1 அதரா


அதரா - 1


பெயரறியா வண்ண வண்ண பூக்களும் அதற்கு சற்றும் சளைக்காத சிவப்பு, ஊதா, பச்சை,இளமஞ்சள் நிற  இலைகளும் இவைகளை அடித்து ஓரங்கட்டி விடுவதை போல அந்த தோட்டத்தின் அழகை தனதாக்கி கொண்டிருந்த ஊதா, இளஞ்சிவப்பு,ரத்தச் சிவப்பு, மஞ்சள், வெள்ளை மற்றும் இளம்பச்சை நிறங்கள் கலந்து கொடி கொடியாக காம்பவுன்ட் மதில் சுவரில் படர்ந்திருந்த காகித பூக்களும்,நறுமணத்தை அள்ளி வஞ்சகமில்லாமல் வீசிய முல்லையும் மல்லியும் தனக்கென்ன என்று வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது தங்களின் மைய பகுதியில் ஆடம்பரமாக நின்றிருந்த அந்த மாளிகையை பார்த்து.

தை பிறந்தால் வழி பிறக்குமென சிறப்பை பெற்று அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் தை மாதம் தொடங்க இன்னும் ஒரே ஒரு இரவே மீதமிருக்க அழகிய அந்த பூந்தோட்டத்தில் இரும்பினால் ஆன தொட்டி ஒன்றில் அக்கினி தேவன் தன் சிவந்த நாவை நாகத்தை போல வெளியே நீட்டி கொண்டிருக்க அவரின் பசிக்கு இரையாகி கொண்டிருந்தது உபயோகித்து ஒரு மாதமே ஆகிய பிராண்டட் ஷூஸ், ஒரு தடவையே அணிந்த வெளிநாட்டு ஆடை,வாங்கி இரண்டு மாதமே ஆகி லேசாக கால் ஆடிய நாற்காலி மேலும் பயன்படுத்தி சில மாதங்களே ஆன பொருட்கள் எல்லாம் அந்த அக்கினிக்கு தாரை வார்க்கப்பட்டது..கொழுந்து விட்டு எரிந்த தீயை பார்த்தபடி ஆட்களுக்கு கட்டளை இட்டு கொண்டிருந்தார் சுகன்யா.

ஆர்பாட்டமில்லாமல் எரியும் தீயை வைத்த கண் எடுக்காமல் பார்த்து கொண்டிருந்தான் ஒருவன் அவனது மாடியறையில் இருந்து.அவனது கண்களில் இருப்பது என்ன அசூசையா அல்லது அலட்சியமா கண்டறிய இயலவில்லையே.கால் மீ சென்யோரீதா பாடியது அவனது கைபேசி..தொடு திரையில் தாய் சுகன்யா சிரித்து கொண்டிருந்தார். சலிப்புடன் அழைப்பை ஏற்றவனிடம்"உன்ன யூஸ் பண்ணாத திங்க்ஸ வேலக்காரி கிட்ட கொடுத்து விட சொன்னேன் தானே கொடுக்காம என்ன பண்ற"

"மாம் கொடுக்க எதுவுமே இல்ல எல்லாமே எனக்கு வேண்டிய திங்க்ஸ் தான்."

"ஓ காட் நீ என்ன பேசிட்டு இருக்கேன்னு புரியுதா பேபி.. யூஸ் பண்ணி கிழிஞ்சு போன உன்னோட ரெட் கலர் டீஷர்ட், நைஞ்சு போன ஜீன்ஸ், பாழடைஞ்ச உன்னோட ட்ராவிங்ஸ் எல்லாமே இருக்குல்ல அதன்லாம் எடுத்து கொடு அவக் கிட்ட.. அதெல்லாம் தரித்திரம்டா வீட்ல வெச்சிக்க கூடாது"

