சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 26


நீரன் மேலும் ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க செந்தூரா மருத்துவரிடம் பேசி தானே அவர்கள் ஊரில் இருக்கும் ஸ்பெஸலிசில் அவனை காட்டி குணமாக்கி கொள்வேன் என்று அழுத்தி பேசி ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து நீரனை அவர்கள் ஊருக்கு அழைத்து வந்து விட்டாள்.

அங்கிருந்து புகழ் பெற்ற தனியார் மருத்துவமனையில் அவனை சேர்க்க அங்கே இரண்டு மாதங்கள் நீரன் இருந்தான். பின் மருத்துவரின் ஆலோசனை கேட்டு அவளே அவனை வீட்டில் வைத்து கவனித்து கொள்வதாக கூறினாள்.மருத்துவரும் குகனும் எவ்வளவோ மன்றாடி பார்த்தனர். அவள் கேட்ப்பவளா? என்ற புருஷன எனக்கு பாத்துக்க தெரியும்னு ஒரே போடாக போட யாரும் பேச முடியாத நிலை..சரி தனியாக அவனை எப்படி தூக்குவாய்.. ஒரு தாதியை ஏற்பாடு செய்யலாம் என தில்லை கூற அவரை முறைத்த முறைப்பில் தில்லையின் வாய் தானாக மூடி கொண்டது.

மருத்துவமனையில் இருந்தவரை நீரன் முக்கால்வாசி நேரம் வலியின் தாக்கத்தில் மருந்தின் வீரியத்தில் மயக்கத்திலே இருந்தான்.முதுகு தண்டில் பலமான அடி.. நல்ல வேளை முதுகு தண்டு உடையவில்லை.அப்படி ஆகியிருந்தால் நீரன் காலத்திற்கும் ஒருவரின் துணை கொண்டே இயங்கிருப்பான்.. அவன் அடிப் பட்டத்தில் இருந்து இந்த இரண்டரை மாதமும் செந்தூரா அவனை விட்டு அசையவில்லை. வீட்டிற்கு வருபவள் குளித்து முடித்த கையோடு அரை மணி நேரத்திற்குள் மீண்டும் மருத்துவமனைக்கு வந்து விடுவாள்.

நீரனின் தோட்டம் மற்றும் இதர வேலைகளை இப்பொழுது சீமதுரை கவனித்து கொள்ள ராசு ஊன்று கோலின் உதவியுடன் தானே நடக்க ஆரம்பித்திருந்தான்.வாயும் வயிறுமாக இருக்கும் பெண் இப்படி மருத்துவமனையே கதியென்று இருப்பதை கண்டு அனைவருக்குமே வேதனையாக இருந்தது.நீரனுக்கு அடிப்பட்டத்திலிருந்து தான் என்ன உடுத்துகிறோம் என்ன அணிக்கிறோம் என்று எதிலும் அவளுக்கு ஆர்வமில்லை.உயிருடன் இருப்பதற்காகவும் தனது குழந்தைக்காகவும் கண்ணம்மா தரும் உணவை வேண்டா வெறுப்பாக உண்டு விட்டு எந்நேரமும் நீரனின் அருகேயே இருந்தாள்.

அவனும் அவளிடம் எவ்வளவோ மன்றாடி பார்த்தான். அவள் மாறவேயில்லை. அவளது அடி மனம் இந்த சம்பவத்திற்கும் சாபத்திற்கும் முடிச்சி போட்டு பார்த்தது.முதலில் ராசுவிற்கு விபத்து. அடுத்து நீரன். ஏன் இப்படி.. அந்த ராஜா சென்ற இடத்தை பற்றிய துப்பு கிடைத்ததற்கே இப்படி என்றால் அந்த இடத்தை கண்டு பிடித்து போனால் என்ன ஆகும்..தனக்கு என்ன நேர்ந்தாலும் அவள் தாங்கி கொள்வாள்.. அவளது நீரனுக்கு ஒன்றென்றால் அவளின் நிலை?இல்லாததைப் பற்றி யோசித்து தானும் குழம்பி மற்றவர்களையும் வேதனைப்படுத்தி கொண்டிருந்தாள் செந்தூரா.

“செர்ரி ஏன்டி இப்டி இருக்க..எனக்கு எந்திருச்சு நடக்க தான் முடியல. மத்தபடி உசுரோட தானே இருக்கேன்.செத்தா போய்ட்டேன்”அவன் பேசும்போதே கவனிக்க தொடங்கியவள் இறுதியாக அவன் சொன்ன வார்த்தையில் வெற்று பார்வை பார்க்க தன்னுடைய தவறை உணர்ந்தவன்

“அது வந்துடா”

“வேணா நீரா எனக்கு புரியுது.. நா இப்படி படுத்து கெடந்துருந்தா உனக்கு குளு குளுன்னு இருந்துருக்குமோ என்னவோ. ஆனா எனக்கு அப்டி இல்ல..”

