23 நெருங்கினா(ள்)ல்?



ஒயிலழகி கடுப்போடு நடந்து கொண்டிருந்தாள்..காரணம் வேறு எதுவுமல்ல அவள் முன்னால் நடந்து கொண்டிருக்கும் நந்தன் தான் அவளின் கடுப்புக்கும் கட்டுக்கடங்காத கோபத்திற்கும் காரணம்.. என்ன தைரியம் இருந்திருந்தால் தன் கழுத்தை நெரித்துக் கொல்ல பார்த்திருப்பான்.. அப்படி என்ன தேசப்பற்று இவனுக்கு? சொல்லப் போனால் இவன் ஒன்றும் முழுதாக பாரத தேசத்தவன் கிடையாதே.. இவனுடைய தந்தை ஆயிரம் சொன்னாலும் வெள்ளைக்காரன் தானே..

 இவனுக்கு என்ன உரிமை இருக்கிறது என் கழுத்தை பிடித்து நெறிக்க.. நேரம் கிடைக்கட்டும் நான் யார் என்று காட்டுகிறேன் என்று கறுவிக் கொண்டே அவனைப் பின் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாள் அழகி.அவளுக்கு பாட்டியை பற்றிய ஞாபகமாகவே இருந்தது.. தன்னை காணாமல் தன்னுடைய பாட்டி எப்படி  பரிதவிக்கிறாறோ..  அந்த வெள்ளைக்காரன் பாட்டியை போட்டு என்ன பாடு படுத்துகிறானோ? எப்படியெல்லாம் தான் வளர்த்த பாட்டி கஷ்டப்படுகிறாரோ.. ஆம் பாட்டி அழகியை வளர்ந்ததை விட அழகி தான் பாட்டியைப் பார்த்து பார்த்து வளர்த்து கொண்டிருக்கிறாள். அவரின் ஆரோக்கியத்தில் இருந்து அவர் அணியும் உடை வரை அழகி தான் கண்ணும் கருத்துமாக இருந்து அனைத்தையும் கவனிப்பாள்.

 அங்கே வெள்ளைக்காரன் பாட்டியை எட்டி உதைத்து விட்டு அவர் ஐயோ அம்மா என தலையில் அடிபட்டு உதிரம் வழிய கதறியதை கூட பொருட்படுத்தாமல் பூட்ஸ் கால்கள் தரையை அதிர செய்ய அங்கிருந்து கிளம்பினான். பாட்டியின் கதறல் சத்தம் கேட்டு இவ்வளவு நேரம் வெள்ளைக்காரனுக்கு பயந்து ஆங்காங்கே பதுங்கி நடப்பதை பார்த்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தார் அவன் சென்று விட்டான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வேகமாக ஓடி வந்தனர்.  அவர்களைச் சொல்லியும் எந்த பயனும் கிடையாது.

 வெற்றிவேல் வீரவேல் என்று வேல் கம்பையும் வாளையும் சுழற்றி எதிரியை பந்தாடிய வம்சம் நமது. அவை அனைத்தும் வெள்ளைக்காரனின் தோட்டாக்கள் நிறைந்த துப்பாக்கி முன்பு வலு விழந்து போனது. அப்படி சொன்னால் அது முற்றிலும் தவறு. நமது வேல்கம்பும் வெற்றி வாளும் என்றுமே தோல்வியைத் தழுவாது. தோல்விக்கு மிக முக்கியமான காரணமே ஒற்றுமை இன்மையும் சுயநலமும் மட்டுமே.

 சொகுசாக வெள்ளைக்காரனிடம் பதுங்கி விட்டு தானும் தனது குடும்பமும் மட்டுமே வாழ்ந்தால் போதுமென நமது வேந்தர்கள் பலர் இருந்ததால் வந்த வினை இது. இருந்தும் வீர மண்ணின் அடையாளமாக வீரபாண்டிய கட்டபொம்மன் மருது சகோதரர்கள் ஜான்சிராணி வேலுநாச்சியார் இன்னும் பலர் இம்மாதிரி எதிரிகளை வீழ்த்த போராடி  வீரமரணம் அடைந்தனர்.

