பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 5

வெண்ணிலவை பூவாய் வைப்பேனே வானவில்லை உடையாய் தைப்பேனே உனக்காக எதும் செய்வேன் நீ எனக்கென செய்வாயோ

“ஐயோ ஐயோ பெத்த வயிறு பத்தி எரியுது..என் பையன மயக்கி கட்டிக்கிட்டல நீ எல்லாம் உருப்படவே மாட்டடி.. நாசமா போயிருவ..உன் வயித்துல ஒரு புழு பூச்சி கூட உண்டாகாம பட்ட மரமா போயிருவடி”.. கமலா பெருங்குரலெடுத்து அலற அவரை அடக்காமல் இன்னும் கொஞ்சம் அவருக்கு தூபம் போட்டுக் கொண்டிருந்தாள் கங்கா.

“விடும்மா என்ன செய்றது.. இவள சொல்லி ஒரு குத்தமும் இல்ல. எல்லாம் உன் பையன சொல்லணும். ஊரு ஒலகத்துல பாக்காத பேரழகிய பாத்துட்டான்.. அப்டி அழகுன்னு சொல்ல இவகிட்ட என்ன எழவு தான் இருக்கு..ஆமா ஆமா அதான் குதிர கணக்கா மத மதன்னு உடம்பு இருக்குல்ல.. எத காட்டி மயக்கி என்னத்த பண்ணாளோ யாரு கண்டா? காணாதத கண்டது மாறி அவனும் இவ பின்னாடியே வந்துருப்பான்.ஒடனே இழுத்து புடிச்சு தாலிய வாங்கிக்கிட்டா..”நிலாவை நேரடியாக தாக்காமல் ஜாடையாக கொச்சைப்படுத்தி கொண்டிருந்தாள் கங்கா..

“தாலி பெரிய பொல்லாத தாலி.. அத கட்டிட்டா என் மறுமவளா ஆயிருவாளா? என் அண்ணன் மக எவ்ளோ அழகி கூடவே சொத்தும் ஏகப்போகமா கொட்டி கெடக்குது.. மாமா மாமான்னு இந்த பாவி பய பின்னாடில சுத்திகிட்டு திரிஞ்சா.. அவள வேணான்னு பத்தி விட்டுட்டு இந்த வெள்ள சீக்குக்காரிய போயி கட்டிருக்கானே.. அவன் என் வயித்துல பொறந்தவனா? அவன நானா பெத்தேன்?..ஏன்டி உனக்கு எவ்ளோ திம்மாக்கு இருந்தா என் முன்னாடியே குத்து கல்லு மாறி ஒக்காந்து இருப்ப.கழுத்துல தாலி வேற”

கமலா ஆவேசம் வந்தவராய் நிலாவை நெருங்கி அவள் கழுத்திலிருந்த தாலியை பிடுங்க போக அதுவரை அவர் பேசிய அனைத்தையும் சோபாவில் அமர்ந்து தலைகுனிந்து கேட்டுக்கொண்டிருந்த நிலா அவரின் கரம் அவளது தாலியை பற்றியதும் அவரை ஒரே தள்ளாக தள்ளினாள்.கமலா சில அடி தூரம் பின்னால் நகர்ந்து கங்காவை பிடித்துக்கொண்டார்..

“யாரு பெத்த புள்ளயோ நல்லா இருப்படியம்மா.. இந்த பெரிய கோட்டானயே புடிச்சு தள்ளி விட்டுட்டியே சத்தியமா இவ நம்மள மாறி இருக்க மாட்டா”குணா தான் அதுவரை அங்கே பார்வையாளனாக இருந்தவன் மாமியார் தடுமாறி விழவும் அவரைத் தாங்கி பிடிக்காமல் மனதில் நிலாவின் தைரியத்தை பார்த்துக் மெச்சிக் கொண்டிருந்தான்.

“ஹேய் என் அம்மாவயே தள்ளி விட்டுட்டியா.. ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரிய தொரத்துன கதையால இருக்கு. மரியாதையா என் தம்பி கட்டுன தாலிய அறுத்து கொடுத்துட்டு வெளிய போடி”.. கங்கா மூச்சு வாங்க கத்திக் கொண்டிருந்தாள்.நிலா ஒரு நிமிடம் அவளின் மேடிட்ட வயிறை பார்த்து விட்டு நிதானமாக

“உன் அம்மாவுக்கு வேணும்னா வயசுக்கு மரியாதை கொடுப்பேன். ஆனா உனக்கு அது கூட இல்ல.. நீ மட்டும் இந்நேரம் வயித்துப் புள்ளக்காரியா இல்லாம இருந்திருந்தா என் தாலிய அறுக்க சொன்னதுக்கு சுடுதண்ணிய கொதிக்க வெச்சு மூஞ்சில ஊத்திருப்பேன்..யாரு வீட்டுக்கு வந்து யாரு கிட்ட என்ன பேசிட்டு இருக்கீங்க.. உன் தம்பி என்ன பச்சை பாப்பாவா.. நான் இடுப்புல வெச்சி தூக்கிட்டு வந்து கல்யாணம் பண்ணிக்க.. ராஜ் விருப்பப்பட்டு என்ன கட்டிருக்காரு..நீங்க ஏன் தேவ இல்லாம துண்டான பல்லி வாலு கணக்கா துள்ளுறிங்க? இந்தாம்மா மாமியாரே என் கழுத்துல இருக்குற தாலிய அறுக்க வந்திங்களே.. இதுவே உங்க பொண்ண அவங்க மாமியா அப்டி செஞ்சா பாத்துட்டு சும்மா இருப்பிங்களா?நான் ஊரான் வீட்டு பொண்ணு தானேனு நெனப்பு இல்ல.. கட்ன தாலில ஈரம் கூட காயல.. அதுக்குள்ள தாலிய அறுக்க பாக்குறீங்களே நீங்க எல்லாம் மனுசங்க தானா..சீ வெளிய போங்க எல்லோரும்”

“என்னடி சவுண்ட் விடுற.. சொகுசா என் மவன் வீட்ல ஒக்காந்து என்ன வெளிய போக சொல்ற.உன் அப்பனா சீரா இந்த வீட்ட கொடுத்தான்.. நீ போடி வெளிய.. இது என் மவன் சம்பாதியத்துல வாங்குனது”கமலா மீண்டும் பேய் பிடித்தவர் மாதிரி கத்திக்கொண்டே நிலாவின் கையை பிடிக்க அவள் உதறி தள்ளினாள். இருந்தும் அவளுக்கு இருந்த மன அழுத்தத்தில் அவளது உடல் தளர்வுற்றிருந்தது.. அது கமலாவிற்கு சாதகமாக அமைந்தது.

நிலாவின் கையை பிடித்து தர தரவென அவள் மறுக்க மறுக்க கமலா இழுக்க கங்கா நிலாவை முதுகை பிடித்து தள்ள நிலைக்கதவை நெருங்கும் வேளை அங்கே கைக்கட்டி நின்று கொண்டிருந்தான் ராஜ். அவன் நின்ற தோரணையே கூறியது அவன் சினத்தின் அளவை.அவனை கண்டதும் கமலாவின் பிடி தானாக தளர்ந்தது.. கங்காவும் வயிறை பிடித்து கொண்டு நிற்க குணா”இருக்கு இன்னைக்கு ஒரு சம்பவம் இருக்கு”என மனதிற்கு சொல்லி கொண்டு முகத்தை பரிதாபமாக வைத்து கொண்டான்.

“என்னமா பண்ணிட்டு இருக்க.. என் வீட்டுக்கே வந்து என் பொண்டாட்டிய வெளிய தொரத்த நீ யாரு..உனக்கு யாரு அந்த உரிமைய கொடுத்தா?”

“டேய் நீ என் மகன்டா”

“அது காலை வரை.. இப்ப நா வெண்ணிலாவோட புருஷன்.. உனக்கு இனிமே என் மேல ரெண்டாம் பட்ச்சம் உரிமை தான். மொத உரிமை என்னோட பொண்டாட்டிக்கு.. அவ அப்பவே சொன்னா..வெளிய போவாதன்னு ப்ச் முக்கியமான வேல வந்துருச்சு அதனால வெளிய போய்ட்டேன். ஆனா சத்தியமா இத நா எதிர்பாக்கலம்மா..அவள கத்துவன்னு தெரியும் ஆனா வெளிய தொரத்த பாப்பன்னு நினைக்கல. அக்கா நீயெல்லாம் மாசமா இருக்க..வெக்கமா இல்ல.. உனக்கும் நாளைக்கு பொம்பள புள்ள பொறந்து என் நிலா மாறி ஸ்கின் ப்ரோப்லேம் வந்தா என்ன செய்வ.. தூக்கி குப்பையில வீசிருவியா?இல்ல கழுத்த நெரிச்சு கொன்றுவியா?யாரு கண்டா நீ செஞ்சாலும் செய்வ”

“டேய் வார்த்தைய அளந்து பேசு.. உன் பொண்டாட்டி போன ஜென்மத்துல என்ன செஞ்சாளோ.. இப்டி பொறந்துருக்கா.. நா அப்டியா கோவில் கோவிலா சுத்தி ஒரு விரதத்த கூட விடாம பொல்லொவ் பண்ணிட்டு இருக்கேன்..அந்த புண்ணியம் எல்லாம் என் புள்ளைக்கு தான்”சீறினாள் கங்கா.

“வேணா வாயும் வயிறுமா இருக்க.. என்ன பேச வைக்காத.. ஒன்னு தெரிஞ்சுக்க பெத்தவங்க செய்ற பாவம் புள்ளைக்கு தான்..இப்ப நீங்க எல்லோரும் என் வீட்ட விட்டு போங்க”

“மித்ரா அம்மா சொல்றத கேளுடா..உங்கப்பா இல்லாம ஒத்த பொம்பளயா நா எவ்ளோ கஷ்டப்பட்டு உங்கள வளத்துருப்பேன்.. அதெல்லாம் யோசிச்சு பாத்து சொல்லு உனக்கு அம்மா முக்கியமா.. இல்ல இந்த ஓடுக்காலி முக்கியமா”

“அம்மா.. அப்பா ஒன்னும் அந்தராசா நம்மள விட்டுட்டு போகல.. சொந்த வீடு பேங்க் பேலன்ஸ்னு நல்லாத்தான் விட்டு போனாரு.. அத காப்பாத்திக்க தெரியாம உன் அண்ணன் பேச்ச கேட்டுட்டு எல்லாத்தையும் அழிச்சது நீயு.. நா படிக்குறப்பவே வேல பாத்து அக்கா கல்யாணத்த செஞ்சது எல்லாம் யாரும்மா நீங்களா.. என்னமோ அப்பா செத்து குடும்பத்த தூக்கி தோள் மேல சுமக்குற மாறி ஓவரா பேசுறிங்க..என்ன அப்டி கஷ்டப்பட்டுடிங்க..கேக்குறேன்”

“மித்து அம்மாவையே எதுத்து பேசுறியா”

“ஆமா.. இங்க நின்னா நா இப்டி தான் பேசுவேன்.. எதுக்கு இங்க நின்னு என்கிட்ட பேச்சு வாங்குறிங்க.. கெளம்பிட்டே இருங்க காத்து வரட்டும்”

“டேய்”

“கங்கா வேணா ஒன்னும் பேசாத.. நீ பேசுற எதுவும் இவன் காதுல விழாது. புது பொண்டாட்டி மோகம்.. மெத்த சொகம் கண்டு பித்தா போயி அலையுறான்.. அழுத்து போயி ஒரு நாளு இவ மூஞ்சிய சகிக்க முடியாம வருவான் அப்ப பேசிக்குறேன்.. வா போலாம்..”கமலா ராஜ் நிலா இருவரையும் முறைத்து கொண்டே செல்ல

“ஏங்க என்ன வாய பொளந்துட்டு நிக்குறீங்க.. வாங்க”குணா கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள் கங்கா.. நிலா அழவில்லை. ஆனால் அவளின் முகமே காட்டி கொடுத்தது அவள் மனம் படும் பாட்டினை.

கோவிலில் கல்யாணம் முடிந்து அனைவரும் உயர்தர ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டு ஸ்வீட்டியும் அவளது கணவன் ராகுல், விக்ரம் அனைவரும் இவர்களோடே வீட்டிற்க்கு வந்து நிலாவை விளக்கேற்ற சொல்லி சாமி கூம்பிட்டு கலங்கிய கண்களோடு வீட்டிற்கு சென்றனர்..

நிலா கண்ணாடி முன் நின்ற நெற்றி வகிடில் இருந்த செந்தூரத்தையும் கழுத்தில் தொங்கி நெஞ்சில் உரசும் தாலி கயிரையும் தொட்டு பார்த்து சிலிர்த்து போனாள்.அவளுக்கு நினைவு தெரிந்த ஒவ்வொரு நாளும் பிறரின் பரிதாப பார்வைகளையும் கேலி கிண்டல்களை தாண்டி வந்தவள்.

“ஐயோ பாவம் பொம்பள புள்ளைக்கு போய் இப்படி ஆயிடுச்சு.. எவன் வந்து இவள கட்டிக்க போறான்..முகம் நல்லா இருக்குற பொண்ணுங்களுக்கே கல்யாணம் நடக்க குதிர கொம்பா இருக்கு.. இவளுக்கு காசு பணம் இருந்தும் என்ன புண்ணியம்.. எந்த ஜென்மத்துல என்ன பாவம் செஞ்சாளோ”..

