இத்தனை ஆண்டுகளாக அந்த சொகுசு வாழ்க்கை எங்கே இருக்கிறது என்று தான் பூங்காவனம் தேடிக் கொண்டிருக்கிறாள்.. தேவகி வயிற்றுப் பாட்டுக்காகவோ அல்லது உடல் தேவைக்காகவோ சோலை பாண்டியனை நாடி செல்லவில்லை.. கட்டிய கணவனால் வந்த வினை.. தேவகி தன்னை இழக்கவில்லை என்றால் கொடுத்த பணத்திற்காக அப்பொழுதே பூங்காவனத்தை மொட்டிலேயே கருக வைத்திருப்பார் சோலை பாண்டியன்..
பேசுபவர்கள் அமர்ந்த இடத்திலிருந்து ஆயிரம் பேசலாம். அவர்களிடம் ஆயிரம் அல்ல பத்து ரூபாய் கடன் கேட்டால் தெரித்து ஓடிவிடுவார்கள்.. எப்படியோ தேவகி பிள்ளைகளின் வயிற்றுப் பட்டை கவனித்து விட்டார்.. பூங்காவனத்தின் படிப்பும் பள்ளியோடு நிறுத்தப்பட்டது. நிறுத்தியாக வேண்டிய கட்டாயம்.. அதனால் மட்டுமே செல்வியும் காயத்திரியும் தொடர்ந்து படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
"அக்கா கால நீட்டு தைலம் தேய்ச்சி விடுறேன்.. வீங்கிருக்கு பாரு"பூங்காவின் கால் மாட்டில் அமர்ந்து கொள்வாள் செல்வி.
"அக்கா எனக்கு கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து டைரி மில்க் சாக்லேட் வாங்கி தரியா.. அதுவும் நடுவுல பிங்க் லவ் இருக்கே.. அழகா உடைச்சா லவ் மட்டும் தனியா வருதே அதுக்கா.."ஆசையாக கேட்பாள் காயத்ரி.
"பூங்காம்மா தங்கம் கொஞ்சம் இருடி சாப்டு முடிச்சிராத.. ஒரு முட்டைய பொறிச்சிட்டு வந்துறேன்"தொடுக்கை இல்லாமல் அவள் வெறும் ரசம் ஊற்றி சாப்பிட எழுந்து அவசரமாக ஓடுவாள் அம்மா..
கண்ணீர் வெடித்து கொண்டு கிளம்பியது. அடி வயிற்றிலிருந்து கதறல் ஒப்பாரியாக வெளிப்பட்டது..இரண்டு கைகளாலும் கண்ணாடி துண்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். ரத்தம் சொட்டியது.. கீழிருந்து கமலி ஓடி வந்தார்.
"கண்ணு என்னம்மா என்னாச்சு".. பதறிக் கொண்டே அவர் அறைக்கதவை திறந்து வர உள்ளே பூங்காவின் நிலையைக் கண்டு ஒரு நிமிடம் அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சட்டுன்னு தன்னை சுதாகரித்தவர் வேகமாக பூங்காவின் அருகே சென்று அவள் கையில் இருந்த கண்ணாடியை வலுக்கட்டாயமாக பிடித்து விட்டெறிந்தார்.. தரையில் முட்டி போட்டு அமர்ந்து கதறிக் கொண்டிருந்த பூங்காவை பார்ப்பதற்கு உண்மையாகவே அவருக்கு நெஞ்சமெல்லாம் பதறியது.
ஓரளவு மின்னலின் திருமணத்தைப் பற்றி அறிந்தவருக்கு பூங்காவின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடிந்தது.. அனுபவத்தரான கமலிக்கு ஒரு ஆளை கண்டவுடன் எடை போட இயலும். பூங்காவனத்தை பார்த்ததுமே வாழ்க்கையில் நிறைய அடிபட்டவள் என்பதை புரிந்து கொண்டார்..
"கண்ணு என்னமா எல்லாம் தெரிஞ்ச பொண்ணு நீ.. நீயே இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் பண்ணலாமா.. உயிர் உனக்கு அவ்வளவு விளையாட்டா போயிருச்சா.."..
அவரை ஆத்திரமாக ஏறிட்டாள் பூங்காவனம். உடனே தணிந்தாள்..
" பைத்தியக்காரத்தனமா.. உண்மைதான் அக்கா.. பைத்தியமா இருந்திருந்தா கூட ஒருவேளை நல்லா இருந்திருக்கும் போல. எல்லாம் தெரியறதுனால தான் இங்க பிரச்சனையே.."..
" உன் நிலைமை எனக்கு புரியுதும்மா.. உன்ன மட்டும் இல்லாம உன் குடும்பத்தை ஒரு நிமிஷம் நெனச்சு பாரு இந்த முடிவு எவ்வளவு அபத்தமானதுனு உனக்கே தெரியும்.."
" அத பத்தி யோசிச்சு பார்த்ததால தான் இன்னுமே உங்க முன்னாடி உசுரோட ஒக்காந்து இருக்கேன்.. ஆனா முடியலக்கா.." கமலியும் தரையில் மண்டியிட்டு அமர்ந்து பூங்காவனத்தை தன்னுடைய மடியில் சாய்த்து கொண்டார். நொடியில் தேவகியை நினைவு படுத்தினார் கமலி..
" என்னோட அம்மா ரொம்ப பாவம் க்கா.. பேசாம அந்த சோலை பாண்டியனுக்கு வப்பாட்டியா இருந்து எப்படியாச்சும் ஒரு வேலைய செஞ்சு என் தங்கச்சிங்க ரெண்டு பேத்தையும் நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.." பூங்காவின் கண்ணீரை துடைத்து விட்டார் கமலி.
" இப்ப மட்டும் என்ன மாறி போச்சுன்னு இவ்ளோ விரக்தியா பேசுற"
" அந்த சோலை பாண்டியனாச்சும் சாகப் போற வயசுல இருக்கான். இன்னைக்கும் நாளைக்கும் கண்டிப்பா அவன் செத்துருவான்ற ஒரு நம்பிக்கை.. இவன பாத்தீங்களா? இவன விட்டா இன்னும் நூறு பேர கொல்லுவான்.."கமலிக்கு சிரிப்பு வந்தது.
" மின்னல் சாகணும்னு சொல்றியா.. யாராச்சும் கழுத்துல தாலி ஏறுன கொஞ்ச நேரத்துல புருஷன் சாகணும்னு ஆசைப்படுவாங்களா.. "
" நான் ஆசைப்படறேன் அக்கா..ஆமா சாகனும்னு இல்ல எனக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வேணும்.. அக்கா நீங்க இங்க எத்தனை வருஷமா இருக்கீங்க.. நீங்க அவனுக்கு என்ன வேணும் ரொம்ப உரிமையா பேசுறீங்களே.." திடீரென்று ஏற்பட்ட சந்தேகத்தால் கமலியின் மடியில் இருந்து எழுந்து உட்கார்ந்து கேட்டாள் பூங்கா.
" ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டே..மின்னலு எனக்கு தம்பி தான்.. தூரத்து சொந்தம்".. அவனின் உறவிடம் அவனைப் பற்றியே குறை கூறியது எண்ணி நாக்கை கடித்துக் கொண்டாள் பூங்காவனம். பூங்காவின் முகத் தோற்றத்தை வைத்தே அவள் மனதில் உள்ளதை படித்து விட்டார் கமலி.
" பயப்படாத கண்ணு.. நீ பேசின எதையும் நான் மின்னல் கிட்ட சொல்ல மாட்டேன். என் உன் கூடப் பொறந்தவளா நினைச்சுக்கோ.. நீ இன்னொரு தடவை இந்த மாதிரி முட்டாள்தனம் செய்யக்கூடாதுன்னு நான் சொல்லல..நீ நினைக்கிற அளவுக்கு மின்னல் தப்பானவன் கிடையாது.. " கண்ணில் சற்று ஒளியோடு கமலியை ஏறிட்டாள் பூங்காவனம்.
" நீ நினைக்கறதை விட கேடு கெட்டவன் அவன்.. சொந்தம் பந்தம் பொண்ணுன்னு கூட பாக்க மாட்டான்.. இந்த இடத்துக்கு வர அவன் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கான். அவன் பேருக்கு கலங்கம் வர மாதிரி நீ நடந்துக்கிட்டது தெரிஞ்சா உன்ன கொன்னு புதைக்க கூட அவன் தயங்க மாட்டான்.. எதுவாயிருந்தாலும் சூதானமா நடந்துக்கோ.. அவன் எப்ப வேணும்னாலும் வருவான். அதுக்குள்ள இந்த அறையை சுத்தப்படுத்தணும்.. நீ என்ன பண்ண கொஞ்ச நேரம் படுத்து தூங்கு. அதுக்குள்ள நான் இந்த அறையை சுத்தப்படுதிருறேன்.. கண்ணாடி எப்படி உடைஞ்சதுனு அவன் கேட்டா நடந்தது தாங்க முடியாம நீ தான் ஆத்திரத்துல ஒடச்சிட்டேன்னு சொல்லிடு..
கொஞ்சமாவது நம்பற மாதிரி இருக்கும்" அதன் பின் கமலி வேகமாக அந்த அறையை சுத்தம் செய்ய கட்டிலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம்.. உதவி செய்யப் போனவளை கமலி அகட்டி கட்டிலின் மேல் அமர வைத்திருந்தார்.
உறக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்தது. அவளுக்கு குடிக்க பழசாறு கூட எடுத்து வந்திருந்தார் கமலி. எதுவுமே பூங்காவனத்திற்கு பிடிக்கவில்லை.
ஒவ்வொரு நிமிடமும் மின்னலை நினைத்தால் அவளுக்கு பயத்தில் உயிர் போய் உயிர் வந்தது..அவள் கண் முன்னாடியே அவன் கோரத்தாண்டவம் ஆடியதை கண்டிருந்தவள்.
இனி அவளுடைய வாழ்வு என்ன ஆகும்? அதைவிட அம்மா தங்கைகள் இருவரும் எப்படி பிழைப்பு நடத்துவார்கள்? தன்னுடைய வாழ்வை போலவே செல்வியும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விடுவாளோ? நினைத்தாலே வேப்பங்காயை கடித்தது போல நாவெல்லாம் கசந்து வழிந்தது.
எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் வரப் போறான். எனக்கு ஏதாவது ஒரு வேலை ஏற்பாடு பண்ணி தர சொல்லணும். இல்லனா? இல்லன்னா என்ன பண்றது? கேள்விகள் அவள் முன்பு மலைப்பாக நிற்க, அப்படியே படுத்து உறங்கி விட்டாள் பூங்காவனம். அறையை சுத்தம் செய்த கமலி திரும்பி பார்க்க உறங்கிக் கொண்டிருந்த பூங்காவனம் வளர்ந்த குழந்தையாக தான் அவர் கண்களுக்கு தெரிந்தாள்.
" கடவுளே கிளிய வளர்த்து குரங்கு கையில கொடுக்கிற மாதிரி இந்த அழகான பொண்ண, இப்படி ஒரு முரட்ன் கையில கொடுத்துட்டியே.. பதவிக்காக இவன் என்ன வேணும்னாலும் செய்வானே. அந்த சோல பாண்டியன் ஒரு தடவ என்னையே படுக்க கூப்பிட்டான்..
இந்த பொண்ணோட நிலைமையை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு. எது எப்படியோ நீ தான் இவங்களுக்குள்ள முடிச்சு போட்டு வச்ச. எப்படியாவது இந்த பொண்ண காப்பாத்திரு" பெருமூச்சு மட்டும் தான் விட முடிந்தது கமலியால்.
நேரம் செல்ல செல்ல மதியம் தாண்டி தான் வீடு வந்து சேர்ந்தான் மின்னல்.. அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வீட்டிற்குள் வந்த வேகத்தில் கமலியிடம்
"எங்க அவ" அவனை நான் அந்த தோரணையை கண்டதுமே கமலிக்கு ஏழரை என்று புரிந்து போனது.
"மேல.." விருட்டென்று மாடி பக்கம் திரும்பினான் மின்னல்..
"ஐயா மின்னலு ராசா.."பின்னாலேயே ஓடி வந்தார் கமலி.
" அந்த பொண்ணு பாவம்யா இப்பதான் அசந்து தூங்குது. இன்னும் சாப்பிட கூட இல்லை"
"சாப்பாட போட்டு எடுத்துட்டு வா".. கமலிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை இருந்தாலும் அவன் சொல்லியதைப் போல உணவை எடுக்கச் சென்றார்.
அறைக்கு வந்தவன் அங்கே அசந்து மெத்தையில் உறங்கிக் கொண்டிருக்கும் பூங்காவனத்தை கண்டான். மெல்ல அடிமேல் அடி எடுத்து நகர்ந்தவன்கட்டிலின் அருகே சென்று படுக்கை விரிப்பை நன்றாக கையில் ஏந்தி கொண்டு ஒரே இழு.. அவனின் பலத்திற்கு பாதி அளவு கட்டிலுக்கு வந்திருந்தாள் பூங்காவனம்..
வெள்ளை வேட்டி சட்டையில் பார்ப்பதற்கு கம்பீரமாக தான் தோன்றினான். கட்சியிலும் அவனுக்கு நல்ல பெயர் உண்டு. மக்கள் மத்தியிலும் நல்ல அபிமானம் பெற்றிருந்தவன் அதனை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவனாக இருந்தான்.
" ஒரே நாள்ல உடம்பு சொகுசு வாழ்க்கைக்கு பழகிருச்சு போல.." அரைகுறை தூக்கத்தில் விழித்திருந்ததால் முதலில் அவன் பேசுவது புரியாமல் முழித்தாள் பூங்காவனம்.பார்வையாலே அவளை கொன்று போடும் வெறியோடு அவன் நிற்க வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து விட்டாள்.
அதற்குள் கமலி உணவோடு வந்து விட்டிருக்க, " நல்லா சாப்பிட்டு ரெடியா இருக்க.. இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ஞாபகத்துல இருக்கட்டும்.. அந்த நேரத்துல என்னால நிக்க முடியாது படுக்க முடியாதுன்னு ஏதாச்சும் சொன்ன? "அவனிடம் பேச நினைத்ததெல்லாம் மறந்து போனது அவளுக்கு.
தொடரும்
No comments:
Post a Comment