2 பைத்தியத்தன் வைத்தியமே

 அத்தியாயம் 2🧡

பவளமல்லி தன் வாழ்வின் அடுத்த கட்டத்திற்குள் அதாவது இனி தனக்கு வாழ்வே இல்லை என்று நினைத்தவள், தான் வாழ ஒரு பிடிப்பை கொடுத்து இந்த வேலைக்குள் காலடி எடுத்து வைத்தாள். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் அவளுக்கு இந்த வேலையை செய்ய அறவே பிடிக்கவில்லை. அவள் ஒரு தனிமை விரும்பி. நிறைய நண்பர்கள் அவளுக்கு இருந்தாலுமே கூட அவள் ஒரு அளவோடு அவற்றை நிறுத்திக் கொண்டாள்.

ஒரே ஒருவள் மட்டும் அதற்கு விதிவிலக்கு.அவள் டோலி.ஆளும் அழகான பொம்மை போல இருப்பாள். மல்லி மேல் அளவுக்கு அதிகமான உரிமையையும் அன்பையும் தானாகவே வழங்குபவள். மல்லியை அமைதி என்று சொல்லி விட முடியாது.அதே சமயம் அடாவடியான பெண் என்றும் உறுதியாகக் கூறமுடியாது.ஆனால் ஒன்றை மட்டும் மிகவும் தெளிவாக உறுதியாக கூற முடியும். மல்லி  அவ்வளவு சீக்கிரமாக யார் மீதும் பாசம் வைக்க மாட்டாள். மீறி வைத்து விட்டால் அந்தப் பாசம் அமுத விஷமாகி விடும்.

தன்னை அழ வைத்தவர்களை கண்டிப்பாக பழி வாங்காமல் விட மாட்டாள். தனுஷ் தனக்கு செய்த துரோகத்திற்கு மனம் நிறைந்த ஒரு தண்டனையை அவனுக்கு கொடுத்து விட்டு கண் காணாமல் எங்கேனும் சென்று விடலாம் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க அவளது எண்ணத்திற்கு வேட்டு வைத்தாள் டோலி.. அவள் மிகவும் வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதால் தான் இந்த வீட்டிற்கே மல்லி வந்திருந்தாள்.

உண்மையைக் கூற வேண்டும் என்றால் இது டோலி ஒப்புக் கொண்ட வேலை. அந்த வீட்டில் ஒருவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருக்கிறது.. அவனை பார்த்துக் கொள்ள டோலி போவதாக இருக்க அந்த நேரம் பார்த்து அவளது தந்தைக்கு இருதயத்தில் ஆபரேஷன்.. தாயில்லாத தன்னை தாயுமானவராய் இருந்து வளர்த்தவரை பார்த்துக் கொள்ள டோலி, கொடுத்த வாக்கை காப்பாற்ற அந்த வீட்டிற்கு  தோழியை செல்ல சொன்னாள்.

அங்கு தான் முன்பே இதைப் பற்றி பேசி விட்டதாகவும் நீ போனால் போதும் என்று டோலி கெஞ்சோ கெஞ்சென்று கெஞ்ச மல்லிக்கு மனம் கேட்காமல் சரி என்றாள்.இதோ இப்போது இங்கே வந்து நிற்கிறாள் வீட்டின் முன்பு.

காவலாளியா அந்த வீட்டில் வேலை செய்பவனா என்று தெரியவில்லை அழைப்பு மணியை அழைத்து ஐந்து நிமிடம் கழித்து அரக்கப் பறக்க ஓடி வந்து ஒருவன் கதவை திறந்தான்.

"யாரும்மா நீங்க"

"என் பேரு மல்லி..இங்க ஒருத்தருக்கு மன நலம் சரியில்லனு அவர பாத்துக்க வந்துருக்கேன்"..

"ஓ சின்னமா சொன்ன பொண்ணு நீங்க தானாம்மா.. வாங்கம்மா.. அப்றம் மனநிலை பாதிக்கபட்டவர்னு சொல்லாம அவர அய்யானு கூப்டு பழகுங்கம்மா"..  அந்த பணியால் முன்பு செல்ல அவன் பின்னால் வந்து கொண்டிருந்தவளுக்கு ஐயா என்ற அழைப்பு முகம் சுளிக்க வைத்தது.