இப்படி நிறக்குறைப்பாட்டை ஜென்ம சாபமென பேசும் இவர்களை எல்லாம் என்ன செய்வது?நிலா அவர்களை எல்லாம் சாதாரணமாக தாண்டி வந்தாள். தனக்கும் திருமணம் முடிந்து விட்டது.. தன்னையும் விரும்பி அடாவடியாக தன்னை மணந்து கொண்டான் ஒருவன்.. இதெல்லாம் கனவா நிஜமா.. அவளின் இடையை நறுக்கென்று கிள்ளினான் ராஜ்..

“ஐயோ ராஜ் ஏன் கிள்ளுன”

“நீ தான் நமக்கு நடந்த கல்யாணம் கனவா நிஜமானு குழம்பிப் போய் நின்ன..அதான் கிள்ளுனேன். பாத்தியா வலிக்கிது. அப்ப நிஜம் தான்டி என் அதிரூப அழகு சுந்தரி”

“ம்ம்ம்.. ராஜ் உங்க வீட்ல தெரியுமா”

“தெரியும்.. கண்டிப்பா இங்க வந்து ஒரு பேயாட்டம் ஆடுவாங்க..”

“உனக்கு பயமா இல்லயா”

“எதுக்குடி”

“உங்க அம்மாவ நெனச்சா”..

“அட போடி லூசு..அதெல்லாம் பாத்துக்கலாம் பாப்பா..எங்க கல்யாணம் முடிஞ்ச கையோடு மாமாவுக்கு ஒரு உம்மா கொடு”

“உம்மா? உனக்கு? ஓடிரு..சொல்லிட்டேன்..”நிலா வெட்கத்தோடு திரும்பி கொண்டாள். அவள் மேல் கை படாமல் சற்று குனிந்து அவள் பின்னங்கழுத்தில் இதழ் பதித்தான் ராஜ். சிலிர்த்து அடங்கினாள் நிலா. அவளை தொடாமல் இதழ் மட்டும் கொண்டு அவளை இமசித்தான்.அவளால் ஓட முடியவில்லை.. கண்ணாடி டேபிளை கெட்டியாக பிடித்து கொண்டாள். கண்கள் சொக்கி உதடுகள் பற்களிடம் சிக்கிக் கொள்ள உடல் நடுங்கி நின்றாள் நிலா.பின்னங்கழுத்திலும் அவளின் ப்ளௌஸ் தாண்டி தெரிந்த முதுகிலும் இதழ் ஒற்றல் நடத்தியவன் அப்படியே சற்று கீழிறங்கி முட்டி போட்டு வியர்வை வழிந்து கொண்டிருந்த அவள் இடையில் மீசையை வைத்து குறுகுறுப்பு மூட்டி அங்கே சத்தமாக ஒரு இச்சு வைக்க நிலா அப்படியே தொய்ந்து அவன் மடியில் விழுந்தாள்.

அவனும் சட்டமாக கீழே கால் நீட்டி அமர்ந்து மடியில் விழுந்தவளை மார் தாங்கி கொண்டான்.இருவரும் மோன நிலையில் இருக்கும் போது தான் அவனுக்கு முக்கியமான அழைப்பு வர அதனை தவிர்க்க முடியாமல் அவளிடம் சொல்லிவிட்டு சென்றான். அவனுமே எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு சீக்கிரம் கமலா வருவார் என்று..பலவிதமான கடுஞ்சொற்கள் பலவிதமான கேவல பார்வைகள் அனைத்தையும் தாண்டி கல் மனதாக இவ்வளவு தூரம் வந்தவளுக்கு கமலாவின் வார்த்தைகள் ஒன்றும் பெரிதாக படவில்லை.

ஆனால் அவர் தாலியயில் கைவைக்க வந்ததும் திருமண நாளன்றே மனசாட்சி இல்லாமல் அவளுக்கு சாபம் கொடுத்ததும் அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.ராஜ் அவளை பார்க்க நிலா அவனை பார்த்து இயல்பாக சிரிக்க முயலவும் அவனால் தாங்கவே இயலவில்லை. ஓடி வந்து அவளை கட்டி கொண்டான்… திருமணமான முதல் நாளே மனைவியை தாயின் சுடுஞ் சொற்களிலிருந்து காப்பாற்றாமல் போனது அவனின் குற்றமா அல்ல விதியின் பயனா?

தொடரும்..

Comments

  1. மாமியார் என்று
    ஒரு புள்ளே புடுங்கி போட்டால் அதுவும் கெத்து
    காட்டுமாம்😋😊😊

    ReplyDelete
  2. மாமியாரா அது பேய்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்