சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 13


அங்கே செந்தூரா வருவாள் என்று  நீரன் எதிர்பார்க்கவே இல்லை..எதுவரை நான் பேசியதை கேட்டிருப்பாள்.பயம் தொண்டையை அடைத்தது. தெனாவட்டாக அவள் பார்க்கும் பார்வைக்கு சளைக்காமல் பதில் பார்வை பார்க்க ஆசை தான். ஆனால் இப்பொழுது முடியவில்லை. குற்றவுணர்வு அவன் கண்களை சிறை படுத்தியது.திமிராக பார்க்க முயன்றான் அதற்கு பதில் கலக்கமாக அவளை பார்த்தான்.நீ கலக்கமாக பார்த்தாலும் கிறக்கமாக பார்த்தாலும் எனக்கு தேவை பதில் என்று மார்புக்கு குறுக்கே கைகளை கட்டி கொண்டு பார்த்தாள் செந்தூரா.

“ஆமா என்ன அம்மணி காத்து எம்மூட்டு தோட்டத்து பக்கம் வீசுது”

“ஒம்ம வூட்டு தோட்டமா? எப்ப நீ என்ன கல்யாணம் பண்ணியோ அப்பவே ஒம்ம சொத்துல சரி பாதி எனக்குன்னு சட்டம் சொல்லுது”

“சரிதான்..அங்க காய் இறக்குறாங்க.. நீங்க இருந்து பாருங்க.. எனக்கு வேற வேல கெடக்கு”

“ஒம்ம காய் கணக்க பாக்க தான் கால் கடுக்க நடந்து வந்தேனா..ஒழுங்கு மறுவாதையா நா வரச்சொல்ல ஏதோ பேசிட்டு இருந்தியே அத சொல்லு.. என்னமோ சாவு கீவுனு என் காதுல விழுந்துச்சு”

“ப்ச் நாங்க ஆயிரம் பேசுவோம் அதெல்லாம் உன்ற கிட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா..நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா.. என்ற விசயத்துல அளவுக்கு மீறி மூக்க நொழைகாதீங்க அம்மணி.. நல்லதுக்கு இல்ல”

“டேய் மொக்க நா கொஞ்சம் வெளிய போறேன்.. நீ காய் கணக்க பாரு.. அம்மணி சூடா இருக்காங்க ஒத்த எளனி வெட்டி கொடுத்து கூல் பண்ணு.. வரேன்னுங்க அம்மணி”

“வந்துறாத அப்டியே தொலஞ்சிரு..”நீரன் நழுவி சென்று விட

“அட சண்டாள பாவி நம்மள கோத்து விட்டு போயிடானே.. இவ நம்ம பக்கமா கழுத்த இப்போ திருப்புவாளே.. திருப்பிட்டா..”ராசு அப்படியே மேலே காக்கையை பார்த்து கொண்டு நடக்க”ராசுண்ணா”என்ற குரல் அவன் நடையை தடை படுத்தியது..

“என்னது அண்ணனா”

“ஆமாண்ணா”

“சொல்லும்மா”

“அண்ணே நீரனுக்கு என்ன பிரச்சன.. ஏன் சாவ போறேன்னு சொல்லிட்டு இருந்தான்.. நா உன்ற கூட பொறந்த தங்கச்சி மாறி இல்ல..உனக்கு தெரியாம இருக்காது சொல்லுண்ணா”

“அண்ணானு கூப்டு போட்டு வாங்க பாக்கறியா.. ஐயோ ஐயோ இன்னும் நீ வளரவே இல்லம்மா… இப்ப பாரு உன்ன எப்டி திருப்பி விடுறேனு.. அவன் சாவாம வேற என்னம்மா பண்ணுவான். அவனுக்கு மட்டும் சாவணும்னு ஆசையா என்ன? எல்லாம் விதி”பதற்றமான செந்தூரா

“என்னாச்சு அண்ணா”

“அம்மணி அவனுக்கு ஒரு வித்தியாசமான சீக்கு.. அவனால ஒரு பொண்ணு கூட வாழ முடியாது””ஏண்ணே அவனுக்கு ஆண்மை குறைவா”

“அதெல்லாம் ஏக போகமா இருக்கு.நீ ஒரு கத கேள்வி பட்ருக்கியா..பொண்ணு உசுர எடுக்க எமன் ஒரு பூக்குள்ள இருந்து பூ நாகம் ரூபத்துல வந்து கொத்துனுச்சு..”

