சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 24


24

ஜென்மங்கள் யாவும்

நீ வாழவே

காதல் கொண்ட உள்ளம் காணும்

அன்பின் இல்லம்

ஓர் காற்றின்கைகளும் தீண்டுமோ

என் காவல் எல்லையைத் தாண்டுமோ

நியாயங்கள் வாய் மூடுமோ தெய்வமில்லை என்று போகுமோ…

நடு கூடத்தில் ஊஞ்சலில் அமர்ந்து ஆடி கொண்டிருந்தாள் செந்தூரா.கண்கள் தரையை வெறித்து இருக்க எண்ணமோ வேறு எங்கோ பதித்திருந்தது.கணி அவளுக்கு தகவல்களை தந்து ஒரு வாரம் ஆகிறது.அவன் தந்த தகவல்கள் எல்லாமே அவளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. சொல்லப்போனால் அந்த ராஜா சென்ற இடம் கூட தெரிந்து விட்டது. பிறகு என்ன காரணம் அவளின் இந்த வெறித்த பார்வைக்கு?

அந்த ராஜா ஜீவசமாதி அடைந்த இடம் ஏறக்குறைய அவளுக்குத் தெரிந்து விட்டது.ஆனால் அதிலும் ஒரு சிக்கல்.அந்த ராஜா இறுதியாக காணப்பட்டதாக இரண்டு இடங்கள் சொல்லப்படுகிறது.இந்த இரண்டு இடங்களில்தான் அவரை இறுதியாகப் பார்த்த அதாவது இறுதியாக அவர் விட்டுச்சென்ற தகவல்கள் சேகரிக்கப் பட்டது.இரண்டு இடத்தில் ஏதோ ஒரு இடத்தில் தான் அவரது ஜீவசமாதி அமைந்துள்ளது.ஆனால் அதைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள் இந்த பத்து மாதம் முடிந்து விடுமே.அவள் வேண்டுமானால் சாவகாசமாக ராஜா ஜீவசமாதி அடைந்த இடத்தை தேடிக் கண்டுபிடிக்கலாம் ஆனால் வயிற்றில் வளரும் குழந்தைக்கு இந்த சாவகாசம் எல்லாம் தெரியுமா.. அதுப்பாட்டிற்கு பத்தாம் மாதம் டான் என்று வெளியே வந்து விடாதா..பிறகு அவளது நிலை? நீரனுடனான அவளின் காதல் வாழ்க்கை என்ன ஆவது? இதைப்பற்றி எல்லாம் யோசித்துக்கொண்டு இருந்தாள் செந்தூரா.நீரனும் அவளை இந்த ஒரு வாரமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். எதையோ ஒன்றை பற்றி அவள் தீவிரமான சிந்தனையில் உழன்று கொண்டிருந்தாள்.

அது எந்த சிந்தனை என்று அவனுக்கு கேட்கவே பயமாக இருந்தது.ஒருவேளை மரணத்தைக் குறித்து பயமாக இருந்தால் அவன் தான் என்னவென்று கூறுவான்.அவன் மட்டும் என்ன சும்மாவா இருக்கிறான்? அந்த ஜீவ சமாதி பற்றி ஏதாவது ஒரு குறிப்பு கிடைக்காதா என்று பேயாய் தேடி அலைந்து கொண்டிருக்கிறான்..இப்பொழுது கூட ராசுவை அந்த அரண்மனைக்கு அனுப்பி அவர்கள் இதுவரை தோண்டி பார்க்காத இடங்களை தோண்டி பார்க்க சொல்லி அனுப்பியிருக்கிறான். ராசுவும் சில ஆட்களை கூலிக்கு கூட்டிக் கொண்டு அங்கே சென்றுள்ளான்.அவனிடமிருந்தே ஏதாவது நல்லதாக ஒரு தகவல் வராதா என்று நொடிக்கொருதரம் கைபேசியை பார்த்துக்கொண்டிருக்கிறான் நீரன்.கணவன் மனைவி இருவருமே வெவ்வேறு மனநிலையில் ஒரே விஷயத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்க அதற்கு விடைத்தான் கிடைத்த பாடில்லை.செந்தூரா தனது மடிக்கணினியை எடுத்து வந்து ஊஞ்சலில் வைத்து கணி அனுப்பிய தகவல்களை மீண்டுமொரு முறை படித்துக் கொண்டிருந்தாள். என்ன படித்தாலும் அவளுக்கு ஒரு தெளிவான விடை கிடைக்கவில்லை. அழுப்போடு மடிகணினியை  மூடி வைத்துவிட்டு நீரன் என்ன செய்கிறான் என பார்க்க சென்றாள்.

நீரன் அவள் விரும்பி உண்ணும் இனிப்பு மாங்காயை செய்து கொண்டிருந்தான். அவள் இதைத்தான் அடிக்கடி கண்ணம்மாவிடம் செய்ய சொல்லி கேட்டு சாப்பிடுவாள். அவளுக்கு இன்னும் வாந்தி மசக்கை ஆரம்பிக்காமல் இருக்க ஏதாவது வாய்க்கு ருசியாக உண்ண வேண்டுமா என நீரன் கேட்டதற்கு இனிப்பு மாங்காய் வேண்டும் என்று கூறினாள்.  அப்படி என்றால் என்ன என்று நீரன் கேட்க அதை கண்ணம்மா தான் நன்றாக செய்வார் என்று மேலும் தகவல் சொன்னாள்.இந்த நேரம் பார்த்து கண்ணம்மா அவரது அண்ணன் மகள் திருமணத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயம். அவர் அங்கே சென்றிருக்க அவருக்கு தொலைபேசியில் அழைத்து இனிப்பு மாங்காய் செய்யும் முறையை கேட்டுக் கொண்டு அவனே அவளுக்கு அதை சமைத்து கொடுத்து அசத்த தயார் செய்து கொண்டிருந்தான்.

சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு வெங்காயம் காய்ந்த மிளகாய் கருவேப்பிலை இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கி அதில் பெருங்காயத் தூள் கொஞ்சம் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கொஞ்சம் சேர்த்து நன்றாக கிளறி,அதில் நல்ல பாதி பழுத்த மாம்பழத் துண்டுகளை நீள் வடிவத்தில் வெட்டி போட்டு தாளித்து அதற்குமேல் சீனி வேண்டுமளவு தூவ வேண்டும்.. சீனியை சற்று அதிகம் போட்டு, வேண்டும் அளவு உப்பு சேர்த்து கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு அந்தக் கலவை கெட்டியாக வரும் வரை நன்றாக கிண்டி கொதித்தவுடன் இறக்கவேண்டும். உறைப்பு இனிப்பு புளிப்பு மூன்றும் சேர்ந்து இந்த இனிப்பு மாங்காய் சாப்பிட அவ்வளவு ருசியாக இருக்கும்.

அவன் செய்து முடிக்கவும் செந்தூரா அங்கே வரவும் நேரம் சரியாக இருந்தது. வந்தவள் அவன் தனக்காக மெனக்கெட்டு செய்த இனிப்பு மாங்காயை எடுக்க போக அவள் கையை தட்டி விட்டவன் சுட சுட இருந்த மாங்காய் துண்டை தட்டில் வைத்து அதை ஊதி ஊதி அவளுக்கு ஊட்டிவிட்டான்.. “எப்டிங்க அம்மணி இருக்கு..”

“என்ற புருஷன் எனக்காக செஞ்சது நல்லா இல்லாம போவுமா என்ன.. அருமையா இருக்குங்க மாமோய்”என்றவள் அவன் கையில் இருந்த தட்டை பிடுங்கி கொண்டு அவளை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.  சாப்பிடும் வேகத்தில் அவளுக்கு புரை ஏற

“ஹேய் மெதுவாடி பூராவும் உனக்கு தான்..பொறுமையா சாப்பிடு.. எதுக்கு இப்டி போட்டு அமுக்குற..”

“என்ன பண்றது அம்புட்டு டேஸ்ட்டால இருக்கு நீங்க சமைச்சது.. இதுக்கு உங்களுக்கு என்ன கிப்ட் வேணும்”

“கேட்டா கொடுப்பியா”

“ம்ம் என்ன வேணும் நீரா”

“ஒரு வாரமா என்னத்தடி மண்ட குள்ளார போட்டு உருட்டிகிட்டு இருக்க. இந்த நேரத்துல கூட கம்முனு இருக்க மாட்டியா..”

