அதரா 4 and 5



அதரா - 4

நதின் தண்ணீருக்குள் குதித்ததை அறிந்த வருண் அவனும் குதிக்க நீருக்கடியில் கும்மிருட்டில் நதினை தேடி கலைத்து மூச்சு திணறி நண்பனை இழந்து விட்டோம் இனி உயிர் வாழ ஒன்றுமில்லை என முடிவுடன் மயங்கி சரிய அவனை ஒரு சக்தி இழுத்து சென்றது.அதே சக்தி தான் நதினையும் இழுத்து சென்று இருவரையும் ஓரிடத்தில் கொண்டு வந்து சேர்க்க அங்கே அதரா அதரா என்ற குரல் மட்டுமே கேட்டது..

நீண்டதொரு பயணம் அவர்களால் அதனை உணர முடிந்தது..ஆனால் கண்விழித்து சுற்றி நடப்பதை காண இயலவில்லை.அக கண்கள் திறந்து கொள்ள ஓரளவு உடலால் உணர முடிந்தது.உணர முடிந்த அளவில் அவர்கள் நீரின் பிரவாகத்தின் சக்தியில் எங்கேயோ இழுத்து செல்லப்பட்டு கொண்டிருக்கிறார்கள். முதலில் குளிர்ந்த தண்ணீர் பின் உடலை வேக செய்யும் வெந்நீர் பின் கரடு முரடான பாதையில் சுழன்று சுழன்று சென்று எதன் மீதோ விழ அது அவர்களை தாங்கி கொண்டு நீந்தியது..

அவை ராட்சச ஜெல்லி மீன்கள். ஆனால் நீல நிறத்தில். அவற்றின் தலையில் சுமந்து செல்லப்பட்டவர்களை நீரின் பிரவாகம் அதிகரிக்கும் போது ஜெல்லி மீன்கள் தன்னுடைய கால்களால் சுற்றி பிணைக்க நீண்ட பயணமாக தோன்றியது ஒரு சில வினாடிகளில் முடிந்து போனது.இப்பொழுது அவர்களின் உள்ளுணர்வு நீருக்கு மேலே வந்ததை போல சில்லின்ற காற்றில் தேகம் சிலிர்க்க ஜெல்லி மீன்களின் கால்களால் சுற்றப்பட்டிருந்த அவர்கள் உடலில் பல இடங்களில் மீனின் கொடுக்குகளின் கீறல்கள்.

ஜெல்லி மீன்களின் கொடுக்குகளில் இருந்து நீல நிற மினுமினுக்கும் துகள்கள் வெளிப்பட்டது.. அந்த துகள்கள் நதின் வருண் இருவரின் மேனியிலும் சுற்றி வர அவர்களது தளும்புகள் மறைய தொடங்கி இதுவரை இருந்து வந்த அரை குறை மயக்க நிலை மாறி முழு மயக்க நிலைக்கு தள்ளப்பட்டனர். ஜெல்லி மீன்கள் தங்களது தலையின் மேல் மயங்கிய அவர்களை கொண்டு வந்து ஒரே எம்பாக எம்ப அவர்கள் இருவருமே கடலில் இருந்து கரைக்கு தூக்கி வீசப்பட்டனர்.

எங்கே விழுந்தனர் என்ன ஆனார்கள் என்று எதுவும் புரியாத நிலை..வெகு நேரமாக அப்படி கிடந்தவர்கள் முகத்தில் நீரை அள்ளி ஊற்ற அரை குறையாக மயக்கம் தெளிந்து கண் விழித்தான் நதின். மெல்லமாக கண்களை மூடி மூடி திறக்க கோடாகிய கண்களில் அவனுக்கு முன்பாக நின்ற உருவம்தனை கண்டவன் பட்டென்று கண்விழிக்க அங்கே ஆப்பிரிக்க யானை போல நீண்ட தந்தங்களை கொண்ட வெள்ளை யானை.அதன் ராட்சத தோற்றத்தை கண்டு எழுந்து அமர்ந்த நதின் பயத்தில் வெலவெலத்து போனான்.

அவனின் கண்கள் வெள்ளை யானையையும் மீறி சுற்றுப்புறத்தை ஆராய்ந்தது. பளிங்கு போன்ற நீல கடலும் முகில்கள் காற்றில் மிதந்து கதை பேசும் வானமும் கடற்கரையின் பொன் மணலும் மட்டுமே அவனுக்கு காட்சி அளித்தது.சற்று தள்ளி மணலோடு மணலாக கிடந்தான் வருண். "மச்சி"என்று கூவிய நதின் வருணை நோக்கி எழுந்து ஓடி குப்புற வீழ்ந்து கிடந்தவனை நிமிர்த்தி முதல் வேலையாக மூச்சு உள்ளதா என நடுங்கிய விரலை மூக்கின் அருகே கொண்டு சென்றான்.

சுவாசம் சீராக வந்ததும் வருணின் கன்னத்தை தட்டி அவன் விழிக்காமல் போக ஓடி சென்று கடல் தன் மேல் சட்டையை கழற்றி அதை கடல் நீரில் நனைத்து கொண்டு வந்து வருணின் முகத்தில் பிழிய நீர் பட்டு மெல்ல முனகினான் வருண். அவனின் கன்னத்தை வேகமாக அடித்து"மச்சி கண்ண தொரடா வருணு டேய் வருணு"நதினின் குரல் வருண் செவிகளில் விழ மெல்லமாக கண்விழித்தவன் விழிகள் தெறித்து விடுவதை போல திறந்து கொள்ள அவன் பார்வை சென்ற திசையாக தன் பின்னே திரும்பி பார்த்தான் நதின்.

வெள்ளை யானை தலை சாய்த்து அவர்களை பார்த்து கொண்டு நதின் பின்னால் நின்றிருந்தது.."மச்சி இன்னடா யான வெள்ளயா இருக்கு நாம எங்கடா இருக்கோம்"என்ற வருணுக்கு நேற்றைய நிகழ்வு நினைவுக்கு வந்து"டேய் ஆமா நேத்து ஏண்டா கடல்ல குதிச்ச மூதேவி.. உன்ன காணலங்காட்டி நானும் குதிச்சி அதோட எங்கேயோ தண்ணில அடிச்சின்னு போயி இப்போ எங்கடா இருக்கோம்.. உசுரோட இருக்குமா இல்ல செத்துட்டோமா"

வருண் சொன்னது மட்டுமே தான் நதினுக்கும் நினைவு இருக்க அவன் என்னத்தை சொல்லுவான். வெள்ளை யானை வேறு ஒரு டைப்பாக இவர்களை பார்க்க"டேய் நாம சாகல கடல்ல வுழுந்து எங்கேயோ கர ஒதுங்கிருக்கோம் மெர்சலாவாத வா அப்டியே நடந்து போய் யாராச்சும் ஆளுங்க இருக்காங்களான்னு பாக்கலாம்"

"வெள்ள யான ஆப்பிரிக்கால இருக்கும்னு கேள்வி தா பட்டிருக்கேன் ஒருவேள நாமளும் ஆப்பிரிக்கா வந்துடுமா"

"ஏற்கனவே கண்ணு இருட்டிகினு வருது சும்மா மொக்க போடாத வந்துரு"நதின் எழுந்து வருணுக்கு கை கொடுக்க தன் நண்பன் உயிரோடு இருக்கிறான் என்ற மகிழ்ச்சியே வருணின் மனதை நிறைத்து இருந்தது.இருவரும் இரண்டடி மட்டுமே நடக்க அவர்களை அப்படியே பின்னாடியிருந்து வளைத்து தன் தும்பிக்கையால் தூக்கியது வெள்ளை யானை. இருவருமே ஐயோ அம்மா என்று அலற அவர்களின் அலறலை அலட்சியப்படுத்திய யானை எங்கேயோ ஓடியது..

