Saturday, 5 April 2025

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 3


பணத்திற்காக செய்த முயற்சிகள் யாவும் பலனிழந்து போக  அலைச்சலும் அலர்ச்சியும் சேர்ந்து காய்ச்சலில் தள்ளியது பூங்காவனத்தை.

இரண்டு நாட்களாக கண்களைக் கூட திறக்க முடியாத அளவிற்கு குளிர் காய்ச்சல் அவளைப் பாடாய்படுத்தியது.. மருத்துவமனைக்கு செல்ல ஒரு பக்கம் பணம் இல்லை; இன்னொரு பக்கம் வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கவே யாரையும் அனுமதிக்கவில்லை தேவகி. தங்கைகள் இருவரும் கூட  பள்ளிக்கு சொல்லவில்லை.

"ம்மா, நாளைக்காவது ஸ்கூல் போலாம் இல்ல. இன்னும் எத்தனை நாளைக்கும்மா இப்படி வீட்ல இருக்கிறது.." எட்டாவது படிக்கும் காயத்ரி கேட்டாள்.. மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்  அமைதி காத்தார் தேவகி.

"காயு.. சும்மா கேள்வியா கேட்டு டார்ச்சர் பண்ணாத. அம்மாவுக்கு தெரியும் எப்ப ஸ்கூல் அனுப்பனும்னு. உன் பிரண்ட்ஸ பாக்காம போர் அடிக்குதா.." விவரம் அறிந்த  பதினொன்றாவது படிக்கும் செல்வி  தங்கையின் கவனத்தை திசை மாற்ற கேட்டாள்.

படுத்த படுக்கையாக இருக்கும் பெரிய மகளுக்கு பழைய சாதத்தை கொடுக்க மனமில்லாமல் கொஞ்சமாக ரசம் மட்டும் வைத்திருந்தார் தேவகி..  ஒரு கிண்ணத்தில் ரசத்தையும் சோறையும் போட்டு கரைத்து  மகளிடம் கொண்டு வந்து பூங்காவனத்தை எழுப்பினர்.

"அடியே பூங்கா, எந்திரிடி.. ஒரு வாய் கஞ்ச குடிச்சிட்டு படு.. இப்படியே சோறு தண்ணி இல்லாம படுத்து கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்.."..

"ம்மா.. நீ பழைய சோறு ரசமும் எப்ப பார்த்தாலும் கொடுக்கிறதுனால தான் வாரத்துக்கு ஒரு வாட்டி எங்க எல்லாருக்கும் சீக்கு வந்துடுது.. லாஸ்டா நம்ம வீட்ல போன மாசம் கறி எடுத்தது. இப்படி ஆடிக்கு ஒரு வாட்டி அம்மாவாசைக்கு ஒரு வாட்டி கறி சாப்பிட்டா எங்க போய் முட்டிகிறது.. அட்லீஸ்ட் முட்டையாவது தினம் கொடுக்குறியா.. என் பிரண்ட் மனோ வீட்ல எல்லாம் டெய்லி சிக்கன் மட்டனு வெரைட்டியா சாப்பிடுறாங்க.

நம்ம வீட்ல பத்து ரூபாய்க்கு குட் டே பிஸ்கட் வாங்க துப்பு இல்லை.. நல்லவேளை அக்கா நைட்டுல  பீச்ல கடை போடுறதால, மிஞ்சிப்போன மீனாவது கொண்டு வரா.. இல்லனா இந்த பழைய சோத்தை தின்னுட்டு சாக வேண்டியது தான்.." காயத்ரிக்கு  நிலைமையை புரிந்து கொள்ள முடியாத இரண்டுங்கட்டான் வயது.

சோலை பாண்டியன் என்று வருவதை நிறுத்தினாரோ அன்றிலிருந்து தங்கள் வீட்டில் பீடை பிடித்து விட்டது என்பது அவளது கணிப்பு. எப்பொழுது சோலை பாண்டியன் வீட்டிற்கு வந்தாலும் சிறுமியான காயத்திரிக்கு ஏதாவது தின்பண்டம் வாங்கி வருவார்.. சற்று விவரம் புரிய ஆரம்பித்ததும்  செல்வி சோலை பாண்டியனை கண்டாலே ஒரே ஓட்டமாய் ஓடி விடுவாள்.