"மாம் டூ யூ ஹவ் எனி சென்ஸ்? அதெல்லாம் என்னோட பிரைவேட் திங்க்ஸ் அத கொழுத்த சொல்ல உங்களுக்கு உரிம இல்ல.. எது தரித்திரம் ஒரே ஒரு தடவ யூஸ் பண்ண தௌஸன்ட் டாலர் கொடுத்து வாங்குன உங்க டிரஸ் ஆஹ்..இதெல்லாம் டூ மச் மாம்"என்று படாரென்று அழைப்பை துண்டிக்க காதை அவனது அறைக்கதவின் மேலே பதித்து வைத்திருந்த வேலைக்காரியோ தொபுக்கடீர் என விழுந்து வாரினாள் அவனின் அறையில்."யூ இடியட் எத்தன தடவ சொல்லிருக்கிறேன் என் ரூம்ல இப்டி ஒட்டு கேக்குற வேலையெல்லாம் வெச்சுகாதன்னு இன்னொரு தடவ இப்டி பண்ண கொன்றுவேன் உன்ன"

அவளோ இவன் ஒக்காந்த இடத்த விட்டு அசையவே இல்லயே அப்றம் எப்டி கதவு தொறந்துச்சு..அவனை ங்கே என்று பார்க்க அவனது மிரட்டும் விழிகளின் பளபளப்பில் அடித்து பிடித்து எழுந்து நின்றவள்"அய்யா அது வந்துங்கய்யா அம்மா தான் பழைய சாமான் வாங்கிட்டு வர சொன்னாங்க"

"பழைய சாமானா இங்க என்னா பழைய சாமான் கடையா வெச்சுருக்கேன்..அம்மா சொன்னாங்க நொம்மா சொன்னாங்கனு இன்னொரு தடவ வந்த.. ஹேய் நா உன்கிட்ட தா பேசிட்டு இருக்கேன் பேன்னு பாத்துட்டு இருக்க.. பழசு எதுவும் இல்ல நீ போலாம்"அவளது கண்கள் கிழிந்து சுவரெல்லாம் தொங்கிய ஓவியங்களை நோட்டமிட"உன்ன போவ சொன்னேன்.."இந்த பைத்தியக்காரனிடம் இருந்து தப்பித்தால் போதுமென அவள் ஒரே தாவலாக கதவருகே வர அவனின் ஒரு சொடுக்கில் கதவு படீரென மூடி கொண்டது.கூடை ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தவன் எழுந்து வந்து அந்த கிழிந்து தொங்கிய ஓவியங்களை மென்மையாக தடவ பசை இல்லாமலே அவைகள் அழகாய் சுவரில் ஒட்டி கொண்டன.அவனது கண்களும் ஓவியங்களில் ஒட்டி கொண்டதை போல.

சுகன்யா வேலையாளிடம் மீதம் இருந்த பொருட்களையும் அம்மாதிரியே நெருப்புக்கு தாரை வார்க்க கூறிவிட்டு உள்ளே நுழைய அதுவரை மனக்கஷ்டத்துடன் அவைகளில் நெருப்பில் இட்ட மணி முதலாளி அம்மா உள்ளே சென்ற அடுத்த நொடியே காவலாளியுடன் சேர்ந்து நெருப்புக்குள் புக தயாராக இருந்த பொருட்களை மூட்டை கட்டி கார்ட் ஹவுசில் பதுக்கி வைத்தான்."இன்னா ண்ணே இந்த பொம்பளைக்கு பொருளோட மதிப்பு தெரிலயே.. இதுலாம் இன்னா வெல இருக்கும் அனாமத்தா தூக்கி நெருப்புல போடுது பாரேன் எல்லாம் துட்டு இருக்கினு கொயுப்பு"

"ஆமாடா ஏம்மா எல்லா சாமானும் புதுசாகீதே இத்த போயா நெருப்புல போடுறேன்னு கேட்டா அதெல்லாம் பழசாயிடுச்சி ஒழுங்கா எல்லாத்தயும் தூக்கி உள்ளார போடுன்னு சொல்லுது..நம்மள மாறி இல்லாதபட்டவங்களுக்கு கொடுத்தா இன்னா கொறஞ்சிற போது..நல்ல நாக்காலிடா ஒத்த ஆணி அடிச்சா கம்முனு காலத்துக்கும் கெடக்கும் அத்த போயி வீச சொல்லிருச்சு..உள்ள போயி தொலயும் நாம தூக்கலாம்னு பாத்தா இங்கயே சட்டமா குந்திருச்சு.. இருக்குறதயாச்சும் வேகமா தூக்கு வந்துரு கிந்துர போது".. அவர்களின் ஏழ்மையால் பொருட்கள் தீக்கு டாடா சொல்லி தப்பி சென்றன.

வீட்டின் உள்ளே சுகன்யா செண்பகத்திடம் நாளைய பொங்கலுக்கு வேண்டிய வேலைகளை செய்ய சொல்லி கொண்டிருக்க அந்நேரம் அவரின் கணவன் மகேந்திரனும் மூத்த மகன் ஆருஷும் வர"என்ன சுகி ரொம்ப பிஸியா இருக்க போல..கொஞ்சம் ஆடாம நாங்க நின்னா கூட இது ஏதோ பழையகாலத்து சிலைன்னு சொல்லி தூக்கி நெருப்புல போட சொல்லிருவ போலயே"..

"மகேன் அந்த அளவுக்கா எனக்கு கண்ணு தெரியாம போச்சு.. போதும் உங்க விளயாட்ட நிப்பாட்டுங்க அந்த டெண்டர் விஷயம் என்னாச்சு'

"ஆருஷ் பத்தி தெரியாதா அவன் ஒன்ன நெனச்சு இறங்குனா அந்த காரியம் முடிஞ்ச மாறி தான்.."

"ஆருஷ் பத்தி எனக்கு கவலயே இல்ல..ஆனா நா ரெண்டாவதா பெத்து வெச்சிருக்கேனே அத நெனச்சா தான் எந்த செவுத்துல முட்டிகிறதோ தெரில.. நேத்து ராத்திரி ரூமுக்குள்ள போனவன் இன்னும் இறங்கி வரல.. என்ன பண்றான் ஏது பண்றான்னு ஒன்னும் தெரில. நீங்களும் கேக்க மாட்ரீங்க..இவனும் கண்டுக்க மாட்றான்"

"மாம் இப்ப ஏன் பொலம்பிட்டு இருக்கீங்க.. அவனுக்கு சின்ன வயசுல இருந்தே மேஜிக்ன்னா ரொம்ப புடிக்கும்.. அவன அவன் போக்குலயே விட்ருந்தா பெஸ்ட் மேஜிஷியனா ஆயிருப்பான்.. படிச்ச நீங்களே மேஜிக் பண்ணி தெரு தெருவா கூத்து காட்ட போரியான்னு அவன அடக்கி அவன் அப்டியே ஆயிட்டான். இருபத்தேழு வயசாச்சு இன்னும் ஒரு பொண்ணு கூட அவன திரும்பி பாக்க மாட்டுது.. அவனும் வாய தொறந்து பேசவே காசு கேப்பான் போல.. எல்லாம் உங்களால தான். இப்போ குத்துதே கொடையுதேன்னு இருக்கீங்க"ஆருஷ் காட்டமாக பேசிவிட்டு போக சுகன்யா தன் தவறை உணர்ந்து கொண்டார் ஆயிரத்து நூறாவது முறையாக.

மகேந்திரன் சுகன்யா தொழிலதிபர் குடும்பத்தின் முதல் வாரிசு ஆருஷ் மகேந்திரன் அவனை அடுத்த இரண்டு வருடத்தில் இரண்டாவது வாரிசு நதின் மகேந்திரன்..ஆருஷ் சமத்து பையன் நதினோ சேட்டைகளின் உறைவிடம்.அவனால் தினம் வீட்டில் பொருட்கள் உடையாமல் உயிர் தப்பிப்பதே இல்லை. பயங்கர வாய் வேறு. அவனை அடக்க பெரும் பாடு படும் சுகன்யா அடி வெளுத்து விடுவார். அப்பொழுதும் அதனை தூசியென எண்ணி தட்டி விட்டு அதற்கும் மேலும் சேட்டை செய்வான். அவனின் இம்சை பொறுக்காமல் இரண்டரை வயதில் கிண்டர்கார்டன் சேர்க்க அங்கே ஏபிசிடி கத்து கொள்கிறானோ இல்லையே அந்த வயதிலேயே படித்து கொடுக்கும் டீச்சருக்கு ஐ லவ் யூ சொல்லியது இந்த வாண்டு.

குழந்தையென ஆசிரியை கன்னம் கிள்ளி கொஞ்ச அதன் பிறகு நதினுக்கு ஆண் நண்பர்கள் என்றாலே அலர்ஜி.கோபியர் கொஞ்சும் ரமணாவாக வலம் வந்தான். கடற்கரை பகுதியை ஒட்டிய பங்களா என்பதால் அருகில் மீனவர்கள் வசிக்கும் பகுதி இருந்தது. நதினின் உயிருக்கு உயிரான நண்பன் ஒரு மீனவன். நதினின் பணம் பகட்டு எதையும் பாராமல் அவனை உண்மையாக நேசித்தான் அவன். ஒருமுறை நதின் கடற்கரை ஓரத்தில் விளையாடும் போது அலையால் இழுத்து செல்லப்பட அவனை ஒரு ஜீவன் காப்பாற்றியது. அந்த பாவ பட்ட ஜீவன் தான் நதினின் அடிமையாக உயிர் நண்பன் வருணாக  மாறியது.

நதின் வளர வளர சேட்டை அதிகரிக்க அவனது பத்தாவது வயதில் ஒரு அதிசயம் நடந்தது. தூங்கி எழுந்தவன் தன் உடலில் ஒரு மாற்றத்தை உணர்ந்தான். அவன் கோபத்தில் கை வீசினால் அருகிலிருந்த பொருட்கள் உடைந்து சிதறியது. சொடுக்கிட்டால் வானவில் தோன்றி மறைந்தது.ஸ்பைடர்மேன் போல சூப்பர் பவர் வந்து விட்டதா என்று முதலில் கிறுக்குத்தனமாக எண்ணியவன் அதன் பிறகு யாரிடமும் கூறாமல் அவனே தனிமையில் பயிற்சி செய்ய தொடங்கினான்.

எலியை பூனையாய் மாற்றுவது பெட்டிக்குள் பொருளை வைத்து மறைய வைப்பதில் ஆரம்பித்து பூனையை புலியாக மாற்றும் வித்தையையே அவன் சொந்தமாக கற்று தேர்ந்தான் பன்னிரண்டு வயதில். எப்படி தன்னால் முடிந்தது என்று அவனுக்கே ஆச்சர்யம் ஆனால் குருநாதர் இல்லாத குயில் பாட்டு போல சுயமாக அவனின் உள்ளுணர்வை கொண்டே இந்த மந்திர கலையை கற்றவன் தன் தாயிடம் தான் முதலில் கூறினான்.

மாயாஜால படங்களை பார்த்து உளறுவதாக எண்ணிய சுகன்யா கடுமையாக முறைக்க"மாம் நிஜமா இங்க பாருங்களேன்"என்று தொலைக்காட்சியில் திரையாகி கொண்டிருந்த தார்சானை ஓரே சொடுக்கில் நடு ஹாலிற்கு கொண்டு வர சுகன்யா மயங்கி விழாத குறை ஆருஷ் மிரண்டு விட்டான். நடு ஹாலில் நின்ற தார்சான் புதியவர்களை புது இடத்தை கண்டு  வீடு முழுக்க தாவி, குளிர்சாதன பெட்டியில் இருந்த உணவு வகைகளை கொட்டி கவிழ்த்து, தொலைக்காட்சி பெட்டியில் தன் காட்டை கண்டு அதனுள் புக முடியுமா என்று பார்த்து முடியாமல் போக தொலைக்காட்சி பெட்டியை ஒரே தள்ளாக கீழே தள்ளி உடைக்க, இறுதியாக நடுங்கி கொண்டிருந்த சுகன்யா மண்டைய பிடித்து மாவாட்ட அவர் கதற நிலையின் வீரியம் உணர்ந்த நதின் மீண்டும் ஒரு சொடுக்கில் தார்சனை அவன் காட்டிற்கே அனுப்ப சுகன்யா நெஞ்சை பிடித்து அமர்ந்தே விட்டார்.

"டேய் என்னடா இதெல்லாம் என்ன கண் கட்டி வித்த காட்ரியா நீ.. உண்மயாவே நீ என் பையனா இல்ல ஏதாச்சும் சாத்தனா"

"மாம் இன்னும் நீங்க நம்பலையா இப்போ பாருங்க.. என்கூட வாங்க என்று"சுகன்யாவையும் வரவே மாட்டேன் என அழுத ஆரூஷையும் இழுத்து கொண்டு மாடியில் இருந்த தொலைக்காட்சி அருகே இழுத்து சென்று என்ன படம் வைக்கலாம் என்று அலைவரிசையை மாற்ற சுகன்யாவின் கெட்ட நேரம் கிங் காங் ஒளிபரப்பாகி கொண்டிருக்க அன்னை, அண்ணனை கண்டவன் ஒரே சொடுக்கு தான் அவர்கள் இருவரும் நட்ட நடு காட்டில் தனியாக நிற்க அங்கே காட்டெருமை உருவ டைனசோர் இவர்களை கண்டு துரத்த அம்மாவும் மகனும் ஐயோ அம்மா என்று அலறியடித்து ஓட காட்டெருமை டைனசோர் அவர்கள் மேல் பாய போகும் முன்னே இருவரும் தங்களின் வீட்டில் இருந்தனர் அலறி கொண்டு.

"மாம் டேய் அண்ணா நம்ம வீட்டுக்கு வந்துடிங்க எங்க ஓடிட்டு இருக்கீங்க மாம் நில்லுங்க"டைனசோர் துரத்தும் உணர்வில் ஓடி கொண்டிருந்த இருவரும் நதின் குரல் கேட்டு ஒருவர் மீது ஒருவர் மோதி கொண்டும் முட்டி கொண்டும் நிற்க சுகன்யாவின் பதட்டம் அடங்க நெடுநேரம் ஆனது.. பதட்டம் விலக சிரித்து கொண்டிருந்த நதினை துவைத்து எடுத்து விட்டார்."எப்டிடா இத கத்துக்கிட்ட யாரு கத்து கொடுத்தா சொல்லுடா சொல்லு"

"மாம் ப்ளீஸ் அடிக்காதிங்க எனக்கு யாரும் சொல்லி கொடுக்கல பத்து வயசுல எனக்கு ஏதோ ஃபீல் ஆச்சு அதுக்கு அப்றம் நானே அந்த ஃபீல்லோட இந்த மேஜிக்க காத்துக்கிட்டேன்".அவன் கூறியதை நம்பாமல் இருக்க முடியவில்லை அவரால். பயம் வேறு மனதை கவ்வி கொண்டது. நதின் பிறகும் போதே அவன் ஜாதகத்தை கணித்த குடும்ப ஜோதிடர் பத்து வயதிலிருந்து நதின் விசித்திரமான பழக்க வழக்கங்களை கொண்டு அவனின் இருபத்தேழாவது வயதில் இந்த உலகை விட்டு சென்று விடுவான் என கூறிருந்ததால் சுகன்யா உடல் நடுங்கி போனார்.

சேட்டை செய்தாலும் நதின் அவரின் உயிர் அவனில்லாமல் அவரால் நினைக்க முடியாமல் நெஞ்சம் பதற மயங்கி விழுந்தார். அவர் கண்விழிக்கும் போது தனது கட்டிலில் படுத்திருந்தார். கணவனும் மகன்களும் தன்னை கவலையுடன் நோக்குவதை கண்டு கைநீட்டி நதினை அருகே அழைத்தார். அவன் கரத்தை பற்றி தன் கரத்திற்குள் பொத்தி வைத்து"பேபி இந்த மேஜிக் எல்லாம் உனக்கு வேணாடா. இதனால உனக்கு ஏதாச்சும் ஆபத்து வந்துரும். இத ஒரு கெட்ட கனவா நெனச்சு மறந்துரு. இனிமே கனவுல கூட மேஜிக்க நெனைக்க மாட்டன்னு எனக்கு ப்ரோமிஸ் பண்ணு"

"மாம் ஏன் இப்டி பேசுறீங்க.நா எங்கயும் போய் கத்துக்கல யாரயும் கஷ்டபடுதல தானாவே எனக்கு கெடச்ச பிளெஸ்ஸிங் அது.. எப்டி அத வேணான்னு சொல்றிங்க. எனக்கு மேஜிக் வேணும் இந்த உலகத்தோட பெஸ்ட் மேஜிஷியனா நா வரணும்.."

"வேணா நீ யாருக்கும் பெஸ்ட்ன்னு நிரூபிக்க வேணா பேபி அம்மாவுக்கு குட் பாய்யா நீ இருந்தா போதும்.. ப்ரோமிஸ் பண்ணி கொடு இனிமே மேஜிக் அது இதுன்னு நீ போக மாட்டன்னு"சுகன்யா அவன் முன் கை நீட்டி கேட்க நதின் ஒரு முழு நிமிடம் கண் மூடி திறந்து

"உங்க கூட இருக்குற வர என் மேஜிக் இந்த வீட்ட விட்டு வெளிய போகாது"என்றவன் அதோடு அந்த அறையை விட்டு தன்னறைக்குள் சென்று அடைந்து கொண்டான். அன்று அடைந்து கொண்டவன் தன் மனக் கதவையும் அடைத்து கொண்டான். நண்பனை தவிர யாரிடமும் அளந்து பேசி ஒரு ஒட்டுதல் இல்லாமல் கல்லூரி வாழ்க்கையை படித்து முடித்து ஏனோ தானோவென்று தந்தையின் தொழிலில் பங்கெடுத்து வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

பெண்களை பிடிக்காமல் இல்லை. சொல்லப்போனால் பெண்களை மட்டும் தான் அவனுக்கு பிடித்தது என கூறி விடலாம். வருண் அவளை ஓரங்கட்டினேன் இவ கூட முட்டு சந்துல மூச்சு விடாம கிஸ் அடிச்சேன்.அவள முடிச்சிட்டேன் அப்படி இப்படியென்று வேண்டுமென்றே நதினிடம் கதையளந்து அவனை சூடேற்ற நல்லா இருந்த அவனும் காதலியை தேடி அலையலானான்.

முகநூல் இன்ஸ்டாக்ராம் மூலமாக முயன்று முக்கி முனங்கி குட்டி கரணம் அடித்து அலைபேசி எண் வாங்கி விதவிதமா ஸ்டைலை மாற்றி மொக்க தனமாக காமெடி பண்ணி சிலபேரிடம் டேட் வரை கூட சென்றுள்ளான்.அந்த பெண்களும் இவனின் சேட்டையில் மயங்கி அந்த மூன்று எழுத்தை சொல்லி வெட்கப்பட இவனும் அதை சொல்லத்தான் வாய் திறப்பான் அதற்குள் அவன் வேறு உலகில் வேறு ஆடையில் வேறுவிதமான உடல் மொழியில் அவனுக்கே புதியவனாக தெரிவான்.

"எனை கல்லாய் சமைய செய்து நூறு ஆண்டுகளாக காத்திருக்க வைத்து விட்டும் தமக்கு வேறொருத்தியுடன் சல்லாபம் கேட்க்கிறதோ"

இப்படி ஒரு குரல் அவன் செவியில் விழ ஒருவித மணம் அவன் நாசியில் நுழைந்து மனதை கொன்று உடலெங்கும் ஆக்கிரமிக்க"எனக்கு உன்ன லவ் பண்ற ஐடியா இல்ல"அவன் வாய் தானாக முணுமுணுக்க அந்த பெண் ஓகே சொல்லி சென்று விடும். இவனோ விழித்து கொண்டே காணும் கனவிலிருந்து திடுக்கிட்டு நிகழ்காலத்திற்கு வர அந்த பெண் சென்று ஆறு மாதமாகி இருக்கும்.

இப்படியாக பெண்கள் மத்தியில் இவன் கிறுக்கனாக பிரபலம் ஆக வேறு வழியின்றி நா முரட்டு சிங்கிள் என மன வேதனையுடன் சொல்லி கொள்கிறான்.இத்தனை ஆண்டுகளில் சுகன்யாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக அவனின் மந்திரம் அந்த வீட்டை தாண்டியது இல்லை. ஆனால் அதனை பிறர் முன்னிலையிலும் செய்து காட்ட மாட்டான். அறையில் முடங்கி கிடந்தவனை அழைத்தான் வருண்.

"மச்சி எங்கடா இருக்க..நா இப்போதண்டா கரைக்கு வந்தேன்"

"கடலுக்கு போனியே இப்போயே வந்துட்ட..பன்னெண்டு தான வரேன்னு சொன்ன"

"ஆமா மச்சி திடிர்னு புயல் வந்துருச்சி.ரொம்ப தூரம் போவ முடில. கப்பலுக்கு சேதாரம் ஆவமா கர சேக்கணும்ல அதான் வந்தாச்சு"

"தேவயாடா உனக்கு இந்த பொழப்பு. உசுர பணயம் வெச்சு தேவயா உனக்கு. மூடிட்டு என்கூட வந்து ஆபீஸ்ல வேல பாருன்னா கேக்க மாட்ற. இல்ல தொழில் வெச்சு தரேன்னு சொன்னாலும் கேக்க மாட்ற.. கடல்ல கட்டிக்கிட்டு ஒப்பாரி வெச்சிட்டு இருக்க நாதாரி"

"டேய் நதினு கடலு தான்டா என் உயிரே அத விட்டு வான்னா எப்டிடா..சரி அத்த வுடு. மச்சி நா போயி என் டாவ பாத்துட்டு வரேன். நீ ராவுக்கு வூட்டாண்ட வந்துரு.. அசிங்கமா வெறும் கைய வீசிகிட்டு வந்து தொலச்சிராத.உன் நைனா வாங்கி வெத்தா அடுக்கி வெச்சிருக்கிற  வெளிநாட்டு சரக்க தூக்கிட்டு வா. அன்னிக்கு கொடுத்தியே மச்சி அந்த சரக்கு இன்னாமா இருந்துச்சு மச்சி அது. பாட்டிலே சன்னி லியோன் ஸ்ட்ரச்சர் மாறி இருந்துச்சிடா"

"சரக்கு மியா கலிஃபா மாறி இருந்துச்சா பக்கிபயலே"

"ஹீஹீஹீ ஆமா மச்சி சரக்கு சொல்லாத வேற லெவல் போ"

"மூதேவி குடிச்சே சாவ போற நீ”என்று காரி துப்பி விட்டு அழைப்பை துண்டித்தான் நதின்..

தொடரும்.


Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்