தாகம் 29



மகாலட்சுமி வந்து போனதிலிருந்து பூங்காவனத்திடம் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டது. தன்னுடைய வாழ்க்கையை நினைத்தும் எதிர்காலத்தை நினைத்தும் பெரிதும் குழப்பத்தில் இருந்தவருக்கு மகாலட்சுமியின் வரவு சர்வ லோக நிவாரணியாக அமைந்தது.

மருமகனை அன்று இரத்த களறியாக பார்த்ததிலிருந்து தேவகிக்கு மனமே ஆறவில்லை. பூங்காவனம் தன்னிடம் எதையோ மறைப்பதை புரிந்து கொண்டார் தேவகி. அவரும் மகள் வயதை தாண்டி வந்தவர் தானே. ஓரளவுக்கு மகள் மருமகனின் பிரச்சனை புரிந்தது.

பூங்காவை காண வீட்டிற்கு வந்தார்.. வழக்கம் போல தாயை வரவேற்றாள் பூங்கா..

நேரடியாக விஷயத்திற்கு வந்தார் தேவகி. " நான் உடனே வீட்டுக்கு போகணும். ஊர்பட்ட வேலை கெடக்கு.. நாளைக்கு உன் தங்கச்சிங்களுக்கு எக்ஸாம் வேற.."

"என்னம்மா பீடிகை போடுற"

"ம்க்கும்.. பூங்கா நான் நேரா விசயத்துக்கு வரேன்.. என்னடா அம்மா இப்படி சொல்றாளேனு நினைக்காத.. எல்லாம் உன் நல்லதுக்கு தான்..உனக்கும் மாப்பிள்ளைக்கும் ஏதோ பிரச்னைனு தோணுது.."

"ப்ச் ம்மா"

"இருடி முந்திரிக்கொட்ட குறுக்கால பேசிகிட்டு..நான் கேக்குறதுக்கு மட்டும் ஒழுங்கா பதில் சொல்லு.. நீ மாப்பிள்ளை கூட சந்தோஷமா இருக்கியா.. "

திடீரென்று தேவகி இப்படி கேட்பார் என்று எதிர்பாராத பூங்காவனம் திடுக்கிட்டு போனாள்.

" எதுக்குமா திடீர்னு இப்படி கேக்குற" இருந்தும் தன்னை நொடியில் சமாளித்துக் கொண்டாள்.

" நானும் உன் வயச தாண்டி வந்தவதான். என்ன என்னோட தலையெழுத்து வாழ்க்கை வேற பாதையில போயிடுச்சு. ஆனா உனக்கு அப்படி இல்ல. எப்படி எப்படியோ போய் கடைசில போற இடம் கோயிலா இருக்கிற மாதிரி உன் வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சிருச்சு. என்னடி ஒரு மாதிரி மூஞ்ச சுழிக்கிற.. அம்மா சொல்றது நிஜம் தான் பூங்கா. என் மாதிரி வாழ்க்கையை ஒரு நாள் உன்னால வாழ முடியுமா.. அந்த வகையில பார்க்கும்போது உனக்கு கிடைச்சிருக்கிற வாழ்க்கை சொர்க்கம்."

" இப்ப என்ன தான்மா நீ சொல்ல வர சொல்ல வேண்டியதை விட்டுட்டு லூசு மாதிரி என்னென்னமோ உளறிட்டு இருக்க.. ஏற்கனவே எனக்கு தலைவலி உயிர் போகுது.. இதுல நீ வேற கண்டதையும் சொல்லி என்னை குழப்பி விடாத" அம்மாவிடம் எரிந்து விழுந்தாள்
பூங்காவனம்.

