பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 12


குமுதா சுட்டிக் காட்டிய திசையில் தன் பார்வையை செலுத்திய நிலாவின் பார்வை வட்டத்தில் விழுந்தான் ராஜ்.அவனை அங்கே தனியாக பார்த்திருந்தால் கூட அவள் அவ்வளவு யோசித்திருக்க மாட்டாள்.ஆனால் கூடவே ஜென்ம சனி போல சிந்துவைப் கண்டதும் நிலாவிற்கு பெரிதாக ஒன்றும் சந்தேகம் வந்து விடவில்லை.இருந்தாலும் மனதின் ஓரத்தில் பொறாமையும் கூடவே ஒரு பாதுகாப்பின்மையும் அந்த நேரத்தில் தோன்றாமல் இல்லை.

“யாரு நிலா அவ?”பேபி வண்டியில் அபியை படுக்க வைத்தவாறே வினவினான் குமுதா..

“நா சொன்னேன்ல அவரோட மாமா பொண்ணு சிந்துன்னு”

“மாமன் பொண்ணா அதுயென்ன கல்யாணம் ஆனா ஆம்பளைய வெளிய தனியா பாத்து பேசுறது..அவருக்கு வீடு வாசல் இல்லயா? இல்ல கடையில ஆபீஸ் ரூம் தான் இல்லயா?”

“ஏதாச்சும் முக்கியமா பேச வேண்டியதாயிருக்கும்” சமாளித்தாள் நிலா..

“ம்க்கும் அப்டி என்ன தல போற ராணுவ ரகசியத்தையா பேச போறா.. ஆளும் கொண்டையயும் பாரு..இந்தம்மாவுக்கு கிராப் டாப் ஒன்னு தான் கொறச்சல்.. இது கிராப் டாப் இல்ல.. நா அபிக்கு கட்டி விடுற நெஞ்சு துணியில சட்ட தேச்சு போட்டுட்டு வந்துருக்கா”

“அவ எப்டி உடுத்திருந்தா என்னடி.. என்ன பேசுறாங்கனு தெரியலையே..சரி வா டைம் ஆச்சு சாரி எடுத்துட்டு நாம வீட்டுக்கு போலாம்.. ராஜ் எப்படியும் வீட்டுக்கு வந்து என்கிட்ட சொல்லுவாரு”..

“நா ஒரு சிந்து காவடி சிந்துனு இந்த பொந்து உன் வாழ்க்கை சந்துல வந்துர போது.. நா படுறத பாக்குற தானே..நாம என்னதான் இவனுங்க கால கழுவி அந்த தண்ணிய தீர்த்தமா மண்டையில தெளிச்சிக்கிட்டாலும் அவனுங்க பன்னிர் ஊத்தி குளிப்பாட்டுறது என்னவோ வப்பாடிய தான்..இவள அண்ணன் பக்கத்துல அண்ட விடாத நிலா அம்புட்டு தான் சொல்லுவேன்”

குமுதா தனது அனுபவத்தை சொல்லி முடிக்க நிலா அப்பொழுதும் எதையும் பெரிது படுத்தாமல் குமுதாவை அழைத்துக் கொண்டு சேலை கடைகள் இருக்கும் தளத்திற்குச் சென்று விட்டாள்.. குமுதா கடையையே புரட்டிப் போட்டு ஒரு புடவையை தேர்ந்தெடுப்பதற்குள் கடையில் வேலை பார்க்கும் அந்தப் பெண் ஒரு வழியாகி விட்டாள். ஏதோ நிலா இருந்ததால் அந்தப் பெண் சீக்கிரமாக தப்பித்தால் என்றே கூற வேண்டும்.

