Saturday, 5 April 2025

தாகம் 14


கண்ணாடி துண்டை கொண்டு கழுத்தில் கோடு கிழிக்க ஆசைப்பட்டாள் ஆம் இந்த நொடியே இந்த கண்ணாடி துண்டை வைத்து கழுத்தில் கோடு கிழித்து இறந்து விட்டால், பாரமான பூத உடலில் இருந்து விடுதலை கிடைத்து விடும் அல்லவா? வலிமையானவர்கள் எளிமையானவர்களை நசுக்குவதை பணம் இல்லாத ஒரே காரணத்திற்காக கைகட்டி வேடிக்கை பார்க்க வேண்டாம்.. அவளின் குடும்பப் பின்னணி தெரிந்தவர்கள் உங்களுக்கு என்ன உங்க அம்மா ஒருத்தி உடம்ப விட்டு குடும்பத்தையே முன்னுக்கு கொண்டு வந்துட்டா..  நீங்க பெரிய ஆளா கைக்குள்ள போட்டுக்கிட்டு சொகுசா வாழ்றீங்க..

இத்தனை ஆண்டுகளாக அந்த சொகுசு வாழ்க்கை எங்கே இருக்கிறது என்று தான் பூங்காவனம் தேடிக் கொண்டிருக்கிறாள்.. தேவகி வயிற்றுப் பாட்டுக்காகவோ  அல்லது உடல் தேவைக்காகவோ சோலை பாண்டியனை நாடி செல்லவில்லை.. கட்டிய கணவனால் வந்த வினை.. தேவகி தன்னை இழக்கவில்லை என்றால் கொடுத்த பணத்திற்காக அப்பொழுதே பூங்காவனத்தை மொட்டிலேயே கருக வைத்திருப்பார் சோலை பாண்டியன்..

பேசுபவர்கள் அமர்ந்த இடத்திலிருந்து ஆயிரம் பேசலாம். அவர்களிடம் ஆயிரம் அல்ல பத்து ரூபாய் கடன் கேட்டால்  தெரித்து ஓடிவிடுவார்கள்.. எப்படியோ தேவகி பிள்ளைகளின் வயிற்றுப் பட்டை கவனித்து விட்டார்.. பூங்காவனத்தின் படிப்பும் பள்ளியோடு நிறுத்தப்பட்டது. நிறுத்தியாக வேண்டிய கட்டாயம்.. அதனால் மட்டுமே செல்வியும் காயத்திரியும் தொடர்ந்து படிப்பை படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

"அக்கா கால நீட்டு தைலம் தேய்ச்சி விடுறேன்.. வீங்கிருக்கு பாரு"பூங்காவின் கால் மாட்டில் அமர்ந்து கொள்வாள் செல்வி.

"அக்கா எனக்கு கொஞ்சம் கொஞ்சமா காசு சேர்த்து டைரி மில்க் சாக்லேட் வாங்கி தரியா.. அதுவும் நடுவுல பிங்க் லவ் இருக்கே.. அழகா உடைச்சா லவ் மட்டும் தனியா வருதே அதுக்கா.."ஆசையாக கேட்பாள் காயத்ரி.

"பூங்காம்மா தங்கம் கொஞ்சம் இருடி சாப்டு முடிச்சிராத.. ஒரு முட்டைய பொறிச்சிட்டு வந்துறேன்"தொடுக்கை இல்லாமல் அவள் வெறும் ரசம் ஊற்றி சாப்பிட எழுந்து அவசரமாக ஓடுவாள் அம்மா..

கண்ணீர் வெடித்து கொண்டு கிளம்பியது. அடி வயிற்றிலிருந்து கதறல் ஒப்பாரியாக வெளிப்பட்டது..இரண்டு கைகளாலும் கண்ணாடி துண்டை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள். ரத்தம் சொட்டியது.. கீழிருந்து கமலி ஓடி வந்தார்.

"கண்ணு என்னம்மா என்னாச்சு".. பதறிக் கொண்டே அவர் அறைக்கதவை திறந்து வர  உள்ளே பூங்காவின் நிலையைக் கண்டு  ஒரு நிமிடம் அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. சட்டுன்னு தன்னை சுதாகரித்தவர் வேகமாக பூங்காவின் அருகே சென்று அவள் கையில் இருந்த கண்ணாடியை வலுக்கட்டாயமாக பிடித்து விட்டெறிந்தார்.. தரையில் முட்டி போட்டு அமர்ந்து கதறிக் கொண்டிருந்த பூங்காவை பார்ப்பதற்கு உண்மையாகவே அவருக்கு நெஞ்சமெல்லாம் பதறியது.

ஓரளவு மின்னலின் திருமணத்தைப் பற்றி அறிந்தவருக்கு பூங்காவின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடிந்தது.. அனுபவத்தரான கமலிக்கு ஒரு ஆளை கண்டவுடன் எடை போட இயலும். பூங்காவனத்தை பார்த்ததுமே வாழ்க்கையில் நிறைய அடிபட்டவள் என்பதை புரிந்து கொண்டார்..

"கண்ணு என்னமா எல்லாம் தெரிஞ்ச பொண்ணு நீ.. நீயே இந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் பண்ணலாமா.. உயிர் உனக்கு அவ்வளவு விளையாட்டா போயிருச்சா.."..

அவரை ஆத்திரமாக ஏறிட்டாள் பூங்காவனம். உடனே தணிந்தாள்..

" பைத்தியக்காரத்தனமா.. உண்மைதான் அக்கா.. பைத்தியமா இருந்திருந்தா கூட ஒருவேளை நல்லா இருந்திருக்கும் போல. எல்லாம் தெரியறதுனால தான் இங்க பிரச்சனையே.."..

" உன் நிலைமை எனக்கு புரியுதும்மா.. உன்ன மட்டும் இல்லாம உன் குடும்பத்தை ஒரு நிமிஷம் நெனச்சு பாரு இந்த முடிவு எவ்வளவு அபத்தமானதுனு உனக்கே தெரியும்.."

" அத பத்தி யோசிச்சு பார்த்ததால தான் இன்னுமே உங்க முன்னாடி உசுரோட ஒக்காந்து இருக்கேன்.. ஆனா முடியலக்கா.." கமலியும் தரையில் மண்டியிட்டு அமர்ந்து  பூங்காவனத்தை தன்னுடைய மடியில் சாய்த்து கொண்டார். நொடியில் தேவகியை நினைவு படுத்தினார் கமலி..

" என்னோட அம்மா ரொம்ப பாவம் க்கா.. பேசாம அந்த சோலை பாண்டியனுக்கு வப்பாட்டியா இருந்து எப்படியாச்சும் ஒரு வேலைய செஞ்சு என் தங்கச்சிங்க ரெண்டு பேத்தையும்   நல்லா படிக்க வைக்கணும்னு நினைச்சுட்டு இருந்தேன்.." பூங்காவின் கண்ணீரை துடைத்து விட்டார் கமலி.

" இப்ப மட்டும் என்ன மாறி போச்சுன்னு இவ்ளோ விரக்தியா பேசுற"

" அந்த சோலை பாண்டியனாச்சும் சாகப் போற வயசுல இருக்கான். இன்னைக்கும் நாளைக்கும் கண்டிப்பா அவன் செத்துருவான்ற ஒரு நம்பிக்கை.. இவன பாத்தீங்களா? இவன விட்டா இன்னும் நூறு பேர கொல்லுவான்.."கமலிக்கு சிரிப்பு வந்தது.

" மின்னல் சாகணும்னு சொல்றியா.. யாராச்சும் கழுத்துல தாலி ஏறுன கொஞ்ச நேரத்துல புருஷன் சாகணும்னு ஆசைப்படுவாங்களா.. "

" நான் ஆசைப்படறேன் அக்கா..ஆமா சாகனும்னு இல்ல எனக்கு அவன்கிட்ட இருந்து விடுதலை வேணும்.. அக்கா நீங்க இங்க எத்தனை வருஷமா இருக்கீங்க.. நீங்க அவனுக்கு என்ன வேணும் ரொம்ப உரிமையா பேசுறீங்களே.." திடீரென்று ஏற்பட்ட சந்தேகத்தால் கமலியின் மடியில் இருந்து எழுந்து உட்கார்ந்து கேட்டாள் பூங்கா.

" ரொம்ப சீக்கிரம் கேட்டுட்டே..மின்னலு எனக்கு தம்பி தான்.. தூரத்து சொந்தம்".. அவனின் உறவிடம்  அவனைப் பற்றியே குறை கூறியது எண்ணி நாக்கை கடித்துக் கொண்டாள் பூங்காவனம். பூங்காவின் முகத் தோற்றத்தை வைத்தே அவள் மனதில் உள்ளதை படித்து விட்டார் கமலி.

" பயப்படாத கண்ணு.. நீ பேசின எதையும் நான் மின்னல் கிட்ட சொல்ல மாட்டேன். என் உன் கூடப் பொறந்தவளா நினைச்சுக்கோ.. நீ இன்னொரு தடவை இந்த மாதிரி முட்டாள்தனம் செய்யக்கூடாதுன்னு நான் சொல்லல..நீ நினைக்கிற அளவுக்கு மின்னல் தப்பானவன் கிடையாது.. " கண்ணில் சற்று ஒளியோடு கமலியை ஏறிட்டாள் பூங்காவனம்.

" நீ நினைக்கறதை விட கேடு கெட்டவன் அவன்.. சொந்தம் பந்தம் பொண்ணுன்னு கூட பாக்க மாட்டான்.. இந்த இடத்துக்கு வர அவன் எவ்வளவோ கஷ்டப்பட்டு இருக்கான். அவன் பேருக்கு கலங்கம் வர மாதிரி நீ நடந்துக்கிட்டது தெரிஞ்சா உன்ன கொன்னு புதைக்க கூட அவன் தயங்க மாட்டான்.. எதுவாயிருந்தாலும் சூதானமா நடந்துக்கோ.. அவன் எப்ப வேணும்னாலும் வருவான். அதுக்குள்ள இந்த அறையை சுத்தப்படுத்தணும்.. நீ என்ன பண்ண கொஞ்ச நேரம் படுத்து தூங்கு. அதுக்குள்ள நான் இந்த அறையை சுத்தப்படுதிருறேன்.. கண்ணாடி எப்படி உடைஞ்சதுனு அவன் கேட்டா நடந்தது தாங்க முடியாம நீ தான் ஆத்திரத்துல ஒடச்சிட்டேன்னு சொல்லிடு..

கொஞ்சமாவது நம்பற மாதிரி இருக்கும்" அதன் பின் கமலி வேகமாக அந்த அறையை சுத்தம் செய்ய கட்டிலில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பூங்காவனம்.. உதவி செய்யப் போனவளை கமலி அகட்டி  கட்டிலின் மேல் அமர வைத்திருந்தார்.

உறக்கம் வருவேனா என்று சண்டித்தனம் செய்தது. அவளுக்கு குடிக்க பழசாறு கூட எடுத்து வந்திருந்தார் கமலி. எதுவுமே பூங்காவனத்திற்கு பிடிக்கவில்லை.

ஒவ்வொரு நிமிடமும் மின்னலை நினைத்தால் அவளுக்கு பயத்தில் உயிர் போய் உயிர் வந்தது..அவள் கண் முன்னாடியே அவன் கோரத்தாண்டவம் ஆடியதை கண்டிருந்தவள்.

இனி அவளுடைய வாழ்வு என்ன ஆகும்? அதைவிட அம்மா தங்கைகள் இருவரும் எப்படி பிழைப்பு நடத்துவார்கள்? தன்னுடைய வாழ்வை போலவே செல்வியும் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்று விடுவாளோ?  நினைத்தாலே வேப்பங்காயை கடித்தது போல நாவெல்லாம் கசந்து வழிந்தது.

எப்படியும் இன்னும் கொஞ்ச நேரத்துல அவன் வரப் போறான். எனக்கு ஏதாவது ஒரு வேலை ஏற்பாடு பண்ணி தர சொல்லணும். இல்லனா? இல்லன்னா என்ன பண்றது? கேள்விகள் அவள் முன்பு மலைப்பாக நிற்க, அப்படியே படுத்து உறங்கி விட்டாள் பூங்காவனம். அறையை சுத்தம் செய்த கமலி திரும்பி பார்க்க உறங்கிக் கொண்டிருந்த பூங்காவனம் வளர்ந்த குழந்தையாக தான் அவர் கண்களுக்கு தெரிந்தாள்.

" கடவுளே கிளிய வளர்த்து குரங்கு கையில கொடுக்கிற மாதிரி இந்த அழகான பொண்ண, இப்படி ஒரு முரட்ன் கையில கொடுத்துட்டியே.. பதவிக்காக இவன் என்ன வேணும்னாலும் செய்வானே. அந்த சோல பாண்டியன்  ஒரு தடவ என்னையே படுக்க கூப்பிட்டான்..

இந்த பொண்ணோட நிலைமையை நினைச்சா ரொம்ப பயமா இருக்கு. எது எப்படியோ நீ தான் இவங்களுக்குள்ள முடிச்சு போட்டு வச்ச. எப்படியாவது இந்த பொண்ண காப்பாத்திரு" பெருமூச்சு மட்டும் தான் விட முடிந்தது கமலியால்.

நேரம் செல்ல செல்ல மதியம் தாண்டி தான் வீடு வந்து சேர்ந்தான் மின்னல்.. அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. வீட்டிற்குள் வந்த வேகத்தில் கமலியிடம் 

"எங்க அவ" அவனை நான் அந்த தோரணையை கண்டதுமே கமலிக்கு ஏழரை என்று புரிந்து போனது.