அதிலும் அவள் வயதிற்கு வந்த பிறகு சோலைப் பாண்டியன் கண்களில் கூட படுவது கிடையாது. காயத்ரி அப்படியே அவளுக்கு நேர் எதிரானவள்.. விவரம் புரிந்து அவள் கண்டது அனைத்துமே பஞ்சம் மட்டுமே. சோலை பாண்டியன் இவர்கள் வீட்டிற்கு வந்து போக இருக்கவும் தான் வாய்க்கு ருசியாக உணவுகளை பார்க்க முடிந்தது.

இப்பொழுது கூட சில சமயம் தேவகியிடம்" ஏம்மா சோழ பாண்டியன் அங்கிள் இப்ப நம்ம வீட்டுக்கு வர்றதில்ல.. போன் போட்டு அங்கில வர சொல்லுமா.." இப்படி பேசும் மகளிடம் என்னவென்று விவரிப்பார் தேவகி.

தனக்கும் சோலை பாண்டியனுக்கும் இருக்கும் சம்பந்தம் என்ன என்பதை மற்ற இரு மகள்களும் தான் சொல்லாமல் புரிந்து கொண்டிருக்க, இந்த இரண்டுங்கெட்டான் வயதில் காயத்ரியிடம் எப்படி சொல்லி புரிய வைப்பார்?

அம்மாவின் முகம் மாறியதை கண்டதும் " காயு நீ ரொம்ப ஓவரா பேசுற. வயசுக்கு தகுந்த பேச்ச பேச பழகு. உன் ஃப்ரெண்ட் மனோ பணக்காரி. நேரத்துக்கு அவ என்ன நினைச்சாலும் சாப்பிடலாம். நம்ம வீடு அப்படியா? அக்கா நமக்காக எவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செய்றா தெரியும் தானே.. எல்லாம் தெரிஞ்சும் இந்த மாதிரி நீ பேசறது ரொம்ப தப்பு. அம்மா கிட்ட சாரி கேளு"மூத்தவளாக இருந்து மிரட்டினாள் செல்வி.

"ம்ஹும்.. நான் இப்ப என்ன தப்பா சொல்லிட்டேன்னு நீ என்னை ஏசுற? உண்மையதான சொன்னேன்.. எத்தனை நாளா கேக்குறேன் கேக் வாங்கி கொடும்மான்னு. தோ வாங்கி தரேன் இந்தா வாங்கி தரேன்னு  ரெண்டு மாசம் ஆச்சு. ஏன் தான் இந்த பிச்சைக்கார குடும்பத்துல வந்து பொறந்தேனோ" காயத்ரி தலையில் அடித்துக் கொண்டே வீட்டு கதவை திறந்து கொண்டு வெளியே போக முயல,  அங்கே கதவைத் தட்ட ஏதுவாக எட்டு பேர் நின்று கொண்டிருந்தார்கள்.

புதிய ஆண்களை கண்டதும் காயத்ரி மிரண்டு விழித்தாள். ஏற்கனவே மகளின் வார்த்தையால் புண்பட்டிருந்த தேவகியின் உள்ளம்  வந்திருந்தவர்களை கண்டதும் மேலும் கதிகலங்கி போனது.

"யாரு டி" வேகமாக எழுந்து வந்து பார்த்தவர் வந்திருந்த முகங்களை கண்டதும் காயத்ரியை இழுத்து தன் பின்னால் பதுக்கி கொண்டார்.

"தம்பி நீங்களாம் யாருப்பா"

"ம்ம்ம்.. கதிரு அண்ணே அனுப்பினாரு.. வட்டியும் முதலமா நீ வாங்குன பணத்தை எடுத்து வைக்க சொல்லி ரெண்டு நாள் முன்னாடியே உன்கிட்ட வந்து சொல்லிட்டு போனோம் தானே.. ராத்திரி வந்ததுனால அடையாளம் தெரியலையா.. இல்ல அடையாளம் தெரியாத மாதிரி நடிக்கிறியா.."

