Saturday, 5 April 2025

தாகம் 17


இதழ் முத்தம் நீண்டு கொண்டே சென்றது. அவனிடமிருந்து விடுபடப் போராடிய பூங்காவனம் ஒரு கட்டத்திற்கு மேல் மின்னலிடம் அடங்கிப் போக ஆரம்பித்தாள்.

" எதுக்கு பூங்கா நீ துள்ளிக்கிட்டு இருக்க. எப்படி இருந்தாலும் இதுதான் நடக்க போகுது. இதுக்குத்தானே உன் மனச நீ தயார்படுத்தி வெச்சுருந்த. இப்ப என்ன அதோட மொத கட்ட நிகழ்ச்சி நடந்துகிட்டு இருக்கு. பேசாம அவனுக்கு ஒத்துழைச்சு போ.." அவள் அமைதியாக நின்ற பிறகு  உடனடியாக அவளை தன்னிடம் இருந்து பிரித்து தள்ளினான் மின்னல்.

புரியாமல் அவனை  பார்க்க"என்ன ஈஸியா வளஞ்சிட்ட.. எனக்கு பிடிக்காது"..அவன் படுத்து விட்டான். இப்பொழுது என்ன செய்வது என அவளுக்கு புரியவில்லை. அவனருகே கட்டிலில் படுக்கவா.. அல்லது தரையில் படுத்துக்கொள்ளவா.. சற்று நேரம் அமைதியாக நின்றவள் தரையில் படுத்துக் கொள்வதே சிறந்த முடிவு என்று வெறும் தரையில் படுத்து விட்டாள்..

மின்னலுக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை கிடையாது. அசதி அலைச்சல் இரண்டும் சேர்ந்து அவனைப் படுத்த வேகத்தில் உறக்கத்திற்குள் கொண்டு சென்றது. நல்ல உறக்கத்தில் யாரோ அனத்தும் சத்தம் கேட்டது. படக்கென கண்விழித்து பார்த்தவன்  தரையில் ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்த பூங்காவனத்தை பார்த்தான்.

அவள் இன்னும் உறங்கவில்லை. ஏசி அறையில் பனிக்கட்டி பாறை இடுக்கில் படுத்து உறங்குவதை போன்ற பிரம்மை.. குளிர் உடலை வாட்டியது..உறக்கம் வரவில்லை. அதற்கு மாறாக இங்கிருந்து எப்படி தப்பி செல்வது? அம்மா தங்கைகளை எவ்வாறு காப்பாது என்பது ஒன்றே அவளின் சிந்தனையில் ஓடியது.குளிரில் அனத்த வேறு தொடங்கி விட்டாள்.

"ஹேய்" கட்டிலில் இருந்து இறங்காமல் குரல் மட்டும் கொடுத்தான் மின்னல். முதல் தடவை பூங்கா அசைந்து கொடுக்கவில்லை. மறு தடவை குரலை சற்று அழுத்தம் கூட்டி அழைக்க வேகமாக எழுந்து அமர்ந்தாள்.

"என்ன".. கண்களை திறக்காமலேயே அவன் பேச 

"என்ன" அவளின் குரல் அவளுக்கே கேட்கவில்லை.

"ஏன்"..

"ஏன்னா என்னத்த சொல்ல.. படுபாவி எதை பத்தி கேக்குறான்னு தெரிய மாட்டேங்குது.." அவள் பேந்த விழித்துக் கொண்டு அமர்ந்திருக்க 

"கேக்குறேன்ல என்ன".. சத்தியமாக அர்த்த ராத்திரியில் குளிரில் நடுங்கி கொண்டு உறங்க முயற்சித்தவளை எழுப்பி அவன் கேள்விகள் தொடுக்க அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

"ப்ச் எதுக்கு அனத்திட்டு இருக்க"..

" எது நானா.. இது எப்ப நடந்துச்சுனு தெரியலையே.. " சற்று நேரம் யோசித்தவள் " ஒருவேளை தூக்கத்துல.. இல்ல இல்ல குளிர்ல" அவள் சொல்லி முடிப்பதற்குள் தலையணை ஒன்று பறந்து வந்து அவள் முகத்தில் பட்டது.

