4 பைத்தியத்தின் வைத்தியமே


அத்தியாயம் 4🧡

இரவு தூக்கம் வராமல் தவித்தாள் மல்லி. தனுஷ் இந்நேரம் அவனது முதலிரவை சிறப்பாக கொண்டாடி கொண்டிருக்க தான் மட்டும் அவனை நினைத்து உறங்காமல் தவிப்பதா என்று அவள் மேலேயே அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. எத்தனை வருட காதல்.  அவள் பின்னால் நாயாய் பேயாய் சுற்றி காதலே வேண்டாம் என்று மறுத்தவளையும் காதலிக்க வைத்தானே?

எதற்கு இப்படி பணக்கார பெண் கிடைத்ததும் தன்னை அம்போ என்று விட்டுவிட்டு செல்வதற்கா? பணம் தான் அவனுக்கு பெரிதென கூறிருந்தால்  அவளே விலகி போயிருப்பாளே?அன்று அந்த நாளை எப்படி கூறுவது? கருப்பு நாள் என்றா? இல்லை கருப்பான இருட்டுப் பாதையில் செல்லவிருந்த தன்னை கடவுள் காப்பாற்றிய நாள் என்பதா? மல்லிக்கு புரியவில்லை. குத்துமதிப்பாக ஏதோ ஒரு நாள் என்று வைத்துக் கொள்வோம்.

அந்த நாள் ஆசை ஆசையாக அவனுக்கு பிடித்த வெள்ளை நிறத்தில் குர்த்தி அணிந்து தேவதையாக அவன் முன் சென்று நின்றாள்.. எப்போதுமே அவளைப் பார்த்தால் "மல்லி என்ன அந்த மல்லிக பூவுக்கே போட்டி கொடுக்குற"என்பான் தனுஷ்.. ஆனால் இன்று அவளைப் பார்த்தும் எதுவும் கூறாமல் பேசாமல் இருந்தான். அவனது முகம் மாற்றம் அவளுக்கு அவன் எதையோ கூற வந்த தவிப்பதாக எடுத்துக் கூறியது. பல வருட காதல் அவனது முகம் மாற்றங்களும் கண்ஜாடைகளும் அவளுக்கு அத்துபடி.

ஆதரவாக பக்கத்தில் அமர்ந்து"என்ன தனுஷ் என்ன ஆச்சு.. ஏதாச்சும் பிரச்சனையா.. என்னால சோள்வ் பண்ண முடியுமா?".. படக்கென்று அவளது இரண்டு கைகளையும் பிடித்து வைத்துக் கொண்டான் அவனது உள்ளங்கைக்குள்.அப்போது அவளுக்கு அது தவிப்பாக தெரிந்தது. இப்போது யோசித்துப் பார்க்கும்போது எங்கே அவசரப்பட்டு அவனை பொது இடத்தில் அறைந்து விடுவாளோ என்று முன்னெச்சரிக்கையாக இம்மாதிரி செய்துள்ளான் என்பது புரிந்தது.

"மல்லி நான் சொல்ல வரறத முழுசா கேளு.. உனக்கே தெரியும் தானே.. நான் சாதாரண மிடில் கிளாஸ் பையன். எதுக்கு எடுத்தாலும்  கணக்கு பட்ஜெட். ஆசையா சாப்பாடு கூட வாங்கி சாப்பிட முடியல.  அந்தக் காச சேத்து வச்சா மாசக்கடைசிக்கு உதவுமேனு யோசிக்கறதா இருக்கு.. சாப்பிடாம வயித்தக் கட்டி வாயக் கட்டி காசு சேர்த்து வச்சாலும்  மாசக்கடைசி வந்தா பட்ஜெட்டில துண்டு விழுது.. இதுல வீட்டு செலவு அப்பா அம்மாவுக்கு மருந்து செலவு, தங்கச்சி படிப்பு, அக்கா மாசத்துல ஒரு வாரம் வீட்டுக்கு வந்து இருந்து எல்லாத்தையும் சுருட்டிட்டு போறா..

