விதியை நொந்துக் கொள்வதா? இல்லை இந்த பிறவியை நொந்துக் கொள்வதா என்றே புரியாமல் மின்னல் வீர பாண்டியனின் அருகே வெட்டப் போகிற ஆடாய் அமர்ந்திருந்தாள் பூங்கா..
தேவகி செல்வி காயத்ரி மூவருக்கும் அதிர்ச்சியை தாங்கிட இயலவில்லை. மூச்சே மறந்து உயிருள்ள சவமாய் நின்றனர்.. முதலில் சுதாகரித்தது காயத்ரி தான்.
"ம்மா.. அக்காம்மா" வேகமாக பூங்காவனத்தின் அருகே ஓட முயன்றவளின் முன் வந்து நின்றார் சோலை பாண்டியன்.
"சின்னக் குட்டி,அக்கா கழுத்துல மாமா தாலி கட்டப் போறான். சிவ பூஜையில கரடி கணக்கா நீ எங்கன ஓடுற.. துரு துருன்னு இருக்க.. அப்டியே மொசக்குட்டி மாறி" காயத்ரியின் கன்னத்தைப் பிடித்து சோலை பாண்டியின் கிள்ள வெடுக்கென்று அவரின் கரத்தை தட்டி விட்டாள் காயத்ரி.
தேவகியும் காயத்ரியை பிடித்து தனக்கு பின்னால் இறுத்தி கொள்ள அலட்சிய புன்னகையை செலுத்திய சோலை பாண்டியன் மின்னலின் அருகே சென்று நின்று கொண்டார்.. மணவரையில் அமர்ந்தபடி தாயையும் தங்கைகளையும் கண்ணில்கண்ணீரோடு நோக்கினாள் பூங்காவனம்.
"அழாதம்மா.."
"நீ அழாதடி" தாயும் மகளும் கண்களாலையே பேசிக் கொண்டார்கள். ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க அதனை வாங்கி சோலை பாண்டியனை ஒரு முறை பார்த்த மின்னல் அவர் தலை அசைத்ததும் பூங்காவனத்தின் கழுத்தில் கட்டினான்.. மனம் நிறைந்த ஆசிர்வாதத்தை கூட கண்முன் காணும் மகளுக்கு வழங்க முடியாத அவல நிலையில் நின்று கொண்டிருந்தார் தேவகி..
திருமணம் முடிந்து அக்னிகுண்டம் சுற்றிய பிறகு சோலை பாண்டியனின் காலில் மின்னல் விழ பூங்காவனம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.
"ப்ச் என்ன அங்க பிராக்கு பாக்குற..விழு" அவளையும் இழுத்துக் கொண்டு சோலை பாண்டியன் காலில் தொட்டான் மின்னல். அவனின் பிடி இரும்பாக இருக்க பூங்காவால் அவனிடமிருந்து விடுபட முடியவில்லை..
"நல்லா இருடா" தன் கழுத்தில் அணிந்திருந்த புலி நகம் பதித்த சங்கிலி ஒன்றை கழற்றி மின்னலின் கழுத்தில் அணிவித்த சோலை பாண்டியன் தன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி பூங்கா எதிர் பார்க்காத நேரம் அவளின் கையை பற்றி அவளின் விரலில் அணிவிக்க முயன்றார். அவள் கையை பின்னால் இழுத்துக் கொள்ள முயற்சித்தும் விடாமல்
" அட இரு கண்ணு.. மாமா முறைக்கு சீர் செய்ய வேணாமா.." நல்ல வேலையாக அந்த மோதிரம் அவளின் எந்த விரலுக்கும் புகவில்லை.. படக்கின்ற தன்னுடைய கரத்தை சோலை பாண்டியின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டாள் பூங்காவனம்.. மின்னல் அருகில் நின்றிருந்த சுரேஷிடம் எதுவோ சொல்லிக் கொண்டிருக்க
" கைய புடிச்சதுக்கே படக்குனு உருவி கிட்டா எப்படி.. இனிமே மாமனார அனுசரிச்சு வாழனும்.. அவரு மனசு அறிஞ்சும் வாழனும். அப்படி இருந்தா தான் வாழவே முடியும்.. புத்திசாலி பொண்ணு புரிஞ்சு நடந்துக்கோ.. " பூங்காவனம் அதிர்ந்து நிற்பதை கூட பொருட்படுத்தாமல் வேகமாக அங்கிருந்து நகர்ந்தவர் தேவகியின் அருகே வந்து என்றார்.
