Saturday, 5 April 2025

தாகம் 9





ஜாதக கட்டத்தையும் எதிரே அமர்ந்திருக்கும் சோலை பாண்டியனின் முகத்தையும் மாறி மாறி பார்த்தார் ஜோதிடர்..

" கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கிற? இந்த பைத்தியக்காரன் கிட்ட நான் என்னன்னு சொல்றது? கடன்காரன் நல்லதா சொன்னா  நானூறு கேள்வி கேட்பான். கெட்டதா சொன்னா  அருவாளை எடுத்து என் கழுத்துல வைப்பான். இப்ப இந்த கோட்டானுக்கு நான் என்ன பதில் சொல்றது? " தலையை சொரிந்து கொண்டார் ஜோதிடர்.

" என்ன ஜோசியரே ரொம்ப நேரமா என்னையும் கட்டத்தையும் மாத்தி மாத்தி பாத்துட்டு இருக்கீங்க.. கட்டம் என்ன சொல்லுது? "

"ம்ம்ம் உனக்கு கட்டம் சரியில்லைன்னு சொல்லுது.." மனதிற்குள் நினைத்தார் ஜோதிடர்.

" என்ன ஜோசியரே நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க பதில் சொல்லாம என் மூஞ்சியே பாத்துட்டு இருக்கீங்க"

" அது ஒன்னும் இல்ல சார்வாள்.. நான் ஏற்கனவே உங்ககிட்ட இத பத்தி பேசி இருக்கேன்.  ஆறு மாசத்துக்கு முன்னாடி உங்களுக்கு கட்டம் சரியில்லாம போகப்போகுதுன்னு சொன்னேன் ஞாபகம் இருக்கா.."

"ம்ம்ம்.." கனமான அமைதி சோலை பாண்டியனிடமிருந்து.

" அதாவது என்னன்னா..  நீங்க உடனடியா ஒரு பையன தத்தெடுக்கணும். அந்தப் பையனுக்கு  கன்னிப் பொண்ணு ஒருத்தியை  கட்டி வைக்கணும்.. அதுவும் அந்த பையன் தான் உங்களோட அடுத்த வாரிசுன்னு நீங்க எல்லார்கிட்டயும் பிரகடனம் படுத்தனும்.." ஜோதிடர் சொல்லியதை கேட்டு சோலை பாண்டியன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

" என்ன ஜோசியரே பைத்தியக்காரத்தனமா சொல்லிட்டு இருக்கீங்க? வயசானாலே கண்டதையும் உளற சொல்லுதா? யாரு கிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு தெரியுது தானே?" சோலை பாண்டியன் போட்ட சத்தத்தில் ஜோதிடரின் ஈரக் குலை நடுங்கியது.

முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டே" சார்வாள் என்னோட ஜோசியம் என்னிக்கும் பொய்க்காது. அதனால தானே இத்தனை வருஷம் என்ன உங்களோட குடும்ப ஜோசியரா வச்சிருக்கீங்க.. இதுக்கு முன்னாடி நான் கணிச்சு கொடுத்த ஏதாவது ஒன்னு மிஸ்ஸாயிருக்கா. இது மட்டும் எப்படி தப்பா போகணும்னு நீங்க சொல்லலாம்..

என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா உங்க ஜாதகத்தை கொண்டு போய் எந்த கைதேர்ந்த  ஜோசியக்காரன் கிட்ட வேணாலும் கொடுத்துக்கோங்க.. எப்பேர்பட்ட கொம்பன் இந்த ஜாதகத்தை பார்த்தாலும் நான் சொன்னது தான் திரும்ப சொல்லுவாங்க.." சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஜோதிடர் வாதிட்டார்.

சோலைப் பாண்டியன் முகத்தில் யோசனை படர்ந்தது. ஜோதிடர் கூறுவது உண்மைதான். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக சோலை பாண்டியனின் குடும்ப ஜோதிடர் அவர்தான். அவர் கணித்துக் கொடுத்த எதுவுமே இன்றுவரை சோடை போனதில்லை. சோலைப் பாண்டியனுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாகவே  உனக்கு ஆண் வாரிசே கிடையாது மூன்றும் பெண்தான் என்று கனித்துக் கூறியிருந்தார்..