என்னால முடியல மல்லி. இன்னும் எத்தன நாளைக்கு இந்த மிடில்கிளாஸ் வாழ்க்கை. நாளைக்கு நமக்கு பிள்ள பொறந்தாலும் இதே நிலைம தான.. இப்ப அப்பா அம்மாவுக்காக ஓடுறோம்..  நாளைக்கு நம்ம பிள்ளைக்காக ஓடுவோம்.. அப்போ நம்மளோட வாழ்க்கைய எப்ப நாம வாழுவோம்"

"தனுஷ் என்ன பேசுற நீ.. இதுதான் வாழ்க்கை.. இதுதான் பிரக்டிகல்.  கால் மேல கால் போட்டு காத்து வாங்கிகிட்டு இருக்க நாம ஒன்னும் பணக்காரங்க வீட்டில பொறக்கல..அடிச்சு புடிச்சு குடும்பத்த எடுத்துட்டு போறது தான் மிடில் கிளாஸ் வாழ்க்கை. நெனச்சத நம்மால சட்டுனு வாங்க முடியாது.. ஆனா அதுக்காக நாம கொஞ்சம் கொஞ்சமாகக் காசு சேர்த்து  அந்தப் பொருள வாங்கும் போது ஒரு சந்தோஷம் வரும் பாத்தியா எந்த பணக்கார வாழ்க்கையிலயும் அது கிடைக்காது..

யாருக்காக நீ ஓடுறனு அழுத்துகிற? உன் அம்மா அப்பா அவங்க.  உன்ன பெத்தவங்க. இப்போ நீ யோசிக்கிற மாதிரி அவங்க யோசித்திருந்தா நீ எம்பிஏ படிச்சிட்டு நல்ல வேலயில இருக்க முடியுமா சொல்லு.. அப்புறம் உன் அக்கா.நீ வாய திறந்து சொல்ல வேண்டியது தானே.. நாம பேச வேண்டிய இடத்துல கண்டிப்பா பேசியே ஆகணும்.. நீ உன் அக்கா கிட்ட பேச தேவையில்லை. நீ உன் மாமா கிட்ட பேசு. வரதட்சணை சீர் செனத்தி எல்லாம் குறை இல்லாம போட்டு கட்டி கொடுத்தாச்சு.. இதுக்கு மேல என்ன வேணும்..எதுக்கு மாசத்துல ஒரு வாரம் பொண்டாட்டிய மாமியார் வீட்டுக்கு அனுப்பி அந்த மாசத்தோட மளிகை சாமான் மொத்தத்தயும் எடுத்துட்டு வர சொல்லணும்?

அதுக்கு உங்க மாமா எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்டாரு? ஒரு பொம்பளைய வெச்சு வாழத் தெரியாத அந்த மனுஷனுக்கு எதுக்கு பொண்டாட்டி..நீ ஆம்பள தானே தனுஷ். இத நீ உன் மாமா கிட்ட கேக்க மாட்டியா.. சரி முறைக்காத.. அப்புறம் உன் தங்கச்சி. சின்ன பொண்ணு.  உன்ன பார்த்து தான் அவ பொறுப்பா வளருவா.. அவள கர சேக்கறது உன் அப்பாவோடு பொறுப்பு. அவர் இன்னும் வேலை செஞ்சுகிட்டு தான இருக்காரு..அவரோட பொண்ண கரை சேர்க்க அவருக்கு தெரியும்.  ஒரு அண்ணனா நீ உன்னோட கடமைய ஒழுங்கா செஞ்சாலே போதும்.. இதுதான் தனுஷ் வாழ்க்கை.

இதுக்கே நீ இப்படி அடிச்சுக்கிட்டனா நாளைக்கு நாம கல்யாணம் பண்ணி நம்ம குடும்பத்தை எப்படி பார்த்துக்கிறது? ஒருவேளை நான் வேலைய விட்டுட்டு  ஹவுஸ் வைஃப்பா வீட்ல இருந்து புள்ளையா பார்த்தா நீ என்ன பண்ணுவ? நீதான் குடும்பத்த பார்த்துக்கணும்.. இல்ல என்னால முடியாது அப்படினு நீ ஊரு விட்டு ஓடிப்போக போறியா? இல்ல புள்ளைய ஸ்கூலுக்கு அனுப்பாம டீ கிளாஸ் கழுவ விடப் போறியா? சொல்லு தனுஷ்.. "

"என்ன பேசிட்டு இருக்குற மல்லி.. இதே மாதிரி வாழ்க்கைய வாழ உனக்கு அலுப்பா இல்ல.. என்ன மயிறு வாழ்க்கை இது? ச்சீ த்தூ.. உன்ன மாதிரி என்னால அட்ஜஸ் பண்ணி வாழ முடியாது. எனக்கு ராஜா மாதிரி வாழணும். எனக்கு சொந்த பிசினஸ் இருக்கணும். கீழே குறைஞ்சது முப்பது பேராச்சும் வேல செய்யணும்..பெரிய வீடு.. பிஎம்டபிள்யூ காரு..  என் புள்ளைங்க எல்லாம் கான்வெர்ட்ல படிக்கணும்.. ஒவ்வொரு சம்மர் வெக்கேஷன் வரும் போதும்  என் பொண்டாட்டி பிள்ளைகளோடு வெளி நாட்டுக்கு நான் பறந்துறனும். வீட்டில வேல செய்ய வேலைக்காரங்க.. நெனச்சத நினைச்ச நேரத்துல வாங்கி ஆசைப்பட்டத அப்பவே அடைச்சு வாழ்ந்தா இப்படி வாழனும்.."

" உனக்கு என்ன ஆச்சு தனுஷ்.. என்னத்தையோ நீ சொல்ல வர ஆனா சொல்ல மாட்ற.. பொடி வச்சி பேசாத.. என்ன சொல்ல வந்தியோ அத டைரக்டா சொல்லு"

"இதான் மல்லி நீ.. பாயிண்ட்ட புடிச்சிட்ட.. மல்லி நா ஆசைப்படுற வாழ்க்கய உன் கூட இருந்தா கண்டிப்பா வாழ முடியாது.. ஆனா என் மாமா பொண்ணு கூட இருந்தா  நான் ஆசைப்படுறதுக்கும்  மேல என்னால வாழ முடியும்.. சத்தியமா என்ன அப்படிப் பார்க்காத. உன்ன ஏமாத்தணும்னு  நான் நெனச்சது இல்ல.. உன் கூட சந்தோஷமா வாழணும் அப்படித்தான் நான் கனவு கண்டுட்டு இருந்தேன். ஆனா கனவுல மட்டும்தான் அது சாத்தியம்..

மல்லி என் மாமா இத்தன வருஷ பகைய மறந்து கல்யாணம் பேச வீட்டுக்கு நேத்து வந்தாரு.. வீட்ல எல்லோருக்கும் சம்மதம்.. எனக்கும் புடிச்சிருக்கு.."

"எப்ப கல்யாணம் தனுஷ்.." மல்லி இவ்வளவு சாதாரணமாக இந்தக் கேள்வியைக் கேட்பாள் என்று தனுஷ் நினைத்தே பார்க்கவில்லை. அவன் கரத்துக்குள் இருந்த தன் கரங்களை உருவிக் கொண்டே  கேட்க

"அடுத்த மாசமே"..

"ஓ..சரி என் லவ்வுக்கு நீ என்ன பதில் சொல்ல போற.. இத்தன வருசத்துல நீதான் என் வாழ்க்கைனு நான் முடிவே பண்ணி வாழ்ந்துட்டு இருக்கேன். அந்த நம்பிக்கை துரோகதுக்கு என்ன பதில்?"மிகவும் நிதானமாக கேட்டாள்..

தனுஷால் அவளது கண்களை சந்திக்க முடியவில்லை. அவள் அழுவாள்.என்னை விட்டு செல்லாதே என்று அவன் கால்களில் விழுந்து கதறுவாள் என்றெல்லாம் அவன் யோசித்து வைத்திருந்தான்.  ஆனால் அவளோ மிக மிக சாதாரணமாக அவனிடம் கேள்விக்கணைகளை தொடுத்து கொண்டிருக்க அவளை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்தான் தனுஷ்.

அவனுக்கும் இத்தனை வருட காதலில் அவளது நயனங்கள் கூறும் மௌன மொழி புரியாமல் இல்லை. இப்பொழுது அந்த நயனங்கள் முழுவதும் வேதனை மட்டுமே தழும்பி வழிந்தது. பொது இடம் என்பதால் தன் கண்ணீரை கூட கட்டுப் படுத்திக் கொண்டிருக்கிறாள் கல்நெஞ்சக்காரி. ஆனால் அந்தக் கண்களில் உயிர்ப்பே இல்லை. அது செத்து ஐந்து நிமிடங்கள் ஆகி விட்டது.

காதலா சுகபோக வாழ்க்கையா? தனுஷ் தனக்குள் பட்டிமன்றம் நடத்தி சுகபோக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தான்.. எனவே மல்லி கேட்ட கேள்விக்கு அவள் கண்களை பார்க்காமலேயே பதில் சொன்னான்" என்ன மன்னிச்சிடு மல்லி..  கண்டிப்பா உனக்கு வேற ஒரு நல்ல"

"மூடு தனுஷ்.. ஒரு வார்த்த உன் வாயில இருந்து வரக்கூடாது.. கண்டிப்பா எனக்கு துரோகம் பண்ண உனக்கே நல்ல வாழ்க்கை கிடைக்கும் போது.. எனக்கு ஏன் கிடைக்காது..  உன்ன விட எல்லா விதத்திலும் மேலானவன் எனக்கு தேவை இல்ல.. இப்ப நீ சொன்ன காசு பணம் அந்தஸ்து எல்லாமே என்னால சம்பாதிக்க முடியும்.. இது எல்லாமே தான் வாழ்க்கைனு நீ நினைக்கிற.. ஆனா இதையும் தாண்டி ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கையோட பேரு நம்பிக்கை.. இந்த ஒரு வார்தைக்குள்ள தான் அன்பு பாசம் காதல் நட்பு எல்லாமே அடங்கி இருக்கு. நம்மள உண்மையா நேசிக்கிறவங்களுக்கு உயிரே போனாலும் நம்பிக்கை துரோகம் செய்யக் கூடாது.

உன் மேல நீ நம்பிக்கை வைத்திருந்தா கண்டிப்பா எனக்கு இப்ப இந்த துரோகத்த செஞ்சிருக்க மாட்ட.. எனக்கும் ஒருத்தன் பொறந்திருப்பான்.. கனவுல கூட எனக்கு துரோகம் செய்யமாட்டான். அவனோட உழைப்பு மேல நம்பிக்கை வைச்சிருப்பான்.. என்ன ராணி மாதிரி பார்த்துக்குவான். சுகம் துக்கம் எது வந்தாலும் ரெண்டு பேரும் சேர்ந்தே சமாளிப்போம்.. இது தான நீயும் சொல்ல வந்த.. உன் வாயிலிருந்து இதைக் கேட்க எனக்கு இஷ்டமில்ல.. குட் லக்" என்றவள் அங்கிருந்து வேகமாக கிளம்பி சென்று விட்டாள்.

தனுஷ் மனம் கனத்து வீடு போய் சேர்ந்தான். ஒரு விதத்தில் அவனுக்கு சந்தோஷமே. மறு மாதம் அவனது திருமணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் போது  அவனது சைத்தான் மனம் குடைய ஆரம்பித்து. அது எப்படி நான் வேண்டாம் என்று மறுத்தால் என் காலில் விழுந்து கெஞ்சாமல் என்னை தூக்கி வீசி விட்டுச் செல்லலாம் என்ற அகம்பாவம் மேலெழுந்தது. அவளை அழ வைக்க நினைத்து  தன்னுடைய கல்யாண பத்திரிக்கையோடு அவளின் வீட்டிற்கு சென்றான். மூன்று பெண்கள் சேர்ந்து தங்கியிருக்கும் வீடு அது.

இவனை அங்கிருந்த இரண்டு பெண்களுக்கும் நன்றாக தெரியும். அவர்கள் இருவரும்  மல்லியின் தோழிகள் தான். தனுஷ்  மல்லிக்கு செய்த துரோகம் அவர்களுக்கு தெரிந்திருந்தாலும் வீடுதேடி வந்த அவனை உள்ளே அழைத்து என்ன விஷயம் என்று கேட்டார்கள். மல்லியை காணவேண்டுமென அவன் கூற  அவள் அறையில் இருப்பதாக கூறி நாகரீகம் கருதி சோபாவில் அமர்ந்து கொண்டனர்.

மல்லியின் அறைக் கதவைத் தட்டிவிட்டு கைப்பிடியில் கை வைத்தான். கதவு தாளிடாமல் இருந்ததுபோல டக்கென்று திறந்து கொண்டது. உள்ளே மல்லி  அவன் எண்ணி வந்ததற்கு மாறாக அழுது கரைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தாள்.. ஆக அவனது துரோகம் அவளை இவ்வளவு தூரத்திற்கு இழுத்து வந்திருக்கிறது. இது தெரியாமல் அவள் ஆனந்தமாக இருப்பதாக அவன் நினைத்துக்கொண்டான்.

உள்ளே சில்லென்ற மழை சாரல் வீச பாதி உயிராக இருந்தவளை குற்றுயிராக்கும் முயற்சியில் இறங்கி" மல்லி என்னோட கல்யாண இன்விடேஷன் கொடுக்க வந்தேன்.. நீ கண்டிப்பா கல்யாணத்துக்கு வரணும். அப்போதான் உனக்கு தெரியும் நான் ஏன் இந்த முடிவுக்கு வந்தேனு.. சாப்பாடு மட்டும் எத்தனை வெரைட்டி தெரியுமா.. நான்வெஜ்ல அம்பது.. வெஜ்ல அம்பது. என் மாமனார் ஐநூறு பவுன் தங்கம் போடுறாரு.. அப்புறம் வீடு  கார்  கம்பெனி எல்லாமே கொடுக்கிறாரு..இதெல்லாம் என் வாயால சொன்னா நீ நம்ப மாட்ட. அதான் உன்ன வர சொல்றேன். யோசிச்சு பாரு உன்ன கல்யாணம் பண்ணியிருந்தா இதெல்லாம் எனக்கு கெடைச்சிருக்குமா... நல்ல வேளை கடவுள் என்னக் காப்பாத்திடாரு.. சரி மல்லி நீ வந்துரு.. ஹான் பெரிய இடத்து கல்யாணம்.. இந்த மாதிரி ஒரு பிச்சைக்காரி கோலத்தில வந்து நின்னுராது..உன்கிட்ட நல்ல சாரி இருக்கா..

இருந்தா அத கட்டிக்கோ..  இல்லன்னா தனது பணப்பையை திறந்து பத்தாயிரம் ரூபாயை எடுத்து அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு"நல்ல சாரி வாங்கிக்கோ" என்றவன் பத்திரிக்கையை மேஜைமேல் வைத்துவிட்டு கிளம்பி விட்டான்.இது ஒரு அல்ப சந்தோஷம். தான் வேண்டாம் என்று மறுத்த பொருளை வேதனை படுத்தி பார்ப்பதில் அப்படி ஒரு ஆனந்தம்.

ஒருவேளை மல்லி அவன் காலைப்பிடித்து கதறிருந்தால் இந்த அளவிற்கு பேசியிருக்க மாட்டோனோ என்னவோ? அவன் சென்ற பிறகு அவன் கொடுத்த அந்த பத்தாயிரம் ரூபாயை பார்த்துக் கொண்டே இருந்தாள் மல்லி. ரணப்பட்ட இதயத்தோடு அமர்ந்திருந்தவள் யோசித்து தீர்க்கமான ஒரு முடிவுக்கு வந்தாள். தன்னை இந்நிலைக்கு ஆளாக்கி இவ்வளவு இழிவாக பேசியவன் மட்டும்  எப்படி சந்தோஷமாக இருக்கலாம்? எந்த நாளை அவன் இவ்வளவு சந்தோஷமாக ஆர்வமாக எதிர்பார்க்கிறானோ  அந்த நாள் அவனுக்கு துன்பத்தையும் துயரத்தையும் மன உளைச்சலையும் கொடுக்க வேண்டும்..

அதற்கு தான் என்ன செய்ய வேண்டும் என்று யோசித்தாள். உடனே அவனது புகைப்படத்தை ஸ்கெட்ச் வரைய தன் தோழியிடம் ஆர்டர் கொடுத்து விட்டு அவனின் அழகான படத்திற்குக் கீழே துரோகி என்று எழுதி அதை சட்டம் இட சொன்னாள். பின் அதனை மிகவும் நேர்த்தியாக பேக் செய்து அவன் கொடுத்த பத்தாயிரம் ரூபாயை அதனுள் வைத்து எடுத்துக் கொண்டு கல்யாண மண்டபத்திற்கு சென்றாள். அதன் பிறகு நடந்தது தான்  அனைவருக்கும் தெரியுமே.

தன்னுடைய சிந்தனையிலிருந்து அவள் வெளிவர உதவி செய்தான் இளா.. எழுந்து சென்று கதவைத் திறந்தாள் மல்லி.  அங்கே வாசற் கதவின் மீது சாய்ந்து நின்றபடி "ஸாரி.. நான் வேணும்னு அப்டி பண்ணல"..

"ஒன்னும் தேவையில்ல போயி படுத்துருங்க".. அவன் முகத்தில் அறைந்து சாத்துவது போல அறைக்கதவை சாத்தியவள் நினைவு  மாலைக்கு சென்றது. மணியண்ணா அவனுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வைத்து அவளை எடுத்துச் செல்ல சொல்ல அவனது அறை கதவை தட்டிவிட்டு கதவை திறந்தவள் கையிலிருந்த தட்டை அப்படியே கீழே போட்டு விட்டாள்.

காரணம் அவளுக்குப் பிடிக்காத பிராணி உடும்பு. அந்த உடும்பை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான் இளா. சின்ன வயதில் இருந்தே  மல்லிக்கு ஒரு ஃபோபியா இருக்கிறது. டிவியில் கூட அவள் உடும்பை பார்க்க மாட்டாள். அதாவது பல்லி வகைகள் என்றாலே அவளுக்கு அலர்ஜி.. கை கால்கள் நடுங்கிக் சிறிது நேரம் எடுக்கும் அவள் இயல்பு நிலைக்கு திரும்ப.

அப்படியிருக்கும்போது மஞ்சள்நிற உடும்பை  கையில் வைத்து தடவிக் கொண்டிருந்தான் இலக்கியன். ஆ என்று கத்திக் கொண்டே தட்டைக் கீழே போட்டாவள் பதறியடித்து படிக்கட்டில் இறங்கும் போது பாதி படியில் கால் வழுக்கி விழுந்து இடது காலில் சுளுக்கு விழுந்து விட்டது. மணியண்ணாவும் இளாவும் பதறியடித்து வர நல்ல வேலை உடும்பை அறையில் விட்டு விட்டு வந்திருந்தான்.

நடக்க முடியாமல் படுத்து கிடந்தவளை அவன்தான் தூக்கினான். மணியண்ணா என்ன நடந்தது என்று அவளிடம் கேட்க  நடுங்கிக் கொண்டு தன் நிலையை விளக்கியவளுக்கு இலக்கியனை பார்க்கும் போது கொலை வெறியே வந்தது..மணியண்ணா இடது காலை பரிசோதித்து விட்டு இது சுளுக்கு என கூறி தைலம் தேய்த்து உருவி விட்டு நடக்காதே என்று கூறியும் அதை காதில் போட்டுகாத மல்லி தனது அறைக்கு செல்ல எழுந்தாள்.

அவளை நடக்க விடாமல் தூக்கி சென்று அவள் திமிர திமிர அவளை மெத்தையில் அமர வைத்தான் இலக்கியன்.அவனும் ஒன்றும் பேசாமல் அவனது அறைக்கு சென்று விட்டான். இரவு மல்லி உண்ணாமல் இருக்கவும் தான், மனம் கேளாமல் வந்து அவளிடம் மன்னிப்பு கேட்கிறான்.


தொடரும்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்