“எல்லாம் உனக்காக தான்.”

“எனகாகவா”

“ஆமா அந்த ராசா கடைசியா போன எடத்த கண்டு புடிச்சிடோம்ல”நீரன் அதிர்ச்சியில் கண்கள் பெருசாக

“ஹேய் என்னடி சொல்ற.. எப்டிடி..”

“என்ற ஃப்ரன்ட் ஒருத்தன் அகல்வாராய்ச்சியாளன இருக்கான். அவன் கிட்ட ஹெல்ப் கேட்டு கண்டு புடிச்சேன்”

“அய்யோ என்ற ராசாத்தி..”என்று அவளை தூக்கி சுத்தியவன்”சொல்லுடி அந்த பாடையில போறவன் எங்கன ஜீவ சமாதி அடைஞ்சான்” அவன் வேகத்தை பார்த்து பரிதாபப்பட்ட செந்தூரா அன்று கணி தந்த தகவல்களை பார்த்துவிட்டு அவனுக்கு அழைத்த போது அவன் கூறிய விஷயங்களை நீரனிடம் கூறினாள்.

“செந்து..நம்மோட மூளையோட வேகத்த நாலு வகையா பிரிக்கலாம். பீட்டா, ஆல்ஃபா, தீட்டா, டெல்டா … இது தியான முறைக்கும் பொருந்தும். கடைசி நிலையான டெல்டா தான் சக்தி வாய்ந்தது. ஒரு மனுசன் சமாதி நிலையில தான் எண்ணங்கள மண்ணுல விதைச்சி அங்க தன்ன தேடி வரவங்களுக்கும் அதே எண்ணத்த கொடுக்குற முறைய தான் நம்ம சித்தர்ங்க செஞ்சு வராங்க. அந்த ராஜா ஒரு சிவ பக்தர்னா அவரு ஜீவ சமாதி அடைந்தது உண்மைனா அவரோட எண்ணப்படி அங்கு நிறைய சிவன் வழிபாட்டுதளங்கள் கண்டிப்பா உருவாகி இருக்கும் அத கண்டுப்பிடிச்சா அந்த ராஜாவோட ஜீவ சமாதிய கண்டு பிடிச்சிடலாம். ஏன் அதுவே ஒரு சிவ வழிபாட்டு தலமா கூட இருக்கலாம்..

ஒரு கோவில் அமைஞ்சிருக்குற இடம் திரிம்பாக். வடஇந்தியால மஹாராஷ்டிரா மாநிலத்துல நாசிக் மாவட்டத்துல இருக்கு, பலமான கோதாவரி ஆத்த கடந்து திரிம்பகேஸ்வரர் கோவில் வரும். இன்னொன்னு சென்னைக்கு பக்கத்துல இருக்குற சிவபுரம், இந்த ரெண்டு ஊர்ல தான் ஜீவ சமாதி அடைஞ்சிருக்க வாய்ப்பிருக்கு, ஆனால் நாங்க ஆராய்ச்சி பண்ணி பார்த்த வரையில ஜீவ சமாதிக்கான மேற்புற அடையாளம் ஏதும் இல்ல.காலபோக்ல அது மறைஞ்சிருக்க, இல்ல அழிய வாய்ப்பிருக்கு ஆனா ஜீவசமாதியான உடலும், ஜீவனும், அவரோட எண்ண அலைகளும் இந்த ரெண்டு கோவில் ஏதோ ஒரு கோவில் இருக்க நெறயவே வாய்ப்பிருக்கு.”…இப்படி அன்று கணி கூறியதை இன்று செந்தூரா நீரனிடம் சொல்லிகொண்டிருந்தாள்..

இத்தனை நாள் தனது தேடலுக்கான விடைகளை இன்று தன்னவள் கண்டுபிடித்த சந்தோஷத்தில் அவளை இறுக்கி அணைத்துக்கொண்ட நீரன்

“நீ இந்தளவுக்கு கண்டு புடிச்சதே போதும்டி.. ரெண்டு எடம் தானே எப்படியும் கண்டு புடிச்சிரலாம்”என்று ஒரு திருப்தியுடன் கூறினான்.

