1 பைத்தியத்தின் வைத்தியமே


அத்தியாயம் 1❤️

 எதிர்பார்ப்புகள் பெரும்பாலும் ஏமாற்றத்தையே திருப்பித் தரும்..

அந்த திருமண மண்டபம் கலை கட்டிக் கொண்டிருந்தது. வாசலில் ஆரம்பித்து  நடந்து வரும் பாதையே பயங்கரமான விலை மதிப்புமிக்க கண்ணைக் கவரும் அலங்காரங்களை கொண்டிருந்தது.


அமிகா வெட்ஸ் தனுஷ்


என்ற பிரமாண்ட பெயர் பலகையை ஒரு வினாடி நின்று அந்த கண்கள் வெறித்தன. நீண்ட பெருமூச்சு அந்த உருவத்திடமிருந்து வெளிப்பட்டது. இனி எல்லாம் கைமீறிப் போய் விட்டது. உனக்கு ஏன் இந்த இடத்தில் வேலை?  பேசாமல் திரும்பிப் போய் விடு. அனுபவிக்கும் ரண வேதனை பத்தாதா?  இன்னும் உள்ளே சென்று கண்குளிர அந்த மங்கள காட்சியைக் கண்டு உன் கண்கள் கண்ணீரைச் சொரிய வேண்டுமா?


வேண்டாம் வேண்டாம் வேண்டாம் இப்படி ஆயிரம் வேண்டாக்களை தாண்டி இலட்ச வேண்டாக்கள் அந்த உருவத்தின் மூளையின் ஓடிக் கொண்டிருந்தது. மூளை சொன்னதை என்று மனம் கேட்டது? அந்த நாசமாய் போன மானங்கெட்ட மனம் உள்ளே செல். ரணப் பட்டு உதிரம் சொட்டிக் கொண்டிருக்கும் இதயத்திற்குள் இன்னும் கொஞ்சம் வலியை ஏற்றிக் கொள் என்றது.


நொடியும் தாமதிக்காமல் இங்கே நின்றிருந்தால் திரும்பி சென்றாலும் சென்று விடுவோம் என மடமடவென நடந்து மண்டபத்துக்குள் தனது வலது காலை எடுத்து வைத்தது அந்த உருவம். வீடியோ கவரேஜ் செய்யும் ஆடவன் ஒருமுறை தன் ஒற்றை விழியை கேமரா லென்ஸில் இருந்து எடுத்து விட்டு  ரத்த சிவப்பு காட்டன் பட்டு சேலை அணிந்து, சுருட்டை முடியை காற்றில் பறக்க விட்டு, கருப்பு நிற  பொட்டு வைத்து, கழுத்திலும் காதிலும் மெலிதான தோடு சங்கிலி அணிந்து, வலது கையில் இரண்டு தங்கக் காப்பு, இடது கையில் கடிகாரம் இப்படி அங்கே வந்தவர்களில் அவள் மட்டும் தான் சாதாரணமாக மிக மிக எளிமையாக வந்திருந்தாள்.


வீடியோகிராபர் அவளை வினோதமாக கண்டதன் நோக்கம் அவள் அணிந்திருந்த உடை அல்ல. அவளின் அழுது சிவந்த விழிகள். உலகமே அவள் கண்முன் அழிந்து அவள் மட்டும் நிராதரவாக நிற்பதைப் போல  அந்த முகத்தில் தோன்றிய வேதனை. யார் இந்த பெண்? எதற்காக  இப்படி தலைவிரி கோலமாக இந்த திருமணத்திற்கு வந்து இருக்கிறாள்?


தனக்குள் நினைத்துக் கொண்ட விடியோகிராஃபர்  அடுத்த நொடி தன்னை சமாளித்துக் வேலையில் மூழ்கினார்.ஆனால் அவள் யாரையும் பார்க்கும் நிலையில் இல்லை. மணமேடையில் பார்வையை செதுக்கி வைத்துக் கொண்டு ஒரு இருப்பிடத்தில் அமர்ந்தாள். அதாவது மாப்பிள்ளை கண்கள் அவளை நன்றாக பார்ப்பது போல. அவள் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் அவளை விநோதமாகப் பார்த்தார்கள்.


