7 காதல் காட்டுமிராண்டி
பெரியநாயகி அவளுக்கு இருந்த கோபத்தில் எப்படி மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தாள் என அவளுக்கே தெரியவில்லை. ஆட்டோவுக்கு பணம் கொடுத்தது, வழி நெடுங்கினும், அந்த அகம்பாவி பேசியதை நினைத்து மருகியது என எல்லாமே அசுரகதியில் நடந்து முடிந்தது.
மருத்துவமனைக்குச் சென்றால், மீனாட்சி ஏக்கத்தோடு பெரியநாயகி முகத்தை பார்த்தார். பெரியநாயகியின் பெரிய கண்களே சொல்லியது அவள் போன காரியம் வெற்றி அடையவில்லை என்பதை. மீனாட்சி இடிந்து அமர்ந்தார். மருத்துவர்கள் ஆபரேஷன் செய்தால் தங்கவேலு பழையபடி எழுந்து நடமாட வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை அளித்திருந்தனர்.
ஆனால் கையில் பணம் இல்லாத நேரத்தில், வேறு எதை அவர்கள் செய்திட முடியும். தனியார் மருத்துவமனை என்பதால் நிமிடத்துக்கு நிமிடம் பணம் ஏறிக் கொண்டே போனது. இவர்களிடம் கையிருப்பில் இருந்த 18 ஆயிரம் ரூபாயும் கரைந்து விட,மருத்துவமனை நிர்வாகம், தங்கவேலுவை தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல சொல்லியது.
கவுண்டரில் இருந்த பெண் கூட" ஏம்மா காசு இல்லாத நீங்க எல்லாம் எதுக்குமா இந்த மாதிரி பிரைவேட் ஆஸ்பத்திரிக்கு வரீங்க.. இங்க என்ன இலவச வைத்தியம்னு போர்டா போட்டுருக்கு. நல்லா இருக்கிறவன் இங்க வந்தாலே ரெண்டு கிட்டினிய புடுங்கிட்டு தான் விடுவானுங்க. நீங்க என்னன்னா கையில காசு இல்லாம"
மீனாட்சிக்கு இந்த வார்த்தை எல்லாம் கேட்டு, மண்ணை தோண்டி படுத்து விடலாம் போல இருந்தது. அவமானம் பிடுங்கி தின்றது. மூன்று பெண்களை வைத்துக்கொண்டு அவர் வேறு எதை யோசிப்பார்? மீண்டும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் தங்கவேலு. அவர்களும் எவ்வளவோ சிகிச்சை செய்தார்கள்.
திலீப் ஓயாமல் பெரியநாயகிக்கு அழைத்துக் கொண்டே இருந்தான்.. ஒவ்வொரு முறை அவளுக்கு அழைக்கும் போதும், அதைக் காட்டு இதை காட்டு என அவளை பாடாய்படுத்தினான். போன் எடுக்கவில்லை என்றால் வீட்டிலிருந்த மற்றவர்களுக்கு ஓயாமல் போன் அடித்து தொல்லை செய்தான்.
ஓரிரு தடவை மட்டுமே மணிமேகலையால் காப்பாற்ற முடியும். இந்த நரகத்திலிருந்து ஒரேடியாக காப்பாற்ற அவளால் முடியுமா?
திலீப்பின் அழைப்பை, நிராகரிக்க ஆரம்பித்தாள் பெரியநாயகி. அவளுக்கு இருந்த மனநிலையின் யாரிடமும் பேச விருப்பமில்லை. மேலும் ஒரு நாள் மருத்துவமனையில் கழிய, தங்கவேலு அவரது இறுதி நொடியில் இருப்பதாக மருத்துவர் குழு தெரிவித்தது.
மீனாட்சிக்கும் பிள்ளைகளுக்கும் தங்கவேலுவை அந்த நிலையில் பார்த்து கண்ணீர் கூட வற்றி விட்டது. என்புத்தோல் போத்திய உடம்பாக காட்சியளித்தார் தங்கவேலு. அவர் படும் கஷ்டத்தை பார்த்து மீனாட்சி ஒரு முடிவுக்கு வந்து, அருகில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வேண்டிக் கொண்டார். என் கணவனை மேலும் கஷ்டப்படுத்தாமல் நல்லபடியாக உன்னிடம் எடுத்துக் கொள் என்று. அதற்குப் பிரதி காரணமாக, கழுத்தில் தங்கத் தாலிக்கு பதிலாக மஞ்சள் கிழங்கைதான் கட்டிருந்தார். அதையையும் அவரே மனதை கல்லாக்கி கொண்டு கழட்டி கோயில் உண்டியல் போட்டுவிட்டு திரும்பியும் பார்க்காமல் நடந்தார். கோவிலில் வேண்டி விட்டு மருத்துவமனை வருகிறார் தங்கவேலு அவரது இறுதி நொடியில் இருப்பதாக தகவல் வருகிறது.
