சோலை பாண்டியன் மருமகனுக்கு காரியங்கள் அனைத்தும் முடிந்த பிறகு மகளை கையோடு அழைத்துக் கொண்டு தாய் நாட்டிற்கு திரும்பி விட்டார் சோலை பாண்டியன். மகாலட்சுமி வயிற்றில் ஆறு மாத கரு.. ஏற்கனவே நீர்க்கட்டி வந்து, அதனை அகற்றிய பிறகு வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டி தங்கிய குழந்தை இது.. திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகியும் அவளுக்கு வயிறு திறக்கவில்லை. இந்த குழந்தை தங்கியவுடன் எவ்வளவு சந்தோஷப்பட்டாள்.. அவளும் அவளது கணவனும் அடைந்த உவகைக்கு வார்த்தைகளால் அர்த்தம் சொல்ல முடியாது.
திடீரென்று ஒரு நாள் கணவன் விபத்தில் இறந்து போக பேதையவள் என்ன செய்வாள்? சின்ன வயதிலிருந்து தாயை விட தந்தை தான் அதிக செல்லம். எதற்கெடுத்தாலும் மூன்று மகள்களுக்கும் சோலை பாண்டியன் வேண்டும்.. மகள்கள் நினைத்ததை கூட கண்முன் கொண்டு வந்து நிறுத்தி விடுவார் மனிதர்.. இப்பொழுது கட்டிய ஆசை கணவனை இழந்து வயிற்று சுமையோடு, விட்டத்தை வெறித்து கொண்டிருக்கும் மகளை பார்க்க பார்க்க மனது ஆறவில்லை சோலை பாண்டியனுக்கு..
அவர் தாயகம் திரும்பி விட்டதும் அவரைப் பார்ப்பதற்காக ஓடோடி வந்தான் மின்னல் வீரபாண்டியன்.. எப்பொழுதும் ஏதாவது சாமி பாடல் ஒலித்துக் கொண்டிருக்கும் சோலை பாண்டியன் வீடு இன்று மயான அமைதியாக காட்சி தர அந்த சூழ்நிலையை உள்வாங்கிக் கொண்டே உள்ளே நுழைந்தான் மின்னல்.
சாய்வு நாற்காலியில் மேல் சட்டையின்றி வெறும் வேஷ்டியில் அமர்ந்திருந்தார் சோலை பாண்டியன்.. கண்களை மூடிக்கொண்டு அவர் படுத்திருந்தாலும் அவர் இன்னும் உறங்கவில்லை என்பது அவனுக்கு தெரிந்தது..
" ஐயா" மின்னலின் குரலை கேட்டு கண் திறந்தார் சோலை பாண்டியன்.
"வாடா மின்னலு.. நீ காலையிலேயே வருவேன்னு எதிர்பார்த்தேன்.." நிமிர்ந்து அமர்ந்தார் மனிதர்.
" இல்லைங்கய்யா இன்னைக்கு கட்சி ஆபீஸ் வரைக்கும் போற வேலை இருந்துச்சு.. பாப்பா எப்படியா இருக்கு? கூடவே கூட்டிட்டு வந்துட்டீங்களா? " ஆம் என்று தலையாட்டினார் சோலை பாண்டியன்.
" ஐயா நீங்க பெரியவங்க. உங்களுக்கு தெரியாத நீதி நியாயம் கிடையாது. பொண்ணுங்கள உங்கள மாதிரி யாராலும் வளர்க்க முடியாது. அப்படி பொத்தி பொத்தி மூணு பொண்ணுங்களையும் வளர்த்து நல்லபடியா கட்டி கொடுத்தீங்க.. உங்கள பாத்து தான்யா உங்க பொண்ணுங்களுக்கு தைரியம். நீங்களே இப்படி இடிஞ்சு போயிட்டீங்களா பாவம் சின்னம்மாவுக்கு யாரைய்யா தைரியம் சொல்லுவா.." மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு வினவினான் மின்னல்.
