தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 8


புலர்ந்தும் புலராத அந்த காலை வேளையில்  சோலைப் பாண்டியனின் வீட்டு வாசலில் அவரை பார்ப்பதற்காக தவம் கிடந்தார் தேவகி. மகளைக் காணாமல் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. பூங்காவனத்திற்கு ஏதோ தீங்கு நடப்பது போல இரவு நெஞ்சமெல்லாம் காந்தியது. அதனாலேயே அதிகாலையே வந்து விட்டிருந்தார் தேவகி. தப்பி தவறி கூட அவரின் இரு மகள்களையும் இந்த பக்கம் அழைத்து வரவில்லை.

எவ்வளவு அதிகாலை வந்திருந்தாலும் வீட்டிற்குள் செல்ல அவருக்கு அனுமதி கிடையாது. ஒரு காலத்தில் சோலை பாண்டியனின் ஆசை நாயகியாக இருந்த வேளையிலுமே தேவகிக்கு இதே நிலைமைதான்.

நாய் பக்கத்தில் அமர்ந்து அவருக்காக காத்திருக்க வேண்டும்.. பழைய நினைவுகள் தேவகியின் மனதை போட்டு பிழிந்து எடுத்தன.

பல தடவை இதே போல் இரவு பகல் பாராமல் அவர் வீட்டு வாசலில் அவருக்காக காத்திருக்கிறார். அதிலும் ஒரு தடவை  இரவிலிருந்து அவர் வீட்டு வாசலில் சோலை பாண்டியனை பார்க்க காத்திருந்தும் கதவை திறக்கவில்லை அவர். விடிந்து பூஜையெல்லாம் முடித்து சாப்பிட்டு சாவகாசமாக வெளியே வந்தவர் அப்பொழுதும் கூட அவரைப் பார்த்ததும் அடக்க ஒடக்கமாக எழுந்து நின்று  கைகட்டியபடி பரிதவிப்பாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்த தேவகியை சற்றும் கண்டுகொள்ளவில்லை.

விலை உயர்ந்த வெளிநாட்டு பிஸ்கட்டை எடுத்து நாய்க்கு போட்டார் சாப்பிட..  நாய் பிஸ்கட்டை சாப்பிட அதனை ஒருமுறை திரும்பிப் பார்த்த தேவகி பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு 

"ஐயா"என்க

அப்பொழுதுதான் அவரைப் பார்த்தது போல அவரின் பக்கம் பார்வையை வீசிய சோலை பாண்டியன் " எதுக்கு பிச்சைக்காரி மாதிரி வீட்டு வாசப்படி எல்லாம் காலங் காத்தாலே வந்து உட்கார்ந்திருக்க. எத்தனை வாட்டி சொன்னாலும் உன் மரமண்டைக்கு ஏறவே ஏறாதா.. முக்கியமான சோலியா வெளிய போறேன். உன் மூஞ்சில முழிச்சிட்டு போனா காரியம் விளங்குமா  செத்த மூதி" எரிந்து விழுந்தார் சோலை பாண்டியன்.

"ஐயா சின்னத்துக்கு திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியலய்யா. உடம்பு நெருப்பா கொதிக்குது. தூக்கி தூக்கி போடுது. மூணு பொட்ட பிள்ளைகளை வச்சுக்கிட்டு ராவு நேரத்தில நான் யாருகிட்ட போய் நிற்கிறது. எனக்கு ஐயாவை தவிர வேற நாதி இல்லையே.."

" மகளுக்கு விட்டுவிட்டு இழுத்துச்சுன்னா தூக்கிட்டு தர்மாஸ்பத்திரிக்கு ஓட வேண்டியதுதானே.. அத விட்டுபுட்டு இங்கு எதுக்கு வந்து வெண்ண பேச்சு பேசிட்டு இருக்க."

" இல்லைய்யா கொஞ்சம் பணம்"தடுமாறினார் தேவகி.

