Saturday, 5 April 2025

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 2





நிம்மதி பெருமூச்சோடு வீட்டிற்கு வந்தாள் பூங்காவனம். அவளது இரு தங்கைகளும் பள்ளிக்கு சென்று இருந்தார்கள். மகளின் வருகை ஆர்வமாக எதிர்நோக்கி காத்திருந்தார் தேவகி.. வீட்டிற்குள் நுழைந்த பூங்காவின் முகத்தை பார்த்ததுமே அவருக்கு நடந்ததை யூகிக்க முடிந்தது.

தேவகியின் முகத்திலும் நிம்மதி படர்ந்தது. "பூங்கா கைய கழுவிட்டு வந்து உட்காரு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்." பூங்கா அமைதியாக கை கால்கள் கழுவி வர  அவளுக்கு முந்தின இரவில் தண்ணீர் ஊற்றிய பழைய சோறை தயிர் ஊற்றி தட்டில் பரிமாறினார் தேவகி.. தொட்டுக்கொள்ள ஐந்து சின்ன வெங்காயத்தை உரித்து வைத்தார்..

எப்பொழுதுமே பூங்காவின் வீட்டில் காலை உணவு பழைய சாதம் தான். தீபாவளிக்கும் பொங்கலுக்கும் மட்டுமே அவர்கள் வீட்டில் இட்லி தோசையை பார்க்க முடியும்.. வறுமையின் பிடி ஒரு காரணம் என்றால் பழைய சாதத்தில் தான் சத்துக்கள் அதிகம் உள்ளது என தேவகியின் கணிப்பு.

காலையிலிருந்து சாப்பிடாததால் வயிறு கூப்பாடு போட வேகவேகமாக சாப்பிட ஆரம்பித்தாள் பூங்காவனம். இரண்டு வாய் உணவை சாப்பிடும் வரை அமைதியாக இருந்த தேவகி

"பூங்கா என்னடி ஆச்சு அந்த சேட்டு எவ்ளோ கொடுத்தான்.."

"ம்ம்ம் எட்டாயிரம் தான் கொடுப்பேன்னு ஒத்த காலுல நிற்கிறான்.."

"ஐயோ அப்புறம் எப்படி வட்டி கட்டுன"தேவகி முகத்தில் பயம் எட்டிப் பார்த்தது..

" நான் விடுவேனா.. எதுத்த கடைக்கு போறேன்னு சொன்னதும் தான் பத்தாயிரத்து எடுத்து வச்சான்."

"அப்பாடா.. எப்படியோ இந்த மாசம் சமாளிச்சாச்சு.. இனிமே அடுத்த மாசம் என்ன நிலைமைன்னு தான் பார்க்கணும்.."

பூங்காவனத்திற்கு அம்மாவை பார்க்க கடுப்பாக இருந்தது." வாயைக் கட்டி வயித்த கட்டி அஞ்சு மாசமா கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து காசு அது.. கம்மல வாங்கி முழுசா ரெண்டு நாள் கூட காதுல போடல.  அதுக்குள்ள அடகு கடைக்குள்ள போயி உட்கார்ந்துருச்சு."..

மகளின் கோபம் நியாயமானது. அவர்களுக்கு இந்த நிலை வருவதற்கு காரணமே தேவகி தான். பிறவியிலேயே இரக்க குணம் அதிகம் கொண்ட தேவகி யார் எந்த உதவி கேட்டாலும் தன்னால் முடிந்த வரை தயங்காமல் செய்வார். இப்பொழுது அவர்கள் வட்டி கட்டி திண்டாடும் இந்த கடன் கூட அவருக்காக தேவகி வாங்கியது கிடையாது.

பக்கத்து வீட்டில் நீண்ட காலமாக கூடியிருந்த சுஜாதாவிற்கு பணம் நெருக்கடி வந்ததால் கதிரிடம் சோலை பாண்டியனின் சிபாரிசில் பணம் வாங்கிக் கொடுத்தார் தேவகி. ஜாமீன் கையெழுத்து தேவகி போட்டது.

" தோ பாரு தேவா  உன்கூட படுக்குறதுக்காக நீ கேக்குற பணத்தை எல்லாம் தூக்கி உன் கையில கொடுக்க முடியாது. நக்கி திங்கற நாய்க்கு எவ்ளோ கொடுக்க வேண்டுமோ அவ்வளவு தான் கொடுக்க முடியும்.. வாசப்படியில கட்ற நாயை கொண்டு வந்து நடு வீட்டுல வச்சு அழகு பாக்க முடியுமா? " நாய் என்று அவர் குறிப்பிடும் தேவகியோடு தான் இரவு நேரத்தில் அவர் மயங்கி கிடக்கிறார் என்பதை சோலை பாண்டியன் தனக்கு வசதியாக மறந்து விட்டார்.

இம்மாதிரி ஏச்சு பேச்சுகள் எல்லாம்  தனக்குத் தேவை தான் என்பது போல அமைதியாக இருந்தார் தேவகி. சோலை பாண்டியனுக்கு கால் அமுக்கி கொண்டே"ஏங்க.. பாவம் சுஜாதா அவளும் வேற எங்க போவா.. ஆத்திர அவசரத்துக்கு உதவி பண்ண அவளுக்கும்தான் யாரு இருக்கா.. தாயா பிள்ளையா பழகுன பழக்கம்..  இந்த ஒரு தடவை எனக்காக" அந்த நேரம் இரவு வேலை முடிந்து வீடு திரும்பி இருந்தாள்  பூங்காவனம்.

என்ன இந்த ஆளு இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் வந்துட்டான் போல.. யோசித்துக் கொண்டே வாயில் கதவை தட்டினாள். பொதுவாக சோலை பாண்டியன் இப்போது வீட்டிற்கு வந்தாலும் தன்னுடைய பிள்ளைகள் யாரையும் அவர் கண்முன்னே நடமாட விட மாட்டார் தேவகி. பூங்காவனம் வளர்ந்து பெரியவளாகி வேலைக்கு சென்றதும்  அவ்வப்போது தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் சோலை பாண்டியனை சந்திக்க நேரிடும்.

இப்பொழுது வேலை முடிந்து மகள் திரும்பிவிட்டதை அறிந்ததும் வேகமாக சேலையை இழுத்து சொருகிக் கொண்டு கதவை திறந்து விட சென்றார். கதவைத் திறந்தவர் மகள் முகத்தை பார்க்க முடியாமல் வேறு எங்கேயோ முகத்தை திருப்பிக் கொண்டார். பூங்காவனத்திற்கு புரிந்தது.

"பூங்கா சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன் ரூம்ல.. நீயும் தங்கச்சிகலும் சாப்பிட்டு படுத்துடுங்க." பூங்காவனம் அவரிடம் நின்று பதில் சொல்லிக் கொண்டிருக்கவில்லை.

கதவு இடுக்கின் மூலம் வெளியே தெரிந்த பூங்காவின் வடிவரிவத்தை  கண்களில் போதையோடு பார்த்துக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன்.

மீண்டும் தேவகியை அறைக்கு வருவதற்குள் அவரது மூளை குறுக்கு வழியில் யோசிக்க ஆரம்பித்திருந்தது.

அருகே வந்தமர்ந்த தேவகியை பார்த்து "தேவி.. நீ சொன்னதை யோசிச்சு பார்த்தேன். உனக்கு என்ன பத்தி நல்லா தெரியும்.. எந்த பொருளுக்கும் என்கிட்ட விலை இருக்கு.. நாளைக்கு அந்த பொண்ண கூட்டிட்டு போய் கதிர பாரு. ஜாமீன் கையெழுத்து நீதான் போடணும் அவளுக்காக.." சோலை பாண்டியன் இந்த அளவிற்கு இறங்கி வந்ததே பெரிய விஷயமாகப்பட்டது தேவகிக்கு.

சுஜாதாவின் அவசர தேவைக்கு ஜாமின் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுத்தார் தேவகி. முதல் மூன்று மாதம் ஒழுங்காக வட்டி கட்டி கொண்டிருந்த சுஜாதாவிற்கு என்ன ஆனதோ தெரியவில்லை. இரவோடு இரவாக அந்த குடும்பமே கட்டிய துணியோடு எங்கேயோ சென்று விட்டது.

தேவகி தன்னுடைய வீட்டு வாசலில்  அந்த காகிதத்தை எடுத்து பிரித்துப் பார்த்தார்.

" என்ன மன்னிச்சிடு அக்கா. உன்கிட்ட கூட சொல்ல முடியாம ராத்திரியோட ராத்திரியா ஊர விட்டு ஓடுறேன். என்ன ஏதுன்னு சொல்லக்கூட என்கிட்ட அவகாசம் இல்லை.. பத்திரமா இரு. பிள்ளைங்கள பத்திரமா பாத்துக்கோ. நான் போறேன் கா" இந்த துண்டு சீட்டு  கசங்கியபடி தேவகி வீட்டு வாசலில் கிடந்தது.

ஜாமீன் கையெழுத்து தேவகி போட்டதால் கதிர் அவரைப் பிடித்துக் கொண்டான். அன்றிலிருந்து அவனுக்கு வட்டி கட்டுவதை அந்த குடும்பத்தின் தலையாயக் கடமையாக்கி போனது.

" கண்ட சிறுக்கிக்கும் காசு வாங்கி கொடுக்காதன்னு  நான் ஆரம்பத்துல இருந்து சொன்னேன். பொட்ட நாய்க்கு எங்க என் பேச்சு வெளங்குது. இப்போ அனுபவி.. " என்ன நினைத்தாரோ அன்றிலிருந்து தேவகி வீட்டிற்கு வருவதையும் நிறுத்தி விட்டார் சோலை பாண்டியன்..

அவர் கொடுக்கும் பணமும் நின்று விட்டது. இந்த வீடும் அவருடையது தான். என்னுடைய வரவை நிறுத்தியவர் வீட்டில் குடியிருக்க வாடகை வேறு கேட்டார் அதுவும் அதிகமாக.. அனைத்துமாக சேர்ந்து தேவகியை நோயாளி ஆக்கியது..

