தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 5


சோலைப் பாண்டியன் விட்டெறிந்த பணத்தை  எடுத்துக்கொண்ட பூங்காவனம், அதனை எடுத்துச் சென்று கதிரிடம் கொடுத்தாள்.. கதிருக்கே மனம் குத்தி விட்டது போல..

" என்னால ஒன்னும் பண்ண முடியலம்மா.." வேறெங்கோ பார்த்துக் கொண்டே பூங்காவனத்திடம் கூறினான்.

"தெரியும்" வீட்டிற்கு வந்து விட்டாள் பூங்காவனம். என்ன ஆயிற்றோ எதாயிற்றோ என வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருந்தார் தேவகி. பூங்காவனம் வரும்போதே சமையலுக்கு தேவையான பொருட்களை கையோடு வாங்கி வந்திருந்தாள்.

"பூங்கா என்னடி ஆச்சு, ஏதாச்சும் சொல்லுடி" மகளைப் பரிதவிப்பாக அளந்தது தாயின் பார்வை.

" என்னமா அப்படி பாக்குற திரும்பவும் ரெண்டு நாள் கெடு கொடுத்துருக்கான். எதுக்கு அந்த ரெண்டு நாள்னு நினைக்கிற? நல்லா சாப்பிட்டு தெம்பா வர்றதுக்கு.. " சுருக்கமாக நடந்ததை தாயிடம் கூறியவள் அம்மாவின் புலம்பலை கேட்க அங்கே நிற்கவில்லை.

சமையலறைக்குச் சென்று சமைக்க ஆரம்பித்து விட்டாள். மணக்க மணக்க மட்டன் பிரியாணி ரெடியானது. தேவகிக்கு பூங்காவனம் செய்வது அனைத்துமே வித்தியாசமாகப்பட்டது.

"ஹேய் என்னடி செஞ்சிட்டு இருக்க நீ? புத்திகித்தி பிசங்கி போச்சா உனக்கு.. பைத்தியக்காரி மாதிரி என்னென்னமோ செஞ்சுட்டு இருக்க.. இங்க என்ன நடக்குது?இப்ப பிரியாணி ரொம்ப முக்கியமா ".. தேவகி பொறுக்க முடியாமல் கேட்டாள்.

" எல்லோரும் குடும்பத் தொழிலை தான் வம்சாவழியா செஞ்சுகிட்டு வருவாங்க. நம்ம குடும்பத்துக்கு குடும்பத்தொழில் இதுதான் ஆயிருச்சு. என்ன வேற என்ன பண்ண சொல்ற? அந்த ஆளுகிட்ட ரெண்டு நாள்ல வரன்னு வாக்கு கொடுத்துட்டேன்.  என்ன பெரிய வாக்கு? இருக்கிற பணத்தை வைச்சு ஊர விட்டு ஓடிறலாம்னு தான்.. ஆனா எங்க ஓட சொல்ற? அந்த ஆளுக்கு இருக்கிற செல்வாக்குல எங்க ஓடினாலும் நம்மள ஒரே சொடக்குல தூக்கிருவான்.

அவன் என்ன சொல்றான்னு தெரியுமா உன் தங்கச்சிக்கு எத்தனை வயசுன்னு என்கிட்ட கேட்கிறான்? அதுக்கு என்ன அர்த்தம் நீ இல்லன்னா உன் தங்கச்சியை தூக்கிருவேன்னு சொல்றான்.. போதும். ஒத்த முடி விழுந்தாலும் உயிர போக்கிக்கிறதுக்கு நாம என்ன கவரிமான் பரம்பரையா? மானம் போனா மயிரா போச்சுன்னு உயிர் வாழனும். அப்படி பொசுக்குன்னு உயிரை தூக்கி போட முடியாது. என்ன நம்பி ரெண்டு தங்கச்சிங்க இருக்கு.. அந்த பொட்ட புள்ளைங்க வாழ்க்கையை யார் பார்க்கிறது?" தேவகி கண்ணீர் வலிய

" ஏன்டி உனக்குன்னு ஒரு வாழ்க்கை இல்லையா? "

" அப்படி உனக்குன்னு நீ நினைச்சிருந்தா இந்நேரம் எவனையாவது கூட்டிட்டு ஊர விட்டு ஓடிருப்ப. எதுக்கு இந்த ஆள் கூட எல்லாம் சகவாசம் வச்சுக்கிட்டு எங்கள வளத்த? நீயே உனக்குன்னு ஒரு வாழ்க்கையை தேடிக்காத போது உன் பொண்ணு நான் எனக்கான ஒரு வாழ்க்கையை நான் தேடிக்குவேனா உங்களை விட்டுட்டு? " தேவகியின் கண்ணீர் அதிகமானது.

