பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 10


“பாப்பா கடைக்கு போயிட்டு வரேன்.. நீ வேணும்னா ஸ்வீட்டி வீட்டுக்கு போய்ட்டு வரியா”

” இப்போ எதுக்கு என்ன வீடு வீடா போக சொல்ற.. இங்க இருந்தா பூச்சாண்டி வந்து புடிச்சிட்டு போயிடுவானா? “

“இல்லடா தனியா இருக்கனும்..உனக்கு போரடிக்கும்.. அதான் ஸ்வீட்டி வீட்டுக்கு போனா அங்கு பேபி இருக்கு. உனக்கும் பொழுது போகும்”

“ஒன்னும் வேணா.. என்னதான் ஃப்ரண்டா இருந்தாலும் ஒரு நாள் போலாம் ரெண்டு நாள் போலாம் பொழுதனிக்கவும் அங்கயேவா ஒக்காந்து இருக்கிறது..நமக்குன்னு வீடு வாசல் இல்ல”

“பாப்பா நா”

“நீ என்ன சொல்ல வர்றனு நீ எனக்கு புரியுது. உன் அம்மா அக்கா யாராவது இங்க வந்து அன்னிக்கு மாதிரி ஏதாச்சும் பேசிடுவாங்கனு நீ பயப்படுற..அதானே”நிலாவை பின்னிருந்து கட்டிக்கொண்டு

“ஆமா.. அவங்க வாய பத்தி உனக்கு தெரியாது.. இந்த ஊர விட பெரிய சைஸ் வாய்..ஊர அடிச்சு ஒலையில போடுவாங்கனு சொல்லுவாங்க இல்ல.. அது என் அம்மாவுக்கும் அக்காவுகும் அப்டியே பொருந்தி போகும்.. உன்னால அவங்க கிட்ட மாரடிக்க முடியாது”

“அப்டி நீ சொல்லாத ராஜ்.. என்ன இருந்தாலும் அவங்க என் அத்த நாத்தனார்.. என்னிக்கு இருந்தாலும் அவங்க கிட்ட நான் பேசித்தான் ஆகணும்.. ஒரு நல்ல நாளு விசேஷம்னு நாலு எடம் போனா அவங்க மூஞ்சில முழிச்சு தானே ஆகணும்.. அப்ப என்ன பண்ணுவியாம்.. ஒரு படுதா வாங்கி என்ன போத்தி கூட்டிட்டு போவியா”

” உனக்கு புரியல பாப்பா.. சரி உனக்கு எங்கயும் போக இஷ்டம் இல்லனா என்கூட கடைக்கு வரியா.. கடைய பார்த்த மாதிரியும் ஆச்சு.. அப்படியே தொழில கத்துக்கிட்ட மாதிரியும் ஆச்சு..”.. அவனுக்காக தாராளமாக நெய் விட்டு நெய் தோசை சுட்டு கொண்டிருந்தவள்

“ராஜ் தொழில கத்துகிறது முக்கியம் தான்.. ஆனா இப்போ வேணாம்.ஏற்கனவே நம்ம கல்யாண விஷயத்துல உங்க வீட்ல ரொம்ப கோவமா இருக்காங்க.. இதுல நான் கடைக்கு வந்து தொழில பாக்குறேன்னு உங்க அம்மாவுக்கு தெரிஞ்சதுனா அவ்வளவுதான். வேற வினையே வேணாம்.. கொஞ்ச நாள் போகட்டும்”

“ம்ம்ம்.. ஆனா நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணு.. அந்தப் பிரியா காட்டு குரங்கு ஃபோன் பண்ணா நீ எடுக்க கூடாது..அவ கூட பேசக்கூடாது.அந்த சுஜி சுகிய சேத்து தான் சொல்றேன்”சற்று அழுத்திச் சொன்னான் ராஜ். தட்டில் அவனுக்கு தோசை வைத்து கொடுத்தவள்

” எனக்கு தெரியாதா ராஜ் நான் என்ன சின்ன பிள்ளையா.. நீ சீக்கிரம் சாப்பிட்டு கடைக்கு போ.. இன்னைக்கு புது ஸ்டாக் இறங்குதுனு சொன்னல்ல..” தனக்கு ஒரு வாய் அவளுக்கு ஒரு வாயாக அவள் சுட்டுத் தந்த தோசைகளை சாப்பிட்டு முடித்தவன் மனமே இல்லாமல் கடைக்கு கிளம்பி சென்றான். செல்லும் முன் வீட்டு வேலைகளை அவனே செய்து விட்டுதான் சென்றான்.. மருத்துவர் அவளை நன்றாக ஓய்வெடுக்கச் சொல்லிருக்க அவளை தனியாக வீட்டில் விட்டு செல்ல அவனுக்கு பயமாக இருந்தது.

