தாகம் 15
இரவை நெருங்க நெருங்க பூங்காவனத்திற்கு பயம் நெஞ்சை கவ்வியது.. கமலி அவள் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடினார். மதியத்திலிருந்து ஒரு வாய் கூட சாப்பிடவில்லை பூங்காவனம். வீம்புக்காக அவள் இதனை செய்யவில்லை. உண்மையாகவே உணவை சாப்பிடும் மனநிலையில் பூங்காவனம் இருக்கவில்லை.அவள் குடும்பத்தை பற்றிய பயம் போய் இப்பொழுது அவளைப் பற்றி கவலைப்படும் நிலையில் அவள் இருந்தாள்.
இறுதியாக அவளை வற்புறுத்தி மாதுளை பழச்சாற்றை பருக வைத்திருந்தார் கமலி. கமலி அவளை தாங்கு தாங்குகென்று தாங்குவதைக் கூட சற்று சந்தேகமாகவே நோக்கினாள் பூங்காவனம்.. ஒருவேளை கமலி மின்னலுக்கு உறவினராக இல்லாமல் இருந்திருந்தால் அவளை நம்பியிருப்பாளோ என்னவோ?
கமலியை தவிர அந்த வீட்டில் வேலை செய்யும் மூன்று வேலையாட்களும் அதிசய பொருளை பார்ப்பது போல பூங்காவனத்தை பார்த்தார்கள். அதில் இருவர் பெண்கள் ஒருவர் ஆண்.. அவர்களின் பார்வையில் வியப்பு மேலிட்டதா என்று கேட்டால் அதுதான் இல்லை. பரம்பரை பிச்சைக்காரனுக்கு கோடிக்கணக்கில் அதிர்ஷ்டம் அடித்தது போல் அல்லவா அவர்கள் மின்னலை அடித்துக் கொண்டு சென்ற பூங்காவனத்தின் அதிர்ஷ்டத்தை எண்ணி வியந்தார்கள்.
எவ்வளவு நேரம் தான் குட்டி போட்ட பூனை போல அறைக்குள்ளயே நடந்து கொண்டிருக்க முடியும்? சற்று நேரம் காத்தாட வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் இது அவளது இல்லம் கிடையாது. இங்கே எங்கே சென்றாலும் கன்னி வெடியில் காலை வைப்பதற்கு சமம்..
எப்படி இந்த முதல் இரவை தள்ளிப் போடுவது என்ற பலத்த யோசனையில் உலன்று கொண்டிருந்த பூங்காவனத்தை அழைத்தார் கமலி.
"கண்ணு" என்ன என்பதைப் போல அவரை நிமிர்ந்து பார்த்தாள் பூங்கா.
" உன்ன பாக்க உங்க அம்மா வந்திருக்காங்க.." அடுத்த நொடி அந்த அறையில் இருந்து குடுகுடுவென்று வெளியே ஓடி வந்தாள் பூங்காவனம். திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல கையை பிசைந்து கொண்டு அந்த பிரம்மாண்டமான ஹாலில் நின்று கொண்டிருந்தார் தேவகி.. குடும்பத் தலைவன் சரியில்லாத நிலையில், உறவினர்கள் கைவிட, தகுந்த படிப்பும் கையில் நல்ல வேலையும் இல்லாத காரணத்தால் குழந்தைகளை வைத்திருக்கும் பெண்ணின் அவல நிலையை இந்த சமூகத்தில் என்ன சொல்வது? ஓடிய கணவர் சோலை பாண்டியனிடம் தேவகியை இழுத்து விடாமல் இருந்திருக்கலாம்?
அல்லது குடும்பத்தோடு சேர்ந்து விஷத்தை குடித்துவிட்டு அப்போதே செத்திருக்கலாம். இப்படி பல இருக்கலாம் இருந்து என்ன செய்ய? காலம் கடந்து தன்னுடைய நிலை தன் மகளுக்கு வந்து விட்டதே என்று நினைக்கும்போது தான் தேவகியால் அதனை தாங்கிக் கொள்ள முடியவில்லை.. தேவகியின் கையில் சிறிய கூடை ஒன்று இருந்தது.
தன்னை நோக்கி அரக்கப் பறக்க ஓடிவரும் மகளை தலை முதல் கால் வரை அலசியது தாயின் பார்வை..
"பூங்கா.." அழுகை மட்டும்தான் தேவகியிடம் எஞ்சிருந்த ஒன்று.. தாயைக் கட்டிக் கொண்டாள் பூங்காவனம்.
"ம்மா நீ இங்க என்னம்மா செய்ற? தங்கச்சிங்க எங்க"..
" உன்ன பாக்க தான்டி வந்தேன். அந்த செக்யூரிட்டி என்ன உள்ளேயே விடல.. ஏதோ பிச்சைக்காரிய துரத்துற மாதிரி என்ன கட்டை எடுத்து அடிக்க வரான். நல்ல வேலை ஒரு பொண்ணு தான் வந்து என்ன ஏதுன்னு விசாரிச்சு என்னை உள்ள கூட்டிட்டு வந்துச்சு.. " காவலாளியின் சந்தேகம் ஒரு விதத்தில் உண்மை தானே.. உதவி கேட்க வருபவர்கள் வீட்டு வாசலில் நின்றே மின்னல் வீரபாண்டியனை பார்த்துவிட்டு செல்வார்கள்.
அப்படி இருக்கும்போது நலுங்கிய சேலையும் ஓய்ந்த தோற்றத்துடன் இருக்கும் இந்த பெண்மணி, தன்னுடைய மகள் இந்த வீட்டிற்குள் இருக்கிறாள் அவளை பார்க்க வேண்டும் என்று அனுமதி கேட்டால் பைத்தியத்தை பார்ப்பது போல் அல்லவா பார்த்து வைப்பார்கள்?
அம்மாவை சோபாவில் அமர சொல்ல கூட பூங்காவனத்திற்கு வாய் வரவில்லை. அவளுக்கே அந்த வீட்டில் என்ன நிலை என்று தெரியாத போது தாயை உபசரிக்க அவள் தயாராக இல்லை..
" நீ எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்ட. மனசே கேக்கல டி. அதான் இருக்கிறத எடுத்துக்கிட்டு உன்னை பாக்க ஓடி வந்துட்டேன்.."
"ம்மா" தாயின் முன்பு தன்னை தைரியமாக காட்டிக் கொள்ள வேஷம் போட்டுக் கொண்டிருந்த பூங்கா அம்மா சொன்ன ஒரு வார்த்தையில் உடைந்து விட்டாள்..
"வாம்மா இப்படி உட்காரு" சோபாவின் கீழே அமர்ந்து கொண்டவள் தேவகியை தனக்கு முன்பு அமர சொன்னாள்.
"மாப்ள எங்கடி" சோற்று டப்பாவை திறந்து கொண்டே கேட்டார் தேவகி.
" அதுக்குள்ள ரொம்ப பேராசை படாத.. என் பொழப்பே இன்னும் என்ன பொழப்புன்னு தெரியாம நான் முழிச்சிட்டு இருக்கேன்.." தேவகிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. ரசமும் கருவாடும் செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.
சோற்றை கவளமாக உருட்டி பூங்காவனத்திற்கு ஊட்டி விட்டார்.. பொங்கி வந்த அழுகையை அடக்கி கொண்டு அம்மா ஊட்டிய உணவை வாங்கிக் கொண்டாள் பூங்கா. இவ்வளவு நேரம் தாய் மகள் என் சம்பாஷனைகளை ஓரமாக கேட்டுக் கொண்டிருந்த கமலி அவர்களை தொந்தரவு செய்யாமல் அங்கிருந்து அகன்று விட்டார்.