"ஐயையோ மச்சி இன்னாடா யான தூக்கிட்டு போது"

"ஹேய் எங்கள எறக்கி விட்ரு ஹேய் சு சு.. ஹேய் இந்தா யான'

"ஆமா இம்மா பெரிய யான உன் கண்ணுக்கு பூன கணக்கா இருக்கா முண்டம்.. சு சுன்னு பூனய வெரடுற மாறி வெரடுற"

"எப்பா கணேஷா உனக்கு ஒரு தேங்கா ஒடைக்குறேன் கூடவே ஒரு வாழ பழம் தரேன் எங்கள எறக்கி விட்ரு கணேஷா"

"நதினு நீயெல்லாம் ஒரு கோடிஸ்வரன்னு வெளிய சொல்லிராதடா..ஒத்த தேங்காவுல ஒடச்சிடியேடா உன் உசுர நீயெல்லாம் த்து" இருவரும் மாறி மாறி யானையிடம் கெஞ்சி கொண்டிருக்க அதுவோ எதையும் செவிமடுக்காமல் பெரிய காதை ஆட்டிக்கொண்டு அவர்களை எங்கேயோ தூக்கி சென்றது. கடற்கரையில் கரை எல்லை வரையும் நடந்த யானை அதன் பிறகு அடர்ந்த காட்டுக்குள் ஓட தொடங்கியது. யானையிடம் இருந்து விடுபட இவர்களும் எவ்வளவு போராட தும்பிக்கையின் பிடி அழுத்தமாக இருந்தது..

 காட்டு இலைகள் முகத்தில் அடிக்க இருவரின் தலையும் தொங்கி விட்டது. மதம் பிடித்த யானை போல் அது ஓடிக் கொண்டே இருக்க எப்படியும் இனி உயிரோடு தான் இருக்க போவதில்லை என்று முடிவெடுத்து விட்டனர் இருவரும். ஒரு கட்டத்தில் மீண்டும் மயக்க நிலைக்கு அவர்கள் செல்வதற்குள் யானை அவர்களை திடீரென கீழே போட்டது.

 இருவரும் அலறியடித்துக் கொண்டு தலையை உலுக்கி மயக்கத்தை விரட்டி சுற்றிலும் அந்த வனத்தை பார்க்க யானை குன்றுபோல் காட்டு இலைகளாலும் மண்ணாளும் சூழப்பட்ட ஒன்றினை காடே அதிரும் பிளிறலுடன் தனது தந்தத்தால் ஒரே குத்தாக குத்தியது. மீண்டும் மீண்டும் அது அந்த குன்றை குத்தி எதையோ அவர்களுக்கு காட்ட முயன்றது. "மச்சி யானைக்கு வெறி பிடிச்சிருச்சுடா.. அதான் மண்ணள்ளி மண்டயில போட்டுட்டு இருக்கு பாரு"

" எருமை அது வெறி இல்ல மதம்.. அது ஒன்னும் மண்ணள்ளி மண்டயில போடல. அந்த மலய உடைக்க பாக்குது.. "

"அந்த மலய ஒடைகிறதுன்னா அது ஒண்டியா வந்து ஒடைக்க வேண்டிதானே.. நம்மள எதுக்குடா தூக்கிட்டு வந்துச்சு.. நாம பாட்டுக்கு அக்கடான்னு அங்க தான விழுந்து கிடந்தோம்" நதின் வருணை ஓங்கி ஒரு மிதி மிதித்து விட்டு

" என்ன பாக்க உனக்கு யான பாஷ பேசுற மாதிரி இருக்கா.. என் கிட்ட கேட்டுட்டு இருக்க.. அது அங்கதானே எதயோ குத்திக்கிட்டு இருக்கு அது கிட்ட போய் கேளு"

"யான கிட்ட என்ன கோத்து விட்டு நீ தப்பிக்கலாம்னு பாக்குறியா கொன்றுவேன் உன்ன.. மச்சி அங்க பாரேன் அந்த யான உன்னயே அச்சு பாக்குது" வருண் பீதியுடன் சொல்ல நதின் அந்த யானையை திரும்பி பார்த்தான். அவனையே தான் பார்த்து கொண்டிருந்தது. ஆனால் அந்த பார்வையில் அவனுக்காக ஏதோ ஒரு செய்தி இருந்தது.அவன் புரியாமல் அந்த யானையையே பார்த்து கொண்டிருக்க அவனருகில் மெதுவாக அசைந்து அசைந்து வர

"மச்சி டேய் யான ரிவர்ஸ் கியர் போட்டு நம்மல பாத்து வருதுடா வாடா ஓடிறலாம் நதினு"..வருணின் குரல் நதினுக்கு கேட்கவே இல்லை. யானை அருகில் வந்து ஒரு முறை செவி அதிர பிளிறி விட்டு

"வேந்தே எதற்காக என்னையே வெறித்து கொண்டு நிற்கிறீர்கள் பாவம் கடற்கன்னி ஈரைம்பது ஆண்டுகளாக உங்களின் வரவை எதிர்நோக்கி காத்து கொண்டிருக்கிறார்.

அவரை இந்நிலைக்கு ஆளாக்கிய தங்களால் மட்டுமே அவரின் இந்நிலையை மாற்றிட இயலும்"

நதினுக்கும் வருணுக்கும் இதயம் தொண்டையில் வந்து துடித்தது. இதுவரை அவர்கள் கேட்டது யானையின் குரலா.. யானை பேசுகிறதா.. யானையால் பேச முடியுமா. அவர்கள் கேட்டது உண்மையா இல்லை மன பிரம்மையா"

"வருணு அந்த யான பேசுனுசா மச்சி"

"உனக்கும் கேட்டுச்சா மச்சி"

"அப்போ யான பேசுனது உண்மதா.. ஆனா இது எப்டிடா"

"வேந்தே தாங்கள் எதனால் குழம்பி நிற்கிறீர்கள்.. தாங்கள் நினைப்பது போல இது உங்களது பூமி அல்ல.. இது அதராவாகும்.."

"என்ன எங்க பூமி இல்லயா டேய் நதினு இன்னாடா யான பேஜார் பண்ணிட்டு இருக்கு.. அப்போ நாம செத்துட்டோமா".. வருணின் பதற்றம் நதினுக்கு இல்லை. ஏதோ ஒன்று அவனை யோசிக்க விடாமல் செய்தது. துரத்தில் கடலின் இரைச்சல் வானத்தில் பட்சிகளின் கீதங்கள் வனத்தில் பெயரறியா ஜந்துக்களின் ஒலி இப்படி எதுவும் அவன் செவியில் எட்டவில்லை ஒன்றே ஒன்றை தவிர அது ஒரு இதய துடிப்பின் லப் டப் லப் டப் என்று ஓசை.

