தடபுடலாக தனக்கு முன்னாள் வைக்கப்பட்டிருந்த உணவு வகைகளை பார்த்தான் மின்னல் வீரபாண்டியன். தேவகியின் காதில் உயிரை கையில் பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த இரண்டு கம்மல்களை காணவில்லை. அவை பத்திரமாக சேட்டு கடையில் உறங்கிக் கொண்டிருந்தது.. உணவோடு சேர்த்து மாப்பிள்ளைக்கு செய்வதற்காக பூங்காவனம் ஒன்று கொடுத்த பணத்தையும் போட்டு அரை பவுனில் மோதிரம், வேஷ்டி சட்டை பூங்காவனத்திற்கு பட்டு சேலை இரண்டு ஜோடி சிறிய குத்துவிளக்கு,இரண்டு வெள்ளித்தட்டு, வளையல் பூ பழம் இப்படி தன்னால் ஆனதை வாங்கி வந்து தட்டில் அடுக்கி வைத்திருந்தார் தேவகி.
மறு வீட்டு விருந்தையே தடால் அடியாக வந்து கேட்டவன் திடீரென்று ஒரு நாள் என்ன செய்தீர்கள் என்று கேட்டு விட்டால் அந்த நேரத்தில் எங்கே சென்று நிற்பது? நாளைய தினத்தைப் பற்றி தேவகிக்கு கவலை கிடையாது. அவர் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்திருந்தார். வீட்டு வேலை செய்தாவது இனி தன்னுடைய மற்ற இரு பிள்ளைகளையும் பார்த்துக்கொள்ளும் மனதிடம் அவருக்கு வந்துவிட்டது. என்ன உடல்தான் அதற்கு ஒத்துழைக்குமோ என்னமோ?
இன்னுமே மின்னல் பூங்காவை தன்னுடைய மனைவியாக ஏற்றுக் கொண்டானா? அவர்களுக்கு நடந்தது உண்மையான திருமணமா? இந்த சந்தேகம் தேவகியை பேயாய் பிடித்து ஆட்டியது. இருந்தாலும் மனதில் ஏதோ ஒரு மூலையில் மின்னல் ஒரு சதவீதமாவது நல்லவனாக இருந்து விடக் கூடாதா? தன் வாழ்வை போல தன்னுடைய மகள் வாழ்வு ஆகி விடக்கூடாது.. அவளாவது சந்தோஷமாக திருமண வாழ்வை அனுபவிக்க வேண்டும். கணவன் குழந்தைகள் என்று சமூகத்தில் நல்ல பெயரோடு வாழ வேண்டும்.
ஒரு தாயாக தேவகியின் மனம் இதை தான் எதிர்பார்த்தது.காதில் போட்டிருந்த சிறிய தோட்டையும் அவர் அடகு வைத்திருப்பதை கண்ட பூங்காவுக்கு ஆத்திரம் அடக்க முடியாமல் வந்தது.. அம்மாவிடம் அதனை காட்ட முடியவில்லை. மின்னலிடம் அதைக் காட்ட முற்பட்டால் கூட விளைவு எப்படி இருக்கும் என்று தெரியவில்லை. அவளது வாழ்வே கண்ணை கட்டி காட்டில் விட்டார் போல இருந்தது.
முடிந்த அளவுக்கு கோழி ஆடு மீன் இறால் இப்படி மாப்பிள்ளைக்கு வகைவகையாக ஆக்கி பெரிய விருந்தே ஏற்பாடு செய்து விட்டார் தேவகி. மருமகனுக்கு சமைத்து போடுவது கூட அவருக்கு சிரமமாக இல்லை. சோலை பாண்டியன் உடன் அமர்ந்திருப்பது மட்டுமே அவரது வேதனையை பன்மடங்காக உயர்த்தியது. ஒவ்வொரு தடவையும் அவருக்கும் தேவகிக்கும் என்ன உறவு இருந்தது என்பதை அவர் மேலோட்டமாக சொல்ல அவமானத்தால் உயிர் போய் உயிர் வந்தது.
நல்ல வேலையாக சாப்பாட்டு நேரம் வரும்போது முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி சோலை பாண்டியன் சென்று விட்டார். நிம்மதியாக மருமகனுக்கு தலைவாழை இலை வெட்டி பரிமாறினார் தேவகி. முகத்தில் கடுப்போடு அதனை ஒரு ஓரமாக அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம்.. அமைதியாக அமர்ந்து அனைத்தையும் சாப்பிட்டு முடித்தவன் வெளியே கிளம்ப எத்தனித்தான். அவன் நன்றாக இருக்கிறது என பாராட்டியிருந்தால் கூட பூங்காவின் மனம் ஆறிருக்கும்.
எதுவும் பேசாமல் அவன் பாட்டிற்குச் செல்ல தேவகி தான் அவனை அழைத்தார். "மாப்பிள்ளை" நின்றானே ஒழிய என்னவென்று கேட்கவில்லை.
"அது.. ஏதோ என்னால முடிஞ்சது மாப்பிள.. தயவு செஞ்சு நீங்க இதை வாங்கிக்கணும்" தட்டில் தான் வாங்கி வந்த அனைத்தையும் அடக்கி மின்னலின் முன்பு நீட்டினார் தேவகி.
தட்டையும் அவரையும் ஒரு பார்வை பார்த்தவன் பூங்காவை பார்த்தான்.. அவள் இதற்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்பதைப் போல நடந்து கொண்டாள்.
" எதுக்கு இதெல்லாம்"
" இல்ல மாப்ள.. முறைன்னு ஒன்னு இருக்குல்ல.. "
" இங்க எல்லாமே அப்படித்தான் நடக்குதா.." தேவகிக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
அங்கே அசாதாரணமான அமைதி நிலவ என்ன நினைத்தானோ தனக்கான வேஷ்டி சட்டையை மட்டும் எடுத்துக் கொண்டான்..
" மாப்பிள்ளை.. நீங்க போட்டு இருக்கிற மாதிரி பெரிய மோதிரம் வாங்க எனக்கு சக்தி இல்லை. ஏதோ என்னால முடிஞ்சது அரை பவுன் மோதிரம்.. "
தேவகியின் கவலைப்படர்ந்த கண்களை சந்தித்தவன்"இதுவே போதும்.. "என்றான்.
"மாப்பிள்ளை" மார்பின் குறுக்கே கைகட்டி அவரை பார்த்தான்.
" நீங்க எதனால என் பொண்ண கல்யாணம் பண்ணிக்கிட்டிங்கன்னு எனக்கு தெரியும்.. இது உண்மையான கல்யாணமா இல்ல ஏதாவது உள்நோக்கம் இருக்கான்னு எனக்கு புரியல. ஏற்கனவே என் குடும்பம் அந்தர சிந்தரயா போய் கிடக்கு. எல்லாம் எனக்கு வாச்ச ஒருத்தனால வந்தது.. என்னோட நிலைமை என் பொண்ணுக்கும் வரக்கூடாது..
அவ வேற வழியே இல்லாம தான், அவளோட தங்கச்சிங்கள காப்பாத்த சோலை பாண்டியன்.. " மேலே சொல்ல முடியாமல் தொண்டை குழி ஏறி இறங்கியது.
" நானும்.. என் புருஷன் வாங்கி வச்சிட்டு ஓடுன கடத்துக்காக" இப்பொழுது கதறி அழுதே விட்டார் தேவகி..
"அம்மா" பூங்கா வேகமாக வந்து தேவகியை தாங்கிக் கொண்டாள்.
" இதெல்லாம் எதுக்கு உங்க கிட்ட நான் சொல்றேன்னா, நீங்க உயர்வா நினைக்கிற அளவுக்கு என்கிட்ட எதுவுமே இல்ல. பணம் காசு தான் இல்லன்னு பார்த்தா மானமும் இல்லை.. ஆனா நான் இதுவரைக்கும் என் மானத்தை தான் வித்துருக்கேனே நீ தவிர கடவுள் புண்ணியத்துல என் பொண்ணுங்க மானத்துக்கு எந்த பங்கமும் வந்ததில்லை. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போன மாதிரி பூங்காவுக்கு வந்த ஆபத்தும் விலகி அவளை நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க..
என் பொண்ண ஏத்துக்கோங்கனு நான் கேட்கல. அவளை நீங்க வச்சிருக்கீங்களோ வெட்டி விடுறீங்களோ எதுவா இருந்தாலும் தயவு செஞ்சு சட்டுனு சொல்லிருங்க. எதையாவது ஒன்ன மனசுல வச்சுக்கிட்டு என் பொண்ணு தப்பானவனு நெனச்சு அவள சித்திரவதை செய்யாதீங்க. அது தாங்குற தெம்பு எனக்கு கிடையாது.".. அம்மா அழுவதை கண்டு பூங்காவனத்திற்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இவன் என்ன மனிதனா அல்லது மிருகமா? மிருகத்திற்கு கூட இரக்கம் இருக்கிறது.
இந்த அளவிற்கு அவன் முன்பு மண்டியிட்டு அழும் பெண்ணை பார்த்த பிறகும் அவனது இதயம் உருகவில்லை என்றால் இவன் மனித பிறவி என்பதற்கு என்ன ஆதாரம்?
" அம்மா உனக்கு அறிவு இருக்கா? மனுஷங்க கிட்ட போய் நீ அழுதா அதுக்கு ஏதாவது பயன் இருக்கும். மிருகத்துக்கிட்ட நீ சொல்லி அழுதா அதுக்கு என்னமா பயன் இருக்க போகுது. பேயா இருந்தா கூட மனசு இறங்கியிருக்கும். பேய விட மோசமானவங்க அம்மா இவனுங்க.."
"பூங்கா"
"கம்முனு இரும்மா நீ. இவனெல்லாம் ஒரு ஆளுன்னு இவங்கிட்ட மண்டி போட்டு அழுது கிட்டு இருக்க.. அப்படி என்ன நடந்தர போது? படுக்க கூப்பிடுவானுங்க.. இவனுங்களுக்கெல்லாம் அது மட்டும் தானா தெரியும்.. இதோ இவன் நிக்கிறானே பேருக்கு தான் எனக்கு தாலி கட்டி இருப்பான்.. யார் கண்டாலும் எந்நேரம் வேணாலும் அந்த சோலை பாண்டியனுக்கு என்ன கூட்டி கொடுக்க இவன் தயங்க மாட்டான்.." சொல்லி வாய் மூடவில்லை கன்னமே பற்றி எரிந்ததைப் போல சுருண்டு போய் கீழே விழுந்தாள் பூங்காவனம்.
"ஐயோ பூங்கா" அலறி அடித்தபடி மகளை தாங்கி பிடிக்க ஓடினார் தேவகி. அவரைப் பிடித்து அந்தப் பக்கம் தள்ளிய மின்னல் கீழே விழுந்து எழ முயன்ற பூங்காவின் கூந்தலை பிடித்து தூக்கினான்..
"ஹா.. விட்றா விடு". அவனிடமிருந்து விடுபடப் போராடினாள் பூங்காவனம். அவள் கூந்தலை இன்னும் வலிக்க செய்யும் விதமாக இறுக்கமாய் பிடித்தவன்
"வார்த்தை ரொம்ப முக்கியம் அம்மாடி.."என்றவாறு அவளை விடுவிக்க பளாரென்று மறு கன்னத்தில் அறைந்தான்..
அவள் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த மாங்கல்யத்தை கையில் ஏந்தியவன்" இதுக்கு என்ன அர்த்தம்னு உனக்கு தெரியுமான்னு எனக்கு தெரியாது. ஊரு உலகம் இதுக்கு என்ன அர்த்தம் சொல்லி வெச்சிருக்கோ அந்த அர்த்தம் மட்டும் தான் எனக்கு தெரியும்.. மூளை இருந்தா புரிஞ்சுக்கோ" அவளை விடுவித்தவன் வேகமாக வாசல் படி வரை சென்று
" இன்னும் ஒரு மணி நேரத்துல நான் திரும்பி வருவேன்.. கூட வரியா இங்கயே இருக்கியான்னு முடிவு பண்ணிக்கோ" மின்னல் வீரபாண்டியன் விறுவிறுவென வெளியேறி விட்டான்.
இரு பக்க கன்னங்களும் தீ பிடித்தார் போல எரிந்தது. அவன் பேசி சென்ற வார்த்தைகள் மூளைக்குள் மின்னல் அடிக்க அப்படியே தரையில் சரிந்து அமர்ந்தாள் பூங்காவனம்..
அவன் என்ன சொல்ல விளைகிறான்? அப்படி என்றால் இந்த திருமணத்தை அவன் ஏற்றுக் கொண்டானா? அவனுடைய தகுதிக்கும் தராதரத்திற்கும் ஏணி வைத்தால் கூட எட்டாத ஒரு பெண்ணை எப்படி வாழ்க்கை துணையாக அவன் ஏற்றுக் கொண்டான்? பின் எதற்காக நேற்றிலிருந்து அவளை குத்திக் கொண்டே இருக்கிறான்?
மின்னலின் மீது பூங்காவுக்கு நம்பிக்கை வர மறுத்தது. ஏதோ ஒரு திட்டத்தை மனதில் வைத்துக் கொண்டுதான் அவன் இம்மாதிரி வார்த்தை ஜாலத்தை காட்டி விட்டு சென்றிருக்கிறான் என்பதை ஆணித்தரமாக நம்பினாள். ஆனால் தேவகிக்கு மின்னலின் மீது அபார நம்பிக்கை வந்தது..
மகளின் வாழ்க்கை தன்னை போல் ஆகி விடாது என்பதில் அவருக்கு அப்படி ஒரு உறுதி. தரையில் அமர்ந்திருந்த பூங்காவின் அருகே வந்து அமர்ந்தவர் அவளை தன் மடியில் சாய்த்துக் கொண்டார்.
மெல்ல பூங்காவனத்தின் தலைமுடியை கோதி கொடுத்துக் கொண்டே" நான் கூட என்னமோ ஏதோனு பயந்து போய்ட்டேன். நல்ல வேளை மாப்ள நாம நெனச்ச மாறி கிடையாது.. உன் வாழ்க்கை இனிமே நல்லா இருக்கும்டி".. என்றவர் வேகமாக எழுந்து சாமி படத்தின் அருகே ஓடினார். விளக்கை ஏற்றி பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக் கொண்டார். கன்னங்களில் கண்ணீர் ஆராய் வடிந்தது. இத்தனை காலமாக அவர் வணங்கி வந்த தெய்வம் அவரை கைவிடவில்லை.
கண்மூடி மானசீகமாக ஏதேதோ பிரார்த்தனைகள் முணுமுணுத்தார். அவரின் உடலே நடுங்கியது. அனைத்தையும் தரையில் பார்த்தபடி பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம். ஒரு பக்கம் தேவகியை நினைக்கும் போது அவளுக்கு எரிச்சலாக வந்தது. எப்படி இந்த அம்மா இவ்வளவு சுலபத்தில் ஒரு ஆளை நம்புகிறாள்? அதுவும் அவன் ஒரு ஆண்.. இரண்டு ஆண்களால் அவள் வாழ்வே பாழாகிய பின்பும் எதற்கு இந்த நம்பிக்கை?
செல்வியும் காயத்ரியும் வீட்டிற்கு வந்தார்கள். வேகமாக பாயாசம் தயாரிக்கும் வேலையில் இறங்கிவிட்டார் தேவகி. விஷயம் கேள்விப்பட்டு செல்விக்கும் காயத்ரிக்கு மிகுந்த சந்தோஷம்.
"அக்கா.. என்னோட மாமா எம்பினு என் பிரெண்ட்ஸ் எல்லார்கிட்டயும் நான் சொல்லுவேன். நான் எவ்வளவு ஹேப்பி தெரியுமா" பூங்காவை கட்டிக் கொண்டாள் காயத்ரி.
" அக்கா சொன்னா நீ திட்டுவேன்னு தான் நான் சொல்லல. உன்னோட அழகுக்கு மாமா தான் கரெக்ட்டு. ஆளு பார்க்க ஹயிட்டா வெயிட்டா சினிமா ஹீரோ மாதிரி இருக்காரு..எங்க அந்த சோழ பாண்டியன் கையில நீ மாட்டிக்கிவியோனு எவ்ளோ பயந்து போய்ட்டேன் தெரியுமா.. இப்போதான் சந்தோஷமா இருக்கு.. " தனக்கு வராத நம்பிக்கை எப்படி தன் குடும்பத்தினருக்கு வந்தது என்பது பூங்காவனத்திற்கு புரியவில்லை.
சொன்னபடியே இரண்டு மணி நேரத்தில் திரும்ப வந்தான் மின்னல் வீரபாண்டியன். வாசலில் நின்று
" என்ன முடிவு பண்ணிருக்க"அவன் கேட்க பெண் அமைதியாக நின்றாள். அவளின் அமைதி தேவகி வயிற்றில் புளியை கரைத்தது..
"பூங்கா"..
அம்மா தங்கைகளை பார்த்தவள் ஒரு சதவீதம் கூட அவன் மேல் நம்பிக்கை இல்லாமல் அவர்களின் சந்தோசத்திற்காக அவனோடு செல்ல சம்மதித்தாள்..
அவனின் பொறுமை துளியாய் கரைய"உள்ள வாங்க.."என்றழைத்து தன்னுடைய சம்மதத்தை மறைமுகமாக வெளிப்படுத்தினாள் பூங்காவனம்..உதடுக்கே எட்டாத புன்னகை ஒன்று ஆடவனின் இதழ்களில் தோன்றி நொடியில் மறைந்தது..
தொடரும்
No comments:
Post a Comment