🤍
அன்று காலையிலிருந்து யோசனையாகவே காணப்பட்டான் மின்னல். அவனிடம் சிறிய தடுமாற்றம் தென்பட்டது. எதிரிகளை துளைப்போடும் பார்வையும் மிடுக்காக காணப்படுபவன் எதையோ பற்றி தீவிரமாக தனக்குள் சிந்தித்துக் கொண்டிருந்தான்.
பக்கத்தில் அமர்ந்து வண்டி ஓட்டிக் கொண்டிருந்த நாகா"ண்ணே என்ன ஆச்சு உங்களுக்கு.." நாகாவின் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவனைத் திரும்பி பார்த்தான் மின்னல் வீரபாண்டியன்.
"இல்ல.. நான் உங்களை இதுக்கு முன்னாடி இப்படி பார்த்ததே இல்லையே.. எவ்வளவு பெரிய சம்பவமா இருந்தாலும் அசால்டா முடிச்சு விட்டுட்டு போயிருவீங்க. இப்ப எந்த கோட்டைய பிடிக்கண்ணே காலையிலிருந்து ஒரு மாதிரி யோசனையாவே இருக்கீங்க.. வீட்ல இருந்து கிளம்பும் போதும் காலையில டிபன் கூட சாப்பிடல.
பாவண்ணே அண்ணி.. தட்டுல எல்லாத்தையும் பரிமாறிட்டு உங்க மூஞ்சியே பாத்துட்டு இருந்தாங்க. நீங்க என்னன்னா அவங்கள கண்டுக்காம தொண்டருங்க கிட்ட பேசிட்டு வேகமா கிளம்பிட்டீங்க.." நீண்டகாலமாக மின்னலிடம் இருப்பதால் சற்று உரிமை எடுத்து பேசினான் நாகா.
மின்னல் மனம் திறந்து பேசுவதும் நாகாவிடம் மட்டும்தான். அதுவும் அளவாக.
"ப்ச்"சலித்துக் கொண்டான் மின்னல்.
"என்னண்ணே" அக்கறையாக கேட்டான் நாகா.
" எதுக்குடா இந்த வாழ்க்கை" பெருமூச்சு கிளம்பியது மின்னலிடமிருந்து.
"அண்ணே".. மின்னலின் குரலில் இருந்த விரக்தி நாகாவை கவலை கொள்ள செய்தது.
" உங்களுக்கு என்னமோ பிரச்சனைன்னு எனக்கு தெரியுதுண்ணே. என்னன்னு சொல்லணும்னு தோணுச்சுன்னா சொல்லுண்ணே. என்னால முடிஞ்சா கண்டிப்பா நான் உனக்கு ஏதாவது செய்றேன். " சீட்டில் சாய்ந்து கொண்ட மின்னல் கண்களை மூடிக் கொண்டான்.
" எத்தனை வருஷமாடா என் கூட இருக்க"
" ஏழு வருஷத்துக்கு மேல ஆச்சுண்ணே"
" நீ எப்படா என் முதுகுல குத்த போற.. "
"அண்ணே" வண்டியை ஓரங்கட்டி விட்டான் நாகா.
"ண்ணே என்னண்ணே என்னென்னமோ பேசுற.. நான் போய் எப்படிண்ணே..எனக்கு உயிர் பிச்சை கொடுத்ததே நீதானே ண்ணே.. அன்னைக்கு மட்டும் சரியான நேரத்துக்கு நீ வரலைன்னா இந்நேரம் என் பொண்டாட்டி தாலி அறுத்துட்டு மூளையில் உட்கார்ந்து இருந்திருப்பா. அவ தினமும் சாமி கும்பிடும் போது நீயும் நல்லா இருக்கணும் தாண்ணே கும்பிடுறா" நாகாவின் குரலில் தெரிந்த ரணமும், தன்னை மின்னல் சந்தேகப்பட்டு விட்டானே என்கின்ற வேதனையும் நன்றாகவே வெளிப்பட்டது. நாகாவின் கண்ணோரம் கூட லேசாக கரித்துக் கொண்டு வந்தது.
அவன் குரலில் இருந்த மாற்றத்தை மின்னல் கண்டுகொண்டான். மின்னல் அமைதியாக இருக்க" எதையோ மனசுல போட்டு நீ குழம்பிட்டு இருக்கண்ணே.. நீ என்னை எப்படி பார்க்கிறியோ நான் உன்னை என் கூட பொறந்த அண்ணன் மாதிரி தான் பார்க்கிறேன். அந்த மாதிரி எல்லாம் நீ என்னை நினைக்க வேணாம். உன் வீட்டு சோத்த தின்ன நன்றியுள்ள நாயா நெனச்சுக்கோ. உனக்கு என்னண்ணே பிரச்சனை.".. மின்னலை அந்தக் கோலத்தில் நாகாவால் பார்க்க முடியவில்லை. இன்று நாகா உயிரோடு இருப்பதற்கு மின்னல் தான் காரணம்..