வருண் ஏதேதோ பேசிக்கொண்டிருக்க நதின் ஒன்றுமே பேசாமல் அந்த இதய துடிப்பின் அருகே சென்றான்..

 லப் டப் லப் டப்

"மச்சி எங்கடா போற"

"உனக்கு கேக்குதா மச்சி"

"இன்னா"

"லப் டப் லப் டப்"

"மச்சி உனக்கு கிறுக்கு புடிச்சிருச்சுடா ஐயோ அத்துவான காட்டுக்குள்ள உன்ன வெச்சு இன்னா பண்ணுவேன் நானு"

"ஸ்ஸ்ஸ்ஸ்"நதின் அந்த குன்றின் அருகே சென்றான். அதன் உள்ளிருந்து தான் இதயத்தின் துடிப்பு கேட்டது. ஒரு நிமிடம் அது அவனின் துடிப்பாக மாறி தாறுமாறாக அவனை அலைக்கழித்து பின் மெதுவாக கரத்தை அந்த குன்றின் மேல் வைத்தான். யானை கனமான தந்ததால் முட்டிய போதும் அசராத குன்று நதினின் கை பட்டதும் லேசாக அதிர்ந்து விரிசல் விட்டு இரண்டாக பிளந்தது.

இரண்டாக பிளந்த நொடி உள்ளிருந்து பெரும் ஒளி உண்டாயிற்று அந்த ஒளியை தொடர்ந்து குன்றின் உள்ளே இருந்தது கடற்கன்னி ஒருவளின் கற்சிலை. கைதேர்ந்த சிற்பி செதுக்கிய சிலையோ? உயிருள்ள பதுமையாக அவள் உருவம் இருந்தது. நதின் கரத்தை கற்சிலையின் கன்னத்தில் வைத்தான். அவ்வளவு தான் பெரும் இரைச்சலுடன் கற்சிலை தூள் தூளாக சிதறியது. நதினும் வருணும் கைகளால் முகத்தை மறைத்து கொண்டு மெல்லமாக எட்டி பார்க்க அங்கே கடற்கன்னி ஒருவள் நிலத்தில் தத்தளித்து கொண்டிருந்தாள்.பாதி மனித உருவத்திலும் மீதி மீனின் ரூபத்திலும்.

காய்ந்து கிடந்த மர வேர்கள் யாவும் அவளின் வாலை குத்தி கிழிக்க அவள் கடலை நோக்கி நகர முயன்றாள்.அவளது முயற்சி புரிந்து வெள்ளை யானை தூக்க வர என்ன நினைத்தானோ நதின் குனிந்து அந்த கடற்கன்னியை தூக்கியவன் அவள் திமிர திமிர ஓட தொடங்கினான். மச்சி என்று அழைத்து கொண்டே வருணும் பின்னால் ஓட என்னவோ அந்த வனத்தில் நீண்ட நாட்கள் பழக்கம் கொண்டவனாக சுற்றி சுற்றி ஓடினான் நதின்.

கடற்கன்னி அவனிடம் இருந்து திமிறினாள். வாலால் அவனை தாக்கினாள். அவளின் எண்ணம் புரிந்தவன் அவளை தூக்கி தோளில் போட அவள் நழுவினாள்.அவளது செதில்கள் நிறைந்த வாலை இவன் தொட அது பனியாக உறைந்து போனது. அவள் கண்ணீருடன் அவன் முதுகில் அடித்தாள்.

எதையும் கருத்தில் கொள்ளாமல் ஓடினான் கடலை நோக்கி. ஓடிய வேகத்தில் கடலும் விரைவில் வர கடற்கரை மண்ணில் கால்கள் புதைய ஓடினான். மீண்டும் கரத்தால் அவள் வாலை தொட அது இப்பொழுது பனியை உருக செய்தது.கடல் நீரில் இறங்கியவன் அவளுடனே கடலுக்குள் குதிக்க கடற்கன்னியின் பலம் தண்ணீரிலே. அவனை விலக்கி தள்ளியவள் நூறாண்டுகள் கழித்து தன் இல்லம் வந்து சேர்ந்த மகிழ்ச்சியில் துள்ளி நீந்தினாள்.

ஆனால் அது ஒருசில வினாடியே அவளோடு நதினும் நீந்த அவளின் முகம் கோபத்தில் கொந்தளித்தது. அவளின் நினைவும் அன்றொரு நாளை நோக்கி பயணித்தது. அன்றும் இப்படி தான் கடல் மட்டத்தின் மேல் பரப்பில் அவள் நீந்தி விளையாட அவளுடன் அவளின் தோழர்களான தங்க மீன்களும் விளையாடி கொண்டிருந்தன.தண்ணீருக்கு மேலே கொக்குகளும் நாரைகளும் தாங்கள் வெளியுலகில் அறிந்து வந்த நாட்டு நடப்புகளை பிற மீன்களுக்கு தெரிவிக்க அப்பொழுது ஒரு கொக்கு அதரா என்றது தான் தாமதம் அந்த பறவையினம் சிறகடித்து எம்பி பறக்க மீன்கள் கூட்டம் முட்டி மோதி சிதறி ஓடின.

இவளும் ஓடிருக்கலாம் ஆனால் இந்த உலகின் ஐம்பூதங்களையும் கட்டி ஆளும் ஒருவனை காண ஆசை. அவன் எதற்காக நீரில் குதித்தான் எதனை கடலில் தேடுகிறான் என எதுவும் புரியாமல் அவனை பார்க்க கடலின் அடியில் இருந்த செடியின் பின்னால் ஒளிந்து கொண்டாள்.நெஞ்சம் அடித்து கொண்டது. கடலிலும் வியர்த்து கொட்டியது அவளுக்கு இது தேவையா இந்த ஒரு சந்திப்பு அவளின் வாழ்வை புரட்டி போட போவதை அவள் உணரவில்லை.

காற்றும் அதரா பெயர் கூற அவனை நேரில் காண ஆவல் கொண்டாள். அதோ அவளின் ஆவலின் உருவம் எதையோ தேடி நீந்தி வந்தது கடலின் ஆழத்தில். தேடுகிறான் தேடுகிறான் அவன் கண்களுக்கு அகப்படவில்லை போலும். அதன் சினம் அவன் முகத்தில் தெரிகிறது. உடனே தன் கையை மேல் நோக்கி உயர்த்த என்ன ஏதென்று யோசிப்பதற்குள் கடல் நீர் இரண்டாக பிரிந்தது. இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

மற்ற மீன்கள் இன்ன பிற கடல் வாழ் உயிரினங்கள் நீரின்றி தவிக்க அவன் தேடியது இப்பொழுது எளிதாக கண்ணில் பட்டது. அதனை எடுத்து பத்திர படுத்தி கொண்டவன் கண்களுக்கு அங்கிருந்த மீன்களின் துடிப்பு பெரியதாக தெரியவில்லை.அவற்றை அலட்சிய படுத்தி நகரும் போது தான் அவளை கண்டான்.கண்களை கீழிருந்து மேலாக முன்னேறினான்.பொன்னிற வால்கள் தரையில் அடிக்க, தட்டையான வயிறு தண்ணீருக்கு ஏங்க, நட்சத்திர மீன்களை காவலாக கொண்ட திமிறிய மார்புகள் மூச்சுக்கு துடிக்க,சங்கு கழுத்தில் பச்சை நரம்புகள் தெரிய, அவளின் செங்கமல இதழ்கள் தண்ணீருக்கு விம்ம, முகத்தை பார்த்தவன் அதிலே மூழ்கி போனான்.

