பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 13


ராஜ் தன்னிடம் உண்மையை கூறாமல் மறைத்ததை நிலாவால் தாங்கிக் கொள்ள இயலவில்லை.ஒருவேளை முக்கியமில்லாத விஷயம் என்று அவன் அதைக் கூறாமல் இருக்கலாம். அவளாகவே பேச்சை எடுத்துக் கொடுத்தாள்..

“ராஜ்”பாதி உறக்கத்தில் இருந்தவனின் தோள்பட்டையை சுரண்டினால் நிலா.ஒரு முறை கண்ணை திறந்து பார்த்தவன் மீண்டும் கண்களை மூடிக் கொண்டு

“என்னடா தூங்கலையா.. இத்தன மணிக்கு பேய் மாதிரி உட்கார்ந்து இருக்க..” அரை உறக்கத்தோடு கேட்டவன் டக்கென்று கண்களைத் திறந்து

“உனக்கு ஒன்னும் இல்லயே..தலை வலிக்குதா.. சொல்லுடா என்ன பண்ணுது”.. அன்று தனக்கு நடந்ததை எண்ணி இப்படி வினவுகிறான் என்று புரிந்துகொண்டு நிலா

“தல எல்லாம் நல்லாதான் இருக்கு.. எனக்குதான் தூக்கம் வரமாட்டுது. நீயும் கடைக்கு போயிட்டு வீட்டுக்கு ரொம்ப டயர்டா வர்ற.. நாள் பூரா வீட்டில இருக்கேன் எனக்கு போரடிக்காதா.. வீட்டுக்கு வந்தா என்கிட்ட கொஞ்சம் பேசு ராஜ்”அவள் என்னமோ சாதாரணமாக தான் கூறினாள் ஆனால் அவளின் பேச்சு அவனுக்கு வலியைக் கொடுத்தது. இந்நேரம் அவள் வீட்டில் இருந்திருந்தால் சாப்பிட்டு சுகமாக உறங்கிக் கொண்டிருந்திருப்பாள்.வாய் ஓயாமல் பேச அவளது அம்மாவும் தம்பியும் இருப்பார்கள். வேலை முடிந்து திரும்ப வந்தால் அவளது அப்பா மாறனும் ஜோதியில் ஐக்கியமாகி விடுவார்.

காதலை உணர்த்துகிறேன் கத்தரிக்காயை புரிய வைக்கிறேன் என்று அவசரகதியில் அவளைத் திருமணம் செய்து ஒரு மாதம் கூட ஆகவில்லை அதற்குள் பொழுது போகவில்லை என்னுடன் பேசு என்று அவனின் மனைவி அரைத்தூக்கத்தில் அவனை எழுப்பி யாசகம் கேட்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டானே? தன்னையே நொந்துகொண்டு

“ஸாரிடா குட்டிம்மா பெஸ்டிவல் டைம் வேறயா.. கூட்டம் அள்ளுது. புது டிசைன்ஸ் ரெடி பண்ற ஒர்க் வேற. எல்லாம் சேந்து கழுத்த புடிக்குது.அதான் வந்தோன தூங்கிட்டேன்.இனிமே இப்டி செய்ய மாட்டேன்.. வீட்டுக்கு வந்தோன சாப்டு என் செல்ல பொண்டாட்டி கூட ஒரு மணி நேரம் டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு தான் தூங்குவேன்.. ஓகேவா”

“ம்க்கும் நீதான் மத்தியான சாப்பாட்டுக்கு கூட வர்றது இல்லயே..” சலுகையாக அவன் நெஞ்சில் தலை சாய்த்துக் கொண்டவள் அவனிடம் சிணுங்க

“சொன்னேன்ல செம ஒர்க்குடி..”அவளை அணைத்துக்கொண்டான் ராஜ்.

