31 நெருங்கினா(ள்)ல்?


தாமதத்திற்கு மன்னிக்கவும்.. சென்ற பதிவிற்கு விமர்சனம் அளித்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி.கூடிய விரைவில் பதில் அளிக்கிறேன்.. 😘

ஆவுடையப்பனும் ஆறு மருமகன்களும் என்ற தலைப்பில் இப்பொழுது ஒரு திரைப்படமே எடுக்கலாம். அந்த அளவிற்கு அங்கே கூத்து நடந்துக் கொண்டிருந்தது. ஆவுடை ஒரு பக்கம் குண்டலக்கேசியை நினைத்து சோகத்தில் இருக்க மறுபக்கம் அவரின் மற்ற பெண்கள் படும் பாடும் கண் முன்னே தெரிய பாவம் மனிதர் நொந்து விட்டார்.

ஒவ்வொரு மருமகனும் ஒவ்வொரு தினுசில் இருந்தார்கள்.அவர்கள் யார்?  எதற்காக இங்கே கொண்டுவரப்பட்டனர்?  அவர்களின் எதிர்காலம் என்னாவது? குழந்தைகளின் படிப்பு? இப்படி எதைப் பற்றியும் யோசிக்காமல் அந்த ஆறு பேரும் திடீர் புதையல் போல கிடைத்த இந்த கட்டாய ஓய்வையும் வசதியையும் நன்கு பழகிக் கொண்டனர்.

என்னவோ இவர்கள் சொந்த வீடு போல சமையல் செய்யும் ஆளிடம் ஆமை குஞ்சை பொரித்து வா..மாட்டு சூப் செய்து வா.. ஆட்டுத் தலையை சுட்டு கொண்டு வா.. முயலை வறுத்து எடுத்து வா என எந்த விலங்கை டிஸ்கவரி சேனலில் பார்க்கிறார்களோ அந்த விலங்கை சமைத்து தரச்சொல்லி அலப்பரை செய்து கொண்டிருந்தார்கள்.. சமையல்காரர்  எவ்வளவோ நல்ல விதமாக சொல்லிதான் பார்த்தார். கோழி ஆடு மீன் இறால் கனவாய் இதெல்லாம் செய்து தரலாம். ஆனால் ஆமை குஞ்சுக்கு தான் எங்கே செல்வேன் என்று.. அது என்னவோ ஒரு பெரிய குற்றம் போல வைரமுத்து

"தோ பாரு சமையலு.. நாங்க பொண்ணு வீட்டுக்காரங்க.. எங்கள நீங்க ஒழுங்கா கவனிச்சாகனும்..  பொண்ணு கொடுத்திருக்கோம்யா நாங்க.. ஒரு மட்டு மறுவாத வேணா நான் கேக்குறேன்.. என்னயா சம்மந்தி வீட்டு காரங்கள கவனிக்குறீங்க நீங்க? நாங்க எங்க வீட்டு பொண்ண எப்படியெல்லாம் பாத்துக்கிட்டோம் தெரியுமா.. பொழுதுக்கு ஒரு தீனி போட்டு முரட்டு தனமா வளத்து விட்ருக்கோம்யா எங்க கொழுந்தியால..

என்ன, என்ன அப்டி பாக்குற.. நம்ப முடியலையாக்கும்.. அவள நேர்ல பாத்துருந்தா மெரண்டு போயிருவ.. என்னையும் உன்னயும் கம்மு போட்டு ஒட்டி வெச்சாப்புல இருப்பா பல்க்கா..எல்லாம் அவ அப்பன் வாங்கி போட்ட தீனினு நெனச்சியோ.. அவ அக்காளுங்கள கட்டுன பாவத்துக்கு நாங்க மருமவனுங்க ஆறு பேரும் அந்த வீட்டுக்கு வாங்கி போடுற செலவு சாமானுங்கயா"..