" என்னது பணமா ஏன்டி பணம் என்ன மரத்துல காய்க்குதுன்னு நினைச்சுட்டு இருக்கியா.. நீ கேட்கிறப்பெல்லாம் நூறு ஐநூறுனு அள்ளி கொடுக்க  இங்க என்ன உங்க அப்பனா பணம் காய்ச்சி மரம் நட்டு வச்சிருக்கான்.."

"அது இல்லங்கய்யா சின்னவளுக்கு கவர்மெண்ட் ஆஸ்பத்திரி மருந்து ஒத்துக்க மாட்டுதுய்யா."

"ஓ பிச்சைக்காரிக்கு பிரைவேட் ஆஸ்பத்திரி கேக்குதோ.. என்னமோ உங்க ஆத்தா வயித்துல இருந்து பிறக்கும்போது பிரைவேட் ஆஸ்பத்திரியில  சொகுசா பொறந்த மாதிரி நினைப்பு. எந்த குப்ப மேட்டுல ஒதுங்கி பிள்ளைய பெத்தியோ. கண்ட நாய்க்கும் வெட்டிக்கிட்டு இழுக்கிறதுக்கு என் காச தண்டம் அழுகணுமா." தேவகிக்கு ஒரு பக்கம் அவமானமும் இன்னொரு பக்கம் கையாலாகாத தனம் அவர் இதயத்தை கொன்று கூறு போட்டது.

"ஐயா.. உங்களைத் தவிர எனக்கு வேற யாருய்யா இருக்கா.." குரல் உடைந்து போனது. கண்ணீர் விட்டால் அதற்கு இன்னும் இரண்டு துப்பு துப்புவார்.

"ச்சை காலையிலேயே ஒப்பாரி.. கலங்காத்தால எந்திரிச்சு வேலை வெட்டிக்கு போலாம்னு ஒரு மனுஷன் வாசப்படி கால வச்சா இப்படியா தரித்திரம் புடிச்ச மாதிரி நின்னு பிச்சை கேட்கிறது.. இந்த நாளு விளங்குமா.. ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே வந்து உன்கிட்ட காசு கொடுத்துட்டு போனேன்.." அவர் கொடுத்த காசு இரண்டு வேளை உணவுக்கு சரியாக இருந்தது.

"ஐயா அது பிள்ளைங்க படிப்புக்கு செலவாகி போச்சுங்க. ஐயா கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த தடவை உதவி பண்ணுங்கய்யா. ஐயா என்ன சொன்னாலும் கேட்கிறேன்"

மோவாயை தடவினார் சோலை பாண்டியன். மற்ற பெண்களை எல்லாம் தொட்டுவிட்டு கை கழுவி செல்வதைப் போல தேவகியை அவரால் விட்டுவிட முடியவில்லை. என்னமோ தெரியவில்லை தேவகியிடம் மற்ற பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று அவரை ஈர்த்தது. ஒருவேளை புகழ்பெற்ற பழம் நடிகை  பத்மினியை போல தேவகி கொள்ளை அழகாக இருப்பதா?

" உன்கிட்ட என்ன கேட்கிறது.. புதுசா கொடுக்க உன்கிட்ட என்ன இருக்கு.. ரெண்டு நாளைக்கு  முக்கியமான வேலை விஷயமா வெளியூருக்கு போறேன். நீ என்ன பண்ணு மருந்து வாங்கி உன் மகளுக்கு கொடுத்துட்டு, ரெண்டு நாளைக்கு தேவையான உடுப்ப எடுத்து வெச்சிக்கோ..

அங்க எவளயும் நம்ப முடியாது.. எப்ப எவன் என்ன போட்டு தள்ளலாம்னு இருக்கான். காலையில முழுக்க இந்த எருமை மாட்டு பயலுங்க மூஞ்சில முழிச்சிட்டு, ராத்திரிக்கு படுத்தா கால புடிச்ச விட ஒருத்தி இருந்தா தானே மனுஷனுக்கு ஒரு இதுவா இருக்கும்.. போன வாரமே உன்ன வர சொன்னேன். என்னமோ பச்சை புள்ளைங்கள விட்டு வர மாறி முடியவே முடியாதுனுட்ட.. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. பணம் தர எடுத்துட்டு போய் பிள்ளைக்கு வைத்தியம் பார்த்துட்டு,உன் மக பெருசு கிட்ட கையில காச கொடுத்துட்டு வா.."தேவகி விக்கித்து போய் நின்றார்.

"அய்யா புள்ளைங்கள விட்டுட்டு".. அப்பொழுது பூங்காவனத்திற்கு பதினைந்து வயது தான்.

"என்னடி இவ.. என்னமோ புதுசா புள்ள பெத்த பச்சை உடம்பு காரி மாதிரி சிலுத்துகிற. பணம் வேணும்னா ஒன்னு நீ வா.. இல்லன்னா உன் மக பெருசு அத அனுப்பிவிடு. காலமுக்கு யார் வந்தா என்ன?" தேவகிக்கு நெஞ்சில் சுளீரென்று வலி வந்தது. சோலை பாண்டியனின் மறைமுகத் திட்டமும் தெரியவந்தது.

"இல்லைய்யா நானே வரேன்"

"ஹான் அப்படி வா வழிக்கு..இந்தா" தேவகி கேட்டதற்கும் சற்று அதிகமான பணத்தை எடுத்தவர் தேவகியிடம் அதனை கொடுத்தார்.. மீண்டும் நாய்க்கு பிஸ்கட்டை போட ஒன்று தேவகியின் காலருகே வந்து விழுந்தது.

குனிந்து வந்த பிஸ்கட்டை கையில் எடுத்த தேவகி அதனை நாய்க்கு போட "அத ஏன் நாய்க்கு போடுற.. வெளிநாட்டு பிஸ்கட்டு.. சும்மா சாப்பிடு.."நீ நாய்க்கு சமம் என அவர் சொல்லாமல் சொல்ல நாய் என்று அவர் குறிப்பிட்ட பெண்ணோடு தான் உறவு கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் தோதாக மறந்து போனார்.

பழைய நினைவுகளிலிருந்து விடுபட்ட தேவகி  நேற்று காலையில் வீட்டை விட்டு சென்ற மகள் இரவு முழுவதும் வீடு திரும்பாத பயத்தில் சோலை பாண்டியன் வீட்டிற்கே வந்து விட்டிருந்தார். இங்கே நடந்த எதுவும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெர்மன் ஷெர்பெட் வகையை சேர்ந்த அந்த நாய் அவரை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு படுத்து விட்டது.

இன்று அந்த நாய் இருந்த இடத்தில் தான் முன்பு அதனின் அம்மா கட்டப்பட்டிருக்கும். தேவகிக்கு இந்த நாயும் தானும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாய் தோன்றியது.

"என்ன எப்படி பார்க்கிற ஒரு விதத்துல நீயும் நானும் ஒன்னு தான். உன்னோட அம்மா கட்டிவைக்கப்பட்டுருந்த இடத்துல தான் இப்ப நீ இருக்க. நான் எந்த இடத்துல இருந்தனோ இப்ப என் பொண்ணு அதே இடத்துல இருக்கா.. நாங்க எல்லாம் பொறக்காமயே இருந்திருக்கலாம்.." தேவகி இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே  சோலைப் பாண்டியன் தன்னுடைய காலை கடமைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தார்.

அங்கே அவருக்காக காத்திருக்கும் தேவகியை கண்டவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் சேர்த்து வெடித்தது..

"ஐயா என் பொண்ணு".. தேவகி பரிதவிப்பாக வினவ

"பொண்ணா.. சரியான மூதேவி.. கரகம் புடிச்ச பீடை..எந்த நேரத்துல என் வீட்டு வாசப்படியில காலை வைத்தாளோ அப்பவே என் மானம் மரியாதை எல்லாமே காத்தோட காத்தா பறந்து போயிருச்சு. ஏதாச்சும் மருந்து செஞ்சு உன் மக கொடுத்து அனுப்பினியோ.." சோலை பாண்டியன் காட்டமாய் உரும தேவகிக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஐயா என்னங்கய்யா பேசுறீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியலையே.."

"ம்ம்ம் புரியாது.. சீமா சித்ராங்கிக்கு.. பெரிய உலக அழகிய பெத்து வெச்சிருக்கியே அந்த பீடைய தான் சொல்லுறேன்.. விளங்காத பரதேசி"..

"ஐயா எம் பொண்ணு எங்கய்யா.. நேத்து காலையில வீட்ல இருந்து போனவ.. இன்னும் வீடு வரல.."

"கண்ட சிறுக்கியும் ஊரு மேய என்ன வந்து கேள்வி கேப்பியோ நீயி.."

"அய்யா'

"என்னடி ஐயா கொய்யானு..ஊரு மெயுற பொறுக்கி இந்நேரம் எவென் கூட படுத்து கெடக்கோ..பெரிய உத்தமியாட்டம் மகள காணோம்னு வந்து நிக்குற.. உன் மவள நானா கைலிக்குள்ள வெச்சிருக்கேன்..சனியன் எங்குட்டு துடிச்சிட்டு ஓடுச்சோ.. உன் ஏரியா பசங்க கிட்ட கேட்டு பாரு.." அமிலத்தை காய்த்து காதில் ஊற்றியதைப் போல இருந்தது தேவகிக்கு.

பூங்காவனத்தின் பவித்திரத்தை பற்றி அவதூறாக பேசியது மட்டுமல்லாமல், அவள் இங்கே வரவே இல்லை என்று அல்லவா கூறுகிறார்..

"ஐயா என்னங்கய்யா சொல்றிங்க.. உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு இல்லை"

"ச்சி த்து.. இத சொல்ல உனக்கு வெட்கமா இல்ல.. ஒரு வயசுக்கு வந்த பொண்ணு பெத்தவகிட்டே நான் இன்னொருத்தன் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போறா.. என்ன ஏதுன்னு கண்டிக்க துப்பு இல்லை.. மகளை கூட்டி கொடுக்க ரெடியா இருக்க. கடைசியில அவளை காணும்னு இங்க வந்து நிக்கிற.. அப்படி எந்த சிறுக்கியும் என் வீட்டு வாசப்படிக்கு வந்து நிக்கல. இன்னொரு தடவை மகளை காணும்  மயிரக் காணோம்னு என் வீட்டு வாசப்படிக்கு வந்து நின்ன" நாக்கை துரத்தி தேவகியை விரட்டினார் சோலை பாண்டியன்.

நடந்தது எதுவும் தெரியாமல் தவித்து தான் போனார் தேவகி. அவரை அங்கே நிற்க விடாமல்  சோலை பாண்டியனின் அடியாட்கள் விரட்டி விட்டார்கள். எங்கே யாரிடம் சென்று பூங்காவனத்தைப் பற்றி தெரிந்து கொள்வது என்றே தெரியாமல் பிரம்மை பிடித்தவர் போல சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

"ஹெலோ மின்னலு"

"ஐயா சொல்லுங்கய்யா" பவ்வியமான குரலில் வினவினான் மின்னல்.

"அந்த நாய நான் சொல்ற வரைக்கும் அங்கனயே வெச்சிக்கோ.. நம்ம சுரேஷ அனுப்பி விடுறேன்" சோலை பாண்டியனுக்கு தன் வீட்டில் இம்மாதிரி தனக்க அவமானம் நிறைந்ததை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரது இத்தனை வருட வாழ்வில் இம்மாதிரியான அவமானத்தை  அவர் சந்தித்தது கிடையாது.

மனதில் ஏதோ ஒன்று அவரை நெருடியது. தனது குடும்ப ஜோசியரை அழைத்து விட்டார்.ஜோசியர் சொன்ன செய்தியை கேட்டு சோலை பாண்டியனின்  நெஞ்சமே ஒரு முறை குலுங்கி நின்றது.


Comments

Popular posts from this blog

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு