சொக்குப்பொடி போட்ட செந்தூரமே 2


“ஆருடா அது பட்ட பகல்ல முக்காடு போட்டுகிட்டு போறது.. ஆளையும் நடக்குற தினுசயும் பாத்தா சீமதொர மவன் மாறி இருக்கே.”

“ஆரது குப்பத்தாவா..ஹேய் ஆத்தா உனக்கு உன் புருஷனையே குளிச்சிட்டு வந்தா அடையாளம் தெரியாதே.என்ன எப்படி இம்புட்டு வெரசா கண்டு புடிச்ச”

“மொச புடிக்குற நாயே மொகரய பாத்தா தெரியாது..இந்த ஊர்ல அர கிறுக்கன் கணக்கா உடுத்துறது நீ மட்டும் தான்டா.உன் உடுப்பே நீ ஆருன்னு காட்டி கொடுக்குது”நொடித்தார் குப்பாத்தா.

“யூ ஓல்ட் லேடி.. உனக்கு எங்க மார்டன் காஷ்டியும் பத்தி தெரிய போது.. மாடு கணக்கா வெத்தலைய போட்டு பொலிச்சு பொலிச்சுன்னு துப்பதேன் தெரியும்”..

“ஏலே ஆர பாத்துடா மாடுன்னு சொன்ன.. சொன்ன நாக்க இழுத்து வெச்சு அறுத்துப்புடுவேன் சாக்கிறத..”அவர் அருவாமனையை தேட

“ஆத்தி தாய் கெழவி போட்டு தள்ள பாக்குதுடா சில்வண்டு சிக்கும் சிறுத்த சிக்குமா”கைலியை முக்காடாக போட்டிருந்தவன் அதை மடித்து இடுப்பில் கட்டி கொண்டு ஓடினான் ஒரு ஓட்டம் நீரன் வீட்டிற்கு.நீரன் வீட்டிற்குள் நுழைந்தவன் அங்கே ஊஞ்சலில் படுத்து விட்டத்தை பார்த்து கொண்டிருந்தவனை அழைத்தான்

“ஹேய் மச்சான் என்னடா காட்டுக்கு போகாம இங்கன சொகமா படுத்து ஆட்டிகிட்டு கெடக்க”

“நீ எப்ப வந்த.. போன மேட்டரு என்னாச்சு”

“இப்ப தான்டா வந்து பேக்க வீட்ல போட்டுட்டு வரேன்.. ஊராடா இது வெயிலு கொளுத்தி தள்ளுது. நடந்து கிட்டே எரிஞ்சு சாம்பலாயிருவோம் போல.. ஜீன்ஸுக்கு மேல கைலிய கட்டிட்டு முக்காடு போட்டு வந்தா நடக்க முடியாத கெழவி எல்லாம் எகத்தாளம் பேசுது.. ஏன் மச்சான் முக்காடு போட்டு நடந்தாலே கரெக்ட்டா அடையாளம் கண்டுபிடிச்சி எவன் என்ன செய்றானு வேவு பாக்குதுங்களே சிசிடீவி கேமரா எல்லாம் நீ எப்டிடா இதுங்க கண்ணுல மண்ண போட்டுட்டு அந்த பொம்பள ஹல்க்கு வீட்டுக்கு போக போற..ரொம்ப குஷ்டம் டோய்”

“டேய் மொக்க அதெல்லாம் நேத்தே போயாச்சு மைய மண்டயில தடவியாச்சு”

“டேய் எப்டிடா..நீ கேடி கேப்டன் மச்சான்”கண்கள் விரிய கேட்டான் மொக்க ராசு.

“நமக்கு இதெல்லாம் ஒரு விஷயமாடா..செவுரு எகிறி குதிச்சு அவ வூட்டு நாயி கண்ணுல படாம பைப் புடிச்சு உள்ளார போயி தூங்குற அவ மண்டையில மைய வெச்சிட்டு துண்ட காணோம் துணிய காணோம்னு ஓடி வந்து வீடு சேந்தது எனக்கு தான் டா தெரியும்..ஒன்னுக்கே வந்துருச்சுடா பயத்துல..”நீரன் கூறியதைக் கேட்ட மொக்க ராசு அவனை மேலிருந்து கீழாக ஒரு லுக்கு விட்டு

“உனக்கு பயத்துல ஒன்னுக்கு வந்துருச்சு இத நாங்க நம்பனும் போடா போக்கத்தவனே.. பயந்தவன் தான் ஒரு வாரமா சுடுகாட்டுல சுருண்டு படுத்து கெடந்தியா”

“மூடு மூடு அதெல்லாம் எதுக்குனு தெரியும் தான..சின்னு சாப்பாடு எடுத்துட்டு வருவான் அவன் காதுல மேட்டரு வுழுந்துற போது”.. அவன் வாய் முகுர்த்தம் சின்னு சரியாக மதிய உணவு தட்டோடு வந்தான்.

“ராசுண்ணே நீ எப்ப வந்த.. வர போறன்னு நீரண்ணே சொல்லவே இல்ல”

“ஆமா இவரு ஜில்லா கலெக்டரு இவரு வராருன்னு ஊரு ப்ரெசிடெண்ட் இவருக்கு செய்தி சொல்லணும்.. ஏலேய் கருவட்டி உன்னிய நேத்தே சொன்னேன்ல நேரத்துக்கு பள்ளி கோடத்துக்கு போன்னு.. அவளோ சொல்லியும் இன்னைக்கு பள்ளிக் கோடத்துக்கு போவாம மட்டம் போட்டு ஆட்டிகிட்டு தெரியுறவ..இனிமே காலையில உன்னிய இங்க பாத்தேன் கால வெட்டிருவேன் ஓட்றா”

“அப்ப என்னத்த சாப்புடுவிங்களாம்'”நா மண்ண கூட திம்பேன்.. இனிமே எனக்கு சாப்பாடு கொடுக்குற சாக்குல பள்ளிக் கோடத்துக்கு லேட்டா போவலாம்னு பிளான் போட்ட தோல உரிச்சு போடுவேன்..”தன் சூட்ச்சமத்தை கண்டு பிடித்து விட்டானே என்ற கடுப்பில் சின்னு நீரனிற்கு பழிப்பு காட்டி விட்டு பறந்து விட்டான். அவன் கொண்டு வந்த உணவை லபக் லபக் என்று விழுங்கியவனை

“மச்சான் இதெல்லாம் சாமிக்கே அடங்காது பாத்துக்கோ. உன்கிட்ட மேட்டர சொல்ல தான் ஊருக்கு வந்த கையோட ஜீன்ஸ கூட கழட்டி போடாம அதுக்கு மேலே ஒரு கைலிய கட்டிக்கிட்டு வெரசா ஓடி வாரேன்.. நீ வந்தவனுக்கு ஒரு வாய் தண்ணீ கூட கொடுக்காம சோத்த அமுக்கிட்டு இருக்க.. நீயெல்லாம் மாடு முட்டி தான்டா சாவ”..

“மாடு முட்டாடியும் என் டாடிக்கு பொறந்ததுல என் சாவு கான்போர்ம் மச்சான்””ரொம்ப சீன் போடாத.. உன்கூட சேந்து எனக்கும் தானே டிக்கெட் போட்ருக்க.. அப்றம் என்ன தனியா சாவுற மாறி படம் காட்ற”

“உனக்கு மட்டும் இல்ல செர்ரிக்கும் சேத்து தான் டிக்கெட்.. மச்சான் இந்த ஒலகத்துலயே யாராச்சும் லவ் பண்ற பொண்ணுக்கு சாவ கிப்ட்டா கொடுப்பாங்களா சொல்லு.. அதுவும் அவ கிட்ட என் மனச சொல்ல கூட இல்ல.. என் சுயநலத்துக்காக அவள பலியாக்க போறேன்”

“பலியாவரத்துக்குள்ள மேட்டர் தெரிஞ்சா அவ உன்ன பலி கொடுத்துருவா.. ஏன்டா உன் ஆளு மட்டும் தான் உசுரா.. நாங்கல்லாம் என்ன மசுரா.. என் உசுரும் தான்டா உசலாடிகிட்டு கெடக்கு என் வென்று”அவன் அப்படி கூறியதும் நீரனின் முகம் வாடியது. நண்பனின் முக வாட்டம் கண்ட ராசு

“மச்சான் பீலிங்கா கேவலமா கன்றாவியா வாந்தி வர மாறி இருக்கு இந்த ரியாக்சன்ல உன் மூஞ்ச பாக்க.. பீல் பண்றதுனா அங்குட்டு ஓரமா போயி பீல் பண்ணு.அதுவரைக்கும் நா சோத்த அமுக்குறேன்”நீரனின் உணவை ராசு பிடிங்கி உண்ண அவனின் நோக்கம் உணர்ந்து சோத்துக்கு அடிப்பிடி சண்டை நடந்து இறுதியில் ஒரே தட்டில் உண்டு முடித்தனர் இருவரும்.

“கண்ணு என்ன கண்ணு ஒரு மாறியாவே இருக்க.. உடம்புக்கு சொகமில்லன்னா சொல்லுடா..டாக்டர வூட்டுக்கு வர சொல்றேன்”படுத்த படுக்கையாக இருக்கும் தன் தந்தையின் அருகில் விட்டத்தைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் செந்தூரா. எப்பொழுதும் மகள் அவரை பார்க்க வரும் நேரம் அவர் சோர்ந்து போகாமல் இருக்க எதையாவது பேசிக்கொண்டே இருப்பாள் செந்தூரா. என்னதான் ஊரே அவளை அடங்காபிடாரி திமிர் பிடித்தவள் என்று கூறினாலும் அவளது தந்தை தில்லைநாயகத்திடம் அவள் பிறந்த குழந்தைதான். அவளது எவ்வித கோபத்தையும் ஆசைகளையும் அவருக்காக விட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டாள். மகள் மீது உயிரையே வைத்திருக்கும் தில்லைநாயகம் அவளுக்கு ஒரு திருமணம் செய்ய தலைகீழாக நின்று பிரம்ம பிரயத்தம் எல்லாம் செய்து விட்டார். மற்ற விஷயங்களில் தந்தையின் கண்ணசைவில் அவரின் மனம் நோகாமல் நடப்பவள் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவரின் பேச்சை காது கொடுத்து கேட்பதாக இல்லை. அவரும் அன்பாக கூறி பார்த்தார் கத்திப் பார்த்தார் கதறி பார்த்தார் கெஞ்சிப் பார்த்தார் மகள் காலில் விழுந்து கூட உருண்டு மன்றாடிட பார்த்து மனிதன் அக்கடா என உட்க்கார்ந்து விட்டார் மண்டையில் துண்டை போட்டு.

சரி வேறு யாரையாவது காதலிக்கிறீயா கண்ணு என்று மகளிடம் நூல் விட்டுப் பார்த்தார். மகளுக்கு மட்டும் கண்ணால் எரிக்கும் சக்தி இருந்திருந்தால் கேட்ட மறு வினாடியே தில்லைநாயகம் திருச்சிற்றம்பல நாதனை நேரில் சந்திக்க கைலாயம் சென்றிருப்பார். என்னதான் வெளியே அவர் பெரிய மனிதராக காட்டிக்கொண்டாலும் மகளின் கோபப்பார்வை கண்டால் அவருக்கு ஈரக்குளை நடுங்க ஆரம்பித்து விடும்.அதை இத்தனை ஆண்டுகளில் வெளியே தெரியாமல் கெத்து குறையாமல் மெய்டன் பண்ணி வருகிறார். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதை சில மணிநேரங்களிலேயே சரி கட்டி விடும் திறமை வாய்ந்தவள் செந்தூரா.அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த மகளின் முகத்தில் இன்று ஈயாடாததை கண்ட அவளுக்கு உடல் நலமில்லையா என விசாரித்தார். தந்தையின் அழைப்பில் தனது சிந்தனையில் இருந்து வெளிப்பட்டாள் செந்தூரா.”என்றா கண்ணு விட்டத்த பாத்து கிட்டு கெடக்க..அய்யன் கிட்ட ஏதாச்சும் கேக்கோனுமா சொல்லுறா”