ஏழு வருடங்களுக்கு முன்பு மின்னலை போட்டுத் தள்ள எதிர்க்கட்சியினரால் ஏவப்பட்டவன் தான் இந்த நாகா.. அவனோடு வந்த அனைவரையும் சகட்டு மேனிக்கு வெட்டி வீழ்த்திய மின்னலையே தனது சண்டை திறனால் வியக்க வைத்தவன் நாகா. அந்த திறமையை கண்டுபிடித்துப் போன மின்னல் நாகாவை தன்னுடனே வைத்துக் கொண்டான்.
தான் விரும்பிய பெண்ணை மின்னலின் தலைமையில் திருமணம் செய்து கொண்டான் நாகா. மின்னலுக்கு உண்மையாக உழைத்தான்.. மின்னலுக்கு நடந்த தாக்குதலில் அவனைக் காப்பாற்ற போய் தன் உயிரை பணயம் வைத்தான் நாகா.. அதிக அளவிலான ரத்தப்போக்கு. அரிய வகை ரத்தம் என்பதால் கிடைக்க மிகவும் தாமதமாகியது.. நாகா பிழைக்கவே மாட்டான் என்ற ரீதியில் மருத்துவர்கள் கை விரித்து விட தனக்கும் அதே பிரிவு உதிரம் என்பதால் நாகாவுக்கு ரத்தம் கொடுத்து, மருத்துவ செலவு மொத்தத்தையும் மின்னலே ஏற்றுக் கொண்டான்..
தன்னிடம் உள்ள மற்றவர்களைப் போல நாகாவை அவன் என்றுமே நடத்தியது கிடையாது. நாகாவுக்கென்று தனி வீடு, வாகனம் அனைத்தும் உண்டு. மின்னலின் தனிப்பட்ட ஓட்டுநர் மட்டுமல்லாமல் அவனின் அந்தரங்கமும் அவன் தான்.. நிழல் போல கூடவே இருப்பவன். நாகாவின் குழந்தைகளை ஊட்டி கான்வெர்ட்டில் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறான் மின்னல்.
தனக்காகவும் தனது குடும்பத்திற்காகவும் இவ்வளவு செய்யும் மின்னலுக்கு அப்படி என்ன துன்பம் வந்துவிட்டது? திருமணமே செய்து கொள்ளாமல் இப்படி இருந்து விடுவானோ என்கின்ற பயத்தில் பாலை வார்த்தது பூங்காவனத்தை அவன் திருமணம் செய்து கொண்ட நிகழ்ச்சி. ஆரம்பத்தில் பூங்காவனத்தை கண்டால் நாகாவுக்கு பிடிக்காது. தரங்கெட்ட குடும்பத்துப் பெண் என்று அவளை மனதிற்குள் சாடுவான்.
ஆனால் பூங்காவனத்தின் அமைதியான குணமும், அவள் வந்த பிறகு மின்னலிடம் தெரிந்த சிறிய மாற்றமும் நாகாவுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மனதளவில் பூங்காவனத்தை அவன் அண்ணியாக ஏற்றுக் கொண்டான். அனைத்தும் நலமாக இருக்கும் வேளையில் திடீரென்று மின்னலிடம் தோன்றும் மாற்றம் நாகாவின் மனதை உலுக்கியது.
"டேய்.. நான் தப்பு செய்றனா"
"இல்லண்ணே.."
"ம்ம்ம்"
" நீ செய்யறது அடுத்தவங்களுக்கு தப்பா இருக்கலாம் ஆனா உனக்கு சரி தானேண்ணே"
" அதெல்லாம் பேசாத தப்பா சரியா அதை மட்டும் சொல்லு"
" அப்படி பாத்தா நாம செய்ற எல்லாமே தப்பு தாண்ணே"
"ம்ம்.."
"ஏன்ண்ணே திடீர்னு தப்பு சரி பத்தி பேசுற? இந்த மாதிரி எல்லாம் நீ ஒரு நாள் கூட பேசினது இல்லையே"
" புதுசா ஒரு உயிர் வரும்போது பேசி தானே ஆகணும்".. நாகாவுக்கு மின்னல் கூறியது புரியவில்லை.
"என்னண்ணே சொல்ற.. புதுசா ஒரு உயிரா"..
"ம்ம்ம்.. உங்க அண்ணி மாசமா இருக்கா" தான் கேட்டது உண்மையா என்று கிரகிக்க ஒரு நிமிடம் பிடித்தது நாகாவுக்கு. விஷயத்தை கிரகித்தவனுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
"அண்ணே உண்மையாவா சொல்றீங்க.. டாக்டர் கிட்ட செக் பண்ணிங்களா.. ஒரு தடவை அண்ணிய கூட்டிட்டு போய் பார்த்துருங்கண்ணே.. இப்பதான் வயித்துல நீர்க்கட்டி வந்தா கூட மாசமாய் இருக்கிற மாதிரி தான் அந்த டியூப் காட்டுதாம்.." மின்னல் மேலிருந்த அக்கறையில் கூறினான் நாகா.
" அதெல்லாம் கன்ஃபார்ம் தான்டா."
