5 பைத்தியத்தின் வைத்தியமே


அத்தியாயம் 5

காலை உடற் பயிற்சியை முடித்து தோட்டத்தில் தங்களுக்கான ராஜியத்தை பிடித்து ஒய்யாரமாக வாசனை வீசிக்கொண்டிருந்த மலர்களை பார்க்கையில் சற்றே பொறாமை எட்டிப் பார்த்தது பவளமல்லிக்கு.. இயற்கையோடு இயற்கையாக ஒன்றி விட அவளுக்கு ஆசை தான். ஆனால் முடியவில்லையே?

புதிதாக பூத்துக் குலுங்கிக் கர்வத்தோடு வாசம் வீசி மணம் பரப்பி கொண்டிருந்த மல்லிகை பந்தலின் அருகே சென்று நின்று கொண்டிருந்தாள். "ஒரு மல்லி இன்னொரு மல்லிய பார்த்து ரசிக்குது போல" திடீரென தன் பின்னால் கேட்ட குரலில் திரும்பி பார்த்தாள்.

வியர்வை ஆறாக ஓட இலக்கியன் நின்று கொண்டிருந்தான். சற்று தூரத்தில் இருக்கும் பார்க்கில் ஜோகிங் முடித்து வந்திருந்தான் போல. மல்லி பேசாமல் நிற்க அவளருகே சற்று நெருங்கி வந்தவன்  பூத்துக் குலுங்கிய வெண்மையான மல்லியை கையில் வருடி" உன்ன மாதிரியே அழகா இருக்குல்ல.. குண்டு மல்லி."

" அப்போ என்ன குண்டுனு சொல்றீங்க.."

" அப்படி இல்ல.. ஆனா நீ ஒல்லியும் இல்லையே.. மல்லி எப்படி குண்டா அழகா இருக்கோ அதே மாதிரி உன்னோட கன்னம் பன்னு மாதிரி நல்லா உப்பி அழகா இருக்கு. ஸப்பியா அழகா கும்முனு இருக்க"..

"நான் உங்க கிட்ட இவ்ளோ டீடெயில்ஸ் கேக்கலையே"..

" தெளிவா சொல்றது என் கடமை.. ஆமா உன்கிட்ட நான் கேட்டதுக்கு என்ன நீ பதில் சொல்லவே இல்லையே"

" நான் பதில் சொல்லலனா எனக்கு பதில் சொல்ல புடிக்கலனு அர்த்தம்.." காலையில் அவனிடம் சிடுசிடுத்து இந்த அழகான தருணங்களை கெடுத்துக் கொள்ள அவள் விரும்பவில்லை.இன்னும் ஒரு நிமிடம் அங்கே நின்றால் கூட அவனோடு ஏதாவது வாக்கு வாதம் வந்து விடும் என்று இந்த இரண்டு நாளில் அவள் தெரிந்து வைத்திருந்தாள்.

அவனைச் சுற்றிக் கொண்டே உள்ளே செல்ல போனவளை தடுத்து நிறுத்தி" நீ எதுக்கு தான் இங்கே இருக்க.  என்ன பார்த்துக்க தானே.. எனக்கு தான் பைத்தியக்காரப் பட்டம் கட்டிட்டாங்க. சரி அந்த பைத்தியம் ஆசைப்படுறதயாச்சும் செஞ்சி கொடுத்தா என்ன குறைஞ்சி போய்ட போறீங்களா.. பரவால்ல.. யாருக்குமே என் மேல அக்கற இல்ல நீ மட்டும் என்ன? இந்த பைத்தியத்த நம்பி நீ என் கூட எங்க வர முடியும்?"

" நான் தெளிவா இருக்கேன் அப்படின்னு சொல்றவங்கள தான் நம்ப முடியாது.. நான் பைத்தியம் அப்படின்னு சொல்றவங்கள தாராளமா நம்பலாம்.. சரி நான் உங்க கூட வரேன்.. ஆனா ஞாபகம் வெச்சுக்கோங்க.  என் பாதுகாப்புக்கு  ஏதாச்சும் பங்கம் வந்தா அங்கயே உங்கள கொலை பண்ண கூட நான் தயங்க மாட்டேன்.."

