தாகம் 23


அந்த வீட்டில் இருக்க முடியாமல் மனம் வலிக்க பிறந்து வீட்டிற்கு வந்தாள் பூங்காவனம். அவள் வந்த நேரம் வீட்டில் தேவகி மட்டும் தான் இருந்தார். மகளைக் கண்டதும் ஒரே ஆனந்தம் அவருக்கு.

" என்னடி நீ மட்டும் வந்திருக்க.. மாப்பிள்ளை வரல? நான் ஒரு கேனச்சி அவர் என்னமோ பொட்டி கடை வச்சிருக்கிற மாதிரி பேசிட்டுயிருக்கேன்".. இப்பொழுது அவர் ஒரு வீட்டில் சமையல் வேலை செய்வது கூட தற்காலிகம்தான். சமையல் வேலை என்று சொல்வதை விட அவர்களுக்கு தேவகியின் உதவி பெரிதும் தேவைப்பட்டது. கைக்குழந்தையை வைத்துக்கொண்டு அந்த வீட்டின் பெண் தவியாய் தவித்துக் கொண்டிருக்க தேவகியை உதவிக்கு அனுப்பிருந்தான் மின்னல்.

அவர்கள் உதவிக்கு நன்றியாக தேவகிக்கு கணிசமான தொகையை கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.. இன்னும் ஒரே மாதத்தில் அவர்கள் அமெரிக்கா செல்லவிருப்பதால் தேவகிக்கு அந்த வேலையும் முடிவுக்கு வந்துவிடும். நன்றாக சமையல் செய்யக் கூடிய தேவகிக்கு ஒரு ஹோட்டல் வைத்து தருவதாக கூறியிருந்தான் மின்னல்..

மகளின் வாழ்வை எண்ணி ஆரம்பத்தில் பயந்தவர் இந்த ஒரு மாத காலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் தெளிந்த நீரோடை போல மகள் வாழ்வு இருப்பதைக் கண்டு பெருத்த நிம்மதியோடு இருக்கிறார். அக்கம் பக்கத்தில் அவருக்கு இருந்த இழிவான பெயர் நீக்க பெற்று எம் பி யின் மாமியார் என்கின்ற புதிய பட்டம் வேறு சூட்டப்பட்டிருக்கிறது..

மேலும் சோலை பாண்டியனின் இம்சையிலிருந்து இந்த ஒரு மாத காலமும் விடுதலை. அனைத்திற்கும் காரணம் மின்னல் அல்லவா? அப்படிப்பட்ட மருமகனை தூக்கி உச்சாணிக்கொம்பில் வைப்பதில் என்ன தவறு இருக்கிறது? தான் சந்தோஷமாக மின்னலோடு வாழ்ந்து கொண்டிருப்பதாக அப்பாவியாக என்னும் தாயைக் கண்டு பரிதாபமாக இருந்தது பூங்காவனத்திற்கு. இந்த அல்ப சந்தோஷமாவது தன் தாய்க்கு கிடைக்கட்டும் என்று எண்ணியவள்

" அவருடைய வேலையை பத்தி உனக்கு தெரியாதா.."

" அதான்டி மறந்து போய் சொல்லிட்டேன். போன தடவை வந்திருந்தப்ப  கருவாட்டுக் குழம்பு வேணும்னு சொல்லிட்டு இருந்தாரு. நீ கொஞ்ச நேரம் உட்காரு நான் கருவாட்டு குழம்பு வச்சு கொடுக்கிறேன்.. உனக்கும் ரொம்ப பிடிக்கும்ல.. "

"ம்மா எனக்கு கொஞ்சம் அசதியா இருக்கு.. கொஞ்ச நேரம் இப்படி படுத்துக்கட்டுமா" பூங்காவின் முகமே வேறு கதை கூறியது தேவகிக்கு. தாயாரியாத சூலா? பூங்கா எதையோ தன்னிடம் மறைக்கிறாள் என்பதை புரிந்து கொண்ட தேவகி

" ஏதாவது பிரச்சனையாடி" கவலையாக கேட்டார்.

"ச்சே ச்சே ஏன் நீ அப்படி நினைக்கிற..அங்க இருந்தா தலைவர பாக்கணும் எம்பி ய பார்க்கணும்னு  யாராவது ஒருத்தங்க வந்து  தூங்கவே முடியல.. இந்த கமலி வேற நிமிஷத்துக்கு நிமிஷம் ஜூஸ் வேணுமா காப்பி வேணுமான்னு கேட்டு உசுர எடுக்குது. உங்களை எல்லாம் பார்த்து ஒரு வாரத்துக்கும் மேல ஆகுது. அதான் உங்களையும் பார்த்துட்டு கொஞ்ச நேரம் இங்க ரெஸ்ட் எடுக்கலாம்னு வந்தேன்.."

அவள் கூறுவது பாதிக்கு பாதி பொய் என்பது தேவகிக்கு புரிந்தது. சொல்ல வேண்டும் என்றால் அவளே சொல்லுவாள். அவளை மேலும் தோண்டி துருவமால் அவளுக்கு பிடித்த பதத்தில் காபி கலந்து வந்தவர்,கூடவே தாளித்த தட்டை பயிற்றை ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொடுத்தார்.. அம்மா கொடுத்ததை வாங்கி பேசாமல் சாப்பிட்டவள், அறைக்குள் சென்று படுத்து விட்டாள் பாய் விரித்து.

மனம் பாரமாய் கனத்தது.. தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் ஒரு முறைய ரீவைன்ட் செய்து பார்த்தாள். சின்ன வயதில் தந்தை கடனை வாங்கிவிட்டு ஓடியது, அதன் பிறகு தாய் வேறு வழி இல்லாமல் சோலை பாண்டியன் கையில் சிக்கியது.. தன்னையும் தங்கைகளையும்   பொத்தி பொத்தி பாதுகாத்தது.. ஒரு கட்டத்திற்கு மேல் குடும்ப சுமை தாங்க முடியாமல் பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு போனது..

தேவகிக்கு வயதாக சோலை பாண்டியன் அவரை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. ஆனால் தன் மீது அவர் கரம் வைத்தது. தேவகி செய்யப் போன உதவி அவருக்கே வினையாக அமைய அந்தக் கடன் சுமையும் தன் தலையில் விழுந்தது..

சுமையோடு சுமையாக அதனை எப்படியாவது சரி செய்து விடலாம் என்று மாடாய் உழைக்க, அந்த சுமையை வைத்து அவளையே களவாட சோலை பாண்டியன் திட்டமிட்டது. இறுதியாக எங்கேயும் ஓட முடியாத ஒரு நிலையில் இந்த உலக வாழ்க்கையை வெறுத்து, சோலை பாண்டியனிடம் தன்னை ஒப்படைக்க அவளே முன் வந்தது.

அதிசயத்திலும் அதிசயமாக அவளுக்கு அதிஷ்டம் கை கொடுத்தது. சோலைப் பாண்டியன் கண் முன்னால் அவள் கடத்தப்பட அவளைக் காப்பாற்ற வந்தது மின்னல்.. அதே மின்னலை தன்னுடைய வாரிசாக  அறிவித்து அவனுக்கு பூங்காவனத்தையே கட்டி வைத்தது சோலை பாண்டியன். ஏன் அவர் அவ்வாறு செய்தார் என்று இன்றுவரை முழுதாக காரணம் அவளுக்கு புரியவில்லை.

ஆனால் அதற்கு பின்னால் பெரிதான காரணம் ஒளிந்திருக்கிறது என்பது மட்டும் பூங்காவனத்திற்கு புரிந்தது.என்னென்னமோ எண்ணிக்கொண்டு தான் மின்னலிடம் அன்று தைரியமாக பேசினாள்..