அவன் சிந்தையில் அந்த நொடி வேறொன்றும் இல்லை அவன் கால்கள் அவளை நோக்கி நடந்தன தரையில் தவித்து கொண்டிருந்த மீன்கள் அவன் கால் பட்டு ரணமாகின. இருபுறமும் தண்ணீர் பிரிந்து கருங்கடலாக காட்சி அளிக்க அவளை உல்லாச சிரிப்போடு நெருங்கினான்.

கடைசி மூச்சுக்கு அவள் துடித் துடித்து தவிக்க அவளின் உயிர் போராடத்தால் ஒரு பக்க மாரிலிருந்த நட்சத்திர மீன் நழுவிருக்க வெய்யோன் தீண்டாத இடம் அவன் கண்களுக்கு போதை ஏற்றியது.

"தவறி விழுந்த நட்சத்திர மீன்கள் உள்ளிருக்கும் உயிரை
உருவமாக்கி நிற்கிறது.
ஒற்றை மார்பு திமில் போல கட்டியணைத்து புசிப்பதற்காக பசி தூண்டி பட்டினி போடுகிறாய்
 உன் பார்வையினாலே
உன் விரல் தேடிடும் நட்சத்திர மீன்..
கரும்மண்ணான என் மனதிற்குக்குள் புதைந்து கொண்டதை நீ அறிய வேணும் என்றால் வந்துவிடு
என் மனதிற்குள்"

 என்றவன் உயிருக்கு போராடி கொண்டிருந்த மச்சக்கன்னியை அள்ளி எடுத்து அணைத்து இதழ் துடிக்கும் இதழில் இதழ் பதிக்க பிரிக்கப்பட்டிருந்த கடல் ஒன்றிணைந்தது.

அன்றைய நாளின் தவிப்பு இன்றும் அவள் மனதை கூறு போட்டது. அவனின் கொடூர குணம் அன்றே அறியாமல் போனதன் விளைவு நூறாண்டுகள் கற்சிலையாகி போனாலே. வேக வேகமாக நீந்தினாள் அவள். அவனும் அவளை பின்தொடர்ந்து வந்து கொண்டே இருந்தான். இன்னும் இன்னும் வேகமாக நீந்தியவளை அவன் அழைப்பு தடுத்து நிறுத்தியது. நூறாண்டுகள் ஆயினும் அதே குரல் அதன் சுயநலமான பிடிவாத காதலின் அதிகார குரல் அவளை தடுத்து நிறுத்தியது..

வர்ணிகா என்று..


அதரா - 5



"வர்ணிகா"அந்த பெயர் கடலின் ஆழத்திலும் தண்ணீரில் அதிர்வை ஏற்படுத்தி மச்சக்கன்னியை சென்றடைந்தது. தண்ணீரின் உள்ளே எவரால் பேச இயலும் ஆனால் ஒருவனால் இயலும் அது அவளின் அதரா..தன்னை அழைத்தவன் குரல் கேட்டு அவள் திகைத்து நிற்க இவனோ அந்த பெயர் கொடுத்த தாக்கத்தால் மூச்சு விட முடியாமல் திணற தொடங்கினான்.

"மச்சி நதினு எங்கேடா போயி தொலைஞ்ச"கரையில் நின்று கதறி கொண்டிருந்தான் வருண். கடலில் பாய முயன்றவனை அலேக்காக தூக்கி முதுகில் உட்கார வைத்திருந்தது யானை. கரியின் முதுகில் அமர்ந்து கடலின் உள்ளே தன் குரலை அனுப்பி கொண்டிருந்தான் வருண்.

"இந்தா யான எதுக்கு என்னிய தூக்கி உன் மொதுகுல பார்க் பண்ணிருக்க..ஒழுங்கு மறுவாதயா என்னிய எறக்கி வுட்ரு இல்லாங்காண்டி அப்பால இன்னா நடக்கும்னு எனக்கே தெரியாது சொல்லிட்டேன்"

"தோழா நீ பேசும் மொழி யாது"

"இன்னாது மொழியா தேன் மொழிய உனக்கு எப்பிடி தெரியும்.. நானே அவ பின்னாடி நாயா அலைஞ்சும் என்னிய திரும்பி பாக்கலயே அவ சரியா ராங்கி புடிச்சவ.."

"நான் எந்த மொழியை பற்றி வினவுகிறேன் தாங்கள் எந்த மொழியை பற்றி விளக்குகிறீர்கள்"

"வெளக்கமாறு எல்லா இங்க எங்குட்டு கெடைக்கும்னு தெரியல அப்றம் வாங்கி தரேன்..இந்தா யான உனக்கு புண்ணியமா போட்டும் என்னிய எறக்கி வுடேன் என் ஃப்ரன்ட்டு கடலுக்கு உள்ளார போயி இன்னியும் காணோம் மனசு வேறு பக்கு பக்குன்னு அச்சிக்கினு கெடக்கு ஒரே டைவு தா அவன இழுத்துகினு வந்துறேன் வுடேன்"

"தாங்கள் நீச்சலில் தேர்ந்தவரோ"

"இன்னா என்னிய பாத்து இப்பிடி கேட்டு புட்ட.. நா எல்லாம் சுறா கூடவே ஸ்விம்மிங்க போடுவேன் தெரியுமா.. ஆனா நதினு அப்பிடி இல்ல நீந்துவான் ஆனா என் அளவுக்கு இல்ல.. அவனுக்கு இன்னாச்சோ ஏதாச்சோ நா கண்டுக்கிட்டு வந்துறேன் யான.. அதுகாண்டி இல்லாம இன்னா உம்மேல சொர சொரன்னு குத்துது.. ஓ உன் முடியா.. ஏற்கனவே உப்பு தண்ணில ரொம்ப நேரம் கெடந்து ஜட்டி வர அரிக்க ஸ்டார்ட் பண்ணிருச்சு..சொரிய வேற முடில ஒக்காந்துகினு எறக்கி வுடு யான".. வருண் யானையிடம் தன்னை இறக்கி விடும் படி மன்றாடி கொண்டிருக்க கடலின் உள்ளிருந்து ராட்சத ஜெல்லி மீன் ஒன்று நதினை தூக்கியபடி வெளியே வந்தது. அவன் ராஜ தோரணையாக அதன் மேல் அமர்ந்திருந்தான்.

இதனை கண்ட வருணுக்கு அம்மன் பட மூமண்ட்ஸ் வந்து போனது."அம்மன் தாயீ எங்க அம்மன் தாயீ"என்று யானையின் மீதிருந்து கூச்சல் போட ஜெல்லி மீன் நதினை பணிவன்புடன் கரையில் இறக்கி விட்டு கடலுக்குள் மறைய

"டேய் ஏன்டா கத்துற ஆதிவாசி எவனாச்சும் வந்துர போறான்"

"இல்ல மச்சி உன்ன இந்த கெட்டப்புல பாக்க அம்மன் படம் சீனு வந்துட்டு போச்சு அதான்.. ஆமா அந்த மீனு கொடுக்கு பட்டாளே அரிப்பு உசுரு போகும் நீ எப்பிடி மச்சி அது மண்டயில ஒக்காந்து மஜாவா வர"

"வாயிலேயே மிதிக்க போறேன் உன்ன மூடிட்டு இரு.. ஆமா நா கடலுக்குள்ள சாவ கெடக்கேன் உனக்கு யான மண்டயில ஒக்காந்து உல்லாசம் கேக்குதா"

"ஆமா ஆமா ரொம்ப உல்லாசம் வுட மாட்டேன்னு என்ன புடிச்சு வெச்சிக்கின்னு இருக்கு டா யான.. அது கூட பேசி என்ன ரிலீஸ் பண்றா"

"நீ இன்னா புது படமா ரிலீஸ் பண்ண.. இந்தா யான அவன எறக்கி வுடு.. அவன இன்னாத்துக்கு நீ புடிச்சு வெச்சிருக்க.."