" நீ சாப்டியா மா.. தங்கச்சிங்க என்ன பண்றாங்க.. ஒழுங்கா ஸ்கூலுக்கு போக சொல்லு.. நான் எப்படியாச்சும் மாசா மாசம் பணம் கொடுக்க பார்க்கிறேன்.." ஒவ்வொரு உருண்டையாக வாங்கிக் கொண்டே பேசினாள் பூங்காவனம்.
" இனிமே நீ வீட்டுக்கு வர மாட்டேன்னு ரெண்டும் அழுதுகிட்டே உட்கார்ந்து இருக்குங்க.. எல்லாம் நம்ம கைலயா இருக்கு.. ஏன்டி நமக்கு மட்டும் இப்படி எல்லாம் நடக்குது.." எவ்வளவு முயன்றும் முடியாமல் அழுதே விட்டார் தேவகி.
அம்மாவின் கண்களை துடைத்து விட்ட பூங்காவனம் " அதான் நீயே சொல்லிட்டியே எல்லாம் நம்ம கைலயா இருக்குனு? இந்த உலகத்துல ஏழையா மட்டும் பொறக்கவே கூடாது.." சற்று நேரம் அங்கே அமைதி பரவ வேகமாக மகளுக்கு ஊட்டி முடித்தார் தேவகி.
" அம்மா இனிமே நீ இங்க வராத. இது என்ன மாதிரி இடம் இங்கே இருக்கிறவங்க எப்படின்னு எனக்கு இன்னும் எதுவும் தெரியாது. நான் இங்க மாட்டிக்கிட்டது பத்தாதுன்னு நீயும் இங்க வந்து மாட்டிக்க கூடாது. என்ன நடந்தாலும் தங்கச்சிங்கள பத்திரமா பாத்துக்கோ. நான் சாப்பிடலைன்னா இந்த மாதிரி கட்டுசோறு கட்டி எடுத்துட்டு வந்து கண்ட நாய்ங்க கிட்டயும் அவமானப் படாதே..
அன்னைக்கு நான் கொடுத்த பணம் உன் கையில இருக்குல்ல. அத வச்சு மொத சமாளி எப்படியும் இன்னும் ரெண்டு மூணு மாசத்துக்கு கவலை கிடையாது.."
" நாங்க பாத்துக்கிறோம் நீ மொத உன்ன ஒழுங்கா பாத்துக்கோ.. பூங்கா உனக்கு நான் சொல்ல வேணாம்.. இருந்தாலும் ஒரு அம்மாவா சொல்றேன் அனுசரிச்சு போ புருஷன் கால கழுவுன்னு நான் சொல்ல போறது கிடையாது. மாப்பிள்ளை என்ன எப்படினு நமக்கு ஒன்னும் விளங்கல. இந்த ஆள திருத்தலாம் இவன் கூட வாழ முடியும்னு நீ நினைச்சா எப்படியாவது உன் கைக்குள்ள போட்டுக்கோ.
இல்ல இவனும் அந்த சோல பாண்டியன் மாதிரி ஒருத்தனு தெரிஞ்சா எப்படியாச்சும் இவன் கிட்ட இருந்து தப்பிச்சிரு..இதுவரைக்கும் சுதானமா நடந்துக்கோ.. அப்புறம் இன்னொரு விஷயம்" குரலை தனித்து விட்டார் தேவகி.
" என்னம்மா"
அக்கம் பக்கம் பார்த்தவர் பூங்காவை இன்னும் நெருங்கி அமர்ந்து " அந்த சோல பாண்டியன் ரொம்ப மோசமானவன்.. இத்தனை வருஷம் அவன நா சமாளிக்க முடிஞ்சுதுனா அதெல்லாம் ஒரு காரணமா தான். பொண்ணுங்களுக்கு கடவுள் ஏன் தெரியுமா அழகான உடம்ப கொடுத்தாரு.. அந்த உடம்ப வச்சு ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்.. உங்க அப்பா நம்மள விட்டுட்டு போன சமயத்துல அந்த சோல பாண்டியன் என்னை அனுபவிச்சிட்டு மும்பையில விக்கிறதா பிளான் பண்ணி இருந்தான். உங்களையும் சேர்த்துதான்..
