பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 21


வெண்ணிலா வானில்

அதில் என்னென்ன மேகம்

ஊர்கோலம் போகும் அதன்

உள்ளாடும் தாகம் புரியாதோ

என் எண்ணமே அன்பே

கடையில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது..தீபாவளி பண்டிகை நெருங்க நெருங்க கடையில் கூட்டம் அதிகமாகியது. ராஜ் வியாபாரத்தை கவனித்துக் கொண்டிருக்க அவனுக்கு வீட்டிலிருந்து அழைப்பு வந்தது. கைப்பேசியை எடுத்துப் பார்த்தவன் அதனை உயிர்ப்பித்து பேசாமல்  அணைத்து வைத்தான். மீண்டும் மீண்டும் கைபேசி சினுங்க எரிச்சலோடு எடுத்து காதில் வைத்து ஹலோ என்றான்..

"டேய் உனக்கு ஃபோன் எடுக்க இவ்ளோ நேரமா.. எத்தன தடவ உனக்கு ஃபோன் பண்றது.. வேணுமுனே ஃபோன எடுக்காம இருக்கியா..இங்க யாரு செத்து கெடந்து ஃபோன் பண்ணாலும் எடுக்க மாட்ட அப்படித்தான.."எரிச்சலோடு கேட்டார் கமலா.

"நீங்க எல்லாம் உலகமே அழிஞ்சாலும் இப்ப போக மாட்டீங்க.. அதனால வெட்டி கதை பேசாம ஏன் ஃபோன் பண்ணிங்கன்னு சொல்லுங்க.."பதிலுக்கு சிடு சிடுத்தான் ராஜ்.

"டேய் மித்ரா நம்ம கங்காவுக்கு என்னமோ ஆச்சுடா.. ரெண்டு மூனு நாளா சாப்பிடாம அரைகுள்ளயே அடைஞ்சு கெடந்தா..நா எவ்வளவோ பேசிப் பாத்துட்டேன் அவ ரூம விட்டு வெளிய வரல.. ஒருவேளை அவளோட புருசன நெனச்சி இப்படி இருக்கான்னு நானும் விட்டுட்டேன்.. இன்னிக்கு பார்த்தா ஒரு படுதாவை எடுத்துப் போட்டுக்கிட்டு எங்கேயோ வேகமா கிளம்பி போனா.. போனவ, போனவ தான். இன்னும் வீடு வந்து சேரல. எனக்கு ரொம்ப பயமா இருக்குடா. அவளுக்கு நம்பள விட்டா வேற யாரு இருக்கா.. மனசு உடைஞ்சு ஏதாச்சும் பண்ணிக்க போறா. நீ கொஞ்சம் அவளத் தேடி பாரு டா.."

"அக்கா போயி இவ்ளோ நேரமாச்சு.. அப்பவே ஃபோன் பண்ணாம நீ என்ன பண்ண"

"அது நா டீவி பாத்துட்டு இருந்தேன்டா. அப்டியே தூங்கிட்டேன்.எனக்கு ரொம்ப பயமா இருக்கு மித்ரா.. எல்லாம்"

"ஆங் சரி சரி நீ பதறாத நா அக்காவ பாத்து கூட்டிட்டு வரேன்"கமலா என்ன சொல்ல வருகிறார் என்று தெரிந்து அவரை முழுதாக சொல்லவிடாமல் பேச்சை துண்டித்தான் ராஜ். கங்கா எங்கே சென்றிருப்பாள்?அவளுக்கு என்ன நடந்தது? அவனுக்கு தெரிந்த கங்காவின் தோழிகளுக்கு அழைத்து பார்த்தான். அனைவருமே கங்காவை பார்க்கவில்லை என்று கூறினார்கள்.

கங்கா வழக்கமாக செல்லும் பார்லர் ஷாப்பிங் சென்டர் அனைத்திற்கும் சென்று தேடினான்.  அங்கேயும் அவளைக் காணவில்லை. ஒருவேளை பிள்ளைப் பாசம் முற்றி தன் வீட்டிற்கு சென்று விட்டாளோ எனும் அற்ப ஆசையில் நிலாவிற்கு அழைத்து கேட்டான்.அவளும் அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என கூறிவிட்டாள்.வேறு எங்கே சென்றிருப்பாள்? இதற்கு மேலும் தாமதியாமல் குணாவிற்கு அழைத்தான் ராஜ்.

குழந்தையைப் பற்றிய விஷயம் என அழைப்பை ஏற்ற குணாவிற்கு அவருடைய மனைவியை காணவில்லை என்ற செய்தி இடியாக இறங்காமல் சிறு அதிர்வையே கொடுத்தது."என்ன மித்ரா சொல்ற.. உங்கக்காக காணோமா..இதெல்லாம் நடக்க சான்ஸே இல்லயே. எதுக்கும் நீ வெண்ணிலாவ உஷாரா இருக்க சொல்லு..புள்ளய தூக்கிட்டு போய் அழகுக்காக பலிகொடுத்துர போறா.."

"குணா"

"என்ன குணா? உன் அக்கா செய்யுறவ தான"

"அது இருக்கட்டும்.. கொஞ்சம் அவள தேட ஹெல்ப் பண்ணுங்க.அவ கிடைக்கலைன்னா குழந்தை மேல தான் எல்லாம் வந்து விடியும். ஆயிரம் இருந்தாலும் கங்கா என் அக்கா, உங்க மனைவி".. ராஜின் வார்த்தையை கேட்டு கொதித்த குணா, இருந்தாலும் நிதானமாக பேசினான்.

"மித்ரா எனக்கு அவ எப்பவும் போற ஃப்ரண்ட்ஸ் வீட்டு அட்ரஸ் தெரியும். அங்க போயி பாரு.. இல்லனா போலீஸ்ல ரிப்போர்ட் பண்ணிரு"இதற்கு மேல் குணாவை கேட்பதில் பயனில்லை. குணா கொடுத்த  விலாசத்திற்கு சென்று பார்த்தான். அங்கே கங்கா வரவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.  இரவு முழுவதும் கங்காவை தேடி அலைந்தான். தெரிந்தவர் அனைவரிடமும் கங்காவை பற்றி விசாரித்தான். யாருமே கங்கா இருக்கும் இருப்பிடம் பற்றி கூறவில்லை.

ஒரு பக்கம் கமலா வேறு ஃபோன் மேல் ஃபோன் போட்டு கங்காவுக்கு என்ன ஆயிற்று என ஒப்பாரி வைத்தார்.அவருக்கு சமாதானம் சொல்லி அழைப்பைத் துண்டிக்க இந்தப்பக்கம் நிலா அழைத்தாள்.அவள் ராஜிற்கு ஆறுதல் சொல்லி தைரியம் கொடுத்தாள்.மாற்றி மாற்றி தைரியம் சொல்லி தன்னுடைய சகோதரியை தேடி அலைந்து இறுதியில் அவளை கண்டுபிடிக்க முடியாமல் போக பயந்துபோய் காவல்துறையின் உதவியை நாடினான் ராஜ்.

இன்ஸ்பெக்டராக இருக்கும் அவனது கல்லூரி நண்பனின் உதவியோடு கங்காவை தேடி அலைந்தான்.  இன்ஸ்பெக்டர் சசி ராஜிற்கு நம்பிக்கையூட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தான். சோர்ந்து போய் வீடு வந்து சேர்ந்தான் ராஜ்.  அவனைப் பார்க்கவே பாவமாக இருந்தது நிலாவிற்கு. அவளை முதன் முதலாக பார்க்கும் போது எவ்வளவு சூட்டிகையாக இருந்தான். அவன் முகத்திலிருந்த தேஜஸ் இப்போது மங்கிவிட்டது. இவளைத் திருமணம் செய்ததில் இருந்தே அடி மேல் அடியாக ஒவ்வொரு பிரச்சனையையும் தலைதூக்கி நிற்கிறது.

சுய பச்சாதாபத்தில் சுருண்டு விழ கூட அவளுக்கு நேரமில்லை.அங்கே மரவட்டை போல சோபாவில் சுருண்டு படுத்து கிடந்தான் ராஜ்.அவனை நெருங்கி அவனது தலைமுடியை தடவினாள் நிலா.கண்களைத் திறக்காமல் அவளது கைகளைப் பற்றி இழுத்து அமர வைத்தவன் அவள் மடியில் படுத்துக்கொண்டான்.

"என்னாச்சு ராஜ். அண்ணி கெடச்சாங்களா?"

"ம்ஹும்"

"ஐயோ எங்க போய்டாங்க..அத்த ரொம்ப பயந்து போயிருப்பாங்க ராஜ்.. நீங்க இங்க வந்துடிங்க.கெளம்புங்க.."

"எங்க"

" உங்க வீட்டுக்கு"

"என் வீட்டுல தான் இருக்கேன்.."

"ப்ச் சரி உங்க அம்மா வீட்டுக்கு.."

