பூங்காவனம் கண்விழிக்கும் போது எந்த இடத்தில் அவள் மயங்கி விழுந்து கிடந்தாளோ அதே இடத்தில் தான் சுருண்டு கிடந்தாள்.. கேட்பார் யாருமற்ற அனாதை போல சோலை பாண்டியனின் வீட்டு நிலை வாசலில் கர்ப்பிணிப் பெண் மயங்கிக் கிடக்க அவளது முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பக்கூட சோலை பாண்டியனுக்கு மனம் வரவில்லை. காலையில் பூங்கா தன் முன்பு தைரியமாக நின்றதுமல்லாமல், தன்னையே எதிர்த்துப் பேசியதை அவரால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. அந்த இடத்திலேயே பூங்காவை முடித்து கட்டும் அளவிற்கு குரோதம் எழுந்தது அவருள்ளே. இருக்குமிடம் கோவில் என்பதால் தன்னுடைய வெறி அனைத்தையும் அடக்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்..
மகாலட்சுமி வேறு வீட்டில் இல்லை.. அவளுடைய நெருங்கிய தோழி பைரவியின் திருமணத்திற்காக காஞ்சிபுரம் சென்று இருக்கிறாள். நேற்று கிளம்பியவள் இதோடு இன்னும் இரண்டு நாள் கழித்து தான் வீடு வந்து சேருவாள்..
மருத்துவர் ஒரு வாரத்திற்குள் எப்பொழுது வேண்டுமானாலும் மகாலட்சுமிக்கு பிள்ளை வலி வரலாம் என்று கூறியிருந்தார். சோலை பாண்டியனின் மற்ற இரு மகள்களும் தங்கையை கவனித்துக் கொள்ள இன்னும் இரண்டு மூன்று நாட்களில் வந்து விடுவார்கள்..
இத்தனை நாட்கள் பூங்காவனம் சோலை பாண்டியனின் கண்களில் இருந்து தப்பித்தது மகாலட்சுமியால் தான்.. மகளின் வேதனை சோலை பாண்டியனை நகர விடாமல் செய்தது. இன்றோ மகாலட்சுமி இல்லாத நாளில் மீண்டும் அவரது கேடுகெட்ட குணம் தலை தூக்கியது..
தன்னை அவமதித்த பூங்காவனத்திற்கு அவளது நிலை எதுவென்று காட்டத் துடித்தார் சோலை பாண்டியன். மின்னல் அவரைப் பொறுத்தவரை ஒரு நன்றியுள்ள நாய் என்று பூங்காவனத்தின் முன்பு நிரூபிக்க ஆசைப்பட்டார்.. எனவே நன்றாக யோசித்து ஒரு முடிவுக்கு வந்தவர் நேராக கிளம்பி மின்னல் வீரபாண்டியனின் அலுவலகத்துக்குச் சென்றார்.
அவரைக் கண்டதும் தனது சீட்டிலிருந்து எழுந்து நின்றான் மின்னல். " ஐயா வாங்க ஐயா என்ன இவ்வளவு தூரம்.. ஒரு வார்த்தை சொல்லி இருந்தீங்கன்னா நான் வீட்டுக்கு வந்திருப்பேனே" மார்பின் குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு பணிவாக தன் முன் நிற்கும் மின்னலை மிதப்பாக நோக்கினார் சோலை பாண்டியன்.
கால் மேல் கால் போட்டு சோலை பாண்டியன் அமர அவர் முன்பு கைகட்டி நின்று கொண்டிருந்தான் மின்னல்.
" அது ஒன்னும் இல்லடா மின்னலு சும்மா இங்க ஒரு வேலையா வந்தேன். அப்படியே நம்ம பையன் இருக்கானேனு உன்னை பார்க்க வந்தேன்.. ஏன்டா வரக்கூடாதா.."
" நான் உங்களை போய் அப்படி சொல்லுவேனாய்யா.. இந்தப் பதவி இன்னிக்கு நான் வாழ்ற வாழ்க்கை எல்லாமே நீங்க போட்ட பிச்சை.." மீண்டும் தான் ஒரு விசுவாசமான அடியாள் என்பதை நிரூபித்தான் மின்னல்..
" உன்ன நெனச்சாலே அப்படியே புல்லரிக்குது மின்னலு. என்கிட்ட இதுவரைக்கும் எத்தனையோ பேர் வேலை செய்றானுங்க. ஒருத்தன் கூட உன் அளவுக்கு விசுவாசமா இருந்தது கிடையாது. உண்மையாவே நீ ஒரு நல்ல வேலைக்காரன் தான் டா. " அமைதியாக நின்றான் மின்னல்..
