3 பைத்தியத்தின் வைத்தியமே

அத்தியாயம் 3💙



மல்லி இளாவை தள்ளி ஓய்ந்து விட்டாள்.அவன் பிடி அவ்வளவு வலிமையாக இருந்தது. இளா தான் நினைத்ததை எழுதி முடித்த நிம்மதி பெருமுச்சோடு பிடித்திருந்த அவள் கன்னத்தையும் சேர்த்து விட்டான். இரண்டு பக்கமும் பற்கள் உராய்ந்து இருந்ததால் லேசாக உதிரம் கசிந்தது.  அதை தன் உமிழ் நீரோடு விழுங்கி விட்டாள் மல்லி. கோபமாக அவனைத் திட்ட வாயைத் திறந்தவள் என்ன நினைத்தாளோ வேகமாக ட்ரெஸ்ஸிங் டேபிள் முன் சென்று கண்ணாடியில் அவன் என்ன தன் முகத்தில் கிறுக்கினான் என்று பார்த்தாள்.

ஏதேதோ நோட்ஸ் எழுதி வைத்திருந்தான் சிறு சிறு குறிப்புகளாக. ஆத்தி இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே என்பது போல அவனை அதிர்ந்து பார்த்தாள் மல்லி."ரைட்டு பையன் ஓவர் படிப்ஸ் போல.. " ஏனென்று தெரியவில்லை அவன் மேல் கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல்

"ஆமா.. இப்ப என் மூஞ்சில எழுதிட்டிங்களே.. நான் முகம் கழுவுனா எல்லாம் அழிஞ்சு போயிருமே.. அப்ப என்ன பண்ணுவீங்க".. ஒற்றை புருவம் உயர்த்திக் கேட்டாள்.

அவன் வேக வேகமாக அங்கும் இங்கும் ஓடினான். அவனது கண்கள் நிற்காமல் சுழன்றது.வலது கை விரல்கள் காற்றில் மத்தலம் இல்லாமல் தாளம் போட்டன.. அவனைப் பார்க்க அவளுக்கு வேடிக்கையாக இருந்தது.. அவனது கைத்தொலைபேசியை தேடிக் கொண்டிருந்தான். கட்டில் அடியில் அது கிடக்க டக்கென்று எடுத்தவன் வேகமாக அவளருகில் வந்து கன்னத்தை மட்டும் போட்டோ எடுத்துக் கொண்டான்..

"ம்ம்ம்.. சரி இப்ப ஃபோன் இருந்துச்சு என் கன்னத்துல எழுதினத போட்டோ எடுத்துடிங்க. இதுவே யாரும் இல்லாதப்போ எழுத பென் பென்சில் இல்லாம, ஃபோனும் இல்லனா என்ன செய்விங்க"ஒரு குறுகுறுப்பில் கேட்டு விட்டாள்.

அவன் சற்றும் யோசிக்காமல் தன்னுடைய மேல் சட்டையை கழட்ட மல்லியின் கண்கள் பெரிதாக விரிந்தன.கஜினி சூர்யா ஞாபகப் படுத்திக் கொள்வதற்காக பச்சை குத்தி கொண்டிருப்பார் உடலில்.  அதேபோல் இவன் திடீர் திடீர் என தனக்குத் தோன்றும் கேள்விகளுக்கான பதில்களை கையில் பேன் மற்றும் பென்சில் இல்லாத போது எப்போதும் அவனோடு வைத்திருக்கும் கூறிய "பின்"னால் கீறி எழுதிக் கொள்வான்..

சிவந்த மேனி கொண்டவன் உடலில் ஆங்காங்கே வடுவாய் பதில்கள்.. பார்த்ததும் திடுக்கிட்டு போனாள் மல்லி.. இப்படி ஒரு பைத்தியமா?"ஏன்ங்க.. இப்படி"

"அதுவா என் கிட்ட எழுத ஒன்னுமே இல்லனா இப்படி தான்.. இந்த பின் இருக்குல்ல இது என் கூடவே இருக்கும். அதால கீறி எழுதிக்குவேன்.."

"உங்களுக்கு வலிக்காதா"

"ம்ஹும்.. மறந்து போயிருமேனு பதற்றம் மட்டும் தான் இருக்கும்"

"பையன் உண்மையிலேயே பைத்தியம் தான் போல.. ஆத்தி இப்படி வந்து சிக்கிட்டோமே" திக் பிரமை பிடித்தவள் போல நின்று கொண்டிருக்க 

அவள் முன்பு வந்து நின்று சொடுக்கிட்டவன்"என்ன சிலை மாறி நிக்கிறீங்க.. என்னாச்சு.. சரி உங்கள பாத்தா வீட்டு வேலை செய்ற மாறி இல்லையே.. எதுக்கு இங்க வந்திங்க"..

"அது ஆ.. அதான் சொன்னேனே"திக்கினாள் மல்லி..

"நான் சொல்லவா"அவளை தீர்க்கமாக பார்த்து

"எனக்கு பைத்தியம். அதனால என்ன பாத்துக்க வந்துருக்கீங்க..ஐ மீன் இந்த பைத்தியத்துக்கு வைத்தியம் பாக்க வந்துருகிங்க."

"இல்ல.. அது.. ஆமா.. ஐயோ இல்ல இல்ல"

"ஏன் இப்படி உளறிக் கொட்றீங்க மல்லி..சரி நீங்க சொல்லுங்க என்ன பாக்க பைத்தியம் மாறியா இருக்கு"

மல்லி இளாவை நன்றாக உற்றுப் பார்த்தாள். எந்த கோணத்தில் பார்த்தாலும் ஆள் ஜம்மென்று இருந்தான். அவனை போய் பைத்தியம் என சொன்னால் கடைசி காலத்தில் அவளுக்கு ஒரு வாய் தண்ணீர் கூட கிடைக்காது.இருந்தாலும் அவனிடம் ஏதோ ஒன்று மறைந்திருந்தது.. என்ன அது.. மல்லி யோசித்துக் கொண்டிருக்கும் போதே

"மல்லி நான் கேக்குறேன் தானே.. என்ன பாக்க எப்படி இருக்கு பைத்தியம் மாறியா.."குரல் மிருதுவாக வந்தது..

"சொல்லுங்க பைத்தியம் மாறியா"லேசாக பிசுரு தட்டியது..

"சொல்லு... பைத்தியம் மாறியா"மரியாதை தேய்ந்தது..

"சொல்லுடி பைத்தியமா நானு.. சொல்லு"அறவே மரியாதை காணாமல் போய் விட்டது..இளா அளவுக்கு மீறிய கோபத்தில் மிரண்டு அடுத்து என்ன செய்வதென புரியாமல் நின்றுக் கொண்டிருந்த மல்லியை பிடித்து உலுக்க சடுதியில் அவனிடம் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு ஆடி போய் விட்டாள் மல்லி.. சத்தம் கேட்டு மணியண்ணா ஓடி வந்து

"ஐயோ அய்யா என்ன பண்றிங்க.. அது பொம்பள புள்ளய்யா..ஊரான் வீட்டு புள்ள.. ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிரப் போது.. விட்ருங்கய்யா.."அவர் போராடி மல்லியை அவனிடமிருந்து மீட்டு வேகமாக அறைக்கு வெளியே இழுத்து வந்தார். மல்லி மணியண்ணா பிடியில் இருந்தாலும் அவளது கண்கள் ஆக்ரோஷத்தின் மொத்த வடிவாக நின்றுக் கொண்டிருந்த இளாவிடம் இருந்தது.

எப்படி நன்றாக பேசினானே? என்னென்னமோ கணக்கு எல்லாம் எழுதினானே? படிப்ஸ் என்று பார்த்தால் உண்மையில் பைத்தியமா? எக்ஸ்கியூஸ் மீ இந்த அட்ரஸ் எங்கன்னு சொல்ல முடியுமா என தவசி படத்தில் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் வைகை புயலிடம் கேட்க பாவம் மனிதர் நொந்து விடுவார். அதே போல் தான் இவனும் போல.. அம்பியாக இருப்பவனுக்குள் ஒரு அந்நியன் வெளியே வர துடித்துக் கொண்டிருக்கிறான்..

அம்பி அந்நியன் இருவரை பார்த்தாயிற்று.. அடுத்து ரெமோவா.. படிக்கட்டில் இறங்க ஆயுதமானவள் இளா அறையை திரும்பி பார்க்க அவனும் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். எங்கே சியான் மாதிரி பறக்கும் முத்தத்தை வீசி விடுவானோ எனும் பயத்தில் மணியண்ணாவை தள்ளிக்கொண்டு படியிறங்கினாள் மல்லி..

கீழே வந்ததும் மணியண்ணா"பாப்பா. நீ பேசாம இங்கேருந்து போயிரும்மா.. அய்யா இதுவரைக்கும் கோபப்பட்டு கத்திருக்காரு.. பொருள உடைச்சிருக்காரு. ஆனா அந்த கண்ணுல ஒரு வெறி வந்துச்சு பாத்தியா.. அத நானே இப்பதான் பாக்குறேன்.. வேணாம்மா வயசு பொண்ணு.. நல்லா வாழ வேண்டிய வயசு.. நாளாபின்ன ஒண்ணுன்னா உன்ன பெத்தவங்க என்ன பண்ணுவாங்க? நீ போயிரும்மா.. இல்லனா உன் அப்பா நம்பர் கொடு.. நான் பேசிக்குறேன்"

"எனக்கு யாருமில்ல மணியண்ணா.."மல்லி கூறியதைக் கேட்டு உண்மையில் வேதனையடைந்தார் மணியண்ணா..

"மன்னிச்சுக்கோம்மா.. தெரியாம"

"பரவால்ல அண்ணா.. என் ஃப்ரண்ட் சொன்னதுக்காக இங்க வந்துருக்கேன். ஒரு ஆறு மாசம் தானே அதுவரைக்கும் நான் மேனேஜ் பண்ணிக்குவேன். ஓவரா போச்சுன்னா இப்ப வந்த மாறி வந்து என்ன காப்பாத்த வர மாட்டிங்க.."

"ஏம்மா நான் என்ன ( flash) ஃப்ளேஷா சறுக்குன்னு ஓடி வந்து உன்ன காப்பாத்த..நானே மூட்டு வலியில அவதி பட்டுட்டு கெடக்கேன்.. வாய்வு வேற புடிச்சிக்கிட்டு காத்தே வெளிய வர மாட்டுது.. ஏதோ புள்ள போயி ரொம்ப நேரமா ஆச்சே.. என்னவோ ஏதோனு பாதி படி முக்கி ஏறிட்டு இருந்தேன். அப்ப தான் அய்யா சத்தம் எவியா கேட்டு தட்டு தடுமாறி ஓடியாந்தேன்"அவர் சொல்லிய விதம் கேட்டு சத்தமாக சிரித்தாள் மல்லி..

காலை வரை இனி சிரிப்பு எனும் வார்த்தையே அவள் அகராதியில் இல்லை என நினைத்திருந்தாள். இப்போது அதற்கு நேர் மாறாக நடக்கிறது.."சிரிச்சது போதும்.. பாப்பா மாடியில அய்யா ரூம் பக்கத்துல தான் உன் ரூமு.. நான் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டேன்.. புவனா பாப்பா கேக்கல.. நீ போயி சத்தமே இல்லாம சுருக்கா குளிச்சிட்டு வா.. நான் ஸ்னேக்ஸ் எடுத்து வைக்குறேன். சூடா காப்பி சாப்பிடு கொஞ்சம் தெம்பா இருக்கும்"

மல்லி மீண்டும் படியேறி மேலே போக இளாவின் அரைக்கதவு மூடிருந்தது. நிம்மதி பெருமூச்சோடு குளித்து விட்டு மீண்டும் கிழறங்கி வர மணியண்ணா கன்னத்தில் கை வைத்து அமர்ந்திருந்தார்..

"என்னாச்சு அண்ணா.. ஏன் சோக மூஞ்சு"

"பாப்பா அய்யாவுக்கு ஸ்னேக்ஸ் கொடுக்கணும்.. மனுஷன் அதிசயமா ஃபோன போட்டு உன்ன எடுத்துட்டு வர சொல்றாரு..நான் பேசுறதுக்குள்ள கட்டு பண்ணிட்டாரு"மணியண்ணா சோக கீதம் வாசிக்க

"இவ்ளோ தானா.. கொடுங்க நான் போயி கொடுக்குறேன்.. ஏதாச்சும் சத்தம்னா மேல வராதீங்க.. என்ன பத்தி தெரியாதே.. சும்மா சுத்தி சுத்தி வீடு காட்டுவேன்"..

"வாயில தான"

"என்ன அண்ணா பொசுக்குன்னு மரியாதை இல்லாம இப்படி சொல்லிட்டிங்க"மல்லி முகத்தை தொங்கப் போட

"உனக்கு செட் ஆகல பாப்பா.. கேவலமா இருக்கு.. சீக்கிரம் போ.. அய்யா கடுப்பாயிர போறாரு".. அவர் நடுங்கி கொண்டே சொல்ல மல்லி தலையை சிழுப்பி கொண்டு மேலே சென்றாள். அவன் அறைக் கதவை திறந்தது தான் அவளது சிலுப்பல் எல்லாம் மாயமாய் மறைந்து விட பேயரைந்ததை போல நின்று விட்டாள்.

தொடரும்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்