“அவனுக்கு என்ன சீக்குன்னு கேட்டா பூ நாகம் புண்ணாக்குனு கத சொல்லிட்டு இருக்க.. மவன இப்ப நீ சொல்லல..” பக்கத்தில் விழுந்து கிடந்த காய்ந்த மட்டையை எடுத்தவள்

“இதுலயே விளாசி விட்ருவேன்..”அடிப்பாவி உனக்கு அதிர்ச்சி வைத்தியம் தான் சரி

“அம்மணி நாசுக்கா சொல்லலாம்னு நெனச்சேன்.. அந்த பூ நாகம் மாறி நம்ம நீரனுக்குள்ளேயும் ஒரு நாகம் இருக்கு”செந்தூரா ஒரு கால் செருப்பை கழற்றி ராசுவின் மேல் வீசினாள்

“எடுபட்ட நாயே டபுள் மீனிங்கிலயா பேசுற அதும் என்கிட்ட”

“எம்மா என்ன சொல்ல விடும்மா..இந்த உலகத்துல நீ ஒருத்தி தான் பொம்பளன்னு இருந்தாலும் நா உன்னிய திரும்பியும் பாத்துருக்க மாட்டேன்.. உனக்கு பதிலா பொம்பள கொரில்லாவ பாத்துர்ப்பேன்.. சொல்ல வர்றதா ஒழுங்கா கேளு..”

“சரி சொல்லி தொல”

“உன்ற புருசனுக்கு ஒரு சாபம் இருக்கு.. அவன் கூட ஒரு பொண்ணால இருக்க முடியாது..அவன் எப்ப ஒரு பொண்ணு கூட ஒன்னு சேருரானோ அப்ப அவன் ஆணுறுப்புல இருந்து உயிரணுக்கு பதிலா ஒரு பாம்பு வெளியாகும்.அந்த பாம்பு தான் உன் கர்ப்பபைக்குள்ள போகும். பத்து மாசம் கழிச்சு உனக்கு புள்ளைக்கு பதில் பாம்பு குட்டி பொறக்கும்.. இது நீரன் பரம்பரைக்கு கெடச்ச சாபம்.. இதுல இருந்து வெளியாக ரெண்டு வழி தான் இருக்கு”அவள் பேசுவாள் என்று ராசு பார்க்க அவளோ அவனை முறைத்து கொண்டு இருந்தாள்..

“நீ கேக்க மாட்ற நானே சொல்றேன்.. ஒன்னு நீரன மனசால லவ் பண்ற பொண்ணு அவனுக்காக அந்த பாம்பு குட்டிய பெத்து அத வளத்து சாமியா கும்பிடனும்.. இல்லனா எனக்கு பாம்பு குட்டி வேணா புள்ள குட்டி தான் பொறக்கணும்னு நீரன் வேண்டிக்கணும் அது மாறியே புள்ள குட்டி பொறந்தா நீரன் அவன் உயிர அவனே தியாகம் பண்ணனும்.இப்ப சொல்லு உனக்கு பாம்பு குட்டி வேணுமா புள்ள குட்டி வேணுமா”

“ஏன்டா உன்னயும் மனுசனா நெனச்சு பேச விட்டா எகத்தாலம் பண்ணிபுட்டா திரியுற..இன்னியோட செத்தடா நீயு”அவள் கையில் மட்டையோடு அவனை அடிக்க வர நிலைமையின் வீரியம் உணர்ந்தவன் தென்னை மரத்தில் ஏறி கொண்டான் விருவிறுவென்று..

“லூசு அம்மணி நா உண்மைய தான் சொல்றேன் நீ நம்பலைன்னா அவன் கிட்டயே கேளு.. இல்லன்னா உங்கப்பன் கிட்ட கேளு.. நீரன் ராஜ பரம்பரைனு தெரியும் தானே உனக்கு பொறவு என்ன?”

“எங்கப்பாவுக்கு எப்டிடா தெரியும்னு சொல்ற”

“ஏன் உங்கப்பனுக்கு வாயி இல்ல.. போயி அந்தாளு கிட்ட கேளும்மா”தன் தகப்பனிடன் கேட்க வேண்டுமா.. ராசு விளையாடிற்கு கூறினால் இவ்வளவு உறுதியாக கூற மாட்டானே.. சரி வீட்டிற்கு சென்று அப்பாவிற்கு அழைத்து பேசலாமென முடிவு செய்தவள் வேகமாக தன் வீட்டிற்கு சென்றாள்.