சாவு எடுத்த கையோடு சுடுகாட்டில் இருந்து வந்தவளைப் போல தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தவளை வேறு எப்படி பார்ப்பார்கள்? அவளைக் கண்டதும் மணமேடையில் மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவன் திடுக்கிட்டான்.  அவனின் பக்கத்தில் அவன் தோளோடு தோள் உரசி கொண்டு அமர்ந்திருந்த அமிகா வாசம் கூட இப்போது அவனுக்குள் அமிழ்ந்து போனது.


"இவ ஏன் இங்க வந்துருக்கா.. யாரு இவள வரச் சொன்னா? ஐயோ அமிக்கு விஷயம் தெரிஞ்சா என்ன ஆவும்? கடவுளே உனக்கு கண் இல்லையா?"


அவன் கடவுளை துணைக்கு அழைக்க" எப்படி நீ செய்த துரோகத்தை பார்த்தும் பார்க்காதது போல நான் இருந்தேனோ,இப்பொழுதும் அப்படியே இருந்து கொள்கிறேன் மகனே. நீ செய்த வினையை நீயே அனுபவி" கடவுள் ஹாயாக படுத்துக்கொண்டு நடப்பதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தார்.


தனுஷுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அவனின் விழிகள் அங்கே விருந்தினர்களை வரவேற்று கொண்டிருக்கும் மீசைக்கார மாமனாரை தொட்டு வந்தது.  கூடவே அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி திரிந்து வேலைகள் செய்து கொண்டிருந்த மச்சான்களை பார்க்கையில் வயிற்றை கலக்கியது. அமர்ந்த இடத்திலிருந்து நெளிந்து கொண்டிருந்தான். கண்களால் அவளை யாசித்துக்


கொண்டிருந்தான்.


அந்தக் கண்கள் பேசிய பாஷை அவளுக்குப் புரியாமல் இருக்குமோ? புரிந்ததால் தானே அவளுக்கு இந்த நிலை? எத்தனையோ முறை அவன் வாய் விட்டு கூறாத விஷயங்களைக் கூட அவனின் கண்களின் மூலம் கண்டறிந்து அதனை நிறைவேற்றி இருக்கிறாள். ஆனால் இப்பொழுது அவன் நயன பாஷை புரிந்தும் நடுநாயகமாக அமர்ந்திருக்கிறாள்.


"என்ன தனுஷ் என்னாச்சு? ஏன் இப்படி நெளியுற"அமி அவன் காதில் கிசுகிசுத்தாள்.


"இல்ல அமி பாத்ரூம் வருது அதான்".. திடீரென்று  அமி தன்னை கண்காணித்து வினவ வாய்க்கு வந்த பொய்யை அவிழ்த்து விட்டான்.


"அதுக்கா இப்படி வியர்த்து ஊத்துது"


"ஐயோ அமி.. நானே அவஸ்தை பட்டுட்டு இருக்கேன்.. நீ வேற ஏன்மா?.."அமியிடம் அவன் சற்று கடுப்பாய் பேச தூரத்தில் இருந்து தங்கை முகம் வாடுவதை கண்ட மூன்றாவது மச்சான் கண்களில் இருந்து நெருப்பு கணைகளை ஏவி விட்டான். அதனை சரியாக கவனித்த தனுஷ் "ஆத்தி இவன் வேற முறைக்குறான்"..


"அமிக்குட்டி என்னடா இதுக்கு போயி பீல் பண்ற.. ஒண்ணுக்கு வந்துருச்சு. அடக்க முடியல. அந்த டென்ஷன்ல பேசிட்டேன் செல்லம்.. மாமா பாவம் இல்ல..ஆமா என்ன இவ்ளோ அழகா இருக்க.. மயக்கமே வருது தெரியுமா"


அமி வெட்கப்பார்வை பார்க்க அந்த நேரம் தனுஷை காப்பாற்ற ஐயர் கெட்டி மேளம் என்று தாலி எடுத்து நீட்ட, தனுஷ் கை நடுங்க அங்கே தலைவிரி கோலமாக அமர்ந்திருந்தவளை பார்த்துக் கொண்டே அமிகா கழுத்தில் தாலி கட்டினான்.  தனது தலையை தாண்டி பறந்து செல்லும் மஞ்சள் அட்சதை அரிசிகளை வெறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தாள்.


தாலி கட்டியாயிற்று. அக்னி சுற்றி,அம்மி மிதித்து மெட்டி அணிவித்து, பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி, உறவுகளும் நண்பர்களும் ஒவ்வொருவராக மேடையேறி வாழ்த்து சொல்லிக் கொண்டிருந்தனர். யார் என்ன சொன்னால் என்ன கேமராமேன் "மாப்பிள மூஞ்சில சிரிப்பயே காணோம் கொஞ்சம் சிரிங்க சார்" இப்படி சொல்லும் அளவிற்கு தனுஷ் பேயறைந்தது போல காணப்பட்டான்.


