Saturday, 5 April 2025

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு




Ud 1♥️


ஒரு பக்கம் வீணையின் இன்னிசையும் இன்னொரு பக்கம் தபேலாவின் நல்லிசையும் அந்த இல்லம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது.. மூலிகை சாம்பிராணியின் மனம் வாசலை தாண்டி மூக்கை துளைத்தது.. தோட்டத்தில் மலர்ந்திருந்த மல்லிகையும் செண்பகப் பூவும் போட்டிக்கு மனம் தர வர  அந்த இடமே லஷ்மி கடாட்சமாக காட்சியளித்தது.

வாசற்படியில் அமர்ந்திருந்தவனிடம் டாட்டா சுமோவை துடைத்துக் கொண்டே ஒருவன் கூறினான்.

"ஹெர்ம்ம்ம்ம்".."

" என்னடா மாப்ள பெருமூச்சு பலமா இருக்கு.. "

" வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கையை வாழனும் மச்சி. இதெல்லாம் ஒரு வாழ்க்கையா நாம வாழுறது? "

" ஏன்டா சலிச்சுக்கிற இப்ப என்ன வந்துருச்சு.."

" நம் அய்யாவுக்கு என்ன வயசுருக்கும்? இந்த வயசுலயும் கொஞ்சநஞ்ச ஆட்டமா போடுறாரு? பசங்க எல்லாம் வெளிநாட்டுல செட்டிலயிருச்சுங்க.. இவரு இங்க ராஜ போக வாழ்க்கை வாழ்ந்துட்டுருக்காரு..  நினைக்கவே வெறுப்பா இருக்கு மச்சி.. வீட்டுக்கு போனா பொண்டாட்டி இந்த வேலை வேணாம் வேற வேலைக்கு போனு வெரட்டுறா.. நம்ப மூஞ்சிக்கு சுவிஸ் பேங்க்லையா வேலை கூப்டு கொடுப்பான்.. சொன்னா அந்த பைத்தியக்காரிக்கு எங்க புரியுது..

கல்யாணம் பண்ணி எட்டு வருஷம் பிள்ளை கிடையாது. இப்பதான் ஆத்தா கண்ண தொறந்து  என் பொண்டாட்டிக்கும் எட்டு மாசம் நடந்துட்டு இருக்கு. ஒவ்வொரு நாளும் வீட்டுக்கு போனா அவளோட பொலம்புல கேட்டே உசுரு போது. அவ சொல்றதுலயும் நியாயம் இருக்கிற மாதிரி தான் தோணுது.. நீ செய்ற பாவம் நம்ம புள்ள தலையில தான் வந்து விழப்போகுது. ஒவ்வொரு தடவையும் அவ இத சொல்லும் போது  அப்படி ஆயிருமானு ஒரே பயமா இருக்கு மச்சி.." கவலையாக சொல்லிக் கொண்டே காரைத் துடைத்தான்.

வாசற்படியில் அமர்ந்திருந்தவன்"ம்க்கும்.. என் பொண்டாட்டி மட்டும் என்னவாம்.. வீட்டு வாசப்படியில கால வெச்சாலே எதையாவது விட்டு வீசுறா. பிள்ளைங்கள கூட என் கூட கடைக்கண்ணிக்கு அனுப்ப மாட்றா.. அவளும் என் கூட எங்கேயும் வர மாட்றா.. என்ன வாழ்க்கைன்னு தெரியல.. "

"எழவு இந்த வேலையை விட்டு போலாம்னு பார்த்தா அதோட உசுர விட வேண்டியது தான். ஏற்கனவே கந்தன் அப்படித்தான் மேல போய் சேர்ந்தான்.. பொதக்குழியில காலை விட்டாச்சு. உள்ள இழுத்துட்டு போகாம விடாது. முடிஞ்ச வரைக்கும் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு பணத்தை சேர்த்து வச்சுரணும்.."

"ஆமாடா.. சில நேரம் தோணுது இந்த பாவப்பட்ட வேலையை செய்யறதுக்கு நாண்டுக்கிட்டு சாகலாம்னு.."