"ம்மா தலைக்கு மேல வெல்லம் போயிருச்சு இனிமே நீ அழுந்து பிரயோஜனம் கிடையாது. போய் உட்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல ரெண்டும் வந்துரும். ரொம்ப நாளாவே காயத்ரி பிரியாணி வேணும்னு கேட்டுட்டுருந்தா.. பாவம் வயிறார சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. என் கதி இப்படி ஆயிருச்சு. என் தங்கச்சி இங்க ரெண்டு பேத்தையும் இந்த உடம்புல உயிர் இருக்கிற வரைக்கும் நல்லபடியா வளப்பேன்.." பூங்காவனம் உறுதியாக கூறினாள்.

பள்ளி முடிந்து காயத்ரியும் செல்வியும் வீட்டிற்கு வந்தார்கள். " நம்ம வீட்டுலேயா பிரியாணி வாசம் அடிக்குது.. நம்பவே முடியலையே"..

"ம்ம்ம் நீ நம்புவதெல்லாம் இருக்கட்டும் போய் கை கால் கழுவிட்டு வாங்க சாப்பிடலாம்.." பிரியாணி என்று உறுதியாகத் தெரிந்ததும் காயத்திரிக்கு அவ்வளவு மகிழ்ச்சி. வேகமாக ஓடினாள் கைகால் கழுவ.

" அக்கா எப்படி பிரியாணி? இதுக்கெல்லாம் பொருள் வாங்க எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்? நம்ம குடும்பம் இருக்கிற நிலைமையில இதெல்லாம் தேவையா? என்ன பண்ண? " இவரும் புரிந்த செல்வி அக்காவை குடைந்து எடுத்தாள் கேள்விகளால்.

" ஒன்னும் இல்லடி.. கூட வேலை செய்றவங்களுக்கு கடன் கொடுத்திருந்தேன் இன்னைக்கு தான் திருப்பி கொடுத்தாங்க. காயத்ரி ரொம்ப நாளா பிரியாணி வேணும்ன்னு கேட்டுட்டுருந்தால்ல.அதான்.. நீ போய் கை கால் கழுவிட்டு வா. " பூங்காவனத்தின் சமாதான வார்த்தைகள் செல்வியை திருப்தியடைய செய்யவில்லை.

சந்தேகத்தோடு அக்காவை பார்த்துக் கொண்டு நகர்ந்தாள். அனைவருக்கும் பிரியாணி பரிமாறினாள் பூங்காவனம். காயத்ரியை தவிர மற்ற யாருக்குமே பிரியாணி வயிற்றில் இறங்கவில்லை. பூங்காவனத்தின் அரட்டலால் பல்லை கடித்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார் தேவகி. அக்கா எதையோ தன்னிடம் மறைக்கிறாள் என்பது மட்டுமே புரிய யோசித்துக் கொண்டே சாப்பிட்டாள் செல்வி..

ஆசையாக சாப்பிடும் தங்கையை கண்களில் நிறைத்துக் கொண்டே, தன்னுடைய வாழ்வு இப்படியா  கயவன் ஒருவனின் கையில் சிக்க வேண்டும் என்பதை மனதில் நினைத்துக் கொண்டு பிரியாணியோடு சேர்த்து வேதனையையும் முழுங்க  முயற்சி செய்தாள் பூங்காவனம்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் தங்கைகளை வெளியே அழைத்துச் சென்று, அவர்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்தாள். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வந்தார்கள்.காரணமே இல்லாமல் சிரித்த முகத்தோடு வலம் வந்தாள் பூங்காவனம்.

உள்ளுக்குள் அவள் எவ்வளவு வேதனையை அடக்கி கொண்டிருக்கிறாள் என்பது தேவகிக்கு நன்றாக புரிந்தது. சோலை பாண்டியன் வட்டி அசலுக்கு போக சிறிது அதிகமாகவே பணத்தை கொடுத்திருந்தார். அந்த பணத்தில் தான்  கொஞ்சமாக எடுத்து குடும்பத்திற்கு செலவு செய்தாள் பூங்காவனம்.

இரண்டு நாட்கள் முடிய மூன்றாவது நாள் தங்கைகள் இருவரும் பள்ளிக்கு கிளம்பி இருக்க அம்மாவிடம் மீதி பணத்தை கொடுத்தாள்.

