தாகம் 31



அன்று முழுவதும் ஏதோ கனவில் மிதப்பதை போல இருந்தது பூங்காவனத்திற்கு. அவளால் மின்னல் வீரபாண்டியனை  கணிக்கவே இயலவில்லை. விதவிதமாக பார்த்து பார்த்து அவள் சமைத்து போட்ட உணவுகளை வாயை மூடிக்கொண்டு சாப்பிட்டவன் அவள் வேண்டா வெறுப்பாக செய்து கொடுத்த ரசத்தையும் உருளைக்கிழங்கையும் விரும்பி சாப்பிட்டு இருக்கிறான் என்றால்..

அதைவிட முக்கியமாக  அவனது வார்த்தைகளும் மென்மையான குரலும் அவளை என்னமோ செய்தது.. என்றோ படித்த வாக்கியம் நினைவுக்கு வந்தது.. ஏதாவது ஒன்றை நாம் வேண்டுமென்று கடவுளுக்கு விரதம் இருந்து கண்ணீர் விட்டு வேண்டுவோம். அப்படி நாம் வேண்டும் போது நாம் வேண்டும் பொருள் நமக்கு கிடைக்காது. இறுதியில் கண்ணீர் விடுவே இயலாத கட்டத்தில் கடவுளே இல்லை என்று வெறுத்துப் போய் அமரும்போது நாம் வேண்டியது கையில் வந்து கிடைக்கும்.

அப்படித்தான் இப்பொழுதும் பூங்காவின் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது.. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக  அவளது உணவை பாராட்டியவன் மீண்டும் சற்று நேரத்தில் எல்லாம் திரும்ப அழைத்தான்.

" எங்கயாச்சும் வெளிய போலாமா.. " அவன் பாராட்டியதே ஆச்சரியம் என்றால் இப்படி அவன் கேட்டது திருமணமானதிலிருந்து இதுதான் முதல் தடவை. பூங்காவனத்தின் அதிர்ச்சியையும் அவளின் தவிப்பையும் கேட்கவா வேண்டும்.

தன்னுடைய பதிலுக்காக அவன் காத்திருக்கிறான் என்று தெரியுமே பதில் கூற இயலாமல் மௌனமாய் அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.

" அம்மாடி"

"ஹான்"

" எங்கேயாச்சும் வெளிய போலாமான்னு கேட்டேன்'

"ஹான்" அவளால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

" உன்ன தான்டி, எங்கேயாச்சும் வெளிய போலாமா."

"......." பதில் வராமல் எதிர்முனை அமைதியாக இருக்க பூங்காவனத்தின் மனநிலை ஓரளவு மின்னலுக்கு புரிந்தது.

" சரி இன்னும் ஒரு மணி நேரத்துல நான் வீட்டுக்கு வருவேன் நீ கிளம்பி இரு.."

"......"

"ஹேய்... உன்னோட பீரோல பாரு மெருன் கலர் சேலை இருக்கும். நீ இன்னும் அந்த சேலையை கட்டவே இல்ல. அந்த சேலையை கட்டு" அழைப்பு துண்டிக்கப்பட்டது.

மெருன் வர்ண சேலையா? வேகமாக எழுந்து சென்று பீரோவை ஆராய்ந்தாள்.. சேலைகளின் இடையே பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அந்த மெரூன் வர்ண சேலை.. இந்த சேலையை இத்தனை நாட்களாக அவள் கண்டதே இல்லையே? எப்பொழுது வாங்கி இங்கே பதுக்கி வைத்தான்?

நடப்பதெல்லாம் மாயையோ என்கிற அளவுக்கு தள்ளப்பட்டாள் பூங்காவனம். அரை மணி நேரம் கழிந்ததே தெரியாமல் அமர்ந்திருந்தவள் அவன் ஒரு மணி நேரத்தில் வருவதாக கூறி இருக்க அடித்து பிடித்து குளித்து, மின்னல் கூறிய அதே வர்ண சேலையை கட்டி  அவசர அவசரமாக அலங்காரம் பண்ண ஆரம்பித்தாள்..

ஈர கூந்தலை விரித்துவிட்டு, நெற்றி வகுடில் குங்குமம் வைத்து  புருவத்துக்கு லேசாக கண்மை தீட்டி  அவளின் அலங்காரம் முடிந்தது.. மின்னல் தன்னை கவனிக்க வேண்டுமென்று பார்த்து பார்த்து இத்தனை நாட்களாக அலங்காரம் பண்ணிக் கொண்டவள் இன்று இருந்த மனநிலையில் ஏனோ தானோ என்று தயாராகி நின்றாள்.

ஒரு மணி நேரத்தில் வந்து விடுவதாக கூறியவனிடமிருந்து அழைப்பு தான் வந்தது.

"அம்மாடி.."

"ம்ம்ம்"

"கெளம்புற நேரத்துல முக்கியமான வேலை.. நீ என்ன பண்ணு நேரா மாரியம்மன் கோவில் போயிரு.. நான் வந்துறேன்".. அழைப்பு மீண்டும் துண்டிக்கப்பட்டது.. அவன் சொன்னது போலவே மாரியம்மன் கோவிலுக்கு செல்ல பூஜை பொருட்களை எடுத்துக்கொண்டு  வாசலுக்கு விரைந்தவளை கண்டதும் வீட்டு தேவைக்கு இருக்கும் டிரைவர் ஓடி வந்தான்.

"அம்மா.. எங்கம்மா போனும்" தனக்கிருந்த குழப்பமான மனநிலையில் சற்று நேரம் நடந்து சென்றாள் நன்றாக இருக்கும் என யோசித்தாள் பூங்காவனம்.

" இல்ல வேணாம் நானே போய்க்குறேன்"

"ம்மா.. இல்லம்மா நானும் உங்க கூட வரேன்".. மின்னலை நினைத்து பயந்து கூறினான் டிரைவர்.

"இல்லை வேணாண்ணே நானே போய்க்குவேன்.. இங்க தான்.. ஐயா வந்து பிக்கப் பண்ணிக்குவாரு அப்புறம்" அவள் இவ்வளவு தூரம் கூறிய பிறகு அடம்பிடிப்பது நல்லதல்ல என்பதால் டிரைவர் ஒதுங்கி நின்றான்.. பெரிய கேட்டை தாண்டி வீதியில் இறங்கி நடக்க தொடங்கினாள் பூங்காவனம். மாலை வேளையில் ஜன நெருக்கடி இல்லாத அந்த  தெருவில் இறங்கி நடக்கும் போது மனதிற்கு நிம்மதியாக இருந்தது.

அங்கே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை பார்க்கும்போது  புன்னகை கூட எட்டிப் பார்த்தது பூங்காவிற்கு. நீண்ட நாட்கள் கழித்து மனம் லேசானதைப் போல உணர்ந்தாள். அந்த தெருவில் இருக்கும் அனைவருக்கும் அவள் அமைச்சரின் மனைவி என்பது தெரியும்..அவள் கையில் பூஜை கூடையோடு நடந்து போக அனைவருமே ஆச்சரியமாக பார்த்தார்கள்.தெருவில் இருப்பவர்கள் அனைவரும் மேல் தட்டு மக்கள் என்பதால் ஆச்சர்யம் அதிர்ச்சியாகமல் சடாரென்று கலைந்து போனது.

யாருடைய பார்வையைப் பற்றியும் அவளுக்கு கவலை கிடையாது. கனவில் மிதப்பது போல தெருவில் நடந்து சென்றாள். அந்த நேரம் பார்த்து தேவகி அவளுக்கு அழைத்தார்.

" சொல்லுமா"

"எங்கடி இருக்க.. கொஞ்சம் வீட்டுக்கு வந்துட்டு போறியா.."

"ப்ச் எதுக்குமா"

" உனக்கு பிடிக்கும்னு சுறா புட்டு செஞ்சிருக்கேன்.. சின்ன வயசுல செஞ்சு கொடுத்தது. அதுக்கப்புறம் மீனு வாங்கவே நம்ம வீட்ல வக்கில்லை. இதுல எங்க இருந்து சுறா புட்டு செஞ்சு கொடுக்க? வரியா டி உனக்கும் மாப்பிள்ளைக்கும் எடுத்து வச்சிருக்கேன்.."தேவகி ஆசையாக அழைத்தார்.

" சரி எடுத்து வை ஆனா நான் இப்ப வரமாட்டேன் நான் வர கொஞ்சம் லேட் ஆகும்"

"ஏன்டி வீட்டில வேலையா.. நான் வேணும்னா எடுத்துட்டு வரட்டா.. இல்லன்னா செல்வி கையில கொடுத்து விடுவா?"

"ப்ச் ஐயோ அம்மா அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ எடுத்து வை நானும் அவரும் அப்புறம் வரோம்.. நாங்க வெளியே போறோம்.." தேவகியின் முகம் புன்னகையால் மலர்ந்தது.

"அப்படி சொல்லுடி. சரி சரி ரெண்டு பேரும் நல்லபடியா போயிட்டு வாங்க. மாப்பிள்ளை வந்துட்டாரா அவர் கூட தான் இப்ப போயிட்டு இருக்கியா"

" இல்லம்மா அவர் வரேன்னு தான் சொன்னாரு அதுக்குள்ள வேலை வந்திருச்சாம்.. அதான் நீ போய் மாரியம்மன் கோவில்ல வெயிட் பண்ணு நான் வந்துர்றேனு சொன்னாரு"

"சரிடி.. நான் எடுத்து ஹாட் பேக்ல போட்டு வைக்கிறேன். ராத்திரி சாப்பாடு நம்ம வீட்டிலேயே சாப்பிடுறியா.."

" என்னமா சமைச்சிருக்க.."

" பெருசா ஒன்னும் இல்லடி ஹோட்டல் சமைச்சதை எடுத்துட்டு வந்துட்டேன். இப்ப நீ சொன்னனா ஏதாச்சும் செய்வேன்"..

" தெரியலம்மா நான் போன் பண்றேன்.." அம்மாவுடன் பேசிக்கொண்டே ஆட்டோ பிடித்து கோவிலுக்கு வந்து விட்டிருந்தாள் பூங்காவனம்..

கோவில் வாசலில் அவள் காத்திருக்க மின்னலிடமிருந்து அழைப்பு வந்தது. "எங்க இருக்க.."

" நீங்க தானே மாரியம்மன் கோவில்ல வந்து வெயிட் பண்ண சொன்னீங்க.. "

" சரி நீ என்ன பண்ணு கெளம்பி நம்ம சோலை பாண்டியன் ஐயா வீட்டுக்கு வந்துரு.." தன் காதால் கேட்ட வார்த்தை உண்மைதானா என்று சற்று நேரம் பேசாமல் இருந்தாள் பூங்காவனம்.

"ஹெல்லோ.. லைன்ல இருக்கியா நான் சொன்னது கேட்டுச்சா"

" அந்த வீணா போனவன் வீட்டுக்கு போறதுக்கா கிளம்பி வெளியே போலாம்னு சொன்னீங்க.."

" ரொம்ப பேசாத சொன்னத செய் இங்க வா அதுக்கப்புறம் வெளியே போலாம்.. " முகத்தில் அடித்தது போல அழைப்பை துண்டித்து விட்டான் மின்னல்.

கண்ணை கரித்துக் கொண்டு வந்தது பூங்காவுக்கு. இவ்வளவு நேரம் இருந்த இதம் பறிபோய்  அவன் ஆசையாக கட்ட சொன்ன சேலையை அவிழ்த்து அங்கேயே வீசி விடலாமா என்று கூட தோன்றியது.. முதல் தடவையாக அவனோடு ஆசை ஆசையாக  கோவிலுக்கு செல்லலாம் என்று அவள் கட்டிய மனக்கோட்டை எல்லாம்  நொடியில் இடிந்து மண்ணோடு மண்ணாகியது.

என்ன தைரியம் இருந்தால் சோலை பாண்டியன் வீட்டிற்கு அவளை வரக் கூறுவான்? அப்பொழுதுதான் அவளது மூளை எடுத்துரைத்தது. காலையில் சோலை பாண்டியன் அவளைப் பார்த்து பேசி பேச்சுகள் எதுவும் மின்னலுக்கு தெரியாது அல்லவா? அதனால்தான் அவளை வரக் கூறிருக்கிறான்..

இப்பொழுது சோலை பாண்டியனின் கொச்சை வார்த்தைகளை எடுத்துச் சொன்னால் மின்னல் அவள் பக்கம் நிற்பானா? காலை வரை கேட்டிருந்தால் சூடம் அடித்து இல்லை என்று சத்தியம் செய்திருப்பாள் பூங்காவனம்..

மாலையிலிருந்து நிலமையையே வேறு..   மின்னலின் முன்பு வைத்தே சோலைப் பாண்டியன் அவளை பேசிய பேச்சுக்களை கூற வேண்டும். அவன் கண்டிப்பாக அவளுக்காக நிற்பான்.. இன்றோடு சோலை பாண்டியனின் ஆட்டத்திற்கு முடிவு கட்டியாக வேண்டும்.. ஒருவேளை அங்கே மகாலட்சுமி இருந்தால்? அவளுக்கு வேறு இது பேறு காலம் நெருங்கி விட்டது.அவள் கேட்டு எதாவது பிரச்சனை ஆகி விட்டால்? அவள் நல்லவள் ஆயிற்றே..

தேவையில்லாத சிந்தனைகளை மூட்டை கட்டி வைத்து மீண்டும் ஒரு ஆட்டோ பிடித்து சோலை பாண்டியன் வீட்டிற்கு சென்றாள் பூங்காவனம் முதல் முறையாக மிகவும் தைரியத்தோடு. வாசலில் இறங்கி வாயில் காவலன் அவளை ஏற இறங்க பார்த்ததை கண்டு  அதனை கண்டு கொள்ளாமல் வேகமாக வீட்டிற்குள் நுழைந்தாள்..

அடுத்த நொடியே அவளுக்கு இருந்த தைரியம் அனைத்தும் பொடி பொடியாக சிதறி விட்டது. காரணம் அந்த வீட்டின் நடு நாயகமாக அமர்ந்து வழி மேல் விழி வைத்து அவளுக்காக காத்திருந்தது சோலை பாண்டியன்..

" என்னம்மா பூங்கா... புருஷனை தேடுறியா.. இன்னிக்கு என் பொண்டாட்டி கூட நீங்க ஜாலியா இருங்க தலைவரேனு சொல்லிட்டு போய்ட்டான்.. இந்த மாதிரி பத்து பேர் இருந்தா போதும்.. நாடு எங்கேயோ போயிடும்..ம்ம்ம் என்னம்மா அங்கேயே நிற்கிற கால் வலிக்க போகுது..வா இப்படி வந்து கண்ணு முன்னாடி ஒக்காரு.. அப்பதானே பாக்க வசதியா இருக்கும்" கால்களுக்கு கீழே பூமி நழுவ   தன் சுயம் இழந்து மயங்கி விழுந்தாள் பூங்காவனம்.

தொடரும்


Comments

Popular posts from this blog

தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு

தாகம் எபிலாக்