"எதுக்கு"

"என்ன கேள்வி இது ராஜ்.இந்த நேரம் நீங்க உங்க அம்மா கூட தான் இருக்கணும்..அவங்க ரொம்ப உடைஞ்சு போயிருப்பாங்க..அவங்களுக்கு ஆறுதலா நீங்க பக்கத்துல இருக்கணும்..நீங்களே இப்படி உடைஞ்சு போயிட்டா அத்தைக்கு யாறு ஆறுதல் சொல்லுவா. இந்த நேரம் பாத்து உங்க மாமா குடும்பம் ஊர்ல இல்ல.. அவங்க இருந்தாலாவது அத்த அமைதியா இருப்பாங்க.."

கங்கா காணாமல் போனதை அறியாத நிலாவை வசை பாட வாயெடுத்தவர் கமலா.அந்த கமலா இப்பொழுது ஆறுதலின்றி தவித்துக் கொண்டிருப்பார் என்பதை யூகித்து கணவனை அங்கே செல்ல கெஞ்சிக் கொண்டிருக்கிறாள் நிலா..இருவருமே பெண் தானே?  ஏன் ஒருவருக்கு ஒருவர் குணாதிசயம் வேறுபடுகிறது? இதைப் பற்றி சிந்தித்தால் இப்பொழுது இருக்கும் பிரச்சினைக்கு ஒரு முடிவு காண இயலாது.. நிலாவின் வற்புறுத்தலின் பேரில் பலமுறை கவனம் சொல்லிவிட்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றான் ராஜ்.

அவனுடன் நிலா வருவதாக கூற அவளை வர வேண்டாமென மறுத்து விட்டான். குமுதா குடும்பத்திடம் நிலா தனியாக இருப்பதைக் கூறி அவளை பத்திரமாக பார்த்துக் கொள்ள சொல்லி காலையில் வருவதாக கிளம்பிச் சென்றான். அங்கே கமலா சாப்பிடாமல் மகளை எண்ணி வேதனையில் சுருண்டு கிடந்தார்.அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. என்ன செய்வது?

அவனைக் கண்டதும் வாரி சுருட்டி எழுந்தவர்"மித்ரா, அக்கா எங்கடா..அவள பாத்துட்டியா?அவ நல்லா இருக்காளா? கூட்டிட்டு வந்துட்டியா அவள?"என்று வாசலுக்கு சென்று பார்த்தார் கமலா.

"ம்மா கங்காவ கண்டு பிடிக்க முடியல..போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணிருக்கேன்.. என்னோட ஃப்ரன்ட் சசி தெரியும்ல. அவன் கிட்ட சொல்லிருக்கேன்..கண்டிப்பாக கங்காவ கண்டுபுடிச்சிடலாம்"

தன்னால் முடிந்த அளவு கமலாவை தேற்றினான் ராஜ்.அவனின் ஆறுதல் மொழிகள் கமலாவை சமாதானமடைய வைக்கவில்லை.எங்கெங்கோ சுற்றி பேச்சு இறுதியில் குழந்தையின் மேல் வந்து விழுந்தது.குழந்தை பிறந்த நேரம் தான் கங்கா தன் வாழ்வை இழந்தாள்,இப்பொழுது அவளை இழந்து இந்த குடும்பம் வாடுகிறது என ஒப்பாரி வைத்தார்.இந்த நிலையில் அவரைக் கடிந்து கொள்ள அவனால் முடியவில்லை.அவன் ஏதாவது ஒன்றை சொல்லப்போக அது இன்னும் குழந்தைக்கு சாபமாக வந்து முடியலாம்.எனவே அமைதி காப்பதே இப்பொழுது மிகச்சிறந்த தீர்வு என உணர்ந்து கொண்டவன் பேசாமல் சென்று படுத்துக் கொண்டான்.

மறுநாளும் கங்காவை தேடும்பணி தொடர்ந்தது. அவள் இறுதியாக ஒரு தோல் ஆய்வு மருத்துவமனைக்கு சென்றதாக சசி கூறினான். அவள் ஏன் அங்கே செல்ல வேண்டும் ஒருவேளை குழந்தைக்கு உள்ள பிரச்சனையை பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க சென்றிருப்பாளோ? என்ற ஒரு எண்ணம் வந்த உடனேயே அதனை தலையை உலுக்கி விரட்டியடித்தான் ராஜ். இப்படி எல்லாம் நடக்கவே வாய்ப்பு குறைவாயிர்றே.