சிறிது நேரம் அமிகாவிடம் சொல்லிவிட்டு கழிவறைக்கு சென்று முகம் கழுவி தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாலும் அவனின் நடுக்கம் நிற்கவில்லை. எப்படி நிற்கும் பல வருடங்களாக காதலித்து  நீதான் என் வருங்கால மனைவி என்று அவள் தலையில் அடித்து சத்தியம் செய்யாத குறையாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நிமிடங்களும் நம்பிக்கை கொடுத்து இறுதியாக சொந்தமாக உழைத்து முன்னுக்கு வர சோம்பேறித்தனம் பட்டுக்கொண்டு குறுக்கு வழியில் பணக்கார சம்பந்தம் வர தன்னுடைய மாமா மகள் அமிகாவை திருமணம் செய்து கொண்டான்.


முன்னாள் காதலிக்கு திமிராக சென்று கல்யாண பத்திரிக்கை கொடுத்து "முடிஞ்சா என் கல்யாணத்துக்கு வந்து ஆசிர்வாதம் பண்ணு" அவன் சொன்ன வார்த்தைகள் இப்பொழுது அவன் செவியை ரீங்காரமிட்டது. ஏன் இந்த விஷப்பரீட்சை எனக்கு. அவள் பாட்டிற்கு கண்ணீரும் கம்பலையுமாக தானே அறையில் அடைந்து கிடந்தாள்.  அவளிடம் போய் சும்மா இருந்தவளை சுரண்டி விட்டது போலாகி விட்டது.


என்ன பூதம் கிளம்பப் போகிறதோ என்ற பயத்தோடு அவன் வந்து மீண்டும்  அமிகா பக்கத்தில் நின்று முடிந்த அளவு செயற்கையாக சிரித்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க இறுதியாக  அவள் எழுந்து சென்று தனுஷ் அமிகாவுக்கு வாழ்த்துக் கூறி தான் கையோடு கொண்டு வந்திருந்த சிறிய பரிசை  தனுஷிடம் கொடுத்து புகைப்படத்திற்காக அவன் பக்கத்தில் நின்றாள்.


அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாக


"என்ன அழ வெச்சிட்டு நீ மட்டும் சந்தோஷமா இருக்கலாம்னு நெனச்சியா. இந்த நாள் உனக்கு எவ்ளோ முக்கியம்னு எனக்கு தெரியும். காலம் முழுக்க இந்த நாளை நீ நெனச்சு பாத்தா அதுல சந்தோசம் மட்டும் தான் இருந்திருக்கனும். ஆனா இப்போ நீ இந்த நாள நினைச்சா எப்படி பயந்து செத்தனு தான் நெனப்புக்கு வரும். காசுக்காக கட்டிக்கிட்டாலும் அந்தப் பொண்ணுக்காவது உண்மையாயிரு.".. என்றவள் மடமடவென மேடையில் இருந்து இறங்கி அந்த மண்டபத்தை விட்டு வெளியேறினாள்.


நேராக தன் வீட்டிற்கு சென்று தேவையான பொருட்களை மூட்டை கட்டிக்கொண்டு இப்பொழுது ரேபிடோ பிடித்து ஒரு பெரிய வீட்டின் முன்பு இறங்கினாள். அவர்கள் தனிமை விரும்பி போல. ஆளில்லாத இடத்தில் வீட்டை கட்டி வைத்திருந்தார்கள். அந்தப் பெரிய வீட்டின் கேட் முன்பு நின்று ஒருமுறை ஆழ மூச்செடுத்து தன்னை நிதானப் படுத்திக் கொண்டாள். அவள் இங்கே வந்ததன் காரணம் ஒரு புத்தி சுவாதீனம் இல்லாதவனை பார்த்துக் கொள்வதற்காக.


இவனால் அவனின் பைத்தியம் தெளியுமா? இல்லை அவனால் இவளுக்கு பைத்தியம் பிடிக்குமா? என்ன ஆனாலும் இனி வரும் காலங்கள் பவளமல்லி இங்கு தான் இருக்கப் போகிறாள்.


தொடரும்..





Comments

Popular posts from this blog

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்