Saturday, 5 April 2025

தாகம் 11


"அம்மா ரொம்ப பசிக்குது மா.. காலையிலேயே சாப்பிடாம  எங்கம்மா எங்கள கூட்டிட்டு வந்திருக்க" காயத்ரி தேவகியிடம் கேட்டாள்.

மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வெறுமனே அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார் தேவகி.
" இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம் காயு.. கொஞ்ச நேரம் அமைதியா இரு" தங்கையை அடக்கினாள் செல்வி.

"ம்க்கும் அக்கா எங்க போனான்னு தெரியல.. நாலஞ்சு நாளா அவளை காணாம எப்ப பாரு வீட்ல பழைய சோறு கஞ்சி தான். இரு இரு அக்கா வரட்டும் உன்ன பத்தி சொல்றேன்." பூங்காவனத்தின் பெயரைச் சொல்லி தாயை மிரட்டினாள் காயத்ரி.

" உன் வாயாவது பழிச்சு என் மகளை நான் பார்த்திட மாட்டேனா.." ஏக்கத்தோடு வெளிவந்தது தேவகியின் குரல்.

பூங்காவை காணாமல் சோலை பாண்டியன் வீட்டிற்கு நடையாய் நடந்து ஓடாக தேய்ந்திருந்தார் தேவகி.. ஒவ்வொரு முறை அவர் சோலை பாண்டியன் வீட்டிற்கு வரும்போதும்  நாயை விட கேவலமாக அவரை நடத்தி,  வார்த்தைகளால் கொன்று திரும்ப அனுப்பியிருந்தார் சோலை பாண்டியன்.

பூங்காவுக்கு என்ன ஆனதோ ஏதானதோ என்று பரிதவிப்போடு தினமும் கோவில் குளமாக சுற்றிக் கொண்டிருந்தார் தேவகி. இறுதியாக அவரின் வேண்டுதலுக்கு கடவுள் கண் திறந்து விட்டார். அதிகாலையில் சோலை பாண்டியன் வீட்டிலிருந்து ஒரு அடியால் வந்து  காலை எட்டு மணிக்கு எல்லாம் சோலை பாண்டியன் வீட்டிற்கு வரக் கூறியிருந்தான். மகளைப் பற்றி ஏதோ தகவல் கூற போகிறார் என அடித்து பிடித்துக் கிளம்பி இருந்தார் தேவகி.

சோலை பாண்டியன் வீட்டிற்கு வந்து இறங்கியதும் தன்னுடைய இரு மகள்களையும் இரு பக்கம் கையைப் பிடித்துக் கொண்டு" அங்க என்ன நடந்தாலும் யார் என்ன கேட்டாலும் பேசாம இருக்கணும்.." எதற்காக சோலை பாண்டியன் இரண்டு மகள்களையும் உடன் அழைத்து வர கூறியிருந்தார் என்பது மட்டும்தான் இன்னும் உறுத்தலாக இருந்தது..

கடவுள் மீது பாரத்தை போட்டவர் மெல்ல அடியெடுத்து வாசலில் வந்து நின்றார். இந்த வாசலில் பல தடவை அவர் நின்று இருந்தாலும்   பிள்ளைகளோடு வந்து நிற்பது இதுதான் முதல் தடவை. செல்விக்கு வரக்கூடாத இடத்திற்கு வந்துவிட்ட உணர்வு. காயத்ரிக்கு புதிய இடத்தை பார்த்ததும் கால்கள் பரபரவென்று இருந்தது. அந்த இடத்தை சுற்றிப் பார்த்துவிடும் வேகமும் அவளிடம்.

அவ்வப்போது அங்கு வந்து போகும் அடியார்களை கண்டு செல்வி முகத்தை திருப்பிக் கொள்ள, அவர்களின் தோற்றத்தை பார்த்து காயத்ரி பயந்து போய் அம்மாவை பிடித்துக் கொண்டாள். வயதுக்கு வந்த பெண்ணாகிய செல்வியை, கண்டமேனிக்கு மொய்த்தது அங்கிருக்கும் கயவர்களின் பார்வை..

தன்னுடைய தலைவிதியை நொந்து கொண்டே இரு மகள்களையும் தன்னுடைய  கையணைப்பில் இருத்திக் கொண்ட தேவகி சோலைப் பாண்டியன் வரவுக்காக காத்திருந்தார்.