மறுநாளும் இரவாக கமலா என்ன சொன்னாலும் பரவாயில்லை என்று நிலா குழந்தையை தூக்கிக்கொண்டு கமலா வீட்டிற்கு வந்துவிட்டாள். ராஜ் இதனை சற்றும் எதிர்பார்க்கவில்லை" ஏ பாப்பா இங்க வந்த" நிலா பேச வருவதற்குள்

"ஆமா பாப்பா வழி தவறி வந்திருக்கும்..  சண்டாளி இவ வந்து என் குடும்பத்துல கால வெச்சா, அவ்ளோ தான் நல்லா இருந்த என் குடும்பம் நாசமா போயிருச்சு..எல்லாம் இவளால தான்.ராசி கெட்டவ.. அவள மாறியே குடிய கெடுக்க பொறந்துருக்கு பாரு குட்டி பிசாசு..என் மவ வாழ்க்கய முழுங்கிருச்சே..இனிமே என்ன நடக்குமோ.. என் தங்கம் எங்க என்ன கஷ்டப்படுறாளோ.. டேய் மித்ரா இவள வெளிய போக சொல்லுடா"ஆங்காரமாக கத்தினார் கமலா.

"அம்மா அவ என் பொண்டாட்டி நீ என்ன சொன்னாலும் அவ கைல தூக்கி வெச்சிருக்கிறது  உன்னோட பேர புள்ள..அத மறந்துட்டு பேசாத.என் பொண்டாட்டி இங்கதான் இருப்பா.. என் மருமகளும் எங்க கூட தான் இருப்பா..  இந்த மாதிரி அடுத்தவங்க வீட்டுப் பிள்ளைய பேசிப் பேசி தான் இன்னிக்கு உன் மக காணாம போயிட்டா..கொஞ்ச நஞ்ச ஆட்டமா ஆடுனிங்க ரெண்டு பேரும்.. அந்த குணா வாயில்லாத பூச்சி தான்..ஆனா அவன மாதிரி ஒருத்தன எங்கியாச்சும் தேடி கண்டுபிடிக்க முடியுமா..உன்னோட மக கொழுத்து போய் அவளோட வாழ்க்கைல அவளே மண்ணள்ளிக் கொட்டிகிட்டா..அதுக்கு வீணா என்னோட பொண்டாட்டிய குறை சொல்ற வேல வெச்சுகாதே..

ஒன்னுமே தெரியாத இந்த பச்ச மண்ண சாபம் விடுறீங்க இதுதான் நீங்க எல்லாரும் தேடுற அழகா? அழகு அழகுனு வெளிய தேடி அலையுறிங்களே உண்மையான அழகு எங்க இருக்கு தெரியுமா..நல்ல மனசுல..என் நிலா வெளித்தோற்றத்துல வேணும்னா நீங்க எதிர்பார்க்கிற அழகுல இல்லாம இருக்கலாம்..ஆனா அவளோட மனசு அழகோட ஒப்பிட்டு பாக்குறப்ப நீங்க எல்லாரும் அவளோட கால் தூசிக்கு வர மாட்டீங்க..வயசாச்சே தவிர உனக்கு மண்டையில அறிவே இல்ல.. உனக்கே அறிவு இல்லாதப்போ எப்படி நீ பெத்த பொண்ணுக்கு நல்லத சொல்லப் போற.."

"ராஜ், பெரியவங்க கிட்ட என்ன பேசுற"நிலா அவனை தடுத்தாள்..அவளை உதறித் தள்ளியவன்

"பெரியவங்க யாரு இவங்க? வாய மூடு நிலா.. என்னிக்காச்சும் பெரிய மனுஷி மாதிரி இவங்க நடந்துருக்காங்களா? உன்ன ஒழிச்சு கட்ட அலைஞ்சாங்க.. இப்ப பட்டுவ ஒழிக்க அலையுறாங்க..இவங்கல்லாம் மனுச ஜென்மங்களே இல்ல.."ராஜ் கத்திய கத்தலில் வீரிட்டு பயந்து அழுத்த இருதயாவை நிலாவிடமிருந்து தூக்கிக் கொண்டு அவனது அறைக்குள் சென்றான்.

நிலா செய்வதரியாது அங்கேயே நின்றாள். அவளால் கமலாவை நெருங்கி தைரியம் கூற இயலவில்லை. ஒருவித பயம். அதற்கு தோதாக கமலாவும் அவளை தீப் பார்வை பார்க்க அந்நேரம் "நிலா"என்ற ராஜின் அழைப்பிற்கு இணங்க அறைக்கு ஓடினாள் நிலா.

காளைப் பாண்டியனின் குடும்பம் காமதேனுவின் உறவில் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தது. சிந்து தோழிகளுடன் பார்ட்டி என கூறி கோவா சென்று விட்டாள். காளைப் பாண்டியனுக்கு கங்கா காணாமல் போன விஷயம் தங்கை மூலம் தெரிந்தும் அவர் அதனை கண்டுகொள்ளாமல் கிளம்ப வேண்டிய நாளை வேண்டுமென்றே தள்ளிப் போட்டார்.

கங்கா காணாமல் போய் மூன்றாவது நாள் காலை சசி ராஜை அழைத்தான்."மித்ரா உன் அக்கா இருக்குற இடம் தெரிஞ்சிருச்சு"

"எங்கடா"

"தேனி பக்கத்துல.."

"அக்கா எதுக்கு அங்க போனா"

"தெரியல.. லோகேஷன் ஷேர் பண்றேன்.. சீக்கிரம் கிளம்பு..நா அங்க இருக்குற இன்ஸ்பெக்டர் கிட்ட பேசிட்டேன்.அவர் ஸ்பாட்க்கு போய்ட்டாரு"..சசி அனுப்பிய லோகேஷன் வந்த அடுத்த நொடி கிளம்பி விட்டான் ராஜ். அவனோடு நிலா கமலாவும் சென்றனர். அவர்கள் அங்கே சென்று சேரும் போது கங்கா அங்கே தான் இருந்தாள்.ஆனால் பழைய கங்காவாக இல்லை.ஒரு பைத்தியக்காரியை போல் இருந்தாள்.

தேனியில் கங்கா பள்ளி தோழி ஒருத்தியின் வீட்டில் இருந்தாள். தோழிக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. கணவன் வெளிநாட்டில் இருக்கிறான். உதவி என்று தன் வீட்டு கதவைத் தட்டிய கங்காவை அரவணைத்துக் கொண்டாள் தோழி. சசி கங்கா சென்ற இடங்களை எல்லாம் அலசி அவளின் இறுதி அழைப்பை ட்ரேஸ் செய்து ஒருவழியாக கங்கா தங்கியிருந்த இடத்தை கண்டுபிடித்து விட்டான்..

ராஜின் குடும்பம் அங்கே செல்லும்போது கங்கா கிட்டத்தட்ட ஒரு பைத்தியக்காரி போல்தான் காட்சியளித்தாள். அவளை அம்மாதிரி கண்டதும் கமலாவின் இதயத்துடிப்பே ஒரு நிமிடம் நின்று விட்டது. தன்னுடைய குடும்பத்தை அங்கே எதிர்பாராத கங்கா இவர்களைக் கண்டதும் விருட்டென்று எழுந்து அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாள்.

"அம்மாடி கங்கா, கதவ தொறம்மா.. அம்மா வந்துருக்கேன்.. கதவ தொறம்மா.. ஏன்டா கண்ணு இப்டி பண்ண.. எதுவா இருந்தாலும் அம்மா கிட்ட ஒரு வார்த்த சொல்லிருக்கலாம் தான.. நான் என்னன்னு பாத்து விசாரிச்சிருக்க மாட்டேனா..நீயா இப்படி வீட்ட விட்டு கிளம்பி வந்துட்டா நான் என்ன பண்றது.. என் அண்ணனும் இல்ல உன் புருஷனும் இல்ல.. ஒத்த பொம்பளையா நான் என்னத்த பண்ண.. எப்படியோ கடவுள் கிருபை கண்டுபிடிச்சாச்சு.. ஏன்டா என்ன பாத்து கதவ சாத்துர.. கதவ தொற டி"

சகோதரியை காணாமல் இந்த மூன்று நாட்களாக பேயாய் தேடியலைந்த ராஜை வசதியாக மறந்து போனார் கமலா. இது எப்போதும் தனக்கு நடப்பது தானே என்று ராஜ் இயல்பாக நின்றுகொண்டிருக்க நிலாவால் கமலா பேசியதே ஜீரணிக்க முடியவில்லை. விடாமல் கமலா கதவைத் தட்ட உள்ளிருந்த கங்கா"இப்ப எதுக்கு இங்க வந்தீங்க..  உங்கள யாரு இங்க வரச்சொன்னா.. உங்க யாரு மூஞ்சியும் பாக்க எனக்கு பிடிக்கல.. இங்க இருந்து போயிடுங்க..யாரும் இங்க இருக்கக் கூடாது.. "

வெறி வந்தவளைப் போல கத்தினாள் கங்கா."என்னடி இப்படி சொல்ற.. ஐயோ நா என்னத்த பண்ணுவேன்..என் பொண்ணுக்கு இந்த நிலைமையா.. எல்லா இந்த குட்டிபிசாசு பொறந்த நேரம்.. கடவுளே உனக்கு கண்ணில்லயா..என் பொண்ணு யாருக்கு என்ன துரோகம் பண்ணினா? அவளுக்கு ஏன் இந்த நிலைம..  ஐயோ என்னால தாங்க முடியல.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. கங்கா கதவ தொறடி கண்ணு.. அம்மாவுக்கு நெஞ்சு வலிக்குற மாறி இருக்கே" என்றவாறு அப்படியே தரையில் சரிந்தார் கமலா.