"மேல.." விருட்டென்று மாடி பக்கம் திரும்பினான் மின்னல்..

"ஐயா மின்னலு ராசா.."பின்னாலேயே ஓடி வந்தார் கமலி.

" அந்த பொண்ணு பாவம்யா இப்பதான் அசந்து தூங்குது. இன்னும் சாப்பிட கூட இல்லை"

"சாப்பாட போட்டு எடுத்துட்டு வா".. கமலிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை இருந்தாலும் அவன் சொல்லியதைப் போல உணவை எடுக்கச் சென்றார்.

அறைக்கு வந்தவன் அங்கே அசந்து மெத்தையில் உறங்கிக் கொண்டிருக்கும் பூங்காவனத்தை கண்டான். மெல்ல அடிமேல் அடி எடுத்து நகர்ந்தவன்கட்டிலின் அருகே சென்று படுக்கை விரிப்பை நன்றாக கையில் ஏந்தி கொண்டு  ஒரே இழு.. அவனின் பலத்திற்கு பாதி அளவு கட்டிலுக்கு வந்திருந்தாள் பூங்காவனம்..

வெள்ளை வேட்டி சட்டையில்  பார்ப்பதற்கு கம்பீரமாக தான் தோன்றினான். கட்சியிலும் அவனுக்கு நல்ல பெயர் உண்டு. மக்கள் மத்தியிலும் நல்ல அபிமானம் பெற்றிருந்தவன் அதனை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவனாக இருந்தான்.

" ஒரே நாள்ல உடம்பு சொகுசு வாழ்க்கைக்கு பழகிருச்சு போல.." அரைகுறை தூக்கத்தில் விழித்திருந்ததால் முதலில் அவன் பேசுவது புரியாமல் முழித்தாள் பூங்காவனம்.பார்வையாலே அவளை கொன்று போடும் வெறியோடு அவன் நிற்க வேகமாக படுக்கையில் இருந்து எழுந்து விட்டாள்.

அதற்குள் கமலி உணவோடு வந்து விட்டிருக்க, " நல்லா சாப்பிட்டு ரெடியா இருக்க.. இன்னைக்கு ஃபர்ஸ்ட் நைட் ஞாபகத்துல இருக்கட்டும்.. அந்த நேரத்துல என்னால நிக்க முடியாது படுக்க முடியாதுன்னு ஏதாச்சும் சொன்ன? "அவனிடம் பேச நினைத்ததெல்லாம் மறந்து போனது அவளுக்கு.

தொடரும்


தாகம் 13



மின்னலோடு பயந்துக் கொண்டே அவனது வீட்டிற்கு சென்றாள் பூங்காவனம்..முதல் தடவையாக அவனது வீட்டை பார்க்க வயிற்றில் புளியை கரைத்தது. காரை விட்டு இறங்கவில்லை அதற்குள் அவன் கட்சி உறுப்பினர்கள் ஒரு கூட்டமாக கோசமிட ஆரம்பித்திருந்தனர்.. அவர்களையெல்லாம் தாண்டி கார் லவாகமாய் போர்டிக்கோவை அடைய புயலென காரிலிருந்து இறங்கினான் மின்னல் வீர பாண்டியன்.

ஒரு பக்கம் மீடியா ஆட்கள் குட்டி மைக்கோடு காத்திருக்க இன்னொரு பக்கம் அவனுக்கு மாலையிட்டு பூங்கொத்து கொடுத்தனர் தொண்டர்கள்..

"சார்.. சார் உங்க திருமணத்துக்கு வாழ்த்துகள்.. திடிர்னு சோலை பாண்டியன் உங்கள அவரோட வாரிசா அறிவிக்க காரணம் என்ன சார்? நிழலுலக தாதானு சோலை பாண்டியன சொல்றாங்களே..ஒக்காந்த இடத்துல இருந்தே எந்த கட்சி ஆட்சிக்கு வரும் வரக் கூடாதுனு முடிவு பண்ற வரைக்கும் அவருக்கு எப்படி சார் பவர் வந்துச்சு?திடிர்னு சொல்லாம கொள்ளாம நீங்க திருமணம் செஞ்சிகிட்டது கூட ஏதோ ஒரு அரசியல் நோக்கத்துக்காகனு மக்கள் பேசிக்குறாங்களே?"

"அனாவசியமான கேள்விகெல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது. வாழ்த்துக்கு நன்றி.. நாகா"

"அண்ணே"

"எல்லோருக்கும் டிபன் ஆர்டர் பண்ணிருக்கல்ல"

"அதெல்லாம் ரெடியா இருக்குண்ணே"

"அப்ப சரி.. எல்லோரும் சாப்டு போங்க"என்றவன் யாருடைய கேள்விகளுக்கும் பதிலே கூறாமல் தன்னுடைய கூறிய பார்வையை நீல நிற கூலர்ஸின் பின்னே சாமர்த்தியமாய் மறைத்து கொண்டு திரும்பி பார்க்க அங்கே பூங்காவை காணவில்லை. வெளியே நிற்கும் கூட்டத்தை பார்த்தே பாவம் மிரண்டு விட்டாள் அவள். அவளை விட்டால் இப்படியே துண்டை காணோம் துணியை காணோமென்று கண் காணாத தேசத்திற்கு ஓடியே விடுவாள்.அப்படியான மனநிலையில் இறுகி போய் அமர்ந்திருந்தாள் பூங்கா.

அவள் பக்கம் கதவை வேகமாக திறந்தான் மின்னல்.. கழுத்தில் அணிந்திருந்த மாலையை இறுக்கமாக பற்றியப்படி அவள் அமர்ந்திருந்தது அவனுக்கு கடுப்பை கொடுத்தது.

குனிந்து அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் "மகாராணி கால தொட்டு கீழ எடுத்து வெச்சா தான் வருவீங்களா? இல்ல ரெட் கார்ப்பெட் போடணுமா".. மற்றவர் பார்வைக்கு அங்கே நடப்பது புதுமண தாம்பதிகளின் சல்லாப பேச்சு. ஆனால் மின்னலோ முகத்தில் எவ்வித மாற்றதையும் கொண்டு வராமல் புருவத்தை ஏற்றி இறக்காமல் பற்களை கடிக்காமல் தன்னுடைய கரகரத்த குரலில் அவளிடம் பேச அதற்கு மேலும் காரில் அமர்ந்திருக்க அவள் என்ன பைத்தியமா?

கீழே இறங்கி அவன் பின்னால் தொடர்ந்தாள்.. நடுத்தர வயது பெண்மணி ஒருவர் ஆற்றி சுற்ற  வா என்றதோடு அவன் சென்று விட்டான். அந்த வா கூட அங்கிருக்கும் ஆட்களுக்காகவே.

"உள்ள வாம்மா.."ஆலம் சுற்றியவர் சற்று தன்மையோடு விளிக்க முகத்தை ஓரளவு சிரித்தப்படி வைத்துக் கொண்டே உள்ளே வந்தாள். வீடு நல்ல பிரமாண்டமாக இருந்தது. சோலை பாண்டியன் வீடளவு இல்லாவிடினும் அதில் பாதி..

உள்ளே வந்தவளை நேராக அந்த பெண் பூஜை அறைக்கு அழைத்து சென்று விளக்கேற்ற வைத்தார்..

"நீ வந்த நேரம் அவன் மனுசனா மாறாட்டும்".. தீக் குச்சி பூங்காவின் விரலை சுட்டது. அந்த பெண்மணி இயல்பாக தான் கூறினார். ஆனால் அந்த வார்த்தை? அப்படியானால் அவன் மனிதன் இல்லாமல் வேறு என்ன? கை சுட்டதும் சொரணை வந்தது.

"அச்சோ பாத்தும்மா.. விளக்கேத்த கூட சரியா தெரியலையே உனக்கு.. உனக்கு புருஷன விட்டா இந்த ஊரையே ஒரு செகண்ட்ல எரிச்சிட்டு வந்துருவான். நீ என்னடானா?"பூங்காவிற்கு என்ன சொல்வதென்றே தெரியாமல் முழித்தாள்.

அவள் முழிப்பதை பார்த்ததும் நாக்கை கடித்துக் கொண்டவர்"நீ விளக்க ஏத்தும்மா.சாமிய நல்லா கும்பிட்டுக்கோ"எனவும் தன் மனதின் அலையை மறைத்துக் கொண்டு விளக்கேற்றினாள். வெறுமனே கைக் கூப்பி

"உன்ன வணங்கவே கூடாதுனு நெனச்சேன். உன் கண்ணு முன்னாடி என் வாழ்க்கைய முடிச்சு விட்டுட்டல. என் அம்மா வேற வழி இல்லாம அவளையே வித்து எங்கள வளத்தா. உனக்கு எத்தன விரதம் எத்தனை பூஜை எத்தன வேண்டுதல்? ம்ம்ம்ம் எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சிட்டல..உன்ன மன்னிக்கவே மாட்டேன்.. நீயெல்லாம் பணக்காரனுக்கு மட்டும் தான் ஓடி ஓடி செய்வல.. ஏழைங்கனா இளக்காரம்.. ஆமா ஆமா நாங்க மிஞ்சி போன என்னத்த செய்ய போறோம். கொஞ்சமா நெய் ஊத்தி சக்கர பொங்கல் செய்வோம்.. பணக்காரன் அப்படியா கோடி கோடியா செலவு பண்ணி உனக்கு திருவிழா செய்வானுங்க. என்ன நாங்க பக்தியோட ஒரு புடி சோறு வடிக்குறோம்.. அவனுங்க எல்லாம் ஆட்டமும் ஆடிட்டு உனக்கு கிரகம் தூக்குறானுங்க.. நீ நடத்து.. இனிமே உன் கிட்ட வந்த என்ன என்னானு கேளு"..

"என்னமா.. ரொம்ப நேரமா அம்மனையே பாக்குற.. பலமான வேண்டுதலா? மின்னல் இருக்கானே அவனுக்கு இஷ்டம் தெய்வம் இவங்கம்மா.. இவங்கள கும்பிடாம வீட்ட விட்டு போகவே மாட்டான். கொலையோ கொள்ளையோ எல்லாமே இவங்க ஆசிர்வாததோட தான்.."அந்த பெண் எதார்த்தமாக சொல்ல பூங்கா அதிர்ந்து போனாள்.

"வாம்மா".. என்றவர் அவளை அழைத்துக் கொண்டு ஹாலுக்கு வந்தார்..

"ஒக்காரும்மா.. இரு நான் போய் பாலும் பழமும் எடுத்துட்டு வரேன்.."சொன்ன மாறியே நொடியில் பாலும் வாழைப்பழமும் கொண்டு வந்தார்..

"உன் புருஷன கூப்டு வரேன்.. கொஞ்சம் நேரம் இரும்மா"அவர் திரும்ப மடியிறங்கி வந்துக் கொண்டிருந்தான் மின்னல்..

"அப்பாடா நீயே வந்துட்ட.. வாப்பா வா.. இப்படி உன் சம்சாரம் பக்கத்துல ஒக்காரு.."அவன் அமராமல் அவரின் கையிலிருந்தவற்றை கூர்ந்து நோக்கினான். அந்த பார்வை அப்படியே பூங்காவின் பக்கம் திரும்பியது.

அவனின் பார்வையின் வீச்சம் தாங்க இயலாமல் தன்னை போல் எழுந்து நின்றாள் பூங்கா..

"இந்த பால குடிச்சிட்டு பழம் சாப்பிடு மின்னலு.. அப்படியே அவளுக்கும் ஊட்டி விடு"மின்னலின் பார்வையில் ஏக்கத்துக்கும் என்னவோ ஒன்று கொட்டிக் கிடந்தது. அவள் புரியாமல் பார்க்க வெடுக்கென்று அவரின் கையிலிருந்த பால் சொம்பை வாங்கியவன் சுட சுட பாலை அவனே குடித்து முடித்தான்.

"மின்னலு எப்பா"அருகே நின்றவரின் கூக்குரலை பொருட்படுத்தாமல் பழத்தையும் பிடுங்கி வேகமாக தோலை உரித்து தின்று விட்டு தோலை எங்கேயோ வீசிருந்தான்.

"என்னப்பா மின்னலு.. நீ செய்றது உனக்கே நல்லா இருக்கா.. உன் பொண்டாட்டிக்கு கொடுக்காம இப்படியா செய்வ.. இரு நான் போய் வேற"

"வேணா"..

"இல்லப்பா இதெல்லாம் சாம்பரதாயம்"

"தேவ இல்ல.. போய் வேலைய பாரு.."என்றவன்

"ஹேய் நீ மேல போ.."உத்தரவிட்டான்..

"எப்பா அந்த பொண்ணு சாப்டுச்சானு தெரியல.. ஒரு வாய் இட்லி"அவரை முறைத்தவன்

"வேற என்ன செஞ்சிருக்க"என்றதும்

"பூரி உனக்கு புடிக்குமே".. என்றார்.

"எடுத்துட்டு வா"என்றான் மின்னல். அவர் வேகமாய் சென்று எடுத்து வர தட்டிலிருந்து ஒரு பூரியை சுருட்டி பூங்கா கையில் திணித்தான்.

"தின்னு".. நாய்க்கு கூட இதை விட நல்ல மாறியாக சாப்பாடு போடுவார்கள்..மனதிற்குள் நினைத்தாள். வெளியே சொல்லவில்லை. சொல்ல முடியவில்லை..

"மின்னலு"

"கமலிக்கா வாய மூடு"என்ற போது தான் அவரின் பெயரே பூங்காவுக்கு தெரிந்தது..

"ஹேய் சாப்டு"அவன் மிரட்டவில்லை. அமைதியாக தான் கூறுகிறான். ஆனால் கத்தி கத்தியே பழக்கப்பட்ட குரல் முரட்டுத்தனமாக வெளிப்பட்டது..

வேகமாக பூரியை சாப்பிட்டவள் பேந்த விழிக்க "மேல போ"என்றான் சற்று உறுமலாக.

உடல் தூக்கிப் போட கமலியை பாவமாய் பார்த்தப்படி நடக்க கமலிக்கே மனம் பொறுக்கவில்லை.."மின்னலு நீ செய்றது"

"உன் வேலை என்ன"குரலை உயர்த்தாமல் ஒருவரை ஆட்டிப் படைக்க முடியுமா?

கமலி அமைதியாக பூங்காவை பார்த்தப்படி நடக்க பூங்காவும் அவரை திரும்பி பார்த்தப்படி மாடியில் கால் வைக்க போக தொபிர்..

"அம்மாஆஆ"மின்னல் தூக்கி போட்டிருந்த வாழைப் பழ தோல் அவளை பழி வாங்கிருந்தது. கமலி பதறி ஓடி வந்தார்.

"அய்யயோ என்ன கண்ணு விழுந்துட்டியா..".. அவள் எழ முடியாமல் பின்னந் தொடையில் வலி வின்னென்று தெரிக்க கலங்கிய கண்களோடு மின்னலை திரும்பி பார்க்க அவன் எப்போதோ அங்கிருந்து சென்று விட்டான்.

"அடி பட்ருச்சா கண்ணு.. எந்திரி மொத.."அவளை தூக்கி இடையை தேய்க்க

"விடுங்க ப்ளீஸ்.. அங்க அடியில்ல"..

"ப்ச் கொஞ்சம் இரு கண்ணு.. தைலம் தேய்கிறேன்.. இல்லேன்னா ரத்தக் கட்டு விழுந்திரும்"கமலி பதறி சொல்ல

"வேணா..அவரோட ரூம்"..

"மேல போ.. கருப்பு கலர் கர்டன் போட்றுக்கும் அதான்".. மெல்ல படி ஏறி கமலி சொன்ன அறைக்கு வந்தவளுக்கு கழுதிலிருந்த மாலை பெரும் பாரமாக தோன்ற அதை வெறி கொண்ட வேங்கையாக கழற்றி வீசினாள்.. மாலை பறந்து போக தலையில் சூடிருந்த மல்லிகையை ஆவேசமாக பிடுங்கி அதை ஒரு மூலையில் விட்டு வீசினாள்...

ஆத்திரம் அடங்கவில்லை..அங்கும் இங்கும் அவள் கண்கள் அலைமொத நிலைக் கண்ணாடி முன் தெரிந்தது அவளுக்கு. வேகமாய் அதனருக்கே செல்ல அவளின் தோற்றமே அலங்கோலமாய் தெரிய முடியை இரு கரங்களால் பிடித்துக் கொண்டவள் ஓவென்று கதறி அழுதாள். ஒரே நாளில் அவள் சேற்றில் புரண்ட பன்னியாக மாறி விட்டதை போல ஒரு மாய பிம்பம்..

அழுதாள்.. அழுதாள் கத்தி கதறி முட்டி மோதி அழுது துடித்தாள். மனதாலும் யாருக்கும் துரோகம் நினைக்காதவளுக்கு, கடவுள் ஏன் இவ்வளவு பெரிய தண்டனையை அளித்தார்? சோலை பாண்டியன் கொதிக்கும் எண்ணெய் என்றால் அவரின் கைக்கூலி மின்னல்  தகிக்கும் நெருப்பல்லவா?

எதை எதையோ நினைத்து அழுதவளுக்கு  அவளின் இந்த பிறவியே பாரமாகத் தோன்றியது.. எங்கிருந்துதான் அந்த பொல்லாத எண்ணம் அவளின் மூளையில் தோன்றியதோ தெரியவில்லை. வேகமாக நிமிர்ந்து மின்விசிறி இருக்கிறதா எனப் பார்த்தாள்..

அவளின் சோதனைக்கு ஏசி பல்லை காட்டியது.. தூக்கிட்டு தொங்கும் எண்ணத்தை குழித் தோண்டி புதைத்தவள் எப்படியாவது மின்னலின் பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி விடும் வேகத்தில் முன்னிருந்த கண்ணாடியை அருகிலிருந்த பூ ஜாடியை எடுத்து ஒரே அடி.. கண்ணாடி சிதறியது.

அதில் ஒரு பெரிய துண்டாக எடுத்து வெயில் ரத்தம் வலியை தன் கழுத்தில் வைத்து அழுத்தமாக ஒரு கோடு..

தொடரும்


தாகம் 12


விதியை நொந்துக் கொள்வதா? இல்லை இந்த பிறவியை நொந்துக் கொள்வதா என்றே புரியாமல் மின்னல் வீர பாண்டியனின் அருகே வெட்டப் போகிற ஆடாய் அமர்ந்திருந்தாள் பூங்கா..

தேவகி செல்வி காயத்ரி மூவருக்கும் அதிர்ச்சியை தாங்கிட இயலவில்லை. மூச்சே மறந்து உயிருள்ள சவமாய் நின்றனர்.. முதலில் சுதாகரித்தது காயத்ரி தான்.

"ம்மா.. அக்காம்மா" வேகமாக பூங்காவனத்தின் அருகே ஓட முயன்றவளின் முன் வந்து நின்றார் சோலை பாண்டியன்.

"சின்னக் குட்டி,அக்கா கழுத்துல மாமா தாலி கட்டப் போறான். சிவ பூஜையில கரடி கணக்கா நீ எங்கன ஓடுற.. துரு துருன்னு இருக்க.. அப்டியே மொசக்குட்டி மாறி" காயத்ரியின் கன்னத்தைப் பிடித்து சோலை பாண்டியின் கிள்ள வெடுக்கென்று அவரின் கரத்தை தட்டி விட்டாள் காயத்ரி.

தேவகியும் காயத்ரியை பிடித்து தனக்கு பின்னால் இறுத்தி கொள்ள அலட்சிய புன்னகையை செலுத்திய சோலை பாண்டியன் மின்னலின் அருகே சென்று நின்று கொண்டார்.. மணவரையில் அமர்ந்தபடி தாயையும் தங்கைகளையும் கண்ணில்கண்ணீரோடு நோக்கினாள் பூங்காவனம்.

"அழாதம்மா.."

"நீ அழாதடி" தாயும் மகளும் கண்களாலையே பேசிக் கொண்டார்கள். ஐயர் தாலி எடுத்துக் கொடுக்க  அதனை வாங்கி சோலை பாண்டியனை ஒரு முறை பார்த்த மின்னல் அவர் தலை அசைத்ததும்  பூங்காவனத்தின் கழுத்தில் கட்டினான்.. மனம் நிறைந்த ஆசிர்வாதத்தை கூட கண்முன் காணும் மகளுக்கு வழங்க முடியாத அவல நிலையில் நின்று கொண்டிருந்தார் தேவகி..

திருமணம் முடிந்து அக்னிகுண்டம் சுற்றிய பிறகு சோலை பாண்டியனின் காலில் மின்னல் விழ பூங்காவனம் முகத்தை திருப்பிக் கொண்டு நின்றாள்.

"ப்ச் என்ன அங்க பிராக்கு பாக்குற..விழு" அவளையும் இழுத்துக் கொண்டு சோலை பாண்டியன் காலில் தொட்டான்  மின்னல். அவனின் பிடி இரும்பாக இருக்க  பூங்காவால் அவனிடமிருந்து விடுபட முடியவில்லை..

"நல்லா இருடா" தன் கழுத்தில் அணிந்திருந்த புலி நகம் பதித்த சங்கிலி ஒன்றை கழற்றி மின்னலின் கழுத்தில் அணிவித்த  சோலை பாண்டியன்  தன் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை கழற்றி  பூங்கா எதிர் பார்க்காத நேரம் அவளின் கையை பற்றி  அவளின் விரலில் அணிவிக்க முயன்றார். அவள் கையை பின்னால் இழுத்துக் கொள்ள முயற்சித்தும் விடாமல்

" அட இரு கண்ணு.. மாமா முறைக்கு சீர் செய்ய வேணாமா.." நல்ல வேலையாக அந்த மோதிரம் அவளின் எந்த விரலுக்கும் புகவில்லை.. படக்கின்ற தன்னுடைய கரத்தை சோலை பாண்டியின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டாள் பூங்காவனம்.. மின்னல் அருகில் நின்றிருந்த சுரேஷிடம் எதுவோ சொல்லிக் கொண்டிருக்க

" கைய புடிச்சதுக்கே படக்குனு உருவி கிட்டா எப்படி.. இனிமே மாமனார அனுசரிச்சு வாழனும்.. அவரு மனசு அறிஞ்சும் வாழனும். அப்படி இருந்தா தான் வாழவே முடியும்.. புத்திசாலி பொண்ணு புரிஞ்சு நடந்துக்கோ.. " பூங்காவனம் அதிர்ந்து நிற்பதை கூட பொருட்படுத்தாமல் வேகமாக அங்கிருந்து நகர்ந்தவர் தேவகியின் அருகே வந்து என்றார்.

நாகா என்பவன் அவர்கள் மூவரின் அருகில் நின்று கொள்ள, பெண்களால் பூங்காவனத்தை நெருங்கவே முடியவில்லை.. சோலை பாண்டியன் வந்ததும் மரியாதை நிமித்தமாக நாகா அங்கிருந்து சற்று விளக்கி சென்றான்.

" எதுக்கு உன்ன குளிச்சிட்டு வர சொன்னேனு நீ இப்ப புரியுதா.." கலங்கிய கண்களோடு பெற்ற வயிறு பற்றி எரிய அவரை ஏறிட்டு ஒரு பார்வை பார்த்த தேவகி

" நான் என் பொண்ண பார்க்கணும்யா.."என்றார்..

நமட்டு சிரிப்பு சிரித்த சோலை பாண்டியன் "ம்ம்ம்"என்றதும் அம்மா மகள்கள் மூவரும் வேகமாக பூங்காவை நோக்கி நகர்ந்தனர்.

மின்னல் சுரேஷிடம் பேசிக் கொண்டிருக்க தன்னை நோக்கி வரும் குடும்பத்தினரை எதிர்நோக்கி ஓடினாள் பூங்காவனம்.

"அம்மா" தாயை இறுக்கமாக அவள் கட்டிக் கொள்ள, தேவகி மகளை இறுக்கமாக கட்டிக்கொண்டார்..

"பூங்கா.. எங்கடி போன.. உனக்கு என்ன ஆச்சு ஏதாச்சுனு நாங்க எல்லாம் எப்படி தவிச்சு போயிட்டோம் தெரியுமா.. நாலு வீட்டுல ராவும் பகலுமா நின்னும்கூட ஒரு வார்த்தை சொல்லல.. உன்ன பாத்தோன  தான் எனக்கு உயிரை வருது.. எங்கடி போன.. எப்படி இவனை நீ கல்யாணம் பண்ணிக்கிட்ட" அடுக்கடுக்காக கேள்விகள் பறந்தது தேவகியிடமிருந்து.

நடந்த அனைத்தையும் சுருக்கமாக அம்மாவிடம் தெரிவித்தாள்  பூங்காவனம்.

" அம்மா நீ மொத அழறத நிப்பாட்டு. இப்ப நீ அழரதுனால இங்கே எதுவும் மாற போறது கிடையாது..நீ எப்படி இங்க வந்த.. அதும் தங்கச்சிங்கள கூட்டிட்டு".. செல்வியையும் காயத்ரியையும் இழுத்து அணைத்துக் கொண்டாள்.

" அதை ஏன்டி கேக்குற.. உன்ன காணமுன்னு அந்த ஆளு வீட்டுக்கு நடையா நடந்து.. நாய் தண்ணி குடிக்காத கேள்வி எல்லாம் அந்த ஆளு என்ன பாத்து கேட்டு.. நாலஞ்சு நாளா சோறு தண்ணி இறங்கல. உனக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ ஒன்னு பயந்து உலகத்துல இருக்குற எல்லா சாமியும் கும்பிட்டு, நாய் படாத பாடு போ.. இதுக்கு பேசாம குடும்பத்தோட ஒரு பாட்டில் விஷத்தை குடிச்சிட்டு செத்து தொலைஞ்சிருக்கலாம்.. இன்னும் இந்த உடம்புல உயிரை வச்சுக்கிட்டு என்னென்ன கருமத்தலாம் பார்க்க வேண்டி இருக்கோ தெரியல. யார் யாருக்கோ சாவு வருது எனக்கு ஒன்னு வந்து போய் சேர மாட்றனே.. "..

மீண்டும் கண்ணீர் விட்டார் தேவகி.."அச்சோ.. உனக்கு அலறத தவிர வேற எதுவுமே தெரியாது போம்மா அங்கிட்டு.." செல்வி காலையில் நடந்த அனைத்தையும் பூங்காவிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

" அக்கா அந்த ஆள பாத்தா எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. அவனோட கைக்கூலிய நீ கல்யாணம் பண்ணி இருக்க. இவனுங்க யாருமே நல்லவங்க கிடையாது. உன் வாழ்க்கை என்ன ஆகப் போகுதுன்னு என்னால நினைச்சு கூட பாக்க முடியல. தயவு செஞ்சு எங்களை பத்தி நினைக்கிறத விட்று. எப்படியாவது நீ இவன்கிட்ட இருந்து தப்பிச்சிரு."அக்காவுக்கு புத்தி கூறினாள் செல்வி.

" உங்கள பத்தி நினைக்காம.. எனக்கு வேற யாருடி இருக்கா இந்த உலகத்துல.. ராவும் பகலுமா என் நினைப்பு பூரா உங்கள பத்தி தான்."

" உன்ன பத்தி எனக்கு தெரியாதா அக்கா.. இன்னிக்கு நீ இந்த நிலைமையில இருக்குறதுக்கு நாங்க தானே காரணம். எங்களுக்காக தானே நீ இந்த நிலைமையில சிக்கி கிட்ட. அக்கா ஆனது ஆயிடுச்சு. எந்த ஜென்மத்துல செஞ்ச புண்ணியமோ அந்த சோலை பாண்டியன் கிட்ட நீ சிக்கி சீரழியல..பேசாம நீ இந்த மின்னல் கிட்ட பேசி பாரு. தயவு செஞ்சு எங்கள மனசில வச்சு எந்த ஒரு முட்டாள்தனமும் செய்யாத. இனிமையாச்சும் உன் வாழ்க்கையை நீ பாரு.. " பெரிய மனுசியாக அக்காவுக்கு தைரியம் கூறினாள் செல்வி. அவளை அப்படியே அணைத்துக் கொண்டாள் பூங்காவனம்.

" அக்கா எனக்கு மாமாவ பாக்கவே ரொம்ப பயமா இருக்கு.  ஆளும் தாடியும் காட்டன் மாதிரி இருக்காரு." மின்னலை பார்த்தபடி பயந்து போய் கூறினாள் காயத்ரி..

" மின்னலு நீ உன் வீட்டுக்கு போயிட்டு,எல்லாம் முடிச்சுட்டு அப்புறமா என்ன வந்து ஆபீஸ்ல பாரு.. அப்ப நான் வரட்டுமா" சோலைப் பாண்டியன் கிளம்ப அவரோடு  கார் வரை சென்று வழி அனுப்பி வைத்தான் மின்னல்.

நாகா பூங்காவனத்தை நோக்கி வந்தான்."அண்ணி அண்ணன் உங்களை கூட்டிட்டு வர சொன்னாரு..." அண்ணி என்ற அவனது அழைப்பையும் அண்ணன் என்று அவன் குறிப்பிட்ட மின்னலையும் திடுக்கிடலோடு தன்னுள் கிரகித்துக் கொண்டவள் தேவகியின் கையைப் பிடித்து தைரியம் சொல்லிவிட்டு தங்கைகளிடம் பத்திரம் கூறியவள் நாகாவை பின் தொடர்ந்தாள்.

மின்னல் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருக்க  அவன் அருகே கதவை நாகா திறந்து விட  தாயையும் தங்கைகளையும் பார்த்தபடியே காரில் ஏறிக் கொண்டாள். ஜன்னலை கூட அவளால் இறக்க முடியவில்லை. காரினுள் அமர்ந்திருந்த அவளால்  குடும்பத்தினரை பார்க்க முடிந்தது பாவம் அவர்களால் கருப்பு நிற தின்டட் போடப்பட்ட ஜன்னலின் வழியாக உள்ளே அமர்ந்திருந்த பூங்காவனத்தை காண முடியவில்லை..

மின்னலோடு ஒரு புதிய பாதையை தொடங்கினாள் பூங்கா.. பூங்காவனம் மின்னல் வீர பாண்டியனாக.


தாகம் 11


"அம்மா ரொம்ப பசிக்குது மா.. காலையிலேயே சாப்பிடாம  எங்கம்மா எங்கள கூட்டிட்டு வந்திருக்க" காயத்ரி தேவகியிடம் கேட்டாள்.

மகளின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் வெறுமனே அவளின் முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார் தேவகி.
" இன்னும் கொஞ்ச நேரத்துல சாப்பிடலாம் காயு.. கொஞ்ச நேரம் அமைதியா இரு" தங்கையை அடக்கினாள் செல்வி.

"ம்க்கும் அக்கா எங்க போனான்னு தெரியல.. நாலஞ்சு நாளா அவளை காணாம எப்ப பாரு வீட்ல பழைய சோறு கஞ்சி தான். இரு இரு அக்கா வரட்டும் உன்ன பத்தி சொல்றேன்." பூங்காவனத்தின் பெயரைச் சொல்லி தாயை மிரட்டினாள் காயத்ரி.

" உன் வாயாவது பழிச்சு என் மகளை நான் பார்த்திட மாட்டேனா.." ஏக்கத்தோடு வெளிவந்தது தேவகியின் குரல்.

பூங்காவை காணாமல் சோலை பாண்டியன் வீட்டிற்கு நடையாய் நடந்து ஓடாக தேய்ந்திருந்தார் தேவகி.. ஒவ்வொரு முறை அவர் சோலை பாண்டியன் வீட்டிற்கு வரும்போதும்  நாயை விட கேவலமாக அவரை நடத்தி,  வார்த்தைகளால் கொன்று திரும்ப அனுப்பியிருந்தார் சோலை பாண்டியன்.

பூங்காவுக்கு என்ன ஆனதோ ஏதானதோ என்று பரிதவிப்போடு தினமும் கோவில் குளமாக சுற்றிக் கொண்டிருந்தார் தேவகி. இறுதியாக அவரின் வேண்டுதலுக்கு கடவுள் கண் திறந்து விட்டார். அதிகாலையில் சோலை பாண்டியன் வீட்டிலிருந்து ஒரு அடியால் வந்து  காலை எட்டு மணிக்கு எல்லாம் சோலை பாண்டியன் வீட்டிற்கு வரக் கூறியிருந்தான். மகளைப் பற்றி ஏதோ தகவல் கூற போகிறார் என அடித்து பிடித்துக் கிளம்பி இருந்தார் தேவகி.

சோலை பாண்டியன் வீட்டிற்கு வந்து இறங்கியதும் தன்னுடைய இரு மகள்களையும் இரு பக்கம் கையைப் பிடித்துக் கொண்டு" அங்க என்ன நடந்தாலும் யார் என்ன கேட்டாலும் பேசாம இருக்கணும்.." எதற்காக சோலை பாண்டியன் இரண்டு மகள்களையும் உடன் அழைத்து வர கூறியிருந்தார் என்பது மட்டும்தான் இன்னும் உறுத்தலாக இருந்தது..

கடவுள் மீது பாரத்தை போட்டவர் மெல்ல அடியெடுத்து வாசலில் வந்து நின்றார். இந்த வாசலில் பல தடவை அவர் நின்று இருந்தாலும்   பிள்ளைகளோடு வந்து நிற்பது இதுதான் முதல் தடவை. செல்விக்கு வரக்கூடாத இடத்திற்கு வந்துவிட்ட உணர்வு. காயத்ரிக்கு புதிய இடத்தை பார்த்ததும் கால்கள் பரபரவென்று இருந்தது. அந்த இடத்தை சுற்றிப் பார்த்துவிடும் வேகமும் அவளிடம்.

அவ்வப்போது அங்கு வந்து போகும் அடியார்களை கண்டு செல்வி முகத்தை திருப்பிக் கொள்ள, அவர்களின் தோற்றத்தை பார்த்து காயத்ரி பயந்து போய் அம்மாவை பிடித்துக் கொண்டாள். வயதுக்கு வந்த பெண்ணாகிய செல்வியை, கண்டமேனிக்கு மொய்த்தது அங்கிருக்கும் கயவர்களின் பார்வை..

தன்னுடைய தலைவிதியை நொந்து கொண்டே இரு மகள்களையும் தன்னுடைய  கையணைப்பில் இருத்திக் கொண்ட தேவகி சோலைப் பாண்டியன் வரவுக்காக காத்திருந்தார்.

நல்ல வேலையாக அவரை அதிகம் சோதிக்காது சோலை பாண்டியன் எப்பொழுதும் போலவே தெய்வ கடாட்சமாக பட்டையும் கொட்டையுமாக அவள் முன்பு வந்து நின்றார்.. என்றும் இல்லாத திருநாளாக  தேவகியை கண்டதும் 

" யாரு அடடா தேவகியா? என்ன வாசல்ல நிக்கிற? உள்ள வா.. பிள்ளைங்க ரெண்டும் ஸ்கூலுக்கு போலயா. அதுங்களையும் உன் கூட கூட்டிட்டு சுத்திட்டு இருக்க.. " குடும்பத்தோடு அவர்களை வரக்கூறியதே அவர் தானே..

"ஐயா என் பொண்ணு பெரியவ"

" என்ன தேவா உனக்கு எல்லாத்தையும் வாசப்படியில வைச்சு தான் சொல்லனுமா. உள்ள வானு கூப்டா ஒரு தடவை மதிச்சு வரமாட்டியா.. வெத்தலை பாக்கு வச்சு காலுல விழுந்து கூப்டா தான் நீ உள்ள வருவியா.." சோலைப் பாண்டியன் இதுவரை பேசிக் கொண்டிருந்த தொனி மாறியது.

இது அனர்த்தத்தின் அறிகுறி என்பது தேவகிக்கு புரிய அடுத்த நொடியே பிள்ளைகளை இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார். வீட்டில் வெளித்தோற்றும் பிரமிக்கும்படி இருந்தது என்றால் வீட்டின் உள் தோற்றம் மூச்சு விடவும் மறக்கும் படி அமைந்திருந்தது..

" பட்டிக்காட்டான் மிட்டாய் கடையை பார்த்த மாதிரி அப்படி என்ன வாய பொளந்து இந்த வீட்டை பார்த்துட்டு இருக்க. ஆமா ஆமா நான் ஒரு மடையன்.. நீ எல்லாம் இந்த மாதிரி வீட்டை கனவுல கூட பார்த்திருக்க மாட்ட.. அதான் அசந்து போய் நிக்கிற பாவம்.. ம்ம் ஒக்காரு".. தேவகிக்கு அவர் ஏன் இத்தனை வருடங்களுக்குப் பிறகு தன்னை வீட்டிற்குள் அனுமதித்தார். அதிலும் அதிசயமாக அமர கூறுகிறார் என்பதைப் பற்றி ஒன்றுமே புரியவில்லை.

"இல்லைங்கய்யா.. இருக்கட்டும் என் பொண்ணு பெரியவ"..

"ஒக்காரு மொத தேவா.. உனக்கு எல்லாத்தையும் ஒரு தடவைக்கு ரெண்டு தடவை புளி போட்டு விளக்கி சொல்லனுமா." அதற்கு மேல் தர்க்கம் செய்ய விரும்பாத தேவகி தரையில் அமர்ந்து விட்டார்.. காயத்ரியும் செல்வியும் அவரின் இரு பக்கம் அமர்ந்து கொண்டார்கள்.

"ம்ம்ம்.. யாரு உன் பொண்ணுங்க தானே இதுங்க.. ரெண்டும் வயசுக்கு வந்துருச்சிங்க போலயே.. இதாரு நடுவளா? இவ சின்னக் குட்டி தானே.. உன் பொண்ணுங்க எல்லோருமே நல்ல அழகு தேவா.. சும்மா தக தகனு தக்காளி ச்சே தங்கம் மாறி" குழந்தைகள் என்றும் பாராமல் அவர் எதைப் பற்றி குறிப்பிடுகிறார் என்பது தேவகிக்கு புரியாமல் இல்லை.

"இந்தா சீனி.."

"ஐயா"என்று பவ்வியமாக சமையல்காரன் வந்து நின்றான்.

"நமக்கு வேண்டப்பட்டவங்க.. அவங்க அம்மாவுக்கு மட்டும் காப்பியும்  பொண்ணுங்க ரெண்டுத்துக்கும் பூஸ்ட் போட்டு கொண்டு வா.. இல்லை இல்லை வேணாம்..சின்னம்மா ஜெர்மனியில் இருந்து ஏதோ சாக்லேட்டு பவுடர் போன வாட்டி வாங்கிட்டு வந்தாளே..அந்த தண்ணிய கரைச்சு எடுத்துட்டு வா.. அப்டியா இவனே கூடவே வெளிநாட்டு பிஸ்கட்டு ரெண்டு கொண்டா போ".. சோலை பாண்டியன் பேச பேச தேவகிக்கு இங்கே அடிவயிற்றில் புளியை கரைத்தது. அவர் மனதுக்கு ஏதோ தவறான விஷயம் நடக்கப்போவது போல தோன்றியது.

"ஐயா காப்பி டீயி எல்லாம் எதுங்குங்கய்யா.. ஐயா வர சொன்னதா காலையிலேயே உங்காளு ஒருத்தன் வந்து சொல்லிட்டு போனப்படி.. என் பெரிய பொண்ண பத்தி"..

"ம்ம்ம்ம் ம்ம்ம்.. காப்பி தண்ணிய குடிச்சிட்டு தெம்பா பேசலாமே தேவகி..அதுவரைக்கும் நீ கொஞ்சம் வா என் கூட".. என்றவர் விழித்துக் கொண்டு நிற்கும் தேவகியை திரும்பி அழுத்தமான ஒரு பார்வையை வீசினார்.. அவரின் வார்த்தைகளை அதற்கு மீற முடியாத தேவகி அவரைப் பின் தொடர்ந்தார்.

"ம்மா எங்கம்மா போற பேசாம இங்கேயே உட்காருமா" செல்விக்கு சோலை பாண்டியனின் பேச்சு சரியாக படவில்லை. தாயை அவர் பின்னால் போகவிடாமல் தடுக்க பார்த்தாள்.

"இந்தா நடுவளே உங்க அம்மாவ ஒன்னும் இங்க யாரும் கடிச்சு தின்னற மாட்டாங்க.சாக்லேட்டு தண்ணீ வரும்.. குடிச்சிட்டு வெளிநாட்டு பிஸ்கட்ட கடிச்சிகோங்க.."அவர் முறைப்பாக சொல்ல

"செல்வி எங்கேயும் போகக்கூடாது ரெண்டு பேரும் அம்மா வரவரைக்கும் இங்கதான் உட்கார்ந்து இருக்கணும். அந்த தண்ணி வந்தாலும் குடிக்கக்கூடாது.. பிஸ்கட்டை சாப்பிட்டுறாதீங்க" பிள்ளைகளை எச்சரிக்கை செய்துவிட்டு சோலை பாண்டியன் பின்னால் சென்றார் தேவகி.

மாடியாறையில் கடைசி வரைக்கும் அழைத்து சென்றவர்  சில காலமாக தேவகியை விட்டு வைத்திருந்ததற்கு மொத்தமாக அவரை எடுத்துக் கொண்டார்.. மறுக்க போன தேவகியை 

"நடுவளுக்கு எத்தன வயசு" என்று அவர் கேட்ட கேள்வியே  தலையில் இறக்க தன் அவல நிலையை எண்ணி நொந்து கொண்டே அவர் ஆசைக்கு அடிபணிந்தார். தன்னுடைய தேவை முடிந்ததும் சோலை பாண்டியன் பெரிய மனிதர் தோரணையில் இறங்கி வர  அவருக்கு பின்னால் சேலை தலைப்பை இழுத்து மூடிக்கொண்டு அழுது வடிந்த முகத்தை அழுத்தமாக துடைத்தபடி வந்தார் தேவகி.

ஆங்காங்கே நின்று வேலை பார்ப்பவர்கள் அவரை கேவலமாக பார்ப்பதை போன்று பிரம்மை தோன்றியது. ஆனால் நிஜமாக அவர்கள் பாவமாக தான் தேவகியை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தேவகியின் முகத்தை பார்த்ததும் செல்விக்கு நடந்ததை யூகிக்க முடிந்தது. அழுகை முட்டிக்கொண்டு வர உதட்டை கடித்து தனக்கு எதுவும் தெரியாததை போல காட்டிக் கொள்ள முயன்றாள். காயத்ரிக்கு நடந்தது எதுவும் புரியவில்லை என்றாலும் அம்மாவை அந்த ஆள் ஏதோ ஒன்றை சொல்லி காயப்படுத்தி இருக்கிறான் என்பது மட்டும் புரிந்தது. அவள் எந்த பயமும் இல்லாமல் சோலை பாண்டியனை முறைத்தாள்.

இரண்டு பிள்ளைகளுக்கும் நடுவே அமர்ந்து கொண்டார் தேவகி. பிள்ளைகள் முகத்தை கூட பார்க்க அவருக்கு தெம்பில்லை. காபியும் சாக்லேட் பானமும்  இன்னொரு ட்ரேயில் வெளிநாட்டு பிஸ்கட்களும் வந்து காத்திருந்தன.

பானத்தை பிள்ளைகள் சீண்டவில்லை என்றதும் சோலை பாண்டியன்" எடுத்து சாப்பிடுங்க ரெண்டு பேரும். நீயும் எடுத்து குடி தேவகி" தேவகிக்கு அதனை கையால் தொடக்கூட மனம் வரவில்லை.

" உன்னோட பெரிய பொண்ணு" சொல்ல வந்ததை அவர் பாதியோடு நிறுத்த அவர் முகத்தை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார் தேவகி. சோலை பாண்டியனின் கண்கள் ஒரு முறை காப்பி கப்பை தொட்டுவிட்டு மீண்டது. அடுத்த கனமே சுட சுட இருந்த காப்பியை சூடு உரைக்காமல் எடுத்து வாயில் சரித்துக் கொண்டார் தேவகி.. பிள்ளைகளின் சாக்லேட் பானத்தையும் அவரே எடுத்துக் குடித்து விட்டார்.. அதில் ஏதாவது கலந்து பிள்ளைகள் மேல் கை வைத்து விட்டால் என்கிற பயம் தான்..

சோலை பாண்டியனின் கண்கள் இடுங்கினாலும்
" உன் பொண்ணு என்கிட்ட தான் இருக்கா.." தேவகிக்கு அப்பொழுதுதான் போன உயிரே திரும்பி வந்தது போல இருந்தது.

" அவளுக்கும் என்னோட ஆளுக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணியிருக்கேன். காலையில ஒம்போது மணிக்கு கோயில்ல கல்யாணம்.. வந்து அரச்சதைய போட்டு ஆசீர்வாதம் பண்ணு. நீ வந்தா தான் கல்யாணம் பண்ணிப்பேனு உன் மக அடம்பிடிக்கிறா.. மணியாச்சி கோயிலுக்கு போகலாமா" அவர் பாட்டில் சொல்லிக் கொண்டு எழுந்து நிற்க  அவர் கூறியதைக் கேட்டு மற்ற மூவருக்கும் அதிர்ச்சியை அடக்கவே முடியவில்லை.

வேகமாக எழுந்து நின்ற தேவகி "ஐயா என்னங்கய்யா என் பொண்ணுக்கு கல்யாணமா?" மகளை ஒரு வயதான கிழவனுக்கு கட்டி வைத்து விடுவானோ என்கின்ற பயத்தில் தேவகிக்கு நெஞ்சை அடைத்து விடும்படி இருந்தது.

கேள்விக்கு பதிலே சொல்லாமல் வேகமாக சென்ற சோலை பாண்டியன் காரில் ஏறிவிட்டார். தேவகி இன்னும் நின்ற இடத்திலேயே அதிர்ந்து நின்று கொண்டிருக்க வெளியே ஹார்ன் சத்தம் கேட்டது.

"ம்மா அந்த ஆளு தான் ஹார்ன் அடிக்கிறான்.. அக்காவுக்கு கல்யாணம் அது இது என்னம்மா என்னென்னமோ சொல்றான்.. இங்கேயே நின்னுட்டு இருந்தா கண்டிப்பா எதுவும் நடக்க போறது இல்ல.. சீக்கிரம் வாம்மா அவன் நம்மள தான் கூப்பிடுறான். அக்காவுக்கு என்ன ஆச்சோ ஏதாச்சோ தெரியல." அம்மாவையும் தங்கையையும் இழுத்துக் கொண்டு வாசலுக்கு விரைந்தாள்.. சோலைப் பாண்டியன் டிரைவருக்கு பக்கத்து சீட்டில் அமர்ந்து இருக்க, காரின் பின் இருக்கையை கண்களால் காட்டினார். மூவரும் பின்னால் ஏறிக்கொள்ள கார் பறந்தது.

ஒரு கோவிலின் முன்பு கார் நிற்க சோலை பாண்டியனுக்கு முன்பே காரை விட்டு இறங்கிய மற்ற மூவரும் வேகமாக கோவிலுக்குள் ஓடினார்கள். அங்கே ஓம குண்டத்தின் அருகே பிடித்து வைத்த பிள்ளையார் போல அலங்காரம் செய்யப்பட்ட பூங்காவனம்  அமர வைக்கப்பட்டிருந்தாள். அவள் அருகே அமர்ந்து  ஐயர் கூறிய மந்திரங்களை வேண்டா வெறுப்பாய் கூறிக் கொண்டிருந்தான் மின்னல். இதனை கண்ட தேவகிக்கு நெஞ்சை பிடித்துக் கொள்வதை தவிர வேறு வழி இருக்கவில்லை.

தொடரும்


தாகம் 10





பூங்கா திரும்பவும் சோலை பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டாள்.. இங்கிருந்து செல்லும்போதும் அவளின் அனுமதி கேட்கவில்லை. மீண்டும் சோலை பாண்டியன் வீட்டிற்கு அவளைக் கொண்டு வந்து விடும்போதும் அவளின் கதறலை கேட்க அங்கே நாதியில்லை.. தன்னை காணாமல் தாயும் தங்கைகளும் தவிர்த்துக் கொண்டிருப்பார்களே என்கின்ற எண்ணத்தை தவிர சோலை பாண்டியனை பற்றி சுத்தமாக மறந்து போயிருந்தாள் பூங்காவனம்..

மின்னல் அவளை காரில் ஏற்றி அழைத்து செல்லும்போது கூட தன்னுடைய வீட்டில் இறக்கி விடப் போகிறான் என்பது மட்டும்தான் அவள் சிந்தை முழுவதும் நிறைந்திருந்தது. அம்மா கேட்கும் கேள்விக்கு என்ன பதில் கூறுவது? தங்கைகள் முகத்தை எப்படி ஏறிட்டு பார்ப்பது என்பது மட்டும்தான் அவளின் யோசனையாக இருந்தது.

வண்டி அவள் வீட்டு பக்கம் செல்லாமல் வேறு வழியில் செல்லவும் சந்தேகத்தோடு மின்னலை ஏறிட்டாள்..

"நா.. நாம இப்ப எங்க போறோம்" வார்த்தைகள் அந்த கரடு முரடான முகத்தை பார்த்ததும் வெளிவராமல் சண்டித்தனம் செய்தன.

"ம்ம்ம்.. பார்ட்டி ஆளுங்க நாலு பேர் வந்திருக்கானுங்க.. கைப்படாத ரோசா ஒன்னு வேணும்னு கேட்டானுங்க. சட்டுன்னு நியாபகத்துக்கு நீ தான் வந்த. அதான் உன்ன அங்க இறக்கி விட போயிட்டு இருக்கேன்" சத்தியமாக இம்மாதிரியான பதிலை பூங்காவனம் எதிர்பார்க்கவில்லை. சப்த நாடியும் அவளுக்கு சடுதியில் ஒடுங்கி விட்டது.. நாக்கு மேல் எண்ணத்தில் ஒட்டிக்கொள்ள கஷ்டப்பட்டு எச்சிலில் நாவை நனைத்து

"என்ன.. எங்க.. நீ.. சொல்றது உண்மையா.. இல்ல தானே".. தடுமாற்றத்தோடு அவன் முன் ஆள்காட்டி விரலை நீட்டி கேள்வி கேட்டாள் பூங்காவனம். அவளையும் நடுங்கும் அவளது விரலையும் கண்டவன்  கண்டன பார்வை ஒன்றை அவளை நோக்கி வீசினான்.

அவன் பார்வையிலேயே வயிற்றுக்குள் குளிர் பரவ நான் கேட்ட கேள்வியை நன்றாக யோசித்துப் பார்த்தாள்.. பயத்தில் அவனை ஒருமையில் அழைத்தது புத்தியில் உரைத்தது..

"ஸாரி நான் ஏதோ பதட்டத்துல தெரியாம.. சார் உண்மைய சொல்லுங்க நீங்க சும்மா தானே சொல்றீங்க.. நீங்க விளையாடுறீங்க தானே" அவளுக்கு கண்களே கலங்கிவிட்டது.

" நீ இப்ப உம் சொல்லு விளையாடலாம்.."அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பயம் ஒரு பக்கம் உயிர் போய் உயிர் வந்தது.

"சார்".. அவ்வளவுதான் உடைந்து அழுதே விட்டாள் பூங்காவனம்.. திடீரென்று அவள் அழுகவும் காரை ஒரு ஓரமாக நிறுத்தினான் மின்னல்.. முதுகு குலுங்க ஆளும் அவளை அமைதியாக பார்த்தானே தவிர ஒரு  வார்த்தை பேசவில்லை.

"ப்ளீஸ் சார் என்ன விட்ருங்க.. என்னோட அம்மாவும் தங்கச்சிங்களும் என்ன காணாம ரொம்ப பயந்து போய்ருப்பாங்க. இது குடும்ப கஷ்டம் வேற வழியே இல்லாம தான் சோலை பாண்டியன சகிச்சுக்கலாம்னு இந்த சாக்கடைக்குள்ள விழுந்துட்டேன். கடவுள் சித்தமா இல்லன்னா என்னோட நல்ல நேரமா தெரியல அந்த ஒரு நாள் அவன் கிட்ட இருந்து தப்பிச்சுட்டேன். எனக்கு தெரியும் அவன் கண்டிப்பா என்ன விட மாட்டான். ஆனா இந்த ரெண்டு மூணு நாள் தள்ளி போட்டதே எனக்கு பெரிய சந்தோஷம்.

இப்ப நீங்க இன்னும் நாலு பேருக்கு என்ன கூட்டி கொடுக்க போறதா சொல்றீங்க. மக்களை காப்பாற்ற பதவியில இருக்குற நீங்களே இப்படி எங்க அடிமடில கை வச்சா நாங்க எங்க போறது? இதுக்காக தான் உங்களை நம்பி நாங்க ஓட்டு போட்டோம்மா? ஓட்டு வாங்க வரும் போது மட்டும் வாய் கிழிய பெண்கள் நம் நாட்டின் கண்கள்னு பேசுறீங்க. ஆனா உங்கள மாதிரி ஆளுங்களை சோலை பாண்டியன் மாதிரி கிழட்டு கழுகுகளுக்கு இப்படி வேலை செய்றது  தப்பா தெரியலையா உங்களுக்கு.. நீங்களும் ஒரு அம்மாவுக்கு பொறந்தவர்தானே.. ஒரு பொண்ணோட கஷ்டம் உங்களுக்கு தெரியலையே..

தயவு செஞ்சு என்னை இப்படியே விட்டுருங்க. நான் செத்துப் போயிட்டேன்னு சோலை பாண்டியன் கிட்ட சொன்னா கூட பரவாயில்ல. ராத்திரியோடு ராத்திரியா குடும்பத்தை கூட்டிட்டு இந்த ஊரை விட்டு ஓடிடுறேன். ப்ளீஸ் சார் என்ன விட்டுருங்க " அவள் அழுகையை பார்த்தால் பேய்க்கு கூட மனமிரங்கும். ஆனால் அங்கே அமர்ந்திருப்பவன் பேயை விட மோசமானவன் என்பதை யார் அந்த பேதைக்கு புரிய வைப்பது?

அமைதியாக காரை கிளப்பினான் மின்னல். லாக் செய்யப்பட்ட காரை திறக்க கூட வழி இல்லாமல் பயத்தின் உச்சியில் விரைந்து போய் அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.. ஆனால் சாலையில் அவளது ஒரு கண்ணை பதித்திருந்தாள். வண்டி செல்ல செல்ல சோலை பாண்டியன் வீட்டிற்கு என புரிய தொடங்கியது.

நெஞ்சே கனத்துப் போனது.. மீண்டும் அந்த கயவனிடமா? அதை கயவனின் கை கூலியிடம் சொன்னால்   வண்டியை திருப்பி விடவா போகிறான்? சோலை பாண்டியன் முகத்தில் காரி உமிழ்ந்ததை நினைத்து பயந்து கொண்டே சிலையாக காரில் அமர்ந்திருந்தாள் பூங்காவனம்.

அவள் நினைத்ததை போலவே வண்டி சோலைப் பாண்டியன் வீட்டின் முன் நின்றது.. டிரைவர் சீட்டில் இருந்து இறங்கி வந்து அவள் பக்க கதவின் வெளியே நின்றான்  மின்னல்.. கதவைத் தட்டவோ அவளை அழைக்கவோ இல்லை அவன். யாரும் அந்த நேரம் பார்த்து சரியாக அவனுக்கு அழைக்க, போனில் சத்தமாக பேசிக் கொண்டிருந்தான். எவ்வளவு நேரம் தான் காரில் அமர்ந்து நேரத்தை கடத்த முடியும்?

மனதை தயார் நிலைக்கு கொண்டு வந்த பூங்காவனம்  கதவை திறந்து கீழே இறங்கினாள். அவளை ஒரு பார்வை பார்த்தவன் பேசிக் கொண்டே வீட்டிற்குள் சென்றான். வேறு வழி இல்லாமல் அவனை பின் தொடர்ந்தாள் பூங்காவனம்..

சோலை பாண்டியன் நடு நாயகமாக சோபாவில் அமர்ந்து  பழைய பாடல்களில் தன்னை தொலைத்து கொண்டிருந்தார்.

"பூஜைக்கு வந்த மலரே வா
பூமிக்கு வந்த நிலவே வா
பெண்ணென்று எண்ணி பேசாமல் வந்த பொன் வண்ண மேனிச் சிலையே வா"

அவள் வருகை உணர்ந்துதான் இந்த பாடலை போட்டு இருக்கிறாரோ என்கின்ற சந்தேகம் பூங்காவனத்திற்கு தோன்றாமல் இல்லை.. சோலை பாண்டியனின் முன் சென்றதும் மின்னல் அலைபேசியை அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.

"வா மின்னலு" அவனை வரவேற்றாலும் சோலை பாண்டியனின் கண்கள் பூங்காவனத்தில் மேனியை சுற்றி வட்டமிட்டது.. அந்த கிழட்டு கழுகின் பார்வையில் இருந்து தப்பிக்க முடியாமல்  தரையைப் பார்த்த வண்ணம் சங்கோஜமாக நின்று கொண்டிருந்தாள் பூங்காவனம்..

" பெத்த தாயை பார்த்து காரி துப்ப வக்கு இல்லாதவளாம் என்ன பாத்து துப்பிட்டு போனா.. பெத்தவன் யாருன்னே தெரியாது. அவன் இடத்தில் இருந்து சோறு போட்டு வளர்த்து விட்டதுக்கு வளத்த கெடா மார்ல பாயுது.."குத்தல் வார்த்தைகள் என்ன அவளுக்கு புதிதா? உதட்டை கடித்துக் கொண்டு அமைதியாக நின்றாள்.

"சொல்லிட்டியா" மின்னலை பார்த்து வினவினார் சோலை பாண்டியன்.

" இல்லைய்யா நீங்களே சொல்லுங்க.." மின்னலை ஒரு மிதப்பான பார்வை பார்த்தவர்  தொண்டையை செறுமி கொண்டு

"நாதியத்தவளுக்கு அதிர்ஷ்டம் அடிச்ச கதையா உனக்கும் அதிஷ்டம் தேடி வந்துருக்கு..உங்காத்தா மாறி ஒருத்தன் மாத்தி ஒருத்தனு பொழைப்பு நடத்தாம ஒருத்தன் கூடவே உருப்படியா இருந்து பொழைக்க பாரு." சோலை பாண்டியன் வாய்க்கு வந்தபடி சொல்லிக் கொண்டே போக அவர் கூறுவதின் உட்பொருள் தெரியாமல் சிலையாக நின்றாள் பூங்காவனம்.

"நான் என்ன சொல்ல வரேன்னு உனக்கு இன்னும் புரிஞ்சிருக்காது..உனக்கு கல்யாணம்.." அந்த வார்த்தையை கேட்டதும் அதிர்ந்து அவரை ஏறிட்டு பார்த்தாள் பூங்காவனம்.

ஒரு சில நொடி அமைதியாக கழிய  வேண்டுமென்றே அவளை தவிப்பில் ஆழ்த்திய சோலை பாண்டியன் " உனக்கும் மின்னலுக்கும்.. "என்றார்.. மீண்டும் உடல் குலுங்க அதிர்ந்தவள் மின்னலை திரும்பிப் பார்க்க அவன் யாருக்கு வந்த விருந்தோ என வேறு பக்கம் பார்த்துக் கொண்டிருந்தான்.

" மின்னல் ஒன்னும் சாதாரண ஆள் இல்லை. உன் தகுதிக்கும் அவன் தகுதிக்கும் ஏணி வச்சா கூட எட்டாது. ஏதோ தெரிஞ்ச பொண்ணு வாழ்க்கை நல்லா இருக்கட்டும்னு  இந்த முடிவை எடுத்து இருக்கேன். " அவர் முடிவைப் பற்றி கூறினாரே அவளின் முடிவைப் பற்றி கேட்கவில்லை..

ஆக அவளுக்கு இருந்த ஒரே நிம்மதி சோலை பாண்டியனுக்கு ஆசை நாயகியாக இருக்க தேவையில்லை. ஆனால் இதற்கு மேல் தான் அவளின் வாழ்வே மாறப் போவதை அறியவில்லை அவள்..

தொடரும்


தாகம் 9





ஜாதக கட்டத்தையும் எதிரே அமர்ந்திருக்கும் சோலை பாண்டியனின் முகத்தையும் மாறி மாறி பார்த்தார் ஜோதிடர்..

" கடவுளே ஏன் என்னை இப்படி சோதிக்கிற? இந்த பைத்தியக்காரன் கிட்ட நான் என்னன்னு சொல்றது? கடன்காரன் நல்லதா சொன்னா  நானூறு கேள்வி கேட்பான். கெட்டதா சொன்னா  அருவாளை எடுத்து என் கழுத்துல வைப்பான். இப்ப இந்த கோட்டானுக்கு நான் என்ன பதில் சொல்றது? " தலையை சொரிந்து கொண்டார் ஜோதிடர்.

" என்ன ஜோசியரே ரொம்ப நேரமா என்னையும் கட்டத்தையும் மாத்தி மாத்தி பாத்துட்டு இருக்கீங்க.. கட்டம் என்ன சொல்லுது? "

"ம்ம்ம் உனக்கு கட்டம் சரியில்லைன்னு சொல்லுது.." மனதிற்குள் நினைத்தார் ஜோதிடர்.

" என்ன ஜோசியரே நான் கேட்டுக்கிட்டே இருக்கேன் நீங்க பதில் சொல்லாம என் மூஞ்சியே பாத்துட்டு இருக்கீங்க"

" அது ஒன்னும் இல்ல சார்வாள்.. நான் ஏற்கனவே உங்ககிட்ட இத பத்தி பேசி இருக்கேன்.  ஆறு மாசத்துக்கு முன்னாடி உங்களுக்கு கட்டம் சரியில்லாம போகப்போகுதுன்னு சொன்னேன் ஞாபகம் இருக்கா.."

"ம்ம்ம்.." கனமான அமைதி சோலை பாண்டியனிடமிருந்து.

" அதாவது என்னன்னா..  நீங்க உடனடியா ஒரு பையன தத்தெடுக்கணும். அந்தப் பையனுக்கு  கன்னிப் பொண்ணு ஒருத்தியை  கட்டி வைக்கணும்.. அதுவும் அந்த பையன் தான் உங்களோட அடுத்த வாரிசுன்னு நீங்க எல்லார்கிட்டயும் பிரகடனம் படுத்தனும்.." ஜோதிடர் சொல்லியதை கேட்டு சோலை பாண்டியன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

" என்ன ஜோசியரே பைத்தியக்காரத்தனமா சொல்லிட்டு இருக்கீங்க? வயசானாலே கண்டதையும் உளற சொல்லுதா? யாரு கிட்ட பேசிட்டு இருக்கீங்கன்னு தெரியுது தானே?" சோலை பாண்டியன் போட்ட சத்தத்தில் ஜோதிடரின் ஈரக் குலை நடுங்கியது.

முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்துக் கொண்டே" சார்வாள் என்னோட ஜோசியம் என்னிக்கும் பொய்க்காது. அதனால தானே இத்தனை வருஷம் என்ன உங்களோட குடும்ப ஜோசியரா வச்சிருக்கீங்க.. இதுக்கு முன்னாடி நான் கணிச்சு கொடுத்த ஏதாவது ஒன்னு மிஸ்ஸாயிருக்கா. இது மட்டும் எப்படி தப்பா போகணும்னு நீங்க சொல்லலாம்..

என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லன்னா உங்க ஜாதகத்தை கொண்டு போய் எந்த கைதேர்ந்த  ஜோசியக்காரன் கிட்ட வேணாலும் கொடுத்துக்கோங்க.. எப்பேர்பட்ட கொம்பன் இந்த ஜாதகத்தை பார்த்தாலும் நான் சொன்னது தான் திரும்ப சொல்லுவாங்க.." சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஜோதிடர் வாதிட்டார்.

சோலைப் பாண்டியன் முகத்தில் யோசனை படர்ந்தது. ஜோதிடர் கூறுவது உண்மைதான். கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாக சோலை பாண்டியனின் குடும்ப ஜோதிடர் அவர்தான். அவர் கணித்துக் கொடுத்த எதுவுமே இன்றுவரை சோடை போனதில்லை. சோலைப் பாண்டியனுக்கு திருமணம் ஆவதற்கு முன்பாகவே  உனக்கு ஆண் வாரிசே கிடையாது மூன்றும் பெண்தான் என்று கனித்துக் கூறியிருந்தார்..

அதேபோல சோலை பாண்டியனுக்கு பிறந்தது மூன்றுமே பெண் பிள்ளைகள். அதன் பிறகு அவர் தொடுப்பாக எத்தனை பேரை வைத்திருந்தாலும் அவர்களுக்கு பிள்ளை பாக்கியம் இல்லை.. சோலை பாண்டியனின் மனைவியின்  மரணம் வரை சரியாக கனித்துக் கொடுத்திருப்பவர் எப்படி இந்த விஷயத்தில் பொய் கூறுவார்..

இருந்தாலும் ஜோதிடர் கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் திண்டாடினார் சோலை பாண்டியன்.. "ஹான்.. ம்ம்..  இதுக்கு வேற வழியே இல்லையா" தொண்டையைக் கனைத்துக் கொண்டே கேட்டார்.

" இல்ல சார்வாள். உங்க ஜாதகத்துல கட்டம் எல்லாம் ரொம்ப மோசமா இருக்கு. உடனே நீங்க ஒரு பையன தத்தெடுத்து உங்களோட அடுத்த வாரிசா அவன பிரகடனப்படுத்தியே ஆகணும். அப்பதான் நீங்க செஞ்ச பாவத்துல பாதி பங்கு அந்த பையன் தலையில விழும்.. இப்பவே உங்க பொண்ணுங்க வாழ்க்கையில பிரச்சனைகள் ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.. " ஜோதிடர் கூறியது உண்மைதான்.

சோலை பாண்டியனின் மூத்த மகள்  ஜெர்மனியில் இருக்கிறாள். அவளது கணவன் இதய அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவன்.. உடன் பணிபுரியும் தாதியோடு அவன் நெருங்கி பழகுவதாக இரண்டு வாரங்களுக்கு முன்பு தான்  தனலட்சுமி தந்தைக்கு அழைத்து கதறிருந்தாள்..