ஒருவழியாக சேலை எடுத்துக் கொண்டு மீண்டும் அந்த ஐஸ்க்ரீம் பார்லருக்கு வர அங்கே அவர்கள் இல்லை. கிளம்பி விட்டார்கள் போல. இவர்களும் கிளம்பி வீடு வந்து சேர குமுதா அவள் வீட்டிற்கு சென்று விட்டாள். நிலா என்னதான் மனதை போட்டுக் குழப்பிக் கொள்ளாமல் இருந்தாலும் அவளால் சிந்துவை மறக்க முடியவில்லை. சிந்துவை ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் பார்த்திருக்கிறாள் தான். அப்பொழுது கருப்பு வெள்ளையாக இருந்த புகைப்படத்தை பார்த்து இவள் என்னத்தை கணிக்க முடியும்?

இப்பொழுது அவளை நேரடியாகப் பார்த்த பின் அவள் அழகி என்று நினையாமல் இருக்க முடியவில்லை.மனம் ஒரு நிலையில் இல்லாமல் அலைபாய்ந்தது. ஏன் ராஜ் அவளைத் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னை திருமணம் செய்து கொண்டான் என்று அவளுக்குக் குழப்பமாக இருந்தது.ஸ்வீட்டிக்கு அழைத்து பேசினால் மனது ஒரு நிலைப்படும் என்று தோழிக்கு அழைத்தாள்..

“ஹேய் நிலா சொல்லுடி என்ன பண்ற.. குமுதா கூட ஷாப்பிங் போறதா சொன்ன.. ஸாரிடி என்னால தான் வர முடியல.. என் நாத்தனார் ஏதோ மொத புள்ள பெக்குற மாறி ரெண்டாவது புள்ளைக்கு ஆத்தா வீட்டுக்கு வந்து ஒக்காந்து கிட்டு சீன் போடுது.. இந்த நேரத்துல என் மாமியாரு வேற மகளுக்கு பறந்து பறந்து சேவகம் செய்யுற அவசரத்துல கால ஒடச்சுகிட்டு படுத்து கிடக்காங்க.ஏன் தான் இங்க வந்தேனோ? மூடிக்கிட்டு சிங்கப்பூர்லயே ஜீவ சமாதி ஆயிருக்கணும்.. இங்க பொட்டி சட்டிய கட்டிட்டு வந்து தெனம் சமாதி ஆயிட்டு இருக்கேன்”

“விட்றி..நாங்க போயிட்டு வந்துட்டோம்.. பாப்பா குமுதா ரெண்டு பேருக்கும் ஒருவழியா ஷாப்பிங் முடிச்சாச்சு.. நா அதுக்கு அடிக்கலடி.. அங்க கடையில ராஜ பாத்தேன்”

“நீ கூப்பிடியா”

“நா அந்த மாலுக்கு தான் போறேன்னு அவருக்கு தெரியாது”

“அப்றம்”

“அவரு மட்டும் தனியா இல்ல.. கூடவே அந்த பொண்ணு சிந்து இருக்காளே அவ இருந்தா.. ஐஸ்க்ரீம் பார்லர் ஒக்காந்து பேசிட்டு இருந்தாங்க”

“சிந்துவா யாருடி”

“ப்ச் ராஜோட மாமன் மக”

“அவளா.. கரகாட்டக்காரி கனகாவ விட இவ பெரிய ஆட்டகாரி ஆச்சே.. இவ எதுக்கு உன் புருஷன் கூட பேச்சு வார்த்த வெச்சுகிறா”

“என்ன எழவோ என்ன கேட்டா.. நான் பாத்துட்டு ஒன்னும் பேசிக்கல.. அப்டியே ஷாப்பிங் முடிச்சிட்டு வந்துட்டோம்.. ஆனா ஒன்னுடி அவ ரொம்ப அழகா இருக்கா.”நிலா அவளது முகத்தை கண்ணாடியில் பார்த்துக்கொண்டே இதை சொன்னாள்..

“அவ கெடக்கா.. உனக்கு என்ன கொறஞ்சு போயிட்ட..நீயும் அழகி தான்.. நல்லா கும்முனு கொழுக்கட்டை மாறி இருக்க”

“ஆமா வெந்த கொழுக்கட்டை”.. நிலாவின் விரக்தியான குரல் ஸ்வீட்டிக்கு அவளது நிற குறைபாட்டினை நினைவுபடுத்தியது..என்றுமே படிக்கும் போதும் சரி மற்றவர்கள் அவளைக் கேலி செய்தால் உள்ளுக்குள் வலித்தாலும் அதை அலட்சியப்படுத்தி விட்டு செல்வாள். இப்பொழுது அவளது கணவன் என்று வரும்போது தன்னை விட அழகான பெண் தனக்கு போட்டியாக வந்து விடுவாளோ என்று அவளுக்கு பயம் ஏற்படுவதை ஸ்வீட்டியால் உணர முடிந்தது..

“அண்ணன் வந்ததும் பேசுடா.. சும்மா கூட பாத்துருக்கலாம்.. அவரு வேற வேல விஷயமா அந்த பக்குட்டு வந்துருக்கலாம்..அப்படியே இவளப் பாத்து அவளத் தாண்டிப் போக முடியாம அவ கிட்ட ரெண்டு வார்த்த பேசிட்டு போக ஐஸ்கிரீம் பார்லருக்கு போய் இருக்கலாம்..”

“நானும் அப்டி தான்டி நினைக்குறேன்.”அவர்கள் மேலும் பேசி கொண்டிருக்கும் போதே ஸ்வீட்டியின் மாமியார் அழைக்க பிறகு அழைப்பதாக கூறி தொடர்பை துண்டித்தாள் ஸ்வீட்டி.. அதன்பிறகு நிலா வீட்டில் இருந்தால் மற்ற வேலைகளை செய்துவிட்டு குளித்து முடித்து பொழுது போகாமல் தொலைக்காட்சி முன்பு அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் இந்த நேரத்திற்கெல்லாம் வீட்டிற்கு வந்துவிடும் ராஜ் இன்று ஏனோ இன்னும் வரவில்லை.

அவனுக்கு அழைத்து பார்த்தால் அழைப்புச் சென்று கொண்டே இருந்ததே தவிர அவன் ஏற்கவில்லை. வேலையாக இருக்குமென இவளும் விட்டு விட்டாள். நேரம் செல்ல செல்ல இரவு மணி பத்தரை ஆகி பதினொன்றாகி பதினோன்று முப்பது ஆகியது.அவனுக்காக காத்திருந்து இப்பொழுது வாசல் படியில் அமர்ந்து இருந்தாள்.அவளின் பொறுமையை மேலும் சோதிக்காமல் ராஜ் வீட்டிற்கு வந்தான். வாசலில் தனக்காக அமர்ந்திருந்தவளைக் கண்டதும்

“இத்தன மணிக்கு ஏன்டா வெளியே உட்கார்ந்து இருக்க..”

“நீ வர லேட் ஆகும்னு ஒரு போன் பண்ணா என்ன..நா எவ்ளோ நேரம் வெயிட் பண்றது”

“ஸாரிடா ஹெவி ஒர்க்கு..”என்றவன் அப்பொழுதுதான் தந்து கைப்பேசியை எடுத்துப் பார்க்க அவனின் அன்பு மனைவியின் இருப்பதைந்து மிஸ்ட் கால்களை அது கணக்கு தவறாமல் காட்டியது.அவள் கன்னத்தைக் கிள்ளி நெற்றியில் முட்டியவன் உள்ளே அழைத்துச் சென்றான்.

அவள் இன்னும் சாப்பிடவில்லையென உணவு மேஜையை பார்த்ததும் புரிந்து கொண்டான்.”ஏன்டி இன்னும் சாப்பிடல”

“நீ வரலயே”

“நா வரலைன்னா பசிக்காதா..”