இரண்டு பிள்ளைகள் படித்துக் கொண்டிருக்க பூங்கா மட்டுமே விவரம் புரிந்து வேலைக்கு சென்று வந்தாள். அவளது வருமானத்தில் தான் குடும்பமே ஓடிக் கொண்டிருக்கிறது..

"ம்மா என்ன பிளாஷ்பேக்கா" அம்மாவின் முகத்திற்கு நேரே சொடுக்கிட்டு கேட்டாள் பூங்காவனம்.

" என்னால தானடி உனக்கு இவ்ளோ கஷ்டம்? நான்லாம் எதுக்கு தான் பொறந்தேனோ? எனக்கு பொறந்து நீங்களும் நாய் படாத பாடு படுறீங்க.. இந்த உலகத்திலேயே இருந்திருந்து உங்க அப்பன் மட்டும்தான் ஆம்பள மாதிரி அவன தேடி பிடிச்சு கட்டிக்கிட்டேன் பாத்தியா? அதுதான் நான் செஞ்ச மிகப்பெரிய தப்பு. அந்தத் தப்பு என் வாழ்க்கைய பலி வாங்கினது பத்தாதுன்னு  என் பிள்ளைங்க தலையையும் சுத்தி வருது.." வழக்கம்போல அவரது ஒப்பாரி கேட்க முடியாமல் அங்கிருந்து எழுந்தாள் பூங்காவனம்.

"எம்மா ஏம்மா காலங்காத்தாலேயே நடு வீட்டுல உட்கார்ந்து ஒப்பாரி வச்சா அந்த வீடு விளங்குமா.. ஏற்கனவே மூதேவி நம்ம வீட்டுக்குள்ள வந்து முடியை விரிச்சு போட்டு ஆடுறது பத்தலையா உனக்கு.."..

" அது இல்லடி"

" நீ ஒன்னும் சொல்ல வேணாம் நான் வேலைக்கு போறேன்..ராத்திரி நான் வர வரைக்கும் சாப்பிடாம யாராச்சும் இருந்தீங்க கொலைகாரியா ஆயிருவேன்." வேலைக்கு கிளம்பினாள் பூங்காவனம்.

காலையில் பத்து மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் அருகே இருக்கும் பேரங்காடியில் கேஷியராக வேலை செய்வாள். பிறகு ஏழு மணியிலிருந்து இரவு பதினோரு மணி வரை அவளது தோழியோடு சேர்ந்து தள்ளு வண்டி வியாபாரத்தை பார்க்க சென்று விடுவாள். குடும்பத்திற்காக மாடாய் உழைத்தாள் பூங்காவனம். இன்று கதிருக்கு தவணைப் பணம் கட்டுவதால் ஒரு மணி நேரம் தாமதமாக வேலைக்கு சென்றாள்.

சின்ன வயதிலேயே குடும்பப் பொறுப்பை சுமந்து வேகாத வெயிலில் வேக்கு வேக்கென்று நடந்து செல்லும் மகளை  கண்களில் கண்ணீரோடு பார்த்துக் கொண்டே நின்றார் தேவகி..

மாலை மணி ஆறு ஆனதும்  கிளம்பி மெரினா பீச்சுக்கு வந்து விட்டாள் பூங்காவனம். அவளது தோழி சரசு அவளுக்கு முன்பாகவே அங்கே வந்து வியாபாரத்துக்கு தேவையான அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருந்தாள்.. பீச்சின் அருகே உள்ள ஏரியாவில் தான் சரசுவின் வீடு இருக்கிறது..

கடல்வாழ் உயிரினத்தை  பதமாக வறுத்து மணக்க மணக்க  விற்பார்கள். ஒரு பக்கம் மீன் குழம்பும் இட்லியும் களை கட்டும். பூங்காவின் கை பக்குவத்திற்காகவே கடையில் அனைத்து பண்டங்களும் தீர்ந்துவிடும்..

உழைத்துக் கலைத்த பூங்கா இரவு பன்னிரண்டு   மணி போல வீட்டிற்கு வந்தாள். சிந்திய மூக்கும் அழுத கண்களும் ஆக காட்சி அளித்தார் தேவகி.  அதிசயம் என்னவென்றால் அவளது இரு தங்கைகளும் இன்னும் உறங்காமல் முழித்திருந்தது.. அப்படியானால் பிரச்சனை பெரிது என்பது பூங்காவிற்கு புரிந்தது. அம்மா அவளின் இறக்க குணத்தினால் அடுத்த ஏதாவது இடியை தலையில் இறக்கி விட்டாளோ என்கிற பயத்தோடு

" என்னம்மா என்ன ஆச்சு ஏன் இத்தனை மணிக்கு தெருவுல நின்னு அழுதுகிட்டு இருக்க.."

"பூங்கா ஐயோ நான் என்னத்தடி செய்வேன்.. பாவி மகளே எனக்கு வந்தா நீ பொறக்கணும்.." அர்த்த ராத்திரி யில் அம்மாவின் அழுகைக்கு காரணம் புரியாமல் விழித்தாள் பூங்காவனம்.


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...