19 நெருங்கினா(ள்)ல்?


ஹாய் டியரிஸ்.. எப்படி இருக்கீங்க.. நல்லா இருக்கீங்கன்னு நம்புறேன்.. ஒரு புது முயற்சியா miniature Cooking set வெச்சு சமையல் சேனல் ஸ்டார்ட் பண்ணிருக்கேன்.. மலேஷியா சமையல்.. வேஸ்ட்ர்ன்.. சைனிஸ் இப்படி எனக்கு தெரிஞ்ச சமையல செய்ய போறேன்.. உங்க ஆதரவ கொடுத்தா ரொம்ப சந்தோசமா இருக்கும்.. முடிஞ்சா போற போக்குல நம்ம சேனல்ல subscribe செய்ஞ்சிட்டு போங்க🧡🧡🧡🧡

🌻TASTY TINY https://youtube.com/channel/UCdkT_nuhf4lmyZVufSpG4VA🌻

வந்தியதேவன் அவனின் ஓட்டத்தை எவ்வளவு தான் எட்டி போட்டாலும் குண்டலகேசி அவளுக்கிருந்த அளவுக்கதிகமான ஆர்வத்தின் காரணமாக அந்த பேழையைத் திறந்து அதனுள் இருந்த பூட்டை வந்தியதேவன் சங்கிலியின் டாலருக்குள் பதுக்கி வைத்திருந்த சாவியால் திறந்து விட்டாள். சாதாரண பூட்டு என்றால் சாவி போட்டு திறந்தவுடன் மேலே டக் என்ற ஓசையோடு பூட்டு திறந்து கொள்ளும்.

ஆனால் இந்தப் பூட்டு சற்று வித்தியாசமாக இருந்தது. பூட்டியிருக்கும் மேல் பகுதி திறந்து கொள்ளாமல் கீழ்ப்பகுதியில் ஒரு விசை வந்தது."பூட்ட சாவி போட்டு தொறந்தா மேல தானே தொறக்கும்.. இது என்ன அடியில் இருந்து ஏதோ ஒரு சுவிட்ச்சு வருது..என்ன எழவுனு ஒன்னும் மட்டுப்படுலையே".. உதட்டை சுளித்து யோசித்தவள் நொடியும் தாமதிக்காமல் அந்த சுவிட்சை  ஒரு அழுத்து அழுத்தினாள்..

சுவிட்சை அழுத்தியதும் இப்பொழுது சாதாரண பூட்டை போல மேல் பாகம் டக் என்ற ஓசையோடு திறந்தது.யூ (u) திருப்பி போட்ட மாதிரி வடிவில் இருக்கும் பூட்டும் இடத்தின் நுனியில் ஸ்க்ரூ போல இருக்க அதனை திருகி  பார்த்தாள்.அதற்குள் சுருட்டி வைக்கப்பட்டு மிகச் சிறிய துணி சுருள் இருந்தது.அரை செண்டி மீட்டர் இருந்த அந்தத் துணி சுருளை எடுத்து மெல்ல திறந்து பார்த்தாள்.

"நான் உன்ன உசுரா நெனைக்கேன்..ஒரு வேள எனக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆயி உன்ன மறந்து புட்டேனா இந்த சுருள காமி..எத்தன சென்மம் எடுத்தாலும் உன்ன உசுரா நெனச்சு எழுதுற இந்த எழுத்து என் உத்திரத்துல எழுதுற எழுத்தய்யா.. என்னிக்கும் மறக்க மாட்டேன்"

அரை செண்டி மீட்டர் துணியில் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு  மிக மிகச் சிறியதாக எழுதி இருந்த அந்த எழுத்தை குண்டலகேசி மிகவும் தெளிவாகப் படித்தாள்.. மாணவி வாய்ப்பாடு ஒப்பிப்பது போல திரும்பத் திரும்ப துணி சுருளில் எழுதியிருந்த வசனத்தையே படித்துக் கொண்டிருந்தாள்.  அந்த வசனங்கள் வெறும் வார்த்தைகளாக அல்லாமல் அவளின் சதை நரம்பு ரத்தம் எலும்பு திசுக்கள் தாண்டி இதயத்தின் உள்ளே சொல்ல முடியாத ஒரு வலியைக் கொடுத்தது.

அந்த வலி அவளை நிற்க விடாமல் கண்ணை கட்டிக்கொண்டு வந்தது. அப்படியே கால்கள் தோய்ந்து அந்தத் துணி சுருளை மட்டும் இருக்கமாக கையில் பிடித்தப் படி கீழே விழுந்து விட்டாள்..கண்ணை திறக்க முடியாமல் கண்கள் இரண்டும் பசை போட்டது போல ஒட்டிக் கொள்ள ஆனால் அவளின் அகக் கண்கள் திறந்து கொண்டது.திறந்த அகக் கண்களின் மூலம் அவன் அவளையேக் கண்டாள். ஆனால் வேறு கோணத்தில் வேறொரு ஜென்மத்தில்.

காலம் இருப்பதாம் நூற்றாண்டு தொடக்கம்..

அன்றையத் தஞ்சையின் பொன்னி நதி ஓரம் தனது பரிசலில் ஏற்பட்ட சிறிய சேதாரத்தை சரி செய்து கொண்டிருந்தாள் ஒயிலழகி.. சற்றுத்தள்ளி கரையில் அமைந்திருந்த அவளின் குடிசையின் முன்பு கண் தெரியாத அழகியின் பாட்டி சுகந்தம்மை அமர்ந்து வெயிலில் காயப் போட்டிருந்த வாடாகத்தை காக்கா கொத்தாமல் ஒரு நீள குச்சியை வைத்து அங்கிட்டும் இங்கிட்டும் ஒரு தினுசாக ஆட்டிக் கொண்டிருந்தார்.

பாட்டிக்கு கண் பார்வை மட்டுமின்றி காதும் அவ்வளவாக கேட்காது.தாய் தகப்பனற்ற அழகிக்கு அனைத்துமே பாட்டி சுகந்தம்மை தான்.. சிறு வயதிலேயே தாய் தகப்பன் இருவரையும் இழந்தவளுக்கு பாசம் பாட்டி வழியே கிடைத்தாலும் கண்டிப்பு அதை விட நிறையவே கிடைத்தது. சிறுவயதில் இருந்தே தன்னுடைய வேலைகளை தானே செய்து பழகிக் கொண்டாள். அவளின் முன்னோர்கள் முன்பு ஒரு காலத்தில் அரசருக்கு ஆற்றை கடக்க பரிசல் ஓட்டியவர்கள் என்று பெருமை அழகி குடும்பத்திற்கே வந்து சேரும்.  குடும்பத் தொழிலான பரிசல் ஓட்டுவதை ஆண்கள் இல்லாமல் போனாலும் நிறுத்தாமல் தானே கையில் எடுத்துக் கொண்டாள் ஒயிலழகி.

 அந்நாட்களில் சாலையில் குதிரை வண்டியிலும் மாட்டு வண்டியிலும் பிரபுக்களும் துரைமார்களும் சற்று செல்வம் படைத்தவர்கள்  மட்டுமே செல்வார்கள். மற்றவர்கள் அனைவரும் ஆற்றை கடந்து பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டும் என்றால் அது ஒயிலழகியின் தயவால் மட்டுமே முடியும். இரவு பகல் எந்நேரமும் அவசரம் என்று ஆற்றைக் கடக்க யாராவது அழைத்தால் ஓடி விடுவாள்.

"பொட்டப் புள்ள ராவுக்கு ஆம்பளைங்கள ஏத்திகிட்டு ஆத்துக்கு அந்த பக்கம் போறது நல்லாவா தாயி இருக்கு.."பாட்டி எப்பொழுதும் அவள் இரவு வேளைகளில் பரிசல் ஓட்ட சென்றால் நொடித்துக் கொள்வார்.

"ஆங்.. இங்க என்ன ஆச்சி உன் மவளும் மருமவனும் சம்பாதிச்சு சேத்து வெச்ச பணமா கொட்டி கெடக்குது.. அள்ளி இடுப்புல சொருக்கி வெச்சிக்க.. ராப்பகளா கண்ணு முழிச்சு நாலு காசு சேத்து அந்த செட்டியார் வூட்டம்மா போட்றுக்குற மாதிரி ஒரு காசு மால செய்யலாம்னு பாத்தா இப்டி கரிச்சு கொட்றியே"..பேத்தியும் ஒன்றும் பாட்டிக்கு சளைத்தவள் கிடையாது.பாட்டி ஒரு வார்த்தை பேசினால் பதிலுக்கு பேத்தி நூறு வார்த்தைகள் பேசி விடுவாள்.

 இன்றைய நிலவரப்படி பேத்தியின் சம்பாத்தியத்தில் தான் அந்த குடும்பமே ஓடிக்கொண்டிருந்தது. இரவு பகல் பாராமல் அழகி ஓடாய் தேய்ந்து உழைத்துக் கொண்டிருந்தாள்.. என்னதான் மிகவும் நல்ல மனசு படைத்தவள் என்றால் காசு என்று வந்து விட்டால் அவளைப் போல கருமி இந்த உலகத்திலேயே கிடையாது..பணம் என்றால் பேயாய் பறப்பவள். அவளைப் பொறுத்த வரைக்கும் இந்த பணத்தால் தானே அவளது உறவுகள் அனைவரும் தாய் தகப்பனுக்கு இறந்த பிறகு அவளையும் கண் தெரியாத பாட்டியையும் எட்டிக் கூடப் பார்க்காமல் ஒதுக்கி குப்பையைப் போல தள்ளி விட்டார்கள்.

 பணம் சம்பாதித்து ஒன்றுக்கு நூறு பரிசல் வாங்கி அதனை ஆள் வைத்து ஆற்றில் செலுத்த வேண்டுமென அவளுக்குள் ஒரு லட்சியமே இருந்தது.காற்றடித்தால் வீட்டின் மேல் ஓலை பறந்து விடும்..  காவிரியில் வெள்ளம் ஏற்பட்டால் இவர்கள் வீட்டு திண்ணை வரை சேறு மண்டிக் கிடக்கும்.புயலுக்கு ஆடும் இந்த குடிசை வீட்டை தள்ளி விட்டு காரை வீடு கட்ட வேண்டும் என்பது அவளின் இன்னொரு லட்சியம்.

அன்றும் அப்படிதான்..இரவு சரியான பேய் மழை..  ஆங்காங்கே அழகியின் குடிசை வீடு ஒழுகிக் கொண்டிருந்தது. பாட்டிக்கு உடம்பு சரியில்லாத நிலையில்  இருந்த ஒற்றை கயிற்றுக் கட்டிலில் மழை நீர் ஊற்றாத இடமாகப் பார்த்து பாட்டியை படுக்க வைத்திருந்தாள்.இடியும் மின்னலும் இதயத்தை நடுங்க வைத்துக் கொண்டிருந்தது.

 பாட்டியின் கட்டிலின் ஒரு ஓரத்தில் தலைசாய்த்து உறங்கிக் கொண்டிருந்தாள் அழகி.அப்பொழுது கதவு பட படவென தட்டும் ஓசையில் கண் திறந்தவள் எழுந்து சென்று வெளியே பார்த்தாள்..  வெள்ளையர்களின் ஆட்சியை எதிர்த்து நாடு முழுவதும் தீவிரமான புரட்சி நடந்து கொண்டிருந்தது. தஞ்சையிலும் அந்த புரட்சி வேர் படர்ந்திருந்தது.  அவ்வப்போது புரட்சியாளர்கள் யாராவது அக்கரைக்குச் செல்ல அழகியின் பரிசலை தான் உபயோகப்படுத்துவார்கள்.

அப்படி ஒரு புரட்சியாளன் தான் அங்கே நின்று கொண்டிருந்தான்.அவனருகே இன்னொருவன் தலைக்கு முக்காடிட்டுக் கொண்டு இருந்தான்." என்ன அண்ணே கொட்ற மழையில கோணி போதிட்டு நிக்குற"..

"அது தங்கச்சி.. அவசரமா அக்கறைக்கு போகணும். பொழுதுக்கே போகலாம்னு பாத்தா இந்த வெள்ளைகாரனுங்க நாய் மாதிரி மோப்பம் புடிச்சு நம்மளையே சுத்தி வரானுங்க.. எப்பவும் போல இருட்டுல போலாம்னு பாத்தா இன்னிக்குனு பாத்து வானம் பொத்துக்குச்சு.."புரட்சியாளன் தான் வந்ததின் நோக்கத்தை தெளிவு படுத்தினான்.

"அக்கறைக்கு இப்போ என்னால வர முடியாது அண்ணே.. வூட்ல ஆச்சிக்கு மேலுக்கு நோவுது.. மழை வேற. அத எப்டி ஒண்டியா விட்டுட்டு வரறது சொல்லு.."..  மனம் இல்லா விட்டாலும் தன்னுடைய பாட்டிக்காக அழகி செல்ல மறுத்தாள்.

"அட என்ன ஆத்தா நீயு.. வழக்கமா உனக்கு பணம் தான கொடுப்போம். ஆனா இன்னிக்கு நீ வந்தினா உனக்கு என்ன கொடுப்போம் தெரியுமா"..

"என்ன கொடுத்துர போறீங்க பெருசா.. கேவுரு கேப்ப கோதுமை இப்டி கொடுப்பிங்க.. இல்லனா ஒரு ஆளாக்கு அரிசி கொடுப்பிங்க..அதுக்கு அவசியம் தான். ஆனா என் பாட்டி அது எல்லாத்தையும் விட அவசியம்.. நீ போயா வீட்ட பாத்து..ராவுல வந்து தூக்கத்த கெடுத்துக்கிட்டு" காற்றுக்கு பியித்துக் கொண்டு பறந்து விடலாமா என யோசித்து கொண்டிருந்த கதவை அறைந்து சாற்ற அவள் முற்பட

"ஹேய் இருத்தா.. சொல்றத சொல்லி முடிக்கிறதுக்குள்ள அப்படி என்ன அவசரம்னு கேக்குறேன்.. நான் சொல்றதக் கேட்டு அப்புறம் நீ கதவ சாத்திக்கோ ஆத்தா" அவள் கடுப்போடு அவர்களை பார்த்துக் கொண்டிருக்கும்போதே

" இந்த முறை மட்டும் நீ எங்கள அக்கறையில கொண்டு போய் விட்டா உனக்கு ஒரு பவுனு தங்க காசு தரேன் புள்ள".

சரியாக அவன் சொல்லும் போது காதை செவிடாக்கும் இடி ஒன்று முழங்கியது. அந்த இடி சத்தத்திலும் அவன் தங்கம் என்று சொன்ன விஷயம் அவள் செவிக்குள் இன்ப ராகமாக புகுந்தது. கண்கள் பெருசாக

"அண்ணே என்ன சொல்ற.. நீ நெசமா தான் சொல்லுறியா"

"அட ஆமா புள்ள.. இங்கன பாரு"என தன் இடுப்பு வேஷ்ட்டியில் மடக்கி வைத்திருந்த ஒற்றை நாணயத்தை எடுத்து அவளிடம் காட்ட அதனை சிம்னி விளக்கின் ஒளியில் கூர்ந்து பார்த்தாள் அழகி.ராணி விக்டோரியாவின் தலை பதிக்கப்படிருந்தது ஒரு புறம். மறு புறம் செம்பருத்தி பூ பதிக்கப்பட்டிருந்தது.கையிலிருந்த நாணயத்தை பார்த்துக் கொண்டே

"எண்ணே எப்டிண்ணே உனக்கு இது கெடச்சிது"

"அன்னிக்கி அந்த துறை பங்களாக்குள்ளயே பூந்துட்டோம்ல.. அப்ப சுருட்டிட்டு வந்தது.."படக்கென்று நாணயத்தை அவனிடம் திருப்பி கொடுத்தாள்.

"திருடுறது தப்பில்ல அண்ணே"

"யாரு புள்ள திருடுனா.. இதெல்லாம் அந்த வெள்ளக்காரன் நம்ம நாட்டுல நம்ம ஒழைப்ப திருடுற பணம் புள்ள. அவன் திருடுனத நாங்க திருப்பி எடுத்து ஏழை பாழைங்களுக்கு கொடுக்கோம்..தோ பாரு ஆத்தா யோசிச்சிட்டு நிக்க நேரமில்ல. வெரசா அக்கறைக்கு போகணும்.. உன்னால முடியுமா இல்லயா.. இல்ல நாங்க காட்ட சுத்தி போய்குறோம்"

ஒயிலழகி ஒருமுறை திரும்பி தன்னுடைய பாட்டியைப் பார்த்தாள். அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார்.  அவரை இந்நிலையில் விட்டுச் செல்ல அவளுக்கு மனமில்லை ஆனாலும் தங்க நாணயம் வேறு அவளை வா வா என்று சுண்டி இழுக்க கொட்டும் மழையைக் கூட பொருட்படுத்தாமல் அவர்களுடன் செல்ல முடிவெடுத்தாள் அழகி. உறங்கும் பாட்டியை எழுப்பி அக்கறைக்கு தான் செல்ல வேண்டும் எனக் கூற வெளியே மழை பெய்வதால் அவள் செல்லக் கூடாது என்று பாட்டி பிடிவாதம் பிடிக்க எப்போதும் போல அன்றும் அவரது பேச்சை மீறி தனது துடுப்பை எடுத்துக்கொண்டு தலைக்கு ஒரு கோணியைப் போட்டுக் கொண்டு வீட்டிலிருந்து கிளம்பினாள்.

 கிளம்பும் போது  புரட்சியாளனிடம் அந்த நாணயத்தை வாங்கி அவள் வீட்டினுள் இருக்கும் மண் பானைக்குள் பத்திரப்படுத்தி விட்டு சென்றாள்.மழை நீர் ஊசியாக அவளின் மேனியை பதம் பார்த்தது. காவேரி மழையின் தயவால் கொந்தளித்துக் கொண்டிருந்தது..  வெள்ளமே வந்தாலும் லாவகமாக துடுப்பு போடுவதில் அழகி கெட்டிக்காரி.  கவிழ்த்து வைத்திருந்த தனது பரிசலை சக்கரம் போல உருட்டி கொண்டே தண்ணீரில் போட்டு அதனை பிடித்துக் கொண்டாள்..

"வெரசா வாங்கண்ணோ" என அவள் குரல் கொடுக்க புரட்சியாளனும் அவனோடு வந்த முக்காடு போட்டுவனும் அந்தப் பரிசலில் ஏறி அமர்ந்தார்கள். சில அடிகள் அப்படியே பரிசலை தள்ளியவள் தானும் அதில் ஏறி அமர்ந்தாள்..கண்மண் தெரியாத அளவிற்கு மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் வலிமையோடு துடுப்பு போடும் அழகிக்கே அன்றைய காற்றும் மழையும் சவாலாக இருந்தது.  ஒரு கட்டத்தில் அவள் சமாளிக்க முடியாமல் தடுமாறும் போது அவளின் காரத்தை இன்னொரு வலிய கரம் பிடித்து நிறுத்தியது.

 மழை நீர் சொட்டச் சொட்ட வலது உள்ளங்கையால் முகத்தை வலித்து தன் கரத்தை பிடித்த உருவத்தை பார்த்தாள்.  முதலிலிருந்து முக்காடு போட்டுக் கொண்டிருந்தவன் தான் இப்பொழுது அவளின் கரத்தை பிடித்திருந்தது. என்னதான் வேஷ்டி சட்டை அணிந்திருந்தாலும் அவனின் உருவ அமைப்பு சொல்லியது அவன் உடலில் வெள்ளையனின் உதிரம் ஓடிக் கொண்டிருப்பதை..  இப்பொழுது அவன் முக்காடை துறந்திருக்க அவனைப் பார்த்து பதறினாள் ஒயிலழகி.

தொடரும் 

Comments

  1. Wow flashback vanthutu..semma akka😍😍😍

    ReplyDelete
  2. Super 👌👌👌 நிலா,அப்போ அது தான் தேவாவா 😳😳😳😳😳😳😳😳 இண்டர்ஸ்டிங்க இருக்கு

    ReplyDelete
  3. யாரு வந்தியதேவனா அது

    ReplyDelete
  4. Ahha arumaiya iruku ❤️❤️❤️❤️❤️💝💝💝💝💝💝

    ReplyDelete
  5. Yaaruyaa andha Avan.. VD ahhh..🧐🧐🧐

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்