அன்னைக்கு எனக்கு கை கொடுத்தது என்னோட உடம்பு தான். அதனாலதான் எவள தொட்டாலும் தொட்ட கையோட விட்டுட்டு போறவன் என்னை மட்டும் இத்தனை வருஷம் கூடவே வைத்திருந்தான். அவன வெச்சி உன்ன ஓரளவுக்கு படிக்க வச்சுட்டேன். மிச்சம் ரெண்டும் எப்படியோ விவரம் தெரிஞ்ச வயசு வரைக்கும் வளர்த்துட்டேன்..
எல்லாமே உன் கையில தான் இருக்கு. அம்மா எத பத்தி சொல்றேன்னு உனக்கு தெரியும். ஒழுக்கம் தான் உயிருன்னு சொல்லிக் கொடுக்கிற அம்மா நான் கிடையாது. ஒழுக்கம் போனா உயிரே போயிருச்சுன்னு சொல்லி செத்துப் போறது அந்த காலம். அப்படித்தான் நம்ம சமுதாயம் நம்மள பழக்கி வச்சிருக்கு. நாம எந்த தப்பும் பண்ணல ஒழுக்கம் கெட்டு போனதுக்கு. இந்த சமுதாயமும், இது உருவாக்கி வைத்திருக்கிற பணம்ற சாத்தனும்தான் நம்மள மாதிரி ஆளுங்கள இப்படி முடிவெடுக்க வைக்குது.
உயிர் தான் முக்கியம். ஒரு தடவை போனா அது திரும்ப வராது. எப்படியாவது சாமர்த்தியமா நடந்து இவன் கிட்ட இருந்து தப்பிக்க பாரு. "
"அம்மா நீ"
" நீ தப்பிச்சா எங்களையும் காப்பாத்த மாட்டியா.. எங்களுக்கு எல்லாமே நீ தானடி.. நீ சாப்பிட்டு தெம்பா இரு.. பார்த்து பத்திரமா நடந்துக்கோ.. இது நம்ம குலசாமி திருனூறு"
"இத ஏன்மா என்கிட்ட கொடுக்குற.." முகத்தை சுளித்தாள் பூங்காவனம்.
"அப்படி சொல்லாத பூங்கா.திக்கு இல்லாதவங்களுக்கு தெய்வம்தான் துணை. ஏதோ ஒரு வழியில இன்ன வரைக்கும் நம்மளுக்கு சாமி உதவி செஞ்சுகிட்டு தான் இருக்கு. அதே சாமி இப்போவும் நமக்கு உதவி செய்யும். எப்பயும் இந்த திருநீற உன் கூடவே வச்சுக்கோ. சரி நான் கிளம்புறேன்"மகளை கண்களில் நிறைத்துக் கொண்டு ஆயிரம் பத்திரம் சொல்லி அங்கிருந்து கிளம்பினார் தேவகி.
தேவகி வந்து போன பிறகு சற்று நேரம் அறைக்குள் நடைப் பயின்றாள் பூங்காவனம். தேவகி கூறி சென்ற ஒவ்வொரு வார்த்தைகளும் அவள் செவியினுள் வந்து மோதி சென்றது.. ஒன்றுமே தெரியாத அம்மாவை இத்தனை வருடங்களாக சோலை பாண்டியனை சமாளித்து வந்திருக்கும்போது, தன்னால் இந்த மின்னலை தாண்டி செல்ல முடியாதா?.. மனதை இரும்பாக்கி கொண்டாள். மானத்தை ஆயுதமாக்கி கொண்டாள்.. மின்னல் வீரபாண்டியனின் வரவுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் பூங்காவனம்..
Comments
Post a Comment