"போடி பைத்தியக்காரி. உன் நல்லதுக்கு சொல்ல வந்தா   எனக்கே லூசு பட்டம் கட்டுற.. தோ பாரு பூங்கா நீ பட்ட கஷ்டம் எல்லாம்முடிஞ்சு போச்சு. கண்டதையே நெனச்சு உன்னோட வாழ்க்கையை நீயே கெடுத்துக்காதே.. நம்ம புருஷன் பணக்காரன் பணம் காசுக்கு ஆசைப்பட்டு தான் அம்மா இந்த மாதிரி எல்லாம் பேசுறான்னு தயவு செஞ்சு நினைக்காதே. இந்நேரம் உன் புருஷன் உன்ன கொடுமை படுத்தறவனா இருந்திருந்தா  உன்னை அனுபவிச்ச கையோட பொறந்த வீட்டுக்கு துரத்தி விட்டுருப்பான். ஏன் நீயே எத்தனையோ தடவை  அத்துவிட்டுடுனு சொல்லும்போது  மாப்பிள்ளை அப்படி செய்யலையே. செவிலிய ரெண்டு போட்டு ஒன்னு அவர் கூட இழுத்துட்டு வந்து குடும்பம் நடத்திட்டு தானே இருக்காரு"

" அதுக்காக உன்னோட மாப்பிள்ளைக்கு அவார்ட் கொடுக்க போறியா"

" அவவார்ட்டும் கொடுக்கல கருவாடும் கொடுக்கல நான் சொல்றத தெளிவா கேளு. ஆம்பளைன்னா அப்படி இப்படி தான் இருப்பாங்க. ஒருத்தனுக்கு ஒருத்தினு பெரியவங்க சொல்லி வச்சது எல்லாம் பொம்பளைங்களுக்கு மட்டும் தான். எல்லாம் நம்ம தலையெழுத்து. ஆரம்பத்துல அப்படி இப்படின்னு போனாலும் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்து இழுத்து பிடிச்சா எல்லாம் சரியா போயிடும்.

அதுலயும் உன் புருஷன் நல்லவர் மாதிரி தெரியுது. நீயும் ரொம்ப மூஞ்ச காட்டாத. இப்ப நீ தனியா இல்லை. எதுவாயிருந்தாலும் முயற்சி பண்ணாம நாமலே ஒரு முடிவுக்கு வரக்கூடாது.  உன் புருஷன் கிட்ட கொஞ்சம்...  எப்படி சொல்றது.. ஒரு அம்மாவா நான் எப்படிடி இதெல்லாம் சொல்லுவேன்.. எதுக்கெடுத்தாலும் அந்த ஆள் கிட்ட எரிஞ்சு விழறத நிப்பாட்டு. அந்த நாசமா போன சோல பாண்டியன பத்தி பேசறத நிப்பாட்டு.

அர்த்த ராத்திரியில வீட்டுக்கு வந்தா சாப்பாடு போட்டு என்னங்க ஏது இன்னிக்கு வேலை ரொம்ப ஜாஸ்தியான கேட்டு பக்கத்துல கொஞ்சம் அனுசரணையா இரு.. கிழவி மாதிரி முக்கா மொழம் புடவையை சுத்திக்கிட்டு தெரியாம இப்பதான் விதவிதமா நைட்டி வந்து இருக்கே. அது எல்லாத்தையும் வாங்கி போட்டு தொலைடி. ஒன்னே ஒன்னு மட்டும் ஞாபகம் வச்சுக்கோ இது நம்மளோட வாழ்க்கை. அம்மா மாதிரி ஒரு இக்கட்டில் உன் வாழ்க்கை அமையல. இப்போ உனக்கு அமைந்திருக்கிற வாழ்க்கையை நீ எப்படி வேணாலும் உனக்கு தகுந்த மாதிரி மாத்திக்கலாம். அத யோசிச்சு எதா இருந்தாலும் முடிவு பண்ணு. " தேவகி சென்று விட்டார்.

மகாலட்சுமி தேவகி இருவருமே ஒரே விஷயத்தை அவர்களுக்கு தகுந்தார் போல கூறி சென்றனர். ஆக மொத்தம் பூங்காவனமும் முயற்சி செய்வதென்று ஒரு முடிவுக்கு வந்து விட்டாள்.. மின்னல் வீரபாண்டியனுக்கு அவள் மீது விருப்பமில்லை என்றாலும் இந்த அளவிற்கு பூங்காவனம் முயற்சியில் ஈடுபட்டிருப்பாளா என்பது சந்தேகமே. ஆனால் அவன் பார்க்கும் பார்வையில் இருந்து அவனின் தொடுகை வரை சொல்லாமல் சொல்லியது பூங்காவை அவனுக்கு பிடித்திருக்கிறது. ஒத்துக்கொள்ள தான் அவனுக்கு மனம் வரவில்லை. மனம் வந்தாலும் அதை வாய் விட்டு கூற வாய் வரவில்லை.