"அட போடா.. கப்பல் கப்பலா சொத்து இருக்கு.. இருந்து என்ன புண்ணியம்? ஆண்டு அனுபவிக்க ஒரு ஆம்பள பையன் இருக்கானா? சரி பொட்ட புள்ளைங்களா பொறந்திருச்சு.. அதுங்க ஆசைப்பட்ட மாதிரியே அதுங்கள ஆளாக்கி அதுங்க ஆசைப்பட்டவனுக்கே கட்டிக் கொடுத்தா ஒன்னு பாதியிலேயே தாலி அறுத்துட்டு வந்து உட்கார்ந்துருக்கு.. வயித்துல பிள்ளையோட என் மக செவத்த பாத்துட்டு உட்கார்ந்து இருக்கிறத பார்த்தா என் ஈரக்குலையே நடுங்கி போதுடா சாமி.." கண்களில் வழிந்த கண்ணீரை சுண்டி எறிந்தார் சோலை பாண்டியன்.
" ஐயா மாப்பிள்ளை நல்லா தானேய்யா இருந்தாரு.. திடீர்னு எப்படிய்யா.."
"ம்ம்ம்.. என்னத்த சொல்ல.. சிங்கப்பூர் என்ன நம்ம ஊரு மாதிரியா? இஷ்டத்துக்கு போறதுக்கும் இஷ்டத்துக்கு வரத்துக்கும்.. ஆளே இல்லனாலும் அங்கலாம் ரோடு தாண்ட முடியாது. லைட்டு விழுந்தா தான் தாண்டனும்.. இப்படி ஏகப்பட்ட கெடுபிடி. அப்படியெல்லாம் இருந்தும் மருமகன் ரோட தாண்டும் போது... ஸ்ஸ்ஸ் என்ன சொல்றது எல்லாம் தலையெழுத்து.." பெருமூச்சு விட்டார் சோலை பாண்டியன்.
வெளியே பேச்சு குரல் கேட்டு அறைக்குள் இருந்து வந்தாள் மகாலட்சுமி.. சோலை பாண்டியனிடம் சேர்ந்ததிலிருந்து அவரின் மூன்று மகள்களையும் நன்றாக தெரியும் மின்னலுக்கு. மூவருமே அவனிடம் மிகவும் சகஜமாக பழகுவார்கள்..
மூன்று பெண்களும் சோலை பாண்டியனுக்கு செல்லம் என்றாலும் மகாலட்சுமிக்கு தனி இடம் உண்டு.. சொல்லப்போனால் அந்த வீட்டில் அவள் வைத்தது தான் சட்டம். செல்வ செழிப்பில் வளர்ந்த அவளை களை இழந்த முகத்தோடு பார்க்கும்போது மின்னலுக்கே ஏதோ மாதிரி இருந்தது..
"பாப்பா.." மின்னலை பார்த்து சன்னமாக முருவலித்தாள் மகாலட்சுமி.
" நடந்தது நினைச்சு கவலைப்பட்டுட்டு இருக்காத பாப்பா. நாங்கல்லாம் இருக்கோம். உங்க அப்பா இருக்காரு. எத்தனையோ குடும்பத்தை வாழ வச்சுட்டு இருக்காரு ஐயா. அந்த புண்ணியம் வேற எங்கேயும் போகாது.." மின்னல் சொல்லி வாயை மூடுவதற்குள்
" ஆமா ஆமா நேரா உங்க தலையில தான் வந்து விடிய போகுது" என்றவாறு வீட்டிற்குள் நுழைந்தாள் பூங்காவனம்.. முற்றிலும் அவளை அங்கே எதிர்பார்க்காத சோலை பாண்டியன் சாய்வு நாற்காலியில் இருந்து திடுக்கிட்டு எழுந்தார்..
தேவகியை பற்றியோ அல்லது சோலை பாண்டியனால் பாதிக்கப்பட்ட இதர பெண்களைப் பற்றியோ ஒரு துளி கூட அவரது பெண்களுக்கு தெரியாது.. திடீரென்று ஒரு பெண் வீட்டிற்குள் நுழைந்ததை கண்டதும் குழப்பமாய் தந்தையை நோக்கினாள் மகாலட்சுமி..