"ஐயோ தம்பி அன்னைக்கு நீங்க ராத்திரி வந்ததால எனக்கு அடையாளம் சரியா தெரியல.தப்பா எடுத்துக்காதீங்க தம்பி.."

" சரி அதெல்லாம் கிடக்கட்டும். பணம் எங்க" தேவகி விழித்தார்.. சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு வேலை முடிந்து திரும்பிய பூங்காவிடம் இதைத்தான் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தார் தேவகி.

இந்த மாதம் தவணை படத்தை கட்டி விட்டு திருப்தியில் அந்த சிறு குடும்பம் சற்று நிம்மதியாக இருக்க, அதனை குறைக்கும் விதமாக  இரவு எட்டு மணிக்கு மேல்  தேவகியின் வீட்டு கதவு பலமாக தட்டப்பட்டது.. இதே போல் ஏழு எட்டு பேர் வந்திருந்தார்கள். கூடவே கதிரும்..

கதிரை கண்டதும் கதி கலங்கி போனது தேவகிக்கு. இரு மகள்களையும் அறைக்குள் தள்ளி கதவை சாற்றியவர் கதிரை வேறு வழியின்றி வீட்டிற்குள் அழைத்தார்.

" தம்பி இந்த மாசம் தவண பணத்தை தான் கட்டியாச்சே" ஒருவேளை மறந்து விட்டானோ என்கிற ரீதியில் அவனுக்கு ஒரு முறை ஞாபகப்படுத்தினார் தேவகி.

" அக்கா, அதெல்லாம் பாப்பா வந்து நம்ம கைல கொடுத்துட்டு தான் போச்சு. நான் வந்த விஷயமே வேற. நீங்களும் இன்னும் எத்தனை காலத்துக்கு தான் வட்டி கட்டிட்டு இருப்பீங்க. அதனால என்ன பண்றீங்க இன்னும் ரெண்டு நாள்ல அசலும் வட்டியுமா என்னோட பணத்தை எடுத்து வச்சிருங்க." ஆளுக்கு கீழே பூமி நழுவுவதைப் போல உணர்ந்தார் தேவகி.. சரியாக தான் கேட்டோமா தன்னுடைய செவிப்புலன் மேலேயே சந்தேகம் வந்தது.

கதிரின் முகத்தை பார்த்துக்கொண்டு பேசாமல் நின்ற தேவகியை பார்த்து உள்ள ஒரு அவனுக்குமே சற்று பரிதாபம் எழுந்தது என்னவோ உண்மைதான். ஆனால் சோலை பாண்டியனை எதிர்த்துக்கொண்டு அவனால் உயிர் வாழ முடியுமா?

" எனக்கு புரியுது அக்கா இது உங்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருக்கும்னு.. புத்திசாலித்தனமா புரிஞ்சுக்கோங்க. இன்னும் என் ரெண்டு நாள்ல பணம் என் கைக்கு வந்தாகணும்." அவன் சொல்லிக் கொண்டிருப்பது புத்திக்கு புரிந்ததும் தான் தேவகி என்கிற சிலைக்கு உயிர் வந்தது.

" தம்பி ராசா என்னய்யா திடு திப்புனு வந்து இப்படி ஒரு குண்டை தூக்கி என் தலையில போடுறீங்க. மூணு பொட்ட பிள்ளைங்களை வச்சிருக்கேன் சாமி. திடீர்னு வந்து ரெண்டு லட்சம் கேட்டா வட்டியோட நான் எங்க போவேன்? யாருகிட்ட போய் நிப்பேன்? நாங்க தான் மாசம் மாசம் ஒழுங்கா தவணை கட்டிக்கிட்டு இருக்கமே? "பரிதவிப்போடு கேட்டார் தேவகி.

"அதெல்லாம் நீங்க பேசாதீங்க. என் பணம் எனக்கு இப்ப தேவைப்படுது. ஏதோ தெரிஞ்ச ஆளுனால ரெண்டு நாள் டைம் தரேன். அதுக்குள்ள தலைய அடமானம் வெச்சாவது பணத்தை கொடுத்துடுங்க. இல்லனா தெரியும்ல இந்த கதிர பத்தி" அதற்கு மேல் தேவகி எதுவும் பேசவில்லை. உயிரற்ற சவம் போலயே நின்று கொண்டிருந்தார்.

கதிர் கிளம்பி சென்ற பிறக்கும் அவரது நிலையில் மாற்றம் இல்லை. செல்வியும் காயத்ரியும் வந்து அவரை உலுக்கிய பின்பே தன்னிலை உணர்ந்தார் தேவகி. கதிரின் பேச்சை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த செல்விக்கு முழுதாகவும், ஏதோ பிரச்சனை என்கிற ரீதியில் காயத்திரிக்கும் புரிந்தது. அம்மாவே இப்படி இடிந்து போய் இருப்பதை கண்டதும் அவர்களின் பயம் இன்னும் அதிகரித்தது.

அந்த குடும்பமே இரவு சாப்பாட்டை துறந்து, பூங்காவனத்தின் வரவுக்காக காத்திருக்க  வேலை முடிந்து வீட்டிற்கு வந்தவள் தாய் தங்கைகளின் முகத்தை கண்டதும் பதறி விட்டாள்.. காயத்ரி தான் முதல் ஆளாக விஷயத்தை அவளிடம் உடைத்தது..

ஆத்திரத்திற்கு பதில் ஆயாசமாக அம்மாவை பார்த்தாள் பூங்காவனம்." இதெல்லாம் தேவையா என்பது அந்த பார்வையில் கொக்கிட்டு நின்றது.. மகளின் பார்வையை சந்திக்க முடியாமல் நிலத்தை நோக்கினார் தேவகி. செத்த பாம்பை அடிப்பது போல  எத்தனை தடவை தான் ஒரே கேள்வியை அம்மாவிடம் கேட்பது.

அன்று இரவு யாருக்கும் உணவு இறங்கவில்லை. மறுநாளில் இருந்து பணத்திற்கு நாயாய் பூங்காவனம். அவளது தோழியிடம் கேட்டுப் பார்த்தாள். சேர்த்து வைத்திருந்த பணத்தை இருபதாயிரம் கொடுத்தாள். அவளிடம் அதற்கு மேல் பணமில்லை..

எந்த வித பின்புலமும் இல்லாத பூங்காவனத்திற்கு  இந்த உலகத்தில் உதவி செய்ய யாரும் முன் வரவில்லை.. பணத்திற்காக அலைந்த அலைச்சலில் குளிர் காய்ச்சல் வந்தது மட்டும்தான் மிச்சம்.

"ஐயா சாமிங்களா, பணத்தைப் புரட்ட முடியல தம்பி. என் பெரிய பொண்ணுக்கு வேற உடம்பு முடியாம போச்சு. இன்னும் ஒரு மாசம் டைம் கொடுத்தீங்கன்னா".. தேவகி திக்கி திணறி தன்னுடைய நிலையை எடுத்துக் கூற முயன்றார்..

"என்னது ஒரு மாசமா.. அதெல்லாம் முடியாது எதுவா இருந்தாலும் நீ அண்ணன் கிட்ட வந்து பேசு.."

" சரிங்க தம்பி நான் நாளைக்கே வந்து நேர்ல பேசுறேன்.. "

" அதெல்லாம் முடியாது இப்ப வா.. உன் பொண்ணுங்களே கூட்டிட்டு வா.. " அவர்கள் ஏதோ முடிவோடு வந்திருப்பதாக தேவகிக்கு புரிந்தது. பக்கத்தில் உள்ளவர்கள் எட்டிப் பார்த்தார்களே தவிர யாரும் உதவிக்கு வரவில்லை.நிலைமை கை மீறி கொண்டிருப்பது புரிந்த தேவகி

"தோ வரேன் தம்பி" என்றவர் ஓரடி பின்னால் எடுத்து வைத்து படக்கென்று கதவை சாத்தி விட்டார்.

"ஹேய் கதவ தொறடி!கெழட்டுச் ***"காதில் கேட்க இயலா வார்த்தைகளால் கதவின் உள் பக்கத் தாப்பாவை அழுத்தமாக பிடித்துக் கொண்டு நின்றார் தேவகி.. கண்களில் கண்ணீர் ஆறாய் பெறுகியது. நெஞ்சம் ஒவ்வொரு இடி முழுக்கமான கதவு இடிப்படுதளுக்கும் அனலிளிட்ட புழுவாய் துடித்தது. வெளியே வார்த்தைகள் தடித்தன.

"பொம்பளைங்கனு கூட பாக்க மாட்டோம். வீடு பூந்து நாஸ்தி பண்ணிருவோம். வயசு பொண்ணு வயசான கெழவியெல்லாம் கிடையாது. ஒழுங்கா கதவ தொறடி.."

"ஐயா தம்பி.. வீட்ல மூணு பொட்டப் புள்ளைங்கள வெச்சிருக்கேன் ய்யா.. என் தலையை அடகு வெச்சாவது எண்ணி ரெண்டே நாள்ல உன் பணத்தை தந்துடுவேன் சாமி..தயவு செஞ்சு இப்ப போங்கய்யா".. உள்ளிருந்து கெஞ்சினார் தேவகி. அந்தப் பக்கமிருந்து மீண்டும் காட்டுக் கூச்சல்.

சிறிது அமைதிக்குப் பிறகு "அடியே இன்னும் ரெண்டு நாள் தான் உனக்கு டைம். சொன்ன நேரத்துக்கு துட்டு வரல உன் மூணு பொண்ணுங்கள தாய் லாந்துல வித்துட்டு உன்ன லோக்கல்ல தள்ளிருவோம் ஜாக்கிரதை"..ஐம்பதைந்து வயதான தேவகி கேட்க கூடிய வார்த்தைகளா இவை? புயலடித்து ஓயிந்த நிலை..

இரண்டு நாளில் வட்டியோடு இரண்டு லட்சம். இரண்டு வேளை உணவுக்கே வக்கில்லாத நிலையில் இரண்டு லட்சம் பணத்திற்கு எங்கே செல்வார் தேவகி?

குளிர் காய்ச்சல் வந்து கண்களை கூட திறக்க இயலா நிலையிலும் கஷ்டப்பட்டு கண் விழித்து சுவரில் சாய்ந்தப்படி இங்கே நடக்கும் கூத்துகளை பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம்.

தாய் கோழியை போல் இரு வயதிற்கு வந்த தங்கைளையும் இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டிருந்தாள்..

"அம்மா கவலைப் படாத.. காச கட்டிரலாம்.."

"எப்படிடி"புரியாமல் கேட்டார் தேவகி.

"வேற எப்படி இத்தன வருஷம் நீ யாருக்கு ஆசை நாயகியா இருந்தியோ அவனுக்கே நானும் ஆசை நாயகியா போறேன்.."அதிர்ந்தார் தேவகி.

"அறைஞ்சிருவேன் பாத்துக்கோ.. விளையாட்டுக்கு கூட இப்படி சொல்லாதடி.."கதறினார்.

"இன்னுமா புரியல உனக்கு? இதெல்லாம் அவனோட த்ராப் தான். மாசா மாசம் ஒழுங்கா வட்டி கட்டிட்டு தானே இருக்கோம். திடீர்னு என்ன அசல கொடுக்க சொல்லி கெடுபுடி.. யோசிம்மா.. அம்மாவ அனுபவிச்சு அலுத்து போய் மக வேணும் இப்ப.. நீ ரிட்டையர் ஆயிடு.. அந்த வேலைய இனி நான் பாக்குறேன்.."அமைதியாக கூறினாள் பூங்கா என்கிற பூங்காவனம்..

தொடரும்.


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...