“ப்ச் இப்பவே பசி உயிர் போது..சீக்கிரம் போயி குளிச்சிட்டு வா ராஜ்”என்றதும் அடுத்த பத்து நிமிடத்தில் குளித்து வந்தான்..அவளை அமர வைத்து தட்டில் உணவு பரிமாறி அவள் மறுக்க மறுக்க ஊட்டி விட்டவன் அதன் பிறகே தனது வயிற்றை கவனித்தான். அவன் சிந்துவை பார்த்த விஷயத்தை தன்னிடம் பகிர்ந்து கொள்வான் என்று நிலா பார்த்துக்கொண்டே இருந்தாள். சாப்பிடும் போது அவளைப் பற்றி பேசுவானேன் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று அவனுக்கு பரிமாறுவதை தொடர்ந்தாள். இருவரும் உண்டு முடித்து அவள் அனைத்தையும் சுத்தப்படுத்தி விட்டு வந்து படுக்கையில் விழுந்தாள்.

ராஜ் அவளருகே அமர்ந்து கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான்.”என்ன பாப்பா ஷாப்பிங் எல்லாம் முடிஞ்சுதா..”

“ம்ம்ம் முடிஞ்சது”

” எந்த ஷாப்பிங் மால் போனீங்க”

நிலா நகரின் பிரத்தியேகமான அந்த ஷாப்பிங் மாலினை பற்றி கூற ராஜ் ம்ம்ம் என்றானே தவிர வேறு ஏதும் பேசவில்லை. சிந்துவை பற்றி வாய் திறப்பான் என்று காத்துக் கொண்டிருந்த நிலாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. அப்படி ஒரு விஷயம் நடந்ததை பற்றி அவன் மூச்சே விடவில்லை.. சற்று நேரத்தில் அவளை அணைத்துக் கொண்டு அவள் உறங்கி விட மன அலைபாய்தலாக இருந்த விஷயம் முதல் முறையாக ஒரு நடுகத்தை அவளுக்கு கொடுத்தது..

அவன் உறங்கியதை உறுதிப்படுத்திக் கொண்டவள் எழுந்து சென்று தன் முகத்தை கண்ணாடியில் பார்த்தாள். பிறகு அவளுக்காக பிரத்தியேகமாக ராஜ் உருவாக்கிய கொடுத்திருந்த பிரேயர் அறைக்கு சென்றவள் ஆண்டவரின் சிலுவையின் கீழே முழங்கால் படியிட்டு அமர்ந்தாள். கரங்களை கூப்பியது தான் தெரியும் அவள் கண்களில் கண்ணீர் கரகரவென்று கசிய தொடங்கியது.

“ஏன் இயேசப்பா என்ன இப்டி படைச்சீங்க? குஷ்டரோகிகள குணப்படுத்த முடிஞ்ச உங்களால என்ன குணப்படுத்த முடியாதா? எனக்காக நல்ல வாழ்க்கய உருவாக்கி கொடுத்துட்டு பின்னாலயே ஆப்பு வெச்சா எப்டிப்பா? அந்த சிந்துவ பாக்குறப்போ சாத்தான பாக்குற பீல் வருது.. எனக்கு ரொம்ப பயமா இருக்கு.. ப்ளீஸ் என் ராஜ் எப்பவும் என்கூட இருக்கனும்.. அவர சந்தேகப்படுற மாதிரி சூழ்நிலைகள் வந்தாலும் என் மனசைத் திடப்படுத்திக்குற தைரியத்த எனக்கு குடுங்க..”

கண்ணீர் வழிய வழிய எவ்வளவு நேரம் அங்கே அமர்ந்து அவளது மனத் துயரத்தை இறக்கி வைத்தால் என்று அவளுக்கே தெரியவில்லை.கோழி கூவும் நேரத்தில் தான் அங்கேயே அசந்து உறங்கிவிட்டது கண்டவள் சத்தம் செய்யாமல் எழுந்து வந்து ராஜ் அருகே படுத்துக் கொண்டாள்.

தொடரும்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்