அதேபோல சோலை பாண்டியனுக்கு பிறந்தது மூன்றுமே பெண் பிள்ளைகள். அதன் பிறகு அவர் தொடுப்பாக எத்தனை பேரை வைத்திருந்தாலும் அவர்களுக்கு பிள்ளை பாக்கியம் இல்லை.. சோலை பாண்டியனின் மனைவியின்  மரணம் வரை சரியாக கனித்துக் கொடுத்திருப்பவர் எப்படி இந்த விஷயத்தில் பொய் கூறுவார்..

இருந்தாலும் ஜோதிடர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடினார் சோலை பாண்டியன்.. "ஹான்.. ம்ம்..  இதுக்கு வேற வழியே இல்லையா" தொண்டையைக் கனைத்துக் கொண்டே கேட்டார்.

" இல்ல சார்வாள். உங்க ஜாதகத்துல கட்டம் எல்லாம் ரொம்ப மோசமா இருக்கு. உடனே நீங்க ஒரு பையன தத்தெடுத்து உங்களோட அடுத்த வாரிசா அவன பிரகடனப்படுத்தியே ஆகணும். அப்பதான் நீங்க செஞ்ச பாவத்துல பாதி பங்கு அந்த பையன் தலையில விழும்.. இப்பவே உங்க பொண்ணுங்க வாழ்க்கையில பிரச்சனைகள் ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.. " ஜோதிடர் கூறியது உண்மைதான்.

சோலை பாண்டியனின் மூத்த மகள்  ஜெர்மனியில் இருக்கிறாள். அவளது கணவன் இதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவன்.. உடன் பணிபுரியும் தாதியோடு அவன் நெருங்கி பழகுவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தான்  தனலட்சுமி தந்தைக்கு அழைத்து கதறிருந்தாள்..

மகளுக்கு ஆறுதல் கூறிய சோலை பாண்டியன், அங்கே தனக்குத் தெரிந்தவர்களை வைத்து  தாதியை சத்தம் இல்லாமல் தூக்கிருந்தார்.. அப்பாடா என்று பெருமூச்சு விடுவதற்குள் கனடாவில் இருக்கும் இரண்டாவது மகள் சந்தான லட்சுமி கடந்த வாரம் அழைத்து அவளின் மகன் படியில் தற்செயலாக விழுந்து முன் பற்கள் இரண்டு உடைந்து விட்டதாக தந்தையிடம் அழுது புலம்பினாள்..

அவளுக்கு ஆறுதல் சொல்லி ஓய்ந்து அமர்ந்தவரிடம் சிங்கப்பூரில் இருக்கும்  மூன்றாவது மகள் மகாலட்சுமி வயிற்றில் கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்வதற்காக ஹாஸ்பிடல் அட்மிட் ஆயிருப்பதாக கூறியிருந்தாள்.. இன்னும் இரண்டு நாட்களில் மகளை பார்ப்பதற்காக சோலை பாண்டியன் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்.

ஜோதிடர் கூறியது போல மகள்கள் வாழ்வில் பிரச்சனை ஆரம்பித்து விட்டது. பின்னே கொஞ்சநஞ்ச பாவங்களையா சோலை பாண்டியன் செய்திருக்கிறார்.. சோலை பாண்டியன் என்றாலே சட்டசபை வரை அந்தப் பெயர் ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும். அப்படிப்பட்டவரின் வீட்டிற்குள் புகுந்தே அவர் ஆசையாக கொண்டு வந்திருந்த பெண்ணை  அபகரித்து செல்வதென்றால் அவருக்கு எவ்வளவு பெரிய அவமானம்..

அதிலும் அந்த பூங்காவனம் பெரிய உத்தமிக்கு பிறந்ததைப் போல அவர் முகத்தில் காரி உமிழாத குறையாக தரையில் துப்பினாளே அதை அவரால் இந்த ஜென்மத்தில் மறக்க முடியுமா? இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிந்தால் அவர் நிலை என்ன? நண்டு சிண்டெல்லாம் அவர் தலையில் ஏறி மிளகாய் அரைத்து விடாதா?