இப்போதெல்லாம் பூங்காவனம் சோலை பாண்டியனை பற்றி பேசாமல் பிறக்கப் போகும் குழந்தையை பற்றி மின்னலிடம் பேச ஆரம்பித்தாள். ஆணும் பெண்ணும் எது பிறந்தாலும் குழந்தையை நல்லபடியாக வளர்க்க வேண்டும் என ஆயிரம் கனவுகள் அவள் கண்களில். சிறு வயதில் அவள் பட்ட கஷ்டத்தையும் தேவகி அனுபவித்த நரக வேதனைகளைப் பற்றியும்  மின்னலிடம் கதை கதையாக கூறினாள் பூங்காவனம்.

அவ்வப்போது சோலை பாண்டியனைப் பற்றிய பேச்சு எழுந்தாலும் சாமர்த்தியமாக அதனை மாற்றி விடுவாள். இப்போதெல்லாம் பூங்காவை மின்னலின் மடியில் தானாக சென்று அமரும் அளவுக்கு தேறி விட்டாள்.. கண்கள் விரிய பூவிதழ் குவிய அழகு மனைவி கதைகள் கூற  வேலை கோப்புகளை ஆராய்ந்து கொண்டே அவள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்தான் மின்னல் வீரபாண்டியன்.

பூங்காவனத்தின் மாற்றம் அவனுக்கு புரிந்தாலும் அதனை வாய் விட்டு கேட்காமல் அழுத்தமாகவே இருந்தான். மனதிற்குள் அவள் பெரிதாக திட்டம் தீட்டுகிறாள் என்பது மட்டும் ஓடிக்கொண்டே இருந்தது. அவளிடம் ஜாக்கிரதையாக இருக்க சொல்லி அவனின் கிரிமினில் மூளை எடுத்துரைத்தது. ஆனால் பாவம் பூங்காவனம் அவன் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பினால் அவள் தன்னையே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டிருக்கிறாள் என்பது மின்னலுக்கு புரியாமல் போனது..

இருந்துமே பூங்கா பக்கத்தில் அமர்ந்து பேசுவதும் உரிமையாக மடிமீது அமர்வதும்  இரவு உறங்கும் போது அவனது நெஞ்சில் ஒய்யாரமாக சாய்ந்து கொள்வதும் மின்னலுக்கு பிடித்து தான் இருந்தது. கமலாவிடம் கேட்டும் அவளாகவே தெரிந்து கொண்டும் மின்னலுக்கு பிடித்த வகையில் சமையல் செய்து அசத்தினாள். கடல்வாழ் உணவு வகைகள் என்றால் அவனுக்கு கொள்ளை பிரியம்.  எப்பொழுது பார்த்தாலும் மீன் இறால் நண்டு இப்படி ஏதாவது ஒன்று அன்றைய ஸ்பெஷல் ஐட்டமாக உணவு மேஜையில் மின்னலை பார்த்து கண் சிமிட்டியது.

ஆசையாக சமைத்ததை பார்த்து பார்த்து கணவனுக்கு பரிமாறினாள் பூங்காவனம். நன்றாக இருக்கிறது என்று அவன் வாய் திறந்து கூற மாட்டானா என மிட்டாய்க்கு ஏங்கும் குழந்தை போல அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டே பக்கத்தில் இருப்பாள்.. ரசித்து ருசித்து அவள் சமைத்து போடுவதை உண்டான தவிர ஒரு தடவை கூட நன்றாக இருக்கிறது என்று அவளை பாராட்டவில்லை. அவன் மட்டும் தான் அப்படி.

வீட்டில் கமலா நாகா வேலையாட்கள் முதல் கொண்டு பூங்காவனத்தின் சமையலை பாராட்டி தள்ளி விட்டார்கள். ஒருமுறை பூங்காவை பார்க்க வீட்டிற்கு வந்த மகாலட்சுமி கூட ஆசையாக பூங்காவனத்தின் சமையலை சாப்பிட்டு விட்டு இன்னும் ஒரு முறை அதே மாதிரி சமையலை சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தாள். இதில் சோகம் என்னவென்றால் கருவாட்டு குழம்பு தன் தகப்பனுக்கு மிகவும் பிடிக்கும் என்று பூங்காவின் கையாலே செய்ய வைத்து வாங்கி சென்றது தான் பூங்காவனத்திற்கு மனம் நோக செய்தது. கொஞ்சம் விஷத்தை அந்த கருவாட்டுக் குழம்பில் கலக்கினால் என்ன?