" அர்ப்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்தராத்திரியில குடைபிடிப்பானாம்" மின்னல் வாய்க்குள் முனங்கியது  தெள்ளத் தெளிவாக அவளுக்கு கேட்டது.அவன் இன்னும் ஏசியை குறைத்து வைத்தான்.

அவமானம் பிடுங்கி தின்றது.. இன்னொரு பக்கம் குளிர் வாட்டியது. கட்டாந்தரையில் பாய் விரித்து படுத்திருந்த போது கூட  நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள் பூங்காவனம். சோலை பாண்டியன் என்ற ஒருவனால் அவள் வாழ்வே தலைகீழாக மாறி விட்டது.

ஆத்திரத்தில் தலையணையை தூக்கிப் போட்டவள்  புடவை தலைப்பை நன்றாக இழுத்துப் போர்த்திக் கொண்டு  குளிரை கட்டுப்படுத்த முயன்றாள்.. இறுதியாக விடிய விடிய அவள் விழித்திருந்தது மட்டும்தான் பாக்கி. எப்போதடா விடியும் என்று காத்திருக்க பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து விட்டான் மின்னல்.

சுவரில் பல்லியைப் போல ஒட்டிக் கொண்டிருந்த அவளை ஒரு பார்வை பார்த்தபடி ஏசியை அடைத்து விட்டு வெளியே சென்றான். அதன் பிறகு தான் உயிரே வந்தது பூங்காவனத்திற்கு. சூரிய நமஸ்காரம் தேகப் பயிற்சியை முடித்துக் கொண்டு அவன் அறைக்குள் நுழையும் போது  தன்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்தாள் பூங்கா. புடவை முந்தானை விலகி, பாவாடை தொடை வரை ஏறிருந்தது.

எப்போதும் அவனுக்கு இந்த நேரத்தில் சரியாக  அருகம்புல் சாறு கொண்டு வரும் கமலி  அறைக்குள் நுழைந்து கீழே படுத்திருந்த பூங்காவை கண்டதும் முகத்தை திருப்பிக் கொண்டார்..

"கண்ணு"..

"அங்க வெச்சிட்டு போ".. டேபிள் மீது தட்டை வைத்தவர் ஓடியே விட்டார். கதவை சாற்றி வந்தவன் அரைகுறையாக உறக்கத்தில் உருண்டு கொண்டிருந்த  பூங்காவை பார்த்துக் கொண்டே வேகமாக குளியல் அறைக்குள் சென்று ஒரு பக்கெட் தண்ணீரை எடுத்து வந்து அவள் மேல் ஊற்றினான். அலறி அடித்துக் கொண்டு எழுந்தாள் பூங்கா.

காலி பக்கேட்டை அவள் மீது வீசியவன்" பழக்க தோஷம் போல.. இதுக்கெல்லாம் இந்த மின்னல் மயங்கமாட்டான்.." அவன் எதைப் பற்றி கூறுகிறான் என்பது புரியாமல் விழித்தவள் சற்று தன்னை குனிந்து பார்த்தாள். தீயினார் சுட்ட புண் உள்ளாறும் ஆறாது நாவினால் சுட்ட வடு.. எவ்வளவு உண்மை?

ஒரே வார்த்தையில் அவளது ஒழுக்கத்தையே தூள் தூளாக உடைத்து விட்டானே. அந்த அளவிற்கு அவள் என்று நடந்து கொண்டாள்? சுட சுட அவனைக் கேட்டு விட நா துடித்தது. மூளை அவளை எச்சரிக்கை செய்தது.

"வேணா பூங்கா.. இது உனக்கான நேரம் இல்லை.. இப்ப நீ எது பேசினாலும் அது திரும்ப உனக்கே பாதிப்பா வரக்கூடும். வாய மூடிக்கிட்டு உன் வேலையை பாரு".. பொங்கி வந்த கண்ணீரை அடக்கியவள் எழுந்து நின்றாள்.

" ஏய் அந்த இடத்தை சுத்தம் பண்ணிட்டு சீக்கிரம் குளிச்சிட்டு வர.. " அடுத்தடுத்து அதிகாரமாக அவன் கட்டளைகள் போட எதிர்த்து பேச துணிவின்றி, அவன் சொன்னதை செய்தாள் பூங்காவனம்..

குளித்து முடித்துவிட்டு அவனிடம் தெளிவாக பேசி விட வேண்டும்.. ஒருவேளை கிளம்பி வெளியே எங்கேயும் சென்று விடப் போகிறான். வேகமாக குளித்துவிட்டு வெளியே வந்து பார்க்க  இடையில் வரும் துண்டை மட்டும் கட்டிக்கொண்டு நாட்டு நடப்புகளை யூட்யூபில் பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது.

அவளின் அரவம் உணர்ந்து திரும்பி பார்த்தவன் "கீழ இரு".. என்று விட்டுக் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான். அவனிடம் பேச முடியாத கடுப்பில் தலையை வாரி விட்டு வைக்க பொட்டு இல்லாததால் கழுவி துடைத்த முகத்தோடு  கீழே இறங்கி சென்றாள்..

கமலி சமையலறையில் இருந்தார். அமைதியாக தன் பின்னே வந்து நின்று கொண்டிருக்கும் பூங்காவனத்தை திரும்பிப் பார்த்தவர் " என்ன கண்ணு இப்பதான் எந்திரிச்சு வரியா.. காபி குடிக்கிறியா இல்ல டீயா" வேலையில் மும்பரமாக இருந்தார்.

"இல்ல ஒன்னும் வேணா"..

"சரி.. மின்னலு வந்ததும் டிபன் சாப்பிட உட்கார்ந்துடும். நீயும் கூட உட்கார்ந்து சாப்பிடு.." அதற்கும் அமைதியாகவே நின்று கொண்டாள் பூங்கா.

சற்று நேரத்தில் மின்னல் வீரபாண்டியன் கீழே வந்தான். நின்று கொண்டிருந்த பூங்காவை பார்த்துக் கொண்டே டைனிங் டேபிளில் அமர்ந்தவன்

"க்கா" என்றழைக்க வேகமாக ஓடி வந்தார் கமலி. சுட சுட உணவுகள் அவனுக்கு பரிமாறப்பட்டது..

" நீயும் வா கண்ணு.. இப்படி உட்காரு.. " கமலி மட்டும் தான் அவளை அழைத்தார்.. பூங்கா ஒரு அடி எடுத்து வைக்க அவளை அழுத்தமான பார்வை பார்த்தான் மின்னல். அடுத்த அடி எடுத்து வைக்க கால் வரவில்லை அவளுக்கு..

இதனை கவனித்த கமலி அமைதியாக மின்னலுக்கு மட்டும் சாப்பாடு பரிமாறினார்.. அவன் அமைதியாக சாப்பிட்டு முடியும் வரை அவமானத்தோடு தலை குனிந்து நின்று இருந்தாள் பூங்காவனம்..

சாப்பிட்டு எழுந்தவன் " சீக்கிரம் சாப்பிட்டு வா" வெளியே போஷம் போட்டுக் கொண்டிருந்த தொண்டர்களை பார்ப்பதற்காக சென்று விட்டான்.  ஏழையாக இருந்தாலும் மதிப்போடு வாழ வேண்டும் என்று நினைத்தவளுக்கு  கடவுள் இம்மாதிரியான வாழ்க்கையை கொடுத்து விட்டாரே.

" நீ வாமா வந்து உட்காரு.. " கமலி அவளுக்கு தட்டு வைக்க  சாப்பாடு வேண்டாமென மறுத்து விட்டாள்..

" அவன் பேச்சை மீறுனா அவனுக்கு பிடிக்காது.. தயவு செஞ்சு கொஞ்சமாவது சாப்பிடு.." கமலி எவ்வளவு கூறியும் பூங்கா கேட்கவில்லை.

அரை மணி நேரத்தில் வீட்டிற்குள் வந்தான் மின்னல் வீரபாண்டியன். " சாப்டாச்சா" தலைகுனிந்த படி அவன் முன்பு நின்று கொண்டிருந்தாள் பூங்கா..

ஐந்து நிமிடங்கள் கடந்தும் அவள் பதில் சொல்லாமல் இருக்க அடுத்த நொடி அவள் பாதத்தின் அருகே பெரிய பூ ஜாடி ஒன்று பறந்து வந்து விழுந்து நொறுங்கியது.. பூங்காவனம் பதறி அடித்து விலக  " நான் கேட்டா எனக்கு பதில் வரணும்".. இத்தனை அளவு கோபத்தை அவள் மின்னலிடமிருந்து எதிர்பார்க்கவில்லை.

தலை தானாக இல்லையென ஆடியது.. கண்கள் இடுக்கி அவளைப் பார்த்தவன்
"வா" ஒற்றை வார்த்தையோடு முன்னே நடக்க அவனை பின் தொடர்ந்தாள் பூங்கா. காரில் கூட  பின் இருக்கையில் தான் அவள் அமர்ந்திருந்தாள்..

வண்டி நேராக அவளின் அம்மா வீட்டிற்கு சென்றது. ஏரியாவை பார்த்ததுமே பூங்காவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. இவனே நம்மளை அத்துவிட்டு போயிருவானோ. கார் நின்றதும் புரியாமல் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தவளை இறங்க கூறினான் மின்னல்.

காரில் இருந்து பூங்கா இறங்க அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள்  வேகமாக அவளை நலம் விசாரிக்க ஆரம்பித்தார்கள். வாசலில் சத்தம் கேட்டு முதலில் எட்டிப் பார்த்தது காயத்ரி தான்.

"ஹை அக்கா.. அம்மா அக்கா வந்துருக்கா" வேகமாக அக்காவிடம் ஓடினாள் காயத்ரி. அக்கா என்ற வார்த்தையை கேட்டதும் தேவகியும் செல்வியும் விழுந்தடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். பூங்காவை சுற்றி முழித்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தினரை விலக்கி அவள் குடும்பத்தினர் அவளை கட்டிக் கொண்டார்கள். அங்கு மின்னல் என்ற ஒருவன் நின்று கொண்டிருக்கிறான் என்பதை பற்றி அந்தப் பெண்களுக்கு கவலை கிடையாது..

சுற்றி இருந்த கூட்டத்தினர் மின்னலை பார்த்து அடையாளம் கண்டு தங்களுக்குள் கிசுகிசுக்க"தேவகி நல்லா இருக்கே நீ பண்றது.. மருமகன் வீட்டுக்கு வந்து இருக்காரு.. அவர கவனிக்காம என்னமோ இப்பதான் உன் பொண்ண புதுசா பாக்குற மாதிரி கட்டிப்பிடிச்சு ஒப்பாரி வச்சிட்டு இருக்க.." பக்கத்து வீட்டு சுமதி தேவகி தோளை இடிக்கும் தான் அங்கே ஒருவன் நின்று கொண்டிருப்பது தேவகிக்கு தெரிந்தது..

முகத்தில் வழிந்த வியர்வையை புறங்கையால் துடைத்தபடி வீடு தேடி வந்த மருமகனை "வாங்க.. வாங்க  மாப்பிள்ளை.. தம்பி" வரவேற்கச் சொன்னால் உளறி கொட்டினார் தேவகி.

கூட்டத்தை கண்களால் அளந்து கொண்டே தேவகி வீட்டிற்குள் நுழைந்தான் மின்னல்.

" என்னடி திடீர்னு இவன் உன்னை இங்க கூட்டிட்டு வந்து இருக்கான்.. "

" எனக்கும் தெரியலம்மா ஒரு வேளை காதும் காதும் வெச்ச மாதிரி ஏதாவது தொகையை கையில கொடுத்து பைசல் பண்ணி விட்டுட்டு போயிருவான் போல.".. சொந்த வீட்டிற்குள்ளேயே  கேள்வியோடு நுழைந்தார்கள் பெண்கள் நால்வரும்.

தொடரும்


No comments:

Post a Comment

தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...