நல்ல வேலையாக அவரை அதிகம் சோதிக்காது சோலை பாண்டியன் எப்பொழுதும் போலவே தெய்வ கடாட்சமாக பட்டையும் கொட்டையுமாக அவள் முன்பு வந்து நின்றார்.. என்றும் இல்லாத திருநாளாக  தேவகியை கண்டதும் 

" யாரு அடடா தேவகியா? என்ன வாசல்ல நிக்கிற? உள்ள வா.. பிள்ளைங்க ரெண்டும் ஸ்கூலுக்கு போலயா. அதுங்களையும் உன் கூட கூட்டிட்டு சுத்திட்டு இருக்க.. " குடும்பத்தோடு அவர்களை வரக்கூறியதே அவர் தானே..

"ஐயா என் பொண்ணு பெரியவ"

" என்ன தேவா உனக்கு எல்லாத்தையும் வாசப்படியில வைச்சு தான் சொல்லனுமா. உள்ள வானு கூப்டா ஒரு தடவை மதிச்சு வரமாட்டியா.. வெத்தலை பாக்கு வச்சு காலுல விழுந்து கூப்டா தான் நீ உள்ள வருவியா.." சோலைப் பாண்டியன் இதுவரை பேசிக் கொண்டிருந்த தொனி மாறியது.

இது அனர்த்தத்தின் அறிகுறி என்பது தேவகிக்கு புரிய அடுத்த நொடியே பிள்ளைகளை இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார். வீட்டில் வெளித்தோற்றும் பிரமிக்கும்படி இருந்தது என்றால் வீட்டின் உள் தோற்றம் மூச்சு விடவும் மறக்கும் படி அமைந்திருந்தது..

" பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி அப்படி என்ன வாய பொளந்து இந்த வீட்டை பார்த்துட்டு இருக்க. ஆமா ஆமா நான் ஒரு மடையன்.. நீ எல்லாம் இந்த மாதிரி வீட்டை கனவுல கூட பார்த்திருக்க மாட்ட.. அதான் அசந்து போய் நிக்கிற பாவம்.. ம்ம் ஒக்காரு".. தேவகிக்கு அவர் ஏன் இத்தனை வருடங்களுக்குப் பிறகு தன்னை வீட்டிற்குள் அனுமதித்தார். அதிலும் அதிசயமாக அமர கூறுகிறார் என்பதைப் பற்றி ஒன்றுமே புரியவில்லை.

"இல்லைங்கய்யா.. இருக்கட்டும் என் பொண்ணு பெரியவ"..

"ஒக்காரு மொத தேவா.. உனக்கு எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை புளி போட்டு விளக்கி சொல்லனுமா." அதற்கு மேல் தர்க்கம் செய்ய விரும்பாத தேவகி தரையில் அமர்ந்து விட்டார்.. காயத்ரியும் செல்வியும் அவரின் இரு பக்கம் அமர்ந்து கொண்டார்கள்.

"ம்ம்ம்.. யாரு உன் பொண்ணுங்க தானே இதுங்க.. ரெண்டும் வயசுக்கு வந்துருச்சிங்க போலயே.. இதாரு நடுவளா? இவ சின்னக் குட்டி தானே.. உன் பொண்ணுங்க எல்லோருமே நல்ல அழகு தேவா.. சும்மா தக தகனு தக்காளி ச்சே தங்கம் மாறி" குழந்தைகள் என்றும் பாராமல் அவர் எதைப் பற்றி குறிப்பிடுகிறார் என்பது தேவகிக்கு புரியாமல் இல்லை.

"இந்தா சீனி.."

"ஐயா"என்று பவ்வியமாக சமையல்காரன் வந்து நின்றான்.

"நமக்கு வேண்டப்பட்டவங்க.. அவங்க அம்மாவுக்கு மட்டும் காப்பியும்  பொண்ணுங்க ரெண்டுத்துக்கும் பூஸ்ட் போட்டு கொண்டு வா.. இல்லை இல்லை வேணாம்..சின்னம்மா ஜெர்மனியில் இருந்து ஏதோ சாக்லேட்டு பவுடர் போன வாட்டி வாங்கிட்டு வந்தாளே..அந்த தண்ணிய கரைச்சு எடுத்துட்டு வா.. அப்டியா இவனே கூடவே வெளிநாட்டு பிஸ்கட்டு ரெண்டு கொண்டா போ".. சோலை பாண்டியன் பேச பேச தேவகிக்கு இங்கே அடிவயிற்றில் புளியை கரைத்தது. அவர் மனதுக்கு ஏதோ தவறான விஷயம் நடக்கப்போவது போல தோன்றியது.

"ஐயா காப்பி டீயி எல்லாம் எதுங்குங்கய்யா.. ஐயா வர சொன்னதா காலையிலேயே உங்காளு ஒருத்தன் வந்து சொல்லிட்டு போனப்படி.. என் பெரிய பொண்ண பத்தி"..

"ம்ம்ம்ம் ம்ம்ம்.. காப்பி தண்ணிய குடிச்சிட்டு தெம்பா பேசலாமே தேவகி..அதுவரைக்கும் நீ கொஞ்சம் வா என் கூட".. என்றவர் விழித்துக் கொண்டு நிற்கும் தேவகியை திரும்பி அழுத்தமான ஒரு பார்வையை வீசினார்.. அவரின் வார்த்தைகளை அதற்கு மீற முடியாத தேவகி அவரைப் பின் தொடர்ந்தார்.

"ம்மா எங்கம்மா போற பேசாம இங்கேயே உட்காருமா" செல்விக்கு சோலை பாண்டியனின் பேச்சு சரியாக படவில்லை. தாயை அவர் பின்னால் போகவிடாமல் தடுக்க பார்த்தாள்.

"இந்தா நடுவளே உங்க அம்மாவ ஒன்னும் இங்க யாரும் கடிச்சு தின்னற மாட்டாங்க.சாக்லேட்டு தண்ணீ வரும்.. குடிச்சிட்டு வெளிநாட்டு பிஸ்கட்ட கடிச்சிகோங்க.."அவர் முறைப்பாக சொல்ல

"செல்வி எங்கேயும் போகக்கூடாது ரெண்டு பேரும் அம்மா வரவரைக்கும் இங்கதான் உட்கார்ந்து இருக்கணும். அந்த தண்ணி வந்தாலும் குடிக்கக்கூடாது.. பிஸ்கட்டை சாப்பிட்டுறாதீங்க" பிள்ளைகளை எச்சரிக்கை செய்துவிட்டு சோலை பாண்டியன் பின்னால் சென்றார் தேவகி.

மாடியாறையில் கடைசி வரைக்கும் அழைத்து சென்றவர்  சில காலமாக தேவகியை விட்டு வைத்திருந்ததற்கு மொத்தமாக அவரை எடுத்துக் கொண்டார்.. மறுக்க போன தேவகியை 

"நடுவளுக்கு எத்தன வயசு" என்று அவர் கேட்ட கேள்வியே  தலையில் இறக்க தன் அவல நிலையை எண்ணி நொந்து கொண்டே அவர் ஆசைக்கு அடிபணிந்தார். தன்னுடைய தேவை முடிந்ததும் சோலை பாண்டியன் பெரிய மனிதர் தோரணையில் இறங்கி வர  அவருக்கு பின்னால் சேலை தலைப்பை இழுத்து மூடிக்கொண்டு அழுது வடிந்த முகத்தை அழுத்தமாக துடைத்தபடி வந்தார் தேவகி.

ஆங்காங்கே நின்று வேலை பார்ப்பவர்கள் அவரை கேவலமாக பார்ப்பதை போன்று பிரம்மை தோன்றியது. ஆனால் நிஜமாக அவர்கள் பாவமாக தான் தேவகியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவகியின் முகத்தை பார்த்ததும் செல்விக்கு நடந்ததை யூகிக்க முடிந்தது. அழுகை முட்டிக்கொண்டு வர உதட்டை கடித்து தனக்கு எதுவும் தெரியாததை போல காட்டிக் கொள்ள முயன்றாள். காயத்ரிக்கு நடந்தது எதுவும் புரியவில்லை என்றாலும் அம்மாவை அந்த ஆள் ஏதோ ஒன்றை சொல்லி காயப்படுத்தி இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவள் எந்த பயமும் இல்லாமல் சோலை பாண்டியனை முறைத்தாள்.

இரண்டு பிள்ளைகளுக்கும் நடுவே அமர்ந்து கொண்டார் தேவகி. பிள்ளைகள் முகத்தை கூட பார்க்க அவருக்கு தெம்பில்லை. காபியும் சாக்லேட் பானமும்  இன்னொரு ட்ரேயில் வெளிநாட்டு பிஸ்கட்களும் வந்து காத்திருந்தன.

பானத்தை பிள்ளைகள் சீண்டவில்லை என்றதும் சோலை பாண்டியன்" எடுத்து சாப்பிடுங்க ரெண்டு பேரும். நீயும் எடுத்து குடி தேவகி" தேவகிக்கு அதனை கையால் தொடக்கூட மனம் வரவில்லை.

" உன்னோட பெரிய பொண்ணு" சொல்ல வந்ததை அவர் பாதியோடு நிறுத்த அவர் முகத்தை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார் தேவகி. சோலை பாண்டியனின் கண்கள் ஒரு முறை காப்பி கப்பை தொட்டுவிட்டு மீண்டது. அடுத்த கனமே சுட சுட இருந்த காப்பியை சூடு உரைக்காமல் எடுத்து வாயில் சரித்துக் கொண்டார் தேவகி.. பிள்ளைகளின் சாக்லேட் பானத்தையும் அவரே எடுத்துக் குடித்து விட்டார்.. அதில் ஏதாவது கலந்து பிள்ளைகள் மேல் கை வைத்து விட்டால் என்கிற பயம் தான்..

சோலை பாண்டியனின் கண்கள் இடுங்கினாலும்
" உன் பொண்ணு என்கிட்ட தான் இருக்கா.." தேவகிக்கு அப்பொழுதுதான் போன உயிரே திரும்பி வந்தது போல இருந்தது.

" அவளுக்கும் என்னோட ஆளுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கேன். காலையில ஒம்போது மணிக்கு கோயில்ல கல்யாணம்.. வந்து அரச்சதைய போட்டு ஆசீர்வாதம் பண்ணு. நீ வந்தா தான் கல்யாணம் பண்ணிப்பேனு உன் மக அடம்பிடிக்கிறா.. மணியாச்சி கோயிலுக்கு போகலாமா" அவர் பாட்டில் சொல்லிக் கொண்டு எழுந்து நிற்க  அவர் கூறியதைக் கேட்டு மற்ற மூவருக்கும் அதிர்ச்சியை அடக்கவே முடியவில்லை.

வேகமாக எழுந்து நின்ற தேவகி "ஐயா என்னங்கய்யா என் பொண்ணுக்கு கல்யாணமா?" மகளை ஒரு வயதான கிழவனுக்கு கட்டி வைத்து விடுவானோ என்கின்ற பயத்தில் தேவகிக்கு நெஞ்சை அடைத்து விடும்படி இருந்தது.

கேள்விக்கு பதிலே சொல்லாமல் வேகமாக சென்ற சோலை பாண்டியன் காரில் ஏறிவிட்டார். தேவகி இன்னும் நின்ற இடத்திலேயே அதிர்ந்து நின்று கொண்டிருக்க வெளியே ஹார்ன் சத்தம் கேட்டது.

"ம்மா அந்த ஆளு தான் ஹார்ன் அடிக்கிறான்.. அக்காவுக்கு கல்யாணம் அது இது என்னம்மா என்னென்னமோ சொல்றான்.. இங்கேயே நின்னுட்டு இருந்தா கண்டிப்பா எதுவும் நடக்க போறது இல்ல.. சீக்கிரம் வாம்மா அவன் நம்மள தான் கூப்பிடுறான். அக்காவுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ தெரியல." அம்மாவையும் தங்கையையும் இழுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.. சோலைப் பாண்டியன் டிரைவருக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து இருக்க, காரின் பின் இருக்கையை கண்களால் காட்டினார். மூவரும் பின்னால் ஏறிக்கொள்ள கார் பறந்தது.

ஒரு கோவிலின் முன்பு கார் நிற்க சோலை பாண்டியனுக்கு முன்பே காரை விட்டு இறங்கிய மற்ற மூவரும் வேகமாக கோவிலுக்குள் ஓடினார்கள். அங்கே ஓம குண்டத்தின் அருகே பிடித்து வைத்த பிள்ளையார் போல அலங்காரம் செய்யப்பட்ட பூங்காவனம்  அமர வைக்கப்பட்டிருந்தாள். அவள் அருகே அமர்ந்து  ஐயர் கூறிய மந்திரங்களை வேண்டா வெறுப்பாய் கூறிக் கொண்டிருந்தான் மின்னல். இதனை கண்ட தேவகிக்கு நெஞ்சை பிடித்துக் கொள்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

தொடரும்


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...