“இரு இந்த ராசு பயல அந்த அரண்மனைக்கு அனுப்பி வெச்சேன். அன்னிக்கி அவசரத்துல சில இடத்த தோண்டி பார்க்காம இருந்திருப்போம்.கூலிக்கு ஆளுங்கள கூடிட்டிட்டு போயி தோண்டி பாருன்னு சொன்னேன். நாயி போனதுல இருந்து ஒரு போன் கூட போடல.. இரு அவனுக்கு போன் போட்டு விஷயத்தச் சொல்லி வர சொல்றேன்..”நீரன் ராசுவிற்கு அழைக்க அவனது அலைபேசியை வேறு ஒருவர் எடுத்து

“ஹலோ ஆருங்க பேசுறது..”

“ஹலோ இது ராசு போனு தானுங்களே.. நீங்க ஆருங்க.. ராசு எங்க”

“தம்பி, ராசு தம்பி எங்கள குழி தோண்ட கூட்டியாந்துச்சுங்க.. நாங்க ஒரு பக்குட்டு குழி தோண்ட தம்பி ஒரு பக்குட்டு தோண்டி கிட்டு கெடந்துச்சுங்க. அப்போன்னு பாருங்க பேய் மழை அடிச்சு பெய்ய நாங்க எம்புட்டு சொல்லியும் தம்பி கேக்காம அங்கேருந்த பெரிய மரத்து கீழ குழிய வெட்ட போயி அந்நேரம் பாத்து இடி மரத்து மேல வுல மரத்தோட கெள முறிஞ்சு தம்பி மேலயே வுழுந்துருச்சுங்க.”

“ஐயோ அவனுக்கு ஒன்னும்”நீரனால் அதற்குமேல் பேச முடியவில்லை.

“தெரிலயல தம்பி நாங்க அவர தூங்கிட்டு வந்து ஆஸ்பத்திரியில சேத்துருக்கோம்.. நீங்க ஆருங்க தம்பி பழக்கமா.. கொஞ்சம் அவுங்க வூட்டுல விஷயத்த சொல்லி புட்டு வர சொல்லுறீங்களாப்பு”

“அண்ணே அவன கொஞ்சம் பாத்துக்கோங்க.. நா கெளம்பிட்டேன்..”போனை வைத்தவன் பேயறைந்தது போல் இருக்க

“நீரா என்னாச்சு..”

“செர்ரி ராசுக்கு அடி பட்ருச்சுடி.. நா ஒடனே போவணும்.. உன்ன உன்ற அப்பன் வூட்ல உட்டுட்டு நா போறேன் வா”என்று அவளை கையோடு அழைத்து சென்று தில்லை வீட்டில் விட்டு விட்டு கிளம்ப எத்தனித்தவனை தடுத்த செந்தூரா

“எப்டி போவ.. பறந்தா? இந்த என்ற டேடியோட வண்டி சாவி எடுத்துட்டு போ.. ராசு உன்ற வண்டிய எடுத்துட்டு போய்ட்டான் நீ எதுல போவ..மெதுவா போ அவனுக்கு ஒன்னும் ஆயிருக்காது. அங்க போயி அவன பாத்துட்டு எனக்கு போன் பண்ணு நீரா.. இல்லனா நானும் வரட்டுமா”

“அதெல்லாம் ஒன்னும் வேணா.. நீ ஒன்னும் பதறாம இரு நான் போயிட்டு அங்க எல்லாம் பார்த்துட்டு உனக்கு போன் பண்றேன்.. கொஞ்சம் பாத்துக்கங்க சித்தப்பா.”என்று நீரன் குகனிடமும் சொல்லிவிட்டு கிளம்பி விட செந்தூரா தந்தை வீட்டின் உள்ளே சென்றாள்.

நடு இரவிருக்கும் அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் அவளது ஆசை கணவன் நீரன் விபத்துக்குள்ளானான் என்று செய்தி வந்தது.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்