"ஐயோ கிழவி உனக்கு ஒன்னும் ஆகளயே..ஆத்தாடி இது என்ன மண்ட பொளந்து ரத்தம் கொட்டுது"என பக்கத்து வீட்டு கமலம் கதற

"அட போடி இவள.. சாவுக்கு வராம பத்துக்கு வந்து ஒப்பாரியா வைக்குற.. மென்னிய நெரிச்சு புடுவேன்.. தூக்குடி என்ன.. அடியே நீங்க என்னடி பாத்துட்டு நிக்குறீங்க தூங்குங்கடி" கமலத்தோடு வெள்ளைக்காரனுக்கு சாபம் வழங்கிக் கொண்டிருந்த இன்னும் சில பெண்களை மிரட்டினார் சுகந்தம்மை பாட்டி.. அவரை அனைத்து பெண்களும் தூக்கி திண்ணையில் அமர வைத்து பச்சிலையை அரைத்து அவரின் நெற்றி காயத்திற்கு மருந்திட்டனர்.

 ஆண்கள் சிலர்" எதுக்கு கெழவி உன் பேத்திக்கு இந்த வேண்டாத வேலை.. அந்த நாசமா போற துறைய பத்திதான் உனக்கு தெரியுமே.. உங்க பொழப்பே சிரிப்பா சிரிக்குது.. இதுல உங்களுக்கு பொதுசேவ தேவையா.. உன்ன மாதிரியே அந்த பொட்ட கழுதையும் இருக்கு..  அப்பா அம்மா இருந்திருந்தா இந்த மாதிரி தான்தோனியா சுத்திருக்குமா.. இருந்தாலும்  அழகிக்கு நீ ரொம்ப தான் இடம் கொடுக்குற.. வாயிலயே சோறக்கி இந்த ஜில்லாவுக்கே பந்தி வெச்சிருவா.. சீம சிறுக்கி"

"எவன்டா அது எடுபட்ட வெளக்கமாறு எலவெடுத்த பைய என் பேத்திய பத்தி பேசுறது.. அடி செருப்பால.. அடேய் என் பேத்திய பொட்டச்சினு நெனச்சிங்களோ.. அவ பொம்பளைக்கு பொம்பள ஆம்பளைக்கு ஆம்பளடா..அவள பத்தி பேசுனீங்க பேசுன வாய துடுப்பால அடிச்சு நொறுக்கிருவேன் ஆமா.. அது எவன்டா சிறுக்கி மவன் என் வளப்ப கேவலமா பேசுனவன்.. ஏன்டா வயசான உழுத்துப் போன கட்ட நானு.. என்னிய போட்டு அந்த தாயோலி மவன் துரை எட்டி ஒதைக்குறான்.. அவன தட்டி கேக்க துப்புக் கெட்டு போயி பொண்டாட்டி சீலக்குள்ள மறஞ்சிகிட்டு இப்ப பொட்டச்சிங்க முன்னாடி பவுசு காட்டுறிங்களா.. அறுத்து புடுவேன் இழுத்து வெச்சு நாக்க.."

சுகந்தம்மை பாட்டியைப் பற்றி அங்கே இருப்பவர்கள் அனைவருக்குமே நன்றாக தெரியும்.இல்லையென்றால் வயசு பெண்ணை வைத்துக் கொண்டு இவ்வளவு தைரியமாக அவர் தனித்து இருந்திருக்க மாட்டார்.வாயாலே தோரணம் கட்டி வம்பு பேசுபவர்களை தொங்க விட்டு விடுவார்.எதையும் பொறுத்துக்கொள்ளும் பாட்டிக்கு அவரின் பேத்தியைப் பற்றி மட்டும் யாராவது அவதூறாகப் பேசினால் வெகுண்டு எழுந்து விடுவார்.இப்பொழுதும் அதே தான் நடந்தது.தலையில் அடிப்பட்டு உதிரம் வழிந்தாலும் தன்னுடைய பேத்தியை பற்றி அவதூறாக பேசுபவர்களை கிழி கிழியென கிழித்துக் கொண்டிருந்தார்.

வம்பு பேசியவர்களின் மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களின் வாயை தங்களால் அடைக்க முடியவில்லை.பாட்டி யாவது நன்றாக நான்கு கேள்வி நறுக்கென்று கேட்கட்டும் என்று பார்வையாளராக இருந்து மனதுக்குள் பாட்டிக்கு கோவில் கட்டி அபிஷேகம் செய்து கொண்டிருந்தார்கள்.பாட்டியிடம் எதிர்த்து பேச வழியில்லாமல் அவரின் வசவுகளை ஈயென என்று இளித்துக் கொண்டே வெட்கமே இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்தார்கள் ஆண்கள்.

பின் பாட்டி கேட்டுக் கொண்டதன் பயனாக தங்களால் முடிந்தவரை அழகியை தேடி சுற்றும் முற்றும் அலைந்தார்கள்."ஆத்தா அழகிய காணல.. இந்த போக்கத்தவனுக்கு பயந்து புள்ள எங்கயோ ஒளிச்சிருக்கு போல. விடிஞ்சதும் வந்துரும் நீ போயி படு.. ஆமா அழகி கூட போன பொடியன நீ எங்கயாச்சும் பாத்துருக்கியா.."

"இல்லய்யா.. ஆனா அழகிக்கு தெரியும் போல.."

"வயசு பொண்ணுக்கு என்ன ஆம்பளைங்க கூட சும்மா பேச்சு கெடக்கு.. இத சொன்னா எங்களையே நொட்டம் சொல்லுவ.. இப்ப நிச்சயம் பண்ணவன் ஒரு ராவு முழுக்க வேத்து ஆம்பள கூட உன் பேத்தி இருந்தத கேப்பானே அப்ப என்ன சொல்லுவ..கண்ணாலம் முடிவான புள்ள வெளிய போனதே தப்பு.. அது ராவுல தன்னந்தனியே ஊரு பேரு தெரியாதவன் கூட என்ன போறது கெடக்கு.."

"யோவ் ஆத்தாவே அழகிய காணாம நொடிஞ்சு கெடக்கு.. வாயிக்கு வந்த மாறி பேசுறீங்க..உங்களுக்கு என்னய்யா நீங்க ஆம்பளைங்க.. ஒரு பொண்ணோட வலி உங்களுக்கு எங்க தெரிய போது.. வீட்டயும் உங்களையும் பாத்துக்கிட்டே எங்க பொழப்பு ஓடுது.. ஒரு மக்கா மனுஷனுக்கு ஒண்ணுன்னா ஓட முடியாது.. இவ்ளோ ஏன் அன்னிக்கு என் தங்கச்சிய மாடு முட்டி கொடலு சரிஞ்சிருச்சு எங்க ஆத்தா வீட்டுக்கு போறேன்னு அழுதேனே விட்டியா..

அதுவே உன் தங்கச்சினா ஓடிருக்க மாட்ட இடுப்பு வெட்டி அவுந்து விழறது கூட தெரியாம.. அழகி தங்கம்ய்யா.. அதான் துரை ஒரு பொண்ண கெடுத்த நாசமாகிட்டானு தெரிஞ்சு அந்த பொண்ணு உசுரோடவாது இருக்கட்டும்னு அத காபந்து பண்ணி கூட்டிட்டு போயிருக்கு.."

"அதானே அப்டி சொல்லுடி.. என்னமோ அழகி அந்த ஊர் பெயர் தெரியாத பொடியன் கூட ஓடிப் போன மாதிரில இருக்கு நீங்க பேசுறது" பெண்கள் அனைவரும் இதுதான் சாக்கு என்று தங்கள் கணவன்மார்களை கட்டம் கட்ட பொது வெளியில் வைத்து தங்கள் மானம் பறி போவதை விரும்பாத ஆண்கள் விருட்டென்று வீட்டிற்கு கிளம்பி விட்டனர். அவர்கள் தலை மறைந்ததும் பெண்கள் அனைவரும் பாட்டியிடம் தைரியம் கூறி கண்டிப்பாக அழகி காலையில் வந்து விடுவாள் என்று ஆறுதல் தெரிவித்து விட்டுச் சென்றனர்.

 காலம் காலமாக இந்த ஆற்றோரம் தான் சுகந்தமை பாட்டி வம்சத்தின் அடையாளம்.. அவர்களை தெரியாதவர்கள் இந்த ஊரில் கிடையாது. வசதி வாய்ப்புகள் இல்லாமல் போனாலும் மானம் மரியாதை நன்றாக வாழ்ந்த குடும்பம் என்ற பெயர் இன்னும் இருக்கிறது.  அந்த பெயருக்காக தான் குறைந்த வரதட்சனை என்றாலும் நல்ல இடமாக தன்னுடைய பேத்திக்கு பார்த்திருந்தார் பாட்டி.  இப்பொழுது அந்த ஆண்கள் கூறி விட்டுப் போனது போல ஒரு இரவு முழுவதும் வேரொரு ஆடவனுடன் இருந்துவிட்டு வரும் தன்னுடைய பேத்திக்கு இனி இந்த ஊர் மக்களால் சூட்டபடும் பெயர் என்ன.. இந்த விஷயம் மாப்பிள்ளை வீட்டினருக்கு தெரிந்து விட்டால் என்ன நடக்கும். கடவுளே ஏன் எங்களை இப்படி சோதிக்கிறாய்.  இருந்திருந்து பல காலம் கழித்து என் வீட்டில் மங்கல ஓசை கேட்க இருக்கிறது. அப்படிக் கேட்க கூடாது உன் வீட்டில் எப்பொழுதும் அபஸ்வரம் தான் கேட்க வேண்டும் என்று நீ தேர்வு எழுதி விட்டாயோ..

 என் உயிர் போவதற்குள் என் பேத்தியின் திருமணத்தை நான் பார்க்க வேண்டும்.  குறித்த தேதியில் திருமணம் நடக்கவில்லை என்றால் என் உயிர் இந்த உடலை விட்டு பிரிந்து விடும். இப்படியாக கடவுளிடம் தன்னுடைய மனக்குமுறலை கூறிவிட்டு எழுந்து தன்னுடைய குடிசைக்குள் சென்றார் பாட்டி.. அந்த இரவு அவருக்கு தூங்கா இரவானது..

 அவருக்கு மட்டுமல்ல அவருடைய பேத்திக்கும் அதே நிலை தான். நந்தன் அழகியை அழைத்துக் கொண்டு மலை உச்சிக்கு சென்று கொண்டிருந்தான்.கரடுமுரடான காட்டுப்பாதை.. அழகியால் நடக்கவே முடியவில்லை. பலமுறை இந்த மாதிரி பயணங்களில் ஈடுபட்டுள்ள நந்தனுக்கு இந்த காட்டு வழி கடினமானதாக தெரியவில்லை.

பின்னால் அழகி வருகிறாள் என்பதை மட்டும் அவ்வப்போது திரும்பிப் பார்த்து உறுதி செய்து கொண்டான்.அவளை கடுமையாக பேசியது அவனுக்கும் மிகுந்த மனக்கஷ்டத்தை கொடுத்தது. ஆனால் பேச்சுக்கு கூட அவள் வெள்ளைக்காரனின் காலை பிடிப்பது அவனுக்கு கடுங் கோபத்தை வர வைத்தது..

அதனால் பேசாமல் தன் பாதையில் நடந்து கொண்டே இருந்தான். திடீரென்று பின்னால் சருகுகள் மிதிப் படாத ஓசைக் கேட்கவும் திரும்பி பார்த்தான்.. அழகி  ஒரு மரத்தின் பெரிய வேரில் அமர்ந்து விட்டாள்.. அவளை நெருங்கி வேகமாக வந்தான்.. இந்த இருட்டில் அடர்ந்த கானகத்தில் பூச்சி பொட்டு ஏதாவது அவளைக் கடித்து விட்டதோ என்ற பதட்டம் அவனுக்கு..

 அருகில் வந்தவன் அவளை நன்றாக கவனித்தான். வியர்வை ஆறாகப் பெருகி ஊற்றியது. மற்றபடி அவளிடம் எந்த மாற்றமும் கிடையாது. அவனுக்கு அப்போதுதான் மூச்சே வந்தது. அவளை  திட்டி விட்டு ஏன் தான் மனம் வேதனை அடைகிறேன்..  அவளுக்கு ஏதாவது ஒன்றென்றால் எதனால் இந்த மனம் நடுங்கி விடுகிறது என்று அவன் அப்பொழுது யோசிக்கவே கிடையாது.

"எந்தா குட்டி எதுக்கு இவ்வட ஒக்காந்னு"

"மனுசனாய்யா நீ.. நீ பாட்டுக்கு பின்னாடி ஒருத்தி நடந்து வராளே.. ராத்திரி நேரம்.. பச்சக் காடு..பூச்சி பொட்டு ஏதாச்சும் கடிச்சி வெச்சிருச்சினா என்ன செய்யறது..மொத கொண்டு அவ வராளா இல்ல மயக்கம் போட்டு விழுந்துட்டாளானு பாக்குறியா..  உன்னலாம் ஒருத்தி கட்டிகிட்டு எப்படித்தான் குப்ப கொட்டுவாளோ தெரியல.."

"அது உன்ட பிரச்சன அல்ல குட்டி..என்னவோ நீ என்ன பிரேமிக்கனு மாறில மின்டுற"(நீ என்ன காதலிக்குற மாதிரில பேசுற"

"என்ன எழவதான் பேசுவியோ கையான் முய்யானு.. ஒன்னும் வெளங்கள.. சரி எதுக்கு மல உச்சிக்கு கூட்டிட்டு போற.. அங்கெருந்து என்ன கீழ தள்ளி போட்டு தள்ளவா"

"ஐயடா இந்தம்மா பெரிய ராஜகுமாரி பாரு.. கூட்டினு போயி நகை காசு அல்லாதயும் பறிச்சுனு கொன்னு கழிய.."

" நீ என்னமோ இந்த உலகத்துக்கு சொல்றேன்னு தெரியுது..ஆனா அது என்னனு தான் எனக்கு புரிய மாட்டுது.. தோ பாரு வெள்ள என்ன எப்படியாச்சும் உசுரோட கொண்டு போயி என் ஆச்சி கையில ஒப்படச்சிரு..அது பாவம் பயந்து போய் கிடக்கும்.."

" பேடிக்கன்டா மதுரம்.. உன்ன பத்திரமா கொண்டு போயி வீடு சேக்குறது என்ட பொறுப்பு.. சரி பட்டுனு வரு.. அவன்ட ஆளுங்க நம்மள துரத்தி வரு"..

"என்னால முடியலய்யா.. காலு ரெண்டு இத்து போயிரும் போல.. என்ன விட்ருய்யா.."என்று சுருண்டு படுக்கப் போனவளை வேறு வழியின்றி தூக்கி தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தான் நந்தன்..

"யோவ் பரதேசி.. என்னய்யா பண்ற.. இறக்கி விடுய்யா.. கத்தி புடுவேன்..எனக்கு கண்ணாலம் நிச்சயம் ஆச்சிய்யா.. வேற ஆம்பளைங்க மூஞ்சில கூட முழிக்க கூடாது.. நீ என்ன தூக்கிட்டே போற.. விடுய்யா"..

"ப்ராந்து.. கொறச்சு தூர நோக்காம்"

"பருந்தா.. இங்க எங்கய்யா பருந்து இருக்கு.. கோட்டான் தான் மரத்துக்கு மரம் உட்கார்ந்து கத்திக்கிட்டு இருக்கு.. எதா இருந்தாலும் இறக்கி விட்டு பேசு சொல்லிட்டேன்"

"ஐயோ.. குறைஞ்சு தூரம் பாரு".. தூரம் அப்படி என்னதான் இருக்கிறது என்று தன் பார்வையை எட்டிப் போட்டாள் அழகி.தூரத்தில் தீப்பந்தங்களின் ஒளி தெரிந்தது.

"யோவ் வெள்ள இன்னுமாயா இவனுங்க நம்மள தூரத்திட்டு வரனுங்க"

"ஆமா"

"என்ன நோமா..ஓடுய்யா சட்டுனு.. அன்ன நட நடக்குற.. ஓடுய்யா ஓடுய்யா அவனுங்க வந்துரு போறானுங்க.. ஓடுற வேகத்துல கீழ போட்றாத.. கல்யாணப் பொண்ணுய்யா நானு..பளப்பளனு இருந்தாலே பத்தாயிரம் நொட்ட சொல்லுவாங்க.. கையி காலு ஒடஞ்சு போனா நான் கொள்ளத் தான் அடிக்கணும்..நல்லா கெட்டியா புடிச்சிக்கோ.."என இறக்கி விட சொல்லிய சில வினாடிகளில் அவனின் கழுத்தை இறுக்கமாக கட்டிக் கொண்டாள் அழகி.

அவனுக்குள் அவளின் தொடுகை பூகம்பத்தையே ஏற்படுத்தியது. இதுவரை தனது உயிர் தேசத்திற்காக என்று மட்டும் நினைத்துக் கொண்டிருந்த அவனின் நினைப்பை அவளது ஸ்பரிசம் துண்டு துண்டாக்கியது.உன் உயிர் எனக்கு சொந்தமானது..என்று அவள் சொல்லாமல் சொல்லியது போல் அவனுக்கு தோன்றியது.அவளைத் தூக்கி செல்வது அவனுக்கு கனமாக தெரியவில்லை.கனம் அவனது இதயத்திற்குள் புகுந்து விட்டது. ஈசானி மூலையில் கனம் கூடியது போல அவனின் இதயத்திற்குள்ளும் கணம் கூடிப் போனது..

தொடரும்..

Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்