சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 1


அழகான காலை பொழுது. சூரியன் தன் கதிர்களை பூமியை நோக்கி அனுப்பிட அந்த கதிர்கள் தூக்கம் சரியாக கலையாத நிலையில் சற்றே தங்கள் வேலையான உஷ்ணம் பரப்புதலை மறந்து மிதமான உஷ்ணத்தை அதாவது இளம் வெயிலை பூமிக்கு பரப்ப செய்தன. இன்றைய காலை வழக்கத்திற்கு மாறாக மிகவும் அழகாக விடிந்தது. இளம் வெயிலில் இயற்கையை பார்ப்பதற்கு இரண்டு கண்கள் போதவில்லை.அழகென்றால் அழகு அப்படி ஒரு அழகு. காலை வேளையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மனநிலையில் பரபரப்பாக தங்கள் கடமைகளை செய்து கொண்டிருக்க ஒருவன் மட்டும் வெயில் முகத்தில் பட்டும் எழாமல் இருந்தான்.

“ஹேய் தம்பி என்றா கண்ணு இங்க தூங்கிட்டு இருக்க.. ராவு முச்சுடும் இங்கதான் இருக்கியா”வெயிலுக்கு அசராதவன் அந்த குரல் கேட்டு கண்விழித்தான்.

“என்ன அண்ணே விடின்ஞ்சிருச்சா”..

” சூரியன் சுட்டெரிச்சுகிட்டு இருக்கான் நீ பத்து மணி வர பப்பரப்பேன்னு சொகமா படுத்து கெடந்து கேள்வியா கேக்குற.. ஏதோ உங்கப்பா அந்த நல்ல மனுஷன் மூஞ்சிக்கா நேத்து உன்ன உள்ளார வுட்டேன்.இனி இங்கன வந்து பாரு”

“கோச்சிக்காத அண்ணே.இன்னைக்கும் வருவேன் வரும்போது உனக்கு குவாட்டர் மட்டன் பிரியாணி வாங்கிட்டு வரேன் சரியா”ஓசியில் குடி கிடைத்தால் எந்த குடிமகன் தான் வேண்டாம் என்பான்.

“சரி கண்ணு ஆனா நீ வயசு பையன் இதெல்லாம் சரியில்ல.காத்து சேட்ட ஏதாச்சும் மேல ஏறிக்க போவுது கண்ணு”

“அதெல்லாம் நா பாத்துக்குறேன் அண்ணே.. நீ பிரீயா வுடு.. ஆமா காத்து சேட்டன்னா எப்படி”

“உன்ன மாறி வயசு பயலுங்கனா மோகினிக்கு கொண்டாட்டம்.. அதுலயும் நீ வேற ஆளு வாட்டசாட்டமா இருக்க.. உன் நல்லதுக்கு சொல்றேன் கண்ணு இங்க வராத”குடிக்கு அடிமையாகிய நாக்கை அவனின் நலன் கருதி அடக்கி விட்டு அறிவுரை கூறினான்.

“காலையில பல்லு கில்லு வெளக்குனியா நீ.. போ போயி பல்ல வெளக்கு.. என்னா நாத்தம்.. இதோ பாருண்ணே நா என்ன பண்றேன்னு எனக்கு தெரியும் நீ கம்முனு இரு”இனிமேல் இவனிடம் பேசிப் பயனில்லை என்று எண்ணினானோ அல்ல இவன் பேச்சை கேட்க்கும் ரகமில்லை என்று அறிந்ததாலோ அந்த வெட்டியான் வாயை மூடி கொள்ள மெல்ல தனது தந்தையின் கல்லறை மேலிருந்து எழுந்தான் அவன். ஏதோ பஞ்சு மெத்தையில் படுத்திருந்தவன் போல எழுந்து நின்று உடலை ஒரு முறுக்கு முறுக்கி சோம்பல் முறித்து தன் உடமைகலான கைபேசி பவர் பாங்க் தண்ணீர் பாட்டில் முதலியனவற்றை எடுத்து பேக்கில் அடைத்து கொண்டு கிளம்பி விட்டான். கடந்த ஒரு வாரமாக அவன் இதைத்தான் தனது அன்றாட கடமையாக செய்து கொண்டிருக்கிறான். வீடு இருந்த தெருவிற்குள் நுழையப்போனவன் பார்வை ஒருமுறை அந்த பிரமாண்ட வீட்டின் மேல் பதிந்து மீண்டது. அந்த பார்வை வீட்டின் மீதா விழுந்தது அல்லவே மாடியில் நின்று நீண்ட கூந்தலை உலர்த்தி கொண்டிருந்தவளின் மேலல்ளவா விழுந்தது.

இந்த ஊரே அவளை பயந்து பார்க்க அவளை ரசித்து பார்ப்பவன் அவன் மட்டுமே.அந்த ரசனைகள் யாவும் அவள் பார்வையில் விழும் நேரம் மட்டும் கோபமாக மாறி விடும். உதடுக்குள் சிரித்து கொண்டவன் தன் வீட்டிற்குள் சென்றான்.அது பெரிய வீடாக இல்லாவிடினும் வசதிக்கு எந்த குறையும் கிடையாது.இரவு முழுவதும் சுடுகாட்டில் படுத்திருந்தவனை தேட அந்த வீட்டில் யாரும் கிடையாது.ஒரே ஒருவன் இருக்கிறான் அவனும் இப்பொழுது ஊரில் இல்லை.வந்தான் குளித்தான் எதிர்வீட்டு பையன் தூக்கில் எதையும் எடுத்து வந்தான்.

“ஆருடா உன்கிட்ட இப்ப சாப்பாடு கேட்டது.”

“ஏன் நீங்க கேட்டதான் எடுத்து வரணுமாக்கோம்..உன் வெட்டி வீராப்ப விட்டு போட்டு சீக்கிரம் சாப்புடுண்ணே”

“அங்க வெச்சி போட்டு போடா.ஏலேய் பள்ளிகொடம் இல்லயா உனக்கு”

“இருக்கு ஆனா போவணுமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்”

“இன்னும் ஐஞ்சு நிமிசத்துல நீயு பள்ளிகொடத்துல இல்ல தோல உரிச்சு போடுவேன் படுவா ஓட்றா”சிறுவன் ஒரே ஓட்டமாக ஓடி விட்டான். எதிர்விட்டு சிறுவன் இவன் தோட்டத்தில் வேலை செய்யும் விதவை காஞ்சனாவின் மகன். சிறுவயதில் இருந்தே அக்கா என்று கூப்பிட்டு பழகியவள் தான்.கணவன் இருந்தவரை இவன் வீட்டிற்கு வந்து வீட்டை சுத்தம் செய்து விட்டு செல்பவள்.கணவன் இறந்ததும் ஊர் வாயிற்கு பயந்து எட்டடி தூரத்தில் நின்றே

“தம்பி ராவுக்கு சின்னுகிட்ட கருவாட்டு குழம்பு கொடுத்தனுப்பறேன்.. வெளிய சாப்டுறாதிங்க கண்ணு”எனும் அளவிற்கு அவன் மேல் உள்ள சகோதர பாசத்தை வெளிப்படுத்துவத்தோடு சரி.சின்னு கொண்டு வந்த இட்லிகளை பொடியுடன் உண்டு விட்டு தோட்டத்திற்கு கிளம்பினான்.அந்த ஊரிலே உயரமான மனிதன் யாரென்று கேட்டால் அனைவரும் திரும்பி பார்க்கும் ஆள் தான் நீரன்.நெடுநெடுவென வளர தெரியாமல் வளர்ந்து நின்றான். மாநிறத்தில் அடர்ந்த தாடி மீசையுடன் முப்பது வயது ஆண் மகன் அவன்.தோட்டத்திற்கு செல்லும் போதும் ஒரு முறை அந்த பெரிய வீட்டை அவன் விழிகள் நோட்டமிட்டன.இப்பொழுது உதடுக்குள் சிரிப்பை புதைக்கவில்லை. இதழ்களில் புன்னகையை படர விட்டான்.

அங்கே அவன் ரசிக்கும் பெண்ணவள் செய்து கொண்டிருந்த காரியம் தான் அவனுக்கு புன்னகையை வரவழைத்திருந்தது.தங்க வளையல்கள் அணிந்திருந்த மென் கரமொன்று சாட்டையை கையில் ஏந்தி சுழற்றி சுழற்றி தன் முன் நின்று கொண்டிருந்த ஒருவனை பதம் பார்த்துக் கொண்டிருந்தது.ஆனால் வலி தாங்க முடியாமல் ஐயோ அம்மா என்று கத்தும் ஓசை நாராசமாக அந்த காலைப்பொழுதில் அனைவரின் காதிலும் விழுந்தது.அடித்து அடித்து கைகள் ஓய்ந்து சாட்டையை தூக்கி எறிந்தவள் அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.

“என்றா அங்க சத்தம்..” அவள் அடித்த அடியின் வலி தாங்க முடியாமல் விசும்பி கொண்டிருந்தவன் அவளது மிரட்டும் குரல் கேட்டு வாயை மூடிக்கொண்டான்.

“உனக்கு எம்புட்டு தகிரியம் இருந்தா என்னயே ஏய்க்க பாப்ப.. பொம்பள என்ன பண்ணிடுவானு நெனப்போ.. நா பொம்பளைக்கு பொம்பள ஆம்பளைக்கு ஆம்பளடா..மாமா”

“சொல்றா கண்ணு”

“இவன ஊர் மத்தியில இருக்குற அரசமரத்துல கட்டி வெச்சு தோல உரிங்க.. தோல் வருண்டு வரும்போதெல்லாம் உப்பு தண்ணிய ஊத்தி ஊத்தி அடிங்க.இவனுக்கு விழுவுற அடியில இனி இந்த ஊர்ல ஒருபய என்ன ஏமாத்தணும்னு கனவுல கூட நெனைக்க கூடாது..” இந்த தண்டனையை அவள் கூறும்போதே சாட்டையில் அடி வாங்கி அரை உயிராய் கிடந்தவன் மிரண்டு போனான்.அவள் கண்களில் அப்படி ஒரு ஆத்திரம். அவளது கோபத்தை நன்கு உணர்ந்து அவளின் மாமா

“நீ போடா கண்ணு மாமா பாத்துக்குறேன்.. காலையில என்னத்துக்கு இந்த நாய அடிச்சு கைய புண்ணாகிக்குற..என்ற மச்சான் உன்ன பூ போல வளத்தாரு. நீ என்னடானா இப்டி முரட்டு தனமா நடந்துக்குற.. சரிடா மொறைக்காத போ போயி சாப்புட்டு போட்டு மில்லுக்கு போடா கண்ணு..ஏய் கண்ணம்மா அம்மணிக்கு சாப்பாடு எடுத்து வையு”

“நீங்களும் வாங்களேன் மாமா..சாப்புட்டு போட்டு வேலைய பாப்பிங்க”

“இல்லடா கண்ணு இவன முடிச்சு விட்டுடு வரேன் நீ போ”.. அவள் உள்ளே சென்று கை கழுவி விட்டு உணவு மேஜையில் அமர்ந்தாள்.கண்ணம்மா சிறுவயதில் இருந்தே அவளை வளர்த்தவர்.தட்டில் தோசை வைத்து அதை ஒரு வில்லல் பிய்த்து அவளுக்கு ஊட்ட

“நானே சாப்புட்டுக்குறேன் கண்ணம்மா.. நீ போயி உன்ற வேலய பாரு”

“எப்டி கண்ணு சாப்புடுவ.. கையெல்லாம் அந்த எடுபட்ட பயல அடிச்சு செவந்து கெடக்கு பாரு.. இந்த கையால எப்படி கண்ணு..நீ வாய தொற இன்னைக்கு ஒரு நாள் நா ஊட்டுறேன்”

“ம்ம்ம் டேடி சாப்டாரா”

“ஐயா அப்பவே சாப்புட்டு போட்டு படுத்துருக்காரு கண்ணு”அதற்கு மேல் எதுவும் பேசாமல் கண்ணம்மா ஊட்ட சாப்பிட தொடங்கினாள் செந்தூரா.பெயருக்கு ஏற்றார் போல செந்தூர நிறத்தில் இருப்பவள்.நல்ல முரட்டு உடல் அவளுக்கு. பள்ளியில் படிக்கும் பொழுது அவளது தோழிகள் அனைவரும் நீ பாக்ஸிங் போலாம்டி என்று கேலி செய்வதுண்டு. அந்த ஊரிலேயே பெரிய தலைக்கட்டு குடும்பம் அவர்களது. அவளது தந்தை தில்லைநாயகம் அந்த ஊரில் முடிசூடா மன்னனாக வாழ்ந்து வந்தவர்.யாருமற்ற தன் தாய் மாமன் மகளையே திருமணம் செய்து கொண்டார்.அவரது தம்பி குகனை இவரே படிக்க வைத்தார்.திருமணமாகி பதினைந்து வருடங்கள் கழித்து பல வேண்டுதல்களுக்கு பிறகு பிறந்தாள் செந்தூரா. அவள் பிறக்கும் போதே அவளது அம்மா இயற்கை எய்திட ஒரே மகளை தன் உயிராய் வளர்த்து வந்தார். குகன் ஒரு காதல் முறிவால் திருமணமே வேண்டாமென தன் மச்சானிற்கு உறுதுணையாக இருந்து கணக்கு வழக்குகளை பார்த்து கொள்ள ஒரே மகளான செந்தூரா தந்தையின் பேரன்பினால் சிறுவயதில் இருந்தே பிடிவாதக்காரியாய் வளர்ந்தாள்.

அடிதடி கட்டப்பஞ்சாயத்து என பார்த்தே வளர்ந்தவள் எம்பிஏ படித்திருந்தாலும் படித்த படிப்பிற்கு வந்த வெளிநாட்டு வேலைகளை உதறி விட்டு தன் ஊரில் தங்களது சொந்த தொழில்களை பார்த்து கொண்டு இருந்தாள்.அவளின் தந்தை தில்லைநாயகம் கொஞ்ச காலமாகவே நோய் வாய் பட்டு படுக்கையில் கிடக்க அவரின் தொழில்கள் முதற்கொண்டு கட்டப்பஞ்சாயத்து வரை எல்லாமே செந்தூரா தான்.தில்லைநாயகம் எதிரிக்கும் பேச வாய்ப்பு கொடுப்பவர். மகளோ எதிரி என்று அறிந்த மறுவினாடியில் இருந்தே அவனை கருவருக்க திட்டம் தீட்டுப்பவள்.

நள்ளிரவு ஊரே அடங்கிருக்க செந்தூராவின் வீட்டு சுவரேரி குதித்தான் நீரன்.மெல்ல அந்த வீட்டினுள் நுழைந்தான். ஓசை எழுப்பாமல் ஒவ்வொரு அறையாக தேடினான். ஒன்றில் தில்லைநாயகம் அவரின் பக்கத்து அறையில் குகன் கீழே மற்ற அறைகளில் யாருமில்லை. மாடிக்கு சென்றான் ஒவ்வொரு அறையாக பார்க்க இருந்த பெரிய அறையில் அவன் தேடி வந்தவள் உறங்கி கொண்டிருந்தாள்.இத்தனை நாள் தூரத்தில் இருந்து பார்த்து ரசித்த அழகு இதோ மிக அருகில். சுடுகாட்டில் இருந்து நேராக இங்கே வந்திருந்தான். அவன் செய்ய போகும் காரியத்திற்கு இவளை பலிக்கொடுக்க அவனுக்கு மனம் வரவில்லை.ஆனால் வேறு வழியில்லை.இதை செய்தே ஆக வேண்டும். அவன் தப்பிக்க வேண்டுமென்றால் இதை செய்வதை தவிர வழியே கிடையாது.

மனதை கல்லாக்கி கொண்டு அவன் ஜீன்ஸ் பாக்கேட்டில் வைத்திருந்த சிறிய டப்பாவை எடுத்து அதிலிருந்த மையை அள்ளி செந்தூராவின் உச்சி வகிடில் தடவி விட்டு வந்த சுவடே தெரியாமல் சென்று விட்டான். இங்கே செந்தூரா கெட்ட சொப்பனங்களால் உறக்கம் கெட்டு கண்விழித்து வியர்த்து விறுவிறுத்து அமர்ந்திருந்தாள்.அங்கே அவன் தான் செய்த காரியத்தை நினைத்து தன்னை தானே காயப்படுத்தி கொண்டான் கரத்தை சுவரில் அடித்து.

தொடரும் 





Comments

Post a Comment

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்