தீராத யோசனையில் அமர்ந்திருந்தவரை கலக்கமாக ஏறிட்டார் ஜோதிடர்.. " கிரகம் புடிச்சவன் ஒரு நிலைக்கு வர மாட்டானே சட்டுனு.. ஏதாச்சும் சொன்னா ஆ ஊனு உடனே விட்டத்தை பார்த்துருவான். அங்கு என்னமோ செத்துப்போன அவனோட ஆயா உட்கார்ந்து இருக்கிற மாதிரி.. மனுசனுக்கு வேற வேலை வெட்டி இல்லன்னு நினைச்சிட்டானா.. ".. மேலும் ஜோதிடரை பத்து நிமிடங்களுக்கு சோதித்த சோலை பாண்டியன் 

"சரிங்க ஜோசியரே,இப்ப எனக்கு மகனா தத்தெடுக்கிற வயசுல எவன போய் நான் தேடுறது? எப்படா சான்ஸு கிடைக்கும் என்ன போட்டுட்டு இந்த நாற்காலியில உட்காரலாம்னு தான் எல்லா பயலுங்களும் சுத்திட்டு இருக்காங்க.. இந்த லட்சணத்துல எனக்கான வாரிச நான் எங்குட்டு போய் தேடுறது?"

" நீங்க அவன தேடி போக வேணாம் சார் வாள்.. உங்களுக்கு வாரிசா வரப்போறவன் அவனே உங்க கண்ணு முன்னாடி வந்து நிற்பான்.. உங்களுக்காக உயிரையும் கொடுக்க துணிஞ்சவனா இருப்பான். ஒரு கட்டத்துல பார்த்தா உங்களுக்கும் அவனுக்கும் விட்ட குறைனு ஏதோ ஒன்னு இருக்கு. யார் கண்டா போன ஜென்மத்துல உங்களுக்கு மகனா கூட பொறந்திருக்கலாம்.."

" அட நீங்க வேற வெந்த புண்ணுல வேள பாச்சிக்கிட்டு.. அப்படி ஒருத்தனை நான் எங்கன்னு போய் தேடுறது. அவனைத் தேடி கண்டுபிடிச்சு வாரிசு என்று ஊருக்கே தமக்கடிச்சு, அவனுக்கு ஒரு கன்னி பொண்ண பாத்து கட்டி வைக்குறதுக்குள்ள நான் கால நீட்டிருவேன் போல.. இப்ப கன்னி பொண்ணு தேடுறதுதானே பெரும் பிரச்சனையா இருக்கு.".. மோவாயை தடவிக் கொண்டார் சோலை பாண்டியன்.

" உன்ன மாதிரி கிழட்டு பக்கி எல்லாம் எங்கடா கன்னி பொண்ணுங்கள உலாவ விடுறீங்க.. அப்பா அப்பா வாங்குன வட்டிக்கு அசலா அந்த பொண்ணுங்க கர்ப்பையே விலைக்கு வாங்குற கூட்டம் தானே நீங்க.. " முகத்தை பாவமாக வைத்துக் கொண்டார் ஜோதிடர்.

அந்த நேரம் பார்த்து"ஐயா" பணிவான வணக்கத்தோடு வந்து நின்றான் மின்னல் வீர பாண்டியன்.. சோலை பாண்டியன் அவனை நிமிர்ந்து பார்ப்பதற்குள் மின்னலை பார்த்த ஜோதிடர்

"தோ நான் சொல்லி வாய மூடுல அதுக்குள்ள பகவானே உங்களுக்கு வாரிசா ஒருத்தன அனுப்பி வச்சிட்டான்.." ஜோதிடர் கூறுவதை மின்னல் புரியாமல் பார்க்க சோலை பாண்டியனின் மூளை வேகமாக வேலை செய்தது.

