாலு அட்டை பூச்சிங்களுக்கு சம்பாரிச்சு போட்டுருக்காரு.. புருஷனு சொன்னவரு எனக்கு ஒரு கஷ்டம்னு வரும்போது ஆளே அட்ரஸ் இல்லாம போயிட்டாரு" இத்தனை காலம் வாயில்லாத பூசியாக இருந்த பெரியநாயகி,திடீரென இப்படி பேச ரேணுவால் பொறுக்க முடியவில்லை.
சரோஜா கையிலிருந்து போனை பிடிங்கி"ஹேய் என்ன வாயி ரொம்பத்தான் நீளுது. என்ன குளிர் விட்டு போச்சா? அன்னக்காவடி நாயி.. காக்காசுக்கு வாங்கில்லாத பரதேசி"இன்னும் ரேணு ஏதேதோ சொல்ல
"ஆமா நான் அன்னக்காவடி, பரதேசி, மூதேவி, ஆனா நீ ஓசி சோறு திங்குற டிக்கெட்டு.. உன் புருஷனாவது உன்கூட இன்னும் இருக்கான். வேற எவனாவது இருந்திருந்தா உன் மண்டைய ஒடைச்சு மாவிளக்கு வெச்சிருப்பான்."
"ஹேய் என்னடி சொன்ன..பிச்சைக்கார தெரு நாயே"
"யார்டி நீ.. உங்கிட்ட பேச என்ன இருக்கு?இன்னொரு தடவ போன் வந்தா போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணிருவேன்"அழைப்பை தூண்டித்தாள் பெரியநாயகி. இனி அங்கே செல்ல அவள் தயாராக இல்லை.. அதனால்தான் இவ்வளவு தைரியமாக பேசினாள் பெரியநாயகி.
" ரேணு.. நாயகியா நம்மள நாய் மாதிரி பேசுறா.. அவளுக்கு என்ன நெஞ்சழுத்தம் பாத்தியா.. " குமைந்தார் சரோஜா.
" அம்மா அவ ஏதோ ஒரு முடிவு பண்ணிட்டா. அவள இப்படியே விடக்கூடாது. அவளுக்கு ஒரு முடிவு கட்டியே ஆகணும்."
" என்னடி செய்ய போற " மகளைப் பார்த்து பயந்தவாறு கேட்டார் சரோஜா. அம்மாவை பார்த்து அர்த்த புன்னகை புரிந்தாள் ரேணு.
அம்மாவும் மகளும், மாந்திரீகம் செய்யும் ஒருவனின் முன்பு அமர்ந்திருந்தார்கள்.
" நான் சொன்னதெல்லாம் எடுத்துட்டு வந்தீங்களா"
" எடுத்துட்டு வந்துட்டோம் சாமி.. " ரேணு, கையோடு கொண்டு வந்திருந்த பையிலிருந்து பெரியநாயகியின் உள்ளாடை,அவளின் சேலை, அவள் தலை சீவும் சீப்பிலிருந்த அவளது கொத்து தலைமுடி இதர பொருட்களை எடுத்து அந்த ஆசாமியின் முன்பு கடை விரித்தாள். அவன் அதனை வைத்து ஏதேதோ மந்திர உச்சாடங்கள் செய்ய ஆரம்பித்தான்.
" ரேணு.. இந்த ஆளு சரியா வேலைய முடிப்பானா.. அன்னைக்கு வந்தோம் காச வாங்கிட்டு பொருளை எடுத்துட்டு வாங்கன்னு சொல்லி துரத்தி விட்டுடான்"
" அதான் இன்னைக்கு பொருளோட வந்தாச்சே.. நீயேன் சந்தேகமாவே பாக்குற. எல்லாம் நல்லபடியா நடக்கும். இதோடு அந்த பெரியநாயகி அழிஞ்சா" அம்மாவும் மகளும் சேர்ந்து பெரியநாயகிக்கு சூனியம் வைக்கும் வேலையில் முனைப்பாக இருந்தார்கள். அவர்களின் அடிமையாக பார்த்திருந்த பெரிய நாயகி அவர்களை எதிர்த்து கேள்வி கேட்டதை அந்த இரு பெண்களாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே பெரியநாயகி, விளங்கவே கூடாது என அவளுக்கு மாந்திரீகம் செய்து வைத்தார்கள்.
பதினாறாம் நாள் காரியங்கள் அனைத்தும் முடிந்த நிலையில், சிந்தாமணி வீட்டிலேயே, தையல் வேலையை ஆரம்பித்தாள். திருமணத்திற்கு முன்பும் வீட்டில் இதை தான் செய்வாள். மீனாட்சி மீண்டும் வேலைக்கு போக தொடங்க, மணிமேகலையும் கல்லூரிக்கு சென்றாள்.
அன்று இரவு மீனாட்சி மெல்ல பேச்சை தொடங்கினார்.
"நாயகி.. நீ இங்க வந்து கிட்டத்தட்ட ஒரு மாசம் ஆகப் போகுது. எப்போ நீ உன் புருஷன் வீட்டுக்கு போக போற" எப்படி இருந்தாலும் அம்மாவிடமிருந்து இந்த கேள்வி வரும் என பெரியநாயகி எதிர்பார்த்தே காத்திருந்தாள்.
எனவே" இனிமே நான் அங்க போறதா இல்லம்மா" அசராமல் குண்டை தூக்கி மீனாட்சி தலையில் போட்டாள்.
" என்னடி சொல்ற அங்க போகாம இங்கே இருக்கிறதா உத்தேசமா"
" ஆமா"
" பெரியநாயகி"
" அம்மா,இப்ப எதுக்கு கத்துற? நான் என்ன அவன ஆசைப்பட்டா கட்டிக்கிட்டேன்? அப்பாவும் நீயும் சேர்ந்து எனக்கு கல்யாணம்ன்ற பேர்ல கருமாதி பண்ணிங்க. இத்தனை நாள் அப்பாவுக்காக எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன்.. இப்போ அப்பாவே இல்லனதும் நான் எதுக்கு அந்த நரகத்துக்கு திரும்ப போகணும்"
" அதுக்காக, அவன் உன் புருஷன் இல்லனா ஆயிடுமா?என்ன இருந்தாலும் ஒரு பொண்ணு புகுந்த வீட்ல அனுசரிச்சு போகணும். போற வீட்ல அப்படி இப்படின்னு இருக்க தான் செய்யும். ஆயிரம் பிரச்சனை வரும். எல்லாத்தையும் சமாளிச்சு அங்கேயே இருந்து போராடனும். அத விட்டுட்டு தொட்டதுக்கு எல்லாம் பொதுக்குனு அம்மா வீட்டுக்கு கிளம்பி வந்தா,ஊரே நம்மள பார்த்து காரி துப்பும். உனக்கும் கீழே உன் தங்கச்சி இருக்கா. ஏற்கனவே உங்க அக்கா வாழாவெட்டியா வந்து உட்கார்ந்துருக்கா. இப்ப நீ வேற புதுசா கிளம்புற.. ஏண்டி எனக்குன்னு வந்து இப்படி பொறந்திருக்கீங்க..
கல்யாணம் ஆனாலே நமக்குன்னு சொந்த விருப்பு வெறுப்பு எதுவுமே கிடையாது. புருஷனுக்கு புடிச்ச மாதிரி அனுசரிச்சு நடந்து, புள்ள குட்டிங்கள வளத்து, போற இடத்துல நல்ல பேர் வாங்கணும். நீங்க ரெண்டு பேரும் இப்படி அம்மா வீட்டோட இருந்தா நாளைக்கு உன் தங்கச்சியை கட்டிக்க வரவன், நம்மள என்ன கேள்வி கேட்பான்?"
" அப்போ நீ உன் பொண்ணுங்க வாழ்க்கைய பத்தி கவலைப்படல. ஊர்க்காரன் என்ன பேசுவான் தான் உன் கவலையே.. "
" நான் அப்படி சொல்லலடி.. எந்த ஜென்மத்துல செஞ்ச பாவமோ உங்க ரெண்டு பேருக்கும் இப்படி ஒரு வாழ்க்கை அமைஞ்சு போச்சு. மணிக்காவது ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேணாமா.. அதுக்கு நீங்களே தடையாக இருக்கலாமா" மீனாட்சி, சராசரி தாயாராக மகளுக்கு புத்திமதி சொல்லி புகுந்த வீட்டுக்கு அனுப்புவதில் குறியாக இருந்தார்.
பெரியநாயகி தன் முடிவை சொன்னதோடு சரி வாயை மூடிக் கொண்டாள். மணிமேகலையும் சிந்தாமணியும் அவளுக்காக பேசினார்கள்.. மீனாட்சி கேட்பதாக இல்லை. பெற்ற மகளை வாழ வெட்டியாக வீட்டில் வைத்திருக்க அந்த தாயின் மனமிடம் கொடுக்கவில்லை.
பெரியநாயகி அழும் அம்மாவை பார்த்தாள். சில வேலைகளில் பிள்ளைகளே பெற்றவர்களுக்கு பாரமாகி விடுகிறார்கள். அதேபோல் தவிர்க்க முடியாத சில சமயங்களில் பெற்றவர்களும் பிள்ளைகளுக்கு பாரமாகி விடுகிறார்கள். தட்டிக் கழிக்க முடியாத கடமைகளில் சிக்கிக் கொண்டு, பிள்ளைகள் முழிப்பதுங்கி நிற்கிறார்கள். பெற்றவர்களை குறை சொல்லி அங்கு ஆகப் போவதுமில்லை. பிள்ளைகளுக்கு இதனால் ஒரு நிவர்த்தியும் வருவதற்கில்லை.கடமையும், பாசமும் மனிதனை எப்போதுமே அடிமைப்படுத்தி வைத்துக் கொண்டிருக்கிறது.
பெரியநாயகி எழுந்து மீனாட்சி அருகே வந்தாள்." நாளைக்கு நான் என் புருஷன் வீட்டுக்கு போறேன்" மீனாட்சியின் முகத்தில் குற்ற உணர்ச்சியோடு எழுந்த புன்னகை.
ஆனால்?
தொடரும்
Comments
Post a Comment