திருமணத்தின் அர்த்தத்தை அவளுக்கு உரைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றவன் அவளை தொட்ட போது அவள் மறுக்கவில்லை. மறுப்பதற்கு அங்கே எதுவும் இல்லை. அவள் நினைத்து பயந்ததைப் போல அவளை கொடுமை படுத்தவில்லை. வார்த்தையால் அவளை வதைக்கவில்லை.. சொல்லப்போனால் அவளுக்கு நகைகளும் புது துணிகளும் அலங்கார பொருட்களும் அவள் கேட்காமலேயே அறை தேடி வந்தது..

அடுத்த வேலை பிழைப்புக்கு என்ன செய்யலாம் என்று தேவைக்கு மூளையை கசக்கி கொண்டு இருந்த சமயம் அவனுக்கு மிகவும் வேண்டுபட்ட வரை வீட்டிற்கு உதவிக்காக தேவைக்கு அனுப்பி வைக்க அவர்கள் உதவிக்கும் சன்மானம் கொடுத்தார்கள்.. இன்னும் ஒரு மாதத்தில் தேவகிக்கு  ஓட்டல் வைத்து தருவதாக கூறியிருக்கிறான்..

  நீங்கள் இருவரிடமும் என்ன படிக்க தோன்றுகிறதோ தாராளமாக படியுங்கள் என்று கூறியிருக்கிறான்.. இந்த சோலை பாண்டியனின் பழக்கத்தை மட்டும் அவன் விட்டு விட்டால்?

விட்டுவிட்டால் நீ உண்மையான மனதோடு அவனை ஏற்றுக் கொள்வாயா? போலியாக அவனிடம் நடித்துக் கொண்டிருக்கிறாயே  உன்னையே பணயம் வைத்து இது உனக்கு வெட்கமாக இல்லையா?மனசாட்சி கேள்வி கேட்டது.

" இல்ல.. நான் நடிக்கல எனக்கு வேற வழி இல்ல.. என்னால வேற என்ன செய்ய முடியும். பணம் பதவி எல்லாமே அவன் கையில இருக்கு. தப்பிச்சு போறதுனா நான் மட்டும் போயிடலாம். என் அம்மா தங்கச்சிங்க? என்னால சுயநலமா இருக்க முடியாது."மனசாட்சிக்கு பதில் கூறினாள் பூங்காவனம்.

" அப்படின்னா? அவன பழி வாங்குவேன் அவன் ஏதாவது ஒரு தப்பு செய்வான் அதை வச்சு அவனை பிளாக்மெயில் பண்ணுவேன்னு நீ நெனச்சதெல்லாம் பொய்யா?"மீண்டும் மனசாட்சி.

" அப்படி ஏதாவது ஒரு நிலைமை வந்தா கண்டிப்பா அத நான் யூஸ் பண்ணிக்குவேன்.. நான் நல்லவ தான் ஆனா இளிச்சவாய் கிடையாது.." இது பூங்காவனம்.

" சரி அவனை பழி வாங்கணும்னு நினைக்கிற நீ எதுக்காக அவன் உன்னை ஏசிட்டானு அழுகுற" இம்முறை மனசாட்சியின் கேள்விக்கு தேங்காயை உடைப்பது போல பதில் கூற முடியாமல் திணறினாள் பூங்காவனம்.

"அது..  அது வந்து" பதில் சொல்ல முடியாமல் தொண்டையை அடைத்துக் கொண்டு அலறல் தான் முட்டி மோதி வெளியே வந்தது.. உடலை பகிர்ந்ததால் அவன் மீது வந்த பாசமா? எதிரிகளிடமிருந்து அவளைக் காப்பாற்றிய நன்றியா? முதன் முதலில் தொட்ட ஆணின் ஸ்பரிசமா? ஏதோ ஒன்று இதயத்தின் ஒரு மூலையில் அவனுக்காக வக்காலத்து வாங்கியது..