இது எந்த காலம் அழகாக சார் என கூப்பிடாமல் ஐயா கொய்யா என்று? உண்மையில் டோலி இந்த வீட்டைப் பற்றியும் மல்லி பார்த்துக் கொள்ள வேண்டியவனைப் பற்றியும்  தெள்ளத் தெளிவாகக் கூறியிருந்தாள். ஆனால் தனக்கு இருந்த மன உளைச்சலில் அவள் பேசிக் கொண்டிருக்கும்போதே தொலைபேசியை தூர வைத்து விட்டாள் மல்லி. வீட்டு முகவரியை கூட நல்ல வேலை டோலி குறுஞ்செய்தி அனுப்பியிருந்தாள்.

அந்த வீடு நல்ல பெரிதாக கட்டப்பட்டிருந்தது. சுற்றிலும் கண்ணைக் கவர்ந்த பூச்செடிகளும் பரந்த தோட்டமும் சீராக வடிவமைக்கப்பட்டிருந்ததை காண்கையில் மனதுக்கு சற்று நிம்மதியாக இருந்தது. வீட்டினுள்ளே நுழைந்ததும் அவள் முகம் சுருங்கியது. காரணம் வெளியே இருந்த வனப்பும் அழகும் உள்ளே இல்லை. ஒரு செட் சோபா.. காபி டேபிள்..  சுவரின் எல்ஈடி டிவி.. வெள்ளை நிற டைல்ஸ்.. புத்தம் புதிதாக சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்த சுவர்..மருந்துக்குக் கூட சுவரில் ஒரு புகைப்படம் கூட இல்லை.சரி கண்ணுக்கு குளிர்ச்சியாக ஏதாவது அலங்கார பொருள் இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் கிடையாது.

ஹாலில் நிற்கும்  போதே மயான பூமியல் நிற்பதைப் போல இருந்தது. அந்தப் பணியாள் அவளை அமர சொல்லி விட்டு யாரையோ அழைக்க ஓடினான். அடுத்த இரண்டு நிமிடங்களில் ஒரு பெண் வந்து மல்லி முன்பு அமர்ந்தாள்.  அவளைக் கண்டதும் மல்லி மரியாதை நிமித்தமாக எழப் போக

"வேணா வேணா.. ஒக்காருங்க.. நீங்க பவளமல்லி தானே.. டோலி சொன்னாங்க"

அமர்ந்தவாறே"ஆமா மேம்"

"ம்ம்ம் மல்லின்னு கூப்டுறேன்.ஐம் பூஜா..உங்களால என் அண்ணன சமாளிக்க முடியுமா? டோலி சொல்லிருப்பாங்க.. ஆனா அவங்க நர்ஸ்.. அவங்களுக்கு ட்ரைனிங் இருக்கு. உங்களுக்கு அப்டி இல்லையே"

"உங்க அண்ணனும் மனுஷன் தானே மேம்.. பாத்துக்கலாம்.டோலி சொல்லி நான் செய்யாம இருந்தது இல்ல.அவருக்கு என்ன ப்ரோப்லேம்னு சொல்ல முடியுமா..டோலி சொன்னா. பட் நீங்க ஒரு தடவா சொன்னா"

"ம்ம்ம் அண்ணா நல்லாத்தான் இருந்தான்.. அவனுக்கு ஐக்யூ லெவல் கூட. நாம ஒருதடவ பாக்குறது அவன் பத்து தடவ பாக்குறதுக்கு சமம். அவன் ஜீனியஸ்.. ஆரம்பத்துல இருந்தே பைத்தியக்கார பட்டம் தான் அவனுக்கு. அவன் அறிவு பூர்வமா கேக்குற கேள்விக்கு ஆளுங்களுக்கு பதில் தெரியலனா உடனே போடா லூசு பயலேனு வெரட்டுவாங்க.