" உன்ன வெளிய தான இருக்க சொன்னேன்" அழுத்தமான குரலில் மனைவியை கேள்வி கேட்டான் மின்னல். மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்தவன் சோலை பாண்டியன் வீட்டிற்கு செல்வதாக கூற, போகிற வழியில் தன்னுடைய அம்மா வீட்டில் இறங்கிக்கொள்வதாக கூறி உடன் வந்தவள் சோலைப் பாண்டியன் வீடு வரும் போது தானும் உள்ளே வருவதாக பிடிவாதம் பிடிக்க ஆரம்பித்தாள்..
" உனக்கு தான் அந்த ஆள கண்டாலே பிடிக்காத நீ எதுக்குடி அங்க வர.. ஆகாதவங்க வீட்டுல உனக்கென்ன வேலைன்னு கேட்கிறேன்" மனைவியை கண்டித்தான் மின்னல்.
" ஏன் நீங்க இருக்கும் போதே அந்த ஆளு என் கைய புடிச்சு இழுத்துருவான்னு பயமா இருக்கா? இல்ல வயசானவன் மடியில நான் போய் உக்காந்துருவேன்னு பதபதைக்குதா... உங்க பொண்டாட்டி மேல அவ்ளோ நம்பிக்கையா?" இளக்காரணமாக வெளிவந்தது பூங்காவனத்தின் குரல்.
வண்டியை ஓட்டிக்கொண்டே அவளை கடுமையாக முறைத்தான் மின்னல்.. இடது கையால் அவளது பின் கழுத்தை அழுத்தமாக பற்றியவன் அவளை தன்னை பார்க்குமாறு செய்தான்.
" என்னடி பேச்செல்லாம் ஒரு மாதிரி இருக்கு.. என் பிள்ளையை வயித்துல வச்சிருக்கதனால வந்த தைரியமா இது.. என் விரலை வெச்சு என்னோட கண்ண குத்த பாக்குறியா. ஒரு அளவு தான்.. இப்போ என் ஆளு போய் உன் தங்கச்சிங்க ஸ்கூல் முன்னுக்கு நின்னு என்னோட பேரை சொன்னா போதும். ரெண்டு பேரும் ஊருக்கு முன்னுக்கு ஓடி வந்து வண்டியில ஏறிடுவாங்க..
உங்க அம்மா நீயா போய் நான் கொடுமை படுத்துறன்னு சொன்னா கூட நம்ப மாட்டாங்க..எப்படி கதை? " திகிலடைந்த முகத்தோடு அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.. அவன் கூறுவது எவ்வளவு உண்மை? அவளது குடும்பத்திடம் அந்த அளவிற்கு மதிப்பும் செல்வாக்கும் உள்ளது மின்னலுக்கு. தேவகி மருமகன் பேச்சுக்கு கோள் எடுத்து குரங்கு போல் ஆடிக் கொண்டிருக்கிறார். இரு தங்கைகளுக்கும் மாமன் பேச்சு வேத வாக்கு.. அதைவிட அவன் ஒரு கதாநாயகன் அந்தஸ்தில் அவர்கள் இளம் மனதில் பதிந்து விட்டான்.
என்ன நினைத்தானோ கையை அவள் கழுத்தில் இருந்து அகற்றியவன் அவள் முகவாயை பற்றி தன்னை பார்க்குமாறு செய்தான். " ஓவரா ஆடிட்டு இருக்காத.. ஒரு நேரம் போல ஒரு நேரம் நான் இருக்க மாட்டேன்.. பத்து மாசம் நீ பெத்துக் கொடுக்கணும்னு அவசியம் இல்ல..வயித்த கிழிச்சி என் பிள்ளையை வெளியே எடுக்க ரொம்ப நேரம் ஆகாது..நீயா நல்லபடியா எந்தவித கோக்குமாக்கும் பண்ணாம பெத்து கொடுத்துட்டா உனக்கு நல்லது. இல்ல நான் சொன்னத தான் செய்வேன். என்கிட்ட ஈவு இரக்கம் எதையும் எதிர்பார்க்காத. புரியுதாடி" இந்த அளவிற்கு அவன் மிருகமாக இருப்பான் என்று பூங்காவனம் எதிர்பார்க்கவில்லை. உச்சி முதல் பாதம் வரை உடல் வெலவெலத்து ஆட கதவை ஒட்டி ஒடுங்கி அமர்ந்து விட்டாள்.