“இன்னைக்கு கூட வேலையா உனக்கு.. நான் காலையில நீ கிளம்பறப்ப கேட்டேன் தானே.. லன்ச் சாப்பிடுறியானு.. அப்போ நீ சமைச்சு வையு செல்லம் நான் வந்து கொட்டுகிறேனு நீதானே சொன்ன. உனக்காக பாத்து பாத்து சமைச்சு வச்சா அய்யா ஆளையே காணோம்”

அவன் மனதில் சுருக்கென்றது.வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல அவன் ஏன் வரவில்லை என்று காரணத்தை மறைமுகமாக வினவினாள்.அவன் என்ன ஆசைப்பட்டா வராமல் இருந்தான்? எவ்வளவு வேலைகள் இருந்தும் அதை எல்லாவற்றையும் ஒதுக்கி ரிஷியின் தலையில் கட்டியவன் மனைவி தனக்காக ஆசையாக சமைத்து வைத்திருக்கும் உணவை ஒரு பிடி பிடிக்கும் ஆசையில் கிளம்ப தானே செய்தான். அந்த ஒரு அழைப்பு மட்டும் வராமல் இருந்திருந்தால் இப்பொழுது இந்த அனாவசிய கேள்விக்கு பதில் சொல்லிக் கொண்டிருப்பானா? வேங்கையாக மாறி அவள் மேல் பாய்ந்திருப்பானே..

” ராஜ்”நிலா அவன் பதிலுக்கு காத்திருக்க”சரிடி இனிமே சொன்னா சொன்ன நேரத்துக்கு டான்னு வந்திருவேன்..நிலா குட்டி என்ன எப்பவும் நீ நம்புனும்.. யாரு வந்து என்ன சொன்னாலும் நீ அதெல்லாம் மண்டையில போட்டுக்க கூடாது.. எதுவா இருந்தாலும் என் கண்ண பார்த்து நேரடியாக கேளு.ஆனா என்ன விட்டுட்டு போகணும்னு மட்டும் முடிவெடுக்காதே..”அவன் ஒன்றை மனதில் வைத்துக் கூற நிலா வேறொன்றை எண்ணிக்கொண்டாள்.அவன் நெஞ்சிலிருந்து எழுந்தவள்

“நீயே சொல்லிட்ட கேட்காம இருந்தா நல்லாவா இருக்கும்.. ராஜ் நான் இன்னிக்கு உன்ன ஷாப்பிங் மாலில் பாத்தேன்.கூடவே அந்த சிந்துவயும் பாத்தேன். நீங்க ரெண்டு பேரும் ஐஸ்கிரீம் பார்லர்ல் உக்கார்ந்து அப்படி என்ன பேசினீங்க?அவள பாத்தத ஏன் இப்ப வரைக்கும் நீ மூச்சே விடமாட்டுற?நான் ஒன்ன சந்தேகப் படல ராஜ்..சொல்லப்போனா இது ஒரு விஷயமே இல்ல தான். ஆனா என்னால அப்படி விட முடியல.. எனக்கு இன்செக்யோறா இருக்கு..”மார்புக்கு நடுவே கைகளைக் கட்டிக்கொண்டு அவனை நேர் பார்வை பார்த்து கேட்டால் நிலா.

எதுவாக இருந்தாலும் என்னை பார்த்து கேள் என்று அவன் சொல்லி ஒரு நிமிடம் கூட முழுதாக ஆகவில்லை அதற்குள் இப்படி ஒரு கேள்வி வந்து விழுமென அவன் நினைத்தே பார்க்கவில்லை.. மனதிற்குள் போட்டு சந்தேகம் எனும் விதையை விதைக்காமல் அதை தன்னிடம் நேரடியாக கேட்ட அவளின் சமயோஜித புத்தியை மனதிற்குள் பாராட்டினான்.

“அந்த ஷாப்பிங் மால்க்கு தான் நீங்க வந்தீங்களா? ஏன்டி என்ன பாத்த தானே.. உள்ள வந்து என் பக்கத்துல உக்காராம ஏன் வெளிய நின்னு எட்டி பாத்துட்டு போன..”

“ஆமா உங்க முன்னுக்கு ஷாருக் கான் ஒக்காந்து இருக்காப்புல..பாத்தோன நா பறந்துகிட்டு வந்து உங்க பக்கத்துல உக்காந்து ஹாய் சார் நா உங்க ஃபேன் ப்ளேண்டர் பிரிட்ஜ் டீவினு சொல்றேன்.. அந்த சிந்து என்ன பாரு என் உடம்ப பாருன்னு காட்டிக்கிட்டு நெளிஞ்சிட்டு இருக்கா..நீயும் அவள பாத்து பல்ல இழிச்சிகிட்டு ஒக்காந்து இருக்க.. அந்த நாய் கெட்ட கேட்டுக்கு ஐஸ்ஸு வேற.. ஏன்டா இத்தன நாளுல எனக்கு ஒரு குச்சி ஐஸ்ஸ கண்ணுல காட்டிருப்பியா நீயு”

“அட கிரகம் புடிச்சவளே..அல்ப ஐஸ தின்னது தான் உன் பிரச்சனயா”

“பேச்ச மாத்தாத.. எதுக்கு அந்த சிந்து உன்ன பார்க்க வந்தா..இல்ல நீ அவள பாக்க போனியா..தனியா பார்த்து பேசுற அளவுக்கு உங்களுக்குள்ள என்ன இருக்கு..உன்ன பார்த்து பேசுறதுனா வீட்டுக்கு வர வேண்டியதுதானே.. எதுக்கு தனியா?”

“சந்தேகம்.. ம்ம்ம்..”கடையில் இருந்து கிளம்பும் போது அவனுக்கு ஒரு அழைப்பு வந்தது எடுத்துப் பார்த்தான் புது எண். அழைப்பை ஏற்றவுடன்

“மித்து மாமா..நா தான் சிந்து.. உங்க கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.. கங்கா அண்ணியோட வாழ்க்கைய பத்தி.”

“ஏன் கங்காவுக்கு என்ன?”அவன் ஆடாவிட்டாலும் அவனின் சதை ஆடியது..

“நேர்ல வாங்க சொல்றேன்”நிலா செல்லவிருக்கும் அதே ஷாப்பிங் மால் பெயரைக் கூறி அவனை அங்கே வந்து காத்திருக்க கூறினாள். ஏற்கனவே இரண்டு நாள் முன்பு குணாவை அழைத்து பேசிக் கொண்டிருக்கும் போது அவனுக்கும் கங்காவிற்கும் சிறிய மனஸ்தாபம் அதனால் இருவரும் மூன்று நாட்களாக பேசவில்லை என்று அவன் கூறியிருந்தான்.கணவன் மனைவி இடையே நடக்கும் விஷயங்களில் தலையிட விரும்பாமல் ராஜ் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இப்பொழுது சிந்து அழைத்து இவ்வாறு கூறியதும் என்னவோ ஏதோ என்று அவன் மனம் அடித்துக் கொண்டது.சிந்து சொன்ன மாலுக்கு சென்று காத்திருந்தவன் அவள் சொன்ன நேரத்திற்க்கு வராமல் போகவும் கடுப்பாகி விட்டான்.. உண்மையில் சிந்து அவன் வருவதற்கு முன்பே அங்கு வந்து காத்திருந்தாள். அவன் தனக்காக காத்திருப்பதை காண்கையில் அவளுக்கு பேரானந்தம்.ராஜ் அழைக்க

“ட்ராபிக்ல மாட்டிகிட்டேன் மாமா வரேன்”என அவசரமாக பேசி அழைப்பைத் துண்டித்தாள். இப்படியே நேரம் கிடத்தி இறுதியாக ராஜ் முன் சென்று நின்றாள். அவளின் உடையை கண்டு முகம் சுளித்தவன் முறைக்க..

“மாமா இப்படி உட்கார்ந்து தனியா பேசறத யாராவது பாத்தா வீணா ஏதாச்சும் பிரச்சனை வரும்..ஏற்கனவே உங்க கல்யாணத்துல நிறைய பிரச்சனை. சோ வாங்க ஐஸ்க்ரீம் பார்லர் போய் உக்காந்து பேசலாம்..”அவள் சொல்வதும் சரி என பட அவளுடன் ஐஸ்கிரீம் பார்லர் சென்று பேச தொடங்கினான்.சிந்து நேரடியாக பேச்சை ஆரம்பிக்காமல் சுற்றி வளைத்துக் கொண்டு இருக்க

” இதோ பாரு சிந்து நான் ஒன்னும் உன்ன மாதிரி வெட்டியா இல்ல.. இது ஃபெஸ்டிவல் டைம். எவ்ளோ பிசினு உனக்கே தெரியும்..தெரிஞ்சும் ஏன் இப்படி டைம் வேஸ்ட் பண்ற.. சொல்ல வேண்டிய விஷயத்தை நேறா சொல்லு”கடுகடுப்பாக கூறினான். அவனிடம் தனது விஷத்தை கக்கினால் வேலைக்காகாது என்பதை அனுபவரீதியாக தெரிந்து வைத்திருந்த சிந்து

“அது வந்து மாமா.. என் அண்ணன் இருக்கானே அந்த மாங்கா மடையன்..அவன் இப்போலாம் சரியே இல்ல..யாரு கூடவோ ரொம்ப நேரம் ஃபோன்ல தனியா பேசுறான்..நடு ராத்திரியில வெளிய போயிட்டு வரான். அண்ணி ஏன் இப்படி பண்றனு கேட்டதுக்கு உன் வேலைய பாருன்னு மூஞ்சில அடிச்ச மாதிரி பேசறான்.. நான் என் தம்பி கிட்ட சொல்லறேன்னு அண்ணி மிரட்டுனத்துக்கு என் தங்கச்சிய கல்யாணம் பண்ணிருந்தா உன் தம்பி பேச்சுக்கு நா ஆடிருப்பேன். இப்போ உன் தம்பி தான் என் பேச்சுக்கு கைய கட்டி நிக்கனும்னு எகத்தாளமாக பேசிருக்கான்.பாவம் அண்ணி சொல்லிட்டு தேம்பி அழறாங்க”

சிந்துவை நம்புவதற்கு ராஜ் ஒன்றும் பச்சை குழந்தை அல்ல.இவ்வளவு தைரியமாக குணா கங்காவிடம் பேசிருக்க சாத்தியமே அல்ல.கங்காவை கண்டதும் குணாவின் கால்கள் இரண்டும் தகதிமிதா தாளம் போட ஆரம்பித்துவிடும். இதில் அவன் இவ்வளவு தைரியமாக பேசினான் என்றால் உலகம் அழிந்து விடாதா? கணவன் மனைவிக்குள் இருக்கும் சிறிய பிணக்கை பெரிய பிரச்சினையாக்கி கங்காவை காரணம் காட்டி தன்னை மடக்கி விடும் திட்டம் இதில் ஒளிந்திருப்பதை ராஜ் கண்டுகொண்டான். அதை சிந்துவிடம் நேரடியாகக் கூறாமல்

“சரி நீ வீட்டுக்குப் போ..இந்த பிரச்சனையை நான் பாத்துக்குறேன்..” இதை மட்டும் கூறி அவள் கிளம்பினாளோ இல்லையோ இவன் கிளம்பிவிட்டான். இப்பொழுது தன் முன் வாயை பிளந்து கதை கேட்டுக் கொண்டிருக்கும் மனைவியின் கண்களுக்கு நேரே சொடக்கு போட்டான் ராஜ்.

” சந்தேகம் தீர்ந்ததா மேடம்”

“ம்ம்.. என்னா என்ன குத்தம் சொல்ற மாதிரி கேக்குற..நீ வந்த வேகத்துல இன்னிக்கு நான் சிந்துவ பார்த்தேன்.. அவ நான் ஒரு சிந்து காவடிச்சிந்துனு பாட்டு பாடுனா அதைக் கேட்டுட்டு நொந்து போயிட்டேனு நீ சொல்லிருந்தா நான் எதுக்கு சந்தேகம் பட போறேன்..கொஞ்சம் விட்டா சந்தேகப் பேய்னு நீ எனக்கு பட்டம் கட்டிருவ போல..”

“உன் பேர்ல தப்பு இருந்தாலும் ஒத்துக்கவே மாட்ற.. சரி போனா போட்டும். தப்பு என் மேலதான். நான் வந்து வாசப்படியில கால் வைக்கறதுக்கு முன்னாடியே இன்னைக்கு சிந்துவ பாத்தேன் அப்டினு சொல்லிருக்கணும்.. சொல்லல.. தப்பு தான் இனிமே இப்படி பண்ணமாட்டேன்..” அவளை இழுத்து தன் மேல் சாய்த்துக் கொண்டு பேசியவனின் இதழில் முத்தமிட்டாள் நிலா. அவர்களின் முத்த விளையாட்டு மொத்தமாக வினையாக இறுதியில் இருவரும் ஆடைகளை இழக்க வேண்டிய சூழ்நிலை. சூழ்நிலை கைதிகள் ஆகிய இருவரும் அப்படியே தூங்கி விட மறுநாள் பொழுது அழகாக விடிந்தது.

என்னதான் ராஜ் சொன்ன விஷயங்களை நிலா அந்த நேரம் ஏற்றுக்கொண்டாலும் சிந்துவை பற்றிய அவளது பயம் முழுதாக தெளிந்த பாடில்லை. இந்த நிலையில் அபியின் பிறந்த நாளும் வந்தது. நிலா வாழ்வில் அது ஒரு கருப்பு தினமாக மாறியதை என்னவென்று சொல்ல?

தொடரும்

Comments

  1. அப்டி என்ன நடக்க போகுது

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்