தாகம் எபிலாக்






எபிளாக்❤️


பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது இரு மகள்களும் அப்பாவுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு  என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தார்கள்..

ஆம் பூங்காவனத்திற்கு பிரசவ வலி கண்டு அவளின் குழந்தை இந்த உலகத்தை பார்க்க தயாராகி விட்டது.. உள்ளே துடித்துக் கொண்டிருக்கும் தன்னுடைய மனைவியை பார்த்து கூட மின்னலுக்கு பயமில்லை.  ஆனால் அங்கே ஒரு நிமிடம் கூட அமராமல் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தன்னுடைய தம்பியை பார்க்கும் போது தான் எரிச்சலாக வந்தது.

"டேய் பைத்தியகாரா! எதுக்குடா இப்படி ஒரு நிமிஷம் கூட உட்காராம உலாத்திட்டு இருக்க.. கொஞ்ச நேரம் அமைதியா உட்காருகிறாயா.. அங்க பாரு அந்த ரெண்டு பிள்ளைங்களுக்கும் ஒன்னோட எத்தனை வயசு குறைவு? அதுங்கல்லாம் அமைதியா உட்காரல.. உன்ன ஒரு ஆளு புடிச்சி நீவிகிட்டே இருக்கணுமா.." செல்வியும் காயத்ரியும்  வாய் பொத்தி சிரித்தார்கள்.

" உள்ள போய் இவ்ளோ நேரம் ஆகுது இன்னுமா பாப்பா பொறக்குது? அவளுக்கு வலிக்கும்.. உன்ன உள்ள போடான்னா போக மாட்ற.. சரி என்னையாவது உள்ள விடுன்னு சொன்னா அதையும் விட மாட்ற.. என்னதான்டா பிரச்சனை உனக்கு? " இப்படி கூறியது சாட்சாத் வர்மா தான்..

சின்ன வயதில் இருந்தே பூஞ்சை மனம் கொண்டவன் என்பதால் தாய் தமக்கைக்கு கண் முன்னே நடந்த அநீதியை கண்டவன் மன உளைச்சலுக்கு ஆளானான்.. என்னதான் தமையனின் அன்பில் அவன் மனதை தேற்றிக்கொண்டாலும் வாழும் ஒவ்வொரு நாளுமே சோலை பாண்டியனை பழிவாங்க வேண்டும் என்கிற எண்ணமே அவனுள் வேரூன்றி இருந்தது..

வெளிநாட்டில் தனியாக இருந்தவனுக்கு ஒவ்வொரு நொடியும் தனக்கென்று குடும்பமாக இருக்கும் அண்ணனோடு வாழ வேண்டும் என்று தான் தோன்றிக் கொண்டே இருக்கும்.." நான் சென்னையில இருந்தே படிக்கிறேன்.. உன் கூடயே இருக்கேன்" பலமுறை மின்னலிடம் கேட்டு விட்டான் வர்மா.

" அதெல்லாம் வேணாம் மூடிகிட்டு நீ அங்கயே படி.. இன்னொரு விஷயம் எனக்கு தெரியாம நீ இந்தியா பக்கட்டு கால கூட எடுத்து வைக்க கூடாது. மூணு மாசத்துக்கு ஒரு தடவை நானே உன்னை வந்து பார்த்துட்டு வருவேன்.. படிக்கிறது மட்டும்தான் உன் மண்டையில இருக்கணும். அந்த சோலை பாண்டியனை எப்படி முடிக்கணும்னு அண்ணனுக்கு தெரியும். எனக்கு தெரியாம ஏதாவது செய்யணும்னு நினைச்ச  அப்புறம் நானும் உனக்கு இல்லாம போயிடுவேன் ஞாபகத்துல வச்சுக்கோ.. " ஒவ்வொரு தடவையும் இப்படி சொல்லி சொல்லி தான் தம்பியை தாய் நாட்டு பக்கமே காலை எடுத்து வைக்க விடாமல் இருந்தான் மின்னல்.

மின்னலைப் பொருத்தவரை சோலை பாண்டியனை பழி வாங்குவது மட்டும் தான் அவனது வாழ்நாள் இலக்கு. இந்த அரசியல் பதவி பணம் புகழ் இது எதிலுமே அவன் மனம் லயிக்கவில்லை. அதனால்தான் எந்த பெண்ணையும் திரும்பி பாராமல், கடிவாளம் போட்ட குதிரை போல தன்னுடைய இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான்..

அவனே எதிர்பாராமல் வாழ்வில் வந்தவள் பூங்காவனம். எந்த அரக்கனை அழிக்க வேண்டும் என்று அவன் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தானோ அந்த அரக்கன் வாயிலாக அவனுக்கு கிடைத்த வரம்.. சோலை பாண்டியனை பழிவாங்கும் படலத்தில் தன்னுடைய திட்டம்  ஒரு துளி தவறானாலும்  தன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்பது மின்னலுக்கு தெரியும். அதனாலதான் தன்னுடைய தம்பியை வெளிநாட்டிற்கு அனுப்பி படிக்க வைத்தான். வர்மாவுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று அனைவரையும் நம்ப வைக்க தான் தம்பியை தாய் நாட்டிற்கு வர கூட அவன் அனுமதிக்கவில்லை. சொல்லப்போனால் சோலை பாண்டியனுக்கும் அவனது பெண்களுக்குமே வர்மா என்ற ஒருவன் இருக்கிறான் என்ற உண்மை தெரியாது.

வர்மாவை பற்றிய உண்மை அறிந்த ஒரே  நபர் நாகா. ஆனால் அவனுக்கும் ஏன் மின்னல் வீரபாண்டியன் வர்மாவை தாய் நாட்டிற்கு காலடி எடுத்து வைக்க விடமாட்டேன் என்கிறான் என்பது புரியவில்லை. தன் தாய் தமக்கைக்கு நடந்த அநீதியை பற்றி யாரிடமும் மின்னல் மூச்சு விடவில்லை.

கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி கவுன்சிலிங் ஒரு பக்கம் வர்மாவை குணமாக்கியது என்றால் இன்னொரு பக்கம் அவனை பூரணமாக குணமாக்கியது பூங்காவனத்தின் அன்பு என்றுதான் சொல்ல வேண்டும்.. முதலில் கணவனிடம் ஏன் அவனுக்கு ஒரு தம்பி இருக்கிறான் என்ற உண்மையை கூறவில்லை என்று சண்டை பிடித்தாள்.

" எப்படி நான் சொல்லுவேன்? வீட்டுக்குள்ளேயே என்னை வேவு பாக்க கமலாவ வைத்திருந்தான் அந்த சோலை பாண்டியன். ஆனா கமலா நம்ம ஆளு. சோலை பாண்டியன் கிட்ட வேலை செய்யற மாதிரி அவனோட திட்டம் எல்லாத்தையும் என்கிட்ட சொல்லிடுவாங்க.. கமலா மட்டும் இல்லாம என்ன சுத்தி அத்தனை பேர வேவு பார்க்க வச்சிருந்தான்.

எனக்கு ஒரு தம்பி இருக்கிற விஷயம் நாகவ தவிர இங்க இருக்கிற யாருக்கும் தெரியாது. உன்கிட்ட சொல்ல போய் நீ உன் அம்மாகிட்ட சொல்ல போய் அப்புறம் எல்லாருக்கும் இந்த உண்மை தெரிய வரும். இத்தனை வருஷமா நான் செதுக்கி போட்ட திட்டம் எல்லாமே என் கண்ணு முன்னுக்கு பாழா போயிடும்."என்றான்.

"ம்க்கும் ஒரு வார்த்தை நீங்க சொல்லியிருந்தீங்கன்னா  இவ்ளோ தூரம் ஆகி இருக்குமா.. ஆமா நீங்க தான் கல்லூலி மங்கனாச்சே. என்ன பார்த்ததும் புடிச்சது ன்னு சொன்னீங்க. ஆனா என்னையே கழுவி ஊத்துனீங்க. என் அம்மாவை வெச்சு என்னோட நடத்திய கீழ்த்தரமா பேசினீங்க.. ஆனா இப்போ என்ன அவ்ளோ நல்லா பாத்துக்கிறீங்க?" மின்னலின் மார்பில் சாய்ந்து கொண்டு உரிமையாக கேட்டாள் பூங்காவனம்.

" பைத்தியக்காரி அது எல்லாமே நான் உன்னை டெஸ்ட் பண்ணேன்.."

"என்ன"

"ஆமா.. உங்க அம்மா ஒன்னும் விருப்பப்பட்டு சோலை பாண்டியன் கூட இல்ல.. ஆனா பிள்ளைகளை பணயம் வச்சு அவன் உங்க அம்மாவை ஆட்டி வச்சான்.. என்ன சுத்தி எத்தனை பேர் இருந்தாலும், நான் யாரையும் நம்ப மாட்டேன். ஒரு நிமிஷம் நான் அசந்தா கூட  இத்தனை வருஷம் நான் போட்ட திட்டம் எல்லாம் வீணா போயிடும். நீ நடிக்கல நீ சோல பாண்டியன் எனக்கு வேலை செய்யலன்னு வந்த கொஞ்ச நாளிலேயே எனக்கு தெரியும்.

உன்கிட்ட நான் உண்மைய சொல்லி இருந்தா உனக்கு அசாதாரணமான ஒரு தைரியம் வந்திருக்கும்.. என்ன பாக்குறப்போ உன் கண்ணுல இருந்து வெறுப்பு நிஜமா இருந்திருக்காது. ஒவ்வொரு தடவையும் நீ தவிச்ச தவிப்பு உண்மையா இருக்காது. எல்லாமே ஒரு நாடகத் தன்மையா இருந்திருக்கும். வெளி உலகத்துக்கு நீ என்ன வெறுக்கணும். அப்பதான் என்னால போடுற வேஷத்தை ஒழுங்கா போட முடியும்.

மகாலட்சுமி கிட்ட மட்டும் உண்மையை சொல்லலாம்னு நான் இருந்தேன். ஆனா நானே எதிர்பாக்காத ஒன்னு செல்வாவும் சந்தனாவும் ஒண்ணா வந்தாங்க. இந்த தருணத்தை நான் மிஸ் பண்ண முடியுமா? உன்னை அப்படி பேசினேன் நீ சொன்னியே ஒவ்வொரு தடவையும் உன்னை அப்படி பேசும் போது எனக்கு எவ்வளவு வலிச்சிருக்கும்..

மொத மொத உன்னோட பேர கேட்கும் போதே எனக்கு உன்ன பிடிச்சு போச்சு. என்னோட அம்மா பேரு டி உனக்கு. சின்ன வயசுல உன்ன விட்டு போன எங்க அம்மாவே திரும்ப வந்த மாதிரி தோணுச்சு. நீ அழும்போது எனக்கும் அழுக வரும். என்ன விட்டு நீ போறேன்னு சொல்லும்போது எனக்கு உயிரே போற மாதிரி இருக்கும். என் கூட இருந்து நீ அழுதாலும் பரவால்ல ஆனா என்ன விட்டு போக கூடாதுன்னு தான் உன்னை என் கூடவே புடிச்சு வச்சிருந்தேன்.

எனக்கு மத்தவங்க மாதிரி இந்த கொஞ்சி லவ் பண்றது, விதவிதமா பரிசு வாங்கி கொடுத்து உன்னை இம்ப்ரஸ் பண்றது  இதெல்லாம் தெரியாது. நான் அப்படி வளரல.. ஆனா என்னோட லவ் நிஜம். நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லனா அது தான் என்னோட லவ்.. இந்தப் பதவி பணம் அதிகாரம்  எல்லாமே உன் முன்னுக்கு ஒரு தூசிக்கு கூட நிக்காது. அதுதான் நான் உன்னை வெச்சிருக்கிற இடம்.. இதுக்கு மேல என்னால எதுவும் சொல்ல முடியாது போடி" இந்த அளவிற்கு மின்னல் வாய் திறந்து சொன்னதே பெரிய விஷயம்.

அவனை பாய்ந்து கட்டிக் கொண்டாள் பூங்காவனம்.. மின்னலே மன்னித்து விட்டவனுக்கு வர்மா மீது எப்படி கோபம் வரும்? அதிலும் அவளை வா போ என்று அவன் உரிமையாக அழைக்கும் போதும் பூவி என்று சிரிக்கும் போதும் மின்னல் சாயலில் ஒரு குழந்தையாகவே தெரிந்தான்.

" அன்னைக்கு நான் அப்படி செஞ்சிருக்க கூடாது.. என் அண்ணன் கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா இருக்கான்னு தப்பா நினைச்சுட்டேன். என் அம்மா அனுபவிச்ச வேதனையா அவன் மறந்துட்டான்னு எனக்கு அவ மேல கோபம். அந்த வேதனையை அவன் திரும்பவும் அனுபவிச்சா தான் அதோட வலி என்னனு அவனுக்கு புரியும்னு ச்சே என்ன அடி பூவி அடிச்சு கொல்லு.. இந்த கையில தானே உன்ன" தன்னுடைய கரத்தை ஓங்கி சுவரில் அடித்தான் வர்மா..

"ஐயோ என்ன பண்ற வர்மா? அதெல்லாம் ஒண்ணுமே இல்ல.. நா மறந்துட்டேன். இனிமே இப்படி நீ செய்யக்கூடாது. நான் சொன்னா கேப்ப தானே" வளர்ந்த குழந்தையாக அவள் முன்பு தலையாட்டினான் வர்மா.

"ம்ம்ம் உனக்கு புடிச்ச தட்டப்பயிறு குழம்பு வெச்சு பீட்ரூட் பொரியல் பண்ணிருக்கேன்.."

"எனக்கு சாப்பாடு வேணா"சோகமாக கூறினான் வர்மா..

"இப்ப" வேகமாக தட்டில் சாப்பாடு போட்டு பிசைந்து அவன் முன்பு நீட்டினாள் பூங்காவனம். கண்ணைக் கரித்துக் கொண்டு வந்தது அவனுக்கு. அவனது அக்காவும் அம்மாவும் இப்படித்தான் அவன் சாப்பாடு வேண்டாம் என்றால் வேகமாக தட்டில் சாப்பாடு போட்டு பிசைந்து முகத்துக்கு நேராக நீட்டுவார்கள்..

மின்னல் சொல்லாமலேயே அதே மாதிரி பூங்காவனம் செய்ய அவளை தன்னுடைய தாயின் மறு உருவமாகவே பார்க்க ஆரம்பித்து விட்டான் வர்மா.. கொஞ்சம் கொஞ்சமாக மன உளைச்சலில் இருந்து வெளிவந்தவன், எந்நேரமும் பூங்காவோடு இருக்க ஆரம்பித்தான்.மின்னலுக்கு அது சில சமயம் ஆறுதலை கொடுத்தாலும் பல சமயம் கடுப்பையும் கொடுத்தது.

ஒரு முத்தம் கூட கொடுக்க முடியாமல் அவன் தவித்த தவிப்பு அவனுக்கு தான் தெரியும்..

"டேய் அவள விட்றா"மிரட்டினாலும் கேட்க மாட்டான் வர்மா.. நெட்டில் பார்த்த அனைத்து வைட்டமின்ஸ் சத்து பொருட்கள் இப்படி வாங்கி வந்து அவளை சாப்பிட வைப்பது, கஷாயம் சூப் நேரத்திற்கு டயட் உணவு என தேவகியை விட ஏன் மின்னலை விட அவளை பார்த்துக் கொண்டவன் அவனே..

இதோ இப்பொழுது தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறான்  குழந்தையை பார்ப்பதற்கு.. மின்னலும் தனக்குள்ளே இருந்த பதற்றத்தை மறைத்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தான். அதிக நேரம் அவர்களை சோதிக்காமல் மின்னலுக்கு குழந்தை பிறந்ததை மருத்துவர் கூற சற்று நேரத்தில் குடும்பமே உள்ளே சென்றது.

இரட்டை பெண் குழந்தைகள் மருத்துவ பரிசோதனை செய்யும்போதே ஆரம்பத்தில் ட்வின்ஸ் என்று பூங்காவிற்கு தெரியும். ஆனால் மருத்துவரிடமோ  தன் கணவன் கேட்டால் சொல்லக் கூடாது என்று  கெஞ்சி கேட்டிருந்தாள். என்னதான் அவளோடு மருத்துவ பரிசோதனைக்கு மின்னல் சொல்லவில்லை என்றாலும், அவளை ஒவ்வொரு கணமும்   பின் தொடர்ந்து கொண்டுதான் இருந்தான். ட்வின்ஸ் என்று அவனுக்கும் தெரியும்.

அவள் வாயாலேயே சொல்ல வேண்டும் என்று காத்திருந்தவனுக்கு சோலைப் பாண்டியனின் கதை முடிந்த பிறகு தான் சொன்னாள் பூங்கா.

" அதான் எனக்கு எப்பவோ தெரியுமே" மீண்டும் தன்னுடைய பாசத்தை நிரூபித்து அவளிடம் அடியும் வாங்கிக் கொண்டான்.

இரண்டு பெண் குழந்தைகள்.. தேவகிக்கு பேர பிள்ளைகளை பார்த்ததும் உச்சி குளிர்ந்து விட்டது. செல்வியும் காயத்ரியும் குழந்தைகளை தொட்டு தொட்டு பார்க்க  மின்னல் நேராகப் பூங்காவிடம் சென்றான்.

"அம்மாடி".. அவனுக்கு பேச வார்த்தைகள் வரவில்லை. குனிந்து அவளது நெற்றியில் முத்தமிட அவனின் இரண்டு சொட்டு கண்ணீர் பூங்காவனத்தின் நெற்றியில் பட்டு தெறித்தது..

கணவனைப் பார்த்து கண்ணீரோடு புன்னகைத்தவள் திரும்பி வர்மாவை பார்த்தாள்.. சற்று தள்ளி குழந்தைகளையே பார்த்திருந்தவன்  மெல்லமாக அருகே வந்தான்..

"டேய் அண்ணா பாத்தியா நம்ம அம்மாவும் அக்காவும்டா" கண்களில் கண்ணீரோடு அவன் கூற மின்னலுக்கும் அதே கண்ணீர் தான்..

"நீயும் காலா காலத்துல கல்யாணம் பன்னிருந்தா"பூங்கா கேட்க

"கல்யாணமா போ பூவி.. ரொம்ப வருஷம் கழிச்சு என் அம்மா அக்கா ரெண்டு பேரும் எவ்ளோ குட்டி பாப்பாவா என்கிட்ட வந்துருக்காங்க.. அவங்க கூட இல்லாம கல்யாணம் ஒன்னு தான் கேடு.. என் அண்ணனுக்கு எப்படி நீ கெடச்சியோ அப்படி ஒருத்தி எனக்கு கெடச்சா கல்யாணம் பண்ணிக்குறேன்"என்றவன் குழந்தைகள் பாதத்தில் இதழ் பதித்தான்..

"நாம் என்ன தவம் செஞ்சேன்னு தெரியலடா வரம் கிடைக்க"கண்களில் டன் கணக்கில் காதல் வழிய பூங்காவனத்தை பார்த்து கூறிய கணவனை மையலாக கண்டு முகம் சிவந்தாள் பெண்ணவள்..

குழந்தைகள் பிறந்த விஷயத்தை மூன்று லட்சுமிகளிடமும் பகிர்ந்து கொண்டான் மின்னல். மூவருமே வாழ்த்துக் கூறி விரைவில் இந்தியா வந்து குழந்தையை பார்ப்பதாக தெரிவித்தார்கள். மறந்தும் கூட யாரும் சோலை பாண்டியனை பற்றி மூச்சு விடவில்லை. அவர்களாக கேட்காத போது மின்னலும் அதனை பற்றி பேச்சை எடுக்கவில்லை.  இரண்டு வாரத்திற்கு முன்பு கூட சின்னதும் பெரியதுமாக வட்ட வட்டமாய் புண்கள் தோன்றியதை துர்கா கூறி இருந்தாள்.. மனநிலை பிறழ்ந்து தனிமையின் பிடியில் பைத்தியமாக சோலை பாண்டியன் அந்த வீட்டில் கத்திக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் சாப்பிடும் கஞ்சியை கூட முழுதாக சாப்பிட முடியாமல் வாந்தியாக எடுத்து விடுவதாகவும்  ஒவ்வொரு நாளும் துர்காவிடம் எதையோ சொல்ல முயன்று முடியாமல் கண்ணீர் விட்டு கதறுவதாகவும் அவள் கூறிருக்க அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்த மின்னல் பாண்டியனுக்கு தோன்றியதெல்லாம் ஒன்றுதான்.

"விதை விதைத்தவன் விதை அறுப்பான்.வினை விதைத்தவன் வினை அறுப்பான்"..

முற்றும்..


Comments

Popular posts from this blog

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு