Saturday, 5 April 2025

தாகம் 18


கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே இரண்டு கொடுமை ஜிங்கு ஜிங்கென்று ஆடியதாம். பூங்காவனத்தின் நிலை அவ்வாறு தான் இருந்தது. இந்த ஒரு வாரத்தில் அவள் வாழ்வில் எத்தனை மாற்றங்கள்? அவள் ஓடியாடி வளர்ந்த வீடு தான்.. கண்ணை கட்டி விட்டால் கூட அந்த வீட்டின் மூலை முடுக்கெல்லாம் அவளுக்கு தெரியும். சுகமோ துக்கமோ அந்த வீட்டின் சுவரில் சாய்ந்து தான் பலமுறை ஆறுதல் தேடி இருக்கிறாள்.. அப்படி இருக்கையில் இப்பொழுது அந்த வீடே அவளுக்கு அன்னியமாய் போனது போன்ற பிரம்மை..

அதற்குக் காரணம் அவள் வீட்டில் சட்டமாக அமர்ந்து கொண்டு நாட்டாமை செய்து கொண்டிருந்த மின்னல் வீரபாண்டியன். பூங்காவனத்தின் சம்மதம் இல்லாமையே அவளை திருமணம் செய்து கொண்ட மாவீரன்.. சோலை பாண்டியன் கூறியதற்காக பூங்காவனத்தின் கழுத்தில் தாலி கட்டியவன், நேற்று அவள் கற்பை விட்டு வைத்ததே பெரிய விஷயம். அவன் நல்லவனா கெட்டவனா, எப்படி இதனை கண்டுபிடிப்பது என மண்டை குழம்பியவள் அமர்ந்திருக்கும் வேளையில் அவளை பிறந்த வீட்டிற்கு அழைத்து வந்து  குழப்பத்திற்கே மேலும் குழப்பம் சேர்கிறான்.

சட்டமாக பாய் விரித்து தரையில் அமர்ந்து கொண்டவன், " என்னத்த அப்படியே பாத்துட்டு நிக்கிறீங்க.. மறு வீட்டுக்கு மருமகன் வந்துருக்கேன். இந்நேரம் ரெண்டு பக்கமும் ரெக்கைய கட்டிக்கிட்டு நீங்க பறந்திருக்க வேணாமா. காணாததை கண்ட மாதிரி வாய பொளந்துகிட்டு நிக்கிறீங்க.." தேவகிக்கு அவன் பேச பேச மயக்கமே வந்துவிடும் போல. அவனின் தகுதியும் தராதரமும் தேவகியை வாயடைக்க செய்திருந்தது.

"அது வந்து.."

" அதான் வந்து உட்கார்ந்தாச்சே.. போங்க போய் சட்டுனு மாப்பிள்ளைக்கு விருந்து ஏற்பாடு பண்ணுங்க. இங்க தான் வந்து சாப்பிடணும்னு உங்க பொண்ணு ஒரு வாய் கூட காலையில இருந்து சாப்பிடல.. எல்லாரும் சொல்றாங்க மறு வீட்டு விருந்து வாழ்க்கையில மறக்க முடியாதுன்னு.. அது உண்மையா பொய்யான்னு இன்னைக்கு தான் தெரிஞ்சுக்கணும்.."

தேவகி கையை பிசைந்து கொண்டு பூங்காவனத்தை பார்த்தார். அவளுக்குமே மின்னல் பேசியது பெருத்த அதிர்ச்சி தான். அவளிடம் இதைப் பற்றி அவன் ஒரு வார்த்தை கூட கூறவில்லையே. மறு வீட்டு விருந்துக்கு மாமியார் வீட்டிலிருந்து வருத்தி அழைப்பார்கள். இங்கு ஆனால் அவனே வம்படியாக மாமியார் வீட்டுக்கு வந்து எனக்கு மறு வீட்டு விருந்தை ஆக்கிப்போடு என சட்டமாக அமர்ந்து விட்டான்.

தேவகி இன்னும் அசையாமல் இருப்பதைக் கண்ட மின்னல் ஒற்றைப் புருவத்தை, அதனை புரிந்து கொண்ட தேவகி உள்ளே சென்று மாப்பிள்ளைக்கு குடிக்க தண்ணீர் எடுத்து வந்து கொடுத்தார்..

" என்னத்த தண்ணிய மட்டும் கொடுத்து அனுப்பி விடலாம்னு பாக்குறீங்களா"..

"ஐயோ அப்படி இல்ல.. இதோ கொஞ்ச நேரத்துல சாப்பாடு ரெடி பண்ணிருறேன்".. நமட்டு சிரிப்பு சிரித்தான் மின்னல்.

கையை பிசைந்த தேவகி அடுக்கலைக்குள் புகுந்து கொண்டார். அவரைத் தொடர்ந்து அவரின் மூன்று பெண்களும் உள்ளே வர

"ம்மா.. சத்தியமா அவன் இப்படி பண்ணுவானு எனக்கு தெரியாதும்மா.. இதுக்கும் மேல என்னால பொறுமையா இருக்க முடியாது. இனிமே இவனுக்கோ இல்ல அந்த சோலை பாண்டியனுக்கோ நாம பயப்பட வேண்டிய அவசியம் கிடையாது..

இன்னியோட இதுக்கு ஒரு முடிவு கட்டறேன்.."

"ஹேய் என்னடி செய்ய போற"பதறினார் தேவகி.

" நீ கம்முனு இரு" வேகமாக முன்னறைக்கு வந்தாள் பூங்காவனம்.

" இங்க பாருங்க" கைபேசியை பார்த்துக் கொண்டிருந்தவன் முன்னே போய் நிற்க மின்னல் அவளை நிமிர்ந்து பார்த்த வேளை அந்த வீட்டிற்கு அலையா விருந்தாளியாக வந்தேன் என்றார் சோலை பாண்டியன்.

"எப்பா மின்னலு.." அவரின் குரல் கேட்டு மரியாதை நிமித்தமாக பவ்யமாக எழுந்து நின்றான் மின்னல். அவனின் கண்கள் இடுங்கியது. சோலை பாண்டியனின் குரலை கேட்டதும் தேவகி மற்ற இரு பெண்களையும் அடுக்கலையில் இருக்க கூறிவிட்டு வேகமாக வெளியே வந்தார்.

" என்னப்பா அப்படி பாக்குற.. நீ இந்த பக்கம் வந்திருக்கிறதா தகவல் வந்துச்சு.. மறு வீட்டுக்கு வந்திருக்க.. தேவகி கைப்பக்கத்தை  நீ சாப்பிட்டதில்லையே.. சாப்பிட்டு பாரு தேவாமிர்தம் மாதிரி இருக்கும்.. நானுமே சாப்பிட்டு ரொம்ப நாள் ஆகுது.. இல்ல தேவகி" அவர் எதைப் பற்றி கூறுகிறார் என்று புரிந்து கொள்ள முடியாமல் தேவகிக்கு மருமகன் முன்னிலையில் கதி கலங்கி போனது.

அவமானம் பிடுங்கி தின்ன தலை குனிந்த படி நின்று கொண்டிருந்தார் தேவகி.

" எங்க மத்த ரெண்டு பொண்ணயும் காணோம்..வழக்கம் போல மறச்சு வச்சுட்டியா.." மின்னலின் பக்கத்தில் அமர்ந்து விட்டார் சோலை பாண்டியன்.. அவரைப் பார்த்ததும் பூங்காவுக்கு தலை முதல் கால் வரை பற்றி கொண்டு எறிந்தது. அவள் மின்னலிடம் பேச வந்ததை பேச முடியாமல் இப்பவும் விதி சதி செய்தது.

"எப்பா மின்னலு.. என்ன மறு வீட்டுக்கு வந்திருக்கியா.. சும்மா சொல்லக்கூடாது உன் மாமியா  அதான் தேவகி சமையல்ல பின்னி எடுத்துடுவா. அதுலயும் ஈரல் கறி வைப்பா பாரு அடடடா ஒரு மடக்கு சரக்கு ஒரு வாய் ஈரலு சொர்க்கம் போ.. என்ன தேவகி?" அப்பொழுதே மரணம் அழைந்திருந்தால் கூட தேவகி சந்தோஷமாக சென்றிருப்பார்.

" நீங்க இங்க என்ன பண்றீங்க.. நான் இங்க வந்தது உங்களுக்கு எப்படி தெரியும்.. என்னய்யா என்ன வேவு பாக்குறீங்களா" மின்னலின் பார்வை கூர்மை பெற்றது.

"மகனு ஆயிட்ட.. என்னோட வாரிசு நீ.. சட்டப்படி என்னோட வாரிசா ஆக்கறதுக்கு  எல்லா டாக்குமெண்ட்டும் ரெடி பண்ணியாச்சு.. ஒரு சைன் போட்டா போதும்.. என் மகனை பாதுகாக்கிறது ஒரு அப்பனோட வேலை தானே.. தேவகி நல்லவ தான்.. அவளோட பொண்ணுங்களும் அப்படிதான். ஆனா என்னைக்குமே பொம்பளைங்கள ரொம்ப தூக்கி வெச்சு ஆடக்கூடாது. காசுக்காக என்ன வேணாலும் செய்யுற காலம் இது..  என்ன தேவகி" ஒவ்வொரு முறையும் அவர் தேவகியை பேச்சில் இருக்க அம்மாவுக்கும் மகளுக்கும் அவமானத்தால் மூச்சே நின்று விடும் போல இருந்தது..

" சரி வந்தது வந்துட்டேன் தேவகி மருமகனுக்கு மட்டும் இல்ல எனக்கும் சேர்த்தே ஆக்கு.. முன்னாடி எல்லாம் இங்க வரப்போ எத்தனை மணியா இருந்தாலும் எனக்காக சாப்பாடு ரெடியா இருக்கும். கொடுக்கல் வாங்கல் இருக்க போக தான் அப்ப எல்லாம் அந்த கவனிப்பு. இப்ப பாரு நான் வந்து இவ்ளோ நேரம் ஆச்சு ஒரு வாய் தண்ணி கொடுக்க நாதியில்ல.. ".. மின்னல் தன் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த சொம்பை எடுத்து அவரிடம் கொடுத்தார்.

" அடுத்தவங்களுக்கு தண்ணி காட்டுற மாதிரி எனக்கும் காட்டி அனுப்பிடலாம்னு பார்க்காத. நான் இன்னைக்கு இங்க சாப்பிடலாம்னு முடிவோட வந்து இருக்கேன். என்ன தேவகி" மின்னலை ஏறிட்டு பார்க்க கூட தேவகியின் உடம்பில் பலம் இல்லை.

" பூங்கா நீ இங்க பாரு நான் இப்ப வந்துடறேன்.."

"ம்மா நீ எங்கம்மா போற கைல காசு இல்லாம.."

" அன்னைக்கு நீ கொடுத்தது இருக்கு.."

" அத தான் மத்த கடனை அடைக்க குடுத்துட்டேனு சொன்ன.."

" இருடி நான் வரேன்.. அதுவரைக்கும் உன் தங்கச்சிங்க ரெண்டு பேத்தையும் வெளிய விடாத.. முடிஞ்சா சரோஜா வீட்டுக்கு அனுப்பி விட்ரு" பூங்கா தடுக்க தடுக்க வேகமாக வீட்டை விட்டு வெளியேறினார் தேவகி.

அங்கே சோலை பாண்டியன் நேராக அடுக்களைக்கு சென்று விட்டார்.. செல்வியும் காயத்ரியும் அவரைக் கண்டதும் என்ன பேசுவது என்று விழித்தனர்.

" என்னம்மா ரெண்டு பேரும் இங்க நிக்கிறீங்க.. வீட்டுக்கு விருந்தாடிங்க வந்தா இப்படித்தான் மச மசனு நிப்பீங்களா.. என்ன வேணும் மாமா? ஏது வேணும் மாமானு கேட்டு கேட்டு செய்ய வேணாம்..ஹேய் சின்ன குட்டி இது என்னடி உன் கன்னத்துல" யாரும் எதிர்பாக்காத நேரம் காயத்ரியின் கையைப் பிடித்து இழுத்து அவள் கன்னத்தில் வந்திருந்த முகப்பருவை ஒற்றை விரல் கொண்டு தொட்டு கேட்டார்.

காயத்ரி பயந்து அவர் கையை தட்டி விட முயல, அதற்குள் வேகமாக அங்கே வந்து விட்டாள் பூங்காவனம்..

"ஹேய் சனியனே எத்தனை தடவை சொன்னாலும் உனக்கு அறிவே இருக்காதா.. ஃப்ரெண்ட் வீட்டுக்கு போனும் தானே சொன்ன.. என்ன மயிருக்கு இங்க நீ இருக்க.. உன் வேலை எதுவோ அதை மட்டும் பாரு.. தேவையில்லாத பாக்காத. சொன்ன பேச்சை கேக்கல இன்னொரு தடவை செருப்பால அடிப்பேன்.." காயத்ரிக்கு அக்கா தன்னையே ஏசியதும் கண்கள் கலங்கிவிட்டது. ஆனால் புத்திசாலியான செல்விக்கு பூங்கா காயத்ரியை பேசவில்லை என்பது நன்றாக புரிந்தது.

அவளுக்கு மட்டுமல்ல சோலை பாண்டியனுக்கும் பூங்கா காயத்ரியை சொல்வது போல தன்னை சாடுகிறாள் என்பது நன்றாக புரிந்தது.. காயத்ரியை பிடித்திருந்த தனது பிடியை மெல்ல தளர்த்தினார்.

அதற்குள் மின்னலும் எழுந்து வந்து விட்டான். "ஐயா அந்தத் டெண்டர் விஷயமா உங்கள குடச்சல் கொடுத்துட்டு இருந்தானே பாபு அவன் எங்க இருக்கான்னு தெரிஞ்சுருச்சு"..

" அந்த நாய் எங்க பதுங்கி இருந்தாலும் அவனை இழுத்துட்டு வந்து குரவலிய புடுங்கி எறிஞ்சா தான்டா என் மனசு ஆறும்.. எத்தனை கோடி லாஸ் ஆச்சு அந்த நாயால.. கண்ட கண்ட நாயெல்லாம் நான் யாருன்னு தெரியாம குரல் ஒசத்தி பேசுது.. காட்டுறேன் நான் யாருன்னு"

சோலைப் பாண்டியன் வேகமாக கூடத்திற்கு வர பூங்காவனத்தை ஒரு பார்வை பார்த்தவன் இங்கே கண் கலங்க நின்று கொண்டிருந்த காயத்ரியை நோக்கினான்..

பர்ஸை திறந்து அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்தவன் ஐநூரை காயத்ரி கையில் கொடுத்தான்..

அவள் வாங்க பயந்து பூங்காவனத்தை பார்க்க" அங்க என்ன பார்வை.. இந்தா புடி.. இந்தாம்மா" செல்வி கையிலும் ஐனூறை கொடுத்தான்..

"ரெண்டு பேரும் உங்க ஃப்ரெண்ட்டு வீட்டுக்கு போயிட்டு பிடிச்சது ஏதாவது வாங்கி சாப்பிட்டுட்டு வாங்க.."

"அக்கா" செல்வி மின்னல் கொடுத்த பணத்தை கையில் வைத்துக் கொண்டு விழித்தாள்.

"ஹேய்.. உன் தங்கச்சிங்க ரெண்டு பேத்தையும் இங்க இருந்து போக சொல்லு.." முடியாது பிடிக்காவிட்டாலும் வேறு வழி இல்லாமல் தங்கைகள் இருவரையும் அங்கிருந்து கிளப்பி விட்டாள் பூங்கா..

"நீயும் வெளிய வராத".. எச்சரித்துவிட்டு கூடத்திற்கு சென்றான் மின்னல் வீரபாண்டியன். அவனது நோக்கத்தை புரிந்து கொள்ள முடியாமல்  மூன்றாம் முறையாக தலைசுற்றி நின்றாள் பூங்காவனம்.


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...