“அதுல்லாம் ஒன்னும் இல்ல டேடி..ஏதோ சும்மா ஒரு நெனப்பு.. ஆமா ஏன் இன்னைக்கு கொஞ்சமா சாப்டிங்க.. இப்படி சாப்டா எப்போ வேகமா குணமாகுறது”

“அட சாப்பாடு கெடக்குது கண்ணு..உன்ற அய்யனுக்கு உடம்புக்கு ஒரு நோவும் இல்ல அம்மணி.மனசு தான் சீக்கு வந்த கோழி மாறி சுருண்டு கெடக்கு”அவர் அங்கு சுற்றி இங்கு சுற்றி எங்கே வந்து நிற்பார் என்பது மகளுக்குத் தெரியாதா? உடல் நலம் சரியில்லாத மனிதரிடம் கோப முகம் காட்ட அவள் விரும்பவில்லை. இந்நேரம் அவர் கொடுத்த க்ளூவிற்கு மகள் சிலிர்த்துக் கொண்டு எழுந்து சென்று விட்டிருப்பாள்.இன்று என்ன அதிசயமோ தெரியவில்லை. அமைதியே உருவாக அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் மகளை பார்க்க இன்று விட்டால் இனி எப்பொழுது இம்மாதிரி சமயம் அமையும் என பயந்த அவர் மனதை ஒருநிலைப்படுத்தி அவரின் குல தெய்வமான கருப்பரை துணைக்கு அழைத்துக் கொண்டு குரலை செறுமி

“தங்கம் அய்யன் ஒரு விஷயம் பேசனும்.. வெடுக்குன்னு எந்திருச்சு போவாம கம்முனு ஒக்காந்து கேளு கண்ணு”.. மாடுலேஷன் மாறாமல் தந்தையை பார்த்து கொண்டிருந்தாள் செந்தூரா.பாக்குற பார்வையே சரியில்லயே கடுப்பாயி கழுத்து கிழுத்த நேரிச்சு புடுவாளோ கருப்பா கூட இருப்பா”ம்க்கும் அதுடா கண்ணு உனக்கும் வயசு ஏறிட்டே போது.. உன் பின்னாடி பொறந்ததுங்க கூட இடுப்புல ஒன்னு கையில ரெண்டுன்னு போதுங்க.நீ இன்னும் பிடி கொடுக்க மாட்ற..எங்க உனக்கு ஒரு கண்ணாலம் காட்சிய பண்ணி பாக்காம போயி சேந்துருவேன்னு அய்யனுக்கு மனசு கெடந்து அடிச்சிக்குது கண்ணு.என்ற பேர பசங்கள பாத்துட்டேன்னா இந்த கட்ட எரிகட்டைக்கு சந்தோசமா போவும்.. என்ன கண்ணு சொல்ற.. கண்ணாலம் பண்ணிக்கிறியா”..உயிரை கையில் பிடித்து கொண்டு மகளின் முகத்தை பார்த்தார் அவளோ என்றுமில்லாத திருநாளாக இன்று அமைதியின் சொருபமாக அமர்ந்திருந்தாள்.

எதனால் அப்படி சொன்னாளோ அவளுக்கே தெரியவில்லை ஆனால் அவளின் வாய் அந்த வார்த்தையை கூறியது”டேடி கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்குறேன்.. ஆனா பையன் நா சொல்றவனா இருக்கணும்.. “படுத்து கிடந்த தில்லைநாயகம் எழுந்து அமர்ந்து விட்டார். அவர் காதால் கேட்டு செய்தி உண்மையா? அவர் மகளின் வாயிலிருந்து வந்த மொழி உண்மையா? பட்டிமன்றம் நடத்த சாலமன் பாப்பையாவை கூப்பிட முடியாத நிலைமையில் தனக்குத்தானே பட்டிமன்றம் நடத்தி மகள் சொன்ன செய்தி உண்மையென்று உரைக்க அதிர்ச்சியின் விளிம்பில் நின்றார்.கல்யாணத்திற்கு ஒத்து கொண்டாளே கருப்பா நன்றிப்பா.. என் மவ கண்ணாலம் நல்லபடியா முடிஞ்சா கெடா வெட்டி பொங்க வைக்குறேன்யா..அவசர வேண்டுதல் அவரிடம்.. இதுவரை அவர் வேண்டுதல் வைத்த கெடாக்களே இருபதை தாண்ட இதுவும் கூட்டத்தில் ஒன்றாக சேர்ந்து கொண்டது.”என்ன டேடி பேச்சயே காணோம்..”

“என்ன கண்ணு அய்யன் என்னிக்குடா உன்ற வார்த்தக்கு மறுவார்த்த பேசியிருக்கேன்.. நீ சொன்னதே போதும் கண்ணு. பையன் ஆருடா..ஏற்கனவே பாத்து வெச்சிருக்கியா இல்ல இனிமே தா தேடனமா”

“தேட வேணா டேடி.. ஆனா நா ஒரு முடிவுக்கு வரணும்.. இப்போ கலெக்டர் ஆபீஸ் வர போவனும்..சாயங்காலம் வந்து சொல்றேன்” எதையாவது கோக்குமாக்கா கூறினால் முறுக்கிக்கொண்டு கல்யாணமே வேண்டாம் என சன்னியாசி விரதம் மேற்கொண்டு விடுவாளோ என்ற பயத்தில்

“சரி கண்ணு பாத்து போய்ட்டு வா”அன்பு மகளை வழியனுப்பி வைத்தவருக்கு மாலையில் அவள் என்ன கூறுவாலேன்று பதைப்பதைப்பாக இருந்தது. இப்பொழுது தனது சமாதானத்திற்கு கூறி மாலையில் நான் அப்படியா சொன்னேன் என தன்னையே மடக்கி விடும் மகளின் வாய் சமர்த்தியத்தில் எப்பொழுதுமே தந்தைக்கு அதீத பயம் உண்டு..செந்தூரவுக்கு நிறைய யோசிக்க வேண்டி இருந்தது. மதியம் முழுக்க ரைஸ் மில் எண்ணெய் மில் கலெக்டர் ஆபீஸ் என அலைந்தவள் மாலை நெருங்க காலையில் தந்தையிடம் பேசியது நினைவுக்கு வந்தது.ஒரு வாரமாக அவள் மனதில் புதிதாக ஒரு சஞ்சலம். என்ன என்று புரியாத ஒரு படபடப்பு.ஒரு வாரத்திற்கு முன்பு ரைஸ் மில்லில் இருந்தவளை பார்க்க நீரன் வந்திருப்பதாக வேலையால் வந்து சொல்ல இவன் எதற்காக வந்துள்ளான் என யோசித்தாள்.நீரனை சிறு வயதிலிருந்தே அவளுக்கு தெரியும். அவளை போல அவனுக்கு தாய் இல்லை. கூடவே தந்தையும் இல்லை இப்பொழுது. ராஜ பரம்பரை அவன். அவனது முன்னோர்கள் கோமாளி ஜெயம் ரவி வம்சத்தினர் போல பிடித்திருக்கிறதா எடுத்து கொள் என்று ஆசை நாயகிகளிடம் மோகத்தில் வாயை விட்டு வாழ்வாதாரத்தை இழந்தவர்கள்.

நீரனின் தாத்தாவிற்கு மூன்று பொண்டாட்டி. நல்ல வேளை மூன்றாம் தாரத்தை தவிர மற்ற இருவருக்கும் பிள்ளை இல்லாத காரணத்தால் நீரனின் தந்தை ஜெமினி கணேசன் அனைவர்க்கும் செல்லமாகி போனார்.காதல் மன்னன் மேல் அலாதி பிரியம் கொண்ட நீரனின் தாத்தா மகனுக்கும் அதே பெயரை வைத்தார்.ஜெமினி வளர வளர மூன்று அன்னைகளுமே பரலோகம் சென்று விட அதன் பின் அவருக்கு திருமணம் செய்து வைத்து அவரின் தந்தையும் மனைவிகளை காண சென்று விட்டார்.ஆனால் மிஸ்டர் ஜெமினி ஒரிஜினல் ஜெமினி போல் அல்லாமல் அவரின் குடும்ப ஜீன் தாக்கப்படாமல் ஏக பத்தினி விரதனாக இருக்க அவரை போலவே குலத்தில் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணாக பிறந்தவன் நீரன்.அவன் பிறந்து பத்து நாளைக்குள்ளே ஜெமினியின் மனைவி இறந்து போனார் ஜன்னி கண்டு.அதன் பின் ஜெமினியே அனைத்துமாக இருந்து நீரனை வளர்த்து மரணத்தின் பிடியில் அவனுக்கு குடும்ப ரகசியம் ஒன்றையும் கூறிவிட்டே சென்றிருந்தார்.தந்தை போன பின் இருந்த நிலத்தில் தன் வாழ்வாதாரத்தை பெருக்கி கொண்டிருப்பவன் நீரன்.அவனை பற்றியே நினைத்து கொண்டிருக்க அவள் முன்னால் நின்றிருந்த நீரன் அவள் கண்களுக்கு முன் சொடுக்கிட்டு அழைத்தான். சொடுக்கிட்டு அழைக்கும் கரத்தையும் அவனையும் கடுப்பாய் பார்த்தாள்.

“ராஜ வம்சத்து ஆளுக்கு இங்கன என்ன வேல”

“அதுங்க அம்மணி உங்கள சும்மா பாத்து போட்டு போலாம்னு வந்தேன்னுங்க”என்றவாரே அவள் முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தான் நீரன்.

“என்ன தகிரியம் உனக்கு என்ற முன்னாடியே ஒக்காந்து பேசற அளவுக்கு வந்துட்டியா”

“உங்கள மாறி பண்ண ரைஸ் மில்லு நஞ்ச குஞ்சன்னு இல்லாட்டியும் நா அறவே இல்லாதவன் இல்லிங்க அம்மணி. ஒக்காந்து பேச நாக்காலியும் பட்டேக்ஸ்ல கொஞ்சூண்டு சதையும் வேணுமே தவிர தகிரியம் வேணாமுங்க..”

“என்றா வார்த்தைக்கு வார்த்த பேசிபுட்டு போய்கிட்டே இருக்க.உனக்கு இங்க என்ன வேல. அதுக்கு முன்னுக்கு எந்திருச்சு கைய மாருக்கு கட்டிக்கிட்டு பேசு”

“நாங்க ராஜ வம்சம் அம்மணி. மத்தவங்க கை கட்டி எங்க கிட்ட பேசித்தான் பழக்கமுங்க. நாங்க கைகட்டி நின்னதா சரித்திரம் பூகோளம் புசுவானம் ஒன்னும் இல்லிங்கோ” ஏற்கனவே இருக்கும் தலை வலியில் இவன் வேறு குடைச்சல் கொடுக்கிறானே இந்த ஊரில் தன்னை நிமிர்ந்து பார்க்க பயப்படும் ஆடவர் மத்தியில் சிருவயதில் இருந்தே கண்களால் அவளுக்கு கிண்டர் பியோனோ கொடுத்து கொண்டிருப்பவனை அவளுக்கு தெரியாதா என்ன.. பதிலுக்கு இவளும் கண்களால் அவனுக்கு காராசேவ் கொடுக்கலாம் என திரும்பினால் அவன் பார்வை வினாடிக்குள் மாறி விடும்.”சரி வந்து தொலைஞ்ச விஷயத்த சொல்லிட்டு போயி தொல”

“அது வந்து கண்ணு”

“கண்ணு மூக்குன்னு சொன்ன மூஞ்ச பேத்துருவேன்”

“சரி கண்ணு வேணா.. அது வந்து காது.. என்ன மொறைக்குற.. கண்ணு சொல்லகூடாது மூக்கு சொல்ல கூடாது காதும் சொல்ல கூடாதுன்னா எப்டி.. போயி தொலையுது.. அது வந்து பல்லு”

“அடி செருப்பால”

“ஓகே கூல் டவுன் பேபி.. நா ஏன் உன்ன பாக்க வந்தேனா மாமன எப்ப புள்ள கல்யாணம் பண்ணிக்க போறான்னு கேட்டு போட்டு போவதான்”