மகளுக்கு ஆறுதல் கூறிய சோலை பாண்டியன், அங்கே தனக்குத் தெரிந்தவர்களை வைத்து  தாதியை சத்தம் இல்லாமல் தூக்கிருந்தார்.. அப்பாடா என்று பெருமூச்சு விடுவதற்குள் கனடாவில் இருக்கும் இரண்டாவது மகள் சந்தான லட்சுமி கடந்த வாரம் அழைத்து அவளின் மகன் படியில் தற்செயலாக விழுந்து முன் பற்கள் இரண்டு உடைந்து விட்டதாக தந்தையிடம் அழுது புலம்பினாள்..

அவளுக்கு ஆறுதல் சொல்லி ஓய்ந்து அமர்ந்தவரிடம் சிங்கப்பூரில் இருக்கும்  மூன்றாவது மகள் மகாலட்சுமி வயிற்றில் கட்டி வந்து அறுவை சிகிச்சை செய்வதற்காக ஹாஸ்பிடல் அட்மிட் ஆயிருப்பதாக கூறியிருந்தாள்.. இன்னும் இரண்டு நாட்களில் மகளை பார்ப்பதற்காக சோலை பாண்டியன் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார்.

ஜோதிடர் கூறியது போல மகள்கள் வாழ்வில் பிரச்சனை ஆரம்பித்து விட்டது. பின்னே கொஞ்சநஞ்ச பாவங்களையா சோலை பாண்டியன் செய்திருக்கிறார்.. சோலை பாண்டியன் என்றாலே சட்டசபை வரை அந்தப் பெயர் ஒரு ஆட்டு ஆட்டுவிக்கும். அப்படிப்பட்டவரின் வீட்டிற்குள் புகுந்தே அவர் ஆசையாக கொண்டு வந்திருந்த பெண்ணை  அபகரித்து செல்வதென்றால் அவருக்கு எவ்வளவு பெரிய அவமானம்..

அதிலும் அந்த பூங்காவனம் பெரிய உத்தமிக்கு பிறந்ததைப் போல அவர் முகத்தில் காரி உமிழாத குறையாக தரையில் துப்பினாளே அதை அவரால் இந்த ஜென்மத்தில் மறக்க முடியுமா? இந்த விஷயம் மட்டும் வெளியே தெரிந்தால் அவர் நிலை என்ன? நண்டு சிண்டெல்லாம் அவர் தலையில் ஏறி மிளகாய் அரைத்து விடாதா?

தீராத யோசனையில் அமர்ந்திருந்தவரை கலக்கமாக ஏறிட்டார் ஜோதிடர்.. " கிரகம் புடிச்சவன் ஒரு நிலைக்கு வர மாட்டானே சட்டுனு.. ஏதாச்சும் சொன்னா ஆ ஊனு உடனே விட்டத்தை பார்த்துருவான். அங்கு என்னமோ செத்துப்போன அவனோட ஆயா உட்கார்ந்து இருக்கிற மாதிரி.. மனுசனுக்கு வேற வேலை வெட்டி இல்லன்னு நினைச்சிட்டானா.. ".. மேலும் ஜோதிடரை பத்து நிமிடங்களுக்கு சோதித்த சோலை பாண்டியன் 

"சரிங்க ஜோசியரே,இப்ப எனக்கு மகனா தத்தெடுக்கிற வயசுல எவன போய் நான் தேடுறது? எப்படா சான்ஸு கிடைக்கும் என்ன போட்டுட்டு இந்த நாற்காலியில உட்காரலாம்னு தான் எல்லா பயலுங்களும் சுத்திட்டு இருக்காங்க.. இந்த லட்சணத்துல எனக்கான வாரிச நான் எங்குட்டு போய் தேடுறது?"

" நீங்க அவன தேடி போக வேணாம் சார் வாள்.. உங்களுக்கு வாரிசா வரப்போறவன் அவனே உங்க கண்ணு முன்னாடி வந்து நிற்பான்.. உங்களுக்காக உயிரையும் கொடுக்க துணிஞ்சவனா இருப்பான். ஒரு கட்டத்துல பார்த்தா உங்களுக்கும் அவனுக்கும் விட்ட குறைனு ஏதோ ஒன்னு இருக்கு. யார் கண்டா போன ஜென்மத்துல உங்களுக்கு மகனா கூட பொறந்திருக்கலாம்.."

" அட நீங்க வேற வெந்த புண்ணுல வேள பாச்சிக்கிட்டு.. அப்படி ஒருத்தனை நான் எங்கன்னு போய் தேடுறது. அவனைத் தேடி கண்டுபிடிச்சு வாரிசு என்று ஊருக்கே தமக்கடிச்சு, அவனுக்கு ஒரு கன்னி பொண்ண பாத்து கட்டி வைக்குறதுக்குள்ள நான் கால நீட்டிருவேன் போல.. இப்ப கன்னி பொண்ணு தேடுறதுதானே பெரும் பிரச்சனையா இருக்கு.".. மோவாயை தடவிக் கொண்டார் சோலை பாண்டியன்.

" உன்ன மாதிரி கிழட்டு பக்கி எல்லாம் எங்கடா கன்னி பொண்ணுங்கள உலாவ விடுறீங்க.. அப்பா அப்பா வாங்குன வட்டிக்கு அசலா அந்த பொண்ணுங்க கர்ப்பையே விலைக்கு வாங்குற கூட்டம் தானே நீங்க.. " முகத்தை பாவமாக வைத்துக் கொண்டார் ஜோதிடர்.

அந்த நேரம் பார்த்து"ஐயா" பணிவான வணக்கத்தோடு வந்து நின்றான் மின்னல் வீர பாண்டியன்.. சோலை பாண்டியன் அவனை நிமிர்ந்து பார்ப்பதற்குள் மின்னலை பார்த்த ஜோதிடர்

"தோ நான் சொல்லி வாய மூடுல அதுக்குள்ள பகவானே உங்களுக்கு வாரிசா ஒருத்தன அனுப்பி வச்சிட்டான்.." ஜோதிடர் கூறுவதை மின்னல் புரியாமல் பார்க்க சோலை பாண்டியனின் மூளை வேகமாக வேலை செய்தது.

கிட்டத்தட்ட பல வருட காலமாக மின்னல் சோலை பாண்டியனிடம் இருக்கிறான். பல தடவை சோலை பாண்டியனின் உயிரைக் காப்பாற்றியதும் அவனே. இப்பொழுது சோலை பாண்டியனின் மானத்தை காப்பாற்றியதும் அவனே.. சோலைப் பாண்டியன் பச்சையாக மனிதக் கறியை சாப்பிடு என்று கூறினாலும் கூட முகம் சுளிக்காமல் சாப்பிடும் மன தைரியம் கொண்டவன் மின்னல்.

வாரிசாக மின்னலை அறிவித்தால் அதில் ஏதாவது சட்ட சிக்கல் இருக்கிறதா என்பதை பற்றி அதிவேகமாக கணக்கிட்டது சோலை பாண்டியனின் மூளை.

" ஆயி அப்பன் இல்லாதவன். கூட பொறந்ததுங்கன்னு ஒன்னும் கிடையாது. இன்ன வரைக்கும் பொண்ணுங்க விஷயத்துல அவன பத்தி அரசல் புருசலா கேள்விப்பட்டாலும் கண்ணால எதையும் கண்டது கிடையாது.. காட்டுன இடத்துல பாய்வான். கை நீட்டின இடத்துல  கத்திய வீசுவான்.. நமக்கு விசுவாசமா இருக்கிற மாதிரி ஆயிரம் பேர் தெரிஞ்சாலும் உண்மை பேர் இருந்தாலும் உண்மையான விசுவாசமா இருக்காங்களான்னு யாரு கண்டா.. இவனா கேட்க நாதி கிடையாது..

நாள பின்ன ஏதாவது பிரச்சனை வந்தாலும் சத்தம் இல்லாம இவனோட ஜோலியை முடிச்சிட வேண்டியதுதான்." பலத்தையும் எண்ணி கணக்கிட்ட சோலை பாண்டியன் 

" ஜோசியரே,  இவன் சரிப்பட்டு வருவானா" மின்னலின் மீது பார்வையை பதித்த படி கேட்டார்.

" இவனத் தவிர வேற எவனும் சரிப்பட்டு வர மாட்டான்.. அசப்புல இவன பார்த்தா சின்னதுல உங்கள பாக்குற மாதிரியே இருக்கு. மத்தபடி நீங்களே நல்லா முடிவெடுத்துக்கோங்க. நாள பின்ன ஏதாவது ஒன்னுனா என் தலையை உருட்டக்கூடாது பாருங்க. " ஜோதிடர் தன் உயிருக்கு முன் வாக்குறுதி வாங்கிக் கொண்டார்.

"ஐயா" அங்கே நடப்பது எதுவும் புரியாமல் சோலை பாண்டியனை விளித்தான் மின்னல்.

"மின்னலு.. அந்த பொண்ணு எப்படி இருக்கா.. பத்திரமா நம்மிடத்தில அவள வச்சிரு.."

" அதெல்லாம் அந்த பொண்ணு பத்திரமா தான்யா இருக்கா. நீங்க அத பத்தி கவலைப்பட வேணாம்."

" சரிடா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லணும். "

"என்னங்கய்யா'

"நான் உன்ன என்னோட அரசியல் வாரிசா தத்தெடுக்கலாம்னு இருக்கேன். என் குடும்பத்துக்கு வாரிசாகவும்.."

"ஐயா"

" டேய் நான் என்ன சொன்னாலும் கேப்பல.. நான் பேசி முடிக்கிற வரைக்கும் மூச்சு விடக்கூடாது.. நான் உன்னை என்னோட வாரிசா தத்தெடுக்கலாம்னு முடிவு பண்ணிட்டேன்.. நீ என்ன சொல்ற" மின்னலுக்கு யோசிக்கக்கூட அவகாசம் இல்லாமல் அவசரப்படுத்தினார் சோலை பாண்டியன்.

அவர் மீது உண்மையான விசுவாசம் வைத்திருந்த மின்னல் ஒரு நிமிடம் கூட எடுக்கவில்லை யோசிப்பதற்கு. " என்னய்யா என்கிட்ட போய் எல்லாம் அசிங்கமா கேட்டுட்டு இருக்கீங்க.. நீங்க என்ன சொன்னாலும் அது சரியா தாங்க இருக்கும்" மின்னலின் வார்த்தைகளைக் கேட்டதும் சோலை பாண்டியனின் முகத்தில் இருமாறுப்பு தெரித்தது.

தொடரும்


தாகமடி நானுனக்கு தீர்த்தமடி நீயெனுக்கு 8


புலர்ந்தும் புலராத அந்த காலை வேளையில்  சோலைப் பாண்டியனின் வீட்டு வாசலில் அவரை பார்ப்பதற்காக தவம் கிடந்தார் தேவகி. மகளைக் காணாமல் பெற்ற வயிறு பற்றி எரிந்தது. பூங்காவனத்திற்கு ஏதோ தீங்கு நடப்பது போல இரவு நெஞ்சமெல்லாம் காந்தியது. அதனாலேயே அதிகாலையே வந்து விட்டிருந்தார் தேவகி. தப்பி தவறி கூட அவரின் இரு மகள்களையும் இந்த பக்கம் அழைத்து வரவில்லை.

எவ்வளவு அதிகாலை வந்திருந்தாலும் வீட்டிற்குள் செல்ல அவருக்கு அனுமதி கிடையாது. ஒரு காலத்தில் சோலை பாண்டியனின் ஆசை நாயகியாக இருந்த வேளையிலுமே தேவகிக்கு இதே நிலைமைதான்.

நாய் பக்கத்தில் அமர்ந்து அவருக்காக காத்திருக்க வேண்டும்.. பழைய நினைவுகள் தேவகியின் மனதை போட்டு பிழிந்து எடுத்தன.

பல தடவை இதே போல் இரவு பகல் பாராமல் அவர் வீட்டு வாசலில் அவருக்காக காத்திருக்கிறார். அதிலும் ஒரு தடவை  இரவிலிருந்து அவர் வீட்டு வாசலில் சோலை பாண்டியனை பார்க்க காத்திருந்தும் கதவை திறக்கவில்லை அவர். விடிந்து பூஜையெல்லாம் முடித்து சாப்பிட்டு சாவகாசமாக வெளியே வந்தவர் அப்பொழுதும் கூட அவரைப் பார்த்ததும் அடக்க ஒடக்கமாக எழுந்து நின்று  கைகட்டியபடி பரிதவிப்பாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்த தேவகியை சற்றும் கண்டுகொள்ளவில்லை.

விலை உயர்ந்த வெளிநாட்டு பிஸ்கட்டை எடுத்து நாய்க்கு போட்டார் சாப்பிட..  நாய் பிஸ்கட்டை சாப்பிட அதனை ஒருமுறை திரும்பிப் பார்த்த தேவகி பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு 

"ஐயா"என்க

அப்பொழுதுதான் அவரைப் பார்த்தது போல அவரின் பக்கம் பார்வையை வீசிய சோலை பாண்டியன் " எதுக்கு பிச்சைக்காரி மாதிரி வீட்டு வாசப்படி எல்லாம் காலங் காத்தாலே வந்து உட்கார்ந்திருக்க. எத்தனை வாட்டி சொன்னாலும் உன் மரமண்டைக்கு ஏறவே ஏறாதா.. முக்கியமான சோலியா வெளிய போறேன். உன் மூஞ்சில முழிச்சிட்டு போனா காரியம் விளங்குமா  செத்த மூதி" எரிந்து விழுந்தார் சோலை பாண்டியன்.

"ஐயா சின்னத்துக்கு திடீர்னு என்ன ஆச்சுன்னு தெரியலய்யா. உடம்பு நெருப்பா கொதிக்குது. தூக்கி தூக்கி போடுது. மூணு பொட்ட பிள்ளைகளை வச்சுக்கிட்டு ராவு நேரத்தில நான் யாருகிட்ட போய் நிற்கிறது. எனக்கு ஐயாவை தவிர வேற நாதி இல்லையே.."

" மகளுக்கு விட்டுவிட்டு இழுத்துச்சுன்னா தூக்கிட்டு தர்மாஸ்பத்திரிக்கு ஓட வேண்டியதுதானே.. அத விட்டுபுட்டு இங்கு எதுக்கு வந்து வெண்ண பேச்சு பேசிட்டு இருக்க."

" இல்லைய்யா கொஞ்சம் பணம்"தடுமாறினார் தேவகி.

" என்னது பணமா ஏன்டி பணம் என்ன மரத்துல காய்க்குதுன்னு நினைச்சுட்டு இருக்கியா.. நீ கேட்கிறப்பெல்லாம் நூறு ஐநூறுனு அள்ளி கொடுக்க  இங்க என்ன உங்க அப்பனா பணம் காய்ச்சி மரம் நட்டு வச்சிருக்கான்.."

"அது இல்லங்கய்யா சின்னவளுக்கு கவர்மெண்ட் ஆஸ்பத்திரி மருந்து ஒத்துக்க மாட்டுதுய்யா."

"ஓ பிச்சைக்காரிக்கு பிரைவேட் ஆஸ்பத்திரி கேக்குதோ.. என்னமோ உங்க ஆத்தா வயித்துல இருந்து பிறக்கும்போது பிரைவேட் ஆஸ்பத்திரியில  சொகுசா பொறந்த மாதிரி நினைப்பு. எந்த குப்ப மேட்டுல ஒதுங்கி பிள்ளைய பெத்தியோ. கண்ட நாய்க்கும் வெட்டிக்கிட்டு இழுக்கிறதுக்கு என் காச தண்டம் அழுகணுமா." தேவகிக்கு ஒரு பக்கம் அவமானமும் இன்னொரு பக்கம் கையாலாகாத தனம் அவர் இதயத்தை கொன்று கூறு போட்டது.

"ஐயா.. உங்களைத் தவிர எனக்கு வேற யாருய்யா இருக்கா.." குரல் உடைந்து போனது. கண்ணீர் விட்டால் அதற்கு இன்னும் இரண்டு துப்பு துப்புவார்.

"ச்சை காலையிலேயே ஒப்பாரி.. கலங்காத்தால எந்திரிச்சு வேலை வெட்டிக்கு போலாம்னு ஒரு மனுஷன் வாசப்படி கால வச்சா இப்படியா தரித்திரம் புடிச்ச மாதிரி நின்னு பிச்சை கேட்கிறது.. இந்த நாளு விளங்குமா.. ரெண்டு நாளைக்கு முன்னாடி தானே வந்து உன்கிட்ட காசு கொடுத்துட்டு போனேன்.." அவர் கொடுத்த காசு இரண்டு வேளை உணவுக்கு சரியாக இருந்தது.

"ஐயா அது பிள்ளைங்க படிப்புக்கு செலவாகி போச்சுங்க. ஐயா கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இந்த தடவை உதவி பண்ணுங்கய்யா. ஐயா என்ன சொன்னாலும் கேட்கிறேன்"

மோவாயை தடவினார் சோலை பாண்டியன். மற்ற பெண்களை எல்லாம் தொட்டுவிட்டு கை கழுவி செல்வதைப் போல தேவகியை அவரால் விட்டுவிட முடியவில்லை. என்னமோ தெரியவில்லை தேவகியிடம் மற்ற பெண்களிடம் இல்லாத ஏதோ ஒன்று அவரை ஈர்த்தது. ஒருவேளை புகழ்பெற்ற பழம் நடிகை  பத்மினியை போல தேவகி கொள்ளை அழகாக இருப்பதா?

" உன்கிட்ட என்ன கேட்கிறது.. புதுசா கொடுக்க உன்கிட்ட என்ன இருக்கு.. ரெண்டு நாளைக்கு  முக்கியமான வேலை விஷயமா வெளியூருக்கு போறேன். நீ என்ன பண்ணு மருந்து வாங்கி உன் மகளுக்கு கொடுத்துட்டு, ரெண்டு நாளைக்கு தேவையான உடுப்ப எடுத்து வெச்சிக்கோ..

அங்க எவளயும் நம்ப முடியாது.. எப்ப எவன் என்ன போட்டு தள்ளலாம்னு இருக்கான். காலையில முழுக்க இந்த எருமை மாட்டு பயலுங்க மூஞ்சில முழிச்சிட்டு, ராத்திரிக்கு படுத்தா கால புடிச்ச விட ஒருத்தி இருந்தா தானே மனுஷனுக்கு ஒரு இதுவா இருக்கும்.. போன வாரமே உன்ன வர சொன்னேன். என்னமோ பச்சை புள்ளைங்கள விட்டு வர மாறி முடியவே முடியாதுனுட்ட.. இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. பணம் தர எடுத்துட்டு போய் பிள்ளைக்கு வைத்தியம் பார்த்துட்டு,உன் மக பெருசு கிட்ட கையில காச கொடுத்துட்டு வா.."தேவகி விக்கித்து போய் நின்றார்.

"அய்யா புள்ளைங்கள விட்டுட்டு".. அப்பொழுது பூங்காவனத்திற்கு பதினைந்து வயது தான்.

"என்னடி இவ.. என்னமோ புதுசா புள்ள பெத்த பச்சை உடம்பு காரி மாதிரி சிலுத்துகிற. பணம் வேணும்னா ஒன்னு நீ வா.. இல்லன்னா உன் மக பெருசு அத அனுப்பிவிடு. காலமுக்கு யார் வந்தா என்ன?" தேவகிக்கு நெஞ்சில் சுளீரென்று வலி வந்தது. சோலை பாண்டியனின் மறைமுகத் திட்டமும் தெரியவந்தது.

"இல்லைய்யா நானே வரேன்"

"ஹான் அப்படி வா வழிக்கு..இந்தா" தேவகி கேட்டதற்கும் சற்று அதிகமான பணத்தை எடுத்தவர் தேவகியிடம் அதனை கொடுத்தார்.. மீண்டும் நாய்க்கு பிஸ்கட்டை போட ஒன்று தேவகியின் காலருகே வந்து விழுந்தது.

குனிந்து வந்த பிஸ்கட்டை கையில் எடுத்த தேவகி அதனை நாய்க்கு போட "அத ஏன் நாய்க்கு போடுற.. வெளிநாட்டு பிஸ்கட்டு.. சும்மா சாப்பிடு.."நீ நாய்க்கு சமம் என அவர் சொல்லாமல் சொல்ல நாய் என்று அவர் குறிப்பிட்ட பெண்ணோடு தான் உறவு கொண்டிருக்கிறார் என்பதை மட்டும் தோதாக மறந்து போனார்.

பழைய நினைவுகளிலிருந்து விடுபட்ட தேவகி  நேற்று காலையில் வீட்டை விட்டு சென்ற மகள் இரவு முழுவதும் வீடு திரும்பாத பயத்தில் சோலை பாண்டியன் வீட்டிற்கே வந்து விட்டிருந்தார். இங்கே நடந்த எதுவும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஜெர்மன் ஷெர்பெட் வகையை சேர்ந்த அந்த நாய் அவரை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு படுத்து விட்டது.

இன்று அந்த நாய் இருந்த இடத்தில் தான் முன்பு அதனின் அம்மா கட்டப்பட்டிருக்கும். தேவகிக்கு இந்த நாயும் தானும் ஏதோ ஒரு விதத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாய் தோன்றியது.

"என்ன எப்படி பார்க்கிற ஒரு விதத்துல நீயும் நானும் ஒன்னு தான். உன்னோட அம்மா கட்டிவைக்கப்பட்டுருந்த இடத்துல தான் இப்ப நீ இருக்க. நான் எந்த இடத்துல இருந்தனோ இப்ப என் பொண்ணு அதே இடத்துல இருக்கா.. நாங்க எல்லாம் பொறக்காமயே இருந்திருக்கலாம்.." தேவகி இப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே  சோலைப் பாண்டியன் தன்னுடைய காலை கடமைகளை முடித்துக் கொண்டு வெளியே வந்தார்.

அங்கே அவருக்காக காத்திருக்கும் தேவகியை கண்டவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் சேர்த்து வெடித்தது..

"ஐயா என் பொண்ணு".. தேவகி பரிதவிப்பாக வினவ

"பொண்ணா.. சரியான மூதேவி.. கரகம் புடிச்ச பீடை..எந்த நேரத்துல என் வீட்டு வாசப்படியில காலை வைத்தாளோ அப்பவே என் மானம் மரியாதை எல்லாமே காத்தோட காத்தா பறந்து போயிருச்சு. ஏதாச்சும் மருந்து செஞ்சு உன் மக கொடுத்து அனுப்பினியோ.." சோலை பாண்டியன் காட்டமாய் உரும தேவகிக்கு ஒன்றும் புரியவில்லை.

"ஐயா என்னங்கய்யா பேசுறீங்க.. எனக்கு ஒண்ணுமே புரியலையே.."

"ம்ம்ம் புரியாது.. சீமா சித்ராங்கிக்கு.. பெரிய உலக அழகிய பெத்து வெச்சிருக்கியே அந்த பீடைய தான் சொல்லுறேன்.. விளங்காத பரதேசி"..

"ஐயா எம் பொண்ணு எங்கய்யா.. நேத்து காலையில வீட்ல இருந்து போனவ.. இன்னும் வீடு வரல.."

"கண்ட சிறுக்கியும் ஊரு மேய என்ன வந்து கேள்வி கேப்பியோ நீயி.."

"அய்யா'

"என்னடி ஐயா கொய்யானு..ஊரு மெயுற பொறுக்கி இந்நேரம் எவென் கூட படுத்து கெடக்கோ..பெரிய உத்தமியாட்டம் மகள காணோம்னு வந்து நிக்குற.. உன் மவள நானா கைலிக்குள்ள வெச்சிருக்கேன்..சனியன் எங்குட்டு துடிச்சிட்டு ஓடுச்சோ.. உன் ஏரியா பசங்க கிட்ட கேட்டு பாரு.." அமிலத்தை காய்த்து காதில் ஊற்றியதைப் போல இருந்தது தேவகிக்கு.

பூங்காவனத்தின் பவித்திரத்தை பற்றி அவதூறாக பேசியது மட்டுமல்லாமல், அவள் இங்கே வரவே இல்லை என்று அல்லவா கூறுகிறார்..

"ஐயா என்னங்கய்யா சொல்றிங்க.. உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு இல்லை"

"ச்சி த்து.. இத சொல்ல உனக்கு வெட்கமா இல்ல.. ஒரு வயசுக்கு வந்த பொண்ணு பெத்தவகிட்டே நான் இன்னொருத்தன் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு போறா.. என்ன ஏதுன்னு கண்டிக்க துப்பு இல்லை.. மகளை கூட்டி கொடுக்க ரெடியா இருக்க. கடைசியில அவளை காணும்னு இங்க வந்து நிக்கிற.. அப்படி எந்த சிறுக்கியும் என் வீட்டு வாசப்படிக்கு வந்து நிக்கல. இன்னொரு தடவை மகளை காணும்  மயிரக் காணோம்னு என் வீட்டு வாசப்படிக்கு வந்து நின்ன" நாக்கை துரத்தி தேவகியை விரட்டினார் சோலை பாண்டியன்.

நடந்தது எதுவும் தெரியாமல் தவித்து தான் போனார் தேவகி. அவரை அங்கே நிற்க விடாமல்  சோலை பாண்டியனின் அடியாட்கள் விரட்டி விட்டார்கள். எங்கே யாரிடம் சென்று பூங்காவனத்தைப் பற்றி தெரிந்து கொள்வது என்றே தெரியாமல் பிரம்மை பிடித்தவர் போல சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.

"ஹெலோ மின்னலு"

"ஐயா சொல்லுங்கய்யா" பவ்வியமான குரலில் வினவினான் மின்னல்.

"அந்த நாய நான் சொல்ற வரைக்கும் அங்கனயே வெச்சிக்கோ.. நம்ம சுரேஷ அனுப்பி விடுறேன்" சோலை பாண்டியனுக்கு தன் வீட்டில் இம்மாதிரி தனக்க அவமானம் நிறைந்ததை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவரது இத்தனை வருட வாழ்வில் இம்மாதிரியான அவமானத்தை  அவர் சந்தித்தது கிடையாது.

மனதில் ஏதோ ஒன்று அவரை நெருடியது. தனது குடும்ப ஜோசியரை அழைத்து விட்டார்.ஜோசியர் சொன்ன செய்தியை கேட்டு சோலை பாண்டியனின்  நெஞ்சமே ஒரு முறை குலுங்கி நின்றது.


தாகம் எபிலாக்

எபிளாக்❤️ பிரசவ அறையின் முன்பு அமைதியாக அமர்ந்திருந்தான் மின்னல் வீரபாண்டியன்..  தேவகி தெய்வங்களை வேண்டியபடி அமர்ந்திருக்க அவரது...