பெற்ற தாய் இப்படி சரியும் போது எந்த மகன்தான் பார்த்துக்கொண்டு நிற்பான்? ராஜ் மட்டும் என்ன விதிவிலக்கா..ஓடிச்சென்று தாங்கிக் கொண்டான் கமலாவை. நிலா கையில் குழந்தையோடு என்ன செய்வது என்று தெரியாமல் நிற்க வெளியே கலவரம் பெரிதாக கதவைத் திறந்தாள் கங்கா.  கங்காவை கண்டதும் ஒரு நிமிடம் வெண்ணிலாவின் கண்கள் தெறித்து மீண்டது. இதுவரை மகளை வெளியே வர வைக்க நாடகமாடிக் கொண்டிருந்த கமலாவிற்கு மகளின் நிலையை கண்டதும் உண்மையாகவே நெஞ்சுவலி வந்து விட்டது.

அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்பதற்கேற்ப வெண்ணிலாவை எந்த குறைப்பாட்டை வைத்து தீண்டத்தகாதவளாக தள்ளி வைத்தாளோ அதே குறைபாடு இப்பொழுது கங்காவை ஆக்கிரமித்திருந்தது. ஆம் அதே விதிலிகோ(vitiligo) வெண் சரும குறைபாடு.. நிலாவிற்காவது முகத்தில் மட்டும் தான் நிறக் குறைபாடு  தென்பட்டது. கங்காவிற்கோ முகத்தில் ஆரம்பித்து அவளின் கை கால்கள் முழுவதும் இந்த நிறக் குறைபாடு  திட்டுத்திட்டாக தென்பட்டது..

பொதுவாக விதிலிகோ எனப்படும் வெண் சரும பிரச்சனை இப்படி திடீரென்று சிலருக்கு ஏற்படும். ஒருசிலருக்கு ஏதாவது விபத்து நடந்தால் தற்செயலாக கீழே விழுந்து உடம்பில் ஏதாவது ஒரு இடத்தில் அடி பட்டால் அந்த இடத்தில்  மெலனின் எனப்படும் தோலின் வழி உற்பத்தியாகும் மெலோனோஸைட்ஸ் அதாவது இவைத்தான் நம் தோலுக்கு அதன் வர்ணதை கொடுக்கிறது. மெலோனோஸைட்ஸ் சரியாக உற்பத்தி ஆகாத நிலையில் போதுமான அளவு மெலனின் நம் சருமத்திற்கு கிடைக்காது.இதனால் அடிபட்ட இடத்தில் வெண் புள்ளிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

வேறு சிலருக்கு எந்தக் காரணமும் இல்லாமலேயே ஒரேநாளில் இந்த சரும குறைபாடு வந்துவிடும். தூங்கி எழுந்தாலோ குளித்துவிட்டு வந்தாலோ சூடாக தேநீர் அருந்திய பின்போ இந்த சரும குறைபாடு நிறைய பேருக்கு வந்துள்ளது. சிலருக்கு உடலில் மிகச்சிறிய பொட்டு அளவில் வெண்புள்ளிகள் முதலில் தோன்ற ஆரம்பிக்கும். அப்படி ஆரம்பிக்கும் போதே அதற்கான சிகிச்சையை நாம் எடுத்துக் கொண்டால் இந்த சரும பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட பெரிதும் வாய்ப்புண்டு. ஆனால் இம்மாதிரி  வெகு சிலருக்கு மட்டுமே காட்டப்படும். பெரும்பாலானோருக்கு இந்து நிறக் குறைபாடு திடீரென தோன்றி அவர்கள் வாழ்வை புரட்டிப் போடுகிறது.

அப்படிதான் கங்காவிற்கு இந்த பிரச்சனை ஆரம்பித்தது. தன் குழந்தை இப்படி பிறந்து விட்டதன் விளைவாக மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானாள். பிறவியிலேயே அகங்கார குணம் கொண்ட கங்காவிற்கு பெற்ற பிள்ளையை தள்ளி வைப்பது சரியா தவறா என்று புரியவில்லை.. அதிலும் அவளின் காதல் கணவன் குழந்தையை காரணம் காட்டி அவளை விட்டுப் பிரிந்து சென்றதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பால் தேங்கிய அவளது மார்பு காம்புகள் பசியாற்ற குழந்தை இல்லாமல் வலியை அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. வலிக்க வலிக்க மார்பை பிடித்து அழுத்தும்போது பால் பீச்சி அடிக்கும். ஆசையாக குழந்தை பருக வேண்டிய அமிர்தம் வீணாக கழிவறையில் தண்ணீரோடு கலந்து  சாக்கடையில் கலக்க செல்லும்.

அதை எல்லாம் பார்க்கும்போது கங்காவின் மனம் மெய்யாகவே வேதனையில் துடிக்கும்.ஆனால் குழந்தையை பார்க்கும் ஆவல் அவளிடம் அறவே இல்லை. அவள் நினைத்திருந்தால் குழந்தை சற்று பெரியவளானதும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அதன் குறையை நிறையாக்கலாம்.  அல்லது என் குழந்தை கடவுளின் தனிப்பட்ட விசேஷித்த குழந்தையென எண்ணி பெருமை கொள்ளலாம்.  இந்த இரண்டு மனப்பக்குவங்கள் எதுவுமே அவளிடம் இல்லாமல் போனது பரிதாபமான விஷயம் தான்.

இந்த சரும குறைபாட்டின் ஆரம்பம் முதலில் கங்காவின் வாயினுள்ளே ஆரம்பித்தது. அதாவது உதட்டின் உள் பக்கம் நிறக் குறைபாடு ஆரம்பித்தது. அவளுக்கு இருந்த  மன நிலையில் இதைக் கவனிக்கத் தவறினால் கங்கா. அதேபோல் அவளது விரல்களிலும் தோல்கள் வெள்ளை நிறத்தில் உருமாறிக் கொண்டிருந்தது. அதையும் கண்டு கொள்ளாமல் குழந்தை மேல் கோபத்தை வளர்த்துக் கொண்டிருந்தால் கங்கா. ஒருவழியாக தன் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை கண்டுகொண்டு அது ஒருவேளை தேமலாக இருக்கலாமோ என்று தவறாக யோசித்தாள் கங்கா.

அவளின் தவறான புரிதலில் அவளே சென்று ஏதேதோ மருந்துகளை வாங்கி அதை உட்கொண்டு தோல்களில் பூசி நிலைமையை இன்னும் தீவிரமாகி கொண்டாள். பெரும்பாலும் அவள் அறையை விட்டு வெளியே வராத நிலையில் இந்தப் பிரச்சினை அவளுக்கு இருப்பதை கமலாவும் கண்டுகொள்வதில்லை.  எங்கே கமலாதான் நிலாவை எப்படியாவது துரத்தி விடுவதிலேயே குறியாக இருந்தாரே. இதில் எங்கிருந்து மகளின் பிரச்சினையை கண்டு கொள்வது..

நிலைமை தீவிரமாக முதல்முறையாக சரியான கண்ணோட்டத்தில் தனது பிரச்சனையை உணர்ந்தாள் கங்கா. அன்று உறங்கி எழுந்தவள் எப்பொழுதும் போல் கண்ணாடியில் தன் முகம் பார்க்க மயங்கி விழுந்து விட்டாள். ஆம் அவள் முகத்தில் தொடங்கி கை கால்கள் வரை நிறக் குறைபாடு தன் வேலையை காட்டி இருந்தது.சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து எழுந்தவள்  தனது நிலையை எண்ணி கதறி அழுதாள். பின் எழுந்து குளித்து துப்பட்டாவை படுதா போல் தன் மேல் சுற்றிக்கொண்டவள் யாரிடமும் எதுவும் சொல்லாமல் வேகமாக சரும மருத்துவமனைக்கு சென்றாள்.

அவளைப் பரிசோதித்த மருத்துவர் அவளுக்கு சில கிரீம்களை கொடுத்து இதை சரி பண்ணி விடலாம் என்று நம்பிக்கை கூறி தான் அனுப்பி வைத்தார். ஆனால் அதை எண்ணி சந்தோஷப்பட அவள் ஒன்றும் குழந்தை அல்லவே. இதே பிரச்சனைதான் நிலாவிற்கும் உள்ளது. இந்த பிரச்சனையை குணப்படுத்த முடியும் என்றால் ஏன் அவளது பெற்றோர் அவளை குணப்படுத்தாமல் விட்டுவிட்டார்கள்?கண்டிப்பாக அவளை இந்த மருத்துவமனைக்கு எல்லாம் அழைத்து வந்து இருப்பார்கள் தானே? அப்படி என்றால் இந்தப் பிரச்சினைக்கு முடிவே இல்லை.. கூகுளில் இந்த நிற குறைபாட்டை பற்றி மேலும் படித்து தெரிந்து கொண்டாள்.

விதிலிகோ எனப்படும் நிறக் குறைபாடு சிலருக்கு வந்த வேகத்தில் அதுவாகவே குணமாகிவிடும். சிலருக்கு பல வருடங்கள் தன் ஆக்கிரமிப்பை காட்டி மெல்ல மெல்ல குணமடையும்.  முழுதாக குணமடையாவிடினும் ஓரளவுக்காவது அந்த இடத்தில் நமது இயற்கை சருமம் வரும்.. பார்ப்பவர்களுக்கு அது தேமல் போல காட்சி அளிக்கலாம்.

இன்னும் சிலருக்கு குணமடைவதை போல குணமாகி மீண்டும் வேறு இடத்தில் வர ஆரம்பிக்கும்.ஆனால் வெகு சிலருக்கு அது ஜென்ம சாபம். என்ன மருந்து எடுத்துக்கொண்டாலும் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலையே கிடைக்காது.

இதையெல்லாம் படித்த கங்கா தன்னை அந்த வெகு சிலரில் ஒருவளாக நினைத்து கொண்டாள்.

வெண்ணிலாவை எப்படியெல்லாம் தான் பேசினோம்..இன்று இந்த முகத்தோடு எப்படி அவளை எதிர்கொள்வேன்..  என் குழந்தையைக் கூட இதை சொல்லி தானே ஒதுக்கி வைத்தேன்.. பார்ப்பவர்கள் வியந்து பார்க்கும் அழகு இனி என்னிடம் இல்லை.. என்னைப் பார்ப்பவர்கள் எல்லோரும் பரிதாபத்தோடு பார்ப்பார்கள். என்னை கேலி செய்வார்கள்.  என் தோழிகள் என்னை தொத்து வியாதிக்காரி என்று கூறி தள்ளி வைப்பார்கள்..இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு நான் உயிர் வாழ மாட்டேன்.

ஆனால் சாவதற்கும் அவளுக்கு தைரியம் கிடையாது. யாருமே இல்லாத இடத்திற்கு சென்று வாழவேண்டும் என யோசித்தவளுக்கு தேனியில் குழந்தையோடு தனியாக வசிக்கும் தன் பள்ளி தோழியின் நினைப்பு ஞாபகம் வந்தது. அவளுக்கு அழைத்து சுருக்கமாக விஷயங்களை பகிர்ந்தவள் எந்த ஒரு உடமைகளையும் எடுத்துக் கொள்ளாமல் கிளம்பி விட்டாள்.

கோதுமை வர்ண சருமத்தை கொண்டதாலோ என்னவோ இந்த நிறக் குறைபாடு நிலா அளவிற்கு கங்காவுக்கு பெரியதாக தெரியவில்லை. ஆனால் நிலாவை விட உடலில் எல்லாம் படர்ந்து காணப்பட்டது..வெண்ணிலா விரித்த விழி விரித்தபடியிருக்க கமலா உண்மையாக மயங்கி விழ ராஜ் மனைவியையும் சகோதரியையும் மாற்றி மாற்றி பார்த்து கொண்டிருந்தான்..

அப்பொழுது கங்கா ராஜிடம்"மித்ரா எனக்கும் குணாவும் டிவோர்ஸ் ஏற்பாடு பண்ணு"என்று விட்டு உள்ளே சென்று விட்டாள்..

தொடரும்..


Comments

  1. Karma is a boomerang.. ganga ku sariyana lesson kedaichitu..very nice epi akka 😇😇😇

    ReplyDelete
  2. Ipdi ellam agum nu edhirpakkala ganga ippavadhu olunga mudivu edu baby ah kuda pakkama pora vennila va kamala pesunadhu ellam ipa ganga va pesuvangala raj sonnamari adutha veetu ponnungala easy ah kaikatturavanga thannoda ponnuku ipdi vamdhadhuku reaction enna pannuvanga ipa kuda kamala anna va solrangale thavira evlo kastapatta raj pathi pesyrangala cha ivanga ellam enna ammavo waiting for nxt ud sis

    ReplyDelete
  3. Ahha enna oru punishment ithu ganga ku thevai than semaaaaa super 👌👌👌👌👌👏👏👏👏

    ReplyDelete
  4. Thevadha ganga ku indha punishment...... 😠😠😠

    ReplyDelete
  5. செம்ம இதுக்குத்தான்
    ஓவரா பேச கூடாது
    கங்கா விற்கு.சரியான
    பணிஷ்மென் ட்
    👌💐💐💐🙂

    ReplyDelete
  6. பண்ண பாவம் திரும்ப வந்துருச்சி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்