"வேந்தே அவர் தாங்களை பற்றி அறியாமல் தங்களை காப்பாற்றவே கடலில் குதிப்பதாக கூறினார்.. அது தமக்கு இழுக்கல்லவோ அதலால் தான் அடியேன் அவரை பிடித்து வைத்திருந்தேன்.. இதோ அவரை பூ போல தரையிறக்கி விடுகிறேன்".. யானை வருணை கீழே இறக்கி விட

"மச்சி யான உன் கிட்ட பம்மிக்கினு சீன் போடுது..ஆமா நீ என்ன எழவுக்குடா அந்த கடலு கன்னிய தூக்கினு அந்த ஓட்டம் ஓடுன.. நா கூட டவுசர்ல பூரான் பூந்துருச்சின்னு நெனச்சேன்.. இது இன்னாடா இடம் கடலு கன்னியெல்லம் மெய்யாலுமே இருக்கா இன்னா.. உனக்கு ஏற்கனவே பழக்கம் போல எப்பிடிடா"

"எனக்கும் கடலு கன்னிக்கும் ஒரு லவ்ஸு ஓடுது மச்சி"

"உனக்கு'

"ம்ம்"

"கடலு கன்னி கூட"

"யா'

"யான இந்த கொடுமைய பாத்து என்னால நிக்க முடியல திரும்பவும் என்னிய உன் மண்ட மேல ஏத்திக்கோ"

"தாங்களை மட்டுமல்ல தோழரே வேந்தரையும் என் முதுகில் சுமந்து அழைத்து செல்கிறேன் வாருங்கள்"

"அழைச்சின்னு போறியா எங்க.. இது இன்னா எடம்'

"வேந்தே நீங்களே அதை அறிந்து கொள்வீர்கள் வாருங்கள்"யானை வருண் ஏற மண்டியிட்டு அமர அவனை தொடர்ந்து நதினும் ஏறி கொண்டான். அவர்கள் ஏறியதும் யானை ஒரு முறை பிளிற அது இப்பொழுது நடக்கவில்லை காற்றில் மிதந்தது.. நதினும் வருணும் வாயை பிளக்க அவர்கள் யார் கண்களுக்கும் தெரியாமல் காற்றில் மறைந்து அரூபமாய் கலந்தனர்.

"யான உனக்கு பேரு இல்லையா.. நீ இன்னா நடக்காம பறக்குற.. இது ஒலக அதிசயம் தெரியுமா.. எப்பிடி உன்ன இன்னும் கண்டுக்காம விட்டானுங்க"

"வேந்தே என் பெயர் வஜ்ரா..நான் சிம்மாவின் வம்சத்தில் வந்தவன்.. மேலும் தாங்கள் நினைப்பது போல இது உங்கள் உலகம் அல்ல இது அதராவாகும்.. தங்களின் உலகத்தில் இருந்து தாங்கள் வேறொரு உலகத்திற்கு வந்துள்ளீர்கள்.. சொல்லப்போனால் இதுவே தங்களது மெய்யான உலகம்.. இங்கிருந்துதான் தாம் அந்த உலகத்திற்கு சென்றீர்கள்.. இந்த உலகத்தில் யானைகள் மட்டுமல்ல சர்பங்களுக்கு கால்கள் இருக்கிறது.. பறவைகள் அனைத்தும் பாதி மனித உருவில் இருக்கும்.. மச்சங்கள் அனைத்தும் நடந்தே கரைக்கு வரும்.. ஓரறிவு உயிரினங்கள் கூட இங்கே பேசும் வல்லமையை கொண்டுள்ளன."

வஜ்ரா பேசிக்கொண்டே போக மற்ற இருவருக்கும் என்ன சொல்வது என்றே புரியவில்லை. அது சொன்னதை அவர்கள் நம்பாமல் இருக்கவும் முடியவில்லை நம்பவும் அவர்களது மூளை ஒப்புக்கொள்ளவில்லை. நம்பாமல் எப்படி இருப்பது கண் முன்னால் முழுவதும் உலகமும் விரிந்து கிடக்கையில். தடுமாற்றத்துடன் நண்பனின் முதுகைச் சொறிந்த வருண்"மச்சி யான என்னென்னமோ கத சொல்லிகின்னு வருது.. எனக்கென்னமோ இது சரியா படல நாம மண்டைய போட்டுட்டோம் போல யான பீலா வுடுது.. "

"இல்ல மச்சி நாம இன்னும் உயிரோட தான் இருக்கோம். ஆனா வஜ்ரா சொன்ன மாதிரி நாம அதரால இருக்கோம்.. உனக்கே தெரியும் எனக்கு பத்து வயசுல இருந்து மேஜிக் பண்ற பவர் வந்துச்சு. அது எப்படி வந்தது ஏன் வந்ததுன்னு தெரியல.அதே மாதிரி நா ஒவ்வொரு பொண்ணுகிட்ட ப்ரொபோஸ் பண்ணுறப்போ எல்லாம் ஒரு பொண்ணோட குரல் கேக்கும்.. அந்தப் பொண்ணு வேற யாரும் இல்ல இந்த கடல் கன்னி தா.. நான் இன்னும் அவளோட குரல கேட்கல ஆனா என் உள் மனசு சொல்லுது.அந்த குரலுக்கு சொந்தக்காரி அவளா மட்டும் தான் இருக்க முடியும்.. இந்த இடத்துக்கு வந்தோன எனக்கு பயமே வரல சொல்ல போனா என் வீட்டுக்கு வந்த பீலிங் மச்சி..

நீ என்ன நம்புறல பேசாம வா"நதினின் முகத்தில் இருந்த தெளிவு வருணை வாய் மூட செய்தது..யானை மிதந்து அதராவிற்குள் சென்றது. அங்கிருந்த மரங்கள் யாவும் வானளவு உயர்ந்து நின்றது. அவை யாவும் வானவில் வர்ணத்தில் கண்ணை பறிக்கும் அழகுடன் இருந்தன.நீல வானம் நிறம் மாறி பொன் மஞ்சள் நிறத்தில் மிளிர செடி கொடிகள் யாவும் தங்கமும் சிவப்பும் கலந்த நிறத்தில் காற்றில் அசைய பெயரறியா மலர்கள் வண்ண சிதறலாக பூத்து குலுங்கின.

