பிறைத் தோ(ல்)ள் தாங்கிடவா 9


நிலா நீ வானம் காற்று
மழை என் கவிதை மூச்சு
இசை துளி தேனா மலரா

ராஜ் தனது சொந்த உழைப்பால் ஜவுளி கடல் போல ஒரு பெரிய ஆடையகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறான்.ராஜின் தாத்தா வீடு வீடாக சென்று சைக்கிளில் விதவிதமான ஆடைகளை கொண்டு வந்து பேரம் பேசி வித்தவர் ஒரு காலத்தில்.. மற்றவர்கள் கொண்டு வந்த ஆடைகளை விட ராஜின் தாத்தா புது தினுசாக மக்கள் மனதை கவரும் வகையில் வண்ண வண்ண ஆடைகளை கொண்டு வந்து காட்ட அது மக்கள் மத்தியில் பிரபலமானது. சைக்கிளில் ஆரம்பித்த அவரது தொழில் சிறிய கடையாக உருமாறி பெரிய கடையாகி ராஜின் தந்தை சுந்தரின் கரத்தில் ஒப்படைக்கப்பட்டது.

அவரும் அவரால் முடிந்த அளவுக்கு தனது தந்தை தனக்கு உருவாக்கிக் கொடுத்த தொழில் வாய்ப்பை மென்மேலும் பெருகி ஒரு கடையை நான்கு கடையாக உரு மாற்றினார்.ராஜின் தாத்தா வயோதிகத்தின் பிடியில் இறந்துவிட அதன் பிறகு சில வருடங்களில் மாரடைப்பால் ராஜின் தந்தை இறந்து போனார்.அவர் விட்டுச்சென்ற பெருமளவு சொத்தை கமலா அவர் அண்ணனுடன் சேர்ந்து குட்டிச்சுவராகிறார்.

“தங்கச்சி இது என்னடா ஜவுளி தொழிலு.. ஒரே போட்டி பொறாம கூடி போச்சு.. நாயி மாறி அலய வேண்டியதா இருக்கு.. நான் சொல்ற தொழிலில பணத்த போடு.. அக்கடான்னு கால ஆட்டிகிட்டே உட்கார்ந்த இடத்துலருந்து லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்..” என்று தெரியாத தொழிலில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு தான் காலை விட்டு சிக்கிக் கொண்டதும் இல்லாமல் தனது தங்கையையும் சேர்த்து சிக்க வைத்து விட்டார் காளை பாண்டியன்..

கமலா, காளை பாண்டியன் இரண்டு பிள்ளைகளுக்கும் பொருத்தமாக பெயர் வைத்திருந்தனர் அவர்களது பெற்றோர்.காளை பாண்டியன் அல்த்ரா ராக்கெட் வட்டி தொழிலில் கோடி கோடியாக பணத்தை கொட்டி மாதம் லட்சத்தில் வட்டி வரும் என்று எதிர்பார்க்க அவரிடம் கோடி கோடியாக பணத்தை வாங்கியவனும் இரவோடு இரவாக அவ்வளவு பணத்தையும் சுருட்டிக் கொண்டு ஊரை விட்டு ஓடிவிட்டான். காளை பாண்டியன் மனைவி அடித்த அடியால் காலுடைந்த பாண்டியனாக படுத்து கிடந்தார்.. அனைத்து பணத்தையும் இழந்து ஓட்டாண்டியாக அவர் நின்று கொண்டிருந்த வேளையில் வந்து சேர்ந்தது தங்கை கணவன் இறந்த செய்தி.

ராஜ் அப்பொழுதுதான் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கால் எடுத்து வைத்திருந்தான்.. வேறு ஆண் துணை ஏதும் கமலாவிற்கு கிடையாது. சுந்தரின் தம்பி அமுதனை கமலாவின் தேள் கொடுக்கு நாக்கை வைத்து விரட்டி விடலாம் என்று அபார நம்பிக்கை காளை பாண்டியனுக்கு. தாய்மாமன் என்ற முறையில் அனைத்து பொறுப்பும் இவர் தலையில் தான் விழும். உடைந்த காலை இழுத்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுவதற்கு மனைவியை அழைத்துக்கொண்டு தங்கை வீட்டிற்கு கிளம்பி விட்டார். காளைப் பாண்டியனின் மனைவி காமதேனு..