அதன் பிறகு காரில் மயான அமைதி. சற்று நேரத்திற்கெல்லாம் சோலை பாண்டியனின் வீட்டு வாசலை அடைந்தது மின்னலின் வண்டி. புரியாமல் அவனைப் பார்க்க
" ஒருவேளை சோத்துக்கு வக்கில்லாத தேவகியோட பொண்ணு இல்ல நீ. கண்டவனும் கைய புடிச்சு இழுக்க.. " இதயத்துக்குள் சுளீரென்று வலித்தது..
" நீ இங்க இரு" அவளை வாசலில் நிற்க சொல்லிவிட்டு அவன் மட்டும் உள்ளே வந்திருந்தான். ஆனால் திடுதிப்பென்று அவள் உள்ளே வருவாள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.. வந்தவள் அமைதியாக இல்லாமல் சோலை பாண்டியனை எகத்தாள பார்வை பார்த்தாள். மகள் முன்பு ஏதாவது உளறி கொட்டி விடுவாளோ என்கின்ற பதட்டம் சோலை பாண்டியனிடம் அப்பட்டமாக வெளிப்பட்டது.
"நீ.. வாம்மா பூங்காவனம்.. என்னடா மின்னலு பூங்காவனம் உன்கூட வந்திருக்கான்னு சொல்லவே இல்ல.." மகாலட்சுமி புதியவளை ஆராய்ச்சி பார்வை பார்க்க
" இதுதான் மா நம்ம மின்னலோட சம்சாரம்.. பூங்காவனம்" வேகமாக மகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார் சோலை பாண்டியன். அவருடைய பதற்றமும் பதபதைப்பும் பார்க்க பார்க்க தெவிட்டவில்லை பூங்காவனத்திற்கு. இன்பத் தேன் வந்து செவியில் பாய்ந்தது போல சோலை பாண்டியனின் இருளடித்த முகத்தை பார்க்க பார்க்க இன்பத்தேன் அவள் கண்களில் பாய்ந்ததைப் போல உணர்ந்தாள்.
"வணக்கம் ஐயா.. எப்படி சவுரியமா இருக்கீங்களா.. முன்ன விட ஒரு சுத்து இளைச்ச மாதிரி இருக்கீங்க.. உடம்ப பாத்துக்கோங்க ஐயா.. சொத்து சுகம் கொட்டி கிடந்தா என்ன இப்ப யார் யாருக்கோ கண்ட கண்ட நோயெல்லாம் வருதாம்.. கோடி கோடியா செத்து இருந்தாலும் வரக்கூடாத நோய் வந்தா பொசுக்குன்னு எல்லாம் தொடச்சிகிட்டு போயிடும்.." சோலை பாண்டியன் என்ன சொல்வதென்றே புரியாமல் மிரண்டு, இறுதியில் கண்களாலையே காப்பாற்றும் படி மின்னலிடம் சரணடைந்தார்.
"ஹேய்" பல்லைக் கடித்துக் கொண்டு பூங்காவை தன் பக்கத்தில் இழுத்தான் மின்னல்.. மின்னலின் கரம் பூங்காவின் இடையை அழுத்தமாக பற்றியது. வலிய கரத்தின் வலியை தாங்க முடியாமல் பூங்காவனத்தின் கண்ணே கரித்துக் கொண்டு வந்தது. இறஞ்சும் பார்வையோடு அவனை திரும்பி பார்க்க கடின கண்களால் அவளை உறுத்து விழித்தான் மின்னல் பாண்டியன்..
போயும் போயும் சோலை பாண்டியனுக்காக தனக்கு வழி கொடுக்கும் கணவனை அப்படியே விட மனமில்லாமல் உடலை விரும்பாக்கி கொண்டு மன தைரியத்தோடு பல்லை கடித்தப்படி நிமிர்ந்தே நின்றாள் பூங்காவனம்.
"ஹாய் பூங்காவனம்.. நான் மகாலட்சுமி.. நீங்கதான் மின்னல் அண்ணாவோட வைஃபா..? ரொம்ப அழகா இருக்கீங்க. உனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு அப்பா சொன்னாரு. உங்க கல்யாண போட்டோவை அனுப்ப சொன்னதுக்கு அதெல்லாம் நேர்ல பாத்துக்கலாம்னு சொல்லிட்டாரு. இப்படித்தான் உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா பாக்கணும்னு எனக்கு எழுதி இருக்கு போல..
என் கூட பொறக்கலனாலும் ஒரு சொந்த அண்ணன் மாதிரி தான் மின்னல் எங்களுக்கு.. அண்ணா இங்க இருக்கிற தைரியத்துல தான் நாங்க எல்லாம் அங்க கொஞ்சம் நிம்மதியா இருக்கோம். எங்க அப்பா இடத்தை பிடிக்கிறதுக்கு இங்க நிறைய பேருக்கு போட்டி..
மின்னல் அண்ணாவை அப்பா வாரிசா தத்தெடுக்கறேன்னு சொன்னப்ப அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு.. அண்ணா பாக்க தான் முரட்டுத்தனமா இருக்கும்.ஆனா பழகுனா உசுரையே கொடுக்கும்.. நீங்க அண்ணா கூட சந்தோஷமா வாழுவீங்க.. அதுக்கு நான் கேரன்டி சொல்ல முடியும்.. என்னண்ணே" வெள்ளந்தியாக சிரித்த மகாலட்சுமியை பார்க்கும்போது பூங்காவனத்திற்கே மனதிற்குள் வேதனையாக இருந்தது.
சோலை பாண்டியனை பற்றி அவளுக்கு ஒன்றுமே தெரியாது என்பதை பூங்கா மகாலட்சுமியின் கண்களை வைத்தே புரிந்து கொண்டாள்..
" நீங்க எப்படி இருக்கீங்க? உங்கள பத்தி சொன்னாரு.. இப்பதான் நீங்க தைரியமா இருக்கணும். உங்களுக்காக இல்லாட்டியும் உங்க வயித்துல வளர்ர புள்ளைக்காக." உண்மையாகவே ஆறுதல் கூறினாள் பூங்காவனம்..
அவ்வளவு நேரம் தைரியமாக இருந்த இருந்தது போல் நடித்துக் கொண்டிருந்த மகாலட்சுமிக்கு அதற்கு மேல் தன்னுடைய நாடகத்தை தொடர முடியவில்லை. ஒரு பெண் ஆறுதலாக பேசியவுடன் உடைந்து அழுந்து விட்டாள். பூங்காவனம் அவளது கையைப் பிடித்து ஆறுதலாக தேற்ற
" அவரு இல்லாம என்னால வாழவே முடியாது. பாக்குற இடம் எல்லாம் அவரு நிக்கிற மாதிரி இருக்கு.. அவரு போன இடத்துக்கு நானும் போயிருவேன்.. ஆனா எனக்கு ஒரு பொறுப்ப கொடுத்துட்டு போயிருக்காரு.அவரோட குழந்தை.. இந்த குழந்தையை நல்லபடியா பெத்து அவரு ஆசைப்பட்ட மாதிரியே வளர்க்கணும்.. அதுக்காக வேண்டி நான் தைரியமா இருந்துதான் ஆகணும்.. என்னோட அப்பா எத்தனை பேர் குடும்பத்தை வாழ வச்சிட்டு இருக்காரு தெரியுமா.. பெத்தவங்க செஞ்ச புண்ணியம் அவங்க பிள்ளைகளுக்குன்னு சொல்லுவாங்க.. எங்க அப்பா செஞ்ச புண்ணியம் எல்லாம் எங்க?
அந்தப் புண்ணியம் என் புருஷன காப்பாத்தலையே.. வாழ வேண்டிய வயசுல.. " அதற்கு மேல் முடியாமல் கேவி அழுதாள் மகாலட்சுமி பூங்காவனத்தை கட்டிக்கொண்டு. அவளின் முதுகை நீவிக் கொண்டு
" பெத்தவங்க செஞ்ச பாவமும் பிள்ளைங்க தலையில தான் முடியும்.. " சத்தமாக கூறாவிட்டாலும் சோலை பாண்டியனை பார்த்துக்கொண்டே வாயசைத்தாள் பூங்காவனம். வியர்த்து வடிந்தபடி அவளைப் பார்த்தபடி நின்றார் சோலை பாண்டியன்.
தொடரும்
No comments:
Post a Comment