உள்ளங்கை அளவே ஆன மனிதர்கள் றெக்கை கொண்டு அங்கும் இங்கும் பறந்து கொண்டிருக்க குளத்திலிருந்து நடந்தே வந்த மீன்கள் நீல புல் தரையில் விளையாட வருணும் நதினும் ஆங்கில மந்திர படம் பார்க்கும் நினைவில் இருந்தனர். வஜ்ரா வனத்தை தாண்டி ஊருக்குள் நுழைய அசந்தே விட்டனர்.குட்டி குட்டி மனிதர்கள் பறந்து கொண்டிருக்க நெடு நெடு என்று எட்டு ஒன்பது அடியில் ஆணும் பெண்ணுமாக மனிதர்கள் அங்கே தங்கள் வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.அவர்களின் இல்லம் அகலம் குறைவாய் கொண்ட உயரமான மர வீடுகள் உயர்ந்து நின்றன..

இவ்வளவு உசரமா இருக்கானுங்களே என்று இருவரும் வாய் பிளக்க அங்கே மேகங்கள் உட்கார்ந்து இளைப்பாறும் கோட்டை ஒன்று நடுநாயகமாக அவர்களை வரவேற்க்க அப்படி ஒரு பிரமாண்ட கண்ணாடி கோட்டையை அவர்கள் கனவிலும் கண்டதில்லை.உயர்ந்த மனிதர்களும் பறக்கும் மனிதர்களும் இவர்களையே ஒரு மாதிரி பார்க்க"வஜ்ரா மொத நாம அரூபமா இருந்தோம் யாருக்கும் தெரில இப்ப இன்னா எல்லோரும் நம்மளையே ஒரு டைப்பா பாக்குறாங்க"

"ஏனென்றால் இது தங்களது உலகம் வேந்தே..இவர்கள் யாவரும் தங்களின் மக்கள் தங்களுக்காகவே வருடங்கள் கடந்த பின்னும் நம்பிக்கையோடு காத்திருக்கும் குடிகள்.. உங்கள் மேல் மெய் அன்பு கொண்ட இவர்களுக்கு திடீரென இன்ப அதிர்ச்சி அளிக்கவே இதுவரை உங்களை அரூபமாக அழைத்து வந்தேன் இனி அது தேவையில்லை.. இதோ அவர்கள் யாவரும் கண்களில் கண்ணீருடன் தங்களை காண்கிறதை காணுங்கள்"

நதினும் வருணும் சுற்றி பார்க்க மக்கள் யாவரும் ஒருவர் இன்னொருவரிடம் குசுகுசுவென பேசிக்கொள்வதும் அதிர்ச்சியில் விழி விரிய நிற்பதும் தங்களை தாங்களே கிள்ளி பார்ப்பதுமாக இருந்தாலும் அனைவர் கண்களிலும் கண்ணீர் மட்டும் தங்கு தடையில்லாமல் வழிந்தது. அவர்கள் ஏதும் பேசாமல் வஜ்ராவை புடைசூழ நடந்து வர

"மச்சி இன்னாடா இவனுங்க பாக்கவே பயங்கரமா இருக்கானுங்க.. எனக்கு வயித்த கலக்குது.. ஒண்ணுக்கும் ரெண்டுக்கும் சேந்தே வருதுடா.. ஏதாகண்டி மந்திரத்த சொல்லுடா அப்டியே காதோட கலந்து ஐக்கியம் ஆயிருவோம்'

"நீ யான மேல பேஞ்சிறாத.. அடக்கிட்டு இரு.. இங்க என்னமோ ஒன்னு இருக்குது அத இன்னான்னு நா கண்டுக்காம வுட மாட்டேன்"

"நீ கண்டுக்குனு போறியா நாண்டுக்கினு போறியா எக்கேடோ கெட்டு தொல என்னிய வுட்ரு சொல்லிட்டேன்.."

"வருணு இன்னாடா அவ்ளோ தானா.. நா இல்லாம உனக்கு மட்டும் எதுக்குடா லைப்பு.. நீயும் எங்கூடவே வந்துருவ எனக்கு தெரியும் மச்சி"

"அதாவது நீ செத்தாலும் கூட இருக்கறவனும் வாழாம கூட வுழுந்துருனும் அதான புரிஞ்சு போச்சுடா புரிச்சு போச்சு என்னிய காவு கொடுக்க ரெடி ஆயிட்ட"

"காண்டாவாத மச்சி அங்க பாரு அவங்க என்னமோ சொல்றாங்க"அவர்கள் சொன்ன சொல் அதரா அதரா என்று தான்..குழப்பத்துடனே இவர்கள் யானை மீது கோட்டை வாயிலில் நிற்க மக்களின் அதரா கோசம் தரை அதிர்ந்தது.. செவிகள் வலியெடுக்க"வஜ்ரா அது இன்னா எல்லாரும் அதரா அதரானு கத்துறாங்க "

"தோழரே தாங்கள் நிற்கும் உலகத்தின் பெயர் அதரா.. அந்த அதராவை உண்டாக்கி கடவுள் அதனை காக்க படைத்த வம்சம் தான் அதரா வம்சத்தினர். அவர்காளாலே இந்த உலகம் அதரா என்று அழைக்கப்படுகிறது. அப்படி காக்கும் வம்சத்தில் இருந்து பிறந்தவர் தான் இதோ இருக்கும் வேந்தர் அதரநதின்.."

"அதராவா நதின் மட்டும் தா.. இவன் எங்க உலகத்துல தான பொறந்தான் அப்றம் எப்டி நீ என்னென்னமோ சொல்ற"

"தோழரே இப்பொழுது நான் கூறும் எதுவும் தங்களுக்கு புரியாது.. நாளடைவில் அனைத்தும் தானாக புரியும் அதுவரை காத்திருங்கள்".. அதற்கு மேல் வஜ்ரா எதுவும் கூறவில்லை கூற முடியவும் இல்லை.. நதின் கீழே இறங்கிய அடுத்த நொடி அவனை சுற்றி பொன் நிற துகள்கள் மாரியாய் பொழிய வண்ண பூக்களும் வான அந்த குட்டி மனிதர்கள் உருவாக்கிய வான வேடிக்கையும் அவர்கள் நதினை தூக்கி தோளில் வைத்து கொண்டாடிய கொண்டாட்டமும் சொல்லி மாளாது.

யாரிடமும் கேட்பது என்ன கேட்பது கேட்டால் விபரீதம் ஏதேனும் நிகழ்ந்து விடுமோ என்ற பயமே நண்பர்கள் இருவருக்கும் மேலோங்கி நிற்க வாயை இழுத்து மூடி கொண்டனர். எதிலோ தெரியாமல் சிக்கி கொண்டார்கள் வசமாக. அதிலிருந்து தப்பித்து வீடு சேர வேண்டும்.கோட்டை வெளிதோற்றம் என்னவென்று கூறுவது கோணலும் மணலுமாக கூறிய கோப்பு வடிவில் கோட்டைகள் வளைந்து நெளிந்து காண பட அதன் வெளித்தோற்றம் மனதை அள்ளும் வகையில் இருந்தது. உலகின் மொத்த கவிஞர்களின் கற்பனைகளையும் கை கொண்ட விதத்தில் அதியச பூக்கள் கோட்டையை சுற்றிலும்.வெளிர் நீல நிற புல்தரையில் கால் பதியும் நொடி அதிலிருந்து நீல நிற மினுக்கும் துகள்கள் வருவதை காணவே பரவசம் உடல் முழுதும் பரவியது. என்ன ஏதென்று அவர்கள் பார்த்து கொண்டு நிற்கும் போதே கோஷமிட்ட மக்கள் கோட்டை வாயிலில் இருந்து வாசல் வரை மண்டியிட்டு அமர 

"வஜ்ரா ஏன் எல்லோரும் ஒக்காந்துட்டாங்க காலு வலிக்கிதோ"

"இல்லை வேந்தே அவர்கள் அதராவிற்கு மரியாதை செலுத்துகிறார்கள்.."

"நாமளும் அப்போ ஒக்காருனுமா.. ஜீன்ஸ்ஸு ஈரத்துல டைட்டா இருக்கு என்ன பண்றது இப்போ"

"தோழரே நீங்கள் இருவரும் எங்கும் அமர வேண்டாம்..வேந்தன் அவர்களின் மத்தியில் நடந்து கோட்டையினுள் செல்ல வேண்டும்.. தாங்கள் அவருக்கு பின்னால் இரண்டு அடி விட்டு செல்லுங்கள்"

"அதெல்லாம் முடியாது என் நண்பன் என் பக்கத்துல தா வருவான்"

"எதுக்கு பிரச்சனனா கோத்து வுட்டு ஓட"

"இன்னா மச்சி நாயே ரெண்டடி இல்ல நீ ஒரு பத்தடி அப்பால வாடா"என்ற நதின் வேகமாக அந்த கூட்டத்தின் மத்தியில் நடந்து கோட்டைக்குள் செல்ல அவன் பின்னோடே ஓடி வந்தான் வருண். வெளியே பார்த்ததை விட உள்ளே அசந்து நிற்க அப்பொழுது நதின் வஜ்ராவிடம் ஒரு கேள்வி கேட்டான்

"வஜ்ரா எல்லா மீனும் இங்க நடக்கும்னு சொன்னியே அப்ப எதுனாலகண்டி அந்த கடலு கன்னி நடக்கல"அவனை கடுப்புடன் கூடவே பரிதாபத்துடன் பார்த்த வஜ்ரா

"அதற்கு காரணம் தாங்கள் தான் வேந்தே.. இதற்கு மேல் எதையும் கேட்க்காதீர்கள்" என்றதும் நதினிடம் எதையோ கேட்க வாய் திறக்க அவன் முன் வந்து காற்றில் தவழ்ந்து சென்றது மயிலிறகு ஒன்று.. அவனின் நினைவும் அந்த மயிலிறக்கோடு சென்றது.

தன்னை முத்தமிட்டவனை விலக்கி தள்ள போராடி கொண்டிருந்தாள் கடற்கன்னி. அவளின் போராட்டம் அங்கிருந்த செடிகளின் பின்னால் பதுங்கியிருந்த மீன்களுக்கு கூட பரிதாபத்தை வரவழைக்க ஆனால் முத்தமிட்டவானோ எதை பற்றியும் கவலை கொள்ளாமல் அவள் இதழ் சுவைத்தான். அவளின் துடிப்பு அவனுக்கு கொண்டாட்டமாக இருந்தது. அவளின் வாசம் ஆழ கடலிலும் அவனை கிறங்கடித்தது.

மென்னிதழ் இவனது முரட்டு இதழால் முத்தமிடப்பட்டு சிவந்து உதிர துளி கடல் நீரில் கலக்க அப்பொழுது தான் அவன் நிமிர்ந்தே பார்த்தான். அவளோ வெறுப்போடும் வேதனையோடும் அவனை பார்க்க அதை அலட்சியபடுத்தியவன்

"உன் பெயர் இன்று இந்த நொடி வரை எதுவேண்டுமென்றாலும் இருந்து விட்டு போகட்டும் ஆனால் நான் உன்னை கண்ட நொடியில் இருந்து உன் பெயர் வர்ணிகா.. வர்ணிகா என்றால் நிலா என்பதும் பொருளாகும். அதே சமயம் வர்ணிக்க இயலாத பேரழகு பொக்கிஷமும் பொருளாகும் உனக்கு இரண்டுமே பொருந்தும் ஆதலால் உன் பெயர் இனி வர்ணிகா..

பிறகு வர்ணிகா இதான் உன் இருப்பிடமா எங்கே உன் தாய் தந்தை இருவரும்.. "அவன் அவளுக்கு பெற்று பெயர் வைத்ததை போல பேசிக்கொண்டே போக அதற்கு முன் வரை பௌர்ணிமா எனும் நாமம் கொண்டவள் வர்ணிகா என்ற புதிய நாமத்தின் தாக்கத்தில் இருந்து வெளியேற்றி அவனை கடுமையாய் முறைத்து

"என்ன தைரியம் இருந்தால் என்னை முத்தமிட்டுருப்பீர் உங்களுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது ஹான்"

அவளின் இடை இறுக்க அவள் அவனிடமிருந்து விடுபட திமிற அதனை நொடியில் அடக்கியவன்"அதராவிற்கு உரிமையை கொடுக்க யாருக்கும் உரிமை இல்லை பெண்ணே..என் உரிமையை நீ பார்க்கிறாயா"அவளை விடுவித்து மெல்ல நீந்தியபடியே அவளை சுற்றி வந்து முதுகில் முத்தமிட அவள் வாலால் அவனை தாக்க முயல லாவகமாக அவளிடமிருந்து தப்பியவன் வேண்டுமென்றே மார்பு வயிறு கழுத்து கரங்கள் வால் இப்படி அவளை சுற்றி சுற்றி நீந்தி முத்தமிட அவளின் போர்க்குணம் வெளியே வந்தது.

அவனை தாக்க முயன்று போராடி கொண்டிருந்தாள். அவனோ அவளை சீண்டி முத்தமிட்டபடியே இருக்க அவளும் தன் நகத்தால் அவன் ரோமம் மண்டிய மார்பில் நகத்தால் கீறி அவனது உதிரத்தை நீரில் கலக்க வைத்தாள்.கடலில் இவர்களது போராட்டத்தை பார்த்து கொண்டிருந்த ஜீவராசிகள் அதராவையே காயம் செய்யும் கடல் கன்னியை பரிதாபமாகவும் ஆச்சர்யமாகவும் பார்க்க விஷயம் திமிங்கலத்தின் மூலம் கேள்வியுற்று வர்ணிகாவின் தாய் தந்தை மற்றும் அவர்களது கூட்டமே அடித்து பிடித்து வந்து பார்க்க வர்ணிகா தன் வால் மூலம் அதராவை கண்ணாபின்னா வென்று தாக்கி கொண்டிருந்தாள்.

அதனை கண்டு பயந்த அவள் பெற்றோர்"பௌர்ணிமா என்ன செய்து கொண்டிருக்கிறாய்? மகளே இவர் யாரென்று எண்ணினாய்? இந்த லோகத்தின் வேந்தன் பஞ்ச பூதங்களையும் அடக்கி ஆளும் சக்தி பெற்றவர் அவரை தாக்க முயற்சிக்கிறாயே மக்கு பெண்ணே.. வேந்தே தாங்கள் எம் இருப்பிடம் வந்ததற்கு மிக்க மகிழ்ச்சி.. எங்கள் புதல்வி விளையாட்டு பிள்ளை அறியாமல் தவறு இழைந்திருந்தால் தாம் அவளை மன்னித்தருள வேண்டுமென மன்றாடி கேட்டு கொள்கிறேன்"

வர்ணிகாவின் தந்தை அவன் முன் மன்றாடியது அவளுக்கு ஆத்திரத்தை கிளப்பியது.. "தந்தையே இவனிடம் போய்"

"பௌர்ணிமா"கடுப்புடன் அவள் வாய் மூடி கொள்ள மற்றவர்கள் பயத்துடன் பார்த்து கொண்டிருக்க

அதரா"இப்பெண்ணிற்கு விவாகம் ஆகி விட்டதா"என

"இல்லை வேந்தே ஆனால் கூடிய விரைவில் நடக்க இருக்கிறது.."