“ஹலோ மச்சான்”

‘சொல்றா மாப்ள”

“மனுசனாடா நீயு.. அவ கிட்ட நேக்கா கோத்து விட்டுட்டு போய்ட்ட.. அவ அண்ணன்னு கூப்டு செண்டிமெண்ட்டா விஷயத்த கறக்க பாத்தா”

“சொல்லிட்டியா மொக்க பண்ணாட”

“இல்லடா நீ எந்த பொண்ண மேட்டர் பண்ணாலும் உனக்கு புள்ளைக்கு பதிலா பாம்பு குட்டி பொறக்கும்னு பீதிய கிளப்பி விட்டுட்டேன்”

“அட நாசமா போறவனே.. உனக்கு ஏன்டா என் மேல இந்த காண்டு”

“மச்சான் கதைய முழுசா கேளு”ராசு சிரித்து கொண்டே அனைத்தையும் கூற நீரனுக்கு இதுவும் நல்லது தான் என தோன்றியது.எப்படி சாகும் நாள் வரும்வரை அவளுடன் வாழ்ந்து தான் பார்ப்போமே என்ற எண்ணம் வலுக்க தொடங்கியது.

“டேடி அந்த மொக்க என்ற கிட்ட என்னலாம் சொல்றான் தெரியுமா.. எனக்கு புள்ளக்குட்டி போறக்காதாம்.. பாம்பு குட்டி தான் பொறக்குமாம்”

“எந்த பன்னி குட்டி பொறந்தா உனக்கு என்னடா கண்ணு.. அவன புடிச்சா கண்ணாலம் முடிச்ச.. அவன் கதைய முடிக்க தானே கண்ணாலம் பண்ண. பொறவு என்ன சலம்பிட்டு கெடக்க. அவன் ஜோலிய முடிச்சு போட்டு அப்பா சொல்ற பையன கட்டிக்கிட்டு ஜம்முனு சிங்க குட்டிகள பெத்து போடுவியா அத உட்டு புட்டு”

“டேடி.நா அவன பழிவாங்கனும்.. ஆனா அதுக்கு முன்ன எனக்கு ஒரு உண்மய சொல்லுங்க.. நீரன் ராஜ வம்சம். அவனுக்கு இந்த மாதிரி சாபம் இருக்குமா.. மொக்க உங்களுக்கு தெரியும்னு சொல்றான்”தில்லை நாயகம் ஆடி போனார். நீரனை பற்றி அவர் அறிந்தது வேறல்லவா. இது என்ன புது கதை. இதில் அந்த சீம தொற மவன் என்னிய வேற இழுத்து விட்ருக்கான்.. படுபாவி இப்ப என்ன பண்றது.. இதும் நல்லது தான். நம்ம புள்ள அவன் பக்குட்டே போவ கூடாது. அதுக்கு நாமளும் சேந்து ஆமா சாமி போட்ற வேண்டிதான்..”கண்ணு அந்த ராசு பய சொல்றது உண்மதான்..அவங்க குடும்பத்துக்கே ஒரு சாபம் இருக்கு. எந்த காலத்துல எவ குடிய கெடுத்தானுங்களோ.. ஆரு கண்டா..அவன் உன்ற பக்கத்துல வந்தா எட்டி ரெண்டு மிதி மிதிங்குறேன்.. “செந்தூரா ஏதும் கூறாமல் அழைப்பை துண்டித்தாள்..

மனம் குழம்பி கிடந்தது. இதெல்லாம் உண்மையா.. கூகிள் செய்து பார்த்தாள்..டூ கெர்ஸஸ் கம் ட்ரு(do curse’s come true).. அதிலும் சரியான விளக்கம் இல்லை. கூகிள் யூ டியூப் அனைத்தையும் அலசி ஆராய்ந்தவள் ஒரு முடிவுடன் கண்ணம்மா வீட்டிற்கு சென்றாள். செந்தூராவை பார்த்ததும் ஒரே சந்தோசம் கண்ணம்மாவிற்கு.அவளை வரவேற்று ஏதாவது சமைக்க பரபரத்தவளை அடக்கி சாபம் என்பது உண்மையா என விசாரித்தாள்.ஊர் கதையில் அலாதி பிரியம் கொண்ட அவரும்