" எவ்வளவு சந்தோஷமான விஷயம் அதை ஏன் இப்படி இடி விழுந்த மாதிரி சொல்றீங்க"
"ம்ம்ம்" விரக்தி சிரிப்பொன்று கிளம்பியது மின்னலிடமிருந்து..
"அண்ணே"
"டேய்.. என் பொண்டாட்டி சொல்றா நான் செய்ற பாவம்லாம் என் புள்ள தலையில தான் வந்து விடியும்னு.. சொத்து சுகத்தை சேர்த்து வைக்காட்டியும் பாவத்தை என் பிள்ளை தலையில ஏத்தாதன்னு உன் அண்ணி என் காலுல விழறா.." தன்னுடைய மனைவியும் இதே போல் புலம்புவது நாகாவுக்கு நினைவுக்கு வந்தது.
அதனால் அவன் அமைதியாக இருந்தான். சாமானிய பெண்ணாகிய பூங்காவனத்தின் பயத்தையும் வேதனையும் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது..
" இப்ப என்னெண்ணே பண்ணப் போறீங்க.. சோலை பாண்டியன் ஐயா வேற இப்பதான் உங்களை வாரிசுன்னு அறிவிச்சிருக்காரு.. அதனால உங்களுக்கு எவ்வளவு நல்லது நடக்குது"..
"அவரு செய்ற பாவமும் என் தலையில விழுது".. என்றதும் நாகா முகம் சிறுத்து போனது. உண்மையைச் சொல்லப்போனால் நாகாவுக்கும் சோலை பாண்டியனை பிடிக்கவில்லை. ஏதோ ஒரு முக்கிய காரணத்திற்காக தான் மின்னலை அவர் வாரிசாக அறிவித்திருக்கிறார் என்பதை அவன் ஆணித்தரமாக நம்பினான்.
"ண்ணே நான் ஒன்னு சொல்லவா" தயங்கினான் நாகா..
"என்னடா"..
"அண்ணே அது வந்து.. சோலை பாண்டியன் ஐயா உங்கள வாரிசுனு சொன்னது நல்லது தான்.. நிறைய நல்லது நடக்குது தான். ஆனா என் மனசுக்கு என்னவோ தப்பா படுத்துண்ணே.."அமைதியாக இருந்தான் மின்னல்.அதற்கு மேல் அவனிடம் பேச பயந்த நாகா வண்டியை கிளப்பினான். நேற்றைய இரவில் யாருமே கணவனிடம் இம்மாதிரி நிலையில் கர்ப்பத்தை உறுதி செய்ய மாட்டார்கள்.
"ஏன்டா நீங்க எல்லாம் ஒரு அம்மாவுக்கு தான் பொறந்தீங்களா.. பணம்னா உங்க அம்மாவை கூட்டி கொடுத்துருவியோ.. எப்ப என்ன அந்த கிழவனுக்கு கூட்டி கொடுக்க போற.. சொல்லிட்டனா இந்த வயித்துல வளர்ர உன் பிள்ளையை கலைச்சிட்டு அவனோட பிள்ளையை சுமக்க தயாராயிடுவேன்"எத்தனை பெரிய வார்த்தையை சொல்லி விட்டாள்.
அவளை அடிக்க கை ஓங்கியவனின் கரம் தானாக கீழே விழுந்தது. கலங்கிய கண்களோடு அவளும், அதிர்ந்த விழிகளோடு இவனும் வினாடிகள் நிமிடங்களாக மெல்ல வலது கரம் உயர்த்தி பூங்காவின் மணி வயிற்றைத் தொட்டுப் பார்த்தான் மின்னல் வீரபாண்டியன்.
" இப்பவே அந்த கிழட்டு பைய கிட்ட போய் பேரம் பேசு. யார் கண்டா ஒருவேளை பொறக்கறது பொம்பளையா கூட இருக்கலாம்.. அவனுக்கு தான் சின்ன புள்ளைங்கனா ரொம்ப புடிக்குமே.." அவளின் வார்த்தைகள் தீ கனலாய் அவனை சுட்டுப் பொசுக்க பூங்காவனத்தின் கழுத்தை இறுக்கமாய் பற்றியது மின்னலின் கரம்.
"என்ன கோவம் வருதா? என்ன படுக்க கூப்பிட்டவன்.. என் தங்கச்சிங்க மேல கண்ணா இருக்கறவன்.. என் புள்ளய விட்டு வெச்சிருவானா?" மூச்சுக்கு சிரமப்பட்ட வேளையிலும் வார்த்தைகளை கடித்து துப்பினாள் பூங்காவனம்.
"இன்னொரு வார்த்தை பேசுன" மனிதன் மிருகமாக மாறினான்.. அவனைக் கண்டு பயப்படும் நிலையை எல்லாம் பூங்காவனம் தாண்டி விட்டாள். நேருக்கு நேர் அவனின் கண்களைப் பார்த்து விழி பிதுங்கிய போதிலும் அலட்சிய புன்னகை ஒன்று அவள் இதழ்களில் பூத்தது.. தானாகவே தளர்ந்தது மின்னல் வீரபாண்டியனின் பிடி.
தொடரும்
No comments:
Post a Comment