" என்ன பாக்க உனக்கு பொம்பள பொறுக்கி மாதிரியா இருக்கு.. இல்ல நான் தெரியாம தான் கேட்கிறேன்.. உன்ன ஏதாச்சும் பண்ற ஐடியா இருந்தா  இவ்ளோ பெரிய வீட்ட விட்டுட்டு சுடுகாட்டுக்கு கூப்பிடுவேனா? அறிவு வேணா உனக்கு.. அப்றம் உனக்கெல்லாம் அவ்ளோ சீன் இல்ல.. குண்டா கொழு கொழுன்னு இருக்க.. மஞ்ச கலர் ஸ்கின் டோன்.. அடர்த்தி இல்லாத புருவம், குட்டி உதடு,ஆனா நல்ல மொத்தமா இருக்கு, சின்ன மூக்கு அதுல வளைய மூக்குத்தி,காதுல வரிசையா தோடு, இடுப்பு வரைக்கும் சுருட்ட முடி,கழுத்துல ஒத்த செயினு, எந்நேரமும் முழுக்கை சட்ட, லாங் ஸ்கிர்ட்டு..நீ நடந்து வரியோ இல்லையோ உன் தொப்ப உனக்கு முன்னாடி வருது.. இடுப்புல சதை தொங்குது..

ஹான் சொல்ல மறந்துட்டேன்.. அந்த கண்ணு..பூன கண்ணு.. இத வெச்சிக்கிட்டு தான் பெரிய உலக அழகி மாறி சீன் போடுறியோ.."மல்லியை மட்டம் தட்டியவன் இவ்வளவு தூரம்  அவளை அங்குலம் அங்குலமாக கவனித்திருக்கிறான். அதை மல்லியும் உணர்ந்தே இருந்தாள்.  அவளுக்கு அவன் தன்னை மட்டம் தட்டுவது,  வர்ணிக்கிறானா அல்லது கேலி செய்கிறானா என்று புரியாத விதத்தில் தன் உடல் வடிவத்தை எடுத்து சொல்வது  இப்படி எதற்குமே அவனிடம் கோபப்பட முடியவில்லை.

ஏனென்றால் இப்படி பேசிக் கொண்டிருப்பவன் இன்னும் சிறிது நேரத்தில் கருத்து கந்தசாமியாக மாறி விடுவான். அவள் நினைத்தது போலவே "உன் முடி ஏன் கீழ வெடிச்சிருக்கு..ப்ரோட்டின் பத்தல..நான் படிச்சேன்.. நீ அத ட்ரை பண்ணு.. ஒளிவ் ஆயில், அலோ வேரா, வெங்காய ஜூஸ் எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி மண்டையில போடு.. அப்புறம் பாரு.

ஒளிவ் ஆயில் முடி வளர்ச்சிய அதிகரிக்கும்.. முடிக்கு நல்ல ஷைனிங் கொடுக்கும். பொடுகு  பிரச்சனை இருக்காது. ஹேர்லாஸ் கன்ட்ரோல் பண்ணும். ஃப்ரீஸி ஹேர்க்கு நல்லது.. (Frizzy hair) முடி உடையுறது வெடிக்குறது எல்லாமே ரெடியூஸ் பண்ணும்..வெயிலுக்கு மண்டை எப்படி அரிக்குது.. இதை நீ யூஸ் பண்ணா  அந்த அரிப்பு இருக்காது.. இன்னொரு முக்கியமான விஷயம் இது நேச்சுரல் கண்டிஷனர் தெரியுமா..?

அதே மாதிரி அலோ வேரா உன் தலையில இருக்கிற எண்ணெய் பசையை நீக்கிரும்.. இப்போது முடி பார்க்க கண்றாவியா தான இருக்கு.. அலோ வேரா போட்டோ  முடி பளப்பளனு ஆயிரும்.. ஸ்மூத்தா இருக்கும்..

அப்புறம் வெங்காய ஜூஸ்.  வெங்காயம் முடியோடு வேர் கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து  நம்மளோட முடி லாஸ் பண்ண ப்ரோட்டின திரும்பக் கொண்டு வரும். வெங்காயத்துக்கு பாக்டீரியாவ எதிர்த்து போராடுற பவர் ஜாஸ்தி. சோ உச்சி மண்டைல இன்வெக்ஷன்  வராம தடுக்கும். சல்ஃபர் அதிகமா இருக்கறதுனால முடி  உடையுரதையும் கொட்றதையும் தடுக்கும்.

இதுல ஆன்ட்டி ஆக்ஸிடேன்ட் இருக்குறது உனக்கு சின்ன வயசுலயே வெள்ள முடி வராம தடுக்கும்.. அதுக்காக தினமும் மண்டையில இதெல்லாம் போட்டுட்டு உட்கார்ந்துராதே.. வாரத்துல ஒரு மூணு தடவை இந்த மிக்ஸர  போட்டு மசாஜ் பண்ணிட்டு குளி.. அப்புறம் பாரு"


மல்லி இலாவை பாவமாக பார்த்தாள். அவன் இப்படி மொக்கை போடுவான் என்று தெரிந்தும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் அவனிடம் நின்று பேசியது அவளுடைய தவறு தானே.இப்பொழுது அவனது பார்வை கூர்மையாக அவளது தொப்பை மேல் பாய்ந்தது. அடுத்து அவன் என்ன சொல்லப் போகிறான் என்பது அவள் மூளைக்கு புரிந்தது.