வந்துவிட்டாரே தவிர அவருக்கும் நேரடியாக எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று புரியவில்லை. மணியை பார்ப்பதும் மின்னலை பார்ப்பதும், அந்த இடத்தையே கண்களால் அலசுவதுமாக சற்று நேரத்தை தள்ளி போட்டார். அவர் எதையும் சொல்ல வந்து சொல்லாமல் தவிப்பதை அறிந்து கொண்ட மின்னல்
"ஐயா என்னங்கய்யா.. என்னமோ பேச வந்துட்டு பேசாம இருக்கீங்க.. ஏதாவது முக்கியமான விஷயமா? இங்க வச்சு பேசலாமா இல்ல ஐயா வீட்டுக்கு போயிடலாமா.." பணிவாக கேட்டான் மின்னல்.
" வீட்ல வச்சு பேசுற விஷயமா இருந்தா உன்னை ஏன்டா தேடி வர போறேன்? அது என்னன்னா"
"சொல்லுங்கய்யா"
"அது.. சரிடா உன் கிட்ட சொல்றதுல என்ன இருக்கு? உன் பொண்டாட்டி பூங்காவ எப்படி உனக்கு கல்யாணம் செஞ்சு வச்சேன்? எதுக்காக செஞ்சு வெச்சேன்?"மின்னல் அமைதியாக இருந்தான்.
சோலை பாண்டியன் தன்னுடைய பேச்சை தொடர்ந்தார்" அவளோட அம்மா இருக்காளே தேவகி அவ ஒரு நடத்த கெட்டவ.. அவளோட யோகியத தெரிஞ்சு தான் புருஷன்காரன் மூணு பொட்ட பிள்ளைங்கள விட்டுட்டு ஓடி போயிட்டான்..போறப்ப சும்மா போனானா என்கிட்ட கைநீட்டி பணத்தை வாங்கிட்டு ஓடிட்டான்.. நமக்கு மட்டும் என்ன பணம் மரத்தில்லையா காய்க்குது போனா போட்டோ கழுதையை விட்டு தள்ள.. நானும் நல்ல விதமா அவளை கூப்பிட்டு இதோ பாருமா இந்த மாதிரி உன் புருஷன் என்கிட்ட பத்திரத்துல கையெழுத்து போட்டு பணம் வாங்கி இருக்கான்.. இப்ப அவன் ஓடிப் போயிட்டான். நியாயப்படி பார்த்தா இனிமே அந்த தொகையை நீ தான் கட்டணும். எப்படி அந்த பணத்தை அடைக்க போற? மாசம் உன்னால ஒழுங்கா வட்டி கட்ட முடியுமான்னு கேட்டேன்.
ஐயா மூணு பொட்ட பிள்ளைங்கள வச்சுட்டு நான் என்னத்தையா பண்றது.. அம்புட்டு பெரிய தொகைக்கு என்னால எப்படியா வட்டி கட்ட முடியும்.. அது மட்டும் இல்ல ஆம்பள இல்லாத வீடுன்னு கண்ட காவாலிப்பயலும் வம்பிழுக்கறானுங்க.. இப்படி நாதியத்து நிக்கிறனே.. நீங்க தான்யா பார்த்து இதுக்கு ஒரு முடிவு சொல்லணும்னு ஒரே அழுகை..
நீங்க என் வீட்டுக்கு வர போக இருந்தீங்கன்னா கண்டவனும் என் வீட்டு பக்கட்டு வரமாட்டான். எனக்கும் என் பிள்ளைகளுக்கும் அது ரொம்ப பாதுகாப்பா இருக்கும். நானும் உங்களை அனுசரிச்சு இருந்துக்கிறேன் அப்படின்னு தேவகி சொல்லும்போது பொண்டாட்டி செத்த ஆம்பள வேற என்னத்த பண்ண முடியும்?
சரி ஒரு பொம்பள கிடந்து தவியா தவிக்கிறாளேனு அவ வீட்டுக்கு சும்மா போயிட்டு வர இருந்தேன். அதுவே காலப்போக்குல எங்களுக்குள்ள ஒரு பழக்கத்தை ஏற்படுத்தி விட்டுருச்சு.. ஊசி இடம் கொடுக்காம நூலு நுழையுமா?
எப்படியோ வாங்குன பணத்துக்கு ஒளிஞ்சி போட்டும்னு நானும் அதை பத்தி கேட்கவே இல்லை. திரும்ப எவளுக்கோ வட்டி வாங்கி கொடுக்க சொல்லி, அவ பணத்தை தூக்கிட்டு ஓடிட்டா. கேரன்டி கையெழுத்து போட்டது தேவகி தானே. அவதான மொத்த பணத்தையும் திரும்ப திரும்ப தரணும்.. இங்க என்ன நாம பொது சேவையா செஞ்சுக்கிட்டு இருக்கோம்?
வாங்கின பணத்த திருப்பிக் கொடுக்க வாங்கில்லாம இந்த தடவை ஆத்தாளுக்கு பதிலா மக வந்தா.. என் அம்மாவுக்கு வயசாகி போச்சு. நீங்க சொல்றபடி எல்லாம் நான் நடக்குறேன். அந்த கடனை கழிச்சி விடுங்கனு.. நீயே சொல்லு மின்னலு, நான் என்னைக்காவது தானா வந்தத விட்ருக்கேனா?
இருந்தாலும் ஏன் அந்த பொண்ண உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்? உன் மேல எனக்கு ஒரு தனி பிரியம்.. அதனால தான் உன்னை என் வாரிசா தத்தெடுத்து, அந்த பொண்ணு உனக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். ஆத்தா எப்படியோ ஆனா பொண்ணு நல்ல பொண்ணு.. இப்ப எதுக்கு இதெல்லாம் நான் சொல்றேன்னா, அந்த பொண்ணு மேல நான் ஆசைப்பட்டேன் மின்னலு.. நீ மனசு வச்சா முடியும்.. " நேரடியாக விஷயத்தை உடைத்து விட்டார் சோலை பாண்டியன்.
சற்று நேரம் மின்னல் ஆடாமல் அசையாமல் நின்றான்.. ஒரு சில வினாடிகளில் தன்னை சமாளித்துக் கொண்டவன்
"ஐயா நான் உங்க வீட்டு நாய். நாய் கிட்ட எதுக்கய்யா அனுமதி கேக்குறீங்க.. அவளைக் கொண்டு வந்து உங்க வீட்டில விடணும்னா விட போறேன்.. அதுக்கு போய் என்கிட்ட? இவ்ளோ தானா, நீங்க என் மேல வச்சிருக்கற நம்பிக்கை?" மின்னல் மனதுடைந்து பேச சோலை பாண்டியனுக்கு பெருமை பிடிபடவில்லை.
வேகமாக எழுந்தவர் மின்னலை கட்டிக் கொண்டார். "மின்னலு என் ராசா.. நீ தங்கம்டா சொக்க தங்கம்.. உன் மேல நம்பிக்கை இல்லாம இல்லடா. ஆயிரம் இருந்தாலும் இப்ப அந்த பொண்ணு உன் பொண்டாட்டி. அதான் என்னமோ சொல்றானுங்களே இந்த லவ்வு கிவ்னு.. அப்படியே ஏதாவது அந்த சிறுக்கி மேல வந்து நான் கேக்குறதுக்கு இல்லன்னு சொல்லிட்டா அப்புறம் என்னால தாங்க முடியாது பாரு. அந்த அளவுக்கு உன்னை என் மகன் ஸ்தானத்துல வச்சிருக்கேன்"
" நீங்க நிம்மதியா வீட்டுக்கு போங்கய்யா. அவளே உங்க வீட்டுக்கு வருவா" சோலை பாண்டியனுக்கு நம்பிக்கை கூறி அனுப்பி வைத்தான் மின்னல். இவ்வளவு நேரம் உள் அறையில் நடந்த சம்பாசனைகளை வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த நாகா அவசரமாக உள்ளே வந்தான்.
அவனால் மின்னலை பார்த்து கூட பேச முடியவில்லை. அமைதியாக நின்றவனை" என்னடா" வினவினான் மின்னல்.
" நீங்க இவ்ளோ கீழ்தரமானவன்னு எனக்கு தெரியாம போச்சுண்ணே.. "
"டேய்'
" சும்மா கத்தாதீங்கண்ணே. நம்ம தொழில்ல வெட்டு குத்து கொல பொம்பள இதெல்லாம் சகஜம் தான். ஆனா எவனும் பொண்டாட்டிய கூட்டி கொடுத்து பொழப்பு நடத்த மாட்டான்..எப்படிண்ணே அதும் மாசமா இருக்கிற பொண்ண போய்".. பல தடவை பூங்காவனத்தின் கையால் வாங்கி சாப்பிட்டு இருக்கிறான். பூங்காவுக்கு நடக்க போகும் அநீதியை நினைத்து கண்களே கலங்கி விட்டது அவனுக்கு..
" என் முன்னாடி குரல் உசத்தி பேசுற அளவுக்கு வந்துட்டியா. சங்கருத்து போட்டுருவேன்.. என்னடா அண்ணி பெரிய அண்ணி உலகத்துல இல்லாத அண்ணி.. அவ மொத என் பொண்டாட்டி. அப்புறம் தான் உனக்கு அண்ணி அதை ஞாபகத்துல வச்சுக்கோ.. உன் வேலை என்னவோ அதை மட்டும் பாரு. தேவையில்லாம உன் பொண்டாட்டி கழுத்துலருந்து தாலி இறங்க காரணமாயிடாத.." மின்னலை மீறி எதுவும் செய்ய முடியாத இக்கட்டான நிலையில் சிக்கிக் கொண்டான் நாகா. மனசாட்சி அவனை கேவலமாக காரி துப்ப, பூங்காவனத்தின் கற்பை விட அவன் மனைவியின் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த தாலி நாகாவுக்கு பெரிதாகப்பட்டது.