" கண்டிப்பா அந்த பொண்ணுக்கு அவன் ஏதாவது உதவி செய்வான்.. அப்படி ஒன்னும் அந்த பொண்ண அவன் விட்ற மாட்டான்.. "தனக்குள் ஆணித்தரமாக நம்பினாள்..

" கடவுளே இந்த ஒரு விஷயத்திலாவது என்னோட வேண்டுதல நிறைவேத்து.. " சற்று நேரத்திற்கெல்லாம் அவளது தங்கைகள் இருவரும் வீட்டிற்கு வந்து விட கலகலப்புக்கு பஞ்சம் ஏது? செல்வியின் காயத்ரியும் மின்னலின் பெருமையை பாடிக்கொண்டிருக்க அவற்றை சகித்துக் கொண்டு கேட்பதே பூங்காவனத்திற்கு பெரிய சோதனையாக இருந்தது.

குடும்பமாக அமர்ந்து சாப்பிட்டு மின்னலுக்கும் அம்மா கொடுத்த குழம்பை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்..

எப்பொழுதும் பத்து மணி தாண்டிய பிறகு தான் வீட்டிற்கு வருவான் மின்னல் வீரபாண்டியன். அன்று சற்று விரைவாகவே வந்து விட்டான். வந்தவன் எப்பொழுதும் போல பூங்காவனத்திடம் பேசாமல் இன்று அவசர அவசரமாக எங்கேயோ கிளம்பிக் கொண்டிருந்தான்.

அவளும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு மெல்ல அவனை நெருங்கி தோளை தொட்டாள்..

" வந்ததும் வராதுமா எங்க கிளம்பிட்டீங்க"

" ஐயா கூட இன்னைக்கு வெளியூருக்கு போறேன்..  ஒரு சின்ன பிரச்சனை"யாருடன் என்று பூங்காவனம் கேட்கவில்லை. சோலை பாண்டியன் எப்படிப்பட்டவன் என்று மின்னலுக்கு தெரியாதா? இன்னும் அவனுக்கு கூஜா தூக்குபவனை என்ன சொல்வது?

" அம்மா உங்களுக்காக கருவாட்டு குழம்பு கொடுத்திருக்காங்க.." இயந்திர கதியில் பதில் சொன்னாள் பூங்காவனம். அதை காதில் அவன் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை.

" உங்கள தான்.. உங்ககிட்ட தான் நான் பேசிகிட்டு இருக்கேன்.. " தன்னுடைய உடைகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்தான். பூங்காவுக்கு எங்கிருந்துதான் அவ்வளவு கோபம் வந்ததோ தெரியவில்லை. அவனது துணிப்பையை பிடுங்கி வீசினாள்.

ரௌத்திரம் பெருக அவளைப் பார்த்தவன் அவளது கழுத்தில் கை வைத்தான். குரல்வலையை அவனது கரங்கள் நெரிக்க கண்கள் பிதுங்கி மூச்சுக்கு சிரமப்படும் போதும் 

" கொன்றுருங்க.. எதுக்கு இன்னும் காத்திருக்கீங்க" வற்றிப்போன கண்களோடு  பூங்காவனத்தை கண்டவன் எதை நினைத்தானோ? அவனது கரம் மெல்ல தளர்ந்தது.

" நானும் உன்னை கவனிச்சிட்டு தான் இருக்கேன்.. உன்னோட லிமிட் எதுவோ அதோட நின்னுக்கோ.. தேவையில்லாம என் விஷயத்துல தலையிட்ட" உடலை முறுக்கிக் கொண்டு அவன் என்ற தோரணையே அவளுக்கு புரிந்து போனது விட்டால் அடித்து விடுவான் என்று..

" உங்க விஷயத்துல தலையிடக்கூடாதுன்னா அப்ப நான் யாரு" ஒட்டு மொத்த தைரியத்தையும் வரவழைத்துக் கொண்டு அவனை எதிர்பார்வை பார்த்து கேட்டாள் பூங்காவனம்.