"ஓகே இலா நான் குளிக்கணும்.. ஒரே வியர்வையா இருக்கு.. " என்றவள் ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள். தோள்களை குலுக்கிய இலக்கியன் தானும் உள்ளே சென்று குளித்து வந்தான். டைனிங் டேபிளில் இவர்கள் இருவருக்காக காத்திருந்தார் மணியண்ணா.

முதலில் இலக்கியன் வந்துவிட" ஐயா உங்களுக்கு சாப்பாடு எடுத்து வைக்கவா"

" வேணா அண்ணா.. மல்லி வந்துரட்டும். அவ கூட சேர்ந்து சாப்பிடுறேன்."

"மல்லி சுல்லின்னு அய்யா எதுக்கு அந்த பொண்ணுக்காக காத்துருக்காரு.. இத்தன நாள் தானாவே தானா சாப்பிட்டாரு.. இந்தப் பைத்தியத்துக்கு வைத்தியம் பார்க்கிறதுக்குள்ள நல்லா இருக்குற அந்த புள்ளைக்கு பைத்தியம் பிடிச்சிடும் போல.. தனக்குள் யோசித்துக் கொண்டிருந்த மணியண்ணா  இரண்டு நாள் முன்பு நடந்த சம்பவத்தை அசை போட்டார்.

அன்று அவன் முகத்தில் கதவை அறைந்து சாத்திய மல்லி எத்தனை முறை அவன் கதவை தட்டியும் திறக்கவில்லை. அவனா விடுவான்.. பொறுமையாக தட்டிக்கொண்டு இருந்தவன் ஒரு கட்டத்தில் காட்டுத்தனமாக தட்டினான்.  சத்தம் கேட்டு மணியண்ணா எழுந்து வந்தார்." அய்யா என்ன பண்றீங்க.. நட்ட நடு ராத்திரியில எதுக்கு அந்த பொண்ணோட அறைய தட்டிட்டு இருக்கீங்க.. இதெல்லாம் ஒரு பெரிய மனுஷன் செய்ற வேலையா.. "

" அந்தப் பொண்ண கதவ தொறக்க சொல்லுங்கள்" அவரிடம் காய்ந்தான் இலக்கியன்.

"என்ன அய்யா இவ்ளோ டென்ஷனா இருக்காரு.. இந்த பொண்ணு வந்த அன்னிக்கே ஏழரைய கூட்டிருச்சே நான் என்னத்த பண்ண"

இலக்கியன் விடாமல் கதவைத் தட்ட ஒரு கட்டத்தில் வேகமாக இறங்கி எங்கேயோ ஓடினான். மணியண்ணா  என்ன நடக்குமோ என்று பார்த்துக் கொண்டிருக்கும் போது கையில் கோடாரியோடு வேக வேகமாக படிக்கட்டில் ஏறி வந்தான். பயத்தில் ஒன்னுக்கு வந்து விட்டது அவருக்கு.  எங்கே இந்த பைத்தியக்காரன் தன்னையும் கொன்று விட்டு மல்லியை ஏதாவது செய்து விடுவானோ என்று அவருக்கு பயந்து உள்ளே உருண்டது.

தடுக்க போனவரை கோடாரியை காட்டி தடுத்து நிறுத்தினான் இலக்கியன். கதவின் அருகே வந்து" ஏய் மல்லி இப்ப கதவை திறக்கல நான் கதவு உடைச்சிடுவேன்.. " அவன் கோடாரியை ஓங்க

"அய்யா நீங்க இருங்கய்யா. அம்மாடி பாப்பா.. கதவ தொறம்மா கொஞ்சம். அய்யா கையில கோடாரிய வெச்சிட்டு இருக்காரு.. கதவு ஒடஞ்சா சின்ன பாப்பா என் சம்பளத்துல கை வெச்சிரும்.. தயவு செஞ்சு பெரிய மனசு வெச்சு கதவ தொறம்மா.."

மணியண்ணாவின் நல்ல நேரம் மல்லி கதவை திறந்து கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு இலக்கியனை முறைத்துக் கொண்டிருந்தாள்.. அவனும் கோடாரியை கீழே போட்டு விட்டு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். மல்லியின் கோபப் பார்வையை தொடர்ந்து அவனது பார்வையை பார்த்த மணியண்ணா

"ஆத்தி இது காமப் பர்வையால இருக்கு.. இந்த பொண்ணு வேற பாம்பு சாட்ட போட்டுட்டு இருக்க சாமி.. ஒன்னு கெடுக்க ஒன்னு ஆயிட்டா ரேப்பு கேஷா ஆயிடுமே.. நான் என்னத்த செய்வேன் கடவுளே"

"இப்ப எதுக்கு கதவ உடைக்க பாத்திங்க"..