ஏதேதோ பேச முயற்சித்தார் தங்கவேலு. வார்த்தைகள் கட்டிப்போட்டு விட கண்ணீர் மட்டுமே அவரது இறுதி மூச்சினை நிறுத்தியது. கட்டிய மனைவி பெற்ற பிள்ளைகள் என யாருமே பார்க்கக் கூடாதது குடும்பத் தலைவனின் மரணம். அந்தப் பாவப்பட்ட குடும்பம் குடும்பத் தலைவனின் மரணத்தை கண்ணால் பார்த்தது.
யாருமே அழவில்லை. அழுகை வற்றிய நிலையில் மௌனமாக அங்கிருந்து வெளியேறி விட்டனர். தங்கவேலு உடலை வாங்கிச் செல்ல கூட ஒரு ஆண் முன் வரவில்லை. மணிமேகலையோடு பயிலும் மாணவர்கள் மீண்டும் அனைவரும் பணம் சேகரித்து அவளிடம் கொடுத்தார்கள். விஷயம் கேள்விப்பட்ட மீனாட்சியின் அக்கம் பக்கத்தார், அவர்களால் முடிந்த பணத்தை சேகரித்துக் கொடுத்தார்கள். ஆம்புலன்ஸ் வழியாக தங்கவேலு உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றார்கள்.
வீட்டிற்குச் சென்று இறங்கும் போது சேகர் அங்கே நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஒரு ஆண் துணை என்று யாருமே சந்தோஷப்படவில்லை.எழவு விழுந்த வீட்டில் இவன் எதை கிளப்ப வந்திருக்கிறானோ என்று பயம் தான் ஏற்பட்டது.
சிந்தாமணி ஒரே ஓட்டமாக ஓடினாள் சேகர் அருகே." ஏங்க, என் குடும்பமே எங்க அப்பாவ இழந்துட்டு நிக்குது. இந்த நேரத்துல தண்ணிய கிண்ணிய போட்டுட்டு வந்து அலப்பரய கூட்டிடாதீங்க" கெஞ்சினாள்.
" என்னடி அறிவுகெட்ட தனமா பேசிட்டு இருக்க.. அப்படியா கூறு வாரு இல்லாம நான் இருக்கேன்." சேகர் தனது பாக்கெட்டில் இருந்து, 5000 ரூபாயை எடுத்து சிந்தாமணி கையில் கொடுத்தான்.
அவனை புரியாமல் சிந்தாமணி பார்த்துக் கொண்டிருக்க," என்னால இவ்வளவு தான் முடியும். நானும் மனுஷன் தான். ஆனா இதுக்கு மேலயும் நான் இங்க இருந்தா என் அம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சு போயிரும். உனக்கே தெரியும் இல்ல என் அம்மாவை பத்தி. கிளம்புறேன் "
" என்னங்க வந்தவுடனே போறீங்க.. அங்க செத்துக் கிடக்கிறது உங்க தாய் மாமன். உங்களோட மாமனாரு. ஆம்பள பிள்ளைங்க இல்லாத வீட்டில மருமகன் தானே கொள்ளி வைக்கணும். அப்பாவுக்கு தலைப்புள்ள அம்மாவுக்கு கடைசி புள்ளன்னு சொல்லுவாங்க. அப்படிப் பார்த்தாலும் எனக்கு புருஷனா நீங்க தான் இருக்கீங்க. நீங்க எதுவும் செய்ய வேணாம் என் அப்பாவுக்கு கொல்லி மட்டும் வச்சிட்டு போயிடுங்க"
" ஆள் இருக்குன்னு கூட பார்க்க மாட்டேன் அப்படியே அறைஞ்சிடுவேன். என்னடி நெனச்சிட்டு இருக்க உன் மனசுல. ஏதோ என் கூட படுத்த பாவத்துக்கு எட்டி பாத்துட்டு போலாம்னு வந்தா ரொம்ப தான் சீன் போடுற.. உங்கப்பனுக்கு கொள்ளி வைக்க ஆள் ரெடி பண்றியே.. எனக்கு கொள்ளி வைக்க ஒரு வாரிச பெத்து கொடுத்தியாடி? மலட்டு கழுதை உன்னலாம் பத்தி விடாம இன்னும் ஒக்கார வெச்சு சோறு போடுறேன்ல அந்த கொழுப்பு..உங்கப்பன இழுத்துட்டு போய் பெட்ரோல் ஊத்தி எரிச்சு விடுங்க.. " விட்டேரியாக சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் சேகர்.
நேரமும் காலமும் யாருக்காகவும் காத்திருக்கவில்லை. மின் தகனம் என்பதால் கொள்ளி வைக்கும் போராட்டமும் அங்கில்லை. தங்கவேலு எரிந்து சாம்பலானார். அவரது நான்கு உடன் பிறந்த சகோதரிகளும் எட்டிக் கூட பார்க்கவில்லை.முதல் நாள் தகனத்துக்கு பணம் கொடுத்த சேகர் மறுநாள் சுதி ஏற்றிக் கொண்டு வந்து ஒரே பிரச்சனை.தங்கவேலுவை பறி கொடுத்த குடும்பமே ஆளுக்கு ஒரு மூலையில் அந்த சின்ன வீட்டில் முடங்கி விட்டது.
வீட்டில் தளவாட பொருட்களோடு ஒரு பொருளாக படுத்து கிடந்த தங்கவேலு, இப்போது புகைப்படமாக அவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தார்.. மீனாட்சி வேறு வாய் ஓயாமல் காசு இருந்திருந்தா உங்க அப்பாவுக்கு இந்த நிலைமை வந்திருக்குமா இப்படியே புலம்பி தள்ளினார். மீனாட்சியின் ஒவ்வொரு புலம்பலும் பெரியநாயகியை குற்ற உணர்ச்சியில் தள்ளியது. அவள் என்ன கண்ணகி வம்சமா?அந்தக் கண்ணகிக்கு உதவி செய்ய ஆட்கள் இருந்தார்கள்.
இந்த பெரியநாயகிக்கு உதவி செய்ய ஒரு நாதியும் கிடையாது. அந்த அகம்பாவி சொன்னானே எனது பிள்ளையை பெற்றுக் கொடுக்க சம்மதித்தால் உன் தந்தை வைத்தியத்திற்கு பணம் தருகிறேன் என்று. பேசாமல் கற்பை வைத்து பணத்தை வாங்கி வந்திருக்கலாமா? இப்படி பல்வேறான சிந்தனையில் சிக்கித் தவித்தாள் பெரியநாயகி.
யாருமே சாப்பிடவில்லை. வெறும் வயிற்றிலேயே நால்வரும் படுத்துவிட, அவர்கள் வீட்டு கதவில் கண்ணாடி பாட்டில் விழுந்து தெரித்தது. கேட் வெளியே, "ஹேய் சிந்தாமணி கதவ தொரடி"கத்தினான் சேகர். பெரியநாயகி குடும்பத்தோடு அக்கம் பக்கத்தினரும் சேர்ந்தே எழுந்து கொண்டனர்.
சிந்தாமணி வாரி சுருட்டி எழுந்து வெளியே ஓடினாள் அவசரமாக.
" ஏங்க என்னங்க ஆச்சு எதுக்கு தண்ணிய போட்டு வந்து இப்படி தகராறு பண்றீங்க.. எதுவா இருந்தாலும் வீட்டுக்குள்ள வந்து பேசுங்க."
"ஹேய்.. எனக்கே புத்தி சொல்றியா? என்னையே கேள்வி கேக்குறியா? எங்கடி அந்த அஞ்சாயிரம் ரூபாய்?"
சிந்தாமணி அதிர்ந்து" ஏங்க நேத்து நீங்க தானே அப்பாவோட காரியத்துக்கு கொடுத்தீங்க. அந்த பணம் நேத்தே செலவாச்சு. இப்ப வந்து பணத்தை பத்தி பேசுறீங்க? "
" உங்க அப்பா என்ன எனக்கு கொடுத்த வச்சுருக்கான்? என் காசுல தான் அவனுக்கு சாவு கேக்குதா?" சேகரின் அலப்பறையை கேட்டு அக்கம் பக்கத்தினர் எட்டிப் பார்த்தார்களே தவிர யாருமே வந்து அவனை தட்டி கேட்கவில்லை. ஏற்கனவே ஒரு தடவை இம்மாதிரி தட்டிக் கேட்க போய், அவர்களை வாய்க்கு வந்த மாதிரி எல்லாம் பேசி விட்டான் சேகர். எதற்கு வம்பு என்று அனைவரும் வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள்.
மீனாசிக்கு, என்ன செய்வது என்றே புரியவில்லை. பெரியநாயகி " மாமா இப்ப எதுக்கு வெளிய நின்னு கத்துக்கிட்டு இருக்கீங்க.. உங்க காசு எங்கயும் போல வீட்டிலதான் இருக்கு. உள்ள வாங்க உள்ள வந்து பேசுங்க"
"நான் வரமாட்டேன். என்னங்கடி நெனச்சிட்டு இருக்கீங்க அக்கா தங்கச்சி மூணு பேரும். மனசுல பெரிய உலக அழகினு நெனப்பு. உங்க அழகுல நாக்க தொங்க போட்டு அலையுறதுக்கு நான் ஒன்னும் உன் புருஷன் திலீப் கிடையாது. என் பணத்தை கொடு டி" சேகர் போதையில் தள்ளாடினான். அவனிடம் பேசினால் வேலைக்காக்காது என பெரியநாயகி மணிமேகலைக்கு கண்ணை காட்ட, பெரியநாயகி ஒரு பக்கம் மணிமேகலை ஒரு பக்கமாக சேர்ந்து அவனை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றனர்.
" என்னங்கடி குளிர் விட்டு போச்சா? எவ்வளவு தைரியம் இருந்தா என்ன தள்ளிட்டு வருவீங்க.. அவ்ளோ ஆசையா மாமா மேல"
" ச்சீ அசிங்கமா பேசாதீங்க. நீங்க கொடுத்த காசு செலவாச்சு." சிந்தாமணி முகத்தை சுருக்கினாள்.
" அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு இப்போ உடனே பணம் வந்து ஆகணும்"
சிந்தாமணியின் பொறுமைக்கும் ஒரு அளவு இருந்தது. அது இப்போது எல்லை கடந்து விட்டது." பணம் கொடுக்க முடியாது"
" ஏன் கொடுக்க முடியாது"
" பணம் இல்ல"
" எவனுக்கு எடுத்துட்டு போய் கொடுத்த"
" எங்கப்பன எமனுக்கு அள்ளி கொடுத்துட்டு உக்காந்துட்டு இருக்கோம் நாங்க"
" உங்க அப்பன் போனா என்னடி.. உங்க அம்மாவை பாரு.. இன்னும் பத்து கல்யாணம் பண்ணலாம் அப்படி ஒரமா நிக்குது. ஆயிரம் புது அப்பன் வருவான் உங்களுக்கு" மீனாட்சி காதுகளை பொத்திக் கொண்டார்.
சிந்தாமணிக்கு அவளது தாயை பலித்ததை பொறுக்க முடியவில்லை. பக்கத்தில் வைத்திருந்த குச்சி விளக்கமாற்றை கையில் எடுத்து அடி வெளுக்க ஆரம்பித்தாள் சேகரை. சிந்தாமணி ஆரம்பிக்கவும் மணிமேகலையும் பெரியநாயகியும் ஆளுக்கு ஒரு தொடப்பத்தை எடுத்துக்கொண்டு அவளுக்கு உதவிக்கு வந்தார்கள்.
சேகரால் அடியை தாங்க முடியவில்லை. எழுந்து வெளியே ஓடியே விட்டான். மீனாட்சிக்கு, இனி சிந்தாமணியின் வாழ்வை நினைத்து பயமாக இருந்தது. இப்படிப்பட்ட கணவன் உனக்கு தேவை இல்லை. வாழாவெட்டியாக இருந்தாலும் தாய் வீட்டில் நிம்மதியாக இருந்து விட்டுப் போ என்று சொல்ல அவருக்கு நா எழவில்லை.
" என்னதான் இருந்தாலும் நீங்க மூணு பேரும் அவர அடிச்சிருக்க கூடாது.. "
" அவன் பேசுனதுக்கு அடிக்காம" சிந்தாமணி எகிறினாள்.
" நீதான் அனுசரிச்சு போய் இருக்கணும்"
" அவன் சொன்னது உண்மைதான் நீ ரெண்டாவது கல்யாணத்துக்கு ரெடியா நிக்கிற" சிந்தாமணி பட்டென்று கேட்டு விட்டாள்.
மீனாட்சி மயங்கி சரிந்தார்.
தொடரும்..
Comments
Post a Comment