“என்ன”எழுந்தே நின்று விட்டாள் செந்தூரா.”என்ன திண்ணகம் இருந்தா என்கிட்ட வந்து இப்டி பேசுவ.. உன்ன”மேஜையை சுற்றி வந்தவள் விட்டாள் ஒரு குத்து நீரன் மூக்கில்.கொடகொடவென்று ரத்தம் ஊற்றியது.”என் இடத்துக்கே வந்து கல்யாணம் பண்ணிப்பியானு கேப்ப உனக்கு இன்னைக்கு சமாதி கட்டல”வயிற்றில் நிறுத்தாமல் அவள் கொடுத்த பஞ்சில் அவனுக்கு பின்னால் காற்று பிரிந்தது டர்ர்ர்ர்ர் என்று.முடியை பிடித்து மாவாட்டி அவனை குனிய வைத்து முகரையை முட்டி காலால் முத்தமிட வைத்தவள் ஆத்திரம் தாளாமல் அவன் குரல்வளையில் கை வைத்து அழுத்தி”ஏய் யாரு உன்ன இந்த மாறி கேக்க சொன்னது.. அம்புட்டு ஏத்தம் வெச்சு போச்சா ஹாங்”

அவன் மூச்சுக்கு சிரமப்பட இவள் பரிதாபமே பாராமல் அவன் மூச்சுக்கு ஒலை வைக்க அவள் முகத்தில் கோபம் இவன் முகத்தில் தாபம்.படக்கென்று அவளை பார்த்து கண்ணாடிக்க இந்த சம்பவத்தால் அவள் பிடி தளர அந்த சமயத்தை பயன்படுத்தி கொண்ட நீரன் அவளை வளைத்து பிடித்து சுவரில் சாய்த்து இரு கரங்களை தன் ஒற்றை கரத்தால் முதுகு புறம் பிடித்து கொண்டு இரு கால்களையும் தன்னிரு கால்களால் அசைய விடாமல் செய்து ஒரு கையால் அவள் முகத்தை அழுத்தி பிடித்து

“யாரு என்ன இந்த மாறி கேக்க சொல்லனும். நா கேக்குறேன் உன்ன உண்மய மட்டும் சொல்லு.. நீ என்ன லவ் பண்ணல? சின்ன வயசுல இருந்தே என்ன குறுகுறுன்னு பாக்கல? இப்பவும் நா எங்க போறேன் எங்க வரேன்னு என்ன பத்தி தெரிஞ்சிக்க பின்னாடி ஒரு அல்லக்கைய அனுப்பல? நா இல்லனு சொன்ன எல்லாமே இருக்கு..ஏன் அம்மணி இப்டி பண்றிங்க”மூக்கில் ஒழுகிய ரத்தம் அவனது சட்டையை நனைத்தது.அவள் அடித்த அடிக்கு மற்றவனாக இருந்திருந்தால் இந்நேரம் எழுந்து நின்றிருக்க முடியாது.ஆனால் இவனோ அவளையே தன் பிடிக்குள் கொண்டு வந்து கேள்விக்கணைகளை நக்கீரனின் மகன் போல் கேட்டு அவளை திணறடித்துக் கொண்டிருக்கிறான்.அவள் இல்லை என்று எப்படி சொல்வாள் அவன் சொல்வது அனைத்தும் இருக்கும் பட்சத்தில்.பேய் முழி முழித்து கொண்டிருந்தாள் செந்தூரா.”நீ சொல்ல மாட்டடி ஏன்னா சின்ன வயசுல நமக்குள்ள நடந்த மேட்டர் அப்டி””அன்னைக்கே உன்ன கொன்னுருக்கணும்.. உன்ன உசுரோட விட்டதே தப்புடா.. இனியும் அந்த தப்ப செய்யவே மாட்டேன்”என்றவள் ஒரே திமிறாக திமிறி அவன் பிடியிலிருந்து விடுதலையாகி எப்பொழுதும் தனது பாதுக்காப்பிற்காக மேஜை அடியில் சொருகி வைத்திருக்கும் அருவாளை எடுத்து நீரன் கழுத்தில் வைத்தாள்.

Comments

Popular posts from this blog

1 பைத்தியத்தின் வைத்தியமே

3 பைத்தியத்தின் வைத்தியமே

நெருங்கினா(ள்)ல்?முன்னோட்டம்