இலா மிக சாதாரணமாக"அது உங்கிட்ட மன்னிப்பு கேட்க.."

"எது மன்னிப்பா"மணியண்ணா அதிர்ந்து பார்த்தார். மல்லிக்கு அவரது ரியாக்சன் சிரிப்பை வரவழைத்தது.

"ஸ்ஸ்ஸ்ப்பா ஏங்க நான் தான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கணும். இது உங்க வீடு. உடும்பு வளத்தாலும் சரி முதலை வளத்தாலும் சரி. அது உங்க இஷ்டம்..நான் தான் தேவ இல்லாம டென்ஷன் ஆயிட்டேன்.."

"அப்ப உனக்கு என் மேல கோபம் இல்லயே"

"இல்ல"

"சரி ஓகே ஓகே.. அப்ப இந்த சனிக்கிழமை நாம சுடுகாட்டுக்கு போகலாம்"

"என்னய்யா"மல்லிக்கும் அதிர்ச்சி தான். ஆனால் மணியண்ணா பதறி விட்டார்..

"அய்யா சுடுகாடு என்ன சுவீஸ்ஸா? சும்மா போய் சுத்தி பார்க்க..  இத்தன நாளு நீங்க மட்டும் தான் பேய் ஆராய்ச்சி பண்றேனு சுடுகாடு எல்லாம் சுத்தி பார்த்துட்டு இருந்திங்க.. இப்ப எதுக்கு அந்த பொண்ண கூட்டிட்டு போக பாக்குறீங்க.. அது பொம்பள புள்ள. கல்யாணம் ஆகாம காஞ்சி போய் செத்தவன் எல்லாம் எந்த பொண்ணு கிடைப்பானு அலைஞ்சிட்டு இருப்பான் ஆவியா..  அப்படி இருக்க சொல்ல இந்த பொண்ண அங்க கூட்டிட்டு போறது அறவே சரியில்ல"

"மணியண்ணா.. ரொம்ப பேசுனா உங்களையும் கூட்டிட்டு போய்டுவேன்.. மல்லி யோசிச்சு சொல்லு.. குட் நைட்" அழகாய் க்யூட்டாய் சிரித்துக் கொண்டே அவளிடம் சொல்லிவிட்டு அவன் உறங்கச் சென்று விட்டான்.

மணியண்ணா அவளை அங்கே போக வேண்டாம் என்று எச்சரித்து விட்டு அவரும் உறங்கச் சென்றார். இதனைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளாத மல்லி  உறக்கம் சுழற்றியடிக்க படுக்கையில் விழுந்தாள். மறுநாள் விடிந்ததிலிருந்து இலக்கியனை பற்றி இன்னும் நன்றாக தெரிந்து கொண்டாள்.

அவனது அறிவு பசியைக் கண்டு அனைவரும் பயந்து இருக்கிறார்கள்.அந்த பசிக்கு அவர்களால் உணவிட முடியவில்லை. அதனால் ஒருகட்டத்தில் கடுப்பான இலக்கியன் அவனாகவே அவனது அறிவு பசியை அடக்க முயற்சி செய்ய ஆரம்பித்திருக்கிறான். இதுவரை இருக்கிறதா இல்லையா என்று விடை அறியாத விஷயமாக இருக்கும் அமானுஷ்யத்தை கையிலெடுத்து  அதனைப் பற்றிய ஆராய்ச்சியில் தனது நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறான். இடையே அவனது காதலி வேறு காணாமல் போய்விட்டாள். அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் அவன் சில நேரங்களில் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான்.

மற்றவர்கள் சொல்வது போல் அவன் பைத்தியம் கிடையாது. இரண்டு நாட்கள் அவனோடு அவனைப் பற்றி இன்னும் நன்றாகத் தெரிந்து கொண்டு கழிந்தது.  மூன்றாவது நாள் இதோ இப்போது டைனிங் டேபிள் முன் அமர்ந்து இருந்தார்கள் இருவரும்.

"வர தானே மல்லி"

"ம்ம்ம்"

"எங்கம்மா போறீங்க ரெண்டு பேரும்"

"அதுவா சுடுகாட்டுக்கு அண்ணா. நீங்களும் வாரிங்களா.. நைட்டு பசிக்கும். நீங்க சாப்பாட ஏதாச்சும் செஞ்சு எடுத்துட்டு வாங்க"இலக்கியன் சொல்ல மல்லி மணியண்ணாவை பார்த்து சிரிப்பை கட்டுப்படுத்தினாள்.

மணியண்ணா சுகர் பேசண்ட்டுடா நானு என கத்தும் நிலையில் இருந்தார்.

தொடரும்


Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்