ஒரு சில நொடிகள் அவள் கண்களை மட்டுமே கண்டவன் மெல்ல தன் கண்களை மூடி ஆள மூச்செடுத்து" பொண்டாட்டி னா  அதுக்கும் ஒரு லிமிட் இருக்கு" அவனின் கண்கள் படுக்கையை அளந்தது. பூங்காவனத்தின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கிப் போனது..அடி வயிற்றிலிருந்து பொங்கி வந்த அழுகையை அவன் முன்பு காண்பிக்கஅவளுக்கு மனம் வரவில்லை. 

உதட்டை கடித்துக் கொண்டு அங்கிருந்த நகர போனவளை தடுத்து நிறுத்தியது மின்னலின் குரல்.. "போய் சாப்பாடு எடுத்துட்டு வா கருவாட்டு குழம்பு ஊத்தி".. அவனை திரும்பிப் பார்த்தவள் எதுவும் சொல்லாமல் வேகமாக கீழே சென்றாள்..

பெரிய தூக்கில் தூக்கி வந்து ஒட்டுமொத்த கருவாட்டு குழம்பையும் குண்டு பானை ஒன்றில் சோற்றை போட்டு அதில் ஊற்றி தூக்கிக் கொண்டு அவன் முன்பு சென்று வைத்தாள். விட்டால் அந்தப் பானையிலேயே அடித்தவன் மண்டையை பிளந்து விடும் அளவிற்கு ஆத்திரம்.

" உருண்டை பிடிச்சு ஊட்டி விடு".. அவளை அவன் வைத்திருக்கும் இடம் தெரிந்து விட்டாலும், உணவு கேட்பவனிடம் மறுத்துப் பேச வாய் வரவில்லை.. நீயே சாப்பிடு என்று விட்டால் எங்கே சாப்பிடாமல் போய்விடுவானோ என்கின்ற பயத்தில் அவன் கேட்டது போல உணவை பிசைந்து ஊட்டி விட ஆரம்பித்தாள்.. பேக்கில் அடுக்கி வைத்தவன் அமர்ந்து கைபேசியை பார்த்துக் கொண்டு அவள் ஊட்டியதை வாங்கி வந்தான்.

எவ்வளவு முயன்றும் முடியாமல் கண்ணீர் சரசரவென்று அவள் கன்னங்களில் இறங்கியது. அவள் அழுவது தெரிந்தாலும் பிடிவாதமாக தன்னுடைய உணவில் கவனமாக இருந்தாள் மின்னல்.. சாப்பிட்டு முடித்ததும் 
" சாப்பாட்டுல உப்பு ஜாஸ்தி.. எனக்கு அது பிடிக்காது" என்றவன்

" நான் வர ரெண்டு நாள் ஆகும் பத்திரமா இரு" என்று விட்டு கிளம்பினான்.. அவன் சென்றதும்  கையை கூட கழுவாமல்  தலையில் அடித்துக் கொண்டு அழுதாள் பூங்காவனம்..

மின்னல் வீரபாண்டியன் மீது அவள் வைத்திருந்த ஒரு சதவீத நம்பிக்கையும் இரண்டு நாட்களில் அவள் காதில் கேட்ட ஒரு செய்தியால் நசிந்து போனது. மாரியப்பனும் அவரது குடும்பத்தினரும்  வாங்கிய கடனை கொடுக்க முடியாமல் கடன் தொல்லையால் விஷம் குடித்து இறந்து போனார்கள். கட்சியின் பெயரை போட்டு மூத்த உறுப்பினர் என்ற விதத்தில் அவருக்கு கட்சி மரியாதை செய்தது.. வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு வெறும் கடன் தொல்லையாக தோன்றியது, உண்மையான பிரச்சினை அறிந்த பூங்காவனத்திற்கு ஆத்திரத்தை கிளப்பியது.

தொடரும்


Comments

Popular posts from this blog

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு