பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 4

காலையில் நிலா கண்விழிக்க அவள் முன் பட்டு வேஷ்டி சட்டையில் அமர்ந்திருந்தான் ராஜ். நன்றாக கண்களை கசக்கி அவனை பார்த்து விட்டு மீண்டும் உறங்க போனாள் நிலா. அவளது செய்கையை கண்டு புன்னகைத்தவன்

“அடியே தூங்கு மூஞ்சி, எந்திரிடி.. கல்யாண மாப்ள எழுந்து குளிச்சு சாதாரண வேஷ்ட்டி இடுப்புல நிக்காதுனு கட்டிக்கோ ஒட்டிக்கோ வேஷ்டி வாங்கி ஒருமாதிரி ஒட்டி வெச்சிட்டு ஒக்காந்து கெடக்கேன்.. உனக்கு ஒய்யாரமா தூக்கம் கேக்குது.. “

“எனக்கு கல்யாணம் வேணா.. நீயே பண்ணிக்கோ போ

“”சரி உன் தலையெழுத்து நாள பின்ன நம்ம பிள்ளைங்க கல்யாண போட்டோ பாத்துட்டு என்னம்மா அப்பா தாலி கட்றது கூட தெரியாம கொறட்டு விட்டு தூங்குறியே இதான் உன் டக்கானு கேப்பாங்க நீயே ஏதாச்சும் சொல்லி சமாளிச்சுக்கோ”என்றவன் தன் பாக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து நிலா கழுத்தில் கட்ட அவளருகே சென்றான். அவன் சொல்லியது விளங்க பட்டென்று கண் திறந்தவள் அவளருகே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த தாலியை கண்டதும் படக்கென்று எழுந்து அமர்ந்தாள்.அவன் கரத்தை பிடிக்க போகவும் தான் தன்னுடைய கரத்தை பார்த்தாள்.

இரவு அவள் தூங்கியதும் கோன் மருதாணி வாங்கி வந்து அவளுக்கு வைத்துவிட்டிருந்தான் ராஜ். கோன் மருதாணி நன்றாக சிவந்து மெரூன் வர்ணத்தில் காட்சியளித்தது. அவள் கரங்களில் மட்டுமல்லாமல் அவளது பாதத்திலும் பரதநாட்டியம் ஆடும் பெண்களை போல மருதாணி வைத்து விட்டிருந்தான். அவைகளை ஆசையாக பார்த்த நிலா

“ஏன் ராஜ் உண்மையாவே இன்னைக்கு நமக்கு கல்யாணமா”

“ஆமா”

“வீட்ல என்ன சொல்லுவாங்க”

“உங்க வீட்ல நாளைக்கு விருந்து.. எங்க வீட்ல இன்னைக்கே விருந்து”

“ராஜ்”நிலாவின் குரல் நடுங்கியது..அவளருகே அமர்ந்து அவளது வலது கரத்தை எடுத்து தனது இருக் கரத்தின் நடுவே புதைத்துக் கொண்டவன்

“உண்மையாவே இன்னைக்கு நமக்கு கல்யாணம்.. யாரு என்ன சொன்னாலும் எனக்கு கவல இல்ல.. என் சார்பா என்னோட ஃரண்ட்டு ரிஷி வருவான். உன் சார்பா உங்க வீட்டு ஆளுங்க வருவாங்க.. அதாவது உன் தம்பி வருவான்”

“அப்ப என் அப்பா அம்மா”

“அப்பாவுக்கு என் பிளான் தெரியும்டா. நா உன்ன மீட் பண்றதுக்கு முன்னாடி அவரை மீட் பண்ணி இன்னைக்கு நமக்கு கல்யாணம் அப்படின்னு சொன்னேன்.. மொத கேட்டு ஷாக் ஆயிட்டாரு.. அப்புறம் நல்லா யோசிச்சு பாத்துட்டு இந்த முடிவும் நல்லது தானு சொன்னாரு.ஆனா உனக்கு கடைசி வர இன்டெரெஸ்ட் இல்லனா அலுங்காம குழுங்காம இந்த தங்கத்த தூக்கிட்டு வந்து வீட்டுல விட்டுடுங்கனு சொல்லித்தான் உன்ன அனுப்பி வெச்சாரு..உன் அப்பாவும் லவ் மேரேஜ் பண்ணவரு தானே..

என்ன அப்டி பாக்குறே எல்லாம் சொன்னாரு ஒரு நாள்.உன் அம்மாவ லவ் பண்ணி ரெண்டு வீட்லயும் சம்மதிக்காம உங்கப்பாவுக்கு நிரந்தரமா வேல இல்ல ரொம்ப ஏழ்மையான குடும்பம்னு உங்க அம்மாவ கட்டி கொடுக்க ஒத்துக்கல உங்க தாத்தா லூசு கிழவன். அப்றம் உங்க அம்மாவும் அப்பாவும் ஒரே ஓட்டமா ஓடி கோவில்ல தாலி கட்டிக்க ரெண்டு வீட்லயும் அடிச்சு பத்தி வுட்டுடாங்க.அப்றம் உங்க அப்பா ஒரு சாதாரண கம்பெனியில வேலைக்கு சேந்து மாடா ஒழைச்சு முன்னுக்கு வந்து இன்னைக்கு மேனேஜர் லெவல்ல இருக்காரு. சொந்தமா வீடு காரு பேங்க் பேலன்ஸ் ஊரு பக்கம் நாலு ஏக்கர் நெலம்னு உங்க அம்மாவ தங்கத்துல இழைச்சு வெச்சிருக்காரு..

நீ பொறந்து தான் எல்லாமே வந்துச்சுனு உன் அப்பாவுக்கு உன் மேல அப்டி ஒரு பாசம்.. நாசமா போய் நிக்கிறப்ப திரும்பி கூட பாக்காத தாய் புள்ள கூட்டம் நாம நல்லா நாலு காசோடு இருக்குறோம்னு தெரிஞ்சா கடவா பல்லு தெரியுற அளவு இழிச்சிகிட்டு வந்து சேரும். அப்டித்தான் ரெண்டு குடும்பமும் ஒன்னு சேந்துச்சு..வாழ்க்கையில நல்ல நிலைமைக்கு வர வரைக்கும் அவங்க பட்ட பாடு இருக்கே..ரொம்ப பாவம். உங்க அப்பா என்கிட்ட என்ன சொன்னாரு தெரியுமா..நெறைய நேரம் அவருக்கு சாகணும்னு தோணிருக்கு..அந்த முடிவுக்கு அவரு போகாத ஒரே காரணம் உன் அம்மா.

அவங்க அவரு மேல வெச்சிருந்த லவ்வும் நம்பிக்கையும். உன் அம்மா குடும்பத்துக்கு முன்னாடி அவங்கள ராணி மாறி வெச்சிக்க மனுஷன் மாடா ஒழச்சிருக்காரு..உங்க அம்மா இல்லனா அவரு இல்ல.அப்டிபட்டவருக்கு தன்னோட பொண்ணு மனுசு புரியாதா.. அவரு என் கிட்ட கேட்டதே எந்த காரணம் கொண்டும் என் பொண்ண எவ்ளோ சண்ட வந்தாலும் என்ன வேணும்னாலும் சொல்லி திட்டிக்கோ. கெட்ட வார்த்த கூட ஓகே.

ஆனா அவ ஸ்கின் ப்ரோப்லம்ம மட்டும் குத்தி காட்டி பேசிராதீங்கனு சொன்னாரு பாரு நா உடைஞ்சே போய்ட்டேன்டி..பாப்பா நம்ம கல்யாணம் உங்க வீட்ல எல்லோருக்கும் சம்மதம் தான். ஆனா தான் கல்யாணம் மாறி தன்னோட பொண்ணு கல்யாணமும் இப்டி ஆயிருச்சேன்னு ஒரு வருத்தம் உங்க அம்மாவுக்கு. அதும் உன் பெரியம்மா மக தான் இதுக்கெல்லாம் காரணம்னு அவங்களுக்கு தெரியாது. தெரிஞ்சா பாவம்.. தாங்க மாட்டாங்க.”

“அப்பாவுக்கு ஃபோன் பண்ணி பேசிக்குறேன் ராஜ்”

“இந்தாடா பேசு”என்றவன் அவளது கைபேசியை கொடுத்தான்.வாங்கியவள் தன் தந்தைக்கு அழைக்க இதற்காகவே காத்திருந்தவர் போல அழைப்பை ஏற்றார் மாறன்.

“அப்பா”

“அம்மாடி.. நீ என்ன கேக்க போறேன்னு அப்பாவுக்கு தெரியும்..நிலா குட்டி நீ மித்ரன் தம்பிய விரும்புறன்னு அப்பாவுக்கு தெரியும். ஆனா ஏன் அத ஒத்துக்க மாட்டுறேனு எனக்கு சரியா புரியல..நீயும் சொல்ல மாட்ட.நிலா குட்டி நம்ம நிரைய நேசிக்குறவங்கள விட குறைய நேசிக்குறவங்க தான் எப்பவும் நம்ம கூட இருப்பாங்க.. தம்பி உன்ன பாத்துட்டு போன மறுநாளு அவர் என்ன வந்து பாத்து பேசுனாரு. நான் கேட்டேன் எப்டி என் பொண்ண பாத்ததும் புடிச்சிதுன்னு..என்ன சொன்னாரு தெரியுமா…

நிலா சாதாரண பொண்ணு இல்ல.. அவ ரொம்ப ஸ்பெஷல் அவ ஒரு யூனிக் பீஸ்னு சொன்னாரு..ஆயிரத்துல ஒருத்தங்களுக்கு தான் இந்த மாறி நிற குறைபாடு இருக்கும்னு சொன்னாரு.. நீ ஆயிரத்துல ஒருத்தியாம்”நிலா திரும்பி ராஜை பார்த்தாள். அழகாக அவளை பார்த்து கண்ணாடித்தான்.அவனை முறைத்து விட்டு

“அப்பா”என்றாள்.

“செல்லம் மித்ரன் தம்பிய தவிர உன்ன யாராலயும் புரிஞ்சிக்க முடியாது. எனக்கு பரிபூரண சம்மதம். அம்மா.. அவளுக்கும் இஷ்டம் தான். ஆனா அவங்க வீட்ல ரொம்ப கேவலமா நம்மள பேசிடாங்க டா.அதான் அவளுக்கு தாங்க முடியல. நீ மித்ரன் தம்பிய கல்யாணம் பண்ணா இங்க வர வேணாம்னு சொல்லிட்டு யாரும் பாக்காத நேரத்துல பூஜ ரூமுக்குள்ள போய் நின்னு என் பொண்ணு மித்ரன் தம்பி கூட சந்தோசமா வாழணும்னு வேண்டிகிட்டு இருக்கா”

“நான் அம்மா கிட்ட பேசி பாக்கவாப்பா”

“வேணா டா.. அவளுக்கு நானும் விக்ரமும் இதுல கூட்டுனு தெரியாது. அவள பத்தி தெரியாதா உனக்கு.. இன்னக்கி ரொம்ப நல்ல நாளுடா.உன் வாழ்க்கை சந்தோசமா இருக்கும்.அப்பா எப்பவும் உன்கூட இருப்பேன். சரியா..நீ இப்ப அப்பா கிட்ட சொல்லு.. உனக்கு மித்ரன் தம்பிய கட்டிக்க சம்மதமா”நிலா ராஜை பார்த்தாள். அந்த கண்கள் முழுவதும் அவள் மட்டுமே தெரிந்தாள். அவளுக்கான காதல் அதில் அப்பட்டமாக தெரிந்தது. அவன் மார்பில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு

“அப்பா நா ராஜ்ஜ கல்யாணம் பண்ணிக்குறேன்.கூடிய சீக்கிரம் ரெண்டு வீட்லயும் எங்கள ஏத்துக்குவிங்கனு நா நம்புறேன்.. எங்கள ப்ளெஸ் பண்ணுங்கப்பா”ராஜ் குதூகலமாக நிலாவை கட்டிக்கொள்ள மாறன் மனம் நிறைந்து கண்களில் கண்ணீர் துளிர்க்க மகளை ஆசீர்வதித்தார்..

“என்னடி பொண்டாட்டி”

“என்ன மாமா”

“ஐயோ பாப்பா இப்டி கூப்டு மனுசன மூடு ஏத்தாத.. போயி குளிச்சிட்டு ரூம்ல டிரஸ் வெச்சிருக்கேன். ரெடியாயிட்டு வா.”

“எல்லாம் ரெடியா வெச்சிருக்க கேடி”அவன் தலைமுடியை பிடித்து மாவாட்டி சிரித்த படியே குளிக்க போனவள் அடுத்த அரை மணி நேரத்தில் குளித்து முடித்து வெளியே வந்து ராஜ் வாங்கி வைத்திருந்த இளஞ்சிவப்பு நிற பட்டு சேலை உடுத்தி அதற்குப் பொருத்தமான அணிகலன்களையும் அவன் தேர்ந்தெடுத்து வாங்கிய நேர்த்தியை உள்ளூர வியந்து கொண்டே அணிய அவள் அழகாக ஒப்பனை செய்ய சில ஒப்பனை உபகரணங்களையும் வாங்கி தயாராக வைத்திருந்தான்.ஒப்பனை முடிந்து கண்ணாடியில் தன்னை பார்த்து அசந்து போனாள் வெண்ணிலா..

இளஞ்சிவப்பு நிற சேலையில் ஆங்காங்கே குட்டி குட்டி தங்கப் பூக்கள் கொடியோடு ஓடுவதைப் போல சேலை மிகவும் அழகாக இருந்தது. அவள் நிறத்திற்கு மிகவும் பொருத்தமாக சேலை எடுத்து இருந்தான் ராஜ்.நீண்ட கூந்தலை பூரான் ஜடை போட்டு அழகாக மல்லிகை சூடி மிதமான ஒப்பனையில் அவள் கதவை திறந்து வெளியே வர ராஜ் சிலையாகி போனான்.

இளஞ்சிவப்பு என்னவள் கட்டியிருக்கும் சேலையின் நிறமா அல்ல

என்னவள் வதனம் பூண்டிருக்கும் நிறமா?

தன்னைப் பார்த்து அழகாக கவிதை சொன்னவனை ஆசையாக நோக்கினாள் நிலா. அவளை அழைத்து கொண்டு கோவிலுக்குச் சென்றான் ராஜ். அதுவரை இருந்த மனநிலை மாறி ஒருவித பதற்றம் நிலாவை ஆட்கொண்டது. வியர்வை ஆறாகப் பெருகியது. அவளின் நிலை உணர்ந்து அவளது கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டான் ராஜ். காரைவிட்டு இறங்கி இருவரும் கை பிடித்த நிலையில் கோவிலின் உள்ளே செல்ல அவர்களை ஓடிவந்து வரவேற்றது விக்ரம் தான்.

“அக்கா நீ இவ்ளோ அழகா.. என் கண்ணே பட்ரும் போல” நிலா அவனை செல்லமாக அடிக்க அவனோ

“மாமா என்னானு கேளுங்க உங்க பொண்டாட்டிய “என்று ராஜிடம் குற்றம் வாசித்தான்.

“விக்ரம், அம்மா அப்பா வரலையா” தெரிந்தே இருந்தாலும் மனதை அடக்க முடியாமல் கேட்டாள்.

” இல்லக்கா.. அப்பாவுக்கு ஆசைதான்.. ஆனா அம்மா தனியா இருப்பாங்க அவங்கள பொறுத்த வரைக்கும் நீ மாமா கூட ஓடிப் போயிட்டா..”

“டேய் அவங்க கண்ணு முன்னாடியே சொல்லிட்டு தானடா போனேன்”

“போன ஆனா திரும்பி வரலையே ” விக்ரம் அப்படிக் கூறியதும் நிலா கோபத்தோடு ராஜை திரும்பி முறைக்க அதற்குள் ராஜின் நெருங்கிய நண்பன் ரிஷி அவர்கள் அருகே வந்தான்.

“மச்சான் எல்லாம் ஓகேவா இருக்கு.. முகுர்த்தம் நேரம் நெருங்குது.வா போலாம்”என அவர்களை அழைத்துக்கொண்டு சன்னிதிக்குச் செல்ல அங்கே இவர்களுக்காக காத்திருந்தது வேறுயாருமில்லை ஸ்வீட்டியும் அவளது கணவனும் தான். ஸ்வீட்டி கையில் அவளது குழந்தை அழகாக சிரித்துக் கொண்டிருந்தது. தோழியை எதிர்பாராமல் இங்கே கண்டதும் நிலா ஓடி சென்று அவளை அணைத்துக் கொண்டாள். இருவர் கண்களிலும் கண்ணீர் திரண்டது.

சரியாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு இதேக் கோவிலில் தான் ஸ்வீட்டிக்கு திருமணம் நடந்தது.. வந்திருந்த சிலர் நிலாவை சுட்டிக்காட்டி இவளுக்கு திருமணமே ஆகாது என்று மனதை கூறுபோட ஸ்வீட்டி திருமணம் முடிந்து ஒப்பனைகளை கலைக்கும் போது தன்னுடைய கூந்தலில் சூடி இருந்த மலர் சரத்தில் ஒரு சரத்தை எடுத்து நிலா தலையில் சூட்டினாள்.

“வென்னு என் பாட்டி சொல்லுவாங்க. யாருக்காச்சும் கல்யாணம் ஆகாம இருந்தா அவங்களுக்காக மனசால வேண்டி கல்யாண பொண்ணு தன்னோட தலையில இருந்து கொஞ்சம் பூவை எடுத்து அந்த பொண்ணு தலையில வச்சு விட்டா கண்டிப்பா கல்யாணம் நடக்கும்னு.. நீ வேணும்னா பாரேன் அடுத்த வருஷம் உனக்கு கல்யாணம் நடக்கும்..நான் உன் கல்யாணத்துல தோழி பொண்ணா இருப்பேன்..”(இது உண்மைங்க..யாராச்சும் உங்களுக்கு தெரிஞ்ச பொண்ணுங்க கல்யாணம் ஆகாம இருந்தா கல்யாண பொண்ணுங்க கடைசியா மேக்கப் கலைக்குறப்போ உங்க தலையில இருந்து கொஞ்ச பூவ எடுத்து கல்யாணம் ஆகாத பொண்ணோட தலையில நல்லா வேண்டுகிட்டு வெச்சு விடுங்க.ஒரு நைட்டு அந்த பூவ அவங்க வெச்சிருந்தா போதும்..கண்டிப்பா இது நடக்கும்.என் அம்மா சொன்னாங்க)

அன்று ஸ்வீட்டி சொன்னது இன்று இருவருக்கும் ஞாபகம் வந்தது.

“நான் சொன்னேன்ல.. என்ன அடுத்த வருஷமே கல்யாணம்ன்னு சொன்னேன்.. கொஞ்சம் தள்ளி ஒன்ற வருஷம் கழிச்சு கல்யாணம் நடக்கப் போகுது.. ஆனா சூப்பர் மாப்ள கெடச்சிருகாரு..”

“நீ எப்டி டி வந்த.. வர இன்னும் மாசம் இருக்குனு சொன்ன”

” அதெல்லாம் சும்மா சர்ப்ரைஸா இருக்கட்டும்னு சொல்லாம இருந்தேன்.. ராஜ் அண்ணா எனக்கு போன் பண்ணி இன்னிக்கி உன்னோட கல்யாணம்னு சொன்னாரு அடுத்த வாரம் வர்றதா இருந்தேன் இந்த செய்திய கேட்டதும் இன்னிக்கே வந்துட்டேன்.. நான் இல்லாம உனக்கு கல்யாணம் நடந்துருமா”

“நீயாச்சும் வந்தியே.. ரொம்ப சந்தோஷம் டி.. வீட்ல நிறைய பிரச்சன.”

” தெரியும்டி விக்ரம் சொன்னான்.. எல்லாத்தையும் விடு இப்ப முகூர்த்தம் வரப்போகுது.. சிரிச்ச முகத்தோட கல்யாணம் பண்ணிக்க..வா “

ஸ்வீட்டி நிலாவை ராஜ் அருகே நிற்க வைக்க ஐயர் மந்திரம் சொல்ல ரிஷியும் விக்ரமும் கொடுத்த மாலையை இருவரும் தங்கள் கையில் வாங்கி ஒருவர் கழுத்தில் இன்னொருவர் சிரித்த முகத்துடனே போட்டுக்கொள்ள மாங்கல்யம் தந்து நானேனா என ஐயர் மந்திரம் முழங்க ராஜ் மித்ரன் வெண்ணிலா கழுத்தில் மூன்று முடிச்சிட்டான். வெண்ணிலாவின் வெண்புள்ளிகள் நிறைந்த நெற்றியில் செந்தூர திலகமிட்டு அவளது பொன் தாலியில் குங்குமத்தை வைத்தான் ராஜ். ரிஷி எதையோ ராஜ் கையில் கொடுக்க ராஜ் நிலா முன்பு மண்டியிட்டு அமர்ந்தான். நிலா புரியாமல் அவனைப் பார்க்க விக்ரம்

” அக்கா மாமா உனக்கு மெட்டி போட்டுவிட போறாரு.. அதுக்குதான் இந்த போஸ்ல உட்கார்ந்து இருக்காரு.. என் கைய புடிச்சுக்கோ.”என்றான். நிலா வெட்கத்தில் சிவக்க அவளது சிவந்த பாதத்தை எடுத்து தன் தொடையின் மேல் வைத்து மெட்டி போட்டு விட்டான் ராஜ்.

இவை அனைத்தையும் அழகாக தனது கேமராவில் பதிவாகி கொண்டிருந்தான் ஸ்வீட்டியின் கணவன்.. வெண்ணிலா இப்பொழுது திருமதி வெண்ணிலா ராஜ் மித்ரன் ஆகிவிட்டாள். இனி அவளது சுக துக்கங்களில் விருப்பு வெறுப்புகளில் தனது இறுதி மூச்சு உள்ளவரை பங்கெடுத்து கொள்வான் ராஜ்..

தொடரும்..

Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்