பெண் பார்க்கச் சென்று மனைவியின் பெயரை கேட்டே அதன் அழகில் மயங்கி காமதேனுவை திருமணம் செய்து கொண்டார் காளை பாண்டியன்..இந்த காமதேனு பிறருக்கு அள்ளி கொடுக்க மாட்டார். அடுத்தவர் உடமையை துளிகூட இல்லாமல் கில்லி எடுத்துக்கொள்வார்.. தாய்மாமனாக தலைமை ஏற்று சுந்தரின் இறுதி காரியத்தை கடைசி வரை உடனிருந்து நல்லபடியாக செய்து கொடுத்தார் காளை பாண்டியன்.. அதன்பிறகு கிளம்பி தன் வீட்டிற்கு செல்லாமல் தங்கைக்கு தைரியம் சொல்வதாக பேர் பண்ணிக்கொண்டு கமலா வீட்டில் டேரா போட்டு விட்டார் மனைவியோடு. ராஜ் தந்தை இழந்த மன உளைச்சலில் தொழிலை பற்றி எதுவும் கேட்கவில்லை. அம்மா மேல் இருந்த நம்பிக்கை அப்படி.

கங்கா கல்லூரி முடித்து வீட்டில் வெட்டியாக பொழுதை போக்கிக் கொண்டிருந்தாள்.. படித்த படிப்பிற்கு வேலைக்குச் செல் என்று தந்தை இருந்தவரை பாட்டாய் பாட அதைக் காதிலேயே வாங்காமல் தன் போக்கில் ஊர் சுற்றிக் கொண்டிருந்தாள். அலங்காரத்தின் மேல் இருந்த ஆர்வம் அவளுக்கு வேலை மேல் இல்லாமல் போனது.ராஜ் படிப்பு என்று ஓட கங்கா இன்றைய ட்ரென்டிங் ஆடை அலங்காரம் எது என்று மும்முரமாக இருந்தாள்.

கமலாவிற்கு உடல் வளைந்து வேலை செய்ய இயலாது. கணவன் உயிரோடு இருந்தவரை கடைக்குச் சென்று கல்லாவில் முதலாளி தோரணையோடு அமர்ந்து கொள்வார். அங்கே வேலை செய்யும் பணியாட்களை வாடிக்கையாளர்கள் முன்னால் அதட்டி மிரட்டி தனது முதலாளித்துவத்தை வெளிப்படுத்துவார். முதலாளி மேலிருந்த பணிவும் மரியாதையும் முதலாளியம்மா மேல் பணியாட்களுக்கு இல்லாமல் போனது. கமலாவை போலவே கங்காவும் அதிகாரத் தோரணையை வெளிப்படுத்த இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் என்றாவது ஒருநாள் கடைக்கு வந்தாலே அன்று பணியாட்களுக்கு கரிநாள் என்று முடிவானது.

ராஜ் அப்படி இல்லை. அவனது தந்தை போலவே பணியாட்களோட தானும் ஒரு பணியாளாக இறங்கி வேலை செய்வான். வாடிக்கையாளர்கள் மனம் நிறைந்து வாங்க வந்ததற்கும் மேலாக வாங்கி செல்வார்கள் அவனின் சாமர்த்திய பேச்சில்.. மற்றவர்களிடம் அவ்வளவு அன்பாக பேசுவான். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது கெட்டிக்காரன். அவன் கடைக்கு வந்தால் போதும் அவனது அடுத்தவர் மனம் வாடாது நகைச்சுவை பேச்சு மற்றவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும்.

இப்படியிருக்க கமலா கடையை கவனிக்க மறந்தார். அவருக்கு பணம் வீட்டில் அமர்ந்து கொண்டே வந்தால் போதும். அவரது இந்த குணத்தை காளை பாண்டியன் சிறுவயது முதலே அறிந்து வைத்திருந்தார். அதைக்கொண்டே தங்கையை மொட்டை அடிக்க அவர் முடிவு செய்தார். தான் வட்டியில் பணத்தை ஏமார்ந்த விஷயத்தை சாமர்த்தியமாக தங்கையிடம் மறைத்து கமலாவையும் வட்டி தொழிலில் இறங்கினார். காலை பாண்டியனுக்கு தெரிந்த ஒருவர் இதே தொழிலை செய்ய அது மிகவும் வசதியாகி போனது அவருக்கு.

கமலாவை பேசி சரிக்கட்டி ஒரு பெரிய தொகையை முதலீடு செய்ய வைத்தார்.. ஏற்கனவே நண்பனுடன் பேசி வைத்ததைப் போல கமலா முதலீடு செய்த தொகையில் நண்பனுக்கு பாதி கொடுத்துவிட்டு மீதி பணத்தை பூராவும் காளை பாண்டியன் சுருட்டிக் கொண்டார். போலி கண்ணீரோடு தங்கை முகத்தை பார்க்கவே கூச்ச படுவதை போல நடித்து கமலாவிடம் தனது நண்பன் தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து பணத்தை பூராவும் சுருட்டிக் கொண்டு ஓடி விட்டதாகக் கதை கட்டினார்.

கமலா ஆடிப் போய்விட்டார். அவருக்கு பணம் போனது கூடப் பெரிதாகத் தெரியவில்லை. காளை பாண்டியன் இந்த வழியை கூறும்போதே ராஜ் அதனை வன்மையாக கண்டித்தான். அமுதனுக்கும் இதில் துளியும் விருப்பமில்லை.அவன் பேச்சை மீறி அவனுக்கு தெரியாமல் அண்ணனை நம்பி தெரியாத தொழிலில் கால் வைத்தது எவ்வளவு பெரிய பின் விளைவை ஏற்படுத்தி விட்டது என்று காலம் கடந்து உணர்ந்தார் கமலா.

என்ன உணர்ந்து என்ன? காளை பாண்டியன் நடிப்பில் கமல்ஹாசனை மிஞ்சிவிட்டார்.. அவர் அழுத அழுகையை பார்த்து கமலாவே அவரைத் தேற்றுவது போலானது.. தொழிலை சரியாக கவனிக்காமல் அதிலும் பெரிய நஷ்டம்.நான்கு கடைகள் ஒன்றாகி நின்றது..பணியாட்களுக்கு சரியாக சம்பளம் கூட கொடுக்க முடியவில்லை.. நிலைமை கைமீறி விட்டதை ராஜ் உணர்ந்தான். அம்மாவையும் மாமாவையும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு திட்டி தீர்த்தான். அவர்களிடம் பேசுவதையே நிறுத்தி விட்டான். படிப்பை ஒரு பக்கம் மூட்டை கட்டி வைத்துவிட்டு தானே முழுமூச்சாக தொழிலில் இறங்கினான்.

அவன் தொழிலில் இறங்கும்போது தொழில் உயிரை விடும் கடைசி நிலையில் ஊசலாடிக் கொண்டிருந்தது. முழு மூச்சாக இறங்கி தன் மூச்சே நின்று விடும் அளவு கடுமையாக உழைத்தான். இரண்டு மூன்று மாதத்திற்கு எந்த பணி ஆட்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை. ராஜ் தனது இயலாமையை ஒத்துக்கொண்டு பணியாட்களிடம் வேறு எங்காவது வேலைக்கு சென்று பிழைத்துக் கொள்ளும்படி கூறினான். சிலர் அவனின் தந்தை போல் அவனுக்கு தொழில் செய்ய தெரியவில்லை என்று காயப்படுத்தினார்கள். சிலரோ குடும்ப சிக்கலினால் மனம் இல்லாவிட்டாலும் வேறு இடத்திற்கு வேலைக்கு சென்று விட்டார்கள்.

மீதமிருந்த நான்கைந்து பேர்கள் சுந்தர் இந்த கடையை ஆரம்பித்ததிலிருந்து அவரோடு பயணிப்பவர்கள்..அவர்களுக்கு அவனை இந்த நிலையில் விட்டுச் செல்ல மனம் வரவில்லை. என்ன நடந்தாலும் என்ன?ஒரு கை பார்த்து விடலாம் என்று ராஜிற்கு உறுதுணையாக நின்றனர். அதில் ரிஷியின் தந்தையும் ஒருவர்.அகிலன் தன்னாலான உதவிகளை செய்தார்..கடினமாக உழைத்தான் ராஜ். புதுப்புது டிசைன்களில் கண்ணைக் கவரும் சேலைகளை நெய்து பல தள்ளுபடிகள் கொடுத்து சரி இந்த தொழிலை ஒருவராக நிமிர்த்தி வைத்தான்.

தொழிலை சரி கட்டியவன் வீட்டை கவனிக்க தவறி விட்டான். கங்கா காளை பாண்டியனின் ஒரே மகனான குணா மீது காதல் வயப்பட்டாள். அதற்கு முக்கியமான காரணம் குணா ஒரு இளிச்சவாயன். கங்கா என்ன சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலை ஆட்டுவதை தலையாய கடமையாகக் கொண்டவன். அவனை மாறி ஒருவனை இந்த உலகத்தில் எங்கு தேடினாலும் கண்டுபிடிப்பது அரிது. மற்ற விஷயங்களில் இளிச்சவாயனாக இருக்கும் குணா வாலிப முறுக்கில் முதல் ஆளாக இருந்தான். வயதின் பசி குணா கங்காவை தடுமாற வைத்தது..

இருவரும் செய்த பிழை கருவாக கங்கா வயிற்றை நிரப்பியது. விஷயத்தைக் கேள்விப்பட்ட கமலா பெரிதாக ஒன்றும் அதிர்ந்து போகவில்லை. தன் அண்ணன் மகனே தனது மருமகனாக வந்துவிட்ட மகிழ்ச்சி அவருக்கு.ராஜ் தான் கொதித்துப் போனான். கங்காவை நாலு அறை விட்டான். வேறு வழியில்லாமல் நான்கு வருடங்களாக பேசாமல் இருந்த மாமனிடம் தனது உடன் பிறந்த சகோதரிக்காக திருமணம் பேசினான். காளை பாண்டியனின் மூளை வேகமாக வேலை செய்தது.

வரதட்சணையாக ராஜ் இப்பொழுது சம்பாதித்து வைத்து இருந்ததில் பாதியை கேட்டார்.. முடியாது போடா என்று சொல்ல முடியாத இக்கட்டில் மாட்டிக் கொண்டான் ராஜ்.கங்கா வேறு கண்ணீரும் கம்பலையுமாக” அப்பா இருந்தா எனக்கு இந்த நிலம வந்துருக்குமா”என ராஜ் மண்டையை பிடித்துக் கொண்டான்.கங்காவிற்கு குழந்தை கூட முதன்மையாக இருக்கவில்லை. குணாவை போல அடிமை தான் அவளுக்கு முக்கியமாக பட்டான். தம்பியை சம்மதிக்க வைக்க தற்கொலை நாடகம் நடத்தி அதில் அவள் பிழைத்துக் கொண்டாள். அவள் வயிற்றில் இருந்த கரு கலைந்து போனது.

அதற்கும் ராஜ் தான் காரணம் என்று அம்மாவும் மகளும் கதை கட்ட அவர்களின் நாடகம் ராஜ் அறிந்திருந்தான். அமுதனும் கொடுத்து தொலைத்து விட சொல்ல வேறுவழியின்றி உறவுகளுக்கு கட்டுப்பட்டு காளை பாண்டியன் கேட்ட பாதி சொத்தை கங்கா பேரில் எழுதி வைத்தான். குணா கங்கா திருமணம் நல்லபடியாக நடந்தேறியது. மீண்டும் இழந்த சொத்தை தனி ஒருவனாக மீட்க பெரிதும் போராடினான் ராஜ். அவனின் இளமை கனவுகள் அனைத்தும் அழிந்து போனது.

வேலை வேலை வேலை காலையில் எழுந்ததிலிருந்து இது மட்டுமே அவன் சிந்தனையில் இருக்கும்.அவன் சம்பாதிக்கும் பணத்தை அம்மாவும் அக்காவுமாக அழித்து தின்றனர். இறக்கும் தருவாயில் அவனது அப்பா கேட்டுக் கொண்டது அவனுக்கு எப்பொழுதும் ஞாபகம் இருக்கும். எந்த நிலைமை வந்தாலும் அம்மா அக்காவை கைவிட்டு விடக் கூடாது என்று அவர் கேட்டிருந்தார். அந்த ஒரே காரணம் தான் அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு எல்லாம் ராஜ் வாய்மூடி நின்றான்.

முதல் குழந்தையை அலட்சியமாக ஒதுக்கிய பாவமோ என்னவோ இரண்டாவது குழந்தை தங்க கங்காவுக்கு சில காலம் பிடித்தது. எத்தனையோ மருத்துவர்களிடம் சிகிச்சை எடுத்து லட்ச லட்சமாக பணம் கறைந்தது. அந்த செலவு எல்லாமே ராஜ் தலையில் விடிந்தது.. இறுதியாக திருமணம் முடிந்து எட்டு ஆண்டுகள் கழிந்த நிலையில் ஒரு குழந்தைக்கு தாயாகினாள் கங்கா.

தனது முப்பது வயதில் இளமை கனவுகள் அனைத்தையும் இவர்களுக்காக தியாகம் செய்தான் ராஜ்.அவனது ஆசைகள் கனவுகள் எல்லாமே இவர்கள் இருவரின் பேராசையால் அழிந்து போனது. இதில் இன்னும் பெரிய மோசமாக காளை பாண்டியன் இன்னுமொரு திட்டம் தீட்டினார். குணாவின் தங்கை அதாவது அவரது மகளை ராஜிற்கு திருமணம் செய்து வைத்து மிச்சமிருக்கும் சொத்தையும் சுரண்டி விட மூளையை உருக்கி கொண்டிருந்தார்.

சிந்து ராஜின் மாமன் மகள். கங்காவை விட நூறு மடங்கு அகந்தை பிடித்தவள். அவளுக்கும் ராஜ் மேல் ஒரு பெரிய ஈர்ப்பு இருந்தது. காளை பாண்டியன் அந்த ஈர்ப்பை தூபம் போட்டு காதலாக மாற்றினார்.. அக்கா விஷயத்தில் ஏமார்ந்த ராஜ் தன்னுடைய திருமண விஷயத்தில் நிலையாக நின்றான். காரணம் சிந்துவை சிறுவயதில் இருந்தே அவனுக்கு அடியோடு பிடிக்காது. அவளும் அவளது உடையும் ஆண்களிடம் வளைந்து குழைந்து அவள் பேசும் குரலும் நிற்க வைத்து நான்கு அப்பு அப்பலாமா என்று அவனுக்கு கோபமாக வரும்.

கடைக்கு ராஜை பார்க்க வருபவள் சில நேரம் அங்கே ரிஷியை பார்த்தால் அவன் பின்னாலேயே சுற்றி அவனை உரசிக்கொண்டே நிற்பாள். நல்லபடியாக பல நேரம் சொல்லிப் பார்த்த ரிஷி ஒரு கட்டத்தில் பொறுமை மீறி, விட்டான் ஒரு அறை. கடையில் உள்ள அனைத்து பணியாட்கள் முன்பும் ரிஷி அவளை அறைந்ததை சித்துவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.ரிஷி தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக வீட்டில் பொய் கூறினாள். நாத்தனாருக்கு கொடி தூக்கிக்கொண்டு கங்கா ராஜிடம் வந்து நின்றாள்.