அவன் பொண்டாட்டி அவன் கண்டவனுக்கும் அனுப்பி வைப்பான். இதுல தலையிட நாம யாரு.. இருந்தாலுமே மனம் கேட்காம வாழ்வில் முதல் முறையாக இறைவனிடம் பூங்காவுக்காக பிரார்த்தனை செய்தான்.
" இன்னும் எவ்ளோ நேரம் டி அங்கே விழுந்து கிடக்க போற.. எந்திரிச்சி இங்க வா " குரல் கட்டளையாக வெளிவந்தது சோலை பாண்டியனிடமிருந்து.
கட்டு தடுமாறி கதவை பிடித்துக் கொண்டு எழுந்து நின்றவள் சோலை பாண்டியனை வெறித்து நோக்கினாள்.. கட்டிய கணவனின் துரோகம்.. ஒரு பெண்ணுக்கு இதைவிட மரண வேதனை இருக்க முடியுமா? ஆசையாக பாலை பருக்க போகும் நேரத்தில் வாய் சுட்டு விட்டால் எந்த அளவிற்கு மனம் வெறுத்துப் போகுமோ அந்த அளவிற்கு மின்னல் மீது இருந்த பற்று அனைத்துமே அவளுக்கு அறுந்து போனது..
வெளியே பார்வையை திருப்பினாள்.. அவள் வரும்போது இல்லாத பத்து பேர் இப்பொழுது வெளியே நின்றார்கள். இவர்களை மீறி அவளால் வெளியே செல்ல முடியும் என்று தோன்றவில்லை.. மீண்டும் பார்வையை சோலை பாண்டியன் மீது திருப்பினாள்..
" நான் நம்ப மாட்டேன்.. என் புருஷன் இப்படி பண்ணிருக்க மாட்டான் " எந்த நம்பிக்கையில் அவ்வாறு கூறுகிறாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. சோலை பாண்டியன் அட்டகாசமாக சிரித்தார்.
"மின்னலு டேய்.." சோலை பாண்டியன் குரல் கொடுத்த திசையை பூங்காவனமும் பார்க்க அங்கிருந்து அறைக்குள் இருந்து வெளியேறினான் மின்னல் வீரபாண்டியன்.. மீண்டும் மயங்கி விடாமல் இருக்க நிலை கதவை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள் பூங்கா..
பார்வை மட்டும் கட்டிய கணவனின் கண்களை நேருக்கு நேராக சந்தித்தது. நேராக வந்தவன் சோலை பாண்டியனின் அருகே கைகட்டி நின்றான்..
வார்த்தைகள் எதுவுமே அங்கு பேசப்படவில்லை.. பார்வை பரிணாமங்கள் மட்டும் அக்னியை கக்கி கொண்டிருந்தது.
அடப்பாவி? நல்லவன் மாதிரியே நடிச்சு என்னை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டியே? இதுக்கு நீ அப்பவே என் கூட படுத்துட்டு என்னை துரத்தி விட்டுருக்கலாமே.. இந்நேரம் நான் என் வாழ்க்கையை பார்த்துட்டு போயிட்டு இருந்திருப்பேனே. தேவையில்லாம எனக்கு உன் பொண்டாட்டினு ஸ்தானத்தை கொடுத்து மெண்டல் டார்ச்சருக்கு என்ன ஆளாக்கி, கொஞ்சம் கொஞ்சமா என் மனசுல உன்ன விதைச்சு ஏன்டா இத்தனயும் செஞ்ச? வயித்துல உன்னோட புள்ள இருக்கும்போது இன்னொருத்தனுக்கு என்ன கூட்டிக் கொடுக்கிறாயே நீ எல்லாம் ஒரு அப்பனுக்கு பொறந்தவனா? நீ என்னை மட்டும் கூட்டி கொடுக்கல டா வயித்துல ஒருவேளை பொம்பள பிள்ளை இருந்தா உன் பிள்ளையவும் சேர்த்து இவனுக்கு கூட்டி கொடுக்குற.." பூங்காவனம் மானசீகமாக கேட்ட கேள்விகள் அனைத்துமே மின்னலுக்கு கேட்டிருக்க வேண்டும். ஒரு வினாடி அவனது பார்வை நிலம் தாழ்ந்தது. மறு வினாடி அகங்காரமாக நிமிர்ந்தது.
அந்த நொடி காரி உமிழ்ந்தாள் பூங்காவனம். மின்னலின் முகத்தில் துப்பியதைப் போலவே அவன் உணர்ந்தான்.
தொடரும்
No comments:
Post a Comment