“ஆமா கண்ணு.. அதெல்லாம் வெறும் கட்டு கதன்னு ஒம்ம ஜோடு புள்ளைங்க இப்ப சொல்லி புடுத்துங்க. ஆனா அதெல்லாம் சத்தியமான உண்ம..பரம்பரை பரம்பரையா கூட சாபம் கரம் வெச்சு தொடரும்”

“கண்ணம்மா நீரன் குடும்பத்துக்கு அப்டி ஏதாச்சும் சாபம் இருக்கா.. கேள்வி பட்ருக்கியா”

“ஜமீனு குடும்பம் நம்ம ஊரு இல்ல கண்ணு அவங்க அசலூரு.. இங்க அவங்க தாத்தாரு காலத்துல வந்தாங்க. அவங்க தாத்தா நம்ம ஊரு பொண்ண கட்டிக்கிட்டு இங்கனயே இருந்துட்டாங்க. என்னமோ தெரியல அவங்க ஊருக்கு போவ அவருக்கு புடிக்காதாம்.. ஜமீனு குடும்பத்துல எல்லோருக்கும் ஒத்த புள்ள தான் பொறக்குமாம். அதும் பொறந்த உடனே ஆத்தால முழுங்கிடுமாம். என்னமோ சாபக் கேடுன்னு முன்னாடி ஊரே பேசும்..”

“இந்த காலத்துல கூடவா இதெல்லாம் நம்புறீங்க”

“பாம்பு பக வெச்சா கட்ட சுடுகாட்டுல எரியுற வரை வந்து பாக்குமாம். பாம்பே அப்டின்னா இது சாபம் கண்ணு.. ஆரோ ஆருக்கோ வயிறு எரிஞ்சு உட்ட சாபம் சும்மா வுடுமா”

“கண்ணம்மா சாபம் போணும்னா நாம என்ன பண்ணனும்”

“ஆருக்கு கண்ணு சாபம்.. நீரன் தம்பிக்கா”

“சீச்சீ எனக்கு தெரிஞ்ச ஒருத்தருக்கு.. சொல்லு கண்ணம்மா சாபம் போவ என்ன பண்ணனும்”

“எனக்கும் சரியா தெரியாது கண்ணு.. நம்ம ஊரு மல காட்டுல ஒரு குகை இருக்குல்ல”

“அந்த மேட்டு உச்சியில.. அங்கன தான் ஆரும் போவ கூடாதே”

“அங்க ஒரு சக்தியான சாமியாரு இருக்காரு.. எனக்கு நல்ல பழக்கம்.. என்ற புருஷன் குடும்பத்துக்கு கூட பரம்பரை பரம்பரையா ஒரு சாபம் இருந்துச்சு அதான் கிளியாட்டம் பொண்டாட்டி இருந்தும் நாசமா போறவனுங்க கூத்தியா வெச்சிக்கிட்டு திருஞ்சானுங்க.. என்ற வூட்டுக்காரனும் ஒரு வெளங்காதவள வெச்சிக்கிட்டு என்னா ஆட்டம் ஆடுனான்.. கட்டையில போறவன்..அந்த சாமி கிட்ட போயி அழுதேன். அவரு ஒரு வழி சொன்னாரு அதோடு சரியா போச்சு. அந்த மினுக்கிய அடிச்சு பத்தி விட்டுட்டு என்ற கூட ஒழுங்கா குடும்பம் நடத்துனான். மவராசன் குடிச்சிபுட்டு கிணத்துல வுழுந்து போயி சேந்துட்டான்”

“கண்ணம்மா இன்னைக்கு அந்த சாமிய பாக்க போவலாமா”

“போலாம் கண்ணு பொழுது சாஞ்சதும் போலாம்.. ஆனா வண்டில இல்லம்மா.. நடந்து தான் போகணும். பாத எல்லாம் கரடு முரடா இருக்கும்.. நீ வர வேணாடா.. விஷயத்த சொல்லு நா போயி என்னானு கேட்டுட்டு வரேன்”

“கண்ணம்மா நா சொல்றது நீ செஞ்சா போதும்..நாம ராத்திரி அந்த சாமிய பாக்க போறோம்.. இந்த விஷயம் வெளிய தெரிஞ்சிது உன்ன கொன்றுவேன்”கண்ணம்மா வாய் மூடி கொள்ள செந்தூரா குழப்பத்துடனே வீட்டிற்கு சென்றாள்.செல்லும் வழியில் வயதான பாட்டிகள் கண்ணில் பட்டால் அவர்களிடம் பேச்சு கொடுத்து நீரன் குடும்பத்தை பற்றி கேட்டு கொண்டே வந்தாள். அவர்களும் கண்ணம்மா கூறிய கதையையே மாற்றி மாற்றி கூற முதல் முறை செந்தூராவின் நெஞ்சம் பதறியது.இது முட்டாள்தானமென்று அவளுக்கு தெரியும்.. ஆனால் ஒரு பயம் நெஞ்சில்.. முட்டாள்தனமோ இல்லையோ இதில் நீரனின் பெயர் வந்து விட்டது.. இதை அலசி ஆராயாமல் அவள் விடப் போவதில்லை. இரவு நீரன் வர தாமதமாக கூடுமென அறிந்திருந்தவள் அவனுக்கு ஒரு குறுந்செய்தி அனுப்பினாள்.உடனே அழைப்பு வந்தது..

“ஹலோ அம்மணி என்ன வெளிய போறிங்கனு மொட்டையா மெசேஜ் பண்ணிருக்கீங்க.. எங்க போறீங்க மாமன உட்டுட்டு”

“நா எங்க போனா ஒமக்கென்ன.. மாமனாம் மாமன் ஆருக்கு ஆரு மாமன்.. வகுந்துருவேன் உன்ன.. நா ஒரு வேலையா போறேன்..வூட்டுக்கு வந்து ஆக்கி வெச்சிருக்கேன் ஒனக்கையா அத கொட்டிக்கோ..சுருக்கா வீடு வந்து சேரு.. அந்த ராசு கூட ஜோடி போட்டுட்டு ஊர சுத்தாதே”..அழைப்பை வைத்து விட்டாள்..எங்க போறா இவ.. ஒருவேள அவங்கப்பன பாக்க போறாளோ..அவ பின்னாலயே போயி பாத்துற வேண்டிதான்..ராத்திரி ஊர் சற்று அடங்கியதும் செந்தூரா கண்ணம்மா வீடு நோக்கி சென்றாள் நீரனின் பழைய ஓட்டை பைக்கில்.தூர நின்று தன் வீட்டை கண்காணித்து கொண்டிருந்த நீரன் மனைவியை கண்டதும் அவள் பின்னாலே சென்றான். அவள் கண்ணம்மா வீட்டிற்கு செல்ல பிறகு கண்ணம்மாவுடன் எங்கேயோ சென்றாள்.ஊரை சற்று தள்ளி இருந்து காட்டிற்கு வெளியே வண்டியை நிறுத்தினாள் செந்தூரா.

கண்ணம்மாவும் அவளும் இறங்கி கையில் டார்ச் லைட்டுடன் காட்டு பாதையில் நடக்க தொடங்கினர். என்னடா இவ காட்டுக்குள்ள போறா.. ஒருவேள உள்ள எவனாச்சும் சூனியம் வைக்குறவன் இருக்கானோ..நம்மல முடிச்சு விட போறாளோ”நீரன் சத்தம் செய்யாமல் வண்டியை ஒரு புதரின் மத்தியில் மறைத்து வைத்து விட்டு அவளைப் பின்தொடர்ந்தான்.அவளும் கண்ணம்மாவும் காட்டில் நடந்து சென்று கொண்டே இருந்தனர்.அந்தக் கரடுமுரடான பாதையில் நடக்க செந்தூரா மிகவும் கஷ்டப்பட்டாள்.பிறந்ததிலிருந்தே சொகுசாக இருக்க பழகியவள்.கூரான கற்கள் அவள் மென்மையான பாதத்தை குத்தி கிழித்தது.. வலியில் அவள் பதறுவாள் என்று பார்த்தால் அவளுக்கு பதில் கண்ணம்மா தான் அதிகம் பதறினார்..

“கண்ணு சொன்னா கேளு கண்ணு.. காலு எல்லாம் கல்லு குத்தி பொத்து போகுது.. ஐயா உன்னிய எப்டி வளத்தாரு.. உன்ன நா தான் இப்டி ஒரு பாதையில கூட்டிட்டு போறேன்னு தெரிஞ்சா என்ன கொன்னே போட்ருவாரு.. “

“கண்ணம்மா உன்ற வாய மூடிக்கிட்டு வரியா..இந்த விஷயம் எங்க அப்பாவுக்கு தெரிஞ்சது தெரியும்ல என்ன பத்தி.”கண்ணம்மாவை மிரட்டி வாயை மூட வைத்தாள். அந்தப் பாதையில் நடக்க நீரனுக்கே கால் வலி எடுத்தது.. இவ இந்த பாதயில எப்படி நடந்து போறா.. என்னத்துக்கு இந்த காட்டுக்குள்ள போய் கிட்டே இருக்கா.. இந்தக் கிழவி வேற ஏதோ கெஞ்சிக் கிட்டே வருது..என்ன நடக்குதுன்னே புரியலையே..நடந்து கொண்டே இருந்த செந்தூரா சட்டென திரும்பிப் பார்த்தாள்.. நல்லவேளை அவளை நன்றாக புரிந்து வைத்திருந்தது நீரன் அவள் நின்றதும் அடுத்து அவள் செய்யப்போகும் காரியத்தை கணித்து ஒரு பெரிய மரத்தின் பின்னால் மறைந்து கொண்டான். டார்ச் லைட்டை சுற்றிலும் அடித்து யாராவது தன்னைப் பின் தொடர்கிறார்கள் என்று நோட்டம் விட்டாள். யாரும் இல்லை என்று தெரிந்ததும் திரும்பவும் நடக்க தொடங்கினாள்.அவள் சற்று தூரம் சென்றதும் மரத்தின் பின்னால் இருந்து வெளியே வந்தான் நீரன்.கண்ணம்மா சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தனர் இருவரும்.அது ஒரு கல் மேடு.அந்த மேட்டின் உச்சியில் சின்ன குகை ஒன்று உள்ளது. அந்த குகைக்குள் ஒரு சாமியார் பல வருடங்களாக தவம் செய்து கொண்டிருக்கிறார் என்று ஒரு பேச்சு இந்த சுற்று வட்டாரம் மொத்தமும் பரவி கிடந்தது..

சிலர் அவரை சித்தர் என்றனர் சிலர் அவரை சூனியக்காரன் என்றனர்.. சிலர் அவரை மனித கறி தின்னும் அகோரி என்றனர். இப்படி பல பய கதைகளை மக்களிடையே பரவி விட்டு அந்தப் பக்கம் யாரும் வராமல் செய்து விட்டனர். கண்ணம்மா ஒருநாள் காட்டிற்கு விறகு வெட்ட வந்த போது காட்டுப்பன்றி ஒன்று அவரை துரத்த அலறிக் கொண்டே இந்த குகை வரைக்கும் ஓடி வந்துவிட்டார். அன்று அவரை காட்டுப்பன்றியிடமிருந்து காப்பாற்றியவர் இந்த சாமியார். அதன் பிறகு தான் கண்ணம்மாவிற்கு இவர் பழக்கமானார்.குகையின் உள்ளே உடலைக் குறுக்கிக் கொண்டு சென்றவர்கள் சாமியாரின் முன் அமர்ந்து கொண்டனர்.. அவரோ கடும் தவத்தில் இருந்திருப்பார் போல. கண்களைத் திறப்பேனா என்று அடம் பண்ணினார்.நீரன் குகையின் ஒரு மூலையில் நின்று உள்ளே நடப்பதை காதை தீட்டி கேட்டுக் கொண்டிருந்தான்..ஒரு மணி நேரம் சென்றிருக்கும்.சாமியார் மெல்ல கண் திறந்தார்.கண் முன்னால் அமர்ந்திருக்கும் இருவரையும் கண்டார். அவரின் கண்கள் குகையின் ஒரு மூலையில் மறைந்து நின்று கொண்டிருக்கும் நீரனை கண்டு புன்னகை சிந்தியது. கண்ணம்மா சாமியை வணங்கி

“சாமி இவங்க”

“நீ ஏதும் சொல்ல வேணா கண்ணம்மா.. எனக்கு எல்லாம் தெரியும்.. சாபம் உண்மையாவே இருக்கா.. அப்படின்னு சந்தேகத்தை கேக்க தானே வந்த”செந்தூரா சாமியார் கேட்ட கேள்வியில் ஆடிப்போனாள்.. உடன் வந்த கண்ணம்மாவிற்கே தெரியாத விஷயம் இவருக்கு எப்படித் தெரிந்தது அதும் அவள் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேசாத போது..அவளின் தலை தானாக ஆமாம் என்று ஆடியது.. கண்களை மூடிக்கொண்ட சாமி மனதிற்குள் சிரித்துக்கொண்டு

“ஒருவிதத்துல நீ பயப்படுற விஷயம் உண்மைதான்..சாபம் இந்த உலகத்துல உண்மையாவே இருக்கு..ஒருத்தங்க வயிறு எரிஞ்சு விடுற சாபம் என்னிகா இருந்தாலும் நம்மள சும்மா விடாது..கால சுத்தின பாம்பு மாதிரி நம்மள சுத்திகிட்டே இருக்கும்..நம்மளோட அந்த சாபம் முடியாது.. நம்ம குடும்பம் பரம்பரை இப்படி அந்த சாபம் தொடர்ந்து வந்து கிட்டே இருக்கும்..”

” சாமி இந்த சாபத்துக்கு விமோசனம் இல்லயா”

” இருக்கு..உனக்கு தெரிஞ்ச விஷயம் எல்லாமே ஒரு விதத்துல உண்மை பல விதத்துல பொய்..விமோசனம் உன்னோட உண்மையான அன்பு மட்டும்தான்..எந்த சூழ்நிலை வந்தாலும் அது எப்பேர்பட்ட சூழ்நிலையா இருந்தாலும் நீ நம்பிக்கையோடு இருக்கனும்.. ஏமாற்றம் துரோகம் எல்லாமே உன் வாழ்க்கைல இனிமே நீ பாக்க போற.. ஆனா ஒன்னே ஒன்னு புரிஞ்சுக்கோ இது எல்லாமே உன்னோட விதியால நடக்கிறது..யாரயும் இதுல குத்தம் சொல்ல முடியாது.. நாம ஒருத்தங்க மேல உண்மையான அன்பு வைச்சிருந்தா அவங்களோட தப்ப மன்னிக்க முடியும்.. எப்பவும் தைரியத்தை இழக்காத.. கடவுள நம்பு..உன் கோபத்தக் குறைச்சுக்கோ.. இப்ப நீ போலாம்”சாமியார் கண்கள் மூடிக் கொண்டது. செந்தூரா

“சாமி என்ன நீங்க ஏதும் சொல்லாமல் கண்ண மூடிக்கிட்டிங்க.. இதிலிருந்து நா எப்படி வெளிய வர்றது.. இதுக்கு ஏதாச்சும் விமோசனம் சொல்லுங்க.. சாமி”

“கண்ணு சாமி ரொம்ப பேச மாட்டாரு.. அவரு சொல்ல வேண்டியத சொல்லிட்டாரு. இதுக்கு மேல அடிச்சுக் கேட்டாலும் சொல்ல மாட்டாரு.. வா கண்ணு போயிரலாம்..இப்பவே நடுராத்திரி ஆயிருச்சு..” கண்ணம்மா அவளின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அந்த குகையை விட்டு வெளியே வருவதற்குள் நீரன் அங்கிருந்து ஓடலானான். வேக வேகமாக அங்கிருந்து ஓடியவன் தன் வண்டியை புதரில் இருந்து எடுத்து தள்ளிக்கொண்டே சிறிது தூரம் ஓடி அதில் ஏறி பறந்து விட்டான். செந்தூரா மனக் குழப்பத்துடன் கீழே வந்து வண்டியை எடுத்து கண்ணம்மாவை வீட்டில் விட்டுவிட்டு யாரிடமும் இதைச் சொல்ல கூடாது என்று மிரட்டி தன் வீட்டிற்கு வந்தாள். அவளுக்கு முன்பே வீட்டிற்கு வந்திருந்த நீரன் உடைமாற்றி தொலைக்காட்சி முன் அமர்ந்து இருந்தான்.. இப்பொழுதுதான் அவளைக் காண்பது போல்

“அம்மணி எங்கங்க போய்ட்டு வரிங்க..நடு ராத்திரி ஆச்சிங்க.. உங்கள காணும்னு நா பயந்து கெடக்கன்.ஏனுங்க பேயறைஞ்ச மாறி முழிக்குறிங்க.. என்னாச்சுங்க.. பேய நேர்ல பாத்துடீங்களோ..”செந்தூரா ஏதும் பேசவில்லை.. ஓட்டமான நடையுடன் அவனை நெருங்கியவள் அவன் நெஞ்சில் வந்து மோதினாள்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்