கழுத்தில் தாலி ஏறிய அன்றே வீட்டிற்கு வந்து ஈவு இரக்கமே இல்லாமல் அவளின் கையை பிடித்து இழுத்து வெளியே தள்ள முயன்ற தனது அம்மாவின் குணம் அவனுக்கு நன்றாக தெரியும். அம்மாவிற்கு சொந்த மூளை கிடையாது. சொல்புத்தி தான். கங்காவும் காளை பாண்டியனும் எந்த மாதிரி சாவி தருகிறார்களோ அச்சுப் பிசகாமல் சாவிக்கு ஏற்ற பொம்மை போல ஆடுவார் கமலா. சிந்துவை தான் திருமணம் செய்துகொள்ளாமல் நிலாவை திருமணம் செய்து வீட்டை விட்டு வெளியே வந்தது கமலாவின் சீற்றத்தை இன்னும் அதிகமாக்கி விட்டதாக இருக்கும்.

தூபம் போட்டு கெடுக்க கங்கா கூடவே இருக்கிறாள்.. இரவும் பகலும் தாய் மகளும் நிலாவை வறுத்து வாயில் போடுவதே வேலையாக இருக்கிறதாக குணா பேச்சுவாக்கில் உளறி இருந்தான்.. குணாவை பொருத்தவரை அவன் நல்லவன். இந்த பக்கமும் பேசமாட்டான் அந்தப் பக்கமும் சாய மாட்டான்.. இருக்கிற இடம் தெரியாமல் இருந்துகணும் இந்த உவமைக்கு சரியான ஆள் குணா.. இல்லையென்றால் கங்கா மாதிரி ஒருவளிடம் பெயர் போட முடியுமா..

முக்கியமான விஷயங்கள் அவன் மூலமாக தான் ராஜ் காதிற்கு வரும்.. இதற்காகவே ராஜ் குணாவை அக்கா கணவன் என்று பாராமல் ஒரு நண்பனாக வைத்திருந்தான். நண்பன் என்று சொல்லுவதைக் காட்டிலும் குணா ஒரு உளவாளி.. கங்கா அவளின் தோழி ஒருவளின் பேச்சை கேட்டு தரைக்கு மேலே தண்ணீர் ஓடுகிறது தரைக்கு கீழே தங்கம் ஓடுகிறது என கமலாவிடம் தான் கேள்விப்பட்டதை ஒன்றுக்கு நான்காக திரித்து விளங்காத ஒரு இடத்தை வாங்க வலை விரித்தாள்.

அந்த மட்டமான இடம் கோடிகளில் போனது. இதற்கு காளை பாண்டியனும் உடந்தை.. காக்கா கூட பறக்காத அந்த இடத்தை பார்த்ததும் குணாவிற்கு சந்தேகம் வந்தது. காதும் காதும் வைத்தது போல கங்காவும் கமலாவும் அந்த இடத்தை வாங்க திட்டம் போட்டது அவனின் சந்தேகத்தை உறுதிப்படுத்தியது.. நாசுக்காக இந்த விஷயத்தை காற்று வாக்கில் ராஜ் காதில் சேர்த்தவன் தன் வேலை முடிந்து விட்டதென சென்று விட்டான்.

சரியான நேரத்தில் தகவல் தெரிந்து ராஜ் அந்த நிலத்தில் வில்லங்கம் இருப்பதை கண்டுபிடித்து நிலம் வாங்குவதை தடுத்து நிறுத்தினான். நிறுத்தியதோடு இல்லாமல் கங்கா கமலா இருவருக்கும் மானங்கெட்ட கேள்வி வேறு.. கங்கா கமலா இருவரும் தாங்கள் யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்த விஷயம் எப்படி இவன் காதிற்கு சென்றது என மண்டையை உடைத்துக் கொண்டனர். எப்படியோ முட்டிக்கொண்டு சாவுங்கள் என்று குணா மிக்சர் சாப்பிட சென்று விட்டான்..

இப்பொழுதும் அந்த வீட்டில் நடப்பது அனைத்தும் குணா மூலமாக ராஜ் கவனத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது. குணாவின் தங்கை சிந்து வெறிபிடித்த வேங்கையாக அலைந்து கொண்டிருப்பது அதில் கூடுதல் தகவல். சிந்துவை பற்றி ராஜ் நன்றாக அறிவான். பிடிவாதக்காரி அதைவிட அகந்தை பிடித்தவள்.. கண்டிப்பாக அவள் நிலாவை சந்தித்து தனது தேள் கொடுக்கு நாக்கை வைத்து நிலாவை காயப்படுத்த முயல்வாள்
என்று ராஜ் கணித்தான்.

நிறைய தடவை நிலாவை பத்திரம் சொல்லி தான் சீக்கிரம் கடையிலிருந்து வந்து விடுவதாக கூறி மனமே இல்லாமல் கடைக்கு கிளம்பினான் ராஜ்.அவனுடைய பயத்தை பற்றி நன்கறிந்த நிலா தனக்குள் புன்னகைத்துக் கொண்டு வீட்டு வேலைகளை செய்ய தொடங்கினாள். செய்வதற்கு அப்படி ஒன்றும் வேலைகள் இல்லை. காலையில் எழுந்ததிலிருந்து வீட்டை பெருக்கி துடைத்து இரண்டு குளியலறைகளைக் கழுவி வாசல் கழுவி துணிகளை வாஷிங் மெஷினில் போட்டு இப்படி அனைத்து வேலைகளையும் அவனே செய்திருந்தான்.

சமையல் கூட அவனே செய்ய முயல அவன் தலையில் இரண்டு கொட்டு கொட்டி அந்த வேலையை தனதாக்கிக் கொண்டாள் நிலா.வீட்டில் சும்மா இருப்பதற்கு அந்த வேலையாவது பொழுதுபோக்கும்.குளித்து வந்தவள் ஃக்ளாசில் ஊற்றி வைத்து இருந்த கொஞ்சம் காஃயை கப்பில் ஊற்றி கைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். கடைக்கு வந்து விட்டதாக அவனிடம் இருந்து அழைப்பு வந்தது. பத்து நிமிடத்தில் இருபது முறை அவரை பத்திரமாக இருக்க சொல்லி அவன் சீக்கிரம் வந்து விடுவதாக கூறி இச்சென்று அழுத்தி முத்தம் வைத்து கைபேசியை வைத்தான்.

சமையல் வேலையை செய்ய தொடங்கினாள் நிலா, என்னதான் பார்த்து பார்த்து மெதுவாக சமைத்தாலும் சமையல் விரைவாக முடிந்து போனது.பாத்திரங்கள் அனைத்தையும் கழுவி வைத்து மிஷினில் துவைத்த துணிகளை காயவைக்க வெளியே சென்றிருந்தாள்.. உள்ளே வந்து பார்க்கும் போது அவளது கை பேசி பல தவறவிட்ட அழைப்புகளை காட்டியது. அதில் பிரியா சுகி சுஜி இவர்களின் அழைப்பு மிகுதியாக இருந்தது.

கைபேசியை வைத்து விட்டு வெளியே வந்தாள்.. புதிதாக உருவாகிக் கொண்டிருந்த ஏரியா. அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள் முளைத்துக் கொண்டிருந்தது.. நிலா வீட்டிலிருந்து சரியாக நூறு மீட்டர் தூரத்தில் இளம் பச்சை வண்ண பெயின்ட் அடித்த வீடு ஒன்று இருந்தது.நல்ல பெரிய வீடு..பிரம்மாண்டமாக கட்டி இருந்தார்கள். வீட்டைச் சுற்றிலும் வாடாமல்லி அழகாக வெட்டி பராமரிக்கப்பட்டு வருவது அந்த வீட்டை இன்னும் அழகாக காட்டியது.