"அது நடந்தே இருந்தாலும் பரவாயில்லை இனி இவள் இந்த அதராவின் சொத்து.. என்னுடையவள்.. அவளை பெற்ற உங்களிடம் முறை படி அவளை அழைத்து செல்வதை தெரிவித்து விட்டேன். இல்லையேல் மகளை காணவில்லை என தாங்கள் பதறிட கூடாதே அதற்காக"வர்ணிகா உட்பட அனைவருமே அவன் கூற்று கேட்டு அதிர்ந்து நிற்க வேறு என்ன செய்ய முடியும். அவனை எதிர்க்க அங்கே யாருக்கும் துணிவு இல்லை.

இருந்தும் ஒருவள் எதிர்த்தாள்."தாங்கள் யார் என்னை உரிமை கொண்டாட.. உங்களை போய் அறிவுள்ள நங்கை ஒருத்தி ஸ்ரீகரிப்பாளா.. அதரா என்றால் நெருப்பு. தன்னுள் விழும் அனைத்தையும் விழுங்கி கொள்ளும் கொடூர நெருப்பு அத்தகைய எண்ணம் தான் உன்னிலும் இருக்கிறது.. நீ இந்த அதரா லோகத்திற்கே வேந்தனாக இருக்கலாம் ஆனால் என்னை ஆள உனக்கு அதிகாரம் கிடையாது"

"மகளே வேண்டாம்"தாய் தந்தையர் இருவரும் தடுத்தும் அந்த அகம்பாவியின் முன் கோபத்தை அடக்காமல் பேசிக்கொண்டே செல்ல

"ஆக பெண்ணே நீ என்னுடன் வர போவதில்லை அப்படித்தானே"

"அதை சொல்லி புரிந்து கொள்ள தாங்கள் முட்டாள் அல்லவே"

"வேந்தே அவள் குழந்தை"எதையோ அதராவிடம் சமாளிக்க அவள் பெற்றோரை அடக்கியவன் தீர்க்கமான பார்வை ஒன்றை அவள் மேல் செலுத்தி விட்டு தன் காலை ஓங்கி கீழே மிதிக்க அந்த கடலே தரையிலிருந்து அப்படியே அந்தரத்தில் மிதக்க அதில் நீந்திய அனைத்து உயிரினங்களும் தண்ணீர் இன்றி துடி துடிக்க வர்ணிகாவிற்கு மட்டும் ஏதும் ஆகவில்லை. ஏனெனில் அவள் தான் அதராவின் கைப்பிடிக்குள் இருக்கிறாளே..

தாயே தந்தையே என்று அவர்களிடம் செல்ல முயன்றவளை தன் கைப்பிடிக்குள் அழுத்தியவன்"இப்பொழுது சொல் பெண்ணே என்னுடன் என்னுடையவளாக வருகிறாயா".. இவன் கொடூரன். எதற்காக இவனை காண ஆவல் கொண்டேன்? இத்துணை ஜீவராசிகளையும் பலி கொடுக்கவா?கண் முன்னே தான் சார்ந்தவர்கள் துடிக்க பேதையவள் அவனிடம் கெஞ்சினாள்.

"அவர்களை விட்டு விடுங்கள் தண்ணீர் இன்றி அவர்கள் துடிப்பது தெரியவில்லையா அவர்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள் தயை கூர்ந்து கடலை கீழே வர வையுங்கள்"

"நான் கேட்டதற்கு இது பதிலில்லையே"

அவனை கண்ணீர் ததும்பிய முகத்துடன் முறைத்தவள்"நான் கடற்கன்னி தங்களுடன் வந்து என்ன செய்வது மானுடன் கடல் நங்கையை மணப்பது சாத்தியமற்றது அறியாதவரா தாங்கள்"

"அதராவினால் முடியாதது ஒன்றுமில்லை அறியாதவளா நீ.. அங்கே பார் வர்ணிகா அந்த மீன்கள் கூட்டம் மரணத்தின் இறுதி பிடியில் இருக்கின்றன. நீயானால் என்னிடம் வார்த்தையாடி கொண்டிருக்கிறாய். உன் இனத்தின் மீது உனக்கு அக்கறையே இல்லை போ"

கண் முன் கோடான கோடி ஜீவராசிகளுடன் அவள் பெற்றோரும் துடிக்க"நான் உங்களுடன் உங்களுடையவளாக வருகிறேன்"என்று சொன்னது தான் தாமதம் அந்தரத்தில் மிதந்த கடல் அந்த பள்ளத்தை நிரப்பியது. அனைத்து ஜீவராசிகளும் மூச்சை நன்றாக சுவாசிக்க

"தங்களின் மகள் என்னுடன் வர சம்மதித்து இருக்கிறாள் நான் அவளை என்னுடன் அழைத்து செல்கிறேன்.. தாங்கள் வேண்டுமானால் பிறகு வந்து அவளை என்னுடைய கோட்டையில் காணலாம்"

என்றவன் அவர்கள் ஏதோ கூற வருமுன் அவளை நொடியில் கடலுக்கு மேல் கொண்டு வந்தான். தண்ணீரின் மீது அவன் நிற்க அவளோ அவன் முகத்தையே பார்க்க அவளை தூக்கி தோளில் போட்டவன் சுலபமாக கடலின் மேல் நடந்து கரைக்கு வர அவளது கண்ணீர் அவன் முதுகை நனைத்தது. ஈர மண்ணின் காற்று பட்டதும் அவள் வால் கால்களாக மாற அப்பொழுதும் அவளை நடக்க விடாமல் தன் வாகனமான சிம்மா என்ற யானையின் மீது ஏற்ற கடலுக்கடியில் நடந்த அனைத்தையும் அரசல் புரசலாக மீன்கள் பறவைகள் மூலம் அறிந்திருந்த சிம்மா

"வேந்தே இந்த பெண் கடல் கன்னி அல்லவா"

"ஆம் அது இதுவரை இன்றிலிருந்து இவள் எனது உடமை"என்றவன் அவளை தொடர்ந்து யானை மீது அமர வர்ணிகா கண்ணீருடன் தன் பிறந்தகத்தை இழந்தாள். அவளின் பெற்றோர் கடலின் மத்தியில் இருந்து இவர்களை பார்த்து கொண்டிருந்தனர். சிம்மா காற்றில் மிதந்து வர தேச மக்கள் யாவரும் வர்ணிகாவை அதிசயமாக பார்த்தனர். மக்களின் கிசுகிசுப்பை அதிர்ந்த பார்வையை அலட்சிய படுத்திய அதரா கோட்டையை அடைந்ததும் அவளை நடக்க விடாமல் அவளை தன் தோளில் கிடத்தி உள்ளே நுழைந்தான்.

தொடரும்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்