நாகா என்பவன் அவர்கள் மூவரின் அருகில் நின்று கொள்ள, பெண்களால் பூங்காவனத்தை நெருங்கவே முடியவில்லை.. சோலை பாண்டியன் வந்ததும் மரியாதை நிமித்தமாக நாகா அங்கிருந்து சற்று விளக்கி சென்றான்.
" எதுக்கு உன்ன குளிச்சிட்டு வர சொன்னேனு நீ இப்ப புரியுதா.." கலங்கிய கண்களோடு பெற்ற வயிறு பற்றி எரிய அவரை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்த தேவகி
" நான் என் பொண்ண பார்க்கணும்யா.."என்றார்..
நமட்டு சிரிப்பு சிரித்த சோலை பாண்டியன் "ம்ம்ம்"என்றதும் அம்மா மகள்கள் மூவரும் வேகமாக பூங்காவை நோக்கி நகர்ந்தனர்.
மின்னல் சுரேஷிடம் பேசிக் கொண்டிருக்க தன்னை நோக்கி வரும் குடும்பத்தினரை எதிர்நோக்கி ஓடினாள் பூங்காவனம்.
"அம்மா" தாயை இறுக்கமாக அவள் கட்டிக் கொள்ள, தேவகி மகளை இறுக்கமாக கட்டிக்கொண்டார்..
"பூங்கா.. எங்கடி போன.. உனக்கு என்ன ஆச்சு ஏதாச்சுனு நாங்க எல்லாம் எப்படி தவிச்சு போயிட்டோம் தெரியுமா.. நாலு வீட்டுல ராவும் பகலுமா நின்னும்கூட ஒரு வார்த்தை சொல்லல.. உன்ன பாத்தோன தான் எனக்கு உயிரை வருது.. எங்கடி போன.. எப்படி இவனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட" அடுக்கடுக்காக கேள்விகள் பறந்தது தேவகியிடமிருந்து.
நடந்த அனைத்தையும் சுருக்கமாக அம்மாவிடம் தெரிவித்தாள் பூங்காவனம்.
" அம்மா நீ மொத அழறத நிப்பாட்டு. இப்ப நீ அழரதுனால இங்கே எதுவும் மாற போறது கிடையாது..நீ எப்படி இங்க வந்த.. அதும் தங்கச்சிங்கள கூட்டிட்டு".. செல்வியையும் காயத்ரியையும் இழுத்து அணைத்துக் கொண்டாள்.
" அதை ஏன்டி கேக்குற.. உன்ன காணமுன்னு அந்த ஆளு வீட்டுக்கு நடையா நடந்து.. நாய் தண்ணி குடிக்காத கேள்வி எல்லாம் அந்த ஆளு என்ன பாத்து கேட்டு.. நாலஞ்சு நாளா சோறு தண்ணி இறங்கல. உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ ஒன்னு பயந்து உலகத்துல இருக்குற எல்லா சாமியும் கும்பிட்டு, நாய் படாத பாடு போ.. இதுக்கு பேசாம குடும்பத்தோட ஒரு பாட்டில் விஷத்தை குடிச்சிட்டு செத்து தொலைஞ்சிருக்கலாம்.. இன்னும் இந்த உடம்புல உயிரை வச்சுக்கிட்டு என்னென்ன கருமத்தலாம் பார்க்க வேண்டி இருக்கோ தெரியல. யார் யாருக்கோ சாவு வருது எனக்கு ஒன்னு வந்து போய் சேர மாட்றனே.. "..
மீண்டும் கண்ணீர் விட்டார் தேவகி.."அச்சோ.. உனக்கு அலறத தவிர வேற எதுவுமே தெரியாது போம்மா அங்கிட்டு.." செல்வி காலையில் நடந்த அனைத்தையும் பூங்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
" அக்கா அந்த ஆள பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அவனோட கைக்கூலிய நீ கல்யாணம் பண்ணி இருக்க. இவனுங்க யாருமே நல்லவங்க கிடையாது. உன் வாழ்க்கை என்ன ஆகப் போகுதுன்னு என்னால நினைச்சு கூட பாக்க முடியல. தயவு செஞ்சு எங்களை பத்தி நினைக்கிறத விட்று. எப்படியாவது நீ இவன்கிட்ட இருந்து தப்பிச்சிரு."அக்காவுக்கு புத்தி கூறினாள் செல்வி.
" உங்கள பத்தி நினைக்காம.. எனக்கு வேற யாருடி இருக்கா இந்த உலகத்துல.. ராவும் பகலுமா என் நினைப்பு பூரா உங்கள பத்தி தான்."
" உன்ன பத்தி எனக்கு தெரியாதா அக்கா.. இன்னிக்கு நீ இந்த நிலைமையில இருக்குறதுக்கு நாங்க தானே காரணம். எங்களுக்காக தானே நீ இந்த நிலைமையில சிக்கி கிட்ட. அக்கா ஆனது ஆயிடுச்சு. எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ அந்த சோலை பாண்டியன் கிட்ட நீ சிக்கி சீரழியல..பேசாம நீ இந்த மின்னல் கிட்ட பேசி பாரு. தயவு செஞ்சு எங்கள மனசில வச்சு எந்த ஒரு முட்டாள்தனமும் செய்யாத. இனிமையாச்சும் உன் வாழ்க்கையை நீ பாரு.. " பெரிய மனுசியாக அக்காவுக்கு தைரியம் கூறினாள் செல்வி. அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள் பூங்காவனம்.
" அக்கா எனக்கு மாமாவ பாக்கவே ரொம்ப பயமா இருக்கு. ஆளும் தாடியும் காட்டன் மாதிரி இருக்காரு." மின்னலை பார்த்தபடி பயந்து போய் கூறினாள் காயத்ரி..
" மின்னலு நீ உன் வீட்டுக்கு போயிட்டு,எல்லாம் முடிச்சுட்டு அப்புறமா என்ன வந்து ஆபீஸ்ல பாரு.. அப்ப நான் வரட்டுமா" சோலைப் பாண்டியன் கிளம்ப அவரோடு கார் வரை சென்று வழி அனுப்பி வைத்தான் மின்னல்.
நாகா பூங்காவனத்தை நோக்கி வந்தான்."அண்ணி அண்ணன் உங்களை கூட்டிட்டு வர சொன்னாரு..." அண்ணி என்ற அவனது அழைப்பையும் அண்ணன் என்று அவன் குறிப்பிட்ட மின்னலையும் திடுக்கிடலோடு தன்னுள் கிரகித்துக் கொண்டவள் தேவகியின் கையைப் பிடித்து தைரியம் சொல்லிவிட்டு தங்கைகளிடம் பத்திரம் கூறியவள் நாகாவை பின் தொடர்ந்தாள்.
மின்னல் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க அவன் அருகே கதவை நாகா திறந்து விட தாயையும் தங்கைகளையும் பார்த்தபடியே காரில் ஏறிக் கொண்டாள். ஜன்னலை கூட அவளால் இறக்க முடியவில்லை. காரினுள் அமர்ந்திருந்த அவளால் குடும்பத்தினரை பார்க்க முடிந்தது பாவம் அவர்களால் கருப்பு நிற தின்டட் போடப்பட்ட ஜன்னலின் வழியாக உள்ளே அமர்ந்திருந்த பூங்காவனத்தை காண முடியவில்லை..
மின்னலோடு ஒரு புதிய பாதையை தொடங்கினாள் பூங்கா.. பூங்காவனம் மின்னல் வீர பாண்டியனாக.
No comments:
Post a Comment