நிலா அந்த வீட்டின் அழகை ரசித்து விட்டு தங்கள் வீட்டின் வெளியே என்ன மாதிரி பூச்செடி வைக்கலாம் என்று சிந்தனையில் ஆழ்ந்தாள்.. அப்பொழுது நாய் குறைக்கும் சத்தத்தோடு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. என்னவென்று பார்த்தால் அந்த வீட்டில் இருந்து யாரோ ஒரு குழந்தையை தூக்கிக்கொண்டு ஓடுவது நிலா கண்ணில் பட்டது.. குறைத்துக்கொண்டே குழந்தையை தூக்கிச் செல்லும் உருவத்தை பின்தொடர முயன்ற நாயை எட்டி ஒரு உதை உதைக்க அது சுருண்டு விழுந்தது..

அந்த நாயைத் தொடர்ந்து பெண் ஒருவள் தலையில் வழியும் ரத்தத்தோடு அந்த உருவத்தை பின்தொடர முயன்றாள்.அந்த உருவம் அவளை கீழே தள்ளி விட்டு ஓடியது.இதனைப் பார்த்த நிலா ஒரு நொடியும் தாமதிக்காமல் கீழே கிடந்த செங்களை எடுத்துக் கொண்டு அந்த உருவத்தை நோக்கி ஓடினாள்.சரியாக செங்களை குறி பார்த்து வீச அது அந்த உருவத்தின் பின் தலையில் பட்டு கீழே விழுந்தது. திடீர் தாக்குதலில் அந்த உருவமும் தடுமாறிக் கீழே விழ நிலா ஓடிச்சென்று அதன் கையிலிருந்த குழந்தையை பிடுங்கிக் கொண்டு அந்த உருவத்தின் முகத்திலேயே ஓங்கி மிதித்தாள்..

வயிற்றில் எட்டி நான்கு உதை..முகமூடி போட்டிருந்த அந்த உருவத்தின் முகமூடியை பற்றி இழுத்தாள் நிலா..தோள் வரை தவழும் கூந்தலோடு ஒரு பெண் உதடு கிழிந்து ரத்தம் வழிந்த நிலையில் நிலாவை முறைத்துக் கொண்டிருந்தாள்.. குழந்தை நிலா கையிலிருந்து திமிரி அழ கீழே விழுந்து கிடந்த இன்னொரு பெண் அதன் தாய் போல.. அவள் ஓடி வந்து குழந்தையை வாங்கி மார்போடு அணைத்துக் கொண்டாள்..

அதற்குல் அக்கம் பக்கம் வீடுகளில் இருந்து ஆட்கள் வெளியே சத்தம் கேட்டு ஓடி வர உதடு கிழிந்து உதிரம் வழிந்த நிலையில் அந்த பெண் எழுந்து ஓட முயன்றாள். அவளை பிடித்து நிறுத்த பார்க்க அவள் நிலாவை தள்ளி விட்டு ஓடினாள். ஒரு கார் எங்கிருந்து வேகமாக வந்து அந்த பெண்ணின் அருகே நின்றது அதில் ஏறி அவள் மாயமாய் மறைந்து போனாள்.. அக்கம் பக்கத்தார் வந்து விசாரிக்க குழந்தையின் தாய் குடும்பத்தகராறு என்று அவர்களை அனுப்பி வைத்தாள்.

அதன்பின் நிலவைப் பார்த்து “உங்கள நான் இங்க பாத்ததே இல்லயே.. புதுசா குடி வந்திருக்காங்களா”

“ஆமாங்க.. அதோ அந்த வீடு”… நிலா தன் வீட்டை அந்த பெண்ணுக்கு சுட்டிக்காட்ட

“வாங்களேன்.. உள்ள ஒக்காந்து பேசலாம்”

“ஐயோ அதெல்லாம் வேணாங்க..மொத போய் உங்க தலைக்கு மருந்து போடுங்க.. ரத்தம் வருது “அந்த பெண் குழந்தையை வைத்துக்கொண்டு தடுமாற நிலா குழந்தையை தான் வாங்கிக் கொண்டாள். அந்தப் பெண் மிகவும் வற்புறுத்தி கேட்க நிலா அந்தப் பெண்ணோடு அவள் வீட்டிற்குள் சென்றாள். செல்லும்போதே

“ஏங்க கொஞ்சம் இருங்க.. என் வீட்டு கேட்ட சாத்தாம வந்துட்டேன்.. போய் சாத்திட்டு வரேன்..”

“இங்க திருட்டு பயம்லாம் இல்லைங்க.. தைரியமா வாங்க..” அந்தப்பெண்ணின் நாய்க்குட்டி வாங்கிய உதையால் தத்தித் தத்தி நடந்தது.. நிலா குழந்தையை சோபாவில் படுக்க வைத்துவிட்டு தத்தித் தத்தி நடந்த நாய்க்குட்டியின் கன்னத்தை தடவிக் கொடுத்தாள்.. அது அவளை முகர்ந்து பார்த்தது.. இவளால் தனக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று தெரிந்தவுடன் அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டது. நிலாவும் அதன் வயிற்றை தடவிக் கொடுத்தாள். அதற்குள் அந்தப் பெண் தண்ணீரால் தலை காயத்தை கழுவி ஒரு துண்டில் ஐஸ் கட்டிகளை வைத்து காயத்தின் மேல் ஒத்தடம் கொடுத்தப்படி வந்தாள்..

“ரொம்ப நன்றிங்க.. நீங்க இல்லனா அந்த நாசமா போறவ என் குழந்தைய தூக்கிட்டு போயிருப்பா..”

“பரவால்லங்க..யாரு அவ.. உங்க சொந்த பிரச்சனனா சொல்லாதீங்க..”

” சொந்த பிரச்சனையா? அவ என்ன புடிச்ச ஜென்ம சனிங்க.. என் புருஷனோட எக்ஸு..ஏதோ ஒரு வேகத்துல அவர வேணான்னு சொல்லிட்டு போயி தொலஞ்சிட்டா.. வீட்ல இவர பேசி சரிகட்டி என்ன பொண்ணு பாத்து கட்டி வெச்சிட்டாங்க.. அவரும் பழச மறந்து நல்லாத்தான் இருந்தாரு.. இதோ இவ பொறந்தா.. எங்கேருந்து தான் வந்தாளோ என் குடிய கெடுக்க பீட மாறி வந்து சேந்துட்டா.. அவளுக்கு என் புருஷன் வேணுமாம்.அவருக்கு ஃபோன் போட்டு பேசுறது. அவரு போற இடமெல்லாம் போறது. அவரு அவள அவொய்ட் பண்ணிட்டு தான் இருக்காரு.. இருந்தாலும் இது பெரிய பைத்தியம்..விட மாட்டுது..

இன்னைக்கு வீட்டுக்கு வந்து இந்த குழந்தய காட்டி தான அவர புடிச்சு வெச்சிருக்க.. இல்லனா உன் மூஞ்சிக்கெல்லாம் அந்தாளு இருப்பானானு என்ன அடிச்சு போட்டுட்டு என் குழந்தய தூக்கிட்டு ஓட பாத்தா.. அதுக்குள்ள நீங்க வந்துட்டிங்க”

“விடுங்க..அண்ணா ஸ்ட்ரோங்கா இருக்குற வர உங்களுக்கு நல்லது தானே”

“அங்கதாங்க எனக்கு இடிக்குது.. இந்தாள நம்ப முடியாது.. குழந்த பொறக்குற வர என் முத்தனைய புடிச்சிகிட்டு சுத்திகிட்டு இருந்தாரு.குழந்தை பொறந்து மனுஷன் முன்னாடி மாறி இல்லங்க.. நா பாருங்க என் சொந்த கதைய சொல்லி உங்கள நொந்து போக வைக்குறேன்.. உங்க பேரு என்னங்க”

“என் பேரு வெண்ணிலா.. இப்பதான் மூனு நாளு முன்னாடி கல்யாணம் நடந்துச்சு.. என் ஹஸ்பண்ட் பேரு ராஜ் மித்ரன்.”

“புது பொண்ணுன்னு சொல்லுங்க..என்ன வயசுங்க உங்களுக்கு”

“இருபத்து ஆறு’

“அட எனக்கு இருபத்து ஏழு.. இனிமே நாம ஃப்ரன்ட்ஸ்..”

“நீங்க இன்னும் பேரே சொல்லலையே”

“என் பேரு குமுதா.. என் வீட்டுக்காரர் பேரு பிரகாஷ்..இந்த வாண்டு பேரு அபி.. இந்த பப்பி பேரு டிங்கு..இதான் எங்க குடும்பம்”சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கும் போது அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல ஒரு நட்பு மலர்ந்தது.நிலா குமுதாவை காவல் நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க கூறினாள். கணவர் வந்து விஷயத்தைச் சொல்லிய பிறகு புகார் அளிக்கலாம் என்று குமுதா கூறினாள்..பத்து நிமிடம் குமுதாவிடம் பேசிக்கொண்டிருந்த நிலா தன் வீட்டிற்க்கு கிளம்பினாள்..அவள் வீட்டின் கேட்டை கூட தாண்டவில்லை குமுதா தன் கணவனுக்கு அழைத்து கத்த தொடங்கி இருந்தாள்..

நிலா தனது வீட்டிற்கு வந்து கைபேசியை பார்க்க அது நூறு தவறவிட்ட அழைப்புகளை காட்டியது.அனைத்து அழைப்புகளும் அவளது அன்பு கணவனின் அழைப்புகள்.திரும்பவும் அழைப்பு வந்தது.எடுத்து காதில் வைத்தவுடன்

“ஹேய் பாப்பா யாருடி வந்தா வீட்டுக்கு.. அங்க என் அம்மா அக்கா வந்து பிரச்சன பண்றாங்களா.. நீ ஒன்னும் பயப்படாத நான் வந்துகிட்டே இருக்கேன்”அவன் எதார்த்தமாக பேச அழைத்திருக்கிறான்..அவள் அழைப்பை ஏற்காமல் போக மீண்டும் மீண்டும் முயற்சி செய்திருக்கிறான்.அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் போக ராஜ் பயந்து விட்டான்.

“ராஜ்.. பயப்படாத.. உங்க வீட்ல இருந்து யாரும் வரல.. இங்க”நிலா நடந்ததை சொல்லி முடிக்க ராஜ் அவளை கத்த தொடங்கினான்..

“உனக்கு எதுக்குடி இந்த ஊரு வம்பு.. புள்ளய கடத்திட்டு போனவ கையில கத்தி கித்தி வெச்சிருந்தா உன் நிலைம.. எதுவும் தெரியாம எதுக்குடி ஓடி போயி ஊரு சண்டயில மூக்க நுழைக்கிற..உனக்கு என்னாச்சோ ஏதாச்சோனு நா பயந்தே போய்ட்டேன்டி”

“ராஜ் என்ன பேசுற.. கண்ணு முன்னாடி புள்ளய தூக்கிட்டு ஒருத்தி ஓடுறா பாத்துட்டு இருக்க சொல்றியா.. உன் புள்ளையா இருந்தா இப்டி தான் சொல்லுவியா.. நாளைக்கு உன் அக்கா புள்ளைய ஒருத்தன் தூக்கிட்டு ஓடும் போது நமக்கு எதுக்கு ஊரு வம்புனு ஒதுங்கி நிப்பியா.. ஏன் இப்டி சுயநலமா இருக்க.. உங்க வீட்டு ரத்தம் போல”

“பல்ல ஒடச்சிருவேன்டி.. பேசுறத பாத்து பேசு.. வந்து பேசிக்குறேன் வைடி ஃபோன”ராஜ் நிலாவை கத்தி விட்டு அழைப்பை துண்டித்து அடுத்த பதினைந்து நிமிடத்தில் வீட்டிற்கு வந்தான்.. அவனை பார்த்ததும் அதுவரை ஹாலில் கடும் கோபத்துடன் அமர்ந்திருந்த நிலா வேகமாக எழுந்து அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள். ராஜிற்கு அவளின் கோபம் புரிந்தது.. அவளுக்கு ஏதாவது ஆகி விட்டதோ என்ற பயத்தில் தேவையில்லாமல் அவளை கத்தி விட்டோம் என்று அவனுக்கு புரிந்தது.அறைக் கதவைத் தட்டினான் அவள் திறக்கவில்லை.. திருமணமாகி வரும் முதல் சண்டை.. மனைவி உள்ளே கடுங்கோபத்தில் அமர்ந்திருக்க கணவன் வெளியே முதல் ஊடலின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.

நிலவுக்கு என் மேல்..
என்னடி கோபம்..
நெருப்பாய் எரிகிறது,
இந்த மலருக்கு என் மேல்..
என்னடி கோபம்..
முள்ளாய் மாறியது..

தொடரும்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்