எங்க அப்பா அம்மாவுக்கு புரிஞ்சது. அவனோட அறிவுக்கு தீனி போடுற மாறி அவன நிறைய கிளாஸ்ல சேத்தாங்க. போயி ஒரு வாரத்துக்குள்ள எல்லாத்தையும் கத்துக்குவான்.. அவனுக்கு யார் கிட்டயுமா கை கட்டி வேல பாக்க புடிக்கல. அப்ரோட்ல இருந்து ஆஃபர்  வந்துச்சு போகல.

ஊர் ஊரா சுத்தி நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டு கூடவே பேய் இருக்கா இல்லையானு ஆராய்ச்சி செஞ்சுகிட்டு இருந்தான்.. அவனுக்கு ஒரு காதலி இருந்தா.  இப்போ அவ இல்ல. செத்துப் போயிட்டாளா இல்ல இவன விட்டுட்டு போயிட்டாளானு எனக்கு தெரியல.. ஆனா அவள காணோம்..  அவளைத் தேடி எவ்வளவோ அலைஞ்சாசு. எங்கயும் கெடைக்கல. அவ மேல அளவுக்கு அதிகமா பாசம் வெச்சிருந்த என் அண்ணனால அத தாங்க முடில.

அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமா அவனோட ஆக்டிவிட்டிஸ் குறைஞ்சு இப்ப மறைஞ்சே போச்சே.. அவன பைத்தியம்னு சொல்லி சங்கிலில கட்டிப் போட முடியல.அம்மாவாசை வந்தா ஏன்னு தெரியல ரொம்ப அக்ரசீவா ஆயிருவான்.

என் அப்பா அம்மா இப்ப என்னோட அக்கா கூட நியூ ஜெர்சில இருகாங்க. அவளுக்கு டெலிவரி டைம்.. வர எப்படியுமா இன்னும் ஆறு மாசம் ஆகும்..நானும் என் ஹஸ்பண்ட் கூட அவரோட ஊருக்கு போறேன். எத்தன நாள் இங்க இருக்க முடியும்..ஒரு ஆறு மாசம் நீங்க அவன பாத்துக்கிட்டா போதும்"..பூஜா சொல்லி நிறுத்தி மல்லியை பார்த்தாள்.

மல்லி அவளை ஆராய்ச்சிக் கண்கொண்டு" உங்க அண்ணன் பைத்தியம் இல்ல அமாவாசை அன்னிக்கு மட்டும் கொஞ்சம் ஒரு மாதிரி ஆகிடுவார்னு சொன்னீங்க. அப்போ நான் வேணும்னா மாசாமாசம் அமாவாசைக்கு மட்டும் வந்து அவரப் பார்த்துட்டுப் போகட்டா.."

"உங்களுக்கு புரியல.. அமாவாசைக்கும் மட்டும் அக்ரசீவ் ஆயிடுவானு சொன்னேன்.அப்ப மத்த நாள் அவன் நல்லா இருக்கான்னு பொருளில்ல.அவன் அவனுக்குள்ளேயே தன்ன சுருக்கிட்டான்.. அவன் கூட பேசி அவன ஓரளவுக்கு சகஜ நிலைமைக்கு கொண்டு வர தான் நாங்க டாக்டர்கிட்ட சஜஷன் கேட்டோம். அவரு தான் டோலி பத்தி சொன்னாரு. அவங்க பேஷன் கிட்ட நடந்துக்கிற முறை எல்லாமே சொன்னாரு.. அவங்க வந்தா அண்ணன் சகஜமா ஆயிருவானு நினைச்சேன்."

" ஓகே மேம்.. என்னால டோலி அளவுக்கு பொறுமையா பார்த்துக்க முடியுமான்னு தெரியல.. ஆனா கண்டிப்பா அவரோட ஹெல்த் பாதிக்காத அளவு பாத்துக்குவேன்..  முடிஞ்ச அளவு அவர் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணி அவர நான் நோர்மல் ஆக்க முயற்சி செய்றேன்.. " பூஜாவுக்கும் வேறு வழி இல்லை. அவளின் கணவன் அவனுடைய சொந்த ஊருக்கு போக  முனைப்பாக இருக்கிறான். அங்கே அவனுக்கு விற்கவேண்டிய நிலங்கள் கொஞ்சம் இருக்கிறது.