"உள்ள இருக்குற பொண்ணுக்கு எத்தனை வயசிருக்கும்?"

"என் பொண்ணு வயசிருக்கும்.. இந்தப் பாவத்தை எல்லாம் எங்க போய் தொலைக்கிறதோ தெரியல."

காரை துடைத்து முடித்தவன் வாசற்படியில் அமர்ந்திருந்தவனிடம்" எக்காரணம் கொண்டும் உன் பொண்ண இந்த ஊருக்கு வர வச்சிறாத.. "

" எனக்கு என்ன பைத்தியமா அதனாலதான ஒத்த பொட்ட பிள்ளைய என் அக்கா வீட்டில தங்க வச்சு அங்கேயே படிக்க வைக்குறேன். நல்ல வேளை மூத்தவ மட்டும் பொண்ணு மத்த மூணும் பசங்க.. எல்லாமே பொண்ணா பொறந்துறந்தா என் நிலைமையை நெனச்சு பாரேன்.. பொண்ண அப்படியே ஒருத்தனுக்கு கட்டிக் கொடுத்து அதுக்கப்புறம் தான் இந்த மண்ணை மிதிக்க விடுவேன்.."

" ரொம்ப நல்லது.. கல்யாணத்துக்கு கூட ஐயா கிட்ட பைசா வாங்கிறாத.. நம்மகிட்ட இருக்கிறதையே புரட்டி போட்டு  செய்வோம்".. மேலும் சில ஆட்கள் வருவதை கண்டதும் இருவரின் பேச்சும் தடைப்பட்டது.

மாடியில் உள்ள அறையில் கசக்கப்பட்ட பூவாய் கிடந்தாள் நங்கை ஒருத்தி.. மேனியை மறைக்க வேண்டிய ஆடையை துறந்தவள் பார்வை விட்டத்தை இலக்கின்றி வெறித்து கிடந்தது.. ஒன்பது மாதக் குழந்தையின் தாய் அவள்..தொழிலுக்காக கணவன் கை நீட்டி வட்டி வாங்கிருக்க வியாபாரம் நட்டம் அடைந்து தவணை கட்ட தவறிருந்தான்..

அவனை குண்டு கட்டாக கட்டி தூக்கி வந்து பிரித்து மேய்ந்ததும் இல்லாமல் ஒரு ஏக்கர் அவனின் பூர்விக தாய் பூமியை வழுக்கட்டாயமாக அபகரித்து, சிறு குழந்தை என்றும் பாராமல் அதன் கழுத்தில் கத்தி வைக்க பெண்ணவள் ஆடி போனாள். கட்டிய கணவன் கதறி அழ, குழந்தைக்காக அவளே இந்த பாவிகளின் வண்டியிலேறி அரக்கனின் மஞ்சத்திற்கு வந்து விட்டாள்.. பின் புலம் இல்லாதவர்களை தேடிப் பிடித்து அவர்களிடமிருந்து நிலம் நீச்சுகளையும் கூடவே அவர்கள் வீட்டு நங்கைகளையும் அபகரிப்பத்தில் சோலை பாண்டியன் கைத் தேர்ந்தவர்..

குளித்து முடித்து ஜவ்வாதை உடலில் அங்காங்கே தெளித்தவர் வெள்ளை வேஷ்டி சட்டை அணிந்து கையில் தங்க காப்பு, கழுத்தில் புலி நகம் கோர்க்கப்பட்ட் சங்கிலியோடு கண்ணாடி முன்னின்று தலை வாரினார்.. தன்னால் ஒரு குடும்ப பெண்ணின் வாழ்வே பரி போனதை பற்றி துளியும் எண்ணமில்லை அவருக்கு..

பெரிய மனிதராய் தன்னை உறுமாற்றி கொண்டவர் இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்த பெண்ணை எட்டி உதைத்தார்..

