சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 23


23

“டேய் ராசு எங்கடா இருக்க..சுருக்கா வூட்டுக்கு வாடா”

“என்னடா ஆச்சு.. நீ கூப்டுற வேகமே சரியில்ல.. உன்ற பொண்டாட்டி பொம்பள ஹல்க் கையால அடி வாங்க எனக்கு தெம்பில்ல சாமி..என்ன இருந்தாலும் பத்து நிமிஷம் பொறு நா சாப்டு வரேன்”

“மிதிச்சேன்னு வையு தின்னதுலாம் வெளிய வந்துரும்.. மச்சான் எனக்கு பக்கு பக்குன்னு இருக்கு வெரசா வாடாங்குறேன்”

“பக்கு பக்கா.. மச்சான் அவ திரும்பவும் ஏதாச்சும் செய்ஞ்சிட்டாளா?”

“ச்சீ வாய கழுவு.. உன் நாற வாய் பளிச்சு ஏதாச்சும் ஒன்னு கெடக்க ஒன்னு ஆச்சு பொளந்துருவேன் உன்ன”

“அதானே என்ன பலிக்கொடுக்குறதுலயே குறியா இருக்க.. இருடா வரேன்”நீரன் பதற்றமாக நடந்து கொண்டிருந்தான்..  மருத்துவரை சென்று சந்தித்து அவனது மனைவியின் மன நோய்க்கான காரணத்தை கண்டறிந்த பின்பு அதை பற்றி அவளிடம் அவன் வாயைக் கூட திறக்கவில்லை.  முடிந்த அளவு அவளைத் தனிமையில் விடாமல் அவள் எதை பற்றி பேசினாலும் அது அனைத்தையும் இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டு விட்டு பூனை குட்டி போல அவளை உரசிக்கொண்டே இருந்தான்.

அவளும் சில நேரங்களில் குத்தி பேசுவாள் சில நேரங்களில் கையிலிருக்கும் பொருளால் அவனைத் தாக்கினாள்,மீதி சில நேரத்தில் அவளது அன்பாலே அவனைக் குளிப்பாட்டினாள்.. ஒவ்வொரு நாளும் செந்தூரா அவனுக்கு புதிதாக தெரிந்தாள்.  அவளைக் கண்டால் அந்த ஊரில் அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். ஆனால் அவன் மட்டுமே அவளைக் கண்டால் காதலோடு கண்ணடித்தான்.அவளுக்கு இந்த பிரச்சினை என்று தெரியும்வரை அவளது செய்கையை பார்க்கும் போது அவனுக்குமே ஆத்திரம் வந்தது என்னவோ உண்மை தான்.ஆனால் பிரச்சினை இதுதான் என்று தெரிந்த போது அவள் மேல் பரிதாபம் கொள்வதற்கு பதிலாக அளவுக்கு மீறிய காதலே அவனிடமிருந்து வெளிப்பட்டது..

செந்துராவும் இப்பொழுது அவளது மூர்கத்தனத்தை சற்று குறைத்துக் கொண்டாள். அவன் வீட்டில் இல்லாத நேரம் ஜீவசமாதி அடைந்த அந்த ராஜாவைப் பற்றிய ஏதாவது ஒரு குறிப்பு கிடைக்குமா என்று அலசி ஆராய்ந்து கொண்டிருந்தாள். நீரனின் பரம்பரையைப் பற்றியும் அவனின் முன்னோர்கள் வாழ்ந்த தடங்களை பற்றியும் அகழ்வாராய்ச்சியாலானான தனது நண்பன் ஒருவனிடம் தகவல்கள் கேட்டிருந்தாள். அவனும் அனைத்து தகவல்களையும் திரட்டி அவளுக்கு தருவதாக வாக்களித்திருந்தான்.அவனிடமிருந்து ஏதாவது தகவல் வருமா என்று தினம் தினம் தனது கைபேசியை ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் செந்தூரா.

அன்று காலை நன்றாக இழுத்துப் போர்த்தி உறங்கி கொண்டிருந்தான் நீரன்.. அவனை நல்ல உறக்கத்தில் பிடித்து உலுக்கினாள் செந்தூரா.”ஹேய் என்னடி மனுசன தூங்க விடமாட்ற.. இன்னும் கொஞ்ச நேரம் மட்டும் தூங்கிகிறனே ப்ளீஸ் செல்லம்”என்றபடி புரண்டு படுத்தான் நீரன்.. அவளோ விடாமல் அவனை போட்டு உலுக்க இனி இவளிடம் தூங்க முடியாது என்று உணர்ந்து கொண்டவன் கடுப்போடு கண்ணைத் திறந்தான்.அவனது முறைப்பை சட்டை செய்யாமல் கையைக் கட்டிக் கொண்டு அவனின் அருகே மெத்தையின் மேல் அமர்ந்து இருந்தால் செந்தூரா.

“மணி என்ன இப்ப.. ப்ச் அடியே மணி ஏழு தான் டி ஆகுது.. நேத்து ராத்திரி தூங்க லேட் ஆயிருச்சு இன்னிக்கு கொஞ்ச நேரம் தூங்குவேன்னு சொல்லிட்டு தான படுத்தேன்.. அதுக்குள்ள ஏன் டி என்ன எழுப்பின.. அப்படி என்ன தலை போற அம்மணிக்கு?”

“ம்ம்ம் அவசரம் தான் நீ அப்பாவாக போறேன்னு சொல்ற அவசரம்..”நீரனின் உறக்கம் எங்கே போய்த் தொலைந்தது என்றே தெரியவில்லை. கண்களை நன்றாக கசக்கி கொண்டவன்

“ஹேய் இப்ப.. இப்ப என்னானு சொன்ன”

” ஒன்னும் இல்ல”

“ஹேய் ப்ளீஸ் சொல்லுடி என்னானு சொன்ன எனக்கு சரியா தூக்கத்துல கேட்கல..சொல்லுடா”அவள் சிரித்துக்கொண்டே

“நீரன் நீங்க அப்பாவாக போறீங்க.. “என்றதுதான் தாமதம்..அவளை இழுத்து அணைத்து தனது நெஞ்சுக்கூட்டில் புதைத்துக் கொண்டான் நீரன்.. எத்துணை சந்தோஷமான விஷயம் இது.இம்மாதிரி அழகான விடியலை அவன் நினைத்துக்கூட பார்த்தது இல்லை.தான் அப்பாவாக போகிறோம் என்றதும் அவன் நெஞ்சில் மகிழ்ச்சி ஊற்றாக பெருகியது.தன்னுடைய மகன் தன்னவளின் வயிற்றில். அவளை தன்னிடமிருந்து பிரித்து மெத்தையில் படுக்க வைத்து அவளது மேலாடையை நீக்கி பாலாடை வயிற்றை மிருதுவாக வருடினான். அவள் அவனது கையைப் பிடித்துக் கொள்ள

“கைய எடுங்க அம்மணி. நான் உங்க கூட ரொமான்ஸ் பண்ணல. என்ற புள்ளய தொட்டுப் பாக்குறேன்..”வெடுக்கென்று அவனது கையை தட்டிவிட்டவள்

“நான் இல்லாம புள்ள வந்துடுமா உனக்கு..சொல்லி அஞ்சு நிமிஷம் கூட ஆகல அதுக்குள்ள என்ற புள்ள என்ற புள்ளனு குதிக்கிற..வாழ்க்கை பூரா நீ மட்டும் தானே அது கூட இருக்க போற.. அப்போ எவ்ளோ வேணுமோ அவ்ளோ கொஞ்சிக்கோ..இன்னும் பத்து மாசம் தான் டைம் இருக்கு..அது வரைக்கும் என்ன மட்டும் கொஞ்சு”அவளின் வார்த்தையை கேட்டவன் தீச்சுடர் போல கையை இழுத்துக் கொண்டான்.இதை எப்படி மறந்தான்.இதற்கு பயந்து தானே குழந்தை வேண்டாம் என்று முதல் நாள் உறவுக்கு பிறகு அவளிடம் காலில் விழாத குறையாக மன்றாடினான்.பாவி கேட்டாளா..இதை சொல்லியதற்கு தானே உறவு கொள்ள அவனுக்கு பிடிக்கவில்லை என்று அதற்கு ஒரு பஞ்சாயத்து வைத்து காலில் சுடு தண்ணிரை அல்லவா கொட்டிக் கொண்டாள்.

அவளின் தோல் வறண்ட மிருதுவான காலுக்கு மருந்து போட்டு மெத்தையில் அவளை படுக்க வைத்தால் இவனையும் இழுத்து தன் மேலே போட்டுகொண்டு அவர்களின் உறவை இன்னும் பலப்படுத்தினாள்.அதன்பின் அவன் எவ்வளவு முறை அவளிடம் எடுத்துக் கூறினாலும் காட்டு கத்து கத்தி உறவின் முதல் படியை அவளே எடுத்து வைத்தாள். மறு அடி எடுத்து வைக்க அவன் மனம் வேண்டாம் என்று மறுத்தாலும் கை அவளிருக்கு பயந்து தானாகவே எடுத்து வைத்து விடும். அவள் சொன்ன பத்து மாதம் கணக்கு அவனின் பத்து நிமிட சந்தோஷத்தை அடியோடு அழித்து விட்டது.. அவளின் கருவில் வளர்வது அவளையே அளிக்கவல்ல ஆயுதம் அல்லவா.அதை எப்படி அவன் மறந்து போனான். அவனைப் பற்றி அவள் என்ன நினைத்திருப்பாள். சாமானிய கணவன் போல் அவனும் நடந்து கொண்டானே. தயக்கத்தோடு அவளின் முகத்தை பார்த்தான்.இவ்வளவு நேரம் அவன் தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்ததை அவள் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறாள்.

பரிதாபமாக தன்னை பயந்தபடியே பார்க்கும் கணவனைக் கண்டதும் தன்னுடைய குழந்தையும் தவறு செய்தால் முகத்தை இப்படித்தானே வைத்திருக்கும் என்று அவளின் தாய் உள்ளம் கூறியது. “என்ன மன்னிச்சிருடி” என அவன் கூறிய அடுத்த நொடி அவனை இழுத்து தனது மார்புக்கு மத்தியில் சிறை பிடித்தால் செந்தூரா.அவளால் மூச்சு விட முடியவில்லை அந்த அளவிற்கு அவனை இறுக்கி பிடித்திருந்தாள் அவள்.. இருந்தும் மன்னிச்சிரு மன்னிச்சிரு என அவன் உதடு அவளின் சதைக் கோளங்களின் மத்தியில் அசைவதை அவளால் நன்றாக உணர முடிந்தது. அவனது தலை முடியைக் கோதி

” இப்ப என்னதுக்கு நீ மன்னிப்பு கேட்குற..இதெல்லாம் ஊரு ஒலகத்துல சாதாரணம் தானே.. நியாயமா பார்த்தா இந்நேரம் நீ சந்தோஷத்துல துள்ளிக் குதிக்கனும்.அத விட்டு புட்டு”அவளிடமிருந்து தன்னை வலுக்கட்டாயமாக பிறித்து கொண்டவன்

“இல்ல என்னால முடியலடி..உன்ன பலி கொடுக்க தான் இந்த கல்யாணம்னு உன்ன கடத்தினப்போ சொன்னேன்..அது சும்மா ஒன்ன பயம் காட்ட தான்..ஆனா அதுவே உண்மையா ஆயிரும்னு எனக்கு பயமா இருக்கு. இந்த புள்ள வேணா செந்தூரா.. இப்பவே டாக்டர்கிட்ட போய் இது அபோசன் பண்ணிட்டு வரலாம்…”இந்த வார்த்தையை சொல்லும் போது வழக்கமான செந்தூரா என்றால் அவனை மிதித்துத் தள்ளிருக்க வேண்டும்..இல்லை அவளை அவளே காயப் படுத்திக் கொண்டிருக்க வேண்டும்..ஆனால் இப்பொழுது எதுவும் செய்யாமல் அவனது வேதனை வடியும் கண்களை மட்டுமே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தாள். பார்வையை வைத்தே தான் சொல்லிய வார்த்தைக்கு அடுத்து என்ன நடக்குமோ என்று கலவரத்தோடு பார்த்தான் வீரன்.

ஆனால் அவளோ”என்ன பேசிட்டு இருக்கேனு தெரியுதா உனக்கு? ஒரு பத்து நிமிஷம் உன்ற முகத்துல உண்மயான ஒரு சந்தோஷத்த நான் பாத்தேன்..என்னோட நீரனக்கு இந்த புள்ள எவ்ளோ முக்கியம்னு நான் தெரிஞ்சுக்கிட்டேன்..என்னோட உயிரே போனாலும் சரி இந்த புள்ளய நல்ல படியா பெத்து உன்னோட கையில கொடுப்பேன்.. இது என்னோட காதல் மேல சத்தியம்”

“ஏன்டி எதுக்குடி என்ன இவ்ளோ லவ் பண்ற..அந்தளவுக்கு நான் தகுதியானவன் தானா.. அப்படி நான் என்னடி செஞ்சுட்டேன் உனக்கு..”

“நான் வயசுக்கு வந்த அன்னிக்கு வலியோடு கிணத்தடியில ஒக்காந்து இருந்தேன்..உனக்கு ஞாபகம் இருக்கா.. அன்னைக்கு தான் நீ எளனி கூடால என்ன தெரியாம அடிச்சு எனக்கு வலிக்கும்னு நெஞ்சில தேச்சு விட வந்த. நான் நீ தப்பான எண்ணத்தோட என்ன தொட வரனு நினைச்சு அதுக்கப்புறம் நடந்த கலவரம் தான் உனக்கு தெரியுமே.. அன்னைக்கு ராத்திரியே நான் வயசுக்கு வந்துட்டேன்..வலி தாங்க முடியல.ஆருகிட்டயும் சொல்லாம வயித்த புடிச்சுகிட்டு கிணத்தடியில ஒக்காந்துட்டேன்..என்னான்னு தெரியல அன்னைக்குன்னு பாத்து என்ற அம்மாவோட ஞாபகம் ரொம்ப வந்துச்சு. நான் அவங்கள ரொம்ப மிஸ் பண்ணேன்..வலி ஒரு பக்கம்.தூக்கம் ஒரு பக்கம். யாரோ என்ன மடியில சாய்ச்சு என்ற முடிய கோதி விட்டாங்க.ஆருன்னு அர கண்ண தொறந்து பாத்தேன் அது நீ.. கொஞ்சம் நேரம் கழிச்சு என்ன கிணத்தடி செவுத்துல சாயிச்சு வச்சிட்டு நீ ஒரு கல்ல எடுத்து என்ற வூட்டு மேல அடிச்சுட்டு ஓடிப் போயிட்ட.. எப்போ நீ என்ன மாடியில சாய்ச்சு என்ற முடிய கோதி விட்டியோ அப்பயே எனக்கு உன்ன பிடிச்சி போச்சு”

“அடிப்பாவி அப்ப ஏன்டி பார்க்கிற நேரமெல்லாம் என்ற கிட்ட சண்ட போட்டுட்டு இருந்த”

“அது சும்மா.. பிடித்தம் எப்ப காதலாச்சுனு எனக்கே தெரியல.. ஆனா இப்ப நீ என்ற உயிரா ஆயிட்ட நீரா”அவளை இழுத்து அவளது இதழ்களில் தனது முத்திரையைப் பதித்தான் நீரன்..அவள் அவனது முத்தத்தில் கரைந்து தனது தந்தையை நேரில் பார்த்து தான் தாய் ஆக போகின்ற செய்தியைக் கூறி வருவதாக சொல்லிவிட்டு தனது வீட்டிற்கு சென்றாள்.

அப்பொழுதுதான் நீரன் ராசுவிற்கு அழைத்து வீட்டிற்கு வர சொன்னான்.ராசு என்னவோ ஏதோவென்று நீரன் வீட்டிற்கு வர அங்கே கையை தலைக்கு முட்டுக் கொடுத்தபடி அமர்ந்திருந்தான் நீரன்.”மச்சான் அடி பலமோ..இதெல்லாம் தெரிஞ்சு தான் கையோட சூட தைலம் எடுத்துட்டு வந்துருக்கேன்.. இத நல்லா தேய்ச்சிட்டு ஒத்தடம் கொடுத்தா வீக்கம் கொஞ்சம் கொறையும்” அவனை ஓங்கி ஒரு மிதி மிதித்த நீரன்

“நா சொன்னனா அவ என்ன அடிச்சு புட்டானு.. கொன்றுவேன் உன்ன.. ஒரு முக்கியமான விஷயம்டா மொக்க”

“அடிக்கலையா அப்ப.. அடிய விட முக்கியமான விஷயம்னா என்னடா”

“நா அப்பாவாக போறேன்”ராசு அதிர்ச்சியில் நிற்க

“டேய் என்னடா நான் அப்பாவாக போறேன்னு எவளோ சந்தோஷமா சொல்றேன் நீ என்னனா பேய்யறைஞ்ச மாதிரி நிக்கிற..மொக்க டேய்”

“இல்ல மச்சான் நீ அப்பா ஆவுறதுல எனக்கு சந்தோஷம்தான்..ஆனா நா அப்பா ஆவேனானே எனக்கே தெரியலயே மச்சான்”

“அதெல்லாம் ஆவ.. ஒப்பாரி வைக்குறத நிறுத்து..”

“ஆமா எங்கடா பொம்பள ஹல்க்க காணோம்.. விஷயம் தெரிஞ்சு ஆடிருப்பாளே”

“இல்லடா”நீரன் அனைத்தும் சொல்ல ராசுவும் நண்பனுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அடுத்து என்ன ஆகுமோ என்ற பயத்துடனே தனது வேலையை பார்க்கச் சென்றான்.

தந்தை வீட்டிற்குச் சென்று செந்தூரா தான் கர்ப்பமானதை தந்தையிடமும் மாமனிடமும் கூறி ஆசி வாங்க அதிசயத்திலும் அதிசயமாக அவள் கர்ப்பம் என்பதை கேள்விப்பட்ட கண்ணம்மா கண்களில் கண்ணீரோடு அங்கே ஓரமாய் நிற்பதை கண்டு அவள் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்க கண்ணம்மா இரண்டடி எகிறி குதித்து பின்னால் நகர்ந்தார்.. அவரை விடாப் பிடியாக பிடித்து நிற்க வைத்து அவரின் காலில் பிடிவாதமாக விழுந்து ஆசீர்வாதம் செய்ய சொன்னாள் செந்தூரா.கண்களில் கண்ணீர் மல்க கைகள் நடுங்க சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்று நூறாண்டுகள் தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என அந்த நல்ல மனம் ஆசீர்வதித்தது.

சிறிது நேரம் தன்னுடைய வீட்டில் இருந்தவள் கிளம்ப எத்தனிக்க தில்லை ரொம்பவும் கேட்டுக் கொண்டதால் அவருடனே அன்றைய மதிய உணவை முடித்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தாள்.வீட்டில் நீரன் இல்லை. தன்னிடமிருந்த சாவி கொண்டு வீட்டை திறந்து உள்ளே செல்ல அந்நேரம் பார்த்து அவளின் கைபேசி அலறியது.அவள் யாரின் அழைப்புக்காக இத்தனை நாள் காத்து இருந்தாளோ இன்று அந்த அழைப்பு அவளது உள்ளங்கையில் சிணுங்கிக் கொண்டிருந்தது.. உடனே அழைப்பை ஏற்று காதில் வைத்தவள்

“சொல்லு கணி என்னாச்சு நா கேட்ட விஷயம்? ஏதாச்சும் க்ளூ கிடைச்சுதா” அவளால் கணி என்று அழைக்கப்பட்ட அன்பு கணியன்

” கணி கைய வச்சா காய் கூட பழுத்து பழமாயி ஜூஸ் போட்டு தரும் தெரியும்ல”

“ஜூஸ் வாங்கி தரணும்னு நாசுக்கா பிச்சை எடுக்கிற சரி நீ விஷயத்த சொல்லு நேர்ல பார்க்கும்போது ஜூஸ் வாங்கி தரேன்..”

“இந்த அவமானங்கள் எல்லாம் என் வாழ்க்கயில நா கடந்து வர ஒன்னுதான்..இட்ஸ் ஓகே.. செந்து அந்த அரண்மனைய பத்தி ஆல் டீடெயில்ஸ் ஐயா கலக்ட் பண்ணி கைவசம் ரெடியா வெச்சிருக்கேன்.. அதோடு அந்த சொங்கி ராஜா என்ன ஆனானும் கண்டுபுடிச்சிட்டேனே..”கர்ப்பமுற்றதை மெய்மறந்து சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தாள் செந்தூரா..

“சூப்பர் கணி.. நீ எனக்கு எவ்ளோ பெரிய ஹெல்ப் பண்ணிருக்க தெரியுமா..உனக்கு என்ன வேணும்னாலும் கேளு நான் வாங்கி தரேன்”

“உடனே கேட்க மண்டையில எந்த ஐடியாவும் வரமாட்டுது.. நான் அப்றம் கேக்குறேன் ஓகே”

“ஓகே எரும.. நீ டீடைல்ஸ் எனக்கு மெயில் பண்ணி விடு.. எல்லாத்தையும் முடிச்சுட்டு நான் உனக்கு திரும்பியும் கால் பண்றேன்..” என்றவள் கணிக்கு பலநூறு நன்றிகளை உரைத்து விட்டு சந்தோஷமாக அழைப்பைத் துண்டித்தாள்.

சிறிது நேரத்தில் அவளுக்கு அவன் திரட்டிய விஷயங்களைப் பற்றிய தகவல்களை ஈமெயிலில் செய்து விட அதை ஒன்று விடாமல் படித்து பார்த்தாள் செந்தூரா.அவள் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். தன் வயிற்றில் கை வைத்து”செல்லம் நாம அப்பாவோட சாபத்த பிரேக் பண்ணி நாம மூனு பேரும் சந்தோஷமா வாழப் போறோம்”என்று கண்ணாடி முன்னின்று கருவாய் இருக்கும் தன் சிசுவிடம் பேசிக்கொண்டிருந்தாள்..

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்