"ம்மா இந்த பணத்தை செலவுக்கு வச்சுக்கோ. போயிட்டு போயிட்டு வர்றதா இல்ல ஒரேடியா அங்க இருக்கிறதா எனக்கு தெரியல. எதுவாயிருந்தாலும் இன்னிக்கி அங்க போனா தான் தெரியும். ஒருவேளை நான் திரும்ப வரலைன்னா இந்த பணத்தை செலவுக்கு வச்சுக்கோ."

"பூங்கா"

" பயப்படாதம்மா எப்படியும் ஒரு வாரத்துல என்னை திருப்பி அனுப்பிருவான்.. அதுவரைக்கும் இந்த பணம் தாராளமா பத்தும்.. " அசால்டாக சொல்லி சென்ற மகளை கண்களில் கண்ணீரோடு பார்ப்பதே தவிர தேவகியால் வேறு என்ன செய்ய முடியும்?

பூங்காவனத்தை ஏற்றி செல்வதற்காக வண்டி தயாராக வீட்டு வாசலில் காத்திருந்தது.சுரேஷ் வந்திருந்தான். வண்டியில் ஏறி பின்னால் அமர்ந்தாள் பூங்காவனம்.

வாசலில் நின்று பரிதவிப்போடு தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் தாயை அவள் திரும்பியும் பார்க்கவில்லை. இந்த இரண்டு நாட்களாக கண்களில் ஒரு போட்டு தூக்கமில்லாமல், குளியலறையோடு தனது கண்ணீரை சாமர்த்தியமாக மறைத்து விட்டிருந்தாள்.

வண்டி சோலை பாண்டியனின் வீட்டை நெருங்க நெருங்க, நெஞ்சுக்குள் ரயில் தடதடப்பதை போல உணர்ந்தாள் பூங்காவனம். என்னதான் இருந்தாலும் அவளுக்குள்ளும் பல கனவுகள் இருந்தது. ராஜகுமாரன் வருவான் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு நிதர்சனம் புரியாதவள் கிடையாது அவள்.

தன்னை புரிந்து கொண்டு வத்தலோ தொத்தாலோ தனக்காக ஒருவன் வருவான். அவனோடு சேர்ந்து வாழ்க்கையில் முன்னேறி தங்கைகள் இருவரையும் நன்றாக படிக்க வைக்க வேண்டும். தாயை நல் முறையில் பார்த்துக் கொள்ள வேண்டும். அவளது குடும்பத்தையும் பிள்ளைகள் கணவன் என சந்தோஷமாக வாழ வேண்டும். இப்படி சிறிய ஆசைகள் மட்டுமே அந்த இளம் நெஞ்சில் நிறைந்து கிடந்தது.

சோலை பாண்டியன் என்ற ஒருவனால் அந்த ஆசைகள் முளையிலேயே கிள்ளி எறியப்படுமா?  பணம்.. இன்று சோலை பாண்டியனிடம் இருக்கும் அளவிற்கு அவளிடமும் பணம் இருந்திருந்தால் இம்மாதிரி இழி நிலைக்கு ஆளாக தேவையில்லை..

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பார்கள். இங்க ஆனால் பிணத்தை கூட விட்டு வைக்காத மனிதர்கள் மத்தியில் பணம் இல்லாமல் வாழ்வதற்கு  பிடி சாம்பல் கூட அடுத்தவர்கள் கையில் சிக்காத வண்ணம் தீக்குளித்து இறந்து விடலாம்.

வண்டி சோலை பாண்டியனின் வீட்டை தாண்டி சென்றது. சுரேஷிடம் கேட்க பயமாக இருந்தது. சற்றே சுதாகரிப்பாக சுற்றிலும் பார்த்துக் கொண்டே வந்தாள் பூங்காவனம்..

வண்டி சோலை பாண்டியனின் கெஸ்ட் ஹவுஸுக்கு சென்றது..

"இறங்குங்க.." வண்டி நின்றது கூட தெரியாமல்  சுய பச்சாதாபத்தில் மூழ்கிக் கிடந்தாள்  பூங்காவனம்.. அவள் கீழே இறங்கி வீட்டிற்குள் செல்ல தொடங்கியதும் சுரேஷ் அங்கிருந்து கிளம்பி விட்டான்..

அங்கொன்றும் இங்கொன்றுமாக பெரிய பெரிய வீடுகள் அவள் கண்களில் விழுந்தன. வசதி படைத்தவர்கள் வாழும் ஏரியா என்று புரிந்தது. சிட்டியை விட்டு தள்ளி இருந்ததால் இப்பொழுது தான் இடம் ஒரு நகராக மாறுவதை புரிந்து கொண்டாள் பூங்காவனம்..