நண்பனை பற்றி நன்கறிந்த ராஜ் கடையில் உள்ள பணியாட்கள் மூலம் நடந்த அனைத்தையும் அறிந்து வைத்திருந்தான். அன்று அவன் கங்காவை கத்திய கத்தலில் மிரண்டு போனவள் அத்தோடு வாயை மூடிக் கொண்டாள்.சிந்து தன்னை அவமானப்படுத்திய ரிஷியையும் தன்னை நம்பாத ராஜையும் பழிவாங்க இந்த திருமணம் நடந்தே ஆக வேண்டும் என்று ஒரே பிடியில் நின்றாள்.

மகளின் இம்சை தாங்காமல் காளை பாண்டியன் தனது பாதி சொத்தை தருவதாகவும் தனது மகளை அதற்கு பதிலாக மணந்துகொள்ள கூறியும் ராஜை நச்சரிக்கத் தொடங்கினார். இதற்கெல்லாம் அசைந்து கொடுப்பவனா ராஜ்? ஒரே போடாக போட்டு விட்டான் சிந்து போன்ற ஒருவளை செத்தாலும் தான் திருமணம் செய்ய போகவில்லை என்று.

சிந்து அடிப்பட்ட புலியாக சுற்றிக் கொண்டிருக்கும் போதுதான் வெண்ணிலா ராஜ் வாழ்வில் வந்தாள். தனது இளமை கனவுகள் அனைத்தையும் துறந்து சன்னியாசியாக வாழ்ந்து கொண்டிருந்த ராஜின் மனதில் வாலிப தென்றலை வீசினாள். அவளைப் பார்த்து மயங்கி நின்றவன் அவளுடன் பேசிய அன்றே அவளுள் கிறங்கி நின்றான்..

அவளைப் பெண் பார்த்து வந்த அந்த ஒரு மாதத்தில் கங்காவும் சிந்துவும் ஆடாத ஆட்டமில்லை. ஆனால் அதை எதையும் காதில் வாங்காமல் தனது காதலில் நிலையாக நின்று வெண்ணிலாவை கரம்பிடித்தான் ராஜ். திருமணம் செய்தால் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து விடும் என்று அவன் எண்ணவில்லை. ஆனால் குறையும் என்று திண்ணமாக நம்பினான்.பிரச்சனையும் குறைந்தபாடில்லை. இதுவரை அவன் குடும்பத்தை மட்டுமே சரி கட்டி கொண்டு வந்தவன் இப்பொழுது வெண்ணிலாவின் குடும்பத்தையும் சரி செய்வது தன் கடமை என்று புரிந்து கொண்டான்.

தன் நெஞ்சில் சாய்ந்து சுகமாக உறங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலைமுடியை கோதிக்கொண்டே தன்னைப் பற்றிய நினைவுகளை எண்ணிப் பார்த்துக் கொண்டிருந்தான் ராஜ். நிலா அவள் முகத்தில் மோதிய முடியின் அசைவில் கன்னத்தை சொறிந்தாள். அவளது அசைவில் சற்றுக் குனிந்து நிலாவை பார்த்தான் ராஜ். பழயதை நினைத்து கலங்கி கொண்டிருந்தவன் முகத்தில் மென்னகை வந்து ஒட்டிக் கொண்டது.

எனக்காக யாரும் இல்லை என்றால் என்ன? இதோ இவள் இருக்கிறாள். எனக்கே எனக்காக ஆண்டவன் அருளிய வரம். நான் பட்ட துயரங்களுக்கு எல்லாம் எனது வடிகால்.. என்னுடைய இளமை கனவுகளின் தீராத எல்லை இவள்.. என் வாழ்வின் விடிவு எனது வெண்ணிலா என்று அவளை இறுக்கி அணைத்து கொண்டு கண்ணுறங்கினான் ராஜ் மித்ரன்.

தொடரும்

Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்