கிட்டத்தட்ட பல வருட காலமாக மின்னல் சோலை பாண்டியனிடம் இருக்கிறான். பல தடவை சோலை பாண்டியனின் உயிரைக் காப்பாற்றியதும் அவனே. இப்பொழுது சோலை பாண்டியனின் மானத்தை காப்பாற்றியதும் அவனே.. சோலைப் பாண்டியன் பச்சையாக மனிதக் கறியை சாப்பிடு என்று கூறினாலும் கூட முகம் சுளிக்காமல் சாப்பிடும் மன தைரியம் கொண்டவன் மின்னல்.

வாரிசாக மின்னலை அறிவித்தால் அதில் ஏதாவது சட்ட சிக்கல் இருக்கிறதா என்பதை பற்றி அதிவேகமாக கணக்கிட்டது சோலை பாண்டியனின் மூளை.

" ஆயி அப்பன் இல்லாதவன். கூட பொறந்ததுங்கன்னு ஒன்னும் கிடையாது. இன்ன வரைக்கும் பொண்ணுங்க விஷயத்துல அவன பத்தி அரசல் புருசலா கேள்விப்பட்டாலும் கண்ணால எதையும் கண்டது கிடையாது.. காட்டுன இடத்துல பாய்வான். கை நீட்டின இடத்துல  கத்திய வீசுவான்.. நமக்கு விசுவாசமா இருக்கிற மாதிரி ஆயிரம் பேர் தெரிஞ்சாலும் உண்மை பேர் இருந்தாலும் உண்மையான விசுவாசமா இருக்காங்களான்னு யாரு கண்டா.. இவனா கேட்க நாதி கிடையாது..

நாள பின்ன ஏதாவது பிரச்சனை வந்தாலும் சத்தம் இல்லாம இவனோட ஜோலியை முடிச்சிட வேண்டியதுதான்." பலத்தையும் எண்ணி கணக்கிட்ட சோலை பாண்டியன் 

" ஜோசியரே,  இவன் சரிப்பட்டு வருவானா" மின்னலின் மீது பார்வையை பதித்த படி கேட்டார்.

" இவனத் தவிர வேற எவனும் சரிப்பட்டு வர மாட்டான்.. அசப்புல இவன பார்த்தா சின்னதுல உங்கள பாக்குற மாதிரியே இருக்கு. மத்தபடி நீங்களே நல்லா முடிவெடுத்துக்கோங்க. நாள பின்ன ஏதாவது ஒன்னுனா என் தலையை உருட்டக்கூடாது பாருங்க. " ஜோதிடர் தன் உயிருக்கு முன் வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.

"ஐயா" அங்கே நடப்பது எதுவும் புரியாமல் சோலை பாண்டியனை விளித்தான் மின்னல்.

"மின்னலு.. அந்த பொண்ணு எப்படி இருக்கா.. பத்திரமா நம்மிடத்தில அவள வச்சிரு.."

" அதெல்லாம் அந்த பொண்ணு பத்திரமா தான்யா இருக்கா. நீங்க அத பத்தி கவலைப்பட வேணாம்."

" சரிடா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும். "

"என்னங்கய்யா'

"நான் உன்ன என்னோட அரசியல் வாரிசா தத்தெடுக்கலாம்னு இருக்கேன். என் குடும்பத்துக்கு வாரிசாகவும்.."

"ஐயா"

" டேய் நான் என்ன சொன்னாலும் கேப்பல.. நான் பேசி முடிக்கிற வரைக்கும் மூச்சு விடக்கூடாது.. நான் உன்னை என்னோட வாரிசா தத்தெடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. நீ என்ன சொல்ற" மின்னலுக்கு யோசிக்கக்கூட அவகாசம் இல்லாமல் அவசரப்படுத்தினார் சோலை பாண்டியன்.

அவர் மீது உண்மையான விசுவாசம் வைத்திருந்த மின்னல் ஒரு நிமிடம் கூட எடுக்கவில்லை யோசிப்பதற்கு. " என்னய்யா என்கிட்ட போய் எல்லாம் அசிங்கமா கேட்டுட்டு இருக்கீங்க.. நீங்க என்ன சொன்னாலும் அது சரியா தாங்க இருக்கும்" மின்னலின் வார்த்தைகளைக் கேட்டதும் சோலை பாண்டியனின் முகத்தில் இருமாறுப்பு தெரித்தது.

தொடரும்


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...