"எண்ணே விடுண்ணே.. அந்தாளு கிட்ட என்னத்த மூச்ச புடிச்சி பேசிட்டு கெடக்க.. நம்ம காசுல திங்குறுத்துங்களே நம்மள பாத்தா முறுக்கிட்டு தெரியுதுங்க.. அந்தா படுத்துக் கிட்டு பம்பரக் கண்ணால பாட்டு கேக்குதே வாத்தி அந்தாளுக்கு எவ்ளோ செய்ஞ்சிருப்போம்.. என்னைக்காச்சும் ஒரு கறி சோறு போட்டுருக்குமா சொல்லு.. எப்ப பாரு சாம்பாரு கத்திரிக்கா கூட்டு, இல்ல வெஜிடபிள் குர்மா வருத்த உருளக் கிழங்கு.. இது என்ன உலகத்துல கிடைக்காத அதிசய சாப்பாடா.. எப்ப பாரு இது தான்..நான் மறு வீட்டுக்கு போனப்போ தினமும் இதையே போட்டு சாவுடிச்சாங்க.."வாசு தன் பங்கிற்கு ராகம் போட்டான்.

"இங்க மட்டும் என்ன வாழுதாம்..  உனக்காச்சும் வெஜிடபிள் குருமா.. எனக்கு மொளகு ரசம் மோர் மொளகா கொடுத்தாளுங்க.. இந்த கொடுமைய எங்க போய் நான் சொல்ல.. மாமனார் வீட்டு மானம் போயிரக் கூடாதுன்னு நான் என் சொந்த கைக் காசைப் போட்டு கறி வாங்கி இதுங்களுக்கு சமைச்சுப் போட சொன்னேன் என் பொண்டாட்டிய..".. என்றான் கோவலன்..

இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டபடியே சமையல்காரர் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருக்க இவ்வளவு நேரம் அனைத்து கூத்தையும் அங்கே ஓரமாக நின்று பார்த்துக் கொண்டிருந்த  ஆறு பேரின் மனைவிமார்களும் புடவையை தூக்கி இடுப்பில் சொருகி கொண்டு வேகமாக நடந்து வந்து நின்றனர். அவர்கள் கண்களில் மிதமிஞ்சிய வெறுப்பு.விட்டால் ஓங்கி அடித்தால் ஒன்றை டன் வெயிட் பாக்கறியா பாக்கறியா என சிங்கம் சூர்யா போல தங்கள் கணவர்களை மிதி மிதி என மிதித்து விடுவார்கள் போல.

சமையல்காரர் பேந்த விழித்துக் கொண்டிருக்கும் போதே"அண்ணே நீங்க எதுக்கு இந்த வெட்டி முண்டங்க பேச்ச கேட்டு இப்படி நின்னுட்டு இருக்கீங்க.."

" இல்லமா உன் புருஷந்தான் ஆம குஞ்சு வேணும்.. கொட்ட வேணும்னு என் தாலிய அறுக்குறான்"..

"எதே கொட்டயா.."

"அது ஒரு ஃபோல வந்துருச்சு தம்பி..சரி சட்டுனு சொல்லுங்க உங்களுக்கு என்ன வேணும் சாப்பிட"

"அண்ணே.. கஞ்சி வைங்கண்ணே"என்றாள் மாதவி..

"ஹேய் என்னடி கஞ்சி வைக்க சொல்ற..என்னவோ உன் அப்பன் வாங்கி இங்க ரொப்புன மாறி ஆடுற..எவனோ வம்படியா உன் தங்கச்சி குந்தாணிய லவட்டிட்டு போயி நம்மள ஒக்கார வெச்சு மாமனார் வீட்டு முறை செய்யுறான்.. அதுக்கு நீ கெடந்து துள்ற.. யோவ் சமையலு நீ என்ன பண்ற.. சகல வஞ்சனை மீன குழம்பு வெச்சு நாட்டுக் கோழிய பொரிச்சா செமயா இருக்கும்ல"..

