பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 2


நிலவு ஒரு பெண்ணாகி என்ற கவிஞரின் வரியை மெய்ப்பிப்பது போல அன்று தன்னுடைய ஒட்டு மொத்த அழகையும் திரட்டி நட்ட நடு கருப்பு வானத்தில் கோடி நட்ச்சத்திரங்கள் படை சூழ இலவம் பஞ்சு மேகங்கள் மென்மையாக தீண்டி செல்ல வட்ட வடிவ பால் வண்ணத்தில் நிலவு மகள் ஒய்யாரமாக பவனி வந்து கொண்டிருந்தாள்.நேரம் எப்படியும் நள்ளிரவு இருக்கும். நிசப்தம் எங்கும் பூச்சிகளின் ரிங்காரம் மட்டுமே க்ரிக் க்ரிக் என ஒலித்து கொண்டிருக்க கண்ணுக்கு எட்டிய வரை காரிருள் மட்டுமே தெரிந்தது.

இந்த காரிருள் இனி தன் வாழ்வில் ஒரு அங்கமாக இல்லை இல்லவே இல்லை முழு அங்கம் வகிக்க போகிறதை போன்ற பிரமை அவளுக்கு.உடலில் வியர்வை ஆறாக பெருக்கெடுத்து ஓட கொசுக் கடியினால் உண்டான தடிப்பு வேறு பெரும் அரிப்பாக மாற்றம் பெற பரபரவென்று சொரிந்தால் பரம சுகமாக இருக்கும் ஆனால் அழகான நீண்ட நகங்களை கொண்டிருந்தும் சொரிய முடியாமல் இருக்கும் கொடுமையை என்ன சொல்வது?

தன்னை இந்நிலைக்கு ஆளாகியவனை திட்டி தீர்த்து கொண்டிருந்தாள் அவள். இதுவே வேறு ஒருவளாக இருந்திருந்தால் இந்நிலைக்கு காரணமானவன் குடும்பத்திற்கே பத்து தலைமுறைக்கு சாபம் கொடுத்திருப்பாள்.ஆனால் இவள் அப்படி அல்ல. அதும் தனது நிலைக்கு காரணமான அவன் மேல் மனம் கொள்ளா அன்பு வைத்திருக்கும் அவளால் அவனை சபிக்க எப்படி முடியும்?

அன்பு பெரிய பொல்லாத பேரன்பு. அந்த எழவை வைத்து விட்டு பாவிமகள் படும் பாடு இருக்கிறதே படுங்கேவலம். இப்படி தன்னை நினைத்தே நொந்து நூலகி வெந்து வெதும்பி வெந்நீராய் கொதிக்கும் மனதுடன் கை கால்கள் கட்டப்பட்டு ஒரு இருட்டு அறையில் அடைப்பட்டு கிடந்தாள் நிலா.

ராஜ் அவளை கடத்தி வந்த நிமிடங்களை நினைத்து பார்த்தாள். மயக்க மருந்தை பயன்படுத்தியோ அல்லது கத்திமுனையில் அவளை நிறுத்தி அவன் அவளைக் கடத்தி வரவில்லை. அவள் வீட்டில் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உள்ளே நுழைந்து அதிர்ச்சியாக அவனை எதிர்நோக்கியவளை ஒரே கேள்வியில் தன்னுடன் வர வைத்திருந்தான்.

” நான் இங்க பிரச்சன பண்ண வரல. உன்கிட்ட கொஞ்சம் பேசணும். உண்மையாவே நீயும் என்ன லவ் பண்ணி இருந்தா இல்ல குறுக்க பேசாத..நா பேசி முடிச்சிறுறேன்.. ” அவன் பேச்சை இடை வெட்டி பேச முயன்றவளை அடக்கி விட்டு அவனே தொடர்ந்தான்.

” உண்மையாவே நீ என்ன லவ் பண்ணி இருந்தா அதாவது உன் மனசுகுள்ள, இப்போ வாய மூடிக்கிட்டு என்கூட வா. இல்ல நான் உன்ன லவ் பண்ணவே இல்ல நீதான் பைத்தியம் மாதிரி அப்படி நினைச்சுகிட்டு இருக்க அப்படின்னு நீ சொல்றதா இருந்தா என் கண்ண பத்து செகண்ட் பாத்து சொல்லு.. நான் வாய மூடிக்கிட்டு போயிருறேன்”.. அவள் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவன் கண்ணை பார்ப்பாள் அவன் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில். இருந்தும் எப்படியாவது சமாளித்து விடலாம் என தனக்குத் தானே தைரியம் சொல்லிக்கொண்டு அவன் கண்ணை நிமிர்ந்து பார்த்தாள். அதுதான் அவள் செய்த மாபெரும் தப்பு. அந்தக் கண்கள் அவளை வசியம் செய்தது..

அவள் தலை தானாக ஆடியது..

“நீயும் என்ன லவ் பண்ணிருந்தா பத்து ஊருக்கு கிழியுமே அந்த வாயி அத தொறந்து சொல்லு.. வாய்விட்டு சொல்ல முடியாத அளவுக்கு உன்னோட காதல் என்ன அவ்ளோ கேவலமானதா?அவனுடைய உதாசீனம் அவளை கோபப்படுத்தியது

“என் காதல கேவலம்னு சொல்ல இந்த உலகத்துல யாருக்குமே துப்புல்ல..ஆமா நானும் உன்ன லவ் பண்ணி தொலைக்குறேன் போதுமா..தகுதி இல்லாம உன் மேல என் காதல் வந்துருச்சு.. இது அபத்தமான லவ் ராஜ்.. இது உனக்கு வேணா.ப்ளீஸ் என்ன பேச வைக்காத.. இங்கேருந்து போயிரு.. நீ நல்லா அழகா இருக்க. அதே மாதிரி அழகான ஒரு பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கோ.. “

“போதும்.. உன் மேல எனக்கு எந்த உரிமயும் இல்ல.. அதான் உன்ன பேசவிட்டு வேடிக்க பாக்குறேன்.. இதுவே என்னோட தாலி உன்னோட கழுத்துல ஏறிருந்தா நீ பேசுற பேச்சுக்கு மூஞ்சி பிஞ்சு போயிருக்கும்..லவ் பன்றல்ல ம்ம்ம்.. அங்கிள் ஆன்ட்டி விக்ரம் எல்லோரும் நல்லா கேட்டுகிட்டீங்கல..உங்க வெண்ணிலா என்ன லவ் பண்றா..உங்களுக்கே நல்லா தெரியும்.கண்டிப்பா அவ என்ன தவிர வேறு யாரயும் கல்யாணாம் பண்ணிக்க மாட்டா.. எனக்கு அவ கூட பேசணும்.. இங்கே இருந்தா அவ சரியா பேச மாட்டா.. என்ன நம்பி அவள அனுப்பி வைங்க.. கண்டிப்பா எங்களோட வாழ்க்கைக்கு எது நல்ல முடிவோ அத நாங்க பேசி எடுப்போம்.”.

“தம்பி அவளுக்கு இஷ்டம் இல்லன்னா”என தாமரை ஆரம்பிக்க அவரை அடக்கிய மாறன்

“மித்ரன் நீங்க சொல்றது சரிதான்.. சின்ன வயசுல இருந்தே என் பொண்ணு எல்லாதுலயும் ரொம்ப கெட்டி.. நல்ல திறமைசாலி.. என்ன இருந்து என்ன அவளோட இந்த சீக்குனால எல்லாமே நாசமாப் போச்சு..அவ ரொம்ப பாவம்.. உங்கள மறக்க முடியாம அதே சமயம் தைரியமா ஏத்துக்க முடியாம வேதனை படுறா.. நீங்க ரெண்டு பேரும் மனசு விட்டு பேசுங்க.. பேசுனா கண்டிப்பா ஒரு நல்ல முடிவு கிடைக்கும். இங்கே இருந்தா அவ சரியா பேச மாட்டா. மித்ரன் உங்கள நம்பி என் பொண்ண அனுப்புறேன்” மறுத்துப் பேச முயன்ற வெண்ணிலாவை சரிக்கட்டி ராஜூடன் அனுப்பிவைத்தார் மாறன்.

“கண்டிப்பா உங்க பொண்ணு திரும்பி வரும்போது எங்க வாழ்க்கைக்கு எந்த முடிவ நல்லதோ அந்த முடிவ எடுத்துட்டு தான் வருவா?”காரில் கூட ராஜ் எதுவும் பேசவில்லை. நிலா அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தாள். அவள் பார்ப்பது தெரிந்தும் அவளை வேண்டுமென்றே புறக்கணித்தான்..

காரினுள் ஏசியை அதிகரித்து வைத்தான். அவனை பார்க்காமல் வெளியே வேடிக்கை பார்த்தவாறு வந்தவள் பல நாட்கள் உறக்கம் இல்லாமல் தவித்ததின் பலனாக சுகமாக சீட்டில் சாய்ந்து கண்ணயர ஆரம்பித்தாள்… வண்டியும் சரியாக டிராபிக்கில் மாட்டிக்கொள்ள சுகமான தூக்கம் அவளைத் தழுவி சென்றது.. ராஜ் திரும்பி நிலாவை பார்த்தான்..

“மயக்க மருந்துக்கு வேல இல்லாம பண்ணிட்ட..”மெல்ல அவனின் நுனி விரல் கொண்டு அவளது புருவங்கள் மூக்கு துவாரங்கள் இதழ்கள் தாடைகள் என ஒவ்வொன்றையும் ஸ்பரிசித்து பார்த்தான்.. வில் போன்று அடர்த்தியான வளைந்த புருவங்கள் தான் அழகு என்று யாரோ எழுதி வைத்திருந்தார்கள்.. அவர்கள் நிலாவைப் பார்த்திருக்க வேண்டும்.. அவளின் இயற்கையான மஞ்சள் முகத்தில் உங்களைச் சுற்றி வெண்மை படர்ந்து இருந்தது. புருவங்கள் இரண்டும் கருமை நிறம் இழந்து வெண்மையாக மாறி இருந்தது.. அதனை டார்க் ப்ரவுன் ஐ பென்சில் கொண்டு இயல்பு நிறத்திற்கு கொண்டு வந்திருந்தாள்.மூக்கு சிறிய அழகான மூக்கு.. அதன் துவாரங்களின் இருபக்கமும் வெண்மை படர்ந்து அப்படியே கீழிறங்கி வாய் தாடை என கழுத்து வரை இறங்கியிருந்தது.. அவளது கன்னங்கள் முழுக்க தொட்டால் உடைந்து விடுமோ என பயப்படும் அளவிற்கு முகப்பருக்கள் நிறைந்திருந்தது..

“நகத்த வெச்சு கிள்ளி வெச்சிருக்கா கருவாச்சி”அவளை வேண்டுமென்றே அப்படி கூப்பிட்டு கடுப்பாக்குவான் ராஜ்..வண்டிகள் நகர ஆரம்பித்ததும் லாவகமாக வண்டியை ஓட்டி ஓரிடத்தில் வந்து நிறுத்தினான்.. சத்தம் செய்யாமல் தன் பக்கம் இருந்த இறங்கியவன் நிலா பக்கம் வந்து கதவை திறந்து அவளை கைகளில் தூக்கிக் கொண்டான்.. அவனே ஸ்பரிசம் உணர்ந்து உறக்கம் கலைந்தவள் தன்னைத் தூக்கிச் செல்லும் ராஜை பார்த்து

“ராஜ் எங்க தூக்கிட்டு போற..எறக்கி வுடு நானே வரேன்”

“எறக்கி வுடுறதா அதுக்கு வாய்ப்பில்ல ராணி..மாமா தோள்ளுல சொகமா சாஞ்சிகிட்டு வா”

“ராஜ் கொன்றுவேன் உன்ன எங்க தூக்கிட்டு போற.. என்ன எடம் இது.. யாரோட வீடு”

“நம்ம வீடு”

“உன் வீடா.. உள்ள உன் அம்மா அக்கா எல்லாம் இருப்பாங்களே”

“எரும நம்ம வீட்டுன்னா நாம ரெண்டு பேரு மட்டும் இருக்க போற வீடு.. நமக்கு புள்ள பொறந்ததுக்கு அப்றம் எண்ணிக்க வேணும்னா அதிகரிக்கலாம்”

“உன் பேச்சே சரியில்ல.. என்ன விடு ராஜ்.. இது என்ன எடம்”நிலா அவன் கைகளில் திமிற ஆரம்பித்தாள். அவளின் என்பது கிலோ எடையை அவளை விட பதினைந்து கிலோ எடை கம்மியாக கொண்ட ராஜால் தாங்க முடியவில்லை. இருந்தும் பிடிவாதமாக அவளை தூக்கி கொண்டு உள்ளே வந்தவன் ஹாலில் அவளை இறக்கி விட்டான்.. தனது கண் கண்ணாடியை சரி செய்தவாறு வீட்டை சுற்றி பார்த்தவள்

“வீட்ல யாரும் இல்லயா”

“ஏன் என்ன பாத்தா மனுசனா தெரியலையா”ஆளில்லாத வீடு.. நிலாவின் பயத்தை தூண்டி விட்டது.வெளியே காட்டாமல் நின்று கொண்டிருந்தாள்.

“ஒக்காருடா”

“இல்ல வேணா”

“அப்ப நில்லு”என்று சொன்னவன் சோபாவில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டான். அவன் முன்பு முறைந்தப்படி நின்று கொண்டிருந்தாள் நிலா..அவளின் முகத்தை பார்த்து தனக்குள் சிரித்து கொண்டே

“இங்க பாரு பாப்பா உன்கிட்ட சொல்றதுக்கு ஒன்னும் இல்ல.. உன்ன பொண்ணு பாத்துட்டு போனதுல இருந்து இப்ப வரை நீதான் என் பொண்டாட்டினு நா முடிவு பண்ணிட்டேன். அதுலயும் உன் போட்டோவ பாத்துதும் புடிச்சு போச்சு.. இத்தன நாளு நல்லா தானடி பேசிட்டு இருந்த திடிர்னு என்ன வந்துச்சு”

“வேணா ராஜ்..அப்ப பேசணும்னு தோணுச்சு. இப்ப வேணான்னு தோணுது. ப்ளீஸ் என்ன விட்ரு..”அதற்கு மேல் அவனிடம் பேச பிரியமில்லாமல் நிலா அங்கிருந்து செல்ல முயல படக்கென்று எழுந்தவன் அவள் கையை பிடித்து தர தரவென்று இழுத்து சென்று ஒரு அறையில் தள்ளி அடைத்து விட்டான்.இதை சற்றும் எதிர்பாராத நிலா

“ராஜ் என்ன பண்ற.. ஒழுங்கு மரியாதையா கதவ தொற..”

“முடியாதுடி என்ன என்னானு நெனச்சு.. இந்த ஒரு மாசமா என்கிட்ட ஃபோன்லயே குடும்பம் நடத்துல.. ராஜ் மாமா ராஜ் மாமானு உருகி வழியல. இப்ப என்ன கேடு உனக்கு..எனக்கு தெரியும் என் அம்மா இல்லனா அக்கா ஏதாச்சும் சொன்னாங்களா அதான் இப்டி பேசுறியா.. இங்க பாரு பாப்பா.. இன்னைக்கு பூரா இங்கதான் இருக்க போற. நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம்..”

“ராஜ் பொருக்கி இந்த பேச்செல்லாம் என்கிட்ட வெச்சிக்காத.. மூஞ்ச ஒடச்சிருவேன்.. என் அப்பாவுக்கு தெரிஞ்சது”

“தெரியும் பாப்பா.. உன் அப்பாவுக்கு நல்லா தெரியும்.. அவருகிட்ட சொன்னேன். நாளைக்கு உங்க பொண்ணு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிடுவானு அடிச்சு சொன்னேன்.இன்னைக்கு ஒரு நைட் ஏன் தெரியுமா.. நீ என்ன பத்தி புரிஞ்சிக்க தான். எனக்கு வேற வழியில்ல.. இந்த வீடு அவுட்டர் ல இருக்கு. சோ நீயா தப்பிக்க முடியாது. ஒக்காந்து நல்லா யோசி.. நா போயி சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வரேன். அதுக்கு முன்னாடி குட்டிம்மா ஒண்ணே ஒன்ன புரிஞ்சிக்கோ. இந்த ஒலகத்துலயே நா ரொம்ப நேரம் சலிக்காம பாத்த ஒரு உருவம் நீதான். என்னிக்கும் உன் உருவம் எனக்கு சலிப்பு தட்டாது..என்ன என்னோட காதல புரிஞ்சிக்கோ”

ராஜ் சென்று சொன்னபடியே அவளுக்கு உணவை வாங்கி வந்து அறை கதவை படாரென்று திறந்து உள்ளே வைத்து விட்டு அவள் சுதாரிப்பதற்குள் கதவை அடைத்து விட்டான்.அவனை சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தாள் நிலா.. பசி வயிறை கிள்ள கோழி பிரியாணி அவளை அழைக்க வேறு வழியின்றி உணவை உண்டு விட்டு அவள் கொரிப்பதற்காக அவன் வாங்கி வந்திருந்த மிட்டாய் சாக்லேட்டை சாப்பிட்டு கொண்டே அறைக்குள் நடை பயின்றாள்.

அன்று அவன் பெண் பார்க்க வந்ததிலிருந்து இன்றுவரை அவளது மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டான். ராஜ் என்ற பெயரில் ஒரு நாளைக்கு எத்தனை முறை தனக்குத்தானே கூறிக் கொள்வாள் என்று அவளுக்கே தெரியவில்லை.. சில நேரம் அவளை பாப்பா என்பான் சிலநேரம் காதல் கொஞ்சி விளையாடும் போது குட்டிமா என்பான்.வார்த்தைகளால் அவனது காதலை அவன் கூறிவிட்டான்.இவளுக்கு அந்த ஒரு வார்த்தை சொல்ல தயக்கம். வார்த்தையாக சொல்லாவிட்டாலும் கைபேசி வழியே அவனுடன் தனது வாழ்க்கைக் கனவுகளை இன்பமாக காண கற்றுக் கொண்டாள். விடிந்தால் கல்யாணம்.. அவளுக்கே தெரியாத அவளின் கல்யாணம்.

அவளைப் போன்ற பெண்களுக்கு எல்லாம் திருமணம் நடக்குமா என்று அவளுக்கு இருந்த கேள்வியை உடைத்து நாளை அவளுக்கு திருமணம்.. ஒருவிதத்தில் உடல் முழுவதும் பூக்கள் பூத்த மாதிரி ஒரு சிலிர்ப்பு அவளுள் பரவியது.மறுநிமிடம் அவனுக்குத்தான் பொருத்தமானவள் தானோ என்ற பாலுணர்வு அவளை வேதனை அடையச் செய்தது.ராஜ் அவனை நினைக்கும் போது அவளுக்கு சிரிப்பாக இருந்தது. படங்களில் பார்ப்பதைப்போல வில்லத்தனமாக பிளான் பண்ணி அவள் அப்பாவின் சரிகட்டி குடும்பத்தின் முன்பே அவளை பேசி பேசியே கடத்தி வந்து ஒரு அறையில் பூட்டி அவளுக்கு வேண்டிய யாவற்றையும் செய்து அவளின் விருப்பமான எழுத்தாளரை கதை புத்தகங்களை வாங்கி வைத்து அவள் எப்பொழுதும் விரும்பி உண்ணும் மிட்டாய் உட்பட அனைத்தையும் வாங்கி வைத்திருப்பவனை நினைக்கையில் என்னவென்று சொல்வது..

அவனை மறுக்க அவளிடம் காரணம் இல்லை. ஆனால் திருமணம் செய்து கொள்ள அவளின் மனம் இடம் தரவில்லை.நிலா ஒன்றை யோசிக்க தவறிவிட்டாள். இந்த சமூகமும் நமது உறவுகளும் என்றும் நம்மோடு வராது. நம்மைப் பழிக்கவும் நமது வெற்றியை கொண்டாட மட்டுமே இந்த சமுதாயமும் உறவுகளும் முண்டியடித்துக் கொண்டு முன்னே வரும்.. ஆயிரம்தான் பெற்றவர்கள் உடன்பிறந்தவர்கள் இருந்தாலும் நம்மை புரிந்து கொள்ள நமது கனவுகளை நேசிக்க நமது வெற்றிக்காக கைத்தட்ட நமது சிரிப்பில் மகிழ நமது கண்ணீரில் ஆறுதல் சொல்ல எவ்வளவு பெரிய துன்பம் நமக்கு வந்தாலும் அதை அத்தனையும் சரி பண்ண நமது நிழலாக ஒரு உறவு வேண்டும். மனிதனாக பிறந்த நாம் அனைவருக்கும் உணர்வுகள் உண்டு.

நாய் பூனை போல எந்த ஒரு நாய் பூனையோடும் உறவு கொள்ள மனிதனால் முடியாது.. மனதைப் போல நமது உடலை பகிரவும் நமக்காக ஒருவர் வேண்டும். உடலை சதையாக பார்க்காமல் காம இச்சைகளை தூண்டும் அங்கங்களாக பாராமல் அந்த உடலுக்குள் இருக்கும் மனதினையும் அந்த குட்டி மனதிற்குள் இருக்கும் ஆசைகளையும் ஏக்கங்களையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு நல்ல துணையாக நாம் இருக்க வேண்டும்.ஒருவரின் முக்கிய அடையாளமே அவரது முகம் தான். நிலா எங்கே வெளியே சென்றாலும் அவளைப் பார்ப்பவர்கள் ஒரு நிமிடமாவது அவர்கள் பார்வையை அவள் மேல் செலுத்தி விட்டு செல்வார்கள்.

சில சின்ன குழந்தைகள் அவளைப் பார்த்தவுடன் தன் பெற்றோரை கட்டிக் கொள்ளும். சிலர் அவளைப் பார்த்து சினேகமாக சிரிப்பார்கள் அந்த சிரிப்பில் பரிதாபமான பார்வை ஒளிந்திருக்கும்.சிலரோ அவளைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு விசித்திர ஜந்துவை பார்ப்பது போல தெரியாத மாதிரி சென்று விடுவார்கள்.அவளுக்கு ஏளனப் பார்வையும் பிடிக்காது பரிதாப பார்வையும் பிடிக்காது. உடன் படிக்கும் பிள்ளைகள் அவளை கேலி கிண்டலால் பலமுறை வேதனைப் படுத்தி உள்ளனர். அப்போதெல்லாம் அவர்களிடம் இருந்து அவளைக் காத்தது அவளின் உயிர் தோழி ஸ்வீட்டி.. ராஜ் பற்றி நிலா சொல்லியதும் ஸ்வீட்டிக்கு அவ்வளவு சந்தோஷம்..

ஸ்வீட்டி திருமணம் முடிந்து கணவனோடு சிங்கப்பூரில் உள்ளாள். அவளுக்கு இரண்டு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. அடுத்த மாதம் இங்கேயே வேலை மாற்றலாகி விட கணவன் குழந்தையோடு நிரந்தரமாக இங்கேயே வந்து விடுவாள்.. நிலா பலதும் நினைத்து இரவு வெகு நேரம் உறங்காமல் விழித்திருந்தாள். அவளைப்போலவே வெளியே நடை பயின்று கொண்டிருந்தான் ராஜ்.அவன் எடுத்துள்ள முடிவு எவ்வளவு ஆபத்தானது என்று அவனுக்கு புரிந்தது.அவனுடைய குடும்பத்தை எதிர்த்து இந்த முடிவை அவர் எடுத்துள்ளான். நியாயமான அவனின் ஆசைக்கு அவனது குடும்பம் இணங்கவில்லை. அடுத்தவரின் பிள்ளை என்றால் அதன் குறையை பெரிதாகப் பேசும் மற்றவர்கள் இதுவே தங்கள் குழந்தைக்கு அதேபோல் பிரச்சினை என்றால் என்ன செய்வார்கள்?குணாவிடம் இருந்து ராஜூக்கு அழைப்பு வந்தது.

ஒரு நிமிடம் அவன் பேசியதை கேட்டு வருகிறேன் என்றதோடு அழைப்பை துண்டித்து விட்டான்.அறையின் உள்ளே நடந்து நடந்து ஒரு முடிவுக்கு வந்த நிலா கதவை திறக்க சொல்லி தட்டிக் கொண்டிருந்தாள். ராஜ் கதவைத் திறக்கவே இல்லை. கடுப்பான நிலா அங்கிருந்த போட்டோ பிரேமை சுவரில் அடித்து உடைத்தாள்.அந்த சத்தம் கேட்டு ராஜ் கதவை திறந்தான். அவனைத் தள்ளிவிட்டு வெளியே ஓட முயன்ற நிலாவை பின்னே ஓடி வந்து கெட்டியாக பிடித்துக் கொண்ட ராஜ் அவளை மீண்டும் அதே அறையில் தள்ளி முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்திருந்த கயிறை எடுத்து வந்து அவளது கை கால்களை கட்டி போட்டான்..

நிலா திமிர திமிர அவளது கை கால்களை கட்டி போட்டவன் அங்கிருந்து வெளியேறி விட்டான்.சும்மா இருந்தவனை சுரண்டிவிட்டு இப்பொழுதே கை கால்கள் கட்டப்பட்டு சுவரில் சாய்ந்த நிலையில் அமர்ந்து இருந்தாள் நிலா.திடீரென மின்சாரம் தடைபட்டது.இருட்டைப் பார்த்து நிலாவுக்கு பயமாக இருந்தது.நல்லவேளையாக ஜன்னலை திறந்து இருக்க தெரு விளக்கின் ஒளி அவள் இருந்த அறைக்குள் வீசியது. அந்த ஒளியின் தயவால் சற்று பயம் தெளிந்து அமர்ந்திருந்தாள்.

இதுவரை ராஜிடம் இருந்து எப்போது வீட்டிற்கு செல்வோம் என்று எதிர் பார்த்துக் கொண்டிருந்தவள் இப்போது ராஜ் எப்பொழுது வீட்டிற்கு வருவான் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தாள்..

தொடரும்..

Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்