எலி மருந்தை கையில் வைத்துக் கொண்டு யோசித்தாள் பூங்காவனம். வயிற்றில் குழந்தை இருக்கும் போது இந்த பாவத்தை செய்ய அவளுக்கு மனம் வரவில்லை. எனவே அந்தத் திட்டம் கைவிடப்பட்டது பூங்காவனத்தினால். பூங்காவனத்தின் கருவாட்டு குழம்பை சோலை பாண்டியன் விரும்பி சாப்பிட்டார் என்று மகாலட்சுமி போனில் தெரிவிக்கும் போது, பூங்கா உடலெல்லாம் தீப்பற்றி எரிந்ததைப் போல உணர்ந்தாள்..

ஒவ்வொரு முறையும் கணவனை அணுகி, அவனது அன்பை பெறவும் தன்னுடைய அன்பை அவனிடம் நிரூபிக்கவும் போராடிக் கொண்டிருந்தாள் பூங்காவனம்.. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.. ஒருவேளை மின்னலும் தன்னுடைய மனதில் இருப்பதை பூங்காவுக்கு படம் போட்டுக் காட்டி இருந்தால்  இத்தனை மாதங்களில் அவள் இந்த அளவிற்கு தன்னையே தொலைத்திருக்க மாட்டாள்.

நாட்கள் மாதங்களாகி பூங்காவின் வயிறும் நன்றாக தெரிய ஆரம்பித்து விட்டது. நான்காம் மாதம் தாண்டி விட்டது. தான் சொல்லியதைப் போல தேவகிக்கும்  ஹோட்டல் வைத்து கொடுத்து விட்டான் மின்னல் வீரபாண்டியன்.. இடையில் ஒரு நாள் செல்வியிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவரை மின்னலே நேரில் சென்று கை கால்களை உடைத்து  அது ஒரு பெரிய கேசாக மாறிவிட்டது. செல்வி படிக்கும் பெண் என்பதால் பள்ளி நிர்வாகம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால் விஷயத்தை பெரிது படுத்தாமல்  தன்னுடைய செல்வாக்கால் பூசி முழுகி விட்டான் மின்னல்.

மின்னலை ஒரு கதாநாயகன் ஸ்தானத்தில் வைத்து பார்க்கும் செல்வியும் காயத்ரியும் இந்த சம்பவத்திற்கு பிறகு அவனை தகப்பன் ஸ்தானத்திற்கு இடம்பெயர்த்து கொண்டு போகின்றனர்.  தேவகி கூட ஏதாவது ஒன்று என்றால் மாமா கிட்ட கேட்டு செய்யுங்க என்கிற அளவுக்கு மாறி விட்டார். அனைத்தையுமே கொஞ்சம் கொஞ்சமாக கவனித்துக் கொண்டுதான் வந்தாள் பூங்காவனம்..

அன்றும் நண்டு மசாலா சமைக்கும்போது  கையை சுட்டுக் கொண்டாள்.. "ம்ம்ம் புருஷனுக்கு வாய்க்கு வக்கனையா சமைச்சு போடணும்னு  ஏன் தான் நீ கைய கால சுட்டுகிறாயோ தெரியல.அந்த பயலாச்சும் சாப்பிட்டு ஒரு வார்த்தை நல்லா இருக்குன்னு சொல்ல கூடாதா..".. கமலா தன் போக்கில் சொல்லி செல்ல  தன்னுடைய முயற்சிகள் அனைத்தும் விரலுக்கு இறைத்த நீரானது என்கிற சந்தேகத்தில் சிறிது நாட்களாகவே உணர்ந்து கொண்டிருந்த பூங்காவனத்திற்கு வெந்த புண்ணில் வேலை பாச்சியத்தைப் போல இருந்தது..

தொடரும்..


Comments

Popular posts from this blog

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு

தாகம் எபிலாக்