ஒவ்வொரு படியாக கடந்தவள் வீட்டின் உள்ளே செல்ல அங்கே சோபாவில் அமர்ந்திருந்தாள் சோலை பாண்டியன்..

மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்

நிலையாக நிலைக்க வைக்கும்
நினைச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி
உண்மை ஜெயிக்கும்படி
வேண்டும் வரம் தா மாரியம்மா
காவல் நீதான் காளியம்மா..

ஒரு சுவரை முழுவதும் அடைத்திருந்த  ஹோம் தியேட்டரில் கனகாவும் ராமராஜனும் ஆடிக்கொண்டிருந்தார்கள். சோலை பாண்டியன் பக்தி பரவசத்தில் மூழ்கி இருந்தார்.

செவியில் விழும் பாடல் வரிகளுக்கும் அங்கே நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுக்கும் துளியும் சம்பந்தம் கிடையாது..

பாடல் முடியவும் திரும்பி வாசலை பார்த்தார் சோலை பாண்டியன். பூங்காவனம் நின்று கொண்டிருக்க 

" என்னம்மா அங்கேயே நின்னுட்ட உள்ளவா?.. இது உன் வீடு மாதிரி நீ இங்க சகஜமா இருக்கலாம்.. " உள்ளே வந்தவள் அவர் அருகே நின்றாள்.

அவளை மேலிருந்து கீழாக கண்களால் நோட்டமிட்ட சோலை பாண்டியன்" உனக்கு சமைக்க தெரியுமா"

"ம்ம்ம்"

" நல்லதா போச்சு கிச்சன்ல எல்லாம் ரெடியா இருக்கு.. போய் மனக்க மனக்க மட்டன் குழம்பு, சிக்கன் கிரேவி, நண்டு வறுவல், இறா தொக்கு, அவிச்ச முட்ட தேங்க சோறு எல்லாம் ரெடி பண்ணு".. புது மனைவியிடம் உரிமையாக கேட்பது போல  பூங்காவனத்தை அதிகாரம் செய்தார் சோலை பாண்டியன்.

பொதிக்குழிக்குள் காலை விட்டாயிற்று. எந்நேரமும் முழுதாக மூழ்கி விடலாம். சற்று நேரம் தள்ளிப் போட்டது  மனதிற்கு ஆறுதலாக இருந்தது. மறுவார்த்தை பேசாமல் சோலை பாண்டியன் சொன்னதை செய்ய ஆரம்பித்தாள் பூங்காவனம்.. உணவு நேரம் நெருங்க அனைத்தையும் மேஜை மீது வைத்தாள். சோலை பாண்டியன் வந்து உணவு மேஜை அருகே அமர்ந்தார்..

"ம்ம்ம் அடடடா.. வாசமே ஆள தூக்குதே.. சரி கண்ணு நீ என்ன பண்ற ஒரு தட்டு எடுத்து நீ சமைச்சத மொத நீ சாப்பிட்டு காட்டு.." அவரை புரியாமல் பார்த்தாள் பூங்காவனம்.

" என்ன அப்படி பாக்குற? அந்த அளவுக்கு உனக்கு தைரியம் இருக்காதுன்னு எனக்கு தெரியும். இருந்தாலும் சேப்டி முக்கியம் இல்ல.. " வேறு வழி இல்லாமல் அமைதியாக ஒரு தட்டை எடுத்தவள் சமைத்தது அனைத்தையும் ஒரு படி அதிகமாகவே எடுத்து வைத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

அவள் தட்டு காலியாகும் வரை பார்த்துக் கொண்டிருந்தார் சோலை பாண்டியன். " கொஞ்சமா சாப்பிட்டு காட்டுன்னு சொன்னா இந்த கட்டு கட்டுற.. ஆமா இதெல்லாம் நீ எங்க உங்க வீட்ல பார்த்திருக்க போற.. இப்படி சாப்பிட்டா தான் உண்டு..அதுவும் சமயத்தில மயக்கம் போட்டு விழுந்தா காரியம் கெட்டுப் போகும்ல." அவருக்கு உணவை பரிமாறினாள் பூங்காவனம்.

சோற்றைப் பிசைந்து வாயில் வைக்கப் போகும் சமயம் திடுதிப்பென்று ஒரு குரூப் உள்ளே வந்தது..

தொடரும்

Comments

Popular posts from this blog

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு