சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 25


காதலே உன் காலடியில்

நான் விழுந்து விழுந்து தொழுதேன்

கண்களை நீ மூடிக்கொண்டால்

நான் குலுங்கி குலுங்கி அழுதேன்

இது மாற்றமா

தடுமாற்றமா..

என் நெஞ்சிலே

பனி மூட்டமா..

நீ தோழியா…

இல்லை எதிரியா

என்று தினமும்

போராட்டமா…

செந்தூராவின் கண்மூடி நாற்காலியில் சாய்ந்திருந்தாள். கண் இரண்டும் மூடி இருந்தாலும் அவளது முகம் சொல்லொன்னா வேதனைகளை வெளிப்படுத்தியது. நேற்று இரவு நீரன் இல்லாத இரவாக கழிய நெடுநேரம் வரை அவனை நினைத்து கொண்டே படுத்திருந்தாள் செந்தூரா. அவளும் ஒன்றிலிருந்து நூறு வரை எண்ண தொடங்கி அது ஆயிரத்தையும் தாண்டி சென்றதுதான் மிச்சம். ஆனால் உறக்கம் என்னவோ வந்து தொலையவில்லை. அவளது கைபேசியில் இருக்கும் அவனது நிழல் படங்களை பார்த்துக் கொண்டே இருந்தவளை தூக்கம் லேசாக தழுவ ஆரம்பித்தது.

கைபேசியை பக்கத்தில் வைத்தவள் அப்பொழுது தான் கண்ணயர தொடங்கினாள். அன்று அவளின் தூக்கத்திற்கு ஆயுசு ரொம்ப குறைவு போல.  கைப்பேசி சிணுங்கி தான் இருப்பதை உணர்த்தியது. ஒரு வேளை கணவனாக இருக்கலாம் என்று ஆசையாக கைப்பேசியை எடுத்து காதில் வைத்தவளுக்கு இடியாக விழுந்தது அந்த செய்தி. அவளது காதல் கணவன் சென்ற கார் விபத்துக்குள்ளாகி அவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான் என்ற தகவலை கேட்ட மறுநொடி அவளுக்கு மூச்சு வேலை நிறுத்தம் செய்திருந்தது.ஒரு முழு நிமிடம் அவளுக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை. தான் கேட்ட செய்தி உண்மையா இல்லை தான் தூக்கத்தில் கெட்ட கனவு கண்டு கொண்டிருக்கிறோமா எனும் சந்தேகத்தில் தனது கையை ரத்தம் வரும் அளவுக்கு பலமாகச் கிள்ளி பார்த்தாள். தோல் வறண்டு ரத்தம் துளியாக வர அவள் கேட்ட செய்தி உண்மைதான் என்று அவளுக்குப் புரிந்தது. உடனே அடித்து பிடித்து எழுந்தவள் ஓடிச்சென்று தில்லையின் அறைக்கதவை தட்ட அவரோ மகளின் அவசர குரல் கேட்டு பதற்றமாக வந்து கதவை திறந்தார்.

தலைமுடி கலைந்து  பயத்தில் வெளிரிய முகத்தோடு ஒரு பைத்தியக்காரியைப் போல் அவரின் ஆசை மகள் நின்று கொண்டிருந்தாள்.”டேடி என்.. என் நீரா.. என்”

“அம்மாடி என்னடா கண்ணு.. ஏன் இம்புட்டு பதட்டமா இருக்க.. என்னடா ஆச்சு.அப்பாட்ட சொல்லும்மா..”அவருக்கு பதற்றம் தொற்றி கொள்ள”குகா குகா”என்று குரல் கொடுக்க உறங்கி கொண்டிருந்த குகனும் அடித்து பிடித்து எழுந்து தில்லையின் அறைக்கு வந்தார்.தில்லை செந்தூராவை தான் மார்போடு அணைத்து

“என்னடா ராசாத்தி கெட்ட கனா கண்டுக்கிட்டு பயந்து போய்டியா”

“இல்ல டேடி என் நீரன்”

“நீரனா.. அவன் ராசுவ பாக்க ஆஸ்பத்திரிக்கு போய்டான் மா”குகன் குழந்தைக்கு சொல்வது போல் அவளுக்கு விளக்க

“இல்ல மாமா.. என்ற நீரன்.. அக்சிடேன்ட்”என அவள் திக்க

“அக்சிடேன்ட்டா.. சீ சீ.. என்னடா அபசகுணமா பேசிட்டு இருக்க”சற்று கண்டிப்போது குகன் கூற

“மாமா என்ற புருச..னுக்கு அக்சி..டேன்ட் போன்…வந்..துச்சு”திக்கித் திணறி ஒரு வழியாகத் தான் கூற வந்ததை கூறி முடித்தாள் செந்தூரா. அவள் அழவில்லை செய்தியைக் கேட்ட மறு நிமிடத்திலிருந்து அவளின் கண்களில் கண்ணீர் சுரபி வேலை நிறுத்தம் செய்திருந்தது.. ஆனால் அந்த செய்தியின் தாக்கம் அவளை திக்பிரமை கொள்ள வைத்தது. கோர்வையாக ஒரு வார்த்தை பேச மிகவும் கஷ்டப்பட்டாள். அவள் விஷயத்தை ஒருவழியாக கூறி முடிக்க குகன் பதறி  என்ன இது என்று அவளிடம் விசாரிக்க அதற்கு மேல் அவளிடம் எந்த ஒரு வார்த்தையும் வாங்க முடியவில்லை.தில்லை அவளை மெல்லமாக நடத்திக்கொண்டு சோபாவில் அமரவைத்து அவரே சமையல் கட்டுக்கு சென்று சூடான பாலை எடுத்துவந்து கொஞ்சம் குடி என்று அவளிடம் மன்றாடி கொண்டிருந்தார்.

குகன் செந்தூராவின் கைபேசியை எடுத்து கடைசியாக வந்த எண்ணிற்கு அழைக்க ஒரு பெண் அழைப்பை எடுத்தார். அவர் தான் சாலையில் அடிபட்டு கிடந்த நீரனை அவரது மகனுடன் சேர்ந்து தூக்கி ராசுவுக்கு சிகிச்சை நடைபெற்றுக்கொண்டிருக்கும் மருத்துவமனையிலேயே இவனையும் சேர்த்திருந்தார்.நீரனின் கைபேசி உடைந்து நொறுங்கிருக்க அதை எடுத்து அதில் உள்ள சிம்கார்டை தனியாக எடுத்த அந்த பெண்ணின் மகன் அதனை தன்னுடைய கைப்பேசியில் பொருத்தி ஏதாவது கைபேசி எண்கள் உள்ளதா என்று பார்த்தான்.

நல்லவேளையாக நீரன் செந்தூராவின் எண்ணை சிம்மில் பத்திரப்படுத்தி பொண்டாட்டி என பெயர் போட்டிருக்க உடனே தாமதியாமல் அந்த எண்ணிற்கு அழைத்து விஷயத்தைக் கூறி இருந்தான். அந்தப்பெண் இவை அனைத்தையும் குகனிடம் கூற சற்று நேரத்தில் தாங்கள் வந்து சேர்கிறோம் என்று அதுவரை கொஞ்சம் அங்கிருந்து  நீரனை பார்த்துக் கொள்ளுமாறு வேண்டிய குகன் தன் மருமகளை நெருங்கினார்.

“செந்தூரா கண்ணு.. வாடா கெளம்பலாம்..”என்றதும் ரோபர்ட் போல எழுந்தவள் எதுவும் பேசாமல் நேராக சென்று காரின் பின் பக்கம் அமர்ந்து கொண்டாள்.

“டேய் குகா என்னடா என்ற மவ சித்த பிரம்ம புடிச்சவ மாதிரி எதுவும் பேசாம போய் வண்டியில உக்காந்துக்கிட்டா..எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..”

“மாமா அவ ரொம்ப ஷாக்குல இருக்கா..அதான்.. அவ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாததே ரொம்ப நல்லது..வாங்க சீக்கிரம்”குகன் வேகம் வேகம் என்று விரட்டிய விரட்டலில் காலை நேரத்தில் வண்டி நீரன் இருந்த மருத்துவமனையை சென்று அடைந்தது. வரும்போதே சீமதுரைக்கும் தகவல் சொல்லி இருக்க அவரும் இவர்களுக்கு பின்னாலே வந்து சேர்ந்தார்.நீரன் மருத்துவமனையை நெருங்கும் போது அவனுக்கு பின்னால் வந்த கனவுந்து தனது வேகக்கட்டுப்பாட்டை இழந்து நீரனின் வண்டி மீது மோத நீரன் முன்னால் சென்று கொண்டிருந்த வண்டியில் சென்று மோதினான். 

இரண்டு வண்டிக்கும் நடுவே சிக்கிய நீரனின் வண்டி அப்பளமாக நொறுங்கி கிடந்தது. கனவுந்தின் ஓட்டுனர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே இறந்துவிட முன்னால் சென்ற வாகனத்தின் ஓட்டுநர் பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நீரன் உயிருடன் இருக்கிறானா இல்லையா என்ற நிலையில் உடல் முழுவதும் ரத்தத்தோடு அவனை மருத்துவமனையில் சேர்த்தனர்.அவசர சிகிச்சை பிரிவில் சுய நினைவு திரும்பாமல் கிடத்தப்பட்டிருந்தான் நீரன்.யாருக்கும் பார்க்க அனுமதி கொடுக்கவில்லை.. சீமதுரை முதலில் ராசுவின் அறைக்கு சென்று அவனை பார்த்தார். வலது கால் முட்டிக்கு கீழே முறிவு ஏற்பட்டிருந்தது. அந்த கிளை நல்ல பலமாக தலையில் அடித்து இருந்ததால் நெற்றியை கிழித்திருக்க எட்டு தையல் போட்டிருந்தனர். தனது தந்தையை அங்கே கண்டவன்

“எப்பா நீ எங்கப்பா இங்க.. நீரன் வரலையா”

“டேய் ராசு என்னடா இப்படி கெடக்க.. உன்ற ஆத்தா கிட்ட நா அவசர சோலியா போய்ட்டு வரேன்டினு சொல்லிட்டு வந்துருக்கேன். உனக்கு இப்படி ஆகி போச்சுன்னு அவளுக்கு தெரிஞ்சா பாதகத்தி தாங்க மாட்டா..”இதுவரை மகனை சகட்டு மேனிக்கு திட்டி கொண்டிருந்த சீமதுரை கூட ராசுவின் ஓய்ந்த தோற்றம் கண்ணீரை வரவழைத்தது.தன் தந்தை தன் மேல் மறைமுகமாக வைத்திருக்கும் பாசத்தை நன்றாக அறிந்தவன் ராசு. எனவே பேச்சை மாற்றும் விதமாக

“ப்பா உன்ன ஆருப்பா வர சொன்னது.. நீரன் சொன்னானா.. எங்க அவன்”

“டேய் அந்தக் கொடுமையை நான் என்னன்னு சொல்லுவேன்.. உன்னைய பாக்க அவன் தான் நேத்து வந்திருக்கான்.. ஆசுபத்திரி கிட்ட வந்தவனுக்கு அக்சிடேன்ட் ஆகி போச்சு..பையன் போன வண்டியே அப்பளம் கணக்கா நொறுங்கி கெடக்கு.. அவனுக்கு என்னாச்சோ ஏதாச்சோ ஒரு எழவும் தெரியல.. ஆரையும் உள்ளார விடமாட்றானுங்க..” சீமதுரை சொல்லியதை கேட்ட ராசுவிற்கு இதயம் எகிறி துடித்தது. தனது உயிர் நண்பன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறான் அதுவும் யாருக்காக  தன்னைப் பார்க்க வந்த ஒரே காரணத்திற்காக. கண்கள் கலங்க

“ப்பா என்ன அவன் ரூமுக்கு கூட்டிட்டு போப்பா..”

“டேய் எப்டிடா நீயே அடிபட்டு பிஞ்சு கெடக்க.. கம்முனு படு.நா போயி அவன பாத்துட்டு வரேன்” எங்கே ராசு நீரனை பார்த்து இன்னும் தனது உடல் நிலையைக் கெடுத்துக் கொள்வானோ என்ற பயத்தில் சீமதுரை அவனை படுக்க சொல்லி விட்டு வெளியேற முயன்றார். ஆனால் அவனோ முரட்டுத்தனமாக கையில் ஏறிக் கொண்டிருந்த ட்ரிப்ஸ் அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு வேகமாக கட்டிலில் இருந்து இறங்க முயன்றான். எலும்பு முறிந்த கால்  அவனுக்கு உயிர் வலியைக் கொடுத்தது. இடது காலால் நொண்டிக்கொண்டே சுவரை பிடித்து பிடித்து அவன் நடக்க அவனைப் பிடித்து மீண்டும் கட்டிலில் அமர வைத்த சீமதுரைக்கு இவன் சொன்னால் கேட்கப்போவதில்லை என்று மட்டும் நன்றாக புரிந்தது.எனவே தாதியிடம் சொல்லி சக்கர நாற்காலி ஒன்றை எடுத்து வர கூறி அவனை அமரவைத்து நீரனின் அறைக்கு முன்பாக தள்ளிக்கொண்டு சென்றார். ராசு அறைக்கு முன்பு நாற்காலியில் அமர்ந்திருந்த செந்தூரா முகத்தைப் பார்த்தான்.

அவள் அழுததிற்கான தடம் அங்கே இல்லை.ஆனால் அவளின் முகம் ஒரே நாளில் இருமடங்கு வயதை ஏற்றி முதிர்ந்து தெரிந்தது..தாதிகள் உள்ளே வெளியே வந்து போக யாரும் ஒன்றுமே சொல்லவில்லை.கொடுமையான மணி நேரங்கள்..அனைவரின் காத்திருப்பிற்கும் முடிவு சொல்லும் விதமாக மருத்துவர் வெளியே வந்தார்..இதுவரை மூடிருந்த செந்தூராவின் கண்கள் படக்கென்று திறந்தது. ஆனால் அவள் எழவில்லை.மருத்துவர் குகனிடம்

“அவரோட வைஃப்”

“இவங்க தான் டாக்டர்..என்ற மருமவ.. டாக்டர் நீரனுக்கு”

“அவரு பொழச்சிட்டாரு.. அக்சிடேன்ட்ல அவரோட பேக் போன்ல ரொம்ப பலமா அடி பட்ருக்கு.. அவரு எழுந்து நடக்கவே ஆறு ஏழு மாசமாகலாம்..”

“டாக்டர்”

“ஆனா அதுக்கு முன்னாடி அவரு கோமால இருந்து வெளியே வரனும்..”

“என்ன டாக்டர் நெஞ்சுல இடியா எறக்குறீங்க”சீமதுரை பதற

“எங்களால அவரோட உயிர காப்பாத்த மட்டும் தான் முடிஞ்சது.. அவரோட உணர்ச்சிய காப்பாத்த முடியல. அவருக்கு சீக்கிரம் நினைப்பு திரும்பணும்னு பிரேய் பண்ணுங்க”டாக்டர் சென்று விட்டார் ஒரு இடியை இறக்கி விட்டு.சீமதுரை

“கருப்பா இப்படி உன்ற புள்ளய படுக்க வெச்சிட்டியேப்பு.. நீ என்ன பண்ணுவியோ எது பண்ணுவியோ எனக்கு தெரியாது..அந்த புள்ளைய ஒழுங்கா பொழைக்க வெச்சிரு.. அதான் பொழைக்க வெச்சி நடமாட்டத்த நிறுத்திப்புட்டியே..எப்பா கருப்பு.. அந்த புள்ளைக்கு முன்ன மாறி கை காலு ஆரோக்கியத்த கொடுத்த அவன நடமாட வெச்சிருப்பா..”அது ஐசியூவா இல்லை கருப்பர் ஆலயமா என தெரியாத அளவுக்கு உரக்க கத்தி வேண்டுதல் வைத்து கொண்டிருந்தார் சீமதுரை.

தில்லை செந்தூரா தோளை தொட”டேடி எனக்கு என்ற புருசன பாக்கணும்”

“கண்ணு டாக்டரு சொன்னதும் உள்ளார போவலாம்டா”என்றார்.ராசுவிற்கு நெஞ்சம் தாங்கவில்லை.இப்பொழுதே உள்ளே சென்று நீரனை பார்க்க துடித்தான்.ஆனால் அடக்கி கொண்டான்.முதலில் உணர்ச்சிகளே இல்லாமல் வெறுமனே அமர்ந்திருந்த செந்தூரா உள்ளே சென்று அவனை பார்ப்பது தான் முக்கியம் என உணர்ந்தவன் தாய்மை அடைந்த நிலையில் அவள் மனம் இப்பொழுது என்ன பாடு படும் என்பதை எண்ணி இன்னும் கலங்கினான்.தாதி வந்து சொன்னதும் செந்தூரா மட்டும் உள்ளே சென்றாள்.

நீரன் கண்மூடி ஓக்சிஜென் மாஸ்க் பொருத்தப்பட்டு உணர்வுகளற்று கிடந்தான். உடலெங்கும் அடிகள்.முகம் முழுவதும் கண்ணாடி சில்கள் குத்தி கிழிந்து முகமே வீங்கி கோரமாக இருந்தது..அவனது அருகில் நின்றவள் அவனது வலது கையை பிடித்தாள். ஆல்காட்டி விரலும் நடுவிரலும் உடைந்திருக்க அவன் மணிகட்டை பிடித்து கொண்டவள்

“நீரா.. எல்லா பிரச்சனயும் முடிஞ்சது.இதோட சாபத்துக்கு வழிய கண்டுபிடிச்சிடலாம். உன்கூட ஆயுசுக்கும் வாழலாம்னு ரொம்ப ஆசப்பட்டுட்டேன் போல. ஆயுசுக்கும் வாழணும்னு சாமி கிட்ட வேண்டுன நானு உன்ன ஆரோக்கியமா வெச்சிருக்க சொல்லி வேண்டிக்காம விட்டுட்டேன். அதான் இப்படி கெடக்க..பாரேன் எனக்கு பாத்து பாத்து ஊட்டி விடுவ. இப்ப அந்த கை விரலே உடைஞ்சு கெடக்கு..எப்ப பாரு என்ற கன்னத்த புடிச்சு கில்லுவ.. இப்ப உன்ற கன்னம் தேஞ்சு புண்ணாகி கெடக்கு..என்ற நெஞ்சுல சாஞ்சு கிச்சு கிச்சு பண்ணுவ.. இப்ப உன்ற நெஞ்சுல எத்தன தையலு பாரு. என்ற வயத்துல படுத்து மீசையாள உரசுவ.

இப்ப உன்ற வயத்துக்கு என்ன சாப்பாடு பாத்தியா வெறும் ட்ரிப்ஸ் தண்ணி.என்ற முதுகுல கடிச்சு வெப்பியே இப்ப உன்ற முதுகு எலும்பு உடைஞ்சு போச்சாம்..நீ எந்திரிச்சு நடக்கவே ஆறு ஏழு மாசம் ஆகுமாம்..நேரத்த பாத்தியா நீரா..இந்த சாபத்துக்கு விமோசனம் தேடி தான நீ இத்தன வருஷம் நாயா அலைஞ்ச. அன்னிக்கு எவ்ளோ ஆசையா உன்ற கிட்ட என்னோட லவ்வ சொன்னேன். அப்ப கூட இந்த சாபத்தால தான என்ன அப்டி பேசி வேணான்னு வெரட்டி விட்ட.இன்னைக்கு பாத்தியா.. அந்த சாபத்துக்கு வழி கெடச்சிருச்சு.

ஆனா சாபம் விமோசனத்துக்கு நீ வேணும் நீரா..நீ இல்லாம முடியாது.ஏன் நீரா இப்படி வந்து படுத்துகிட்ட.என்ன அழ வைக்கவா..ஏற்கனவே நா ரொம்ப அழுதுட்டேன் நீரா.. கிட்ட இருந்தும் எதுக்கு என்ன வேணான்னு சொன்னேன்னு ஒவ்வொரு நாளும் யோசிச்சு யோசிச்சு அழுதுருக்கேன்.என் மண்டைக்குள்ள எப்பவுமே நீதான் இருப்ப.. உன்ன நெனச்ச நேரத்துக்கு கடவுள நெனச்சிருந்தா கூட வரம் கொடுத்துருப்பாரு.. எப்பவுமே எந்த நேரமுமே உன்னிய பத்தி மட்டும் நெனச்சு எனக்கு வேற நெனப்பே இல்லாம போச்சு நீரா..உன்ற நெனப்பு வரும்போது எல்லாம் இந்த நெனப்பு மட்டும் தான் வாழ்க்கையா மாறிடுமோனு வேதனையில அழுதுருக்கேன்.என்னோட ராத்திரி எல்லாமே உன்ற நெனைப்போட என்ற பில்லோவ் எத்தனையோ வருஷம் கண்ணீருல நெனைஞ்சிருக்கு..எவ்ளோ முடியுமோ அவ்ளோ அழுதுட்டேன்.போதும் அது.

எனக்கு நீ வேணும் நீரா. படுக்கையா கெடந்தாலும் ஜடமா இருந்தாலும் உன்ற கண்ணால என்ன பாத்தாலே போதும்.. உன் கண்ணுக்குள்ள நா தெரிஞ்சாலே போதும்.. ப்ளீஸ் கண்ண தொற நீரா..எத்தன தடவ கெஞ்சிருப்ப.. இப்ப சொல்றேன்..நீ இல்லாம நா இல்ல மாமா.. ப்ளீஸ் கண்ண தொற.. “அவனின் மணிகட்டை அழுத்தி பிடித்து கண்ணை மூடி ஆழ மூச்செடுத்தவள் அழவேயில்லை.வெளியே சென்று விட்டாள்.

அவளுக்கு பின்னால் வந்து பார்த்த ராசு”மச்சான் என்னால முடியலடா.. நீ இல்லனா ஆருடா சரக்கு வாங்கி கொடுப்பா.. அழ வைக்காத மச்சான். உன்ற பொண்டாட்டிய பத்தி தெரியும்ல அவ எதையாச்சும் வெட்டிக்குற குள்ள கண்ண முழிக்குற அம்புட்டு தான்”.. கண்கள் கலங்க முயன்று இயல்பாக பேசி விட்டு வந்தான்.

நீரனின் வாழ்வில் நீங்காத இடம் பிடித்திருந்த இருவரின் குரலை கேட்டதும் அலைபாயுதே மாதிரி உடனே கண்ணை திறந்திடாமல் நான்காந்து நாள் ரொம்பவே பொறுமையை சோதித்து கண்ணை திறந்தான்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்