“நான் எங்கடி அப்டி சொல்ல வந்தேன்.. எனக்கு அடிபட்டு ரெண்டு மாசம் ஆவ போது..கோமாலருந்து கண்ண என்னிக்கு முழிச்சேனோ அன்னயில இருந்து ஒரே போஸ்ல இருக்க. நா தான் பொழச்சிட்டேன்ல.. அப்றம் என்னம்மா.. இந்த நேரத்துல நல்லா சாப்டு ரெஸ்ட் பண்ணாம பொழுத்தனைக்கும் ஆஸ்பத்திரியே கதினு கெடக்க.. பாரு எம்புட்டு பெரிய பணக்காரி.. பாக்க அப்டியா தெரியுற. பைத்தியக்காரியாட்டம் இருக்க. என்னடி பிரச்சன உனக்கு”

“உனக்கு கால் வலிகளையா நீரா”

“காலா.. நா எங்கடி நடக்குறேன். படுத்த படுக்கையால கெடக்கேன்.ஒடம்பே மறுத்து போன மாறி வலிக்குது.. இதுல எங்குட்டு இருந்து கால் வலிக்க”

“இல்ல ஓயாம என்ற மண்டை குள்ளார ஓடுறியே அதான் கேக்குறேன்”

“என்னடி கவிதை சொல்ற”

“சும்மா.. ஏன் நீரா எனக்கு புள்ள உண்டான நேரம் தான் உன்ற உசுர காவு வாங்க காத்துட்டு இருக்குனு ஊர்ல அரசல் புரசலா பேசிட்டு இருகாங்க தெரியுமா”அவள் அமைதியாக கேட்க அவனுக்கு தான் இந்த விஷயம் ஏற்கனவே தெரியுமே. ராசுவின் மூலம் விஷயத்தை கேள்விப்பட்டிருந்தான்.அவன் மட்டும் பேசியவனின் முன் நின்றிருந்தால் தன் மகவை பற்றி பேசிய வாயை கிழித்திருப்பான். ஆனால் படுத்த படுக்கையாக அல்லவா கிடக்கிறான்.

“தெரியும்டா ராசு சொன்னான்.எந்த பரதேசி பய மவன் அப்டி சொன்னா என்ன.. நம்ம பாப்பாடி அது. அது வந்த நேரம் என் உசுருக்கு ஒல வைக்குமா”..அவனுக்குமே ஒரு பயம் இருந்தது. அவன் மேல் பைத்தியமாக இருக்கும் செந்தூரா எங்கே ஊராரின் பேச்சில் குழம்பி குழந்தையை ஏதாவது செய்திட போகிறாலென பயம் ஏற்பட உடனே ராசுவின் மூலம் செய்தியை சொல்லி செந்தூராவை கவனமாக கண்காணிக்க குகனிடம் சொல்லிருந்தான்.செந்தூரா ஒன்றுமே சொல்லவில்லை.

அவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இரண்டரை மாதமாக, அவனை செந்தூரா பிடிவாதமாக வீட்டில் வைத்தே கவனித்து கொள்வதாக கூறிட வேறு வழியே இல்லாமல் அவனை டிஸ்சார்ஜ் செய்தனர். தில்லையும் குகனும் செந்தூரா காலில் விழாத குறையாக கெஞ்சி கேட்டும் அவள் நீரனின் வீட்டிற்கே சென்றாள். யாரையும் உதவிக்கு அழைக்கவில்லை. அவனை குளிப்பாட்ட கூட யாருடைய உதவியையும் அவள் ஏற்கவில்லை.நெஞ்சில் அவ்வளவு வைரக்கியம்.

என் கணவனை நான் பார்த்து கொள்வேன் என்ற பிடிவாதம். ராசுவும் நீரனும் அவளை கடிந்த கொண்ட போதிலும் பிடிவாதமாக மறுத்தவள் அவனை ஒற்றை ஆளாய் படுக்கையில் இருந்து மல்லுகட்டி தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்து இவளும் அவன் மடியில் அமர்ந்து மூச்சு வாங்குவாள். அவளின் முகத்தில் முத்து முத்தாக துளிர்த்த வியர்வை துளிகள் அவள் முகவடிவில் வடிய அதனை தனது முகத்தால் துடைத்து விடுவான் நீரன்.அவன் எதாவது மறுத்து கூறினால் அவள் பார்க்கும் பார்வையிலே வாய் தானாக மூடிக்கொள்ளும். அவனை தனியாளாக தூக்கி குளிப்பாட்டி அவனுக்கு உடையணிவித்து மீண்டும் படுக்க வைத்து நேரத்திற்கு உணவுட்டி மருந்து கொடுத்து அவனுக்கு வயிறு வலிக்கும் போது பெட் பேன் வைத்து அதை அசிங்கம் பார்க்காமல் எடுத்து சென்று சுத்தம் செய்யும் போது பாவம் அவன் நெஞ்சில் ரத்தமே வடியும்.

செந்தூராவிற்கு நீரனுக்கு அடிப்படும் போது சரியாக ஒன்றை மாதம். இப்பொழுது நான்காம் மாத தொடக்கத்தில் இருந்தாள்.காலையில் எழும்போது தலைசுற்றல் போல் வரும். அதை தலையை ஒரு குலுக்கு குலுக்கி விரட்டி விட்டு பிடிவாதமாக தன்னவனுக்கு செய்யும் கடமைகளை செய்தாள். தினம் ராசு காலை மாலை வந்து நீரனை பார்த்து செல்வான். அவனுக்குமே காலில் உடைந்த இடத்தில் பிளேட் வைக்க மீண்டுமோரு அறுவை சிகிச்சை நடைபெற்றது.நீரனுக்கு அடிபட்டு மேலும் நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் அவனுக்கு பிசியோதிராபிஸ்ட் வீட்டிற்கே வந்து ட்ரெயின் பண்ண ஒரே மாதத்தில் நீரன் பழைய துடிப்பு இல்லாவிட்டாலும் சுயமாக எழுந்து நடக்க ஆரம்பித்திருந்தான்..

செந்தூரா நிறை மாத நிலவாக இருந்தாள். அவளுக்கு வளைகாப்பு செய்து தங்கள் வீட்டிற்கு அழைத்து செல்ல தில்லை வந்திருந்தார்.வழக்கம் போல செந்தூரா மறுக்க நீரனுக்கு தில்லையை பார்க்க பாவமாக இருந்தது.செந்தூராவை பேசி சரிகட்டி வளைகாப்பு முடிந்து தானும் தில்லை வீட்டில் இருப்பதாக கூறிட ஒருவழியாக சம்மதித்தாள்.மருத்துவர் நீரனை பரிசோதித்து அவன் முற்றிலும் குணமடைந்து விட்டதாக கூறினார்.  உண்மையில் சொல்லப்போனால் நீரனுக்கு பட்ட அடிக்கு அவன் எழுந்து நடக்க எப்படியும் ஒரு வருடம் ஆகி விடலாம் என்று மருத்துவரே எண்ணிருந்தார். ஆனால் இவ்வளவு குறுகிய காலத்தில் அவரின் கணிப்பையும் மீறி அவன் எழுந்து நடந்தது ஒரு அதிசயமே. 

அந்த அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியவள் அவனின் அன்பு மனைவி செந்தூரா.மொத்தமாக ஆறரை மாதத்தில் நீரன் எழுந்து நடந்தே விட்டான்.செந்தூராவிற்கு எட்டாம் மாதம் வளைகாப்பு விமர்சையாக தில்லை வீட்டில் நடந்தேறியது. இத்தனை மாதங்களில் செந்தூரா மசக்கையில் வாந்தி வந்தாலும் அவள் சோர்ந்து சுவரில் சாயும் நேரம் அவள் தலை தாங்கி தோளில் சாய்க்க நீரனால் முடியவில்லை. அவள் இடுப்பு வீங்கி கால்கள் சிவந்து நடக்கவே சிரமப்படும் வேளையில் வெந்நீர் வைத்து ஒத்தடம் தந்து இதமாய் சொடுக்கு இழுத்து விட நீரனால் முடியவில்லை.

மேடிட்ட வயிறுடன் அவள் பார்த்து பார்த்து அவனை கவனித்து கொண்டதை எண்ணி கொண்டிருந்தவன் அலங்கரித்த நாற்காலியில் அவர்களின் திருமண சேலை கட்டி முகம் கொள்ளா சிரிப்புடன் அவனை வெட்கப்பார்வை பார்க்கும் செந்தூராவை பார்க்க இப்பவே ஓடி சென்று அவளை அள்ளி எடுத்து கொண்டு ஆளில்லா தீவிற்கு சென்று சாகவரம் பெற்று வாழ வேண்டுமென அவனுள் வெட்கை எழுந்தது.தன்னவளுக்காக அவன் தேடி தேடி வாங்கிய நடுவில் ஒரே ஒரு வட்ட வைரக்கல் பதித்த அழகான கை செயின் ஒன்றிணை அணிவித்து விட செந்தூரா அவனை பார்த்து அழகாக சிரித்தாள்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்