அந்த வேலையை பார்க்க அவன் சென்றாக வேண்டும். அவனை பார்த்துக்கொள்ள பூஜா சென்றாக வேண்டும். இறுதி நேரத்தில்  டோலி காலை வாரி விட்டதால் இந்தப் பெண்ணை நம்பி தான் தன்னுடைய அண்ணன் ஒப்படைக்க வேண்டும் என்று பூஜா புரிந்து கொண்டாள்.அடுத்த வார்த்தை அவள் பேசுவதற்குள் அவளின் கணவனிடமிருந்து அவளுக்கு அழைப்பு வந்தது.உடனே அவளை வர சொல்லிக் கத்திக் கொண்டிருந்தான் அந்த பக்கம்.

" மல்லி நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க. நா உடனே போய் ஆகணும்.தினமும் நான் உங்களுக்கு கால் பண்றேன். உங்களுக்கு என்ன வேணும் ஏதாச்சும் வெளியே போய் வாங்கணும் அப்படின்னா உங்களுக்கு ட்ரைவிங் தெரியும்னா நம்ம கார நீங்க யூஸ் பண்ணலாம். வெளிய நிக்குது.அப்படி இல்லன்னா நீங்க மணியண்ணா கிட்ட சொல்லலாம்.என் அண்ணன உங்கள நம்பித்தான் நான் விட்டுட்டு போறேன். ஏதாச்சும் ஒன்னுனா உங்கள தான் கேட்பேன்." இதுவரை மல்லிக்கு தேவையான தகவல்களை கொடுத்து கொண்டிருந்தவள் இறுதியாக மறைமுக எச்சரிக்கையோடு அங்கிருந்து கிளம்பினாள்.

மல்லி என்னடா கெரகம் இது என்பது போல அமர்ந்திருக்க மணியண்ணா என்று பூஜைவால் குறிப்பிடப்பட்டவர் வந்து அவனின் அறைக்கு அழைத்து சென்றார்..

"இதான் பாப்பா..அய்யா ரூமு..அப்றம் பாப்பா.."அவர் தலையை சொரிந்தார்.

"எனக்கு பொண்ணு இருந்தா உன் ஈடு தான் இருந்துருக்கும். என்ன பண்ண பட்டுப் போயி ஒண்டிக் கட்டயா நிக்கேன். வந்து அய்யா ஒரு மாதிரி. முரட்டு தனமா நடந்துக்கிட்டா ஒடனே ஓடி வந்துரு.. கதவ சாத்திறாத மா.."உண்மையான அக்கறையோடு அவர் கூறி விட்டு செல்ல மல்லி குழப்பதோடு உள்ளே போனாள்.

அங்கே சுவரில் ஒரு இடம் பாக்கி இல்லாமல் கிறுக்கி வைத்திருந்தான் அவன். என்னென்னமோ ஃபோர்முலா கணக்குக்கள் செய்முறைகள் இப்படி ஏராளம். இப்பொழுதும் எதையோ கிறுக்கி கொண்டிருந்தான். திடீரென அப்படியே அவன் கை அந்தரத்தில் நின்றது. திரும்பி பாராமல்

"யாரு நீ"கடினமான குரல்.

"நான் பவளமல்லி.. உங்கள பா.. அது உங்க வீட்ல வேலைக்கு சேந்துருக்கேன்"நீ பைத்தியம் உன்னை பார்த்துக் கொள்ள வந்தேன் என்றா கூற முடியும்.. எப்படியோ சமாளிக்க

விருட்டென்று எழுந்தவன் அவளருகில் வேகமாக வர பயத்தில் இரண்டு அடி எடுத்து வைத்தாள் மல்லி. அவளருகில் வந்து"என் பேரு இலா.. இலக்கியன்..".. சட்டென்று ஏதோ தோன்றியவன் போல் அங்கும் இங்கும் ஓடினான். இறுதியில் வந்து அவள் முகத்தை பிடித்து வலது கன்னத்தில் பேனாவால் எதையோ கிறுக்க அவனை தள்ள முயன்று தோற்றுப் போனாள் மல்லி. அவன் பிடி அவ்வளவு வலிமை.

தொடரும்..


Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்