"எடுப்பட்ட சிறுக்கி முண்ட.. என்னடி என் வீட்டு மெத்தையில ஒய்யாரம் கேக்குதோ? இல்ல எந்திரிக்க உடம்பு நோவுதா? புருஷன்காரன் கையாளகாதவனா இருந்தா சொல்லு.. எப்பலாம் தோணுதோ வண்டி அனுப்புறேன்.. உன் தேவைய நான் பாத்துக்கிறேன்.. என்னடி சொல்ற சிறுக்கி மவளே".. சோலை பாண்டியன் எட்டி உதைத்ததில் கீழே சுருண்டு விழுந்த பெண் உணர்வு பெற்று அவரின் பேச்சில் விக்கித்து போனாள்.

"ஐயா சாமி.. வேணாயா என்ன விட்ருங்கய்யா.. நான் குடும்பத்தோட இந்த ஊர விட்டே போயிருறேன்.. ஒம்போது மாச கைப்புள்ள வெச்சிருக்கேன்ய்யா.. என்னிய வுட்ருங்கய்யா"அவள் கை தொழுது அழ

"தெ ச்சி செத்த மூதி.. வாழுற வீட்ல காலையிலயே ஒப்பாரி வெச்சிக்கிட்டு.. வனப்பா இருக்கியே வப்பாட்டியா இருந்துட்டு போயேனு கேட்டா எழவு விழுந்த மாறி அடிச்சிட்டு அழற.. இன்னும் கொஞ்ச நேரம் இங்கேருந்த காலத்துக்கும் இங்கயே இருக்குற மாறி ஆயிடும் சொல்லிட்டேன்.."அவர் சொன்ன அடுத்த கணம் சேலையை வாரிச் சுருட்டி கட்டியவள் நடக்க முடியாமல் பல்லை கடித்துக் கொண்டு நடந்து அந்த வீட்டு வாசர்படிக்கு வந்தாள்.

உள்ளே பூஜையறையில் மணி சத்தமும் கூடவே

"அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே"

மகிஷாஸுரமர்த்தினியை கட்டை குரலில் பாடிக் கொண்டிருந்தார் அவர் முன்பிருந்த பிரமாண்ட துர்கை சிலையின் முன்னமர்ந்து..

"ஒரு பொண்ணோட வாழ்க்கைய அழிச்சிட்டு சாமிய தொணைக்கு கூப்பிடுறியா.. நீ கும்பிடுறதும் ஒரு பொண்ணு தான்டா.. உன் அழிவும் ஒரு பொண்ணால தான்டா நடக்கும்.. இன்னைக்கு நான் கலங்கி நிக்குற மாறி ஒரு நாள் நீ கலங்கி நிப்படா.. சாமினு ஒன்னு இந்த உலகத்துல இருந்தா நீ புழு புழுத்து சாவடா நாசமா போறவனே"என்றப்படி கலையப்பட்ட ஓவியமாய் அங்கிருந்து வெளியேறிய அந்த பெண்ணின் பெயரும் துர்கா தான்.

பூஜை முடிந்து பட்டை கொட்டையுமாக காட்சியளித்தார் சோலை பாண்டியன்..

அவசரமாக ஓடிய பெண்ணோருத்தி வழக்கமாய் செல்லும் கடையின் முன் வந்து நின்றாள். இன்னும் கடையே திறக்கவில்லை. கை கடிகாரத்தில் மணி பார்த்தவள் மிகுந்த பதற்றதோடு காணப்பட்டாள். நகத்தை கடித்து துப்பிய பிறகு இப்பொழுது வேறு வழியில்லாமல் சதையை ஓரத்தில் கடித்துத் துப்பிக் கொண்டிருந்தாள்..

கடையின் ஓனர் ஸ்கூட்டரில் இருந்து இறங்க"என்ன பூங்கா இவ்ளோ காலைலே வந்துருக்க".. என்றார் ஆச்சர்யத்தோடு.

"சேட்டு நின்னு பேச நேரமில்லை. கடைய சீக்கிரம் தொறங்க. பொருள வெச்சிட்டு துட்ட எடுத்துட்டு போய் ஒரு பொறம்போக்கு மூஞ்சில எறியனும்.."கடுகடுத்தாள் பூங்கா..

கடை திறக்கப்பட முதல் போனியே அவள் தான். காதில் அணிந்திருந்த கம்மலை கழற்றி கொடுத்தாள்..

"ஆறாயிரம் தரான் சேட்."

"யோவ் அநியாயம் பண்றேய்யா..ரெண்டு கிராம் வரும்ய்யா.. நல்லா உரசி பாரு சேட்டு.. ஒழுங்கா எடை போட்டியா இல்லயா"..

"தோ பாரு பூங்கா.. நீ தான் காலையில மொத போனி.. நீயே இப்படி குடைச்சல் கொடுத்தா எப்படி? சரி நீ நம்ம ரெகுலர் கஸ்டமர்னால சேட் உனக்கு எட்டாயிரம் தரான்.."..

"நீ ஆணியே புடுங்க வேணா.. எதுத்த கடைக்காரன் கடைய தொறந்துட்டான் போல.. நான் அங்கே போறேன்.. நம்ம சேட்டு நாளப்பின்ன உதவுமேனு இங்க வந்தேன் பாத்தியா.. உன் செருப்ப கொடுய்யா.. அதுலயே அடிச்சிக்கிறேன்.."பூங்கா கம்மலை பிடிங்கிக் கொண்டு எழ

"ஹரே பேட்டி இரும்மா.. இப்போ என்ன சொல்லிட்டேனு போற..அவன் அநியாய வட்டி போடுவான்.. போறதனா போ.. கொடுக்கும் போது பொருள பாதி சொரண்டிட்டு தான் கொடுப்பான் துஸ்மன்.. எனக்கு ஒண்ணுமில்ல.."

"சொரண்டுனாலும் பரவால்ல.. எனக்கு உடனே பத்து ரூபாய் வேணும் சேட்டு.. நீ எட்டு உன் மண்டையில கொட்டுனு அதுலயே தொங்கிட்டு நிக்குறே..பழக்கம் வேற பணம் வேறய்யா.. நான் அங்கேயே போறேன்"மீண்டும் அவள் கிளம்ப

"சரி என்ன இப்ப பத்தாயிரம் வேணும் உனக்கு.. ஒக்காரு..சின்ன புள்ளையிலருந்து பாக்குறேன் உன்ன.. அதனால தரேன்.. ஆமா எதுக்கு அவசரமா இவ்ளோ பணம்"பணத்தை எண்ணிக் கொண்டே கேட்டான் சேட்.

"ம்க்கும் வேறதுக்கு அந்த வீணாப் போன கதிரு கிட்ட அவசரத்துக்கு வட்டிய வாங்கிட்டு நான் படுற பாடு இருக்கே".. நொடித்து கொண்டாள் பூங்கா..

"ஐயோ அவனா.. டெட் பாடி கிட்டருந்தே துட்ட புடிங்கிருவானே.. பயங்கர ஆளாச்சே..அதெல்லாம் வெறும் கண் துடைப்பு..அவன் வேறும் வெத்து வேட்டு. அவனுக்கு பின்னால அந்த சோலை பாண்டியன் இருக்கான்ல சேட் கேள்விப் பட்டான்..ஆமா அந்தாளு தானே உங்கம்மாவ"

"ப்ச் இப்ப என்ன? ஆமா சேட்டு அந்தாளு எங்கம்மாவ வெச்சிருந்தான்.. படுக்க வேற பணம் வேற.. போதும் பத்தாயிரத்த பதறாம நீ பத்து வாட்டி எண்ணுனது.. கொண்டா பணத்தை"அங்கிருந்து கிளம்பினாள் பூங்கா என்கிற பூங்காவனம்.

அவசரமாக ஓடியவள் டானென்று  கந்து வட்டி கதிரின் வீட்டின் முன்பு நின்றாள்.. மார்க்கெட் மொத்தமும் கதிரின் கீழ் தான் அடங்கியிருந்தது.. கதிர் பைனான்ஸ் என்கிற பெயரில் அநியாய வட்டிக்கு பணத்தை கொடுத்துக் கொண்டிருந்தான் கதிர்..

சரியாக பத்து மணிக்குள் அவன் வீட்டு வாசற்படியில் நின்றாள் பூங்காவனம்.. அங்கிருந்த அவனின் ஆட்கள்

" என்னைக்கு இந்த பொண்ணு மாட்ட போகுதோ" என்கிற ரீதியிலும்

" கடவுளே சின்ன பொண்ணா இருக்கு எப்படியாவது அசனையும் வட்டியும் கொடுத்துட்டு இந்தப் பாவி கிட்ட இருந்து தப்பிச்சிடனும். வட்டியை வாங்கிக் கொடுக்க முடியாதவங்க எல்லாரையும் இவன் அந்த ஆளு சோழ பாண்டியனுக்கு கூட்டி கொடுக்கிறான். தின்னுட்டு போட்டு எச்சில் பொறுக்கி தின்னுட்டு இந்த நாய் சுத்துது. தலையெழுத்து இவன் கிட்ட எல்லாம் வேல பாக்கணும்னு.. " இப்படியாக சிலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.

வெளியே செல்வதற்கு கிளம்பி வந்தான் கதிர். அங்கே அவனுக்காக காத்திருந்த பூங்காவை கண்டதும் "என்னம்மா பூங்காவனம்.. சௌக்கியமா.. ஆளு துரும்பா இளைச்சு போயிட்டியே.. இதெல்லாம் உனக்கு தேவையா? நீ கொஞ்சம் மனசு வச்சா எனக்கே உத்தரவு போடுற இடத்துல இருப்ப.." கதிர் சுற்றி வளைத்து எதை சொல்கிறான் என்பது பூங்காவனத்திற்கு புரிந்தது.

" இந்தாங்கண்ணா இந்த மாசம் உங்களோட வட்டி.. " பணத்தை அவன் கையில் வைத்தாள் பூங்காவனம். பணத்தை எண்ணிக் கொண்டே

"வட்டி மட்டுமே கட்டிகிட்டு இன்னும் எவ்ளோ நாளைக்கு இருக்கலாம்னு இருக்க.. அசலுனு ஒன்னு இருக்கே ஞாபகத்துல இருக்கா?"

"கூடிய சீக்கிரம் வட்டியும் அசலுமா அண்ணே.."என்றவள் திரும்பி பார்க்காமல் நடந்தாள்.

"இந்தாம்மா பூங்கா.. உன் தங்கச்சிங்க ரெண்டயும் கண்ணுலயே காண முடியலையே.."குறிப்புணர்ந்து திரும்பிய பூங்கா

"சீக்கிரம் முழு பணத்தையும் கொடுத்தரேன்".. கனத்த மனதோடு அங்கிருந்து அகன்றாள்.. அவள் சென்றதும் கதிர், சோலை பாண்டியனுக்கு அழைத்தான்.

"ஓம் சக்தி..சொல்லுடா கதிரு"

செய்றது கேப்மாறி தனம் இதுல கடவுள் நம்பிக்கை வேற மனதில் நினைத்தவன்"அண்ணே வணக்கம்ண்ணே"

"என்ன விஷயம்"

"அந்த பொண்ணு பூங்கா இந்த தவணையும் கட்டிருச்சு.. எனக்கு என்னமோ"..

"ம்ம்ம்.. இன்னும் மூணு நாள்ல வட்டியும் அசலையும் எடுத்து வைக்க சொல்லி வீட்டுக்கு ஆள் அனுப்பு"

"அது எப்டிண்ணே அந்த பொண்ணு வட்டிய ஒழுங்கா கொடுத்துட்டு தானே இருக்கு"

"சொன்னத செய்டா பரதேசி பயலே.. என்னையே கேள்வி கேக்குற அளவுக்கு வந்துட்டியா.."

"ஐயோ அப்படி இல்லண்ணே.. நீங்க சொன்ன மாறியே செஞ்சர்றேன்.."அழைப்பு தூண்டிக்கப்பட

"இன்னும் எத்தனை நாளைக்குடி என்கிட்டயிருந்து ஓடுவ".. சோலை பாண்டியன் முகம் இறுகியது..

தொடரும்..

No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...