பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 14


அவள் அவன் காதல் நெஞ்சில்

கண்டாலே சிறு குற்றம்

அவன் நெஞ்சம் தாய்பால்

போலே எந்நாளும் பரிசுத்தம்

ஆத்திரம் நேத்திரம் மூட

பாலையும் கள்ளாய்

அவள் பார்க்கிறாள்

“நிலா கெளம்பிட்டியா”என்று கேட்டபடியே உள்ளே வந்தாள் குமுதா..இன்று அபியின் பிறந்தநாள். குமுதா நிலாவை எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் அவள் வரமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்தாள்.நிலா எப்பொழுதும் இப்படித்தான்.இம்மாதிரி நிகழ்ச்சிகளில் எல்லாம் அவள் பங்கெடுத்துக் கொள்ள மாட்டாள்.அவளுக்கு இருக்கும் நிறக்குறை பாட்டை இம்மாதிரி நிகழ்ச்சிகளில் முக்கிய அங்கமாக பேசி அலசுவதை அவள் விரும்புவதில்லை.

எனவே அவள் திருமணத்திற்கு முன்பே இம்மாதிரி நிகழ்வுகளை அதிகபட்சம் தவிர்த்துவிடுவாள்.அபியின் பிறந்தநாளையும் ராஜை மட்டும் சென்று கலந்து கொள்ள கூறியவள் குமுதா வந்து வற்புறுத்தி அழைத்தும் தனது முடிவை மாற்றிக் கொள்ளாமல் இருந்தாள்.பிறகு குமுதா தனது கடைசி ஆயுதமான கண்ணீரை வெளிக்கொண்டு வரவும் பயந்துபோன நிலா தனது முடிவை விட்டுக் கொடுத்தாள் குமுதாவிற்கு.நிலா தான் வருகிறேன் என்று கூறியும் அவள் மேல் நம்பிக்கை இல்லாத குமுதா மாலை ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஆறு மணிக்கே வந்து நிலா கிளம்பி விட்டாளா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.. அழகான குர்தியில் மிதமான அலங்காரத்தோடு பளீரென்று இருந்தாள் நிலா. அவள் சிரிக்கும் சிரிப்பை பார்த்தால் அவளது நிறக் குறைப்பாடு கூட அங்கே மறைந்து விட்டது..

“எம்மாடி என் கண்ணே பட்டுரும் போல.. என்னடி இவ்ளோ அழகா இருக்க..”

“ம்க்கும் ரொம்பத்தான் அழகு பொங்கி வழியுது.. நீ ஏன் அபிய அங்க விட்டுட்டு இங்க வந்த.. எனக்கு உன் வீட்டுக்கு வர தெரியாதா..”

“உன்ன நம்பவே மாட்டேன். அப்படியே பின்னால கதவ தொறந்து எகிறி குதிச்சு ஓடிட்டனா? அதான் நானே வந்து உன்ன கூட்டிட்டு போறேன்..”ராஜ் முக்கியமான வேலை இருப்பதாக பிறகு வந்து கலந்து கொள்கிறேன் என்று கூறிவிட்டான். எனவே குமுதாவுடன் அவள் வீட்டிற்கு சென்று பார்ட்டி ஆரம்பிப்பதற்குள் அபியை தயார் செய்து அவளுடன் விளையாடிக் கொண்டிருந்தாள் நிலா. நண்பர்கள் விருந்தினர்கள் அனைவரும் வரத் தொடங்கி இருந்தார்கள்.. மகளின் ஒரு வயது பிறந்த நாளை பெரிதாகக் கொண்டாட விரும்பினான் பிரகாஷ்..நிலா அபியை தூக்கி வைத்து கொண்டே சுற்றினாள். கேக் வெட்டும் போது பிறந்தநாள் நாயகியான அபியை பார்த்தார்களோ இல்லையோ வந்திருந்த அனைவரும் நிலாவைப் பார்த்து தங்களுக்குள் குசுகுசுவென பேசிக் கொண்டனர். அவர்களின் பார்வையின் பாவனை அவளுக்கு தெரியாதா என்ன?அனைத்தையும் கண்டுக் கொள்ளாமல் கடந்து சென்றாள்.குமுதா ராஜ் எங்கே என்று கேட்க அவனுக்கு இதோடு நாலைந்து முறை அழைப்பு விடுத்து விட்டாள் நிலா.

ரிங் போனதே தவிர அவன் எடுக்கவில்லை. வேலையில் மும்முரமாக இருப்பான் என்று அவளும் விட்டு விட்டாள்.ஆனாலும் மனதிற்குள் ஏதோ சரியில்லாதது போல தோன்றியது. வந்திருந்த அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஒவ்வொரு ஆளாக கிளம்ப

“என்ன நிலா அண்ணே வரலையா.. வேலையா இருக்கும்.. நீயும் வந்துட்டு சாப்பிடாம இருக்க..அவரு வரும்போது வரட்டும் நீ வந்து சாப்பிடு..”குமுதா நிலாவிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.ஆனால் ராஜ் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தவளால் உணவைப் பற்றி சிந்திக்க முடியவில்லை.எனவே குமுதாவிடம் தலைவலி என்று பொய் சொல்லி தன் வீட்டிற்கு வந்துவிட்டாள்.எத்தனை முறைதான் அவளுக்கு அழைப்பது. சலிப்போடு கைப்பேசியை தூக்கி சோபாவில் வீசினாள். வீசிய மறுநொடி புதிய எண்ணில் இருந்து அவளுக்கு அழைப்பு வந்தது. ஒருவேளை ராஜ் தான் அழைக்கிறானோ என்று ஆர்வத்தோடு கைபேசியை கையிலெடுத்தாள். தொடு திரையில் புது எண். மனம் கிடந்து அடித்துக் கொள்ள அழைப்பை ஏற்று காதில் வைத்தாள். அந்தப் பக்கமிருந்து

“என்னமா புது பொண்ணு எங்கள எல்லாம் மறந்திட்ட போல..”பிரியாவின் குரல் அமிலமாய் இவள் செவியில் பாய்ந்தது.

“நீயா பிரியாக்கா என்ன புது நம்பர்ல இருந்து கூப்பிடுற” எரிச்சல் மறையாத குரலில் பேசினாள்.

” எங்க நீ தான் என் நம்பர்ல இருந்து கூப்பிட்டா எடுக்கவே மாட்றியே.. அதான் புது நம்பர்ல இருந்து கூப்பிட்டேன்.. ரொம்ப மாறிட்ட நிலா.. தாய் பிள்ளைங்க தான் எப்பவும் நம்ம கூட வருவாங்க.. அவங்க உறவு வேணாம்னு முறிச்சிகிட்டனா நீதான் நாளப் பின்ன முக்காடு போட்டு உட்காந்துக்கணும்..”

“பிரியாக்கா நான் ஏற்கனவே வேற டென்ஷனா இருக்கேன்..நான் உனக்கு அப்புறம் கூப்பிடுறேன்..”அழைப்பைத் துண்டிக்க முயன்றாள் நிலா. ஆனால் பிரியாவோ வஞ்சதோடு

“ஹேய் ஹேய் வெச்சிராதடி வெந்த நிலா.. உனக்கு ஒரு மேட்டர் சொல்லத்தான் கூப்பிட்டேன்.. ஆமா எங்க உன் புருஷன்.. ஆளையே காணோம்”

“அவரு இன்னும் வீட்டுக்கு வரல”கடுப்போடு மொழிந்தால் நிலா.

” அதான எப்படி வருவான்.. அவன் தான் வர மாட்டானே”அவள் எகத்தாளமாக சொல்ல நிலா பதறி விட்டாள்..

“பிரியாக்கா நீ என்ன சொல்ற.. அவரு ஏன் வரமாட்டாருனு சொல்ற”

“ம்ம்ம் வாட்சப் பாரு.. உனக்கே புரியும்.. இனிமேயாச்சும் அவன நம்பி ஏமாந்து போகாம வீடு வந்து சேரு..”படக்கென அழைப்பைத் துண்டித்தாள் பிரியா. நிலா வேகமாக புலனத்தை திறந்து பார்க்க அவளுக்கு மயக்கமே வந்து விட்டது.ராஜ் ஏதோ ஒரு பெண்ணை அணைத்து அவள் முகம் தாங்கி நெற்றியில் முத்தமிட்டுக் கொண்டிருந்தான் நிழல் படத்தில்.. அந்தப் பெண் அவன் இடுப்பை சுற்றி கையை போட்டிருந்தாள். அந்த புகைப்படம் இன்று எடுக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.இந்த சட்டையை தான் காலையில் அவன் அணிந்து சென்றிருந்தான்.அந்தப் பெண் நல்ல வேளையாக சிந்து இல்லை. ஆனால் இவள் நல்ல பேரழகியாக இருந்தாள்..

நிலா பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருக்க மேலும் ஒரு மணி நேரம் சென்று வீட்டிற்கு வந்தான் ராஜ். எப்பொழுதுமே வந்ததும் நிலாவை கட்டிப்பிடித்து நெற்றியில் முத்தம் தருபவன் இன்று அவள் அமர்ந்து இருப்பதை கண்டும் நேராக குளியலறைக்குள் சென்று விட்டான். அவன் மேல் அவளுக்கு கோபம் மேலும் அதிகரித்தது.பொறுமையை இழுத்துப் பிடித்தபடி அமர்ந்திருந்தாள். அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தவன் அவள் இன்னும் அதே இடத்தில் அமர்ந்திருப்பதை கண்டு

“ஸாரிடா பாப்பா அபி பர்த்டேக்கு வர முடியல.. செம பிசி இன்னிக்கி.”

“ஓ அதான் நா போன் பண்ணப்போ எடுக்கலையா” எப்பொழுதும் அவளை உரசியபடி அமர்ந்து கொள்பவன் இன்று தள்ளி போய் அமர்ந்தான்.அதிலே நிலாவின் கோபத்தில் டன் கணக்கு எண்ணையை ஊற்றியது போல ஆனது.

“ம்ம்ம்.. ஆமா டா.. சாப்டியா நீ”..

“ம்ம்”..

“எனக்கு பசிக்குது.. வீட்ல சமைச்சியா”

“இல்ல”

“மேகி செஞ்சு கொடேன் பாப்பா”சோம்பல் முறித்தான் ராஜ்.ஆத்திரத்தை உள்ளே மறைத்தவள் எழுந்து சென்று மேகி செய்து எடுத்து வந்து மேசையில் டக்கென்று வைத்தாள்.அவளின் முகத்தை அப்போது தான் அவன் நன்றாக பார்த்தான். அழுது கண்கள் சிவந்து முகமே வீங்கியிருந்தது.

“ஏன்டா அழுந்த.. அங்க யாராச்சும் ஏதாச்சும் சொன்னாங்களா?”இந்த கரிசன பேச்சு இன்னும் அவளுக்கு அழுகையை வர வைத்தது.ஓடிச்சென்று கழிவறைக்குள் புகுந்து கொண்டாள். ராஜ் எழுந்து அவள் பின்னால் சென்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தான்

“ஹேய் என்னடி ஆச்சு ஏன் அலற”நிலா நிலா நிலா என்று அவள் பெயரை ஏலம் விட்டுக் கொண்டிருந்தான்.அவள் கதவை திறந்த பாடில்லை.. மேகி ஆறிப்போய் என்னை பாரு உன்னை பார் என்று சிரித்துக் கொண்டிருந்தது. எப்படியும் அவள் கதவைத் திறந்து வெளியே வருவாள் என்று அவளுக்காக மெத்தையில் அமர்ந்தபடி காத்திருந்தான். ஒரு மணி நேரம் சென்று வெளியே வந்தால் நிலா. வந்தவளை ஒரே பாய்ச்சலாக பாய்ந்து பிடித்துக் கொண்டவன்

“என்ன தான் ஆச்சி உனக்கு.. நானும் வந்ததுல இருந்து பார்க்குறேன் மூஞ்சி கொடுத்து பேசமாட்ற.. ஏன்டி ஒரு மனுஷன் வெளியே போயிட்டு வந்தா இப்படித்தான் எழவு விழுந்த மாறி மூஞ்ச வெச்சிருப்பியா.”

“என் மூஞ்சி இப்படி தான் இருக்கும். தெரிஞ்சி தான் கல்யாணம் பண்ண.. இந்த மூஞ்ச பாக்க பிடிக்கலைன்னா வேற மூஞ்ச போய் பாரு..அதான் அதுக்கு எல்லாம் ரெடியா ஒரு ஆள புடிச்சிட்டியா..அந்த மூஞ்சி இனிக்கிறதால தான என் மூஞ்சி கசக்குது உனக்கு..போயி ராவும் பகலும் அந்த மூஞ்சிய பாரு போ..”அவள் ஆவேசமாக கத்த மிரண்டு போனான் ராஜ்.

“என்னடி சொல்ற.. நான் என்ன கேட்குறேன் நீ என்ன சொல்ற..”

“தெரியாத மாதிரி நடிக்காத ராஜ்.. நான் எத்தனை தடவ போன் பண்ணேன்..ஒரு தடவயாச்சும் போன் எடுத்துப் பேசுனியா..அப்படி என்ன தலை போற வேல..இல்ல கடையில நீ மட்டும்தான் வேலை செய்றியா.. நீயே எல்லா வேலையும் செய்யறதுக்கு தண்டதுக்கு எதுக்கு சம்பளம் கொடுத்து ஆள வெச்சிருக்க..” நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன் அவளை இழுத்து அணைத்து

“என்னாச்சும்மா.. யாராச்சும் உன்ன ஹர்ட் பண்ணிட்டாங்களா? ” நிதானமாக வினவினான். அவனிடமிருந்து திமிறி விலகியவள்

“யாரும் இல்ல நீதான்..”

“நானா”அதிர்ச்சியாகி போனான் ராஜ்.

” ஆமா நீ தான்.. இது யாரு.. யாருடா இவ.. இவள என்னாதுக்கு கட்டி புடிச்சு முத்தம் கொடுக்குற.. இவள வெச்சிருக்கியா ராஜ்”இதைக் கேட்டு முடிப்பதற்குள் ராஜ் விட்ட அறையில் சுற்றி போய் விழுந்தால் நிலா.

“இன்னொரு வார்த்த அவளப் பத்தி பேசுன கொன்றுவன் உன்ன..அவள பத்தி கேவலமா பேச நீ யாருடி.உனக்கு யாரு இந்த அதிகாரம் கொடுத்தா”.. விழுந்த நிலையில் அதிர்ச்சி மாறாமல்

“ராஜ்”என்று அழைத்தால் நிலா..

“பேசாத..பேசாத..நீ பேச பேச எரிச்சலா வருது..என்ன பொண்ணு டி நீ.. கல்யாணம் பண்ணி ஒரு மாசம் கூட ஆகல அதுக்குள்ள ஏகப்பட்ட சந்தேகம்..ஊர்ப்பட்ட பஞ்சாயத்து..என்னிக்காச்சும் வீட்டுக்கு வந்தா நிம்மதி இருக்கா.சண்டை சண்டை சண்டை..இதுக்கு தான் நாம கல்யாணம் பண்ணோமா..உன் கூட சந்தோஷமா வாழ முடியுதா என்னால.. எப்பப்பாரு பிரச்சனை.. நீ என்ன பிரச்சினைக்கா பொறந்த..ச்சை பேசாம கல்யாணம் பண்ணாமயே இருந்திருக்கலாம்”ராஜ் பக்கத்து அறைக்குள் சென்று கதவை மூடிக் கொண்டான்.

நிலா அவன் அறைந்த அதிர்ச்சியை விட அவன் பேசிய வார்த்தைகளுக்கான அதிர்ச்சியில் இருந்து தான் மீள முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.. மெல்ல எழுந்து மெத்தையில் அமர்ந்தவள் அவன் பேசிய வார்த்தைகளை தனக்குள் ஓடவிட்டு பார்த்துக் கொண்டிருந்தாள்.அழுகை பொத்துக்கொண்டு வந்தது. பெற்றோரை எதிர்த்து அவனே போதுமென அவனை நம்பி வந்ததற்கு இந்தப் பேச்சுக்கள் எல்லாம் அவளுக்கு தேவை தானா? இவ்வளவு பேசியவன் அந்தப் பெண் யார் என்று மட்டும் ஏன் கூறாமல் போனான்? யாரந்த பெண்? இவள் குடியை கெடுக்க வந்த பெண்? குமுதாவை போல இவளும் நிம்மதியில்லாமல் அல்லாட வேண்டுமா? இப்பொழுது மட்டும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக சந்தோஷத்தில் மூழ்கிக் கொண்டா இருக்கிறாள்..

சிந்துவை நினைக்கையில் ரத்த நாளங்கள் அனைத்துமே தடைப்பட்டு விடும் போல வலி தோன்றுவதை அவள் இல்லை என்று மறுக்க முடியாது. அப்படி இருக்க இவள் யார் புதிதாக? என் ராஜூக்கு இப்படி பேச தெரியுமா? விரட்டி விரட்டி அவளை காதலித்தவனாயிற்றே.. எவ்வளவு நேரம் அப்படி அமர்ந்திருந்தாளோ தெரியவில்லை அப்படியே படுத்து உறங்கி இருக்க வேண்டும். மறுநாள் காலை ராஜ் கிளம்பி சென்று வெகு நேரம் கழித்த பின்னே நிலா கண்விழித்தாள்.அவளிடம் சொல்லிக் கொள்ளாமல் கடைக்கு கிளம்பிருந்தான் ராஜ்.என்ன வாழ்க்கை என கசப்பு தோன்றியது நிலாவுக்கு.அந்த பெண்ணின் புகைப்படத்தை எடுத்து பார்த்தாள்..ரிஷியின் எண்ணுக்கு அழைத்து அவனை வீட்டிற்க்கு வர கூறினாள். அதும் ராஜிற்கு தெரியாமல். இன்றே இதற்க்கொரு முற்று புள்ளி வைக்க ஆயத்தமானாள் நிலா..

தொடரும்..

Comments

  1. நிலா என்ன முடிவு எடுக்க போறாளோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்