"ஆமாய்யா.. அதையே பண்ண சொல்லு"வாசு சொல்ல சமையல்க்காரர் அற்பப் புழுக்களை பார்ப்பது போல அவர்களை பார்த்து விட்டுச் சென்றார். அவர் தலை மறைந்ததும்

கண்ணகி கடும் கோபத்தோடு"ஏங்க உங்களுக்கு எல்லாம் நல்ல சாவு வருமா..  உங்க வாயில புத்து வச்சு தான் சாக போறீங்க.. உங்க எல்லாருக்கும் மறு விருந்து வைக்க என் அப்பா எவளோ கடன் வாங்குனாருனு தெரியுமா.. நல்லா மனசாட்சியே இல்லாம மாமனார் வீட்டுல ஒக்காந்து மூக்கு பிடிக்க மூனு வேளைக்கு ஆறு வேளையா கறி மீனு காட கவுதாரினு இம்சை பண்ணி புடிங்கி தின்னுட்டு வாய் கூசாம இப்டி புளுகுறீங்க"

"அதானே.. இந்த அழகுல இதுங்க நம்ம வீட்டுக்கு வாங்கி போடுச்சீங்கலாம்.. தம்புடி காசுக்கு பிரயோஜனம் இல்ல.. ஒரு வாய் ஊறுகாய கூட வாங்கி கொடுக்க துப்பில்ல. பேச்சு மட்டும் மங்கோலியா வரைக்கும் நீளுது.." மாதவி தன்னுடைய கணவனோடு சேர்ந்து சகோதரிகளின் கணவன்மார்களையும் கிழித்து எடுக்க

"ஏய் என்னடி விட்டா பேசிட்டு போற..உன்ன இன்னைக்கு"கோவலன் திடீரென்று ஆவேசமாகி மாதவியை அடிக்க வர அதற்குள் அவனின் கையை  பிடித்திருந்தார் ஆவுடையப்பன்.

தன் முன்னால் குரலை உயர்த்தி கூட பேசாத மாமனார்,இவ்வளவு நேரம் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே என்ற பாடல் உள்ளே மூழ்கி கொண்டிருந்த மாமனார் , இப்பொழுது தன் கையை பிடித்து இருக்கிறாரா..  கோவலன் ஆச்சரியமாக அவரை பார்த்துக் கொண்டிருக்க மாதவி தன் தந்தையை கண்டதும் வேகமாக கேவி அழுதாள்.

"ப்பா பாருங்கப்பா நம்ம குடும்பத்த பத்தி எவ்ளோ கேவலமா பேசுறாங்க.  எவனோ ஒருத்தன் தங்கச்சிய தூக்கிட்டு போய்  என்ன பண்றானே தெரியல.. இங்க இதுங்களுக்கு ஆமை குஞ்சு வேணும்  கோழி குஞ்சு வேணும்னு அதிகாரம் தூள் பறக்குது..அவன் நம்மள பத்தி எவ்ளோ கேவலமா நெனைப்பான்.. பசங்கள வேற படிக்க வைக்கிறேன்னு சொல்லி எங்கயோ தூக்கிட்டு போயிட்டான்..அதைப் பத்தி எல்லாம் ஒரு துளி கூட கவலை இல்ல.. எப்ப பாரு திங்கனும் திங்கனும் திங்கனும்."

ஆம் திடீரென்று ஒருநாள் முகமூடி அணிந்த இருவர் வந்து குழந்தைகள் அனைவரையும் எங்கள் முதலாளி படிக்க வைக்க ஹாஸ்டலில் சேர்க்கப் போவதாகக் கூறி இவர்கள் வேண்டாம் என்று தடுத்தும் கேளாமல் தூக்கிக் கொண்டு சென்று விட்டனர்.  பால் குடிக்கும் பிள்ளைகளை தவிர பள்ளி செல்லும் பிள்ளைகளை அழைத்துச் சென்றனர் அவர்கள். அப்பாவும் பெண்களும் மட்டுமே மட்டுமே வேண்டாம் என்று தடுத்தனரே அப்பொழுது கூட ஆறு மருமகன்களும் எங்கே இப்பொழுது கிடைத்திருக்கும் சொகுசு வாழ்கை வீணாகி விடுமோ என்று பயந்து வாயைத் திறக்கவில்லை.

" எவனோ ஒரு புண்ணியவான் நம்ம பிள்ளைகளை படிக்க வைச்சி ஆளாக்கனுன்னு ஆசைப்படுறான்.. அவன் ஆசயில்ல ஏன் நாம மண்ணள்ளி போடணும்.. அதெல்லாம் அவன் நல்லாத்தான் பாத்துக்குவான்".. இப்படியாக பெற்ற பாசம் இல்லாமல் தன் கடமை சல்லி பைசா செலவில்லாமல் முடிந்து விட்டதை எண்ணி அவர்களுக்கு கொண்டாட்டம் தான்.

எந்த வேலையும் செய்யாமல் நேரத்திற்கு உண்டு உறங்கி மாமனார் பற்றியும் தங்கள் மனைவிகளை பற்றியும் வாய் ஓயாமல் குறை சொல்லிப் புறம் பேசித் நாட்களை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளும் ஆவுடை இன்று தனது விருந்தோம்பலை பற்றி குறைவாக அதுவும் இன்னொரு ஆளிடம் மருமகன் கூறியதைப் பற்றி கேட்டு அவரின் ரத்தம் கொதித்தது. அதிலும் மாதவி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் அவளை அடிக்க போகவும்  வேகமாக எழுந்து வந்து மருமகன் கையை பிடித்து விட்டார்.

"வேணா மாப்ள நீங்க செய்யறது சரில்லை.. நானே என் பொண்ணு எங்க போனான்னு தெரியாம வேதனையில துடிச்சிட்டு இருக்கேன்.. உங்களுக்கு அவ கொழுந்தியா..  எத்தன தடவை அந்த சின்ன பொண்ணு உங்க நாசமா போன பணத்தாசைக்கு ஊர சுத்தி வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்துருப்பா..ஆ ஊனா இங்க வந்து ஒக்காந்து அதிகாரம் பண்ணி கொட்டிக்குவீங்களே அப்டி தின்ன வாய் இன்னைக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம பேசுதே.. நீங்கலாம் மனுஷ ஜென்மம் தானா..

உங்க கூட என் பொண்ணு வாழணுமா.. எம்மா மாதவி வேணாம் டா.. உனக்கு மட்டும் இல்ல.நான் பெத்த பொண்ணுங்க உங்க எல்லோருக்கும் தான் சொல்றேன்.. இவனுங்க எல்லாம் மனுஷனுங்களே இல்ல.. சுயநல பிசாசுங்க.. அம்மாடி கன்னுங்களா அப்பா சொல்றேன்.. இவனுங்க கட்டுன தாலிய அறுத்து அவனுங்க மூஞ்சில உட்டு அடிங்கம்மா. நான் கண்ண மூடுற வரைக்கும் உங்களுக்கு சோறு போட இந்த உடம்புல தெம்பு இருக்கு..

ஏதோ பெரிய படிப்பு படிக்க வைக்க முடியாட்டியும் உங்க எல்லோரையும் நாலு எழுத்து படிக்க வெச்சிருக்கேன்.. என் கட்ட சாஞ்சா கூட அத வெச்சு பொழச்சுக்கோங்க.. ஆனா இவனுங்கள மட்டும் நம்பிராதீங்கம்மா.. உங்கள ராவோட ராவா வித்துடுவானுங்க".

தினம் தினம் மருமகன்கள் செய்யும் கூத்தை கண்டு மனதிற்குள் வேதனை கொண்டிருந்த ஆவுடை இன்று பொறுக்க முடியாமல் அடைத்துக் கிடந்ததை எல்லாம் வெளியே கொட்டி விட அதனைக் கேட்ட மகள்கள் ஆடிப் போனார்களோ இல்லையோ மருமகன்கள் ஆடிப் போய் விட்டார்கள்.

கண்ணகியின் கணவன் வைரமுத்து"யோவ் பெருசு மாமனாராச்சேன்னு மறுவாதி கொடுத்தா நீ எங்க வாழ்க்கையிலேயே குண்டு வைக்க பாக்கறியா.. உன் பொண்ணுங்க பெரிய ரதி தேவிங்க..நாங்க காலம் முழுக்க அவளுங்க கால கழுவி குடிக்க.. காக் காசுக்கு வக்கில்லாத தரித்திர புடிச்ச மூதேவிங்க. இதுங்களுக்கு நாங்க தாலி கட்டி புள்ள வரம் கொடுத்ததே பெருசு.. இல்லனு வெச்சிக்கோ காலம் முழுக்க இதுங்க கன்னி கழியாம செத்து தொலைஞ்சிருக்குங்க"

வாசு "அப்டி சொல்லு சகல..பொட்டி பொட்டியா வரதட்ச்சனை கொடுக்குறவன் கூட மூடிட்டு இருக்கான்.. பெருசுக்கு வாய பாத்தியா.. இதுங்களுக்கே இப்படின்னா.. அங்க அந்த குண்டச்சிய தூக்கிட்டு போயிருக்கானே அவனுக்கு என்னா  ஒரு மட்டமான ரசன பாரேன்.. போயும் போயும் இவ்ளோ பெரிய பணக்காரனுக்கு புத்தி போது பாரு. நான் நெனைக்குறேன்.. அவனும் இந்த ஆளு மாறி கிழடு கட்டயா இருப்பான் போல.. அதான் வேற எவளும் கிடைக்காம இவள தூக்கிருக்கான்.."

"மாப்ள"

சைத்தான்யா "யோவ் எதுக்கு சவுண்ட்டு விடுற..உண்மை அதானே.. ஆம குஞ்சி மீனு குஞ்சினு நாங்க திங்குறது இருக்கட்டும்.. நீயும் தான அவன் காசுல திங்குற.. என்ன மூந்தா பாக்குற.. அப்ப என்ன அர்த்தம் இதுக்கு.. மகள கூட்டி கொடுத்து"... கோப்பெருந்தேவி அவன் வார்த்தையை முடிக்கும் முன்னரே தன் தந்தையை இவ்வளவு கேவலமாக பேசிய அவனை ஓங்கி அறைந்து இருந்தாள்.

ஆனால் அதற்குள் நேரம் தாழ்ந்து விட்டது..  தன் மருமகன்களின் விஷம் தடவிய அம்புகளின் தாக்குதலால் ஆவுடையப்பன் உள்ளம் ரணப் பட்டு நெஞ்சை பிடித்தபடி கீழே சாய்ந்தார்..  பெண்களின் கதறல் சத்தம் கேட்டு வீட்டின் வெளியே காவல் காத்துக் கொண்டிருந்த முகமூடிகள் ஓடி வர நிலையின் வீரியம் புரிந்து வேகமாக சென்று ஒரு மருத்துவரை அழைத்து வந்தனர். 

அந்த மருத்துவர் இங்கே வைத்து வைத்தியம் பார்க்க முடியாது என கூறிவிட உடனே வந்தியதேவனுக்கு அழைத்து விஷயத்தைக் கூற அந்தப் பக்கம் அவன் என்ன சொன்னானோ நான்கு முக மூடிகள் மட்டும் இவர்களுக்கு காவலிருக்க மற்ற மூவர் ஆவுடையப்பனை வண்டியில் போட்டுக் கொண்டு அந்த மருத்துவரோடு மருத்துவமனைக்கு சென்றனர்.


Comments

  1. Super... Namma hero vanthu ivangla naalu saathu saathunatha buthi varum

    ReplyDelete
  2. Chiii.. ithungallam manusa jenmame illa.. Nalla varuthu vaaila.. 😡😡

    VD..... Inga vandhu ivanungala naalu mithi mithichittu poyaen.. unaku punniyama povum 🤧🤧

    ReplyDelete
  3. Nanri ketta nayenga 😠😠😠 super super 👌👌👌

    ReplyDelete
  4. Super arumai Ada pavikala ippadiyum manusanga irukkanga pa ennatha solla

    ReplyDelete
  5. Avudai sonnadhu correct dha ipdi patta purushan thevaiye ila thooki pottutu poite irunga ellarum ipdi kastapattu vazhanuma enna cha

    ReplyDelete
  6. அருமையாக இருந்தது சிஸ்டர்,இன்னும் இந்த மாபிள்ளை கெத்து குறையாமல் சில ஜென்மங்கள் வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறது,😳😳😳😳😳🥺🥺🥺🥺👌👌👌👌👌👌👌👌👌